“கோபமும் ஆத்திரமும் கண்ணை மறைக்குறப்ப நம்மள்ல பலர் தவறவிடுறது வார்த்தைகளைத்தான். எல்லா நேரத்துலயும் வார்த்தைகள் நம்ம மனசுல இருக்குற உணர்வுகளுக்கு நியாயம் பண்ணிடாது. நீ என்னைத் துச்சமா பேசுறியா, நான் அதைவிட உன்னைத் துச்சமா பேசுவேன்கிற வீம்புதான் பல நேரங்கள்ல வார்த்தையா வெளிய வரும். ஆனா பரிதாபமான விஷயம் என்னன்னா, அந்தக் கடுமையான வார்த்தைகளை நாம மனசுல உள்ள வெறுப்போட வெளிப்பாடுனுதான் புரிஞ்சிக்கிறோம்.”
-வசுமதி
வசுமதியுடனான தனது உறவைப் பழையபடி மாற்றுவதற்காக வசீகரன் நிறைய பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று. அவனது பிரயத்தனங்கள் பலன் அளிக்கவும் செய்தன. அதனால் விளைந்த நன்மைகளில் முக்கியமானது அந்த வீட்டில் இரண்டு சமையல் என்ற நிலை மாறியதே!
ரேவதி இருவருக்கும் பொதுவான பணியாளராக மாறிப்போனார். வெகு கவனமாய் வசுமதிக்குச் சமைத்துக் கொடுப்பதாகட்டும், மற்ற வேலைகளைச் செய்வதாகட்டும், ஒரு சிறு குறைகூட அவரிடம் கண்டுபிடிக்க முடியவில்லை வசீகரனால்.
ஊதியத்தோடு மரியாதையும் கிடைத்ததால் குழந்தை பிறந்த பிற்பாடும் அவரே சமையல் மற்றும் இதர வேலைகளைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லிவிட்டார்.
சமையல் ஒன்றானதுபோல அறைகளும் ஒன்றாகிப்போனது. அதை வசுமதியே முழுமனதுடன் செய்தாள் என்பதுதான் முத்தாய்ப்பான விஷயம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
முன்பெல்லாம் ஓய்வெடுக்கும் இடமாக மட்டுமே வசீகரனுக்குத் தெரிந்த வீடு இப்போதெல்லாம் உயிர்ப்பான பகுதியாக மாறிப்போனது. வீட்டில் சத்தம் கேட்டாலே பிடிக்காது என்று முகம் சுழிப்பவன் இப்போது வசுமதிக்குப் பிடித்த மெல்லிசைப் பாடல்கள் வீட்டில் ஒலிக்காவிட்டால் ஏதோ குறைவதாக எண்ணினான்.
தனிமை விரும்பியாக இருந்தவனுக்கு இப்போது தனிமைகூட வசுமதியுடன் இருப்பதுதான் என்ற நிலை. வசுமதியும் அவனை உதாசீனப்படுத்துவதில்லை. மாறியவனின் மனதை வதைப்பது கொடூரமான செயல் என அவளுக்குத் தெரியும். அவன் தங்களின் உறவைப் பழையபடி மாற்றியமைக்கச் செய்யும் சிறு சிறு செயல்களையும் அவள் மதித்தாள் எனலாம்.
ஏனெனில் இத்திருமண வாழ்க்கையில் அவளது அதிகபட்ச எதிர்பார்ப்பே வசீகரன் தனக்காகச் சிறிதளவேனும் மெனக்கிட வேண்டும் என்பதே! அதை அவன் செயல்படுத்தியபோது ஏன் அவள் உதாசீனப்படுத்தப் போகிறாள்?
வசுமதி அவனுடன் உரசல் இருந்த காலகட்டத்தில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்க ப்ரஷாந்தியுடன் செல்வாள். அவள் இரவு ஷிப்டுக்குப் போய்விட்டால் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யக்கூடிய ஆப்-கள் அவளுக்கு உதவின.
இப்போது அதற்கான அவசியமும் இல்லாமல் போய்விட்டது. அவளும் வசீகரனும் இணைந்தே மளிகைச் சாமான்களுக்கான பட்டியல் போடுவது, சூப்பர் மார்க்கெட் போய் வாங்கி வருவது, வீட்டுக்கு வந்ததும் அவற்றை உரிய கொள்கலன்களில் போட்டுவைப்பதென அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.
