“நம்மளோட இரத்தச் சொந்தங்கள்தான் நமக்கு நல்லது நினைப்பாங்கங்கிறது ஒரு அரைகுறையான கருத்து. நமக்கு நல்லது நினைக்குறதுக்கு இரத்தச் சொந்தம் அவசியமே இல்ல. நல்ல நண்பர்கள், யாரோ ஒரு மூணாவது மனுஷன்கூட ஏதோ ஒரு சமயத்துல நமக்கு நல்லது நினைப்பாங்க. எதையும் பொதுப்படையா யோசிச்சு அதுதான் சரின்னு ஒரு கருத்தா உருவாக்கி வெச்சிடுறாங்க. எல்லாக் கருத்துக்கும் விதிவிலக்கு உண்டு.”
-வசுமதி
அன்று காலையில் வழக்கம் போலத்தான் பொழுது விடிந்தது வசுமதிக்கும் வசீகரனுக்கும். இருவரும் அலுவலகம் கிளம்பியபோதே பிரசவத்துக்கான விடுப்பு எடுப்பது பற்றிப் பேசிக்கொண்டார்கள்.
வசுமதி தற்காலிகமாகப் பணியாற்றிய அட்மின் பிரிவு வேலையில் முன்பு இருந்த ரவீனா இன்னும் இரு மாதங்களில் அவரது கர்ப்பகால விடுப்பை முடித்துக்கொண்டு பணிக்கு வருவதாக இருந்தார்.
அவர் பணிக்குச் சேர்ந்ததும் வசுமதியின் முழுநேர வேலையே ஆர்.ஜே தான் என முந்தைய தினம் முடிந்த மீட்டிங்கில் சொல்லிவிட்டார்கள். அதற்கான நேர்காணலையும் முறைப்படி முடித்துவிட்டாள்.
அவளது ஊதியமும் அதற்கேற்ற மாதிரி அதிகமாகும். வசீகரனிடம் முந்தைய தினமே அதைப் பகிர்ந்திருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நான் டெலிவரிக்கு அட்மிட் ஆகுறதுக்கு ஒன் வீக் முன்னாடி வரைக்கும் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன் வசீ. பேபி பிறந்ததுல இருந்து ஆறு மாசத்துக்கு மேட்டர்னிட்டி லீவுக்கு அப்ளை பண்ணிருக்கேன். அது போதும். பேபி பிறந்ததும் அம்மாவை இங்க அழைச்சிக்கலாம்னு யோசிச்சிருக்கேன். நீங்க என்ன சொல்லுறீங்க?”
“கூப்பிட்டுக்க. உன்னாலயும் என்னாலயும் தனியா குழந்தையைப் பாத்துக்க முடியாது. அத்தை வந்தாங்கனா உதவியா இருக்கும். ஆனா மாமாவும் சுகாவும் சமாளிச்சுப்பாங்களா?”
“சுகா சமாளிச்சுப்பேன்னு சொல்லிட்டா வசீ. அவளும் அப்பாவும் மாசம் ஒரு தடவை சென்னை வருவாங்களாம் அம்மாவையும் பேபியையும் பாக்குறதுக்கு. அவளுக்கு இன்னும் கனவுல மெட்ரோ ட்ரெயின்தான் வருதாம். அந்தப் பொண்ணுக்கு இது ஒரு பைத்தியம்”
சிரித்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ரேவதி வசுமதிக்குப் பாலில் கர்ப்பகாலத்துக்கு மருத்துவர் எழுதிக்கொடுத்த சத்துபான பவுடர் கலந்துகொண்டு வந்து கொடுத்தார். கூடவே கால்சியம் மாத்திரையும்.
“இதைக் குடிச்சிடு வசும்மா. உனக்கு எண்ணெய் போடாத சப்பாத்தி செஞ்சு கொண்டு வர்றேன். சப்பாத்தியோட பால்கனிக்குப் போயிடு. அப்புறம் சாருக்கு எண்ணெய் போட்டுச் சப்பாத்தி சுடணும்.” என்று சொல்லிவிட்டுக் கடந்தார் அவர்.
