இது நம் கதையின் முதல் பக்கம் மட்டுமே. இதற்கே விடைபெறுதல் என்று பெயர் வைக்க வேண்டுமா என்ன? இன்னும் எத்தனையோ அத்தியாயங்கள் நமக்கு மீதமிருக்கின்றன. இன்றைய நாளை நம் அழகிய தொடக்கமாகக் கருதிக்கொள். நாம் வெறும் நினைவாக மாறிப்போவதற்கு இந்தப் பிரபஞ்சம் நம்மைச் சந்திக்க வைக்கவில்லை.
ரங்கநல்லூர் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த ஊரின் திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கட்சிக் கொடிகள் படபடத்து பறந்துகொண்டிருந்தன. அது ஊரின் பிரதானப் பகுதி. அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ரங்கநல்லூருக்கு வரும் மக்கள், ரங்கநல்லூரிலிருந்து திருநெல்வேலி பாளையங்கோட்டைக்குச் செல்லும் மக்கள் என அனைவருக்குமான பேருந்து நிறுத்தங்கள் அங்கேதான் இருந்தன.
அதுபோக வங்கி அலுவலகங்கள், பழக்கடைகள், காய்கறிக்கடைகள், உணவகங்கள் என அனைத்தும் அடுக்கடுக்காக அணிவகுத்திருக்கும் பகுதியும்கூட.
சும்மாவே மக்கள் கூட்டம் அள்ளும் இடத்தில் அன்று தேர்தல் பரப்புரைக்கான ஏற்பாடுகளும் சேர்ந்துகொள்ள பரபரப்புக்கும் மக்கள் அலைக்கும் குறைவேயில்லை.
தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் சாலையின் இருபுறமும் உற்சாகமாக நின்றிருந்தார்கள். கூடவே உள்ளூர் கட்சிப் பொறுப்பாளர்கள் வேட்பாளரின் வருகைக்காகக் காத்து நின்றார்கள். வெயிலின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது காலையிலேயே. அந்த வெக்கையிலும் அவர்கள் முகத்தில் அரசியல் பரபரப்பு ஒட்டிக்கொண்டிருந்தது.
வட்டச் செயலாளர் ஆறுமுகம் தனது தோளில் கிடந்த துண்டால் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி,
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஏண்ணே, மணி எட்டரை ஆகுது. இன்னும் நம்ம வேட்பாளரைக் காணோம்? பெரியவர் நின்னப்பல்லாம் இந்த நேரத்துக்கு கரெக்டா பிரச்சார வண்டியில வந்து இறங்கிடுவாரு!” என்றார் இலேசான சலிப்புடன்.
அருகிலிருந்த ஒன்றியப் பொறுப்பாளர் சுந்தரம் அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “அவரு பெரியவருப்பா! அரசியல் ஊறுன உடம்பு. சின்னவருக்கு இதெல்லாம் புதுசு. பெரிய இடத்துப் பிள்ளை. வெயில் தாங்குமா? அவங்க பெரியப்பா போன தடவை ஜெயிச்சப்ப எலக்சனுக்காகப் பின்னாடி இருந்து வேலை பார்த்திருக்காருன்னு சொல்றாங்க. ஆனா, இப்படி ஜனத்துக்கு மத்தியில இறங்கி ஓட்டு கேட்டுப் பழக்கம் இருக்குமான்னு தெரியலையே!” என்று இழுத்தார்.
“அதெல்லாம் சரியா வருவாருண்ணே! கட்சித் தலைமை அவரைச் சும்மாவா கைகாட்டியிருக்கும்? அதுவும் இல்லாம, பையன் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஓனர் வேற. கட்சிக்கும் எலக்சனுக்கும் செலவு பண்றதுல அவங்க பெரியப்பாவையே மிஞ்சிடுவாரு போல! நாம நம்ம வேலையைக் கரெக்டா செஞ்சுடுவோம்,” என்று இன்னொரு நிர்வாகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது.
“அதோ, வண்டிங்க வந்துருச்சு பாருங்க!” என்று சுந்தரம் கைகாட்ட, அனைவரும் பேச்சை நிறுத்திவிட்டுச் சாலையைப் பார்த்தனர்.
