“தனிமையில அழுதுக்கிட்டே என் ஏக்கங்களைப் பதிவாக்குன இந்த டைரிப் பக்கங்களுக்கு, இனிமேல் சோகத்துல குளிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுக்கு மேல இதோட ஒவ்வொரு பக்கமும் வசீயோட காதலையும் என் குழந்தையோட அன்பையும் மட்டுமே சுமந்திருக்கும். எங்களோட வசந்த காலத்தோட முதல் பூ இப்ப பூத்திடுச்சு. இதோட வசீகரம் வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும்!”
-வசுமதி
நாட்கள் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல மிக அழகாகவும், மென்மையாகவும் நகர்ந்து கொண்டிருந்தன. கேட்டட் கம்யூனிட்டியின் பால்கனியில் வீசும் மெல்லிய தென்றலில் இப்போது எல்லாம் வசுமதியின் தாய்மைப் பூரிப்பும், வசீகரனின் அளவற்ற காதலும் ஒன்றாகக் கலந்திருந்தது. அவளது நிறைமாதக் காலத்தை ஒரு கண்ணாடிப் பொம்மையைக் கையாளுவது போல அத்துணை கவனமாகக் கையாண்டான் வசீகரன்.
வசுமதிக்குப் பிரசவத் தேதியும் நெருங்கியது. ஒரு செவ்வாய்க்கிழமை அதிகாலையில், இலேசான பனி மூடியிருந்த வேளையில் அவளுக்குப் பிரசவ வலி எட்டிப் பார்த்தது. எந்தப் பதற்றமும் இன்றி, முன்னரே திட்டமிட்டபடி அவளை அடையாறில் உள்ள அந்தப் பிரபல மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தான் வசீகரன்.
மருத்துவமனையின் அந்தப் பளபளக்கும் வராண்டாவில் வசீகரன் குறுக்கும் நெடுக்குமாகப் பதற்றத்தோடு நடந்துகொண்டிருந்தான். உள்ளே லேபர் வார்டில் வசுமதி வலியை எதிர்கொண்டிருந்தாள். அவளது உடலும் உயிரும் சேர்ந்து புதிய உயிரைப் பிரசவிக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தன. வசீகரனின் நெஞ்சுக்குள் ஆயிரம் முரசுகள் ஒன்றாக ஒலிப்பது போன்ற படபடப்பு.
சுமார் நான்கு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு அந்த வராண்டாவில் நிலவிய இறுக்கமான மௌனத்தைக் கிழித்துக்கொண்டு குழந்தையின் பசுங்குரல் ஒலித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பூமியை எட்டிப் பார்த்த சிசுவுக்கு அன்னையின் கருப்பை கொடுத்த இதம் போன கோபம் போல! அழுகுரல் கணீரென இருந்தது.
பச்சைக் கவுன் அணிந்தபடி வெளியே வந்த மருத்துவர் முகம் கொள்ளாத சிரிப்போடு, “கங்க்ராட்ஸ் மிஸ்டர் வசீகரன். ஆண்குழந்தை பிறந்திருக்கு!” என்று அறிவித்தபோது, வசீகரனுக்குத் தன் உடம்பில் உயிரே இப்போதுதான் திரும்பி வந்தது போலிருந்தது.
குழந்தையின் அழுகுரல் அது நலமாக இருக்கிறதெனத் தெரிவித்தாலும் மருத்துவரின் வாயால் தகவலைக் கேட்டால்தானே மனம் நிம்மதியடையும்!
சிறிது நேரம் கழித்து, குழந்தையைக் குளிப்பாட்டி மென்மையான உடலை உருத்தாத பஞ்சுபொதி போன்ற பருத்தித்துணியில் சுருட்டி வசீகரனின் கைகளில் கொடுத்தார்கள் செவிலியர்கள். அழகான பூங்கொத்து போல ரோஜா இதழின் மென்மையோடு இருந்த அந்தப் பிஞ்சினை கரங்களில் ஏந்திய வசீகரனுக்குப் பேச வார்த்தைகளே வரவில்லை. இன்னும் வெளிச்சம் பழகாத குழந்தையின் சின்னஞ்சிறு கண்கள் மூடியிருக்க, சின்ன வாயைப் பிளந்து அது விட்ட கொட்டாவி அழகோ அழகு!
குழந்தையைக் கனிவோடு ரசித்த விழிகளுக்கு இமைக்கவே தோன்றவில்லை. செவிலி வந்து குழந்தைக்குப் பசியாற்ற வாங்கிக்கொண்டார்.
