சன் டியூ ஈவென்ட் அண்ட் வெட்டிங் பிளானர்ஸ்….
நடுத்தர அளவில் ஒரு அலுவலக அறை, ஒரு காத்திருப்போர் அறை மற்றும் ஒரு ஓய்வு அறையுடன் கூடிய வளர்ந்து வரும் நிறுவனம். நகரின் மையப்பகுதியில் எந்தவிதத் தொல்லையுமில்லாத அந்த வணிக வளாகத்தின் கீழ்த்தளம் முழுவதையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு வாயிலில் குரோட்டன்சுடன் வந்தாரை வரவேற்றுக் கொண்டிருந்தது அந்த அலுவலகம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதை நடத்திக்கொண்டிருப்பவர்கள் மூவருமே பெண்கள். இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூவருமே இளம்வயதிலிருந்தே ஒருவரை ஒருவர் பிரியாத அளவுக்கு நெருங்கியத்தோழிகள். மூவருக்கும் கடின உழைப்பு, தன்னம்பிக்கை, நேர்மை, தொழிலில் நேர்த்தி என அனைத்துவிஷயங்களுமே ஒத்துப்போக ஆரம்பித்து இரண்டு வருடங்களில் அந்த வட்டாரத்தில் வெகுவிரைவில் நல்லபெயரைச் சம்பாதித்துவிட்டனர்.
அந்த அலுவலகம் அமைந்திருந்த வணிக வளாகத்தின் முன்புறவாயிலில் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கினாள் அவந்திகா. இன்னும் அந்த மிஸ்டர் கபூர் பேசிய பேச்சு அவளுக்குள் எரிச்சலை மூட்டிக் கொண்டிருக்க, ஆட்டோக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு விறுவிறுவென்று தங்களின் அலுவலகத்தை நோக்கி நடைபோட்டாள் அவள்.
குரோட்டன்ஸ் பக்கத்தில் வரும் போதே உள்ளே இருந்து தோழியரின் சிரிப்பொலியும் பேச்சுச்சத்தமும் மனதின் எரிச்சலை சற்றே மட்டுப்படுத்தவும், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் காத்திருப்போர் அறையைத் தாண்டி மூவருக்கும் சொந்தமான அந்த அலுவலக அறையின் கண்ணாடிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.
“ஹனிபி நீ வந்துட்டியா?” என்ற கேள்வியுடன் ஒருத்தியும், “கௌசிக்கா கால் பண்ணுனாங்க” என்ற தகவலுடன் மற்றொருத்தியும் திரும்பி அவளைப் பார்க்க அவந்திகா இருவரையும் நோக்கி உணர்ச்சியற்றப் பார்வையைச் செலுத்திவிட்டு தனது ஷோல்டர் பேக்கைக் கழற்றி வீசினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவந்திகாவிடம் கேள்வி கேட்டவள் தான் ரித்திமா. வங்கி அதிகாரிகளாகப் பணிபுரியும் பெற்றோருக்கு ஒற்றைப் பெண்குழந்தையாகப் பிறந்தவள். கூர்நாசியுடன், ஒல்லியாக நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அவளது தோற்றத்துக்கு அவள் அழகிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அவந்திகா கேலியாகக் கூறுவாள். பார்த்த உடன் சுண்டி இழுக்கும் வசீகர முகத்துக்குச் சொந்தக்காரி. எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிடுவதில் அவளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
அதே நேரம் அவந்திகாவுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு சற்றே சோர்வான முகத்துடன் இருப்பவள் தான் பிரதியுஷா. ராஜஸ்தானியப் பெண். தந்தையின் சந்தனமர ஏற்றுமதி நிறுவனம் பெங்களூருவில் நிறுவப்படவே சிறுவயதில் குடும்பத்துடன் அங்கே புலம்பெயர்ந்தவர்கள். அவளது தந்தைவழிப் பாட்டி மட்டும் ராஜஸ்தானில் சந்தன்பூர் கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமாக உள்ள அரண்மனையில் இன்றும் ராஜாங்கம் செய்து வருகிறார்.
ராஜகுடும்பத்துக்கே உரித்தான கம்பீரமானத் தோற்றம், இனிமையான பேச்சு, நாசூக்காக எதையும் செய்து முடிக்கும் திறமை இந்த மூன்றையும் ஒருங்கே கொண்ட பேரழகி அவள். சொல்லப் போனால் மூவரிலும் அழகி என்றால் அது பிரதியுஷாவே! எப்போதும் புன்னகை மட்டுமே மின்னும் அவளது சந்திரவதனத்தில் சில மாதங்களாகக் கவலை தனது ரேகைகளைப் பதிக்கத் தொடங்கியிருந்தது. எல்லாம் காதல் செய்த கோலம் தான்.