மௌனத்தை விரும்புபவனுக்குப் பேசுவதற்கான அநேக வாய்ப்புகளை இந்தத் தருணங்கள் உருவாக்கிக்கொடுத்தன எனலாம்.
இதற்கிடையே ஒரு நாள் கிண்டியிலிருக்கும் சிறுவர் உயிரியல் பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசையாகக் கேட்டாள் வசுமதி. அந்த கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மென்ட்டின் குளிரூட்டப்பட்ட சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்காமல், வெட்டவெளியில் இயற்கையின் மடியில் கொஞ்ச நேரம் கழிக்க வேண்டும் என்று அவளது மனது ஏங்கியது.
அவளது வயிற்றுக்குள் இப்போதுதான் துளிர்த்திருக்கும் அந்தப் புதிய உயிர், அவளை இயற்கையோடு அதிகம் நெருங்கச் செய்திருக்க வேண்டும்.
அவள் கேட்டதும் ஞாயிறு அங்கே செல்வதற்கான திட்டத்தைப் போட்டுவிட்டு அவளை அழைத்துச் செல்லத் தயாரானான் வசீகரன். காரில் அவனருகே அமர்ந்தவளுக்கு அவன் லாவகமாகக் காரை ஓட்டும் விதம் எப்போதும்போல ஆச்சரியம்தான்.
“எனக்கும் கார் டிரைவ் பண்ணனும்னு ஆசை” என்றாள் மெதுவாய்.
காரைச் செலுத்தியவனின் கண்கள் மெல்ல அவள் பக்கம் திரும்பின.
வழக்கமாக அவனது கண்களில் குடியிருக்கும் அந்தத் தீவிரமான பார்வை, இப்போது வசுமதியின் மீது படும்போதெல்லாம் ஒரு மெல்லிய காதலோடு கனிந்து உருகின அவனது கருவிழிகள்.
காரின் முன் இருக்கையில் ஜன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி வந்த வசுமதிக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிரசவத்தால் வரும் முகஜொலிப்பை மீறி அவளைப் பிரகாசமாய்க் காட்டியது. அவள் அணிந்திருந்த தளர்வான வெளிர் நிறப் பருத்தி கவுன், அவளது தாய்மையின் சின்னமான மேடிட்ட வயிற்றை மிக மென்மையாகப் போர்த்தியிருந்தது. வசீகரன் ஆமோதிப்பாய்த் தலையாட்டியதும் சின்னதாய் முறுவல் அவளிடம்!
கார் கிண்டியை அடைந்ததும், டிக்கெட் வாங்கிக்கொண்டு இருவரும் பூங்காவிற்குள் நுழைந்தனர். சென்னையின் நெரிசலுக்கு நடுவே, ஒரு பிரம்மாண்டமான மரகதப் பந்தலைப்போல விரிந்திருந்தது அந்தப் பூங்கா. ஓங்கி வளர்ந்திருந்த பழமையான மரங்கள், சூரியனின் கதிர்களைப் பூமிக்கு வரவிடாமல் ஒரு பச்சைக் குடையைப்போலத் தடுத்து நிறுத்தியிருந்தன. காற்றில் ஈரம் கலந்த இலைகளின் வாசனை வீசியது.
கண்ணாடியால் தடுக்கப்பட்ட தடுப்புக்குள் விதவிதமான பாம்புகள் தனித்தனியே அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மான்கள், நெருப்புக்கோழி, குள்ளநரி என விதவிதமாய் விலங்குகள்! ஒரு பக்கம் குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள் என எவ்வளவு நடந்தாலும் கால்கள் சலிக்கவில்லை.
நேரம் நண்பகலைத் தொட்டது. வானத்தில் உருகிய செம்புத் திரவத்தைப்போல சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கினான். மரங்களின் அடர்த்தியையும் மீறி, தார்ச் சாலைகளில் வெயிலின் தணல் கானல் நீராகப் பிரதிபலித்தது. அப்படியொரு தகிக்கும் வேளையில், வசுமதிக்குச் சற்று அசதியாக இருக்கவே, அங்கிருந்த ஓய்வறைக்குச் செல்வதாக வசீகரனிடம் கூறிவிட்டு நடந்தாள். வசீகரன் சற்றுத் தள்ளி மரத்தடியில் இருந்த ஒரு சிமென்ட் பெஞ்சில் அவளுக்காகக் காத்திருந்தான்.