அடுத்த இருபது நிமிடங்களில் தனிப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டாள் வசுமதி. படுக்கையில் களைப்போடு படுத்திருந்த வசுமதியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், “தேங்க்ஸ் வசு! எனக்கு இவ்ளோ பெரிய பொக்கிஷத்தைக் குடுத்ததுக்கு!” என்று தழுதழுத்தான். அவளது கரியவிழிகளில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர் எல்லாவற்றிற்கும் பதிலாக அமைந்தது.
குழந்தை பிறந்த தகவலை இருவீட்டாருக்கும் சொன்னவன் அவர்கள் உடனடியாக பேருந்து ஏற வசதியாக பயணச்சீட்டுகளை பதிவு செய்தான். கூடவே பிரஷாந்திக்கும் காமாட்சிக்கும் தகவல் கொடுத்துவிட்டான்.
காமாட்சியும் பிரஷாந்தியும் ஓடோடி வந்தார்கள் மருத்துவமனைக்கு. குழந்தையைக் கொஞ்சியதோடு வசுமதியையும் ஆதுரத்தோடு கவனித்துக்கொண்டார்கள் இருவரும்.
மறுநாள் காலையில் பெரியவர்கள் சென்னைக்கு வந்தார்கள். குழந்தையைப் பார்க்கச் செல்லும் முன்னர் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதால் நேரே வீட்டுக்குச் சென்று குளித்து மாற்றுடை தரித்து மருத்துவமனைக்கு வருகை தந்தார்கள்.
வீரலட்சுமி மகளையும் பேரனையும் பார்த்த உடன் கண் கலங்கிப்போனார். குமுதவல்லியைப் பொறுத்தவரை, அவர் எப்போதுமே ஆஹா ஓஹோவெனப் பாசத்தைக் கொட்டித் தீர்க்கும் ரகமில்லை.
ஆனால், தன் குடும்பத்தின் வாரிசு, அதுவும் தன் மகனின் சாயலில் பிறந்திருக்கும் பேரனைப் பார்த்ததில் அவருக்குள் சொல்ல முடியாத பெருமிதம். அவனது சின்னஞ்சிறு கால்களை மெதுவாகத் தொட்டுப் பார்த்தவர், “கண்ணு பட்டுடும்…” என்று குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார். அந்தச் சிறு செயலிலேயே வசுமதி தன் மாமியாரின் பாசத்தைப் புரிந்துகொண்டாள்.
வெளியே கமலநாதனும் செல்வராஜும் தங்கள் சந்தோஷத்தை அடக்க முடியாமல், மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள், வார்டு பாய்ஸ் என அனைவருக்கும் நெய் மணக்கும் லட்டுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் தங்களின் முதல் பேரன் என்பதால் அத்துணை கர்வம்!
சுகப்பிரசவம் என்பதால் மூன்றே நாட்களில் வசுமதி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினாள். மொத்த வீடும் ஒரு திருவிழா மண்டபத்தைப் போலக் களைகட்டியிருந்தது. காமாட்சியும் ரேவதியும் ஆரத்தி எடுத்து வசுமதியையும் குழந்தையையும் உள்ளே அழைத்துக் கொண்டனர்.
அவர்கள் வந்த சற்று நேரத்திலேயே, மீண்டும் காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்த வசீகரனுக்குப் பெரும் ஆச்சரியம். திருநெல்வேலியிலிருந்து சர்வானந்தன் தன் மனைவி மகிழினி, குழந்தை சமரன், மற்றும் அவனது பெற்றோர் பரமேஸ்வரி – வரகுணபாண்டியன் சகிதமாக வாசலில் நின்றிருந்தான்.
“வாங்க சர்வா! வாங்க அத்தை, மாமா!” என்று வசீகரன் மனதார அனைவரையும் வரவேற்றான்.
மகிழினி ஆசையாக ஓடிச் சென்று வசுமதியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“மதினி, பாப்பா எவ்ளோ அழகா இருக்கான்! அச்சு அசல் எங்க அண்ணா மாதிரியே இருக்கான் பாருங்க,” என்று அந்தக் குட்டிப் பாப்பாவின் கன்னத்தை மெதுவாகத் தொட்டு முத்தமிட்டாள்.
