ராகவ் அன்று ஜிம்மிற்குச் சென்று அவனது அறைக்குத் திரும்புகையில் வருண் அவனது அறைக்குத் தள்ளாடியபடி செல்வதைக் கண்டவன் வேகமாக அவனைத் தொடர்ந்து அவன் அறைக்குள் செல்லவும் வருண் தடுமாறிப் போய் கீழே விழப் போகவும் தாங்கிப் பிடித்தான்.
வருண் முகம் சிவந்து, தலைமுடியெல்லாம் கலைந்து, சட்டையின் பட்டன்கள் திறந்தபடி மூன்று நாள் தாடியுடன் தள்ளாடியபடி இருக்க ராகவ் அவனது இந்நிலைக்குக் காரணமானவளை நினைத்துப் பல்லைக் கடித்தவன் “பய்யா! நீங்க ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிங்க? ப்ளீஸ் ஃபர்கெட் ஹெர்…. அதை விட்டுட்டு ஏன் பய்யா இப்பிடி நீங்க குடிச்சு உங்களையே அழிச்சுக்கிறிங்க?” என்று வருணையும் கடிந்து தள்ளினான்.
“என்னால அவளை மறக்க முடியாது ராகவ்…. ஐ லவ் ஹெர் மேட்லி… யூ நோ வாட்? என்னோட நேம் அண்ட் ஃபேம் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு மிதிக்கிற மாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பா…. எப்பேர்ப்பட்டவனையும் காலடியில விழ வச்சிடும் அந்தச் சிரிப்பு…. அது எதுவுமே இனிமே எனக்குச் சொந்தம் இல்லைனு நினைச்சா வலிக்குதுடா” என்று புலம்பியவனைத் தேற்றும் வழியறியாது தவித்தான் ராகவ்.
அவர்கள் குடும்பத்தில் யாருக்குமே குடிப்பழக்கம் என்பதே கிடையாது. அதிலும் வருணுக்கு ஆல்கஹாலின் வாடை சுத்தமாக ஆகாது. அப்பேர்ப்பட்டவனை இன்று இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாளே அந்த திமிர் பிடித்தவள் என்று மனதிற்குள் பொருமிய ராகவ் வருண் திடீரென்று இன்று குடித்ததற்கான காரணத்தை வினவவும் வருணால் அந்த வார்த்தையைக் கோர்வையாகச் சொல்லக் கூட முடியவில்லை.
“இன்னும் டூ டேய்ஸ்ல அவளுக்கு என்கேஜ்மெண்ட் ராகவ்… என்னோட ரதி வேற யாருக்கோ சொந்தமாகப் போறாடா” என்றவனின் குரலிலிருந்த வேதனை ராகவைச் சுட
“வேற யாரையோ மேரேஜ் பண்ணனும்னு நினைக்கிறவ ஏன் வருண் பய்யாவைக் காதலிக்கணும்? அவளோட என்கேஜ்மெண்ட் பத்தி தெரிஞ்சதுக்கே பய்யா இப்பிடி ரியாக்ட் பண்ணுறாரே, சப்போஸ் அவளுக்கு வேற யாரோடவும் மேரேஜ் ஆகிடுச்சுனா பய்யாவோட நிலமை ரொம்ப கிரிட்டிக்கலா போயிடுமே… இந்த என்கேஜ்மெண்ட் நடக்க கூடாது… அதுக்கு என்ன பண்ணனும்னு கிஷோர் அமர் கூட டிஸ்கஸ் பண்ணியே ஆகணும்” என்று சிந்தித்தபடி வருணுக்கு வேறு ஒரு டிசர்ட்டை மாற்றியவன் அவனை உறங்குமாறு சொல்லிப் போர்வையை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அன்றைக்கு அலுவலக நேரத்திலும் ராகவின் சிந்தனை முழுவதும் வருணின் காதலியுடைய நிச்சயதார்த்தத்திலேயே இருந்தது. அவனைப் பொறுத்தவரைக்கும் வருண் அவனுக்கு அண்ணன் மட்டும் அல்ல, அவனது ரோல் மாடலும் கூட. ஆளுமையான, கம்பீரமான தனது அண்ணனை ஒரு பெண் இப்படி பைத்தியக்காரனாக்கி விட்டாளென்றால் அவனால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதன் விளைவு கிஷோர் மற்றும் அமருடன் அன்றைய இரவே ஒரு வட்டமேஜை மாநாட்டைக் குடும்பத்தினரோ வருணோ அறியாவண்ணம் அவனது அறையில் கூட்டினான்.