திருநெல்வேலி நெடுஞ்சாலையிலிருந்து அந்தப் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பு தூசியைக் கிளப்பிக்கொண்டு மெல்ல ஊருக்குள் நுழைந்தது. முன்னால் வந்த பைலட் வாகனங்களைத் தொடர்ந்து, கட்சியின் பிரம்மாண்டமான கொடி பறக்க, பளபளக்கும் வெள்ளை நிற ‘ரேஞ்ச் ரோவர்’ கார் கம்பீரமாக வந்து நின்றது. அதைத் தொடர்ந்து பல விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. ஓர் இயல்பான அரசியல் வருகை என்றாலும், அந்த ஊரின் எளிமைக்கு அந்த வாகனங்களின் அணிவகுப்பு சற்று அதிகப்படியான பிரம்மாண்டத்தைக் கொடுத்தது.
உள்ளூர் மேளக்காரர்கள் தாரை தப்பட்டைகளை முழங்க, “நமது தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்… வெற்றி வேட்பாளர்…” என்ற அறிவிப்புகள் ஒலிபெருக்கியில் காதைக் கிழித்தன.
காரின் கதவு திறக்கப்பட, மிடுக்காகக் கீழே இறங்கினான் நேத்ரன். தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான அந்தத் தொகுதிக்கான வேட்பாளர் அவன். இந்தாண்டு இருபத்தொன்பதைத் தொட்டிருந்தான். குடும்பத் தொழிலில் இறங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது.
அவர்கள் தொழில் குடும்பம் மட்டுமில்லை. அரசியலும் அவர்களுக்குப் பழகிய களம்தான். அவனது பெரியப்பா ராஜவேலு முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத்துக்கான பொறுப்பாளர். ஓட்டு வங்கியை இழுத்துப் பிடித்து வைப்பதில் தென்மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்துவதில் அவரது பங்கு அதிகம்.
கடந்த முறை கனிமவளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். இளையவர்களுக்கு வழிவிடுவோமென கட்சித் தலைமை சொல்லிவிட்டதால் இம்முறை தங்களது குடும்ப வாரிசுக்குச் சீட்டு வாங்கிவிட்டார் மனிதர்.
நேத்ரன்தான் தனது அரசியல் வாரிசாக இருக்கத் தகுதியானவன் என அவர் கடந்த தேர்தலின்போதே தீர்மானித்ததுதான். இக்கால இளைஞன் என்பதால் அவனது பிரச்சார உத்திகளும், களத்தில் அவன் மக்களுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட விதமும் இம்முறை அவனுக்குப் பலமாக இருக்குமென அழுத்தமாக நம்பினார் அவர்.
காரிலிருந்து இறங்கியவனின் தோளில் சால்வைகளும் கழுத்தில் மாலைகளும் விழுந்தவண்ணம் இருக்க ரேபானில் அடங்கிய கண்களில் பொங்கிய கர்வம் யார் பார்வைக்கும் படவில்லை. ஆனால் அதை முகம் காட்டிக்கொடுத்துவிட்டது.
அலை அலையாய் இருந்த கேசம் அழகாய்ச் சரிய தன்னை வணங்கியவர்களுக்குப் பதில் வணக்கம் சொன்னவன் அங்கிருந்தவர்களைத் தனது கம்பீரத்தால் மட்டுமில்லை, உயரத்தாலும் தோற்கடித்தான்.
தற்போது இளம் அரசியல்வாதிகளின் சீருடையாய் மாறிப்போன வெள்ளை சட்டை, க்ரீம் வண்ண பேன்ட்டில் அவன் நடந்து வர அவனோடு ஒட்டி நடந்து வந்த அவனது நண்பனும் உதவியாளனுமான நிகிலன் நேத்ரனுக்குப் போர்த்திவிட்ட சால்வைகளையும் மாலையையும் தனது கைகளில் வாங்கிக்கொண்டான்.
அவர்களுக்குப் பின்னால், நேத்ரனின் பெரியப்பாவிடம் பல வருடங்களாக வலதுகரமாகப் பணியாற்றிய மூத்த அரசியல் நிர்வாகியான பரமசிவம் இறங்கினார். அவர்தான் நேத்ரனுக்கு ஒவ்வொரு பகுதியையும், அங்குள்ள முக்கியமான ஆட்களையும் அறிமுகம் செய்து வைக்கும் வழிகாட்டி.
கூட்டத்தில் இருந்த சில நடுத்தர வயதுப் பெண்கள், “நம்ம வேட்பாளரு சினிமா நடிகர் மாதிரி இருக்காப்ல. இன்னும் கல்யாணம் ஆகலையாமே” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
“மச்சி அந்த ரேபானைக் கழட்டு”
“ஏன்டா? வேட்பாளர் ரேபான் போட்டா நாங்க ஓட்டு போடமாட்டோம்னு மக்கள் சொன்னாங்களா?”