சர்வானந்தனின் அம்மாவான பரமேஸ்வரியும், வரகுணபாண்டியனும் குழந்தையைப் பார்த்து ஆசீர்வதித்துவிட்டு, குமுதவல்லி மற்றும் கமலநாதனோடு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். ஒரு காலத்தில் தனிமையின் அமைதியில் மூழ்கிக்கிடந்த அந்த வீடு, இப்போது உறவுகளின் பேச்சொலியாலும், குழந்தைகளின் ‘ங்கா’ சத்தங்களாலும் கூட்டுக் குடும்பத்தின் உயிர்ப்பைப் பெற்றிருந்தது.
வசுமதிக்கும் குழந்தைக்குமான பணிவிடைகளை வீரலட்சுமியும் குமுதவல்லியும் ஏற்றுக்கொள்ள, வீட்டின் சமையல் பொறுப்பை ரேவதி அக்காவும், காமாட்சி அம்மாவும் முழுமையாகத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
“வசுவுக்கு இப்ப பத்தியச் சாப்பாடுதான் குடுக்கணும். நான் பூண்டு குழம்பும், மிளகு ரசமும் சூப்பரா வைப்பேன். நீங்க யாரும் கிச்சன் பக்கம் வர வேண்டாம், குழந்தையை கவனிங்க. நானும் ரேவதியும் அதைப் பாத்துக்குறோம்” என்று காமாட்சி அம்மா அதிகாரமாகச் சமையலறையை ஆக்கிரமித்துக்கொள்ள, வீடு முழுக்கப் பூண்டு குழம்பின் வாசம் பசியைத் தூண்டியது.
ப்ரஷாந்தியும் வந்து வசுமதியின் அருகில் அமர்ந்து கொண்டாள். அப்போது மகிழினி அவளோடு மிகவும் இயல்பாகப் பேசத் தொடங்கினாள்.
“நீங்க ஆர்.ஜே ப்ரஷாந்தி தானே? உங்களைப் பத்தி என் மதினி நிறைய சொல்லிருக்காங்க. உங்களோட வாய்ஸ் ரொம்ப சூப்பர். நாங்க ஊர்ல உங்களோட ஷோஸ் எல்லாம் மொபைல் ஆப்ல கேப்போம்,” என்று மகிழினி பாராட்டியபோது, ப்ரஷாந்திக்கு ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
“தேங்க்ஸ் மகிழ். குழந்தைய வச்சுக்கிட்டு என் ஷோவையும் கேக்குறதுக்கு தனி மனதிடம் வேணும்” என்று ப்ரஷாந்தி விளையாட்டாகச் சொல்ல, மகிழினி மெல்லச் சிரித்துக்கொண்டாள்.
“போஸ்ட் பார்ட்டம்ல இருக்குறவங்களுக்கு உங்க ஷோ ஒரு ஹார்ட் சூதிங் எக்ஸ்பீரியன்ஸ் தெரியுமா?” என்றாள் அவள்.
இதை விட ஒரு ஆர்.ஜேவுக்கு வேறு என்ன வேண்டும்? நெகிழ்ந்து போனாள் ப்ரஷாந்தி.
அப்போது அங்கே வந்த சுகமதி, ஒரு கையில் சமரனையும், மற்றொரு கையில் தூங்கிக் கொண்டிருந்த குட்டிப் பாப்பாவையும் அணைவாகப் பிடித்திருந்தபடிகிண்டலாகப் பேசத் தொடங்கினாள்.
“மாமா, இங்க பாருங்க… இது பெரிய பாப்பா, இது குட்டி பாப்பா. நான் தான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்ட ‘மிடில் பாப்பா’. ரெண்டு வாண்டுகளுக்கும் நான் தான் அபிஷியல் பேபி சிட்டர்!” என்று அவள் கைகளை விரித்துக் கண்ணடித்துச் சொன்னதைக் கேட்டு அந்த அறையே சிரிப்பலையில் அதிர்ந்தது.
வீடே இப்படி உறவுகளின் கலகலப்பில் மூழ்கியிருக்க, மதிய உணவுக்குப் பின் அனைவரும் வரவேற்பறையிலும் பால்கனியிலுமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குழந்தையும் வீரலட்சு குமுதவல்லி இருந்த அறையில் கிடந்த தொட்டிலில் எந்தச் சத்தமும் இல்லாமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்த வசீகரன், மெதுவாகப் படுக்கையறைக்குள் நுழைந்து, கதவை லேசாகத் தாழிட்டான்.
