வடதிசையைத் தேடும் திசைகாட்டி போல, என் கண்கள் உன் மீதே ஒட்டிக்கொள்கின்றன. என்னை இப்படிச் சிறைபிடிக்க எந்த மாயாஜாலத்தை உனக்குள் மறைத்து வைத்திருக்கிறாய்?
-நேத்ரன்
ஒப்புத் தாம்பூலம் மாற்றிக்கொண்ட பெரியவர்களிடம் தேர்தல் வெற்றிக்குப் பிறகான தேதியில் நிச்சயதார்த்தமும் திருமணமும் வைத்துக்கொண்டால் நலமெனச் சொல்லிவிட்டான் நேத்ரன். அதில் வெண்பாவுக்கும் சம்மதமே!
பெரியவர்களும் தேர்தல் முடிவு வந்ததிலிருந்து ஒரு மாதம் கழித்து வரும் தேதிகளில் நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் வைத்துக்கொள்ள வசதியாகச் சுபநாட்களைக் குறித்துக்கொண்டார்கள்.
என்னதான் ஜெயித்துவிடுவோமென நேத்ரனுக்கு ஆழமான நம்பிக்கை இருந்தாலும் மனதின் ஒரு ஓரமாய் என்னவோ ஒரு கலக்கம். ராஜவேலு அவன் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில் பட்டாசு, இனிப்புக்கு எல்லாம் ஆர்டர் கொடுக்கச் சொல்லிவிட்டார்.
அவனது மனதிலிருந்த கலக்கத்தை அறிந்தவள் வெண்பா மட்டுமே! அவளுடன் உரையாடிய பொழுதுகளில் தனது மனதின் ஒரு ஓரமாய் இருக்கும் தோல்வி பற்றிய பயத்தை வெளியிட்டுவிட்டான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
உலகத்தின் பார்வைக்கு ஜாம்பவான்களாகத் தெரியும் ஆண்களுக்கு உள்ளேயும் இம்மாதிரி சின்னச் சின்னப் பலவீனங்கள் இருக்கும். அதை அவர்கள் அனைவரிடமும் வெளிக்காட்டுவதில்லை. பலத்தைவிடப் பலவீனத்தை வெளிப்படுத்த ஒரு நபரை அந்த ஆண் தேர்வு செய்தான் என்றால் தன்னைவிட அந்நபர் மீதான நம்பிக்கையும் நேசமும் அவனுக்கு அதிகம் எனப் புரிந்துகொள்ளலாம். அப்படித்தான் வெண்பா மீதான நேத்ரனின் நேசமும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதீதமானது எனலாம்.
அவர்களிடையே மொபைல் உரையாடல்களும், வாட்ஸ்அப் அரட்டைகளும் முன்பைவிட அதிகமாயின எனலாம். அவளுடனான பொழுதுகளில் அவனது மனக்கலக்கத்தின் வீரியம் குறைவதை நேத்ரனும் கண்டுகொண்டான்.
அப்போதெல்லாம் அவனது மனதைத் தோல்வி குறித்த கலக்கத்திலிருந்து மாற்றத் தன்னாலான முயற்சியாய் மற்ற விஷயங்களைப் பேச முயலுவாள் வெண்பா.
அன்றும் அப்படித்தான் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வழியாக இருவரும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
“எதுக்கு அதையே யோசிக்குறீங்க? உங்க பசங்களுக்கு இப்ப கபடி டோர்னமென்ட் எதுவும் கிடையாதா? அவங்ககூடப் பேசுங்க. நீங்க அரசியல்வாதி ஆகுறதுக்கு முன்னாடி உங்களுக்கு பிசினஸ்மேன்னு ஒரு அடையாளம் இருந்துச்சு. அதையும் கொஞ்சம் கவனிக்கலாம். உங்களுக்கு ஓட்டு போட்ட நாங்க அப்பிடியெல்லாம் உங்களைக் கைவிட்டுட மாட்டோம்”
“ம்ம்” என உம் கொட்டியவன் திடுமென முகமெல்லாம் ஒளிர “அப்ப டீச்சரம்மா எனக்குத்தான் ஓட்டு போட்டிருக்க. சரிதானே?” என்று வினவ வெண்பாவின் முகத்தில் சின்னதாய் ஒரு கள்ளத்தனம் ஓடி மறைந்தது.