மூன்று சகோதரர்களும் சிந்தனையில் ஆழ்ந்திருக்க அமர் ஒரு யோசனை கூறினான்.
“பய்யா! பேசாம அந்தப் பொண்ணு ரதி ஆல்ரெடி வருண் பய்யாவை லவ் பண்ணுறானு அவளுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை வீட்டுல போட்டுக் குடுத்துடுவோமா?”
ராகவ் ஆட்காட்டிவிரலால் நெற்றியில் கீறியபடி யோசித்தவன் “நோ நோ! அது சரியா வராது… அவ ஜெகஜாலக்கில்லாடி… இப்பிடி நடக்கும்னு எதிர்பார்த்து வேற எதாச்சும் பேக்கப் பிளான் வச்சிருப்பா…” என்று கூறி அதை ஒதுக்கித் தள்ளினான்.
கிஷோர் “யூ ஆர் ரைட் பய்யா… அப்போ நம்ம அவளோட என்கேஜ்மெண்டுக்கு டேரக்டா போய் வருண் பய்யாவும் அவளும் லவ் பண்ணுறாங்க, இந்த ரதி அவரை சீட் பண்ணிட்டானு சொல்லிடுவோமா?” என்று மற்றொரு யோசனையைக் கூற ராகவ் அதையும் மறுத்தான்.
“ப்ச்… அங்கே அவளோட பேரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு ஒரு கூட்டமே இருக்கும்… அவங்கள்ல யாருமே நம்மப் பேச்சைக் கேக்க மாட்டாங்க கிஷோர், ஈவன் நம்ம சொல்லுறதை நம்பக் கூட மாட்டாங்க… அவளுக்கு இந்த மாதிரி பிளான்லாம் ஒர்க் அவுட் ஆகாது… இன்னும் நல்லா யோசிங்க… நம்ம போடுற பிளான்ல அவளோட என்கேஜ்மெண்ட் நிக்கணும், அதோட வருங்காலத்துல வேற யாரையும் அந்தப் பொண்ணு கல்யாணம், காதல்ங்கிற பேருல ஏமாத்தக் கூடாது” என்றான் ராகவ் தீவிரமானக் குரலில்.
மூவரும் இவ்வாறு வருணின் காதலிக்கு நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பல்வேறு திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்க அதே பெங்களூருவின் இன்னொரு பகுதியான கல்யாண் நகர் பகுதியில் இருந்த மூன்று வீடுகளும் நிச்சயதார்த்தத்துக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.
மூன்றுக்கும் இடையிலான தூரம் சில அடிகளே. அதில் இரண்டு வீடுகள் உயர்நடுத்தர வகுப்பினருடையது. ஒரே ஒரு வீடு மட்டும் பங்களா போல விரிந்திருந்தது. அந்தப் பங்களாவிலிருந்து தான் கலகலப்பான பேச்சுச்சத்தம் வந்து கொண்டிருந்தது.
மூன்று குடும்பங்களும் மூன்று விதமான மொழிகளையும் கலாச்சாரத்தையும் பின்பற்றினாலும் பொதுவான மொழியாக கன்னடம் அவர்களை இணைத்தது. அங்கே கலகப்பாக உரையாடிக்கொண்டிருந்த பெரியவர்களின் உரையாடல்களை கேட்டபடி பிரதியுஷா லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, அவந்திகாவும் ரித்திமாவும் அவரவருக்குப் பிடித்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கேட்டது ஒரு பெண்மணியின் கண்டிப்பானக் குரல்.