படுக்கையில் சாய்ந்து கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் வசுமதி. அவளது முகத்தில் இருந்த அந்தத் தாய்மைக்கான களைப்பும், அமைதியும் அவளை ஒரு தேவதையைப் போலக் காட்டியது. சத்தமில்லாமல் அவளருகில் சென்று படுக்கையின் விளிம்பில் அமர்ந்த வசீகரன், அவளது மென்மையான விரல்களைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான்.
அவனது கனிவான ஸ்பரிசத்தில் கண்களைத் திறந்த வசுமதி, கணவனைக் கண்டதும் காதல் புன்னகையைச் சிந்தினாள்.
“என்ன வசீ? வெளிய எல்லாரும் உக்காந்துருக்காங்க, நீங்க இங்க வந்துட்டீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“அவங்க எல்லாரும் இந்த குட்டி வாண்டைப் பாக்குறதுலயே பிஸியா இருக்காங்க. அதுக்குத்தான் அந்த அம்மா பாட்டி அப்பா பாட்டி எல்லாம் இருக்காங்களே. ஆனா என் பொண்டாட்டியப் பாக்க எனக்குத் தனிமை வேணும்ல,” என்று கண்சிமிட்டியபடி, அவளது நெற்றியோரம் சரிந்திருந்த கருங்கூந்தலை மெதுவாக ஒதுக்கிவிட்டான்.
அவனது நெருக்கமும், அந்தத் தனிமையின் சுகமும் அவளுக்குள் ஒரு இனிய சிலிர்ப்பை உண்டாக்கியது. வசீகரன் அவளது கையைத் தன் உதடுகளின் அருகே கொண்டு சென்று மென்மையாக முத்தமிட்டான்.
“எப்படி இருக்கு உடம்பு? ஸ்டிச்ல வலி ஏதும் இருக்கா வசு?” என்று அவன் குரலில் அத்தனை அக்கறை தேங்கியிருந்தது.
சுகபிரவசம் தான் வசுமதிக்கு. ஆனால் குழந்தையின் தலை பெரிதாக இருந்ததால் பிறப்புறுப்பில் சின்னதாக எபிசியோட்டமி செய்து குழந்தையை வெளியே எடுத்திருந்தார்கள். அந்தத் தையலும் காயமும் சுருக்சுருக்கென்று வலிப்பதால் வசுமதி அமர ஏதுவாக உட்குழிவான தலையணை ஒன்றை வாங்கியிருந்தான் வசீகரன். அதில் அமர்ந்தால் தையலும் காயமும் வலிக்காது. கூடவே கணவனின் கனிவான கவனிப்பு எந்தக் காயத்தின் வலியையும் மறக்கடித்துவிடுமே!
“அப்பிடி எல்லாம் பெரிய வலி இல்ல வசீ. உங்களைப் பாக்குறப்ப, நம்ம பாப்பாவைப் பாக்குறப்ப எல்லா வலியும் பஞ்சா பறந்துடுது. என்ன ஒன்னு? அப்பப்ப சுருக்சுருக்குனு இருக்கு” என்றாள் வெளிப்படையாய்!
வசீகரனின் முகமே மாறிப்போனது. அவன் வருந்தினாலும் அழுதாலுமே வலி என்னவோ பிரசவித்தவளுக்குத்தான் என்று அறியாதவன் இல்லை. ஆனாலும் சின்னதாய் ஒரு கலக்கம்!
“டாக்டர் கிட்ட போகலாமா? இன்னும் வலிக்குதுனு சொல்லுறியே?”
“ஷ்ஷ்… என்ன வசீ இது? இந்த வலி எல்லாம் மேக்சிமம் பொண்ணுங்களுக்கு உள்ளதுதான். ஒருவேளை காயம் ஆறலனா டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கலாம். அதை விடுங்க. இப்ப நாம நம்ம பாப்பாவைப் பத்தி மட்டும் தான் பேசணும்,” என்று அவனது மோவாயை மெல்ல வருடிக் கொடுத்தபடியே சொன்னாள்.
அவளது அந்த ஸ்பரிசத்தில் முழுமையாக உருகிப்போன வசீகரன், அவளது நெற்றியில் தன் இதழ்களை ஆழமாகப் பதித்தான். பின்னர் மெல்ல விலகி, “ஆமா வசு! நம்ம பையனுக்கு என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சியா? நீ எந்தப் பேர் சொன்னாலும் எனக்கு ஓகே தான்,” என்றான்.