“நான் பொதுவா சொன்னேன்” எனச் சமாளிக்கப் பார்த்தவள் பின்னர் சிரித்துவிட நேத்ரனுக்குத் தனது கேள்விக்கான பதில் உறுதியான மகிழ்ச்சி!
“அதை விடு! ஆகாஷுக்குக் கார்டிகன் பின்னிக் குடுத்த மாதிரி எனக்கும் ஏதாச்சும் பண்ணித் தர்றது”
“உங்களுக்கு என்ன வேணும்? கார்டிகனா? பீனியா?”
“ப்ச்! அதெல்லாம் போரிங். நீயே யோசி. உனக்கு நான் ஸ்பெஷலானவன்னா நீ குடுக்கப்போற கிஃப்ட்டும் ஸ்பெஷலா இருக்கணும்”
பேசிக்கொண்டே கண்களால் குறும்பைக் கொட்டியவனின் விரல்கள் அவனது உதட்டைத் தொட்டிக் காட்டத் தொடுதிரையில் தெரிந்தவளின் விழிகளில் ஆச்சரியமும் முகத்தில் வெட்கமும் ஒருசேர உதித்தன.
“கொன்னுடுவேன் ராஸ்கல்” கண்களை விரித்து அவனை மிரட்டியவள் நேத்ரனின் அருகே சோஃபாவில் கிடந்த ஹாரிபாட்டர் கண்ணாடியைப் பார்த்துவிட்டாள்.
“எப்பவும் ரேபான்ல்தானே சுத்துவீங்க? என்ன திடீர்னு ஹாரிபாட்டர் ஸ்பெக்ஸ்?” என விசாரித்தாள்.
“இதுவா?” என்று கேட்டபடியே அதைப் போட்டுக்கொண்டவன் “சிஸ்டம் பாக்குறப்ப யூஸ் பண்ணுவேன். எனக்கு இந்த ஸ்பெக்ஸ் அழகா இருக்குனு ஒரு பொண்ணு சொன்னா. அவளுக்காக அடிக்கடி போடுவேன்” என்று விஷமமாய்ச் சொல்ல வெண்பாவின் முகத்திலோ பொறாமை சுடர்விட்டு ஜொலித்தது.
“நான் சொல்லலை. அப்ப வேற யாரு?” என்று முகத்தைத் தூக்கிவைத்தபடி வினவினாள் அவனிடம்.
நேத்ரன் வேண்டுமென்றே கண்களை ரசனையில் சுருக்கியவனாய் “ஷீ இஸ் அன் ஏஞ்சல். கியூட்ங்கிற வார்த்தைக்கு டிக்ஷனரியில அர்த்தம் தேடுனா அவ பேரைத்தான் போட்டிருப்பாங்க.” என்க
“இந்த மெட்ஃபர் எல்லாம் எனக்கு வேண்டாம். யாரு அந்தப் பொண்ணு? பேர் என்ன?” என்று கண்களில் தீப்பொறி பறக்க வினவினாள் வெண்பா.
நமட்டுச் சிரிப்பை உதட்டுக்குள் பூட்டிக்கொண்டான் நேத்ரன். தொடுதிரையில் தெரிந்தவளின் மூக்கைத் தொட்டவன் “டீச்சரம்மாக்குப் பொறுமை அவசியம். என்ன நீ இப்பிடிக் கொதிக்குற? பாரு! போனோட ஸ்கிரீனே சூடாகுது. அவுச்!” என்று தொடுதிரை சுட்டுவிட்டதுபோலக் கைவிரலை ஊதிக்கொண்டே நடித்தான்.
வெண்பா நறநறவெனப் பற்களைக் கடித்தவள் “நீங்க ஒண்ணுமே சொல்லவேண்டாம்.” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள்.
நேத்ரன் அவளது கோபத்தைக் கண்டு சத்தமாய்ச் சிரித்தவன் வாட்ஸ்அப்பில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தையே வெண்பாவுக்கு அனுப்பிவைத்தான்.