“அவந்திகா! எல்லாரும் எவ்ளோ முக்கியமா பேசிட்டிருக்கோம்… இப்போவும் உனக்கு போன் தானா? முதல்ல அந்த வாக்மேனை கழட்டு” என்று அவந்திகாவை அதட்டியவர் தான் அவளது சித்தி கௌசல்யா. தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணிபுரிபவர்
சகோதரி மற்றும் அவரது கணவரின் மரணத்துக்குப் பிறகு அவந்திகாவைத் தன்னுடன் அழைத்துவந்து விட்டார். அவருக்கு என்று இருப்பது அவந்திகா மட்டும் தான் என்ற நிலையில் தான் ரகுவரன் கௌசல்யாவின் வாழ்வில் வர, அவந்திகாவின் கட்டாயத்தால் திருமணத்துக்குச் சம்மதித்தவர் அதன் பின்னர் ரகுவரனின் அன்பிற்கு அடிமையாகி விட்டார் என்றே கூறலாம். கௌசல்யா மற்றும் ரகுவரனின் அன்பிற்குச் சாட்சியாகப் பிறந்தவன் தான் அவரது ஐந்து வயது மகன் அர்ஜூன். அவந்திகாவுக்கு மட்டும் லட்டுகுட்டி.
கௌசல்யா அவரது தமக்கையை விட பத்து வயது இளையவர் என்பதாலும் தமைக்கையின் மகளான அவந்திகாவுக்கும் அவருக்குமான வயது இடைவெளி கூட பத்து வருடம் தான். அதில் அவந்திகாவுக்குப் பெருமை வேறு.
“சித்தி எங்க ஸ்கூல்ல எல்லாரோட பேரண்ட்சுக்கும் வயசாயிடுச்சு.. நீங்களும் சித்தப்பாவும் மட்டும் தான் யூத்… எல்லாரும் அவந்திகாவோட பேரண்ட்ஸ் எவ்ளோ யங்கா இருக்காங்கனு சொல்லுறப்போ செம கெத்தா இருக்கு சித்தி” என்று பெருமிதப்பட்டுக்கொள்வாள் அவள்.
இந்த வயது வித்தியாசம் காரணமாகவே ரித்திமாவும் பிரதியுஷாவும் இன்று வரை கௌசல்யாவை ‘கௌசிக்கா’ என்றே விளித்து வருகின்றனர்.
அவந்திகாவுமே தனக்கு சித்தப்பா ஆவதற்கு முன்னாலே நண்பராக அறிமுகமான ரகுவரனை நீண்டநாட்கள் “ரகுண்ணா’ என்றே அழைத்தவள் ரகுவரனின் தாயார் அம்புஜத்தின் அறிவுரையால் சித்தப்பாவுக்கு மாறியிருந்தாள்.
இந்த அழகியக் குடும்பத்தின் தலைவியாக இருந்து வினோதமான மகள், அவளுடைய குறும்புத்தனத்துக்கு உரம் போட்டும் வளர்க்கும் கணவர் மற்றும் மாமியார், உலகத்திலுள்ள அத்தனை அட்டகாசங்களையும் அவளுடன் சேர்ந்து செய்யும் மகன் இவர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் கௌசல்யா.
அதே நேரம் பிரதியுஷாவின் குடும்பத்தினர் பரம்பரை பணக்காரர்கள் என்றாலும் அது அவர்களின் முகத்திலோ செய்கையிலோ கிஞ்சித்தும் வெளிப்படாது. அவளது தந்தை ராஜ்வர்தன் சிங் ஆகட்டும், அன்னை மைதிலி ஆகட்டும் எளிமையின் திருவுரு. அவளது அண்ணனான ரன்வீர் அமைதியான அதே சமயம் அழுத்தமான இக்காலத்து வாலிபன். ராஜ்வர்தன் சிங்கின் பிஸ்னசில் அவருக்கு உறுதுணையாக இருப்பவன் அவன் தான்.
அடுத்து பேசிக் கொண்டிருப்பவர்கள் ரித்திமாவின் பெற்றோரான ரவீந்தர் கவுடா மற்றும் வாசந்தி. கௌசல்யா ரகுவரன் தம்பதியினரைப் போல இவர்களும் வங்கியில் பணிபுரிபவர்களே. ஒரே மகளான ரித்திமாவின் மீது இருவரும் உயிரையே வைத்திருந்தனர்.