ஓய்வறையை விட்டு வெளியே வந்த வசுமதிக்கு, வெயிலின் உக்கிரம் முகத்தில் சுள்ளென்று அறைந்தது. நிழல் இல்லாத அந்தச் சிறு திறந்தவெளிப் பாதையில், வானத்திலிருந்து நெருப்புத் துண்டுகள் விழுவதைப் போல வெயில் சுட்டெரித்தது. கானல் காற்றில் அவளது மிருதுவான முகம் சிவந்து, நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. வெயிலின் தகிப்பைத் தாங்க முடியாமல், தன் ஒற்றைக் கையால் நெற்றியில் நிழல் செய்தபடி, லேசாக மூச்சிரைக்க அவள் மெல்ல நடந்து வந்தாள்.
அப்போது, பூங்காவின் செம்மண் பாதைகளில் காய்ந்த இலைகளைக் கூட்டிப் பெருக்கிக்கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மூத்த ஊழியர் ஒருவர் அவளையே உற்றுப் பார்த்தார். எதிர்ப்புறமாகக் காற்று வீசியதால், வசுமதி அணிந்திருந்த அந்தத் தளர்வான கவுன் அவளது உடலோடு லேசாக ஒட்டி, அவளது அடிவயிற்றின் அந்தச் சிறு மேட்டை, ஒரு பட்டுத் துணியால் மூடப்பட்ட மொட்டைப் போலக் காட்டிக் கொடுத்தது. அந்த அனுபவக் கண்கள் அவளது தளர்வான நடையையும், வயிற்றின் அழகிய மாற்றத்தையும் வைத்து அவள் ஒரு கர்ப்பவதி என்பதைச் சட்டெனக் கண்டுகொண்டன.
அவள் வெயிலில் தள்ளாடி வருவதைப் பார்த்ததும் பதறிய அந்த ஊழியர், தன் கையில் இருந்த துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு, அவளுக்கு நேராக விரைந்து வந்தார். தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து விசிறியபடி கவலையோடு கேட்டார்.
“என்னம்மா நீங்க? இந்த உச்சி வெயில்ல இப்படியா குடை இல்லாம தனியா வரணும்? இந்த நேரத்துல உடம்பை அஜாக்கிரதையா விடலாமா தாயி?”
அவரது குரலில் இருந்த அந்தப் பிடிவாதமான அக்கறை, வசுமதிக்குத் தன் ஊர் பெரியவர்களின் ஞாபகத்தைக் கொண்டு வந்தது.
“கார்லதானே போறோம்னு குடை எடுத்து வைக்கல…” என அவள் மெல்லச் சிரித்தபடியே நெற்றியைத் துடைத்துக்கொண்டு பதிலளித்தாள்.
மரத்தடியில் காத்திருந்த வசீகரன், ஊழியர் தன் மனைவியிடம் ஏதோ பதற்றமாகப் பேசுவதைக் கண்டு அவசரமாக அங்கே நடந்து வந்தான்.
“என்ன ஆச்சுங்க? ஏதும் பிராப்ளமா?” என்று அவன் கேட்க, அந்த ஊழியர் வசீகரனை ஏறிட்டார். அவனது தோற்றமும், மிடுக்கும் அவன் ஒரு பெரிய இடத்தில் வேலை பார்ப்பவன் என்பதைச் சொன்னாலும், அந்தப் பெரியவர் அவனிடம் ஒரு தந்தையின் கோபத்தோடு பேசத் தொடங்கினார்.
“தம்பி! நீங்க பெரிய படிப்பு படிச்சவரா இருக்கலாம். ஆனா, ஒரு பொம்பளப் புள்ளைய… அதுவும் இந்த நிலைமையில இருக்குற புள்ளைய எப்படி தம்பி வெயில்ல குடை இல்லாம தனியா விடுவீங்க? வெயில் சூடு அந்தப் புள்ளைக்குத் தாங்குமா? நிழல் மாதிரி கூடவே இருந்து பாத்துக்க வேண்டாமா?”
