“பெரிய வானத்தை எந்த நாட்டைச் சேர்ந்தவங்களும் எங்களுக்கானதுனு உரிமை கொண்டாட முடியாது. வானம் எல்லாத்துக்கும் பொதுவானது. அதை தனி ஒரு நாடு உரிமை கொண்டாடுறது கோமாளித்தனம் மட்டுமில்ல, அல்பத்தனமும்கூட. அதேபோலத்தான் கணவன் – மனைவி ரெண்டு பேரும் அவங்களைச் சேர்ந்த ரெண்டு குடும்பங்களுக்கும் பொதுவானவங்க. கல்யாணம் ஆயாச்சுனு மனைவியை ஒரேயடியா தன்னோட குடும்பத்துக்குப் பாத்தியப்பட்டவனு நடத்துற இந்திய ஆண்கள் அந்த வேலை அல்பத்தனமானதுனு புரிஞ்சிக்கணும்.”
-வசுமதி
கர்ப்பகாலத்தின் ஹார்மோன் சேட்டையால் அல்லல்பட்டுப்போனாள் வசுமதி. சில நேரம் சோர்வாகவும், சில நேரம் படு உற்சாகமாகவும் அவளது மனநிலை மாறிக்கொண்டே இருந்தது. சில நேரங்களிலோ சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூடக் கோபம் வந்தது.
அனைத்தையும் சமாளித்து அவளையும் கவனித்துக்கொண்ட வசீகரன் ஒருநாள்கூட அலுத்துக்கொண்டதில்லை. இப்படியே ஐந்தாவது மாதம் வசுமதிக்குக் கருப்புச் சேலை அணிவித்துக் கருப்பு வளையல் போடும் சடங்கைச் செய்ய வீரலட்சுமியும் செல்வராஜும் வசீகரனின் வீட்டுக்கு நேரில் சென்று சம்பந்திகளிடம் பேசினார்கள்.
கமலநாதனுக்கு அவர்கள் சொன்ன செய்தியில் மகிழ்ச்சியே!
“நீங்க எந்தத் தேதியில மெட்ராஸ் போகணும்னு நினைக்குறீங்க? அதே தேதியில நமக்கு டிக்கெட் போடச் சொல்லிடுறேன் வசீகிட்ட” என்றார் அவர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வீரலட்சுமியும் செல்வராஜும் முகம் பூரிக்கத் தேதியைச் சொல்லவும் இடைவெட்டினார் குமுதவல்லி.
“அப்ப உங்களுக்கு மட்டும் போடுங்க. என்னால வர முடியாது”
முகம் வாடிப்போனது வீரலட்சுமிக்கு. செல்வராஜ் ஏனெனப் புரியாமல் தவித்துப்போனார். கமலநாதன் மனைவியை முறைத்தார். உடனே சுதாரித்துக்கொண்டார் குமுதவல்லி.
“நாம ரெண்டு பேருமே போயிட்டோம்னா மகிழை யார் பாத்துக்குறது? அவளைத் தனியா விட்டுட்டுப் போகமுடியாதுல்ல”
உடனே வீரலட்சுமியின் முகம் இயல்பானது. குமுதவல்லியின் மறுப்புக்கான இந்தக் காரணம் பொய்யென அறியாமல் புன்னகைத்தார்.
“அதுவும் சரிதான் மதினி. இப்ப எட்டாம் மாசம் நடக்குது. ரொம்ப கவனமா இருக்கணுமே” என்று அவர் சொல்ல குமுதவல்லியும் சிரித்து வைத்தார்.
வீரலட்சுமியும் செல்வராஜும் கிளம்பிய பிறகு கமலநாதன் மனைவியிடம் மெய்யான காரணத்தைக் கேட்டார்.
“நம்ம மகளோட வளைகாப்புக்கு அவ வந்தாளா? என் மகளை நான் என்ன தவிட்டுக்கா வாங்குனேன்? அவளை அலட்சியப்படுத்துனவளை நான் ஏன் போய்ப் பாக்கணும்?”