வெற்றிகரமாக மூன்றாவது ட்ரைமெஸ்டரில் அடியெடுத்து வைத்த வசுமதிக்கு இப்போது எண்ணெய் வாடையே ஆகாது. பொரிக்கும் வாசனை வந்தாலே குமட்டியது அவளுக்கு. அதனால்தான் இந்த ஏற்பாடு.
கடகடவெனப் பாலைக் குடித்து மாத்திரையை விழுங்கியவளிடம் சுடச்சுடச் சப்பாத்தியும் பட்டாணிக் கிழங்கு குருமாவும் நிரம்பிய தட்டு கொடுக்கப்பட்டது.
அதை எடுத்துக்கொண்டு பால்கனிக்குப் போய்விட்டாள் வசுமதி.
வசீகரனுக்குச் சப்பாத்திகளைக் கொண்டு வந்த ரேவதி “செவ்வாழைப்பழம் காலி ஆகிடுச்சு சார். அயர்ன் டேப்லெட் போடுறப்ப கொய்யாப்பழம், செவ்வாழைப்பழம் கட்டாயம் கர்ப்பிணிப் பொண்ணுங்க சாப்பிடணுமாம். இல்லனா கான்ஸ்டிபேஷன் வந்துடும்” என்று நினைவூட்டினார் அவனிடம்.
“சரி அக்கா! ஈவ்னிங் வர்றப்ப வாங்கிட்டு வந்துடுறேன். மறந்தே போயிட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க”
காலையுணவை இருவரும் முடித்துக்கொண்டார்கள். தரிப்பிடத்துக்கு வந்தபோது ப்ரஷாந்தியும் அவர்களோடு சேர்ந்துகொண்டாள். இப்போதெல்லாம் ப்ரஷாந்தியும் வசுமதியும் ஸ்கூட்டியில் அலுவலகம் செல்வதில்லை.
ப்ரஷாந்தி புதிதாக வாங்கியிருந்த காரில்தான் அவளும் வசுமதியும் அலுவலகம் செல்கிறார்கள். வசுமதிக்கு அதுவே பாதுகாப்பு என்று சொல்லிவிட்டான் வசீகரனும்.
இருவரும் அவரவர் அலுவலகம் கிளம்பிய அதே நேரத்தில் திருநெல்வேலியில் மகிழினிக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. அவள் வழக்கமாக மாதாந்திர பரிசோதனைக்குச் செல்லும் மருத்துவமனையில் அவளைச் சேர்த்துவிட்டார்கள்.
குமுதவல்லியும் கமலநாதனும் உடனடியாகச் சர்வானந்தனின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைச் சொல்ல அடுத்த அரை மணி நேரத்தில் பரமேஸ்வரியும் வரகுணபாண்டியனும் அங்கே வந்துவிட்டார்கள்.
சர்வானந்தன் ஒரு முக்கியமான வேலைக்காகக் கோவை சென்றுவிட்டதால் அவன் வரத் தாமதமாகும் என்றார்கள் இருவரும்.
பரமேஸ்வரி வரும்போதே அவர்களின் குலதெய்வமான சொரிமுத்து அய்யனாரிடம் மருமகளுக்கும் பேரப்பிள்ளைக்கும் எவ்வித நோவுமின்றிப் பிரசவம் நல்லபடியாக நடந்தேற வேண்டுமென வேண்டுதல் வைத்திருந்தார்.
மருத்துவமனையின் அந்த நீண்ட வெள்ளை வராண்டாவில், டெட்டால் வாசனையும் பிரசவ வார்டிற்கே உரித்தான ஒருவிதமான பதற்றமும் கலந்திருந்தது. உள்ளே மகிழினி வலியால் முனகும் சத்தம், வெளியே இருந்த நான்கு பேரின் நெஞ்சிலும் கலக்கமாய் ஒலித்தது.
லேபர் வார்டின் கதவு திறந்து வெளியே வந்த செவிலியர், கமலநாதனிடம் ஒரு நீளமான சீட்டைக் கொடுத்தார்.
