மாடி வராண்டாவில் வெளியே தெரியும் இயற்கை காட்சிகளின் அழகு எதையும் கண்டுகொள்ளாதவனாய் ராகவ் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். வீசிய இளங்காற்றில் அவனது சிகை கலைந்து நெற்றியில் கவிழ அதைச் சரி செய்தவாறு எழுந்தவன் வீட்டின் முன்னே சகோதரர்களுடன் சேர்ந்து அரட்டையடித்தபடி இருந்த அவந்திகாவைக் கண்டதும் கண்ணில் சுவாரசியம் கூடவும் அவளது செய்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
தொளதொள டிசர்ட்டில் கணுக்காலுக்குச் சற்று மேல் வரை இருக்கும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தவள் கூந்தலை உச்சியில் அள்ளி முடிந்து டாப் நாட்டாகச் சுற்றியிருந்தாள். அதையும் தாண்டி அவளின் முகத்தில் மோதி விளையாடிய கூந்தல்கற்றைகளை ஒதுக்கி விடும் போது கையிலுள்ள மண் முகத்தில் ஆங்காங்கே தீற்றிக் கொண்டது.
அதைக் கண்டிகொள்ளாமல் ஆர்வமாய் குழி தோண்டியவள் தன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு குச்சியை அந்தக் குழிக்குள் அரைவட்டமாய் மடித்து வைத்து பாதியளவு வெளியில் தெரியும்படி மண்ணைப்போட்டு மூடினாள்.
“எங்க வீடு சென்னையில இருக்கு” என்று அமரிடம் ஏதோ சொல்லியபடி வீட்டின் பக்கவாட்டிலுள்ள தண்ணீர்க்குழாயில் ரப்பர் டியூபை மாட்டியவள் அதன் உதவியால் அவள் கடந்த பதினைந்து நாட்களாக இங்கே வளர்த்துக் கொண்டிருந்த செடி கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தாள்.
ராகவைப் பொறுத்தவரைக்கும் அவள் ஒரு வித்தியாசமான வினோதமான பெண் பிறவி. இவளது இடத்தில் வேறு ஒருத்தி இருந்திருந்தால் தம் நால்வரையும் வில்லன் மாதிரி கற்பனை செய்து பயந்து ஒடுங்கியிருப்பாள். அல்லது நான்கு ஆண்மகன்களில் யாரேனும் ஒருவனது கவனத்தைக் கவர முயன்றிருப்பாள்.
இந்தப் பெண் அப்படியெதுவும் செய்யவில்லையே என்ற ஆச்சரியம் அவனுக்கு. தன்னுடன் சரிக்குச் சமமாய் வாதம் செய்வது, கிஷோருடன் சேர்ந்து மற்றவர்களைக் கலாய்ப்பது, அமருடன் சமையல் செய்கிறேன் என்ற பெயரில் சமையலறையில் பொருட்களைக் கொட்டிக் கவிழ்ப்பது, நவீன தேவதாஸாக உருமாறிக் கொண்டிருக்கும் வருணிடம் அடிக்கடி ஏதோ இரகசியமாய்ப் பேசுவது என்று அவளது நாட்கள் நகர்ந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இப்போது கூட எந்தவித வெளிப்பூச்சுமின்றி இயல்பாய் சகோதரர்களுடன் சேர்ந்து தோட்டத்தைச் செப்பனிடுபவளை ஆர்வத்துடன் நோக்கியவன் இப்படி ஒரு பெண் நம்முடன் இருந்தால் வாழ்க்கையில் சலிப்பே தோன்றாது போல என்று எண்ணிக் கொண்டான்.