“ப்ச்! இந்த கவுண்டருக்குக் குறைச்சல் இல்ல. வேட்பாளர் காட்சிக்கு எளிமையா இல்லனா…”
“இதைக் கழட்டிட்டா நான் எளிமையா தெரிவேனா? இந்த ஷர்ட், சினோஸ், என் ஃபுட்வேர், பின்னாடி நிக்குற கார் இதெல்லாம் சொல்லாத ஆடம்பரத்தை இந்த ரேபான் சொல்லிடுச்சா? ஓல்ட் ஸ்கூல் ஆப் பாலிடிக்ஸ் போரடிக்குதுடா நிகில். கப்சிப்னு வா”
சாதாரணமாய்ப் பேசுவது போலப் பார்வைக்குத் தெரிந்தாலும் குரலில் ஒலித்த இலகுத்தன்மையும், கலாய்க்கும் தொனியும் ‘யார் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலை இல்லை’ என்ற எண்ணத்தை மட்டுமே உணர்த்துவதாய்!
அதற்காக அவன் நடிக்கவா முடியும்? அவன் ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ ரகம். எங்கிருந்து எளிமையைக் கடைப்பிடிப்பது? அரசியலுக்காக கண்ணுக்கும் காட்சிக்கும் எளியனாக நடிப்பது நேத்ரனால் ஆகாத காரியம். பெரியப்பா கரைவேட்டி கட்டச் சொன்னபோதே “அதெல்லாம் செட் ஆகாது ராஜுப்பா. கரைவேட்டிக்கா ஓட்டு விழப்போகுது?” என்றவனாயிற்றே!
நேத்ரனை வரவேற்பதற்காக, சாலையின் ஓர் ஓரத்தில் சிறு குழந்தைகள் சிலர் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். நெற்றியில் வியர்வை வழிய, அந்த வெக்கைச் சூட்டிலும் கைகளில் ஒற்றை ரோஜாப் பூக்களைப் பிடித்தபடி, தங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஓர் அரசியல்வாதிக்காகக் காக்க வைக்கப்பட்டிருந்தனர் அந்தக் குழந்தைகள்.
உள்ளூர் நிர்வாகி பெருமையாகக் கைகாட்ட, குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து அந்த ரோஜாப் பூக்களை நேத்ரனிடம் நீட்டத் தொடங்கினர்.
அதை வாங்க அவன் கை நீட்டிய தருணத்தில் தேனில் ஊறவைத்த பச்சை மிளகாய் போல ஒரு பெண்ணின் குரல் கேட்டது. குரலின் இனிமைக்குத் தேனையும் அதில் வந்த கடுகடு செய்திக்குப் பச்சை மிளகாயையும் ஒப்பிடலாம்.
“குழந்தைங்களை எதுக்கு இங்க வந்து நிக்க வெக்கணும்? அரசியலுக்கும் குழந்தைங்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்ப என்ன, குழந்தைகள் விரும்பும் தலைவர்னு நாலு ரீல்ஸ் போடணும். அதுக்குத்தானே இந்த ட்ராமா எல்லாம்? இதுக்குத்தான் அரசியல்வாதிங்களை நினைச்சாலே கடுப்பாகுதுக்கா”
ஒரு சிறுவனிடம் ரோஜா வாங்கக் குனிந்த நேத்ரன் நிமிர்ந்து யாரந்த பச்சை மிளகாய் என்று கண்களால் தேடினான். அந்தக் கூட்டத்தில் அவன்தான் உயரமானவன் என்பதால் அதிகச் சிரமமில்லை தேடுவதற்கு.
“ப்ச்! கட்சிக்காரனுங்க இருக்குறப்ப பேசாத வெண்பா. காதுல விழுந்துடுச்சுனா நம்மளை எதிர்க்கட்சியாளா நினைச்சுக் கடிக்க வருவானுங்க” என்று ஒரு பெண் சொல்ல நேத்ரன் தேடிய பச்சை மிளகாய்க் குரல்காரியின் முகம் தெரிந்தது அதிருப்தியோடு.
“உண்மையைச் சொல்ல எதிர்கட்சியாளா இருக்கணும்னு என்ன அவசியம்? பொதுஜனத்துல ஒருத்தியா இருந்தா போதாதா?”