“சார், மகிழினிக்குக் கூட யார் இருக்கா? இந்தச் சீட்டை வெச்சுக்கிட்டு கீழ பார்மஸிக்குப் போய் இதெல்லாம் உடனே வாங்கிட்டு வாங்க. மெட்டர்னிட்டி பேட், ஒரு பாக்கெட் அண்டர்பேட், ரெண்டு சர்ஜிக்கல் காட்டன் ரோல், அப்புறம் கொஞ்சம் வெட் வைப்ஸ் வேணும். அப்படியே பாப்பா டிரஸ்ஸையும் டவலையும் ரெடியா எடுத்து வச்சுக்கோங்க,” என்று விரைவாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
வரகுணபாண்டியன் அந்தச் சீட்டை வாங்கிக்கொண்டு அவசரமாகப் பார்மஸியை நோக்கி விரைந்தார். ஒரு பிரசவம் என்பது மாயாஜாலம் போல மருத்துவமனைக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்துவிடுவதில்லை. முதல் பிரசவம் என்பதால், ஒரு பூ மொட்டு மெல்ல மெல்ல இதழ் விரித்துப் பூப்பதைப் போல, அவளது உடலும் அந்தப் புதிய உயிருக்கு வழிவிடத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளப் பல மணிநேரங்கள் தேவைப்பட்டன.
நேரம் ஒரு நத்தையைப் போல மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே மகிழினிக்குப் பிரசவ வலி, ஒரு பெருங்கடலின் அலைகளைப் போலச் சீறிச் சீறி வந்து தணிந்தது. முதலில் மெல்லியதாகத் தொடங்கிய வலி, நேரம் செல்லச் செல்ல உக்கிரமாகி, அவளது அடிவயிற்றைச் சுழற்றி அடித்தது.
சுமார் ஐந்து மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, பச்சைக் கவுன் அணிந்தபடி வெளியே வந்த மருத்துவர், பதற்றத்தோடு நின்றிருந்த கமலநாதனையும் குமுதவல்லி, பரமேஸ்வரியையும் பார்த்துப் புன்னகைத்தார்.
“டாக்டர், என் பொண்ணு எப்படி இருக்கா? அவளுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?” என்று கமலநாதன் தழுதழுத்த குரலில் கேட்டார்.
“பயப்படாதிங்க சார், அவ ரொம்ப நல்லா இருக்கா,” என்ற மருத்துவர் இதமாகத் தொடர்ந்தார்.
“நார்மல் டெலிவரிங்கிறதால கொஞ்சம் டைம் ஆகத்தான் செய்யும். இப்போ கர்ப்பப்பை வாய் ஒரு எட்டு சென்டிமீட்டர் வரைக்கும் திறந்திருக்கு. ஆக்டிவ் லேபர் ஸ்டார்ட் ஆயிடுச்சு. அவளும் நல்லா ஒத்துழைக்குறா. வலியும் நல்லா ஸ்ட்ராங்கா வருது. இது ரொம்ப நல்ல அறிகுறி. இன்னும் ஒன் ஆர் டூ ஹவர்ஸ்ல டெலிவரி ஆகிடும். நீங்க பதற்றப்படாம இருங்க சார்.”
மருத்துவர் சொன்ன அந்த வார்த்தைகள், கோடை மழையின் முதல் துளியைப் போல அவர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்தது. பரமேஸ்வரி தன் குலதெய்வமான சொரிமுத்து அய்யனாரை மனதிற்குள் இடைவிடாமல் வேண்டிக்கொண்டேயிருந்தார்.
மீண்டும் ஒரு மணி நேரம் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போலக் கனமாகக் கழிந்தது. உள்ளே மகிழினியின் முனகல் சத்தம் இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. தன் முழுப் பலத்தையும் திரட்டி அவள் அந்த வலியை எதிர்கொண்ட விதம், ஒரு சின்னஞ்சிறு செடி பெரும் புயலை எதிர்த்து நிற்பதைப் போலிருந்தது. குமுதவல்லிக்குத் தன் மகளின் வலியை நினைத்து மனம் பதபதைத்தது.
திடீரென, அந்த வராண்டாவின் இறுக்கமான மௌனத்தைக் கிழித்துக்கொண்டு, ஒரு புதிய ஜீவனின் அழுகுரல் வீறிட்டு ஒலித்தது.