“உனக்குக் காரியம் ஆகணும்னா மருமகளுக்குப் போன் பண்ணி ஒப்பாரி வைக்கத் தெரியுது. அவளுக்குக் கருப்பு வளையல் போடுறதுக்கு மட்டும் வரப் பிடிக்கலையா?”
“அதெல்லாம் நீங்க பேசாதீங்க” என்று அவரது வாயை அடைத்துவிட்டார் குமுதவல்லி.
முடிவில் வீரலட்சுமி, செல்வராஜ், சுகமதியோடு கமலநாதன் மட்டுமே சென்னைக்குச் செல்வதாக முடிவானது. இத்தகவல் வசீகரனுக்கும் வசுமதிக்கும் சொல்லப்பட்டது.
வசுமதி அன்னையின் மொபைலுக்கு அழைத்து அவர்கள் வரும் தினத்தன்று என்னென்ன ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டாள்.
“விளக்கு மட்டும் தேய்ச்சு வெச்சிடு வசு. அப்பிடியே சாமி போட்டோக்குப் போட மாலை, பத்தி, கற்பூரம் மட்டும் வாங்கி வெச்சிடு. மத்த எல்லாம் நான் அங்க வந்து பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டார் வீரலட்சுமி.
அன்றைய தினம் மூன் எஃப்.எம்மில் பணியாற்றும் சக ஊழியனான ஆர்.ஜே ஹர்ஷாவின் திருமணம் மற்றும் வரவேற்பில் ப்ரஷாந்தியுடன் கலந்துகொண்டு களைப்போடு வீட்டுக்கு வந்திருந்தாள் வசுமதி.
வசீகரன் வந்ததும் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டவளுக்குக் கால் எல்லாம் வலி கண்டதை அவள் முழங்காலைப் பிடித்துவிடுவதை வைத்து அவன் கண்டுபிடித்துவிட்டான்.
அவள் முகத்தில் அரும்பியிருந்த களைப்பையும், மெல்லிய வலியால் சுருங்கியிருந்த அவளது கண்களையும் பார்த்த வசீகரனுக்குச் சின்னதாய் ஒரு யோசனை. திருமண மண்டபத்தில் நீண்ட நேரம் நின்றதும், அவளது தற்போதைய தாய்மைப் பூரிப்பும் சேர்ந்து அவளது கால்களில் நல்ல வலியை உண்டாக்கியிருந்தது.
“ரொம்ப வலிக்குதா வசு? ரொம்ப நேரம் நிக்காதனு சொன்னா கேட்டாதானே? இப்ப பாரு, கால் வீங்கிடுச்சு…” என்று அக்கறையும் செல்லக் கோபமுமாகக் கடிந்துகொண்டான்.
“அதெல்லாம் இல்லீங்க. அங்க ப்ரஷாந்தி, எங்க டீம் ஆளுங்ககூட சேர்ந்து நின்னு பேசிட்டே இருந்ததால நேரம் போனதே தெரியல. இப்பதான் கால் கொஞ்சமா வலியில கெஞ்ச ஆரம்பிக்குது…” என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தாள் வசுமதி.
அவளைப் படுக்கையின் ஓரத்தில் வசதியாக அமரச் செய்தவன், நேராகக் குளியலறைக்குச் சென்றான். ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பில் இதமான சூட்டில் வெந்நீரைப் பிடித்து, அதனுள் சிறிதளவு ‘எப்சம்’ உப்பைக் கலந்து எடுத்து வந்தான்.
“இந்தா! இதுல காலை வை. வெந்நீரும் இந்த எப்சம் சால்ட்டும் சேர்ந்து உன்னோட கால் வலியை அப்படியே உறிஞ்சி எடுத்துடும். மேஜிக் மாதிரி இருக்கும் பாரு,” என்றபடி அந்த டப்பை அவளது பாதங்களுக்கு அருகே வைத்தான். எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் சல்பேட், தசைகளில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தி வீக்கத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது என்று கடந்த வாரம் மாதாந்திர பரிசோதனைக்குச் சென்றபோது கைனகாலஜிஸ்ட் சொன்னது வசீகரனுக்கு ஞாபகம் இருந்தது.