வசுமதி சற்று யோசனை செய்துவிட்டு, “எனக்கு ஒரு பேர் தோணுச்சு வசீ. ஆனா அது உங்களுக்குப் பிடிக்குமானு தெரியல…” என்று தயங்கினாள்.
“சொல்லு வசு, நீ எதைச் சொன்னாலும் அதுல ஒரு ஆழமான அர்த்தம் இருக்கும்னு எனக்குத் தெரியும்.”
“கதிரவன்! நம்ம பையனுக்கு ‘கதிரவன்’னு பேர் வைக்கலாம்னு தோணுது. நல்லா இருக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் வசுமதி.
வசீகரன் ஒரு நொடி அமைதியாகி, அந்தப் பெயரைத் தனக்குள் உச்சரித்துப் பார்த்தான். அவனது கூர்மையான கண்கள் இப்போது மென்மையாக விரிய, முகத்தில் ஒரு நிறைவான புன்னகை பூத்தது.
“கதிரவன்! ரொம்ப கம்பீரமான, அழகான தமிழ் பெயர் வசு. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, இந்தப் பேரை நீ ஏன் செலக்ட் பண்ணுனனு நான் சொல்லவா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.
“சொல்லுங்க பாப்போம்…” கன்னங்களைக் கைகளில் தாங்கி ஆர்வமாய் வினவினாள்.
“என் வாழ்க்கையும், இந்த வீடும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் யார்கிட்டயும் எந்த ஒட்டும் உறவும் இல்லாம, தனிமைங்கிற இருள்ல கிடந்துச்சு. அந்த தனிமையான என் வாழ்க்கைக்குள்ள, இந்த வீட்டுக்குள்ள வெளிச்சத்தைக் கொண்டு வந்தவ நீதான். இப்ப நம்ம வாழ்க்கைய இன்னும் பிரகாசமாக்க பையன் வந்திருக்கான். அதுக்குத்தான் இந்தப் பேர் செலக்ட் பண்ணிருக்க” என்று அவன் மிகச் சரியாக அவளது மனதைப் படித்ததைக் கண்டு வசுமதி சிலிர்த்துப் போனாள்.
“கரெக்ட் வசீ! என் மனசுல இருந்ததை அப்படியே சொல்லிட்டீங்க. இருட்டை விலக்குறது மட்டும் சூரியனோட வேலை இல்ல, ஒரு புதுப் பகலை, புது வசந்தத்தை உருவாக்குறதும் அதுதான். நம்ம கதிரவன், இனிமே நம்ம வாழ்க்கையில எப்பவும் பிரகாசமான வெளிச்சத்தையும் அழகான வசந்தத்தையும் மட்டும்தான் குடுப்பான்” என்று சொல்லும்போதே வசுமதியின் கண்களில் நம்பிக்கை மிளிர்ந்தது.
மனைவியின் நம்பிக்கை அவளது பார்வை வழியே தனக்குள் சவ்வூடு பரவல் மூலம் கடத்தப்படுவதாக உணர்ந்த வசீகரன் இனி அவளிடமிருந்து விலகியிருக்க முடியாது என உணர்ந்து, அவளது மென்மையான முகத்தைத் தன் கைகளால் ஏந்தி, அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பொருத்தினான்.
அவள் மெத்தையில் கையை அழுத்தியபோது மொபைலின் தொடுதிரை உயிர்ப்பிக்கப்பட்டு ஸ்பாட்டிஃபையில் அவள் கேட்டுப் பாதியில் நிறுத்தியிருந்த அழகான மெல்லிசைப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தது மெல்லிய சத்தத்தோடு.
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே…
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே…
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே…
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…
ஆழ்ந்த முத்தத்தில் கடந்த காலத்தின் அத்தனை வலிகளும் கரைந்து போக, எதிர்காலத்தின் மீதான காதலும், நம்பிக்கையும் இரண்டறக் கலந்தது.
பெரியவர்களின் அறையில் ‘கதிரவன்’ விழித்துக்கொண்டு பெற்றோர் தனக்குப் பெயர் தேர்வு செய்ததை டெலிபதியாக அறிந்துகொண்டவன் போல ‘ங்கா’ என மொழிய, வசீகரனும் வசுமதியும் அவனது மழலையில் இன்னும் தங்கள் அன்னியோன்யம் பெருகுவதாய் உணர்ந்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள் ஒருவர் நெற்றியில் மற்றொருவர் முட்டியவராக! வசந்தகாலத்தின் வசீகரங்களுக்கு என்றுமே முடிவில்லை தானே!
இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