அவந்திகா அந்த இருவரையும் தன் அகண்ட கண்களால் பார்த்த அதே நேரத்தில் ரித்திமாவின் மொபைல் திரையில் அர்மான் மாலிக்கின் குரலில் அல்லு அர்ஜூன் ‘புட்டபொம்மா புட்டபொம்மா நன்னு சுடுகண்டுவே’ என்று பாடிக்கொண்டிருக்க
அதில் வெகுண்ட அவந்திகா “ஏய் ரித்தி! முதல்ல அந்தப் புட்டபொம்மாவை நிறுத்துடி… மனுசி கடுப்புல வெந்துப் போயிருக்கேன்… இப்போ இது ஒன்னு தான் குறைச்சலாக்கும்” என்று கடுகடுக்க
ரித்திமா “ஐ னோ ஹனிபி.. நீ டென்சனா இருக்கேனு தெரிஞ்சு தான் நான் செல்லத்தோட பாட்டைப் போட்டதே… இங்கே கொஞ்சம் பாரேன், என்ன ஹேர்ஸ்டைல், என்ன ஸ்மைல், அதுலயும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்லாம் சான்ஸே இல்லை ஹனிபி” என்று சொன்னபடி அவளது ஆதர்ச கதாநாயகனைப் புகழ ஆரம்பித்தாள்.
அவந்திகா இப்போது அவளை எரிச்சலூட்டிய மிஸ்டர் கபூர் அலையஸ் மைதாமாவை மறந்தவள் “அப்பிடி நீ என்னோட மூடை சேஞ்ச் பண்ணனும்னா என் சூர்யாவோட சாங்கைப் போட்டிருக்கணும்” என்று தனது ஆதர்ச கதாநாயகனைக் குறிப்பிடவே
ரித்திமா நக்கலுடன் “சூர்யா என்னடி சூர்யா? என் அல்லு இப்பிடி ரெண்டு மூவ்மெண்ட் போட்டா டோட்டல் கேர்ள்ஸும் ஃப்ளாட் ஆயிடுவாங்க.. போவியா” என்று சொல்ல
அவந்திகா “உன் அல்லு ரெண்டு மூவ்மெண்ட் போட்டா தான் கேர்ள்ஸ் ஃப்ளாட் ஆவாங்க…. ஆனா என்னோட சூர்யா ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்து, அந்த மெஸ்மரைசிங்கான சிரிப்பை உதிர்த்தாலே பொண்ணுங்க ஃப்ளாட் ஆயிடுவாங்க” என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வரவே
இருவரது சண்டையில் கடுப்பான பிரதியுஷா “அடியே இப்போ நிறுத்தப் போறிங்களா இல்லையா? சினிமாவை சினிமாவா பாருங்கடி… ஹே பகவான்! இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் புத்தியைக் குடு தெய்வமே” என்று மேலே பார்த்து வேண்டிக்கொள்ளவும் இருவரும் அமைதியானார்கள்.
அவந்திகா “ஓகே உஷா! விளையாட்டு போதும்… இப்போ நான் சீரியஸாப் பேசப் போறேன்…” என்று பலத்தப் பீடிகை போடவும் இரு தோழியரும் அவள் என்ன தான் சொல்ல வருகிறாள் என்று கன்னத்தில் கைவைத்தபடி கேட்க ஆரம்பித்தனர்.
“ஏன்டி உனக்கு லவ் பண்ண ஆளே இல்லைனு போயும் போயும் அந்தத் திமிர் பிடிச்ச மைதாமாவையா லவ் பண்ணுவ? அவன் மூஞ்சியும், ஆளும், முகரைக்கட்டையும்… நெடுநெடுனு பனைமரமாட்டம் வளர்ந்திருக்கானே தவிர பட்டாணி அளவுக்குக் கூட அவனுக்கு மூளைனு ஒன்னு இல்லை…” என்று படபடத்தவள் விஹான் கேம்பசில் ராகவைச் சந்தித்தது, அவனிடம் கத்தியது, பதிலுக்கு அவன் கத்தியது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் போட்டு உடைத்தாள்.
அந்தோ பரிதாபம், பிரதியுஷாவின் காதலன் அவனல்ல, அவனது அண்ணன் என்பதை அவள் அறியவே இல்லை. அவனது பெயரை இது வரை பிரதியுஷா மிஸ்டர் கபூர் என்று விளித்திருந்ததே இதற்கு காரணம்.
