“வாழ்க்கையின் சாராம்சமே ‘பேலன்சிங்கில்’ (balancing) தான் உள்ளது. குழந்தைப்பருவத்தில் பெற்றோரைப் பிரிந்து பள்ளிக்குச் செல்வதிலிருந்தே இந்த பேலன்சிங் ஆரம்பமாகிறது. எந்தக் குழந்தை தனது பயத்தையும் படிப்பையும் பேலன்ஸ் செய்து தைரியமாகப் பள்ளியில் சென்று அமர்கிறதோ அதுவே ஜெயிக்கிறது. மாணவப்பருவத்தில் விளையாட்டுத்தனத்தையும் படிப்புச்சுமையையும் பேலன்ஸ் செய்யும் சிறுவர்கள் தான் நல்ல மதிப்பெண்களை தங்கள் வசப்படுத்துவார்கள். வளர்ந்து இளைஞனாகி வேலைக்குச் செல்லும் பருவத்தில் வேலைநேரத்தையும் உறவுகளுடன் செலவிடும் நேரத்தையும் எவனொருவன் பேலன்ஸ் செய்ய கற்றுக்கொள்கிறானோ அவனே நிம்மதியாக இருப்பான். திருமணத்திற்கு பிறகு தனது குடும்பத்தையும் புதிதாய் வந்த உறவுகளையும் பேலன்ஸ் செய்து ஒருங்கிணைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு மட்டும் தான் கருத்து வேறுபாடு, பிரிவு போன்ற இடர்கள் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியப்படுகிறது. எனவே வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு இரு துருவங்களான விசயங்கள் யாவற்றையும் ‘பேலன்ஸ்’ செய்ய கற்றுக் கொள்ளுங்கள்”
-ருத்ரதேவ்
குயின்ஸ் பேரடைஸ் ரிசார்ட், ஷான்ஃபி…
ஹல்தி எனும் மஞ்சள் பூசும் நிகழ்வுக்காக ரிசார்ட் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனுதீப் மற்றும் சோனாக்ஷியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அவ்விடம் நிரம்பி வழிந்தது.
எங்கு திரும்பினாலும் மஞ்சள் வண்ணம் தான். மேடையிலிருந்த மலர் அலங்காரத்தில் ஆரம்பித்து அங்கிருந்தவர்கள் அணிந்திருந்த ஆடைகள் வரை யாவும் மஞ்சள்மயமே.
ஹல்தி எனும் இந்தச் சடங்கானது திருமண நாளன்று காலை மணமகன் மற்றும் மணமகளின் இல்லத்தில் நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு மஞ்சள் பூசிவிடுவார்கள். தீமைகளிலிருந்து மஞ்சளானது மணமக்களை காக்கும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இப்போது காலம் மாறி இளைய தலைமுறையினர் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ (Destination Wedding) எனும் நவீன திருமணமுறைக்கு மாறியதால் அவரவர் இல்லங்களில் நடைபெற வேண்டிய ஹல்தி சடங்கு இருவருக்கும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடைபெற போகிறது.
ருத்ரதேவும் தக்ஷிண்யாவும் முந்தைய நாள் மாலையே நைனிடாலிருந்து ஷான்ஃபிக்குத் திரும்பியிருந்தனர். தாங்கள் வாங்கி வந்த பரிசுப்பொருட்களை நவ்யாவுக்கும் ஆரோஹிக்கும் கொடுத்துவிட்டு அவரவர் அறைக்குச் சென்றவர்கள் இரவில் அனுதீப்பிடமிருந்து அழைப்பு வரவும் அவனது அலுவலக அறையில் அவனைச் சந்தித்தனர்.
அவனும் சோனாக்ஷியும் புன்னகை பூத்த முகமாக இருவரையும் வரவேற்று வாழ்த்து கூற முதலில் தக்ஷிண்யாவுக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் ருத்ரதேவ் தங்களது காதல் சமாச்சாரத்தை அவர்களிடம் கூறிவிட்டதாக தெரிவிக்கவும் மற்ற மூவரின் புன்னகை தக்ஷிண்யாவையும் தொற்றிக்கொண்டது.
இருவருக்கும் நன்றி பகர்ந்தவள் விடைபெறப் போக சோனாக்ஷி தங்களது ஹல்தி நிகழ்வில் கட்டாயம் தக்ஷிண்யா கலந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் வைத்தாள்.