அப்போது தான் அவன் மனசாட்சி “பார்த்து பதினஞ்சு நாள் கூட ஆகாத ஒருத்தியை லைஃப் லாங் உன்னோட வச்சுக்கணும்னு ஆசைப்படுறியே ராகவ்… இது உனக்கு இம்மெச்சூர்டா தெரியலை? அதை விடு! ஃபர்ஸ்ட் இதுக்கு அந்த ஜான்சிராணி சம்மதிப்பாளா? அவ வாழ்க்கையை அதோட போக்குல வாழுற ஆளுடா.. நீ எதையும் பெர்ஃபெக்டா யோசிச்சு, இதைப் பண்ணுனா இது கிடைக்கும்னு கணக்கு போட்டு ஒவ்வொரு காயையும் நகர்த்துறவன்… உனக்கும் அவளுக்கும் என்னைக்குமே ஒத்துப் போகாது…. சோ தேவையில்லாம யோசிக்காதே” என்று அவனை இடித்துரைத்தது.
ராகவும் தலையை உலுக்கிக் கொண்டவன் சிந்தனை போகும் வழி சரியில்லை என்று புரிந்து கொண்டவனாய் அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றான்.
கீழே இறங்கிவந்தவன் அவனைக் கவனிக்காமல் படியேறிய வருண் மீது மோதிக் கொண்டான். இருவரும் ஒரே உயரம் என்பதால் இருவரது தலையும் முட்டிக் கொள்ள வருண் நெற்றியைப் பிடித்துக்கொண்டான் வலியுடன்.
“ஐ அம் சாரி பய்யா… ஆர் யூ ஓகே?” என்று பதறிய ராகவ், வருணின் நெற்றியைப் பார்க்க அது இலேசாக வீங்கிப் போயிருந்தது.
“பய்யா ஒன் செகண்ட்” என்று சொல்லிவிட்டு ஓடியவன் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஐஸ்கட்டியை எடுத்து வந்து வருணின் நெற்றியில் ஒற்றும் போது அவனது சகோதரர்களுடன் வளவளத்தபடி அவந்திகா வீட்டினுள் நுழைந்தாள்.
அங்கே ராகவ் வருணின் நெற்றியில் ஐஸ்கட்டியை வைத்துவிட்டு “இன்னும் வலிக்குதா பய்யா?” என்று ஆதுரத்துடன் கேட்கும் காட்சியைக் கண்டவளுக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
எப்போதும் கஞ்சி போட்ட காட்டன் சட்டையைப் போல விரைப்பாய் இருப்பவனின் இந்தப் புதிய அவதாரம் அவளுக்குத் திகைப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. அடி பட்டதென்னவோ அவன் அண்ணனின் நெற்றியில், ஆனால் வலி இவன் கண்ணில் அல்லவா தெரிகிறது என்று வியந்தபடி கிஷோரிடம் பேச்சு கொடுத்தாள் அவந்திகா.
“உங்க அண்ணா ரொம்ப ஸ்டிரிக்டுனு நினைச்சேன்… இந்தக் கல்லுக்குள்ளயும் ஈரம் இருக்குதேனு நினைக்கிறப்போ எனக்கு அப்பிடியே சிலிர்த்துப்போச்சு கிஷோர்… இங்கே பாரேன்… என் தலைமுடிலாம் ஒன் இன்சுக்கு தூக்கி நிக்கிது பாரு” என்று கேலியாகச் சொல்ல
“ஹலோ! நிஜமாவே எங்க ராகவ் பய்யாக்கு நாங்கன்னா உயிரு தெரியுமா? ஹீ இஸ் சோ கேரிங்… இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகுது?” என்று ராகவுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு பேசினான் கிஷோர்.
அவந்திகா அவனுக்கு அழகு காட்டிவிட்டு “உங்க பய்யா கேரிங்கா போரிங்கானுலாம் எனக்குத் தெரியாது… ஆனா சரியான மண்டைக்கனம் பிடிச்சவன்… ஐ மீன் ஹெட்வெயிட் உள்ளவன்… அந்த வெயிட்டான ஹெட்டோட மோதி இன்னைக்கு வருண் மண்டையை உடைச்சிட்டான்… இவனுக்கு நீ சப்போர்ட் வேற” என்று வாயால் ராகவைத் திட்டினாலும் மனதினுள்ளே அவனது இந்த இன்னொரு முகத்தை அவளை அறியாமல் ரசிக்கத் தான் செய்தாள்.