அவள் இன்னுமே கடுப்பில்தான் இருந்தாள் எனலாம். புகைப்படம் ஒன்று அவனிடமிருந்து வரவும் கடுப்போடு எடுத்துப் பார்த்தவள் அதிலிருந்தவளைக் கண்டதும் முகம் மாறி மெல்ல மெல்லத் தணிந்தாள்.
முகத்தில் கோபம் மறைந்து கனிவு நிறைந்தது. ஏனெனில் அதிலிருந்தவள் மதுஸ்ரீ. அந்தக் குட்டிப்பெண்ணுக்கு மாமாவின் ரேபானைவிட அவன் அவ்வப்போது அணியும் ஹாரிபாட்டர் பாணி கண்ணாடியே அவனுக்குப் பொருத்தமெனும் எண்ணம்.
அவனுமே கணினியில் நேரம் செலவளிக்கையில் அந்தக் கண்ணாடியை அணிவது வழக்கம். அதைத்தான் வேண்டுமென்றே வெண்பாவிடம் திரித்துச் சொல்லியிருந்தான் அந்தக் குறும்புக்கார அரசியல்வாதி.
“டீச்சரம்மாவோட கோவம் அழகா இருக்கு. இன்னும் கொஞ்சநேரம்கூட ரசிக்கலாம்தான். ஆனா உன்னை ரொம்பவும் டீஸ் பண்ணப் பிடிக்கல. எப்பிடி என் ஏஞ்சல், ரொம்ப அழகுதானே?” என செய்தி அனுப்பினான்.
வெண்பா அதைப் படித்துவிட்டுச் சிரித்தாள்.
“அழகுதான்! அவங்க அத்தை மாதிரி அழகு” என்று பதில் அனுப்பிவைத்தாள் அவள்.
அரட்டையில் நேரம் நீள, இதுபோல அழகான தருணங்களால் நாட்களும் ஓடின. தேர்தல் முடிவுக்கான நாள் நெருங்க நெருங்க நேத்ரனுக்கான பிரத்தியேகமான பரிசைத் தனது கைகளால் பின்னி முடித்தாள் வெண்பா.
சரியாய் வாக்கு எண்ணும் நாளன்று வெண்பாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் நேத்ரன். அவனைப் பார்த்ததும் செண்பகராமனுக்கும் உமையாளுக்கும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.
“வாங்க மாப்பிள்ளை! நீங்க இந்நேரம் ஓட்டு எண்ணுற இடத்துக்குப் போயிருப்பீங்கனு நினைச்சோம்”
செண்பகராமன் பேசியபடியே சோஃபாவைக் காட்ட நேத்ரனும் அமர்ந்தான். எழிலனும் ஹேமாவும் ஹாலுக்கு வந்தார்கள் அவனை வரவேற்கும் புன்னகையோடு.
“வாங்க வாங்க! ஸ்வீட் பாக்ஸ் எங்க? எப்பிடியும் நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க” என்று எழிலன் உரிமையாய்க் கேட்க
“எவ்ளோ நம்பிக்கை உங்களுக்கு! ஒரு ஓட்டுலகூட வெற்றி தோல்வி மாறிடும் மாமா” என்றான் நேத்ரன்.
“எங்க பாத்தாலும் உங்களைப் பத்திதான் பேச்சுப் போகுது. பிடிக்காத ஒருத்தரைப் பத்தியா மக்கள் பேசிக்கப்போறாங்க?” என ஹேமா அவள் பங்குக்கு அவனிடம் வினவினாள்.
உமையாள் காபி கொண்டுவந்து கொடுக்க அதை அருந்தியவன் மலர்ந்த முகத்தோடு வெண்பாவின் பெற்றோரிடம் ஒரு கோரிக்கை வைத்தான்.