வேலையைக் காரணம் காட்டி மறுக்கப் போனவளிடம் ஐ.ஜி குடும்பம் தங்களது சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்பிவிட்டதென கூறிய அனுதீப் அன்று முழுவதும் ரிசார்ட்டில் வேறெந்த சுற்றுலாப்பயணிகளுக்கும் அனுமதி இல்லாததால் தக்ஷிண்யாவுக்கு வேறேதும் வேலை இருக்காது என்றான்.
பின்னர் தக்ஷிண்யாவும் வருவதற்கு சம்மதித்துவிட்டாள். இதோ இப்போது கூட நவ்யா மற்றும் ஆரோஹியுடன் சேர்ந்து ஹல்தி சடங்குக்காக மஞ்சள் வண்ண ஆடை அணிந்து முகத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
ஏனோ அன்று சற்று ஸ்ரத்தை எடுத்து அலங்கரித்துக் கொள்ள தோன்றியது. அவளது காதலனின் கண்களில் அவளை ரசிக்கும் பாவனை குடியேறும் போதெல்லாம் தக்ஷிண்யாவின் மனதிற்குள் சிலுசிலுவென மழை பெய்ய ஆரம்பித்துவிடும். அந்த மழையின் குளிர்ச்சி மனதிலிருந்து உடல் முழுவதும் பரவி நாடி நரம்புகளில் உண்டாக்கும் கிளர்ச்சியானது நாணத்தை உண்டாக்கும். அந்த நாணத்தை ஒவ்வொரு முறை அனுபவிக்கும் போதும் புதிய அனுபவமாகத் தோன்றும்.
இப்போது கூட அப்படிப்பட்ட அனுபவம் வேண்டுமென்ற பேராசையில் தான் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அவள். நவ்யா அவளைக் கிண்டல் செய்தபடியே ஆரோஹியைத் தயார் படுத்தினாள்.
தக்ஷிண்யா அவளிடமிருந்த டேன்சிங் கேக்டஸை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு பிறகு விளையாடிக் கொள்ளலாம் என்றவள் வழக்கம் போல கமல்நாத் மொபைலில் அழைத்தாரா என்று கேட்க இம்முறையும் இல்லை என்ற பதில் தான்.
அதில் ஆரோஹியின் முகம் வாடிப்போனது. தக்ஷிண்யாவுக்கு அதைக் கண்டதும் ஒரு மாதிரி ஆகிவிட அவளைத் தூக்கி தன் மடியில் இருத்திக்கொண்டவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“அப்பா அவரோட ஃப்ரெண்டை பாக்குறதுக்கு டெல்லிக்குப் போயிருக்கார்… இப்ப நீ தருண் கூட விளையாட ஆரம்பிச்சா என்னை மறந்துடுவல்ல, அதே மாதிரி தான் அவரும் அவரோட ஃப்ரெண்டை மீட் பண்ணுன சந்தோசத்துல உனக்குக் கால் பண்ண மறந்திருப்பார்” என அவள் சமாளிக்க
“அப்ப நான் தருண் கூட விளையாடி முடிச்சிட்டு உன்னைத் தேடி வந்துடுற மாதிரி அப்பாவும் நம்மளை தேடி வந்துடுவாரா?” என்று கேட்டு தக்ஷிண்யாவை சங்கடத்தில் ஆழ்த்தினாள் ஆரோஹி.
அவளிடம் பொய் சொல்ல மனமில்லை. இருப்பினும் உண்மையைச் சொல்லி அவளை வருத்தவும் தோன்றவில்லை. எனவே மௌனமாகத் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
“அக்காவும் தங்கச்சியும் பேசி முடிச்சாச்சுனா ஃபங்சனுக்குக் கிளம்புவோமா? இன்னும் லேட் பண்ணுனா ருத்ரா சார் நம்ம ரூமுக்கே வந்து தூக்கிட்டுப் போயிடுவார்” என்று நவ்யா கேலி செய்ய
“என்னை தானே மாமா தூக்கிட்டுப் போவாங்க?” என முந்திக் கொண்டு கேட்டபடி எழுந்தாள் ஆரோஹி.