தயக்கத்தோடு அவள் தன் கால்களை அந்த வெந்நீருக்குள் அமிழ்த்தியதும், இதமான அந்தச் சூடு நரம்புகளின் வழியே ஊடுருவியது. நாள் முழுவதுமான களைப்பை, ஒரு பனித்துளியைக் காலை வெயில் உறிஞ்சுவதுபோல அந்த நீரின் வெம்மை மெல்ல மெல்ல உறிஞ்சியது. வசுமதி கண்களை மூடி அந்தச் சுகத்தை ஆழமாக ரசித்தாள்.
பத்து நிமிடங்கள் கழித்து, டப்பை நகர்த்திவிட்டுத் தன் கைகளாலேயே ஒரு மென்மையான பருத்தித் துண்டை எடுத்து அவளது பாதங்களைத் துடைத்துவிட்டான் வசீகரன். வசுமதிக்கு இது கூச்சமாகவும், அதே சமயம் கணவனின் கனிவான அக்கறை நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால், வசீகரன் அதோடு நிற்கவில்லை. படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவளின் கால்களைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டான்.
“ஏய் வசீ என்ன பண்ணுறீங்க? விடுங்க. எனக்கே ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.” என்று அவள் மெல்லிய வெட்கத்தோடு தன் கால்களை இழுக்க முயல, அவன் விடவில்லை.
“சும்மா இரு வசு. இவ்வளவு நாளா உன்னைக் கண்டுக்காம விட்டதுக்கு, இதெல்லாம் ரொம்பக் கம்மி,” என்றபடி, அவளது பாதங்களிலும், கெண்டைக்காலிலும் தன் விரல்களால் மெதுவாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யத் தொடங்கினான்.
அவனது கட்டுமஸ்தான விரல்கள், அவளது மென்மையான கால்களில் விளையாடிய விதம், ஒரு வீணையின் நரம்புகளை மிக லாவகமாக மீட்டும் தேர்ந்த கலைஞனைப் போலிருந்தது. அத்தனை நாளாக இருவருக்கும் இடையே இருந்த ஊடல் பனிப்பாறை, இப்போது அவனது விரல் சூட்டில் முழுமையாக உருகி வழிந்தது. வசுமதியின் கண்கள் பனித்தன. அவனது ஒவ்வொரு அழுத்தமும் வலியைப் போக்குவதற்குப் பதிலாக, அவளுக்குள் ஒரு புதுவிதமான காதல் வலியை, ஒரு வசீகரமான சுகத்தை விதைத்துக்கொண்டிருந்தது.
“கஷ்டமா இருந்தா வேண்டாம் வசீ! நீங்க நான் பேசுறதைக் கவனிக்கிறீங்க. என்னோட பெயின் உங்களுக்குப் புரியுது. இதுவே எனக்குப் போதும்”
“ஆனா எனக்குப் போதாது. என் குழந்தையைச் சுமந்துட்டிருக்கவ சின்ன அசௌகரியத்தைக்கூட ஃபீல் பண்ணக் கூடாது.”
“அப்ப குழந்தையைச் சுமக்காம இருந்தா இதெல்லாம் செய்யமாட்டீங்களா?”
“மறுபடி ஆரம்பிக்காத தாயே! இப்பனு இல்ல, எப்ப உனக்கு முடியலைனாலும் நான் உன்னை இதே மாதிரி கவனிச்சிப்பேன் வசு”
“ம்ஹூம்” நம்பாமல் கேட்டதுபோல அவள் இழுக்கவும் அவனது இதழில் முறுவல் பூத்தது.
அவளது கன்னங்களை ஏந்திக்கொண்டவன் “அத்தை சொன்ன சாமி போட்டோ வேலை, விளக்குத் தேய்க்கிறது எல்லாத்தையும் ரேவதி அக்காகிட்ட சொன்னா செஞ்சு குடுத்துடுவாங்க. நீ எதைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா தூங்கு,” என்று முணுமுணுக்க சரியெனத் தலையாட்டினாள் வசுமதி.