அவள் செல்லமாக வருணை மிஸ்டர் கபூர் என்று அழைத்து வைக்க, தோழிகளிடமும் அவன் மிஸ்டர் கபூராகவே அறிமுகமாகி இருந்தான். அவர்கள் காதலிப்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இரகசியம் காத்த இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவு என்ற நிலை வரும் போது தான் பிரதியுஷா தன் தோழிகளிடமும், வருண் தனது இளையச் சகோதரர்களிடமும் தங்கள் சோகத்தைப் பிழிந்து வைத்திருந்தனர்.
அன்றைய தினத்திலிருந்து பிரதியுஷாவின் தோழியரைப் பொறுத்தவரை அவளது மிஸ்டர் கபூர் ஓர் வில்லன், ஏமாற்றுக்காரன். அதே போல வருணின் சகோதரர்களைப் பொறுத்தவரைக்கும் அவனது காதலியும் சண்டியூ வெட்டிங் பிளானர்ஸின் பார்ட்னருமான அப்பெண் ஒரு சந்தர்ப்பவாதி.
இந்த லெட்சணத்தில் இருவரும் தாங்கள் காதலித்தவர்களின் புகைப்படம், செல்ஃபி முதற்கொண்டு அழித்து இக்கால காதல்பிரிவுக்கு உதாரணமாக விளங்கவே ராகவும், அவந்திகாவும் விதியின் ஆட்டத்தில் அவர்களாகவே சந்தித்துக் கொண்டனர் இல்லை இல்லை, சண்டை போட்டுக் கொண்டனர்.
இதை அறியாது அவந்திகா பேசிவைக்க, பிரதியுஷாவோ தான் காதலித்த வருணா இப்படி என்று மனதுக்குள் நொந்து கொண்டாள். அவளை அதிகநேரம் சோகக்கடலில் மூழ்க வைக்க விரும்பாத அவளது செல்போன் நெட்வொர்க் ராஜஸ்தானிலிருந்து ஒரு அழைப்பை அவள் வசம் அனுப்ப போனின் ரிங்டோன் சிணுங்க யாரென்று பார்த்தவளின் முகத்தில் அதுவரை இருந்த தவிப்பு மாறி குற்றவுணர்ச்சி இடம்பெற்றது.
போனை எடுத்தவள் “தாதி!” என்று பேச ஆரம்பிக்கவும் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டனர் ரித்திமாவும் அவந்திகாவும்.
பிரதியுஷா பேசிவிட்டுப் போனை வைக்கவும் இருவரும் என்னவென்று வினவ “தாதி என்கேஜ்மெண்ட்ல ரொம்ப பிடிவாதமா இருக்காங்க… இவன் வேற என்னை ஒரு விதமா கஷ்டப்படுத்துறான்… நா என்ன தான் செய்யுறது? அதான் தாதி கிட்ட நிச்சயத்துக்குச் சம்மதம்னு சொல்லிட்டேன்” என்று சொல்ல தோழியர் இருவருக்குமே அது தான் சரியென்று பட்டது.
“டோன்ட் ஒரி உஷா! அவன் இல்லாம போனா நீ ஒன்னும் உடைஞ்சுப் போயிட மாட்டேனு அவனுக்கும் புரியவைக்கணும்டி”
“ஹனிபி சொல்லுறது தான் கரெக்ட் உஷா… உன் மேல உண்மையா லவ் இருந்தா இன்னைக்கு அவன் ஹனிபி கிட்ட இவ்ளோ ரூடா பிஹேவ் பண்ணிருப்பானா? ஹீ டஸிண்ட் டிசர்வ் யுவர் லவ் உஷா.. பர்கெட் ஹிம்.. உனக்கானவன் அவன் இல்லை”
இரு தோழியரும் அவள் மீதான அக்கறையில் சொன்னாலும் பிரதியுஷாவின் காதல் கொண்ட உள்ளம் இன்னும் வருண் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்க ஆரம்பித்தது.
**************
கோரமங்களா பகுதி…
அதன் அமைதியான இடத்தில் பல ஏக்கர்களுடனான இடத்தில் விரிந்து கிடந்தது அந்த வீடு. ‘கபூர் பேலஸ்’ என்ற அந்த வீட்டை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொல்வதே பொருத்தம். அந்த கபூர் பேலஸின் பணியாளர்களுக்கென ஒரு புறம் நடுத்தர அளவில் வீடுகள் கட்டப்பட்டிருக்க, அவை எதுவும் அம்மாளிகையின் அமைதியையோ அழகையோ குலைக்காவண்ணம் இயல்பாய் பொருந்தியிருந்தன.