“உன்னையும் தூக்குவார், உங்க அக்காவையும் தூக்குவார்… மனுசன் இப்ப லவ் ஃபீவர்ல சுத்துறார்… சோ அவரை ஓவரா காத்திருக்க வைக்குறது நல்லதில்ல” என்று கிண்டல் செய்தபடி சகோதரிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஹல்தி சடங்கு நடைபெறும் இடத்திற்கு கிளம்பினாள் நவ்யா.
அந்த இடத்தில் சடங்கு ஆரம்பித்து விட்டது. அனுதீப்பும் சோனாக்ஷியும் தனித்தனியே மனைப்பலகையில் அமர்ந்திருக்க அவர்களருகே இருந்த டீபாய்களில் மஞ்சள் கிண்ணம் வைக்கப்பட்டிருந்தது.
பெரியவர்கள் மாவிலைகளால் அம்மஞ்சளை அவர்களின் தலை, கன்னம், புஜம், கால்களில் பூசி ஆசிர்வதித்தனர்.
பின்னர் இளையவர்கள் வழக்கம் போல மஞ்சள் பூசி விளையாட ஆரம்பிக்க தக்ஷிண்யாவும் நவ்யாவும் சோனாக்ஷிக்குப் பூசிவிட்டு வந்தனர். தக்ஷிண்யாவின் கண்கள் ருத்ரதேவைத் தேட அவனோ மஞ்சள் வண்ண ஷிபானில் சூரியகாந்தியைப் போல நின்று கொண்டிருந்தவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இந்த ஷேரி சூப்பர்”
சைகை மொழியில் கூறியவன் தக்ஷிண்யாவின் அருகே வந்தான்.
“இன்னைக்கு ஈவ்னிங் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”
அவள் என்னவென கேட்க “சர்ப்ரைஸ்னு சொன்னதுக்கு அப்புறம் இப்பவே கேட்டா என்ன அர்த்தம்? வெயிட் கரோ” என்று கண்ணைச் சிமிட்டியவன் மற்றவர்கள் கவனம் தங்கள் பக்கம் திரும்பவும் அனுதீப்பின் மீது மஞ்சள் தண்ணீரைக் கொட்ட சென்றுவிட்டான்.
தக்ஷிண்யா என்னவென யோசித்துக்கொண்டே இருக்க நேரம் அதன் போக்கில் கடந்து திருமணத்திற்கான சுபமுகூர்த்தனமான மாலை நேரமும் வந்தது.
வடக்கே செல்ல செல்ல திருமணத்திற்கான சுபமுகூர்த்த நேரம் மாலையில் தான் குறிக்கப்படும். மகாலெட்சுமி வரும் நேரம் என்பது அவர்களின் நம்பிக்கை.
மணமேடையானது மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு நோக்கினும் பளீர் வண்ண உடைகளும், ஆபரணங்களுமாக உறவினர்கள் வெள்ளம். தக்ஷிண்யா வழக்கம் போல நவ்யா மற்றும் ஆரோஹியுடன் நிற்க அவளது கண்கள் சந்தனவண்ண ஷெர்வானியில் மொபைலில் பேசியபடி நடந்து கொண்டிருந்த ருத்ரதேவின் மீது படிந்தது.
அவனது முகத்தில் தெரிந்த பதற்றம் தக்ஷிண்யாவை யோசனையில் ஆழ்த்த மணமேடையில் இனிதே திருமண சடங்குகள் அரங்கேறிக் கொண்டிருந்தது.
சோனாக்ஷியின் கழுத்தில் கருகமணி தாலி அணிவித்த அனுதீப் அவள் நெற்றியில் சிந்தூர் வைக்க அடுத்தது சப்தபதிக்காக எழுந்தனர் இருவரும்.
ருத்ரதேவ் பேசி முடித்துவிட்டு வரவும் அவனிடம் என்னவாயிற்று என்று கேட்க அவனோ ஒன்றுமில்லை என்று சமாளித்தான்.
மீண்டும் கேட்க எண்ணியவள் அனுதீப்பும் சோனாக்ஷியும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க எழுந்திருக்கவும் அமைதியானாள்.
பின்னர் பல்வேறு திருமண சடங்குகள் அடுத்தடுத்து நடக்க தக்ஷிண்யா கேட்க நினைத்ததை கேட்கவே இல்லை.
‘விடாய்’ எனும் சடங்கு முடிந்ததும் அங்கிருந்த உறவினர்கள் மணமக்களுடன் இடத்தைக் காலி செய்ய தானும் கிளம்பவிருந்த தக்ஷிண்யாவைப் பிடித்து நிறுத்தினான் ருத்ரதேவ்.