அடுத்த ஒரு வாரத்தில், அடையாற்றிலிருந்த அந்த கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மென்ட் திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்தது போலக் கலகலப்பானது. மாமனார் கமலநாதன், வசுமதியின் பெற்றோர் வீரலட்சுமி – செல்வராஜ், மற்றும் தங்கை சுகமதி ஆகியோரின் வருகை அந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு பண்டிகைக் காலத்தின் உற்சாகத்தைத் தூவியிருந்தது. இருவரின் பேச்சையும் சிரிப்பையும் சண்டையையும் கேட்டுப் பழகிய அந்த வீட்டின் சுவர்கள்கூட இப்போது அவர்களின் சிரிப்பொலியைக் கேட்டுப் பிரகாசமானது போலொரு பிரமை.
வசீகரனுக்குத் தனது அன்னை வரவில்லை என்பது சின்னதாய் வருத்தத்தைக் கொடுத்தாலும் தங்கையைத் தனியே விட்டுவரமுடியாது என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டான் அவன்.
நல்ல நேரம் பார்த்து வசுமதிக்குக் கருப்பு வளையல் போட்டுவிடலாமெனச் சொல்லிவிட்டார் வீரலட்சுமி. ப்ரஷாந்தியையும் காமாட்சி அம்மாவையும் அவர் அழைத்திருந்தார்.
வீட்டின் கூடத்தில் இருவரையும் கிழக்கு முகமாகப் பாயில் அமரவைத்தனர். வசுமதிக்கு அந்தக் கறுப்பு நிறப் பட்டுப் புடவை அவ்வளவு அழகாகப் பொருந்தியிருந்தது. நெற்றியில் கீற்றாய்ப் பூசியிருந்த குங்குமமும், அவளது அழகான முகவெட்டும் தாய்மையோடு சேர்ந்து அவளுக்கு ஒரு தெய்வக் களையைக் கொடுத்திருந்தது. உணர்ச்சிகளைப் பேசும் அவளது கண்களைச் சுற்றி லேசாக மையெழுதியிருந்தாள். நேர்த்தியாகப் பின்னப்பட்டிருந்த அவளது அடர்ந்த நீண்ட கருங்கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூவின் வாசம், அந்த அறை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. கறுப்பு நிறம் திருஷ்டி கழிக்க என்பார்கள்.
ஆனால், அந்தப் புடவையில் அவள் அமர்ந்திருந்த அழகைப் பார்த்த வசீகரனுக்கே, தன் மனைவிக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்போலத் தோன்றியது.
பக்கத்தில் அமர்ந்திருந்த வசீகரனின் முகத்தில் பெருமிதமும், மெல்லிய வெட்கமும் கலந்திருந்தது.
வீரலட்சுமியும் செல்வராஜும் இணைந்து இருவருக்கும் மல்லிகைப் பூ மாலையை அணிவித்தனர். வசுமதியின் கைகளை மென்மையாகப் பிடித்து, வீரலட்சுமி அந்தப் பளபளக்கும் கறுப்பு நிறக் கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாக அணிவித்தார்.
‘க்ளிங்… க்ளிங்…’ என அந்த வளையல்கள் ஒன்றோடொன்று உரசிக் கிளப்பிய மெல்லிய நாதம், வசுமதியின் தாய்மைக்கான முதல் வாழ்த்திசையாக அந்த அறை முழுவதும் ஒலித்தது.
அடுத்து இரு ஜோடி வளையல்களை காமாட்சி அம்மா போட்டுவிட்டார் வசுமதிக்கு. ரேவதியும் தன் பங்குக்கு இரு வளையல்களை அவள் கையில் அடுக்கினார்.
நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்து, கற்பூர ஆரத்தி சுற்றியபோது, வசுமதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. சாமி கும்பிட்டுவிட்டு, பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
தங்களுக்குள் இருந்த அத்தனை மனக்கசப்புகளையும் தாண்டி, இருவரின் முகத்திலும் பூத்திருந்த அந்த ஒத்திசைவான புன்னகையைப் பார்த்த கமலநாதன், மனதார இருவரையும் வாழ்த்தினார். வீரலட்சுமியின் கண்களிலும் தன் மகள் நல்லபடியாக வாழ்கிறாள் என்ற நிம்மதி மின்னியது.