இந்த மூன்று குடும்பத்தினரும் இப்போது கூடியிருப்பது பிரதியுஷாவின் வீட்டில் தான். நடக்கப்போகிற நிச்சயதார்த்தத்தைப் பற்றி அவர்கள் ஆவலுடன் பேசிக்கொண்டிருக்க மணப்பெண்ணோ யாருக்கோ வந்த விருந்து என்பது போல அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் இது திருமணத்துக்கு முன்னால் வரும் சாதாரண பயம் தான் என்று எண்ணிக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் அந்த மூன்று பெற்றோருமே. இதற்காக அவர்கள் இன்னும் இரண்டே நாளில் வருந்தப்போகிறார்கள் என்பதை அறியாதது தான் பரிதாபம்.
*********
இரண்டு நாட்களுக்குப் பின்பு….
நிச்சயதார்த்தத்தின் பரபரப்பு அந்த மண்டபத்தைச் சூழ்ந்திருக்க எங்கே பார்த்தாலும் பட்டுப்புடவைகளும், மல்லிகைச்சரமுமாய் அணிகலனில் ஜொலித்த இளம்பெண்களும், ஓடி விளையாடிய குழந்தைகளும் அச்சூழலைப் பேரழகாக்கி காட்டினர் என்றால் மிகையில்லை.
மங்கலவாத்தியம் முழங்கிக் கொண்டிருக்க மணமக்களின் உறவினர்கள் காரில் வந்த வண்ணமாய் இருந்தனர். அம்புஜம் தன் வயதை மறந்தவராய் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்க, ரன்வீர் பொறுப்பான சகோதரனாய் மாப்பிள்ளையுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
கௌசல்யா மாப்பிள்ளையின் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கையில் மைதிலியும் வாசந்தியும் மணப்பெண்ணின் அறையை நோக்கிச் சென்றனர். அங்கே அவர்களின் மகள்கள் மூவரும் வழக்கம் போல அரட்டையடித்துக் கொண்டிருக்க மூவருக்கும் நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தார் வாசந்தி.
பிரதியுஷா எப்போதும் போல அழகுச்சிலை தான். ஆனால் ரித்திமாவும் அவந்திகாவும் தான் இப்போதைய ஆச்சரியங்களே. ஏனென்றால் இந்த இருவருமே எப்போதுமே தொளதொள டிசர்ட்டிலும் சாயம் போன ஜீன்சிலும் சுற்றும் ஜீவராசிகள். அதைப் பற்றிக் கேட்டால் எங்கள் வேலைக்கு இது தான் சவுகரியம் என்று ஒரே வார்த்தையில் அனைவரின் வாயையும் அடைத்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட பெண்கள் இன்று புடவையில் பாந்தமாய் இருக்கும் அழகை கண்ணாற ரசித்தனர் இரு அன்னையரும். அவந்திகா அடர்சிவப்புவண்ண பட்டில் ஜரிகைப்பூக்கள் மின்ன, ஜிமிக்கியும் ஆரமும் அணிந்து தலை நிறைய பூச்சூடி அழகுச்சிலையாக மிளிர்ந்தாள்.
ரித்திமா கடல்நீல வண்ணப்பட்டில் விரித்தக்கூந்தலின் நடுவே மல்லிகைச்சரத்தை சூடி தேவதையாக நின்றிருந்தாள்.
இந்த இருவரின் அழகையும் பெற்றோர் வியந்தாலும் அவந்திகா “எப்போடா இந்த ஃபங்சன் முடியும்னு இருக்கு உஷா! இந்த சில்க் ஷேரி எப்போ நழுவுமோனு பயமா இருக்குடி… அது போதாது இவ்ளோ பூ வேற… இன்னைக்கு கன்ஃபார்மா எனக்கு தலைவலி வரப்போகுது ரித்தி..” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.
அவளைக் கேலி செய்துவிட்டு ரித்திமாவை அழைத்துக்கொண்டு மைதிலியும் வாசந்தியும் அந்த அறையை விட்டு வெளியேற, அவந்திகா மட்டும் பிரதியுஷாவுடன் அங்கேயே இருந்தாள்.
அந்நேரம் பார்த்து பிரதியுஷாவுக்குப் போன் வரவே போனுடன் மணப்பெண் அறை இருந்த மாடியின் வராண்டாவில் நின்றவள் மறுமுனையில் இருப்பவர்களுடன் பேச ஆரம்பித்தாள். அதே நேரம் அந்த மண்டபத்தின் வாயிலில் வந்து நின்றது ஒரு கார்.