“என்ன ருத்ரா?”
“யாரோ சப்தபதி வச்சா தான் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப்னு என் கிட்ட சொன்னாங்க… ஏன் அதை மட்டும் மிச்சம் வைக்கணும்?”
தக்ஷிண்யா திகைத்து நிற்க அவளது கரத்தைப் பற்றி ஹோமகுண்டத்தை நோக்கி அழைத்துச் சென்றான் அவன்.
“இதுல விளையாடாதிங்க ருத்ரா”
தயக்கத்துடன் கூறிய தக்ஷிண்யாவையும் இக்காட்சியை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த நவ்யா மற்றும் ஆரோஹியையும் மாறி மாறிப் பார்த்தவன் ஆரோஹியிடம்
“உன் ஆசைப்படியே இப்ப அக்காவும் மாமாவும் மேரேஜ் பண்ணிக்கப் போறோம்… ஹேப்பியா ஆரோஹி?” என்று கேட்க
“ரொம்ப ஹேப்பி மாமா” என்று மகிழ்ச்சி மின்ன கூறினாள் அவள்.
“அவ சின்னப்பொண்ணு… அவ சொன்னதை சீரியஸா எடுத்துட்டு நீங்களும் விளையாடாதிங்க”
“விளையாட்டுக்குக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் மூளை இல்லாதவன் இல்ல”
அதட்டலாக அவன் கூறவும் தக்ஷிண்யா வாயை மூடிக்கொள்ள அவளது கரத்தைப் பற்றிக்கொண்டு ஹோமகுண்டத்தை வலம் வர ஆரம்பித்தான் ருத்ரதேவ்.
ஆரோஹி அலங்கார மாலைகளில் தொங்கிய கேந்தி பூக்களை உதிர்த்து எடுத்து வந்தவள் நவ்யாவிடம் கொஞ்சம் கொடுத்து
“வாங்க நவிக்கா, நம்ம பூ போடுவோம்” என்க அவளும் உற்சாகத்துடன் உதிரிப்பூக்களை அவர்கள் மீது தூவ ஆரம்பித்தாள்.
அவன் கரம் பற்றி ஏழு அடிகளை எடுத்து வைத்தவள் அவனது கரம் குங்குமத்தில் தோய்த்து நெற்றி வகிட்டில் அழுத்தவும் புன்னகைத்தாள்.
“ஹய்யா! மேரேஜ் முடிஞ்சாச்சு” என ஆரோஹி குதூகலித்தாள்.
தக்ஷிண்யா ருத்ரதேவின் காதுகளில் “முதல் நாலு அடி மட்டும் நீங்க முன்னாடி போகணும்… அடுத்த மூனு அடிக்கு நான் தான் முன்னாடி போயிருக்கணும்… ஆனா சார் ஏழடியிலயும் நீங்களே முன்னாடி போயிட்டிங்க… இதுக்குப் பேர் தான் சப்தபதியா?” என்று கிண்டலாக கேட்க
“இது ருத்ராஸ் வெர்சன் ஆப் சப்தபதி” என்று கண் சிமிட்டினான் அவன்.
நவ்யா அவர்களருகே வந்தவள் “நீங்க இந்த ரிலேசன்ஷிப்ல எவ்ளோ சீரியஸா இருக்கீங்கனு எனக்குப் புரிஞ்சுடுச்சு சார்… ஐ அம் ஹேப்பி நவ்” என்று ருத்ரதேவிடம் கூற தக்ஷிண்யா அவனை ஆச்சரியப்பார்வை பார்த்தாள்.
உடனே அவளிடம் “நான் தான் சார் கிட்ட உங்க லவ் உண்மையானதுனு ப்ரூவ் பண்ணுங்கனு கேட்டேன் தக்ஷி… நீ ரொம்ப சென்சிட்டிவானவ… உன்னை யாரும் விளையாட்டு பொம்மையா யூஸ் பண்ணிடக்கூடாதேனு எனக்குப் பயம்” என்று ருத்ரதேவின் இச்செய்கைக்கான காரணத்தைப் போட்டு உடைத்தாள்.