சடங்குகள் அனைத்தும் இனிதே முடிந்து, மதிய உணவுக்குப் பின் அனைவரும் வரவேற்பறையில் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். ரேவதி போட்டுக் கொடுத்த ஃபில்டர் காபியின் மணம் அறையில் மிதந்துகொண்டிருந்தது.
வசீகரன் தன் மாமனார் செல்வராஜிடமும், அப்பா கமலநாதனிடமும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பால்கனியில் நின்றபடி அந்தக் கேட்டட் கம்யூனிட்டியின் அடுக்கடுக்கான டவர்களை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த சுகமதி, உள்ளே ஓடி வந்தாள்.
“மாமா… எனக்கு ஒரு ஆசை!” என்று வசீகரனிடம் உரிமையோடு வந்து நின்றாள்.
பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்த வசீகரன், “சொல்லு சுகா, என்ன வேணும் உனக்கு? சென்னைல எங்க போகணும்?” என்று பெரியவனுக்கு உரித்தான வாஞ்சையோடு கேட்டான்.
“நான் இதுவரைக்கும் மெட்ரோ ட்ரெயின்ல போனதே இல்ல மாமா. டிவிலதான் பாத்துருக்கேன். நம்ம ஊருல எல்லாம் அது கிடையாதுல்ல. அதான், அதுல ஒருதடவை போகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. கூட்டிட்டுப் போறீங்களா?” என்று கண்களை விரித்துக் கேட்டாள்.
வசுமதி உடனே குறுக்கிட்டு, “ஏய், அவங்க ஆபீஸ் வேலையா எவ்ளோ பிஸியா இருக்காங்கனு உனக்குத் தெரியுமா? வந்தோமா, ஃபங்ஷனை முடிச்சோமா, ரெஸ்ட் எடுத்தோமானு இல்லாம என்னடி உனக்கு மெட்ரோ கேக்குது? அமைதியா உக்காரு,” என்று தங்கையைக் கடிந்துகொண்டாள்.
ஆனால் வசீகரன் சிரித்தபடியே வசுமதியைத் தடுத்தான்.
“ஏன் வசு அவளைத் திட்டுற? சென்னைக்கு புதுசா வந்திருக்கா, சின்னப் பொண்ணு ஆசையா கேக்குறா…”
சுகமதியிடம் திரும்பியவன் அவளிடம் உறுதியளித்தான்.
“கண்டிப்பா போலாம் சுகி. இன்னைக்கு என்ன, வியாழக்கிழமைதான? நாளைக்கும் நாளான்னைக்கும் எனக்கு கொஞ்சம் ஆபீஸ் மீட்டிங்ஸ் இருக்கு. ஆனா சண்டே நான் ஃபுல் ஃப்ரீதான். நாம எல்லாரும் சேர்ந்தே மெட்ரோல ஒரு ரவுண்ட் போயிட்டு, அப்படியே மாலுக்குப் போய் உனக்குப் புடிச்சதை வாங்கிட்டு, ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சிட்டு வரலாம். ஓகேவா?” என்றான் இயல்பாக.
சுகமதி துள்ளிக்குதித்தாள்.
“நிஜமாவா மாமா? தேங்க்ஸ் மாமா! அங்க செல்ஃபி எடுக்கலாம் தானே? எனக்கு நிறைய செல்ஃபி எடுத்து இன்ஸ்டால போடணும்!” என்று அவள் பட்டென்று சொல்ல அங்கே சிரிப்பலை.
பெரியவர்களும் வசீகரனின் இந்த ஈடுபாட்டையும், ஒரு மருமகனின் அன்பையும் பார்த்து மனநிறைவோடு சிரித்தனர். ஒரு காலத்தில் தனிமையை மட்டுமே விரும்பிய வசீகரன், இப்போது தன் குடும்பத்தாரோடு இவ்வளவு இயல்பாக ஒன்றிப்போவது வசுமதிக்குப் பெருமிதமாகவும், ஒரு கனவு போலவும் இருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமைக்காகச் சுகமதியை விட வசுமதியே அதிகம் காத்துக்கொண்டிருந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