பசும் புல்வெளியின் நடுவில் வெண்முத்தாய் மின்னிய அம்மாளிகை ஐந்துத் தளங்களுடன், அதன் அழகுக்கு அழகு சேர்க்கும் மலர்த்தோட்டத்துடன் கம்பீரமாய் நின்றது. அந்த தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சல் தான் சீண்டுவாரின்றி கிடந்தது. வீட்டின் பெரியவர்கள் தங்கள் வீட்டு வாரிசுகளின் பிள்ளைகளுக்கென ஆசையாய் வைத்த ஊஞ்சல் அது.
வீட்டு வாரிசுகளோ கல்யாணம் என்றாலே கோரமங்கலாவிலிருந்து அவர்களின் பூர்வீகமான பஞ்சாப்புக்கே ஓடிவிடுவர் போல.. நான்கு ஆண்மகன்களில் ஒருவன் கூட திருமணம் என்ற வார்த்தையை உச்சரிக்க அவர்களின் பெற்றோருக்கு அனுமதி அளிக்கவில்லை.
வீட்டினுள் கீழ்த்தளத்தின் பெரிய ஹாலில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த சோபாவில் கம்பீரமாய் அமர்ந்திருந்தார் சுமித்ரா. அந்த கபூர் குடும்பத்தின் மூத்தப் பெண்மணி. குணால் கபூர், மோகன் கபூர் மற்றும் நிரஞ்சன் கபூர் என்ற மூவரின் தாயார்.
அவருடன் அமர்ந்து தீவிரமாய் எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர் மூன்று நடுத்தரவயது பெண்மணிகள். அவர்கள் வேறு யாருமில்லை, சுமித்ராவின் மருமகள்கள் தான்.
மூத்தவர் குணாலும், இரண்டாமவர் மோகனும் தாயார் சொன்ன பெண்களான பிரியா மற்றும் ராதாவை எவ்வித மறுப்புமின்றி திருமணம் செய்து கொள்ள கடைகுட்டியான நிரஞ்சன் மட்டும் வீணாவைக் காதல் திருமணம் செய்திருந்தார். எனினும் சுமித்ராவுக்கு மூன்று மருமகள்களும் சமம் தான்.
மகன்கள் மூவரும் வர்த்தக முறை பயணம் என்று ஆஸ்திரேலியா சென்று விட மருமகள்கள், பேரன்கள் மற்றும் பேத்திகளுடன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தார் சுமித்ரா. பஞ்சாபிக்களுக்கே உரித்தான வெண்கலத்தொண்டை, கள்ளமற்ற முகம், எளிமையான உள்ளம் கொண்டவர்.
வீட்டின் பெரியவர்கள் கீழ்த்தளத்தில் வட்டமேஜை மாநாடு நடத்திக் கொண்டிருக்க, சுமித்ராவின் பேரன்களும் பேத்திகளும் இரண்டாவது தளத்தில் அவரது மூத்தப் பேரன் வருணின் காதலி இன்று அலுவலகம் வந்து கத்திவிட்டுச் சென்றதை அவரது மற்றொரு பேரன் ராகவ் விளக்கிக் கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“இப்பிடி ஒரு திமிர் பிடிச்சப் பொண்ணை நான் பார்த்ததே இல்லை.. என் கண்ணு முன்னாடி நின்னு வருண் பய்யாவைப் பத்தித் தப்பா பேசுறா… ஆக்சுவலி சீட் பண்ணுனது அவ தான்… அவளால தான் வருண் பய்யா இப்பிடி வருத்தத்தோட இருக்காரு… ஆனா அவ நின்ன ஸ்டைல் என்ன, பேசுன பேச்சு என்ன… இரிட்டேட்டிங் இடியட்” என்று பல்லைக் கடித்தான் ராகவ். இவன் சுமித்ராவின் இரண்டாவது மகனான மோகன் கபூர் மற்றும் ராதா தம்பதியினருக்கு இருக்கும் ஒரே ஒரு மகன்.
ஒரே பையன் என்று அவரது அன்னையும் தந்தையும் கொடுத்தச் செல்லமும், அவன் வளர்ந்த மேல்தட்டு வாழ்க்கைமுறையுமாய் சேர்ந்து அவனுக்குத் தனது அந்தஸ்துக்குக் குறைந்தவர்களுடன் பேசுவதோ பழகுவதோ தனது தகுதிக்கு குறைவானது என்ற அழியா எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.