“எனக்கு மைண்ட் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு. ரிசல்ட் வர்ற அன்னைக்கு சும்மா ஒரு லாங் ட்ரைவ் போகலாம்னு நினைச்சேன். என்கூட வெண்பாவ அனுப்பிவச்சீங்கனா ஈவினிங்குள்ள வந்துடுவோம். அவகூடப் பேசுனா கொஞ்சம் தூரம் ட்ராவல் பண்ணுனா என் மைண்ட் அமைதியாகும். முக்கியமான இன்னொரு விஷயம், என்னோட வெற்றியை நான் அவகூடக் கொண்டாடணும்னு ஆசைப்படுறேன்”
செண்பகராமனும் உமையாளும் தயக்கத்தோடு கைகளைப் பிசைந்தார்கள். அவர்களின் நிலையே இப்படி என்றால் வெண்பா? தனது அறைக்குள் ஆகாஷோடு மல்லுகட்டியபடி நேத்ரனின் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தவளுக்குச் சங்கடமோ சங்கடம்.
“மாமாகூட லாங் ட்ரைவ் போறியா அத்தை?” என்று ஆர்வமாய்க் கேட்ட மருமகனை அமைதியாக இருக்குமாறு கண்கட்டியவள் அடுத்த நொடி ஹாலில் ஒலித்த தனது தந்தையின் குரலில் ஆச்சரியமுற்றாள்.
“அழைச்சிட்டுப் போங்க மருமகனே! ஆனா சீக்கிரம் திரும்பிடுங்க. நம்ம ஊருல கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி அழைச்சிட்டுப் போறதெல்லாம் வழக்கமில்லதான். ஆனா உங்க மேல நம்பிக்கை இருக்கு எங்களுக்கு. அதனால மறுப்பு சொல்ல விருப்பமில்ல. தாராளமா அழைச்சிட்டுப் போங்க”
தனது தந்தையா அனுமதி கொடுத்தார்! அதிர்ந்தவள் மகிழ்ச்சியில் முறுவலித்தாள். மகிழ்ச்சியின் அலை உடலெங்கும் பரவி அவளை மிதக்கவைத்தது காற்றில்.
“நானும் வரட்டுமா அத்தை?” என ஆசையாய்க் கேட்டான் ஆகாஷ்.
தமையனின் மைந்தனருகே முழங்காலிட்டவள் “அடுத்த தடவை நீ, நான், மாமா, மாமா வீட்டுல இருக்குற குட்டிப்பொண்ணு எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போகலாம். இப்ப நானும் மாமாவும் மட்டும் போயிட்டு வர்றோம். சரியா? எங்க அத்தை கன்னத்துல கிஸ் பண்ணி சென்ட் ஆஃப் பண்ணு பாப்போம்” என்று கைகளை விரிக்க ஆகாஷும் அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டான்.
“பை அத்தை! பத்திரமா போயிட்டு வா”
சொன்னவன் அறையிலிருந்து ஓடிவிட வெண்பாவும் ஆலிவ் பச்சை வண்ண காட்டன் டாப்பும் கருப்பு லெகிங்ஸும் அணிந்து பிரயாணத்துக்குத் தயாரானாள். அலைபாயும் அடர் கூந்தலை மலர் வடிவ பனானா கிளிப்பில் ஹாஃப் அப் ஸ்டைலில் அடக்கிக்கொண்டாள்.
நெற்றியின் மத்தியில் சிறிய கருப்புப் பொட்டை ஒட்டிக்கொண்டவள் இதோ தயார்!
ஹாலுக்கு வந்ததும் ஆயிரம் அறிவுரைகள் அன்னையிடமிருந்து. சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் விழிகள் அவள் மீது காந்தமாய் ஒட்டிக்கொண்டிருக்க எதைக் கவனிக்க முடியும் அவளால்? ஏற்கெனவே காற்றில் மிதக்கும் உணர்வு! இப்போதோ காதலில் மிதக்கவைத்தான் அந்தக் காந்தவிழிகளுக்குச் சொந்தக்காரன்.
என்ன சொன்னார்கள் என்றே புரியாமல் அனைத்துக்கும் தலையாட்டிவைத்தாள் வெண்பா. காலையுணவை இருவரும் வெண்பாவின் வீட்டில் முடித்துக்கொண்டார்கள். கிளம்பும் முன்னர் வேகமாய் அவளது அறைக்குள் போய் வந்தவளின் கையில் க்ளட்ச் பர்ஸ் ஒன்று இருந்தது.