ஐந்தடி ஐந்தங்குலம் உயரத்தில் கழுத்தில் ஐடி கார்டு, தோளில் ஹேண்ட்பேக், அழகாய் அயர்ன் செய்யப்பட்டு அவளது உடலுக்குப் பாந்தமாய்ப் பொருந்திய வெளிர் மஞ்சளில் மஞ்சள் வண்ணக் கட்டங்கள் போட்ட லினன் சேலை, க்ளட்சில் கொண்டையாய் அடங்கியிருந்த அடர்கூந்தல் எனப் பார்த்த உடனே நேத்ரனின் மனதில் ஒட்டிக்கொண்டாள் அவள். அந்த வெண்பா!
உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவளையும் பிடித்துப்போனது அந்நொடியில்.
“தம்பி ஊருக்குள்ள போகலாங்களா?” என ஒருவர் கேட்க நேத்ரன் கூட்டத்திலிருந்து பின்னால் நின்றவளைப் பார்த்தபடியே!
“ம்ம்! இனிமே குழந்தைங்களைப் பிரச்சாரத்துல இன்வால்வ் பண்ண வேண்டாம். அவங்களை அனுப்பி வச்சிடுங்க” என்றான் சற்றுச் சத்தமாகவே.
அது அங்கே நின்ற குழந்தைகளின் காதுகளோடு வெண்பாவின் காதுகளில் விழுந்துவிடச் சட்டென அவளது பார்வை வேட்பாளரின் பக்கம் திரும்பியது.
சில அடிகள்தான் இருவருக்குமான இடைவெளி. அரசியலுக்கும் வெண்பாவுக்கும் அத்துணை பிடித்தம் கிடையாது என்பதால் வேட்பாளரைப் பற்றிய அறிவும் அறிமுகமும் துளியும் கிடையாது அவளுக்கு.
கரைவேட்டி கட்டிக் காதோரம் முடி நரைத்த வேட்பாளரை எதிர்பார்த்தவளுக்குச் சற்றுத் தள்ளி நின்றவனின் ஃபார்மலான தோற்றமே சின்னதொரு அதிர்ச்சியாய்! அதைவிட அவன் சொன்ன வார்த்தைகள், அதை உச்சரித்த விதம், இதோ இப்போது ஆணியடித்தாற்போலப் பார்த்தபடி உதட்டோரம் குறுஞ்சிரிப்போடு நிற்கும் விதம் எல்லாமே அதிர்ச்சிதான்!
அந்நேரத்தில் குழந்தைகளில் சிலர் “வெண்பா மிஸ்” என்றபடி அவளிடம் ஓடிப்போக நேத்ரனின் பார்வையில் சுவாரஸ்யம் கூடியது.
“ஓஹ்! டீச்சரம்மாவா” என்று வாய்க்குள் முணுமுணுத்தவனின் முழங்கையை இடித்தான் அருகில் நின்ற நிகிலன்.
“வேட்பாளர் ஐயா! தேர்தல் பிரச்சாரம் ஊருக்குள்ளதான். அங்க இருந்து கவனத்தை இங்க திருப்புங்க. இது சைட் அடிக்குறதுக்கான நேரமில்ல.” என்று அவனது காதில் ரகசியமாய்ச் சொன்னான்.
நேத்ரன் தனது ரேபானைக் கொஞ்சம் கீழிறக்கி அவனைப் பார்த்தான்.
“அப்பிடிங்கிற? பிரச்சாரத்தையே இங்க இருந்து ஐ மீன் அந்த டீச்சரம்மாகிட்ட இருந்துதான் ஆரம்பிக்கப்போறேன்டா. ஃபாலோ மீ!”
அவன் கூட்டத்தை விலக்கிவிட்டுத் தன்னை நோக்கி வருபவனைப் பார்த்தபோதே வெண்பாவின் முகத்தில் பதற்றம் குடியேறியது. தூரத்தில் நிற்பவனைப் பற்றி என்ன வேண்டும் என்றாலும் பேசிவிடலாம். ஆனால் அருகில் வரும்போது பயம்தான் வருகிறது.
“போச்சு போச்சு! நீ பேசுனது காதுல விழுந்துடுச்சு. உன்னால எனக்கும் கொடை விழப்போகுது” என்று அவளருகே நின்ற பெண் கைகால்களை உதற நின்றாள்.
“ப்ச்! சும்மா இருக்கா நீ. நான் என்ன தப்பா சொல்லிட்டேன் இப்ப?”