“நாட் பேட் மைதாமாவு! நான் உன்னை என்னவோ நினைச்சேன்.. நீயும் கொஞ்சம் நல்லவன் தான்… ஆனா உன் ஃபேமிலி மெம்பர்சுக்கு மட்டும்” என்று சொல்லிவிட்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே மாடிப்படியேறினாள்.
ராகவ் வருணிடம் “இன்னும் வலிக்குதா பய்யா?” என்று கேட்க, வருண் மறுப்பாய் தலையசைத்தவன் அவந்திகா மேலே சென்றதை கவனித்துவிட்டு
“இதை விடப் பெரிய வலியை நான் உள்ளே அனுபவிச்சிக்கிட்டிருக்கேன் ராகவ்… அதுக்கு முன்னாடி என் மரணம் கூட துச்சம் தான்… கண் முன்னாடி காதல் காணாம போறப்போ வர்ற வலியை விட வேற எந்த வலியும் மோசமானது இல்லை” என்று கசப்புடன் சொல்லிவிட்டு எழுந்தவன், அங்கே மாடிப்படியில் அவந்திகா அவனைக் கூரியவிழிகளால் நோக்குவதைக் கண்டதும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அங்கிருந்து வெளியேறினான்.
ராகவ் அவந்திகாவைக் கண்டதும் “உன்னைப் பார்த்ததும் பய்யா ஏன் முகம் மாறுனாரு?” என்று அவளிடம் விசாரணையை ஆரம்பிக்க
அவளோ “அதை நீ உன்னோட பய்யா கிட்ட தான் கேக்கணும்… அவனுக்கு என்ன பிரச்சனையோ?” என்று சொல்லித் தோளைக் குலுக்கினாள்.
“வேற என்ன பிரச்சனையா இருக்கும்? உன் ஃப்ரெண்ட் ரதி தான்” என்றான் அவன் உஷ்ணக்குரலில்.
அதைக் கேட்டதும் அவந்திகா வெகுண்டெழுந்துவிட்டாள். இவன் என்ன எதற்கெடுத்தாலும் உஷாவையே காரணமாய்ச் சொல்கிறான் என்ற எரிச்சலில்,
“இங்க பாருடா! என் உஷாவைப் பத்தி இனி ஒரு வார்த்தை கூட உன் வாயில இருந்து வரக்கூடாது.. நீயோ நானோ அவங்க ரெண்டு பேரைப் பத்தியும் பேசாம இருக்கிறது தான் நல்லது… பிகாஸ் லவ் பண்ணுறவங்களோட நியாயம் நமக்குப் புரியாது… அவங்களோட பிரச்சனை மனசு சம்பந்தப்பட்டது… முன்ன பின்ன காதலிச்சிருந்தா மட்டும் தான் அதைப் பத்தி யோசிக்க முடியும்… அந்த வகையில உஷாவுக்கும் வருணுக்குமான பிரச்சனையில தலையிட நம்ம ரெண்டு பேருக்குமே எலிஜிபிளிட்டி கிடையாது” என்று முடிவாய்ச் சொல்லிவிட்டுத் தன் அறையை நோக்கி ஓடிவிட்டாள்.
ராகவ் அவள் சொன்ன விஷயம் சரி தானோ என்று ஒரு நிமிடம் யோசித்தவன் பின்னர் “ப்ச்… இந்த ஜான்சிராணி சொல்லுறதெல்லாம் கணக்குல சேர்த்துக்கவே கூடாது… இங்கே இருந்து பெங்களூர் போனதும் முதல் வேலையா அந்த ரதியை மீட் பண்ணனும்… ஒன்னு அவங்க ராகவ் பய்யாவை அக்செப்ட் பண்ணிக்கனும்… இல்லைனா நான் பண்ண வைப்பேன்” என்று அவனது வழக்கமான பிடிவாதத்துடன் சொல்லிக் கொண்டான்.