அதிலிருந்து இறங்கியவன் தடித்த மூக்குக்கண்ணாடியும், ப்ரெஞ்சு தாடியுமாய் பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமாகத் தோற்றமளிக்க காரின் உள்ளே இருந்து கேட்டது ஒரு குரல்.
“ராகவ் பய்யா! டேக் கேர்… நானும் அமரும் காரோட மண்டபத்துக்குப் பின்னாடி வெயிட் பண்ணிட்டிருப்போம்… நீங்க சீக்கிரமா வந்துடுங்க” என்று கூறவும் தனது பெருவிரலை உயர்த்திக் காட்டினான் ராகவ்.
மண்டபத்தின் உள்ளே பிரவேசித்தவனின் விழிகள் மணமகள் அறையைத் தேடியது. பழக்கமற்றக் கண்ணாடி வேறு கண்ணை உறுத்த மாடியில் மணமகள் அறை இருப்பதையும் அதன் வெளியே நின்று ஒரு இளம்பெண் பேசிக்கொண்டிருப்பதையும் கவனித்தான் அவன். கீழே இரண்டு பெண்மணிகள் அவளைக் கை காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அதைக் கவனித்தவாறே மாடிப்படி ஏறத் தொடங்கினான்.
அதற்குள் நிச்சயதார்த்த நிகழ்வின் ஆரம்பமாக மாப்பிள்ளை வீட்டார் சபையில் அமர்ந்தனர். எனவே கேமராக்களும், வீடியோகிராபர்களும் அங்கே தங்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
அதே நேரம் மாடிக்குச் சென்றுவிட்ட ராகவ் போனில் பேசிக்கொண்டிருந்த பிரதியுஷாவை “எக்ஸ்யூஸ் மீ!” என்று அழைக்க அவள் யாரடா இவன் என்ற ரீதியில் திரும்பிப் பார்த்தாள்.
“கீழே ரெண்டு லேடிஸ் உங்களைக் கூப்பிடுறாங்க” என்று கீழ்நோக்கிக் கை காட்டினான்.
பிரதியுஷாவும் கீழே பார்க்க வாசந்தியும் மைதிலியும் அவளை நோக்கிப் புன்னகைக்க ரகுவரன் அவளைக் கீழே வருமாறு பணித்தார். பிரதியுஷா தன்னுடன் யாருமில்லையே என்று யோசித்தவள் அவந்திகாவை அழைக்காமல் மெதுவாகப் படியிறங்கினாள்.
ராகவ் அவள் சென்றதும் சட்டென்று அந்த மணமகள் அறைக்குள் நுழைந்தான். அங்கே அவந்திகா போனை நோண்டிக் கொண்டிருந்தபடி வந்தது தனது தோழியர் என்று நினைத்தபடி “உஷா இன்னுமாடி ஃபங்சன் ஆரம்பிக்கலை? சரியான சோம்பேறியா இருக்காங்கப்பா” என்று சலித்தவளாய் பார்வையை உயர்த்தியவள் அங்கே நின்ற புதியவனைக் கண்டு அதிர்ந்தாள்.
“ஏய் யாருடா நீ? இங்கே என்ன பண்ணுற? உஷா எங்கே போனா?” என்று பதறியபடி கதவை நோக்கிச் சென்றவளை இடையைப் பற்றி இழுத்துக் கொண்டான் ராகவ். அவந்திகா அவனது தொடுகையில் கோபத்தின் உச்சிக்கே சென்றவள் “யூ இடியட்! ஹவ் டேர் யூ டு டச் மீ? மரியாதையா என்னை விடு…. இல்லைனா சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடவேண்டியதா இருக்கும்” என்று மிரட்ட
அவன் அதைப் பொருட்படுத்தாமல் பேண்ட்பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுக்க முயல அவந்திகா “யாராவது வாங்களேன், இங்கே ஒரு திருடன் வந்துட்டான்” என்று சத்தம் போட்டபடி அவனை கரங்களால் பலம் கொண்ட மட்டும் தாக்கத் தொடங்கினாள்.