அந்த ஊழியர் படபடவெனக் கேட்க, வசீகரனுக்குச் சூழல் புரிந்துபோனது.
அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். வெயிலில் வாடியிருந்த அவளது முகம், காம்பை விட்டுப் பிரிந்த செம்பருத்திப் பூ வாடி நிறம் மங்குவதைப் போலிருந்தது. இத்தனை நாளாக அவளைத் தன் வாழ்க்கையில் சற்று அஜாக்கிரதையாகக் கையாண்ட அத்தனை தருணங்களும், அந்த எளிய மனிதரின் ஒற்றைக் கேள்வியில் அவனுக்குள் விஸ்வரூபம் எடுத்து நின்றன.
பெரிய பெரிய சிக்கல்களுக்கெல்லாம் நொடியில் தீர்வு காணும் அவனுக்கு, தன் மனைவியின் சின்னஞ்சிறிய தேவைகளைக் கூடக் கவனிக்கத் தவறிய தனது அஜாக்கிரதை ஒரு பெரும் குற்ற உணர்வாக உறைத்தது. மற்றவர்களுக்கு இது புரியுமோ என்னவோ? அவனுக்கு இது மாபெரும் தவறுதான்.
அவன் மறுவார்த்தை பேசவில்லை.
“இங்கேயே இரு வசு… இதோ வந்துடுறேன்,” என்று மட்டும் சொல்லிவிட்டு, எதைப் பற்றியும் யோசிக்காமல் பூங்காவின் நுழைவாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.
வசுமதி வியப்போடு அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள். பூங்கா ஊழியர் அவளிடம், “கோவிச்சுக்காதம்மா… வயசான காலத்துல என் புள்ளை மாதிரி நினைச்சு உரிமையில சொல்லிட்டேன்,” என்றார்.
“இல்லீங்கய்யா. நீங்க என் நல்லதுக்குத்தானே சொன்னீங்க,” என்று புன்னகைத்தாள் வசுமதி.
சரியாக ஐந்து நிமிடங்களில் வசீகரன் திரும்பி வந்தான். அவனது கட்டமஸ்தான நெற்றியிலும் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. ஆனால், அவனது கைகளில் இப்போது ஒரு பெரிய குடை இருந்தது. பூங்காவின் வெளியே இருந்த கடைகளில் எப்படியோ தேடிப் பிடித்து ஒரு குடையை அவசரமாக வாங்கி வந்திருந்தான்.
அவன் வசுமதியின் அருகில் வந்து, சட்டென அந்தக் குடையை விரித்தான். அதுவரை அவளது முகத்தைச் சுட்டெரித்துக்கொண்டிருந்த சூரிய வெளிச்சம் மறைந்து, ஒரு குளிர்ந்த நிழல் அவளை முழுமையாக ஆட்கொண்டது. கோடை மழையில் பூமி குளிர மேகம் சூழ்வதைப் போல, அவனது கைகளில் விரிந்த குடை அவளுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.
வசீகரன் குடையைத் தன் வலது கையில் பிடித்தபடி, இடது கையால் அவளது தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவளது வயிற்றுக்கும் சேர்த்து அந்த நிழல் முழுமையாகப் படுவதை உறுதிசெய்துகொண்டான். பின்னர் அந்த ஊழியரைப் பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ் ஐயா… இனிமே நான் இவளை ரொம்பப் பத்திரமா பாத்துக்கிறேன்,” என்று தன் தவறையுணர்ந்த ஒரு மெல்லிய குரலில் கூறினான். அந்தப் பெரியவர் திருப்தியோடு தலையசைத்துவிட்டு நகர்ந்தார்.
இருவரும் மெல்ல நடப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினர். மேலே வெயில் இன்னும் உக்கிரமாகத்தான் அடித்துக்கொண்டிருந்தது. ஆனால், வசீகரன் பிடித்திருந்த அந்த ஒற்றைக் குடையின் கீழ், வசுமதியின் உலகம் முற்றிலும் குளிர்ந்துபோயிருந்தது. இத்தனை மாதங்களாகத் தங்களுக்குள் இருந்த மௌனமும், கணவனின் அஜாக்கிரதையும் முழுமையாக உருகி, அவனது கைகளில் இருந்த குடை வழியாகத் தன் மீது பொழியும் காதலாக வசுமதி அதை உணர்ந்தாள்.