வெண்பா சொல்லும்போதே அவளருகே நேத்ரன் வந்துவிட்டான். எதிரெதிரே நின்று ரேபானைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுவிட்டுக் கைகூப்பியவன் “உண்மையைச் சொல்லப் பொதுஜனமா இருந்தா போதும் டீச்சரம்மா! கட்சி அடையாளம் தேவையில்ல. உண்மையைச் சொல்லுறவங்க பதறவேண்டிய அவசியம் நான் எம்.எல்.ஏவா ஆனதுக்கு அப்புறம் வராது. என்ன? எனக்கு ஓட்டு போடுவீங்கதானே?” என்று புருவத்தை ஏற்றியிறக்கிப் புன்சிரிப்புடன் வினவ
“அது… அது எப்பிடி பொதுவுல சொல்லுறது… நீங்க இப்பிடி கட்டாய…” என்று மறுப்புரை வாசிக்க வந்தவளின் உள்ளங்கையில் நறுக்கெனக் கிள்ளி வைத்தாள் அருகில் நின்ற பெண்.
“போடுறேன்னு சொல்லுடி.” என்று காதருகே கிசுகிசுக்கவும் செய்தாள்.
வெண்பா சட்டென முகத்தைச் சீராக்கிக்கொண்டு “கண்டிப்பா உங்களுக்குத்தான் ஓட்டு போடுவேன் சார்” என்று சொல்லிவிட்டாள். ஆனால் உள்ளுக்குள் இன்னும் உதறல்தான்!
“உங்ககிட்டதான் முதல்ல ஓட்டு கேட்டிருக்கேன். பாக்கலாம், உங்க அதிர்ஷ்டம் எப்பிடி வேலை செய்யுதுனு”
சொல்லிவிட்டு மீண்டும் வணக்கம் வைத்தபோது மெல்ல நேத்ரன் கண்சிமிட்ட வெண்பா முதலில் அதிர்ந்து பின்னர் பொங்கி வந்த கோப வார்த்தைகளை வாய்க்குள் அடக்கிக்கொண்டாள்.
நிகிலன் அவசரமாய் ரேபானை எடுத்து நேத்ரனின் கண்களில் மாட்டிவிட்டான்.
“தெரியாம ரேபானைக் கழட்டுனு சொல்லிட்டேன்டா சாமி. பிரச்சாரம் முடியுறவரைக்கும் கண்ணையும் வாயையும் வச்சுக்கிட்டுச் சும்மா இருடா” என்று புலம்பியபடி அவனை ஊருக்குள் இழுத்துப்போக நேத்ரனும் அவனோடு பிரச்சாரம் செய்யக் கிளம்பினான் கட்சியாட்களுடன்.
அவனோடு ஒரு பெருங்கூட்டமும் அங்கிருந்து நகர வெண்பாவுக்கு வந்த கடுப்புக்கு அளவில்லை.
“நான் நோட்டாவுக்குக்கூட ஓட்டு போடுவேன். இவனுக்குப் போடமாட்டேன்” என்று பொருமியபடி தன்னுடன் நின்றவளோடு சாலையைக் கடந்தாள்.
இதே ரங்கநல்லூரின் வெளியே இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். இருபத்து நான்கு வயதுக்கு அதீதப் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் உண்டு அவளுக்கு.
தனக்கு நெருக்கமானவர்களுடன், தினசரி பழகுபவர்களுடன் சுதந்திரமாய் வார்த்தையாடுபவளுக்கு வெளியாட்களுடன் பேசுவது என்றுமே ஒரு சவாலாய்! சில நேரம் இன்ட்ரோவெர்ட்டாகவும் சில நேரம் எக்ஸ்ட்ரோவெர்ட்டாகவும் இருக்கும் ஆம்பிவெர்ட் அவள்.
பள்ளி வேலை, வீடு, தோழமைகள், உறவுக்காரர்கள் எனத் தனக்கு அறிமுகமான வட்டத்தில் மகிழ்ச்சியாய் வாழும் சராசரிப் பெண்ணின் வாழ்க்கையில் அசாதாரணமான நிகழ்வுகளை நடத்துவதற்காகவே நேத்ரன் வந்து சேர்ந்திருக்கிறான் என்பது விதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
நேத்ரனுடனான முதல் சந்திப்பு இதுதான்! ஆனால் கடைசி சந்திப்பு அல்ல என்று யார் அவளுக்குச் சொல்வது?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