“நாங்க போயிட்டு வர்றோம் மாமா”
“பத்திரமா போயிட்டு வாங்க. வேகமா வண்டி ஓட்டாதீங்க. வெண்பாக்கு ஹெல்மெட்..”
“கொண்டுவந்திருக்கேன் மாமா”
‘ஹெல்மெட்டா?’ குழப்பத்தோடு நேத்ரனுடன் வீட்டு வாயிலுக்கு வந்தவள் அங்கே நின்ற ராயல் என்ஃபீல்டைப் பார்த்ததும் அவளை அறியாமல் புன்னகைத்தாள்.
“பைக் ட்ராவலா?” ஆசையாய்க் கேட்டவளின் தலையில் ஹெல்மெட்டைக் கவிழ்த்தி வாரை மாட்டிவிட்டான் நேத்ரன். வெண்பா அந்தப் பைக்கின் பக்கவாட்டிலிருந்த ஸ்டோரேஜ் பாக்ஸில் அவளது க்ளட்ச் பர்ஸை வைத்துப் பூட்டினாள்.
“கார்ல நீயும் நானும் தனித்தனி சீட்டுல உக்காந்து போறதுல என்ன கிக் இருக்கப்போகுது? பைக்னா நீ எனக்கு ரொம்ப நெருக்கமா இருக்குற ஃபீலைக் குடுக்கும். நாமளும் நேச்சுரல் சீனரியை ரசிச்சிக்கிட்டே போகலாம்”
வெண்பாவுக்கும் குளிர்க்காற்று முகத்தில் மோத அப்படியொரு பயணத்தை நேத்ரனோடு இணைந்து மேற்கொள்ளும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அவன் ஹெல்மெட்டைப் போட்டுவிட்டுப் பின்னே அமருமாறு கைகாட்டவும் ஆர்வமாய் அமர்ந்துகொண்டாள்.
வீட்டினர் யாவரும் வெளியே வர அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டுப் பைக் பறந்து அங்கிருந்து.
தூரம் செல்லச் செல்ல திருநெல்வேலியின் இயல்பான வெம்மை மெல்ல மெல்லக் குறைந்து, காற்றில் ஒருவிதக் குளிர்ந்த ஈரம் கலக்கத் தொடங்கியிருந்தது. கறுப்பு நிற ராயல் என்ஃபீல்டின் கம்பீரமான ‘டப்… டப்… டப்…’ என்ற சீரான சத்தம், அந்த நெடுஞ்சாலையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது.
நேத்ரனின் அகன்ற முதுகை அரணாய் எண்ணி, அந்தத் தோளோடு சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் வெண்பா. இருபுறமும் விரிந்துகிடந்த தென்காசியின் பசுமையான வயல்வெளிகளும், தூரத்தில் ஒரு மாபெரும் பச்சை நிறச் சுவர்போல எழுந்து நின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டமும் அவளது கண்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்திருந்தன.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்தப் பதற்றமான நாளில், கட்சி அலுவலகத்தின் ஏசி அறையில், தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு நடுவே இருக்க வேண்டியவன், அத்தனையையும் நிகிலனிடம் ஒப்படைத்துவிட்டு, “எனக்கு என் டீச்சரம்மாவோட நேரம் செலவழிக்கணும்” என்று ஒற்றை வார்த்தையில் அனைத்தையும் உதறிவிட்டு அவளோடு பைக்கில் கிளம்பியிருந்தான்.
செங்கோட்டையைத் தாண்டி, புளியரை செக்போஸ்டைக் கடந்து கேரள எல்லையான ஆரியங்காவு வனப்பகுதிக்குள் நுழைந்ததும், மலையின் தட்பவெப்பம் அடியோடு மாறியது. அதுவரை கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த கார்மேகங்கள், இப்போது ஒட்டுமொத்தமாகத் திரண்டுவந்து வானத்தை இருட்டாக்கின. அடுத்த சில நிமிடங்களில், பெரிய பெரிய நீர்த்துளிகளாக மழை கொட்டத் தொடங்கியது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைக்கு ஒரு தனி அழகு உண்டு. அது மெதுவாகத் தொடங்கிப் பின்னர் வேகமாய் விஸ்வரூபம் எடுக்கும். வானம் தன் வசமிருந்த மொத்தக் கருணையையும் மழையாகப் பொழிந்து அந்த வனப்பகுதியைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.