தார்ச் சாலையில் அவர்களின் நிழல்கள் ஒன்றாக இணைந்து விழுந்தபோது, மெய்யாகவே அவளுக்கு மகிழ்ச்சிதான்.
“ரொம்பப் பசிக்குது வசீ!”
அங்கேயே சிற்றுண்டிகள், வெரைட்டி ரைஸ் எல்லாம் விற்பனைக்கு இருந்தது. வசுமதி அவன் சொல்லச் சொல்லக் கேளாமல் காரசாரமாய் பிரியாணி, மிளகாய் பஜ்ஜி என வெளுத்து வாங்கினாள்.
குடும்பத்தோடு வந்திருந்த பெண்மணி ஒருவர் அவளைக் கவனித்துவிட்டு “இப்ப நாக்கு விதவிதமா சாப்பிடணும்னு தூண்டும். நீயும் சாப்பிட்டுடுவ. ஆனா வயித்துல இருக்குற புள்ளைக்கு இவ்ளோ காரம் ஆகாது பொண்ணே! வீட்டுக்குப் போனதும் கேரட் ஜூஸ் போட்டுக் குடி. அது ரொம்ப நல்லது குழந்தைக்கு. இப்பனு இல்ல, எப்ப காரம் அதிகமா சாப்பிட்டாலும் உடனே கேரட்டை ஜூஸ் போட்டுக்குக் குடிச்சிடு” என்றார் அன்போடு.
வசுமதியும் தலையாட்டி வைத்தாள். அவளருகே அமர்ந்து யாரிடமோ மொபைலில் பேசியபடி வெறும் சாண்ட்விச்சைக் கடித்து மென்ற வசீகரன் அன்று மதியம் வீடு திரும்பியதும் செய்த முதல் காரியமே கேரட் ஜூஸ் போட்டதுதான்.
யூடியூப் வீடியோவில் செஃப் தீனா சொன்னதுபோல கேரட் துண்டுகள், கொத்தமல்லித் தழைகளின் தண்டுகளை மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டி மனைவிக்காக எடுத்துவந்து அவன் நீட்டியதும் வசுமதியின் கண்களில் மெல்லிய மலர்ச்சி.
“அந்த ஆன்ட்டி பேசுனதைக் கேட்டீங்களா?”
“ஆமா! ஜூஸ் எப்பிடி இருக்கு?”
ஒரு மிடறு அருந்தியவள் “ம்ம்! நல்லா இருக்கு. ரெஃப்ரெஷிங்கா ஃபீல் ஆகுது. நீங்க குடிச்சுப் பாருங்க” என அவனது வாயருகே டம்ளரைக் கொண்டு செல்லவும் அவசரமாய்ப் பின்னடைந்தான் வசீகரன்.
அதில் வசுமதியின் முகம் இறுகிப்போனது.
“ஏன்? நான் எச்சில் வெச்சதால குடிக்கப் பிடிக்கலையா? அவ்ளோ சுத்தம்?” என அவள் எழுந்து செல்ல முற்பட சட்டென அவளது கையைப் பற்றித் தன்னருகே அமர வைத்தான். வசுமதியின் கையிலிருந்த ஜூஸ் டம்ளரை வாங்கியவன் ஒரு மிடறு அருந்தவும் செய்தான். பின்னர் அவளது கையில் திணித்தான்.
“நீ காரம் நிறைய சாப்பிட்டிருக்க. இது உனக்கும் பாப்பாக்கும் நான் போட்ட ஜூஸ். அதான் நான் குடிக்கமாட்டேன்னு சொன்னேன். உன் எச்சில் ஒண்ணும் எனக்கு மோசமில்ல. எச்சில் மோசம்னு நினைக்குறவன் எப்பிடிடி தினமும் உனக்கு குட் நைட் கிஸ் குடுப்பேன்?”
நிதானமாக அவன் கேட்ட விதத்தில் வசுமதியின் ஐயமும் கோபமும் பறந்துபோயின. அதே நேரம் அவன் குறிப்பு காட்டிய ‘குட் நைட் கிஸ்’ என்ற ஒரு வார்த்தை அவளை நாணத்தில் மூழ்கச் செய்யப் போதுமானதாய்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