ருத்ரதேவை தக்ஷிண்யா நோக்க ஆரோஹி இருவரையும் ஒரு சேர கட்டிக்கொள்ள நவ்யா இக்காட்சியைக் கண்டு பூரித்துப் போனாள்.
ஆனால் ருத்ரதேவின் இச்செய்கைக்கு சற்று முன்னர் அவனிடம் மொபைலில் உரையாடிய மகாதேவின் பேச்சும் ஒரு காரணம் என்பதை ருத்ரதேவ் மட்டுமே அறிவான்.
*******
பிருந்தாவனம்…
தனது அறையின் பால்கனியில் கால்கள் ஓயும் மட்டும் நடந்து தீர்த்தான் மகாதேவ். தமையனிடம் மனச்சுமையை இறக்கியதில் கொஞ்சம் ஆசுவாசமுற்றாலும் இன்னும் அவனால் காதலி கொடுத்த வலியை மறக்க முடியவில்லை.
சற்று முன்னர் பிரகல்யாவும் அவனும் அவர்களின் கிரேட் மவுண்ட் ஹோட்டலில் சந்தித்த போது நடந்த சம்பவம் பெரும் வாக்குவாதத்துக்கு வழிவகுத்து இறுதியில் பிரிவுக்கும் உரை எழுதிவிட்டது.
வழக்கமான சந்திப்பாக முடிந்திருக்க வேண்டியது தான். ஆனால் சசிகலாவைப் பற்றிய பேச்சை ஆரம்பித்து பிரகல்யா தான் பிரச்சனைக்குப் பிள்ளையார்ச்சுழி இட்டாள்.
“உன்னோட மாம்கு சர்வெண்ட்சை எங்க வைக்கணும்னு தெரியல மகி… அவங்களும் நம்மளும் ஒன்னா? நம்ம கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறவங்க நம்ம என்ன சொன்னாலும் செய்யணும்… அதுல என்ன ஆட்டிட்டியூட் வேண்டியது இருக்கு? அதுக்காக தான் நான் அந்தம்மாவ திட்டுனேன்… உடனே உன்னோட சோ கால்ட் மாம்கு மூக்கு மேல் கோவம் வந்துடுச்சு… ஷீ இஸ் ரிடிகுலஸ் மகி… எப்பிடி இத்தனை வருசம் அவங்க பேச்சைக் கேட்டுட்டு நீயும் இருக்குற?”
அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டே செல்ல மகாதேவ் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கத்திவிட்டான்.
“இனாஃப்! நீ யாரைப் பத்தி என் கிட்ட குறை சொல்லுறனு தெரிஞ்சு தான் பேசுறியா பிரகி? ஷீ இஸ் மை மதர்… அவங்க என்ன பண்ணுனாலும் அதுல நியாயம் இருக்கும்… உன்னால அவங்களோட கோணத்துல யோசிக்க முடியலைனா ஜஸ்ட் லீவ் தட்… அதை விட்டுட்டு அவங்களை பத்தி என் கிட்டவே குறை சொல்லுற… ஹவ் டேர் யூ டு ப்ளேம் மை மாம்?”
முதல் முறையாக மகாதேவ் குரலை உயர்த்தி கத்தியதில் பிரகல்யாவும் அதிர்ந்து போனாள். பின்னர் அதிர்ச்சியிலிருந்து மீண்டவள்
“நீயா மகி இப்பிடி லோ கிளாஸ் மாதிரி பிஹேவ் பண்ணுற? ஐ காண்ட் பிலீவ் திஸ்… ஆப்டர் ஆல் ஒரு சர்வண்டுக்காக உன் அம்மா என்னைத் திட்டி அசிங்கப்படுத்துவாங்க… அதை சொன்னா நீ என் மேல கோவப்படுற… இது தான் எனக்கு நீ குடுக்குற மரியாதையா?”
“மரியாதைய எதிர்பாக்குறவங்க அதை மத்தவங்களுக்குக் குடுக்கவும் ரெடியா இருக்கணும்”
பேச்சு இப்படியே வளர்ந்து கொண்டு செல்ல இனியொரு முறை தனது அன்னையைப் பற்றி தவறாகப் பேசினால் தனது தமையனே தங்களின் திருமணப்பேச்சுவார்த்தையை முறியடித்துவிடுவான் என்றான் மகாதேவ்.
அதை கேட்டதும் பிரகல்யா பொங்கிவிட்டாள்.