ராகவ் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுக்கவும் அவள் பார்த்த அத்தனை தமிழ் சினிமாக்களின் கடத்தல் காட்சிகளின் போது தவறாமல் இடம்பெறும் மயக்கமருந்து தெளிக்கப்பட்ட கர்சீப் நினைவுக்கு வர, அவனைத் தாக்காமல் தனது கரங்களால் மூக்கைப் பொத்திக்கொண்டாள் அவந்திகா.
ஆனால் ராகவோ அவளை விட்டவன் அந்த கர்சீப்பை தனது முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் படி கட்டிக்கொள்ளவே, அவள் குழம்பி தனது கையை மூக்கிலிருந்து எடுத்துவிட்டு வெளியே செல்ல முயன்ற அடுத்த நொடி அவன் கையிலிருந்த பாட்டிலில் இருந்து ஏதோ ஒரு மருந்து ஸ்ப்ரே செய்யப்பட, அதைச் சுவாசிக்கக் கூடாது என்று மூளை கொடுத்த கட்டளையை மீறி அவளது நாசி செயல்பட்டதன் விளைவாக சிறிது சிறிதாக நினைவிழந்தாள் அவந்திகா.
மயங்கிச் சரியப் போனவளை கரங்களில் ஏந்தியவன் அந்த அறையில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனிக்க, நல்லவேளையாக அங்கே ஒரு போர்வை கிடந்தது. அவளை அப்போர்வையில் பொதிந்தவன் மூச்சு விடுமளவு மட்டும் இடைவெளி விட்டு போர்வையைச் சுற்றத் தொடங்கினான்.
இப்போது பார்ப்பதற்கு அது துவைப்பதற்காக எடுத்துச் செல்ல சுற்றிவைக்கப்பட்டிருக்கும் போர்வையைப் போல காட்சியளிக்கவே அதை(?) கரங்களில் ஏந்தியபடி படியிறங்கத் தொடங்கினான்.
அனைவரின் கவனமும் நிச்சயதார்த்த நிகழ்வில் இருக்க எதிர்பட்டவர்களிடம் போர்வையைச் சுத்தம் செய்ய எடுத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு மிக எளிதாக அவந்திகாவுடன் பின் வாயிலுக்குச் சென்றுவிட்டான் ராகவ்.
சொன்னபடி கிஷோரும் அமரும் காருடன் காத்திருக்க அவந்திகாவை பின்னிருக்கையில் கிடத்தியவன் தானும் பின்னிருக்கையில் அமர்ந்து விட்டு கிஷோரிடம் காரை எடுக்குமாறு கூற அடுத்த நொடி அந்த கார் சீறிப்பாயத் தொடங்கியது.
ராகவ் அவந்திகாவுடன் வெளியேறிய அந்நேரத்தில் தான் புரோகிதர் “பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்று கூறவும் பிரதியுஷாவும் ரித்திமாவும் அவந்திகாவை அழைக்க மாடிப்படி ஏறினர்.
ஆம்! அன்றைக்கு நிச்சயதார்த்தம் நிகழவிருந்தது அவந்திகாவுக்குத் தான். கௌசல்யாவின் சகப்பணியாளரின் மகனான விக்ரமுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
பிரதியுஷாவின் நிச்சயதார்த்தத்தை கல்யாணிதேவியிடம் சொல்லி அவளே நிறுத்தியிருந்த நேரத்தில் தான் அவந்திகாவை பிடித்துப் போய் கௌசல்யாவின் சகப்பணியாளரான ரேகா தனது மகனுக்குப் பெண் கேட்டார். கௌசல்யாவும் பையன் படித்து மத்திய அரசு நிறுவனமொன்றில் நல்ல பொறுப்பில் இருந்ததால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
அவந்திகாவுக்குச் சித்தி ஒரு முடிவெடுத்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணம். எனவே அவளும் மறுபேச்சின்றி தலையாட்டிவைத்தாள்.
ஆனால் இந்நிகழ்வுகள் எதையும் வருண் அறியவில்லை. பிரதியுஷாவின் நிச்சயம் தான் நடக்கப்போகிறது என்று எண்ணி வருந்தியவன் தன் வருத்தத்தை ராகவிடம் பகிர்ந்து கொள்ள அதனால் வரிசையாக நிகழ்ந்தன அனர்த்தங்கள்.