மெல்லிய சாரலை ரசித்தவர்களுக்கு வேகமாய்ப் பெய்த மழை எதிரில் வரும் காட்சிகளை மறைப்பதாய்!
“நேத்ரன்! மழை கொட்டுது! வண்டியை எங்கயாவது ஓரமா நிறுத்துங்க,” என்று வெண்பா அவனது காதருகே மொழிந்தாள் அவன் மீதான அக்கறையோடு. மழையின் இரைச்சலிலும் பைக்கின் சத்தத்திலும் அவளது குரல் அவனுக்குப் பாதிதான் கேட்டது.
சாலையின் வளைவொன்றில், பச்சைப் பசேலென்ற மரங்களுக்கு நடுவே பதுங்கியிருந்தது போன்ற ஒரு சிறிய டீக்கடை நேத்ரனின் கண்ணில் பட்டது. ஓடு வேய்ந்த அதன் கூரையிலிருந்து மழைநீர் அருவிபோலக் கொட்டிக்கொண்டிருக்க, பைக்கை அதன் ஓரமாக நிறுத்தினான் நேத்ரன்.
இருவரும் அவசரமாக ஓடிச்சென்று அந்தக் கடையின் சிறிய தாழ்வாரத்தில் ஒதுங்கினார்கள். வெண்பாவின் கூந்தலின் ஓரங்களில் படிந்திருந்த நீர்த்துளிகள் அவளது முகத்தில் வழிந்து, அவளை நீரில் நனைந்த சிற்பமாகவே மாற்றியிருந்தது. நேத்ரன் தன் சட்டையை உதறிவிட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்த மழையின் குளிரிலும், அவனது பார்வையின் இதம் மாறி வெப்பம் கூடி அவளைத் தகித்தது.
கடையின் உள்ளே வயதான மலையாளி ஒருவர், கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டுக் காய்ச்சிக்கொண்டிருந்தார். அந்த ஏலக்காய் வாசனையும், எண்ணெய்ச் சட்டியில் சுடச்சுடப் பொரிந்தெடுக்கப்படும் ‘பழம்பொரி’யின் மணமும் அந்தச் சில்லென்ற குளிருக்கு அத்தனை இதமாக இருந்தது.
“சேட்டா… ரெண்டு சூடான சாயா,” என்று நேத்ரன் ஆர்டர் செய்துவிட்டு, வெண்பாவின் அருகே வந்து நின்றான்.
கூரையிலிருந்து விழும் மழைத்துளிகளை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த வெண்பாவின் கைகளை மென்மையாகப் பற்றினான். அவளது விரல்கள் குளிரில் சில்லிட்டுப்போயிருந்தன. தன் இரு உள்ளங்கைகளுக்கு நடுவே அவளது கைகளை வைத்து, மெதுவாகத் தேய்த்து வெப்பமூட்டினான்.
“எலக்சன் ரிசல்ட் என்ன ஆகியிருக்கும் நேத்ரன்? காலையில இருந்து கவுண்டிங் போயிட்டு இருக்கு. உங்களுக்குத் துளியூண்டுகூடவா டென்சன் இல்லை?” என்று அவனது கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
“டென்சனா? எனக்கா? ம்ம்ம்! நிறைய இருக்கு டீச்சரம்மா. அதுக்குத்தானே உன்னை என்கூடவே வச்சிருக்கேன். யூ ஆர் மை ஸ்ட்ரெஸ் பஸ்டர். இன்னைக்குத் தோத்தாலும் ஜெயிச்சாலும் உன்கூட இருக்குற இந்த மொமெண்ட் எனக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்.” என்று அவளது சில்லிட்ட விரல்களில் தன் இதழ்களைப் பதித்தான்.