பிடிவாதமும், கோபமும் அவன் கூடவே பிறந்தப் பழக்கங்கள் என்றாலும் குடும்பம் என்று வந்துவிட்டால் அவன் சொக்கத்தங்கம் தான். பாட்டிக்கு நல்ல பேரனாக, பெற்றோருக்குத் தங்கமகனாக, சகோதர சகோதரிகளுக்கு நல்ல நண்பனாகவே நடந்து கொள்வான் ராகவ். அதே நேரம் தனது செய்கைகள், பழக்கவழக்கங்களால் மூன்றாவது நபருக்கே பிரச்சனை என்றாலும் அதைத் தீர்த்துவைக்கும் வரை அவன் அமைதியடைய மாட்டான்.
அவனது சகோதர சகோதரிகள் அனைவருமே அவனது பிரியத்துக்குரியவர்களே. ஆனால் வருண் என்றால் அவனுக்குத் தனிப்பிரியம். வருண் ராகவின் பெரியப்பா குணால் கபூர் மற்றும் பெரியம்மா பிரியாவின் ஒரே புத்திரன். இருவருக்குமிடையேயான இடைவெளி ஒரு வருடம் தான். எனவே வருணுக்கு ஒன்று என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டான் ராகவ். வருணின் காதல் அவனுக்குத் தீராச்சோகத்தை ஏற்படுத்திவிட அதைப் போக்க என்ன வழி என்று புரியாமல் விழித்தான்.
“பட் பய்யா அவங்க ராயல் ஃபேமிலினு வருண் பய்யா சொன்னாரே… அவங்களோட நேட்டிவ் ராஜஸ்தான்னு சொன்னாரில்லையா?” என்று வருண் காதலித்தப் பெண் செய்த காரியத்தை ராகவ் விளக்கியும் நம்ப இயலாமல் கேட்டான் கிஷோர். அவன் ராகவின் சித்தப்பாவான நிரஞ்சன் கபூர் மற்றும் சித்தி வீணாவின் மூத்தப் புதல்வன். அவனுக்கு இளையவன் அமர். இவர்களுக்கு அடுத்துப் பிறந்த இரட்டைச்சகோதரிகள் நேகா மற்றும் பிந்து.
கிஷோர் கூறியதைக் கேட்ட அமரும் “எஸ் பய்யா! ராயல் ஃபேமிலியில பிறந்தவங்க இப்பிடி அடாவடியா பேச மாட்டாங்க… எனக்கு எதுவோ தப்பா நடந்திருக்குனு தோணுது” என்று அடித்துப் பேசினான்.
இதைக் கேட்ட நேகாவும் பிந்துவும் “ஓய்! நிறுத்துங்கடா ரெண்டு பேரும்… ராகவ் பய்யா சொன்னா அது கரெக்டா இருக்கும்… பய்யா அவ எப்பிடிப்பட்ட ரவுடிப்பொண்ணுனு இப்போ தெரிஞ்சுடுச்சுல்ல.. இனிமே கவலைப்பட என்ன இருக்கு? வருண் பய்யா அவ கிட்ட இருந்து தப்பிச்சிட்டாருனு நினைச்சுச் சந்தோசப்படுங்கப்பா” என்று கூறவும் தான் ராகவிற்கும் மற்றவர்களுக்கும் இது புரிந்தது.
ராகவ் இரு தங்கைகளின் கன்னத்தையும் செல்லமாகக் கிள்ளியவன் “இதுக்குத் தான் பிந்துவும் நேகாவும் வேணுங்கிறது… நீங்க ரெண்டு பேர் சொல்லுறதும் ஹன்ட்ரெட் பர்செண்டேஜ் கரெக்ட். அவ தான் பய்யாவை விட்டு பிரிஞ்சிட்டாளே! இனிமே கவலைப்பட எதுவுமில்லை… இன் ஃபேக்ட் அவளைப் பத்தி நினைச்சா அவளோட அலட்சியம் தெறிக்கிற முகம் நியாயபகத்துக்கு வந்து என்னை இம்சை பண்ணுது” என்று சொன்னபடி சகோதர சகோதரிகளுடன் மற்ற விஷயங்களைப் பேச ஆரம்பித்தான்.
ராகவ் அறியவில்லை, நினைவாக வந்து அவனை இம்சை செய்பவள் இன்னும் சில நாட்களில் அவனது நிஜவாழ்விலும் வந்து இம்சை செய்யப் போகிறாள் என்று.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