அதே சமயம் ராகவ் அவந்திகாவை தான் வருண் காதலிக்கிறான் என்று எண்ணி சகோதரனை அவள் ஏமாற்றியதற்காக அவளை நிச்சயதார்த்ததில் இருந்து கடத்திவிட்டால் நிச்சயதார்த்தமும் நின்று விடும், அதே சமயம் வருண் மூலமாக அவள் மனதை மாற்றி அவளையும் வருணையும் சேர்த்து வைத்துவிடலாம் என்று எண்ணிக் காய்களை நகர்த்திவிட்டான்.
இவ்வாறிருக்க ரித்திமாவும் பிரதியுஷாவும் மணமகள் அறையில் அவந்திகா காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ந்தவர்களாய் கௌசல்யாவிடம் இரகசியாக இவ்விஷயத்தைக் கூற அவருக்கும் இது அதிர்ச்சியே.
மெதுவாக ரகுவரனிடம் கலங்கியக்குரலில் கூறியவர் “இப்போ என்ன பண்ணுறது ரகு? என் பொண்ணுக்கு என்னாச்சுனு தெரியலையே… அவ மனசாற யாருக்கும் துரோகம் பண்ணுனதில்லை… அவளைக் கடத்திட்டுப் போறதுக்கு யாருக்கு மனசு வந்துச்சுங்க?” என்று அழுதுப் புலம்ப, சிறிது நேரத்தில் விஷயம் மண்டபத்தில் அனைவரின் செவியையும் சென்றடைந்தது.
மணமகனின் தாயார் ரேகா கௌசல்யாவின் வளர்ப்பின் லெட்சணம் இது தான் என்ற ரீதியில் நாக்கின் மீது பல்லைப் போட்டுப் பேச, அதற்கு ரன்வீர் பொறுக்கமுடியாமல் அவரைக் கடிந்துகொண்டான்.
‘ஷட் அப்! எங்க வீட்டுப்பொண்ணைப் பத்தி பேச இங்க யாருக்கும் யோக்கியதை இல்லை… மரியாதையா வெளியே பேசுங்க… இல்லைனா நடக்குறதே வேற”
“வாடாப்பா! உன் தங்கச்சி ஃப்ரெண்டுக்கு வக்காலத்து வாங்குறதுக்கு முன்னாடி அவ செஞ்சு வச்சிட்டுப் போன காரியத்தைக் கொஞ்சம் யோசிச்சுட்டுப் பேசு… ஓடிப்போகணும்னு நினைக்கிறவ ஏன் நிச்சயத்துக்குச் சம்மதம் சொல்லணும்? இப்போ அவளால எங்க குடும்பத்து மானமும் சேர்ந்து போகுது… டேய் விக்ரம் இன்னும் என்னடா நிக்கிற? இந்த வீட்டுப்பொண்ணோட லெட்சணம் தான் தெரிஞ்சுப் போச்சே… வாடா” என்று மகனையும் கணவரையும் கையோடு அழைத்துக்கொண்டு மண்டபத்தைக் காலி செய்தார் அப்பெண்மணி.
வந்திருந்தவர்கள் அவந்திகாவைப் பற்றி பேசிய வார்த்தைகள் ஒரு பக்கம், அவளுக்கு என்னவாகியிருக்குமோ என்ற கவலை ஒரு பக்கம் என மாறி மாறி வந்த அதிர்ச்சியில் கௌசல்யா உடைந்துப் போய் அழ ஆரம்பிக்க ரித்திமாவும் பிரதியுஷாவும் தோழியை நினைத்து கண்ணீர் விடத் தொடங்கினர். இத்தனை பேரும் அவளை நினைத்துத் தவிக்க அவந்திகாவோ மயக்க மருந்தின் வீரியத்தால் நினைவிழந்து அந்தக் காரில் எட்டமுடியாத் தூரத்துக்கு ராகவுடன் பயணித்துக் கொண்டிருந்தாள், இனி வாழ்க்கை முழுவதுமே அவனுடன் தான் பயணிக்கப் போகிறோம் என்பதை அறியாதவளாய்….
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