“வீர்ர்ர்… வீர்ர்ர்…” என்ற அந்தக் குழந்தையின் முதல் அழுகுரல், அத்தனை மணி நேரமாக அவர்கள் அனுபவித்த பதற்றத்தை, இருளை விலக்கும் சூரியக் கதிரைப் போல நொடியில் துடைத்தெறிந்தது.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் முகம் கொள்ளாத சிரிப்போடு, “கங்க்ராட்ஸ்! உங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான். சுகப்பிரசவம்தான். அம்மாவும் குழந்தையும் ரொம்ப நல்லா ஆரோக்கியமா இருக்காங்க!” என்று அறிவித்தபோது, குமுதவல்லிக்கும் பரமேஸ்வரிக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
செவிலி குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டு வெளியே கொண்டு வந்தார். யாரிடம் குழந்தையைக் கொடுப்பதென அவர் குழம்ப கமலநாதன் வரகுணபாண்டியனிடம் கொடுக்குமாறு கண்காாட்டினார்.
குழந்தையை வாங்கிக்கொண்ட வரகுணபாண்டியனின் கரங்கள் நடுங்க அதை அணைவாகப் பிடித்துக்கொண்டார் பரமேஸ்வரி.
“என் தங்கம்!”
இதைத் தாண்டி வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை இருவருக்கும். அடுத்து கமலநாதனும் குமுதவல்லியும் தங்கள் ஆசைக்குக் குழந்தையைக் கொஞ்ச செவிலி சில நிமிடங்களில் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்க வாங்கிக்கொண்டார்.
சிறிது நேரம் கழித்து மகிழினியை அவளுக்கான பிரத்தியேக அறைக்கு மாற்றினார்கள். இரண்டு நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் தாயையும் குழந்தையையும் வைத்துச் சோதித்துவிட்டு எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டால் மட்டுமே அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்.
சுகப்பிரசவம் என்றால் சுகமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. ஐந்து முதல் பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வலியைத் தாங்கிக் குழந்தையைப் பூமிக்குக் கொண்டு வரும் தருணங்கள் வலியும் வேதனையும் பயமும் நிறைந்தவை. அதனால்தானோ என்னவோ ஆங்கிலத்தில் வெகு இயல்பாய் ‘நார்மல் டெலிவரி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் போல.
மகிழினி ஓய்ந்துபோயிருந்தாள். அவளது படுக்கைக்கு அருகே கிடந்த தொட்டிலில் படுத்திருந்த அவளது மகனைப் பார்த்தபோது இவ்வளவு நேரம் அனுபவித்த வலியும் வேதனையும் பெரிதாகத் தோன்றவில்லை அவளுக்கு.
அவள் விரலை நீட்டியதும் அழகாய்ப் பற்றிக்கொண்டான் அவளது மைந்தன். அந்தக் கணம் பேரலையாய் அவளறியா உணர்வொன்று பிரவாகித்து அவளை மூழ்கடித்தது.
தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பின் உன்னதத்தை அந்த நொடி அவளுக்கு உணர்த்திவிட்டது. செவிலி குழந்தைக்குப் பாலூட்ட உதவியவராக, அவளிடம் குழந்தையை எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமெனச் சொன்னார். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.
குழந்தை பசியாறியதும் அதற்கு ஏப்பம் வரும் வரை காத்திருந்து தொட்டிலில் படுக்க வைத்த செவிலி பிறகு மகிழினியின் குடும்பத்தார் வந்து பார்க்கலாமெனச் சொல்லிவிட்டு வெளியேறினார்.
பரமேஸ்வரியும் குமுதவல்லியும் ஒன்றாக வந்தார்கள். குமுதவல்லியின் கையிலிருந்த கிண்ணத்தில் எதுவோ இருந்தது.
“குழந்தைக்குச் சேனைத்தண்ணி தொட்டு நாக்குல வைக்கணும் மகிழ்” என்று அவர் குழந்தையைத் தூக்கச் செல்ல
“அதெல்லாம் வைக்கக் கூடாதாம் மதினி. பிறந்த குழந்தையோட வயிறு தாய்ப்பாலை மட்டும்தான் செரிக்கும். சேனைத்தண்ணி, தேன் எல்லாம் குழந்தைக்குக் குடுக்குறது தப்பு. அது குடுத்தா குழந்தைக்கு வயித்தளைச்சல் மாதிரி வந்து கஷ்டப்படும். எதுக்கு இந்தப் பழைய வழக்கமெல்லாம்?” என்று எடுத்துச் சொன்னார் பரமேஸ்வரி.