இருவரும் அங்கே கிடந்த பெஞ்சில் அமர்ந்து நிதானமாய்த் தேநீரை அருந்தினார்கள். அங்கு பெய்த மழையின் குளிருக்கும், மழையில் நனைந்த தேகங்களின் ஈரத்துக்கும் அந்தத் தேநீரின் வெம்மை அத்தியாவசியமாய் மாறிப்போனது. அடுத்து பழம்பொரியைச் சுவைத்தார்கள்.
“எனக்குப் பழம்பொரி பிடிக்கல” வெண்பா வேண்டாமென அவனிடம் கொடுக்க அதை அசூயை இல்லாமல் வாங்கிக்கொண்டான் நேத்ரன்.
அவள் கடித்த இடத்தில் அவன் கடித்தபோது சொல்லவொண்ணா உணர்வில் மூச்சடைத்தது போல உணர்ந்தாள் வெண்பா.
“அ… அது.. அதை மட்டும் அவாய்ட் பண்ணிட்டு…” எனத் திணறலோடு அவள் பேச “உஷ்! இதெல்லாம் எனக்குத் தேவாமிர்தம் மாதிரி டீச்சரம்மா.” என்றான் கண்களில் மெல்லிய மயக்கத்தோடு.
அவள் சாப்பிட்ட பழம்பொரியை உண்பதே அவனுக்குப் போதையூட்டுவதாய்! அவனது கண்களில் தெரிந்த போதை வெண்பாவின் வெட்கத்தைத் தூண்டப் போதுமானதாய்!
கண்ணிமைகள் தானாய்க் கவிழ அவனது புஜத்தைப் பற்றி அதில் சாய்ந்துகொண்டாள் வெண்பா.
“எல்லாத்துலயும் நீங்க எக்ஸ்ட்ரீம் லெவல்தான்ல?” என்று மெல்ல வினவ
“எல்லாத்துலயும் மீன்ஸ்….” என விஷமத்தோடு அவன் வினவ
“ஐ மீன் பார்வை, பேச்சு, செயல், இதோ இந்தக் காதல்னு எல்லாத்துலயும்… வேற எதையும் நான் சொல்லலை” எனக் கவனமாய் அவன் கேட்ட அர்த்தத்தை மாற்றிவிட்டாள் வெண்பா.
நேத்ரன் குறும்புப் பார்வையோடு அவள் செவியருகே குனிந்தவன் அந்தச் செவிமடல்களை உரசுவது போல “நீ சொல்லாத விஷயத்துலயும் நான் எக்ஸ்ட்ரீமாதான் இருக்கப்போறேன் டீச்சரம்மா! என்னைப் ஃபேஸ் பண்ண நீ உன்னைத் தயார்படுத்திக்கணும்டி” என்று தனது ஒட்டுமொத்த ஆசையையும் கொட்டிச் சொல்லி அவளை இன்னும் திணறடித்தான்.
அவளது கன்னக்கதுப்புகள் திகட்டத் திகட்ட வெட்கத்தைச் சுமந்து சிவந்துபோயின அவனது ஆசையான பேச்சில்! அழகான தருணம்! அற்புதமான மனிதனின் காதல்! இதை அனுபவித்தவளுக்கு அனைத்துமே அதீதமாய்த் தோன்றுவதாய்! அதீதத்தின் சுவைகூட அவளுக்குப் பிடித்துப்போனதாய்!
மெதுவாய் அவனது விழிகளை நேராய்ச் சந்தித்தவள் “உங்களுக்கு ஒரு கிஃப்ட் இருக்கு” என்றாள் சன்னக் குரலில். பரிசு என்றதும் நேத்ரனின் மூளைக்குள் காதல் நரம்புகள் தாறுமாறாய் வெடிக்க ஆரம்பித்தன. இத்துணை நெருக்கமாய்க் காதலித்து மணக்கவிருக்கும் உரிமைப்பட்ட பெண்ணொருத்தி நீரில் நனைந்த பேரழகுச் சிற்பமாய் அமர்ந்து கண்ணோடு கண் நோக்கிப் பரிசு பற்றிப் பேசினாள் என்றால் எந்த ஆணின் மனமும் தடுமாறுமே! நேத்ரனின் மனமும் தடுமாறித் தவிப்பில் ஆழ்ந்தது வெண்பாவின் பரிசென்ன என்ற ஆவலில்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