ஏற்கெனவே அவனது பிடிவாதத்தால் நேர்ந்த பிரச்சனைகளைச் சரி செய்யவே இனி அவனுக்கு நேரம் இருக்கப் போவதில்லை என்பதை அவன் அப்போது அறியவில்லை.
அதே நேரம் அவந்திகா தனது அறைக்குத் திரும்பியவள் வருணுடன் தான் இதுவரை பேசியத் தருணங்களை நினைவு கூர்ந்தாள்.
“நீங்க ஏன் உஷாவை பிரேக்கப் பண்ணுனிங்க வருண்?” என்றவளின் கேள்விக்குப் பதிலாக அவனிடம் இருந்து கிடைத்தது ஒரு விரக்தியான புன்னகை மட்டும் தான்.
பின்னர் என்ன நினைத்தானோ தெரியவில்லை, நடந்த அனைத்தையும் மிச்சமின்றி அவந்திகாவிடம் கொட்டிவிட்டான் வருண்.
“நானும் ரதியும் ஹோட்டல் மெரிடியன்ல தான் ஃபர்ஸ்ட் மீட் பண்ணுனோம்… அவளை மீட் பண்ணுன அந்த செகண்ட் இன்னும் என் மனசுல அழியா நியாபகமா இருக்கு… பர்பிள் கலர் ஃபுல் ஸ்லீவ் சுடிதார்ல அவளைச் சுத்தி மின்னுன லைட்டோட வெளிச்சத்தை எல்லாம் மிஞ்சி பிரைட்டா இருந்த அழகான அவ கண்கள் தான் முதல்ல என்னை இம்ப்ரெஸ் பண்ணுச்சு…
நான் டீலர்ஸ் மீட்டிங்குக்காக அங்கே போயிருந்தேன்…. அப்போ உங்களோட கன்சர்ன் கண்ட்ரோல்ல அங்க ஒரு பர்த்டே பார்ட்டி நடந்துச்சு… நான் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் போறதுக்குப் பதிலா போன் பேசிட்டே பர்த்டே ஹாலுக்கு வந்துட்டேன்….
அப்போ அங்கே குட்டீஸ் பட்டாளத்தைப் பார்த்ததும் இடம் மாறி வந்துட்டேனு புரிஞ்சுது… சோ வெளியே போக நான் திரும்புனப்போ தான் ரதியோட வாய்ஸ் கேட்டுச்சு… காரணமே இல்லாம அந்த வாய்ஸ் என்னை மெஸ்மரைஸ் பண்ணுனதுல அட்ராக்ட் ஆயிட்டேனு தான் சொல்லணும்… அப்போ தான் முதல்முறையா நான் ரதியைப் பார்த்தேன்..