உடனே குமுதவல்லியின் முகம் மாறிப்போனது.
“இத்தனை மாசம் என் பிள்ளையை என்னனு கேப்பாரில்ல. அப்ப எல்லாம் துணையா இருந்தவ நான்தான். எனக்கு ஒரு சேனைத்தண்ணி குடுக்குற உரிமைகூட இல்லையா?” எனப் புலம்ப ஆரம்பித்தார் அவர்.
பரமேஸ்வரிக்குச் சங்கடமாய்ப் போனது. அவர் விகல்பமாய்ச் சொல்லவில்லை. வழக்கம் என்ற பெயரில் பிறந்த குழந்தையைப் பாடாய்ப்படுத்தும் சில பழக்கங்கள் தவறெனத் தெரிந்ததால் அதை எடுத்துச் சொன்னார்.
அதற்கே குமுதவல்லி காந்தலாய்ப் பேசவும் திகைத்துப்போனார் அப்பெண்மணி. மகனுக்கும் மருமகளுக்கும் இடையே இருந்த பூசலுக்கான காரணத்தைக்கூட அவர் அறியவில்லை. ஏதோ பிணக்கு சரியாகிப்போகுமென நம்பியிருந்தார்.
மகிழினி மாமியாரின் முகத்தையும் அன்னையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். இப்போது பரமேஸ்வரி சொன்னதைத்தான் சற்று முன்னர் செவிலி சொல்லியிருந்தார்.
“எம்மா! உங்கம்மாவும் மாமியாரும் அந்தக் காலத்து லேடீஸ். குழந்தைக்குச் சேனைத்தண்ணி வைக்கோம்னு வருவாங்க. அதெல்லாம் குடுக்க விடாதீங்க. குழந்தைக்கு ஒத்துக்காது அதெல்லாம். அப்புறம் குழந்தை பிறந்ததும் அளவா தண்ணி குடி, இல்லனா வயிறு பழுத்துடும்னு சொல்லுவாங்க. அதெல்லாம் கேக்காதீங்க. நிறைய தண்ணி குடிக்கணும் நீங்க. இல்லனா குழந்தைக்குப் பால் இருக்காது. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் டயட் சார்ட் தருவாங்க. அதுபடி சத்தான சாப்பாடு சாப்பிடணும். சரியா?”
அது நினைவுக்கு வந்ததும் “ம்மா!” என அழுத்தமாய் அழைத்தாள் குமுதவல்லியை.
“நீயே இந்த அநியாயத்தைக் கேளுடி” என மூக்கால் முகாரி பாடினார் அவளது அன்னை.
“அத்தை சொன்னது சரிதான். நர்ஸும் இதைத்தான் சொல்லிட்டுப் போனாங்க. சேனைத்தண்ணி எல்லாம் வேண்டாம். உங்க வழக்கத்தை விட என் குழந்தையோட ஹெல்த் எனக்கு முக்கியம். உரிமையைப் பாராட்டுற இடமா இது? பிள்ளைப்பேறு வலி என் சத்தை எல்லாம் உறிஞ்சியெடுத்துச்சு. என்னால உன்கிட்ட ஆர்கியூ பண்ண முடியாது. தயவுபண்ணிப் புலம்பாத. அமைதியா இரு”
மகிழினி சோர்வாய்ச் சொல்லவும் குமுதவல்லி கப்சிப்பானார். முதல் முறையாக மாமியாருக்கு ஆதரவாய்ப் பேசியவளுக்கு அவரை அவதூறாகப் பேசிய கணத்துக்கான பிராயச்சித்தமாய் இந்தப் பேச்சு அமையட்டும் என்ற எண்ணம்.
ஆனால் அவள் சொன்ன வார்த்தையை மறக்க வேண்டியவனான அவளது கணவன் இன்னும் வரவில்லையே! அவன் வந்து தன்னை மன்னிக்காதவரை இங்கே எதுவும் மாறாது என்று யோசித்தவளாய்க் கண் மூடிப் படுக்கையில் சாய்ந்துகொண்டாள் மகிழினி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