“லவ், மேரேஜ் இதுல்லாம் உன்னோட பெர்ஷனல்… அதுல உன் அண்ணனை தலையிட விட்டுட்டு நீ வேடிக்கை பாப்பியா மகி? இப்பிடி சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல? உன்னை மாதிரி அண்ணனுக்கும் அம்மாவுக்கும் பயப்படுற கோழைய லவ் பண்ணுனதுக்காக நான் அவமானப்படுறேன்”
“ஏய்! உன்னை யார் அவமானப்பட சொன்னது? நான் கோழையாவே இருந்துட்டுப் போறேன்… நீ போய் தைரியமான இன்னொருத்தனை லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்க… கெட் லாஸ்ட்”
அவன் பேசி முடிக்கவும் பிரகல்யாவின் கண்கள் கலங்கி விட்டது. அவளுக்குச் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கர்வம் இருக்கலாம். ஆனால் அதை விட அதிகமாக மகாதேவை காதலித்தவள் அவள்.
அவனது வார்த்தைகள் அவளை நோகடித்துவிடவே கண்ணீர் பொலபொலவென வழிய ஆரம்பித்தது.
அதை துடைத்துக் கொண்டவள் “லவ் பண்ணுறது, பிரேக்கப் பண்ணுறதுலாம் உனக்கு எவ்ளோ ஈசியா இருக்குதுல்ல… உன்னோட இந்தக் கோவமும் உன் குடும்பத்து மனுசங்க மேல நீ வச்சிருக்குற கண்மூடித்தனமான பாசமும் தான் நம்ம பிரிவுக்குக் காரணம்னு நீ புரிஞ்சிக்குறதுக்குள்ள உன்னை விட்டு நான் ரொம்ப தூரமா போயிருப்பேன் மகி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இதை ருத்ரதேவிடம் கூறி வருந்தியவன் அவன் கூறிய ஆறுதல் மொழிகளில் நிதானமுற்றான். அப்படியே வீட்டுக்கு வந்தவனுக்கு இரவுணவை விழுங்க முடியவில்லை.
நெஞ்சில் மரக்கட்டையை வைத்து அடைத்தது போன்ற உணர்வு. ஒருவேளை உடைந்த இதயத்தின் துண்டுகள் அங்கே அடைத்துக் கொண்டிருந்ததோ என்னவோ!
தனது அறைக்குள் சிறைபட்டவன் பால்கனியில் நடந்து நடந்தே களைத்துப் போனான். ஆனால் அவன் கூறிய பிரகல்யாவின் வார்த்தைகளைக் கேட்ட ருத்ரதேவ் தானும் எக்காலக்கட்டத்திலும் குடும்பத்தினர் மீது கொண்ட பாசத்திற்காக தக்ஷிண்யாவை இழந்துவிடக்கூடாது என்ற பயத்தில் சப்தபதி எடுத்து வைத்து குங்குமத்தோடு மானசீகமாக அவளை மணந்து கொண்டான். அவளுக்கு அவன் கொடுப்பதாக கூறிய ‘சர்ப்ரைஸ்’ வீடியோ அழைப்பில் குடும்பத்தினரிடம் அவளை அறிமுகப்படுத்துவது தான்.
ஆனால் மகாதேவின் வார்த்தைகளும் நவ்யாவின் சந்தேகமும் ருத்ரதேவை அச்சடங்குகளை செய்யும்படி தூண்டிவிட்டது.
முழுமையடையாத சம்பிரதாயங்கள் தான்! ஆனால் அங்கே இரு மனங்கள் இணைந்து விட்டதே!
இதற்கெல்லாம் தனது காதலியில் வார்த்தைகள் தான் காரணம் என்பது கூட தெரியாமல் வேண்டாவெறுப்பாக இரவை நெட்டித் தள்ளத் துவங்கினான் மகாதேவ்.
மனிதர்களின் ஆயுள் என்பது எவ்வளவு நிலையற்றதோ அவ்வளவு நிலையற்றது அவர்களின் மனதிலிருந்து பிறக்கும் எண்ணங்கள். இன்று சரியென தோன்றும் ஆயிரம் விசயங்கள் நாளையே தவறாகத் தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
எப்படி நிலையற்ற ஆயுளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுள் காப்பீடு எடுக்கிறோமோ அதே போல மனமாற்றத்தால் நம்மை சார்ந்தவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இம்மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