அப்போவே மனசுக்குள்ள இனம்புரியாத ஒரு ஃபீல்… அதுக்கு என்ன அர்த்தம்னு புரியலை… அதே ஃபீலோட மீட்டிங்கை முடிச்சுட்டு நான் வர்றப்போ அங்கே பார்ட்டி முடிஞ்சுருந்துச்சு… ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ல் கேட்டு உங்க கன்சர்ன் பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுனேன்…
அதுக்கு அப்புறம் டெய்லியும் ஆபிஸ் முடியுறப்போ ஒரு டென் மினிட்ஸ் உங்க கன்சர்ன் முன்னாடி நிப்பேன்… நீங்க வீட்டுக்குக் கிளம்புறதைப் பார்த்துட்டுத் தான் நான் வீட்டுக்குப் போவேன்… இதை எப்பிடியோ ரதி கண்டுபிடிச்சிட்டா…
என் கிட்ட டேரக்டா வந்து ஏன் இப்பிடி எங்களை கண்காணிக்கிறிங்கனு கேட்டா… நான் உன்னை மட்டும் தான் பார்க்கிறேனு சொன்னதும் அவ கண்ணுல மின்னுன அந்தக் கோபம் இன்னும் நியாபகம் இருக்கு… அதுக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட காதலை அவளுக்குப் புரியவைச்சு அவளும் என்னைக் காதலிச்சு வாழ்க்கை என்னவோ நல்லா தான் போயிட்டிருந்துச்சு…
அப்பிடி இருக்கிறப்போ ஒரு நாள் நான் அவ கிட்ட ஆப்டர் மேரேஜ் எந்த வேலைக்கும் போகவேண்டாம்னு சொன்னேன்… அதுக்குக் காரணம் அவ வேலை வேலைனு அலைஞ்சு நிறைய டைம் என் கூட ஸ்பெண்ட் பண்ண முடியாம போனது தான்… பட் ரதி அதுக்கு ஒத்துக்கவே இல்லை… இது சம்பந்தமா பேசிப்பேசி வாக்குவாதம் பண்ணி அது ஒரு கட்டத்துல சண்டையா மாறுச்சு…
நான் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு நினைச்சு அமைதியா இருந்தேன்… ரதியை அவாய்ட் பண்ணுனேன்…. அதோட விளைவு இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் ரெண்டு துருவமா பிரிஞ்சு நிக்கிறோம்” என்று அழுத்தமானக் குரலில் சொன்னவனின் முகத்தில் இருந்த சோகம் இன்னும் அவந்திகாவின் நினைவில் நின்றது.
அதன் பின்னர் வருணுக்கு ஆறுதல் சொல்லி அவனுக்குத் தைரியம் கொடுத்தவள் அமரிடமும் கிஷோரிடமும் இயல்பாக எவ்விதத் தடையுமின்றி பேசி சிரிப்பதைப் போல வருணிடமும் பழக ஆரம்பித்தாள்.
அவனது பிரிவால் பிரதியுஷாவும் நிம்மதியாக ஒன்றும் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள் அவந்திகா. கல்யாணிதேவியின் வற்புறுத்தலால் தான் அவள் திருமணத்துக்குக் கூட சம்மதித்தாள் என்ற விஷயத்தை வருணிடம் மறைக்காமல் சொல்லிவிட்டாள்.
ஆனாலும் வருணைத் தவிர வேறு யாரையும் தன்னவனாக ஏற்றுக்கொள்ள பிரதியுஷாவின் மனம் மறுத்ததன் விளைவே அவள் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டாள் என்பதை மட்டும் அவந்திகா வருணிடம் சொல்லியிருந்தால் அவனும் எதையும் நினைத்து வருந்தியிருக்க மாட்டான். ராகவும் அண்ணனுக்காக என்று எந்த அனர்த்தத்தையும் செய்யாதிருந்திருப்பான்.
பிரதியுஷாவின் நண்பி என்ற முறையில் அவளுக்கு ஆதரவாகப் பேசுவதோ இல்லை வருணைத் திட்டுவதோ இந்தப் பிரச்சனைக்கு முடிவாகாது என்று புரிந்து கொண்ட அவந்திகா அதன் பின்னர் வருணை சினேகமனப்பான்மையுடனே நடத்தினாள். ஆனால் ராகவ் அவந்திகாவின் கோணத்தில் எதையும் சிந்திப்பவன் அல்லவே. அவனது நியாயம் என்றுமே மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாது, அவனது குடும்பத்தினரைத் தவிர. எனவே பிரதியுஷாவை அண்ணனுடன் சேர்த்து வைக்க எந்த எல்லைக்கும் செல்ல ராகவ் தயாராக இருந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


