யுவராணியின் சென்னை விஜயத்துக்குப் பிறகு அவருக்கு நல்லதொரு நட்பாக மாறிப்போனார் மலர்விழி.
“நம்ம பசங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், நாளைக்கே அவங்க விருப்பத்தைச் சொல்லி வாழ்க்கையில இணைஞ்சாலும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப் மாறப்போறதில்ல” என்று சொன்னவரை யுவராணிக்கும் பிடித்துப்போனது.
திருமணத்திற்கு பிறகு முதலில் பெண்கள் இழப்பது அவர்களுடைய நட்பை. அவ்வாறு இழந்த நட்பை மலர்விழி மூலம் சமன் செய்துகொண்டார் யுவராணி.
பெரியவர்களின் தோழமையோடு இளையவர்களின் உறவும் சீராகப் போய்க்கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் அடிக்கடி ஆதித்யனின் ஃபீனிக்ஸ் நிறுவனத்தில் அடிக்கடி நந்தினியைப் பார்க்க முடிந்தது. அவர்களின் நிறுவனத்திற்காகவும், ஆதித்யனின் புகைப்படக்கலை பற்றிய யூடியூப் சேனலுக்காகவும் அடிக்கடி வீடியோக்களில் தலைகாட்டினாள் அவள்.
“மத்த இன்ஃப்ளூயன்சர்ஸ், மாடல்சை விட உன் கூட ஒர்க் பண்ண எனக்குப் பிடிச்சிருக்கு நந்தினி” என்பான் ஆதித்யன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆதித்யனின் வீடியோக்களைப் போல நந்தினியும் அவனது சப்ஸ்கிரைபர்கள் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஃபாலோயர்களிடம் பழக்கமான முகமாகிப்போனாள்.
அவ்வபோது கோவில்களில், திரையரங்குகளில், மால்களில் ஆதித்யனோடு அவளைப் பார்க்கும் இளசுகள் செல்ஃபி எடுக்காமல் விடுவதேயில்லை.
இதை எல்லாம் தோழியிடம் பூரிப்புடன் நந்தினி பகிர்ந்துகொள்வாள். ஆதித்யனைப் பற்றி முக்தாவிற்கும் நல்லெண்ணமே.
குமரனைக் காதலித்த சமயத்தில் முக்தாவும் நந்தினியும் இப்போது போலவே ஒரே பி.ஜியில் மைசூருவில் தங்கியிருந்தார்கள். அது அவர்கள் பணிக்குச் சேர்ந்த ஆரம்பக்கட்டம்.
குமரன் வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்றால் TOEFL (Test of English as a Foreign Language) தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதற்கு அவன் படிப்பதற்கான செலவை நந்தினியே ஏற்றிருந்தாள்.
மாதாமாதம் அன்னைக்குப் பணம் அனுப்புவது போல குமரனுக்கும் ஒரு குறிப்பிட்டத் தொகையை அனுப்புவாள்.
தேர்வில் தேர்ச்சியடைந்து அயல்நாட்டு பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பித்த குமரன், ஜெர்மனியிலிருக்கும் பிரபல பல்கலைகழகம் ஒன்றில் பொறியியல் மேற்படிப்புக்கு இடம் கிடைத்ததும் விசாவுக்காகவும், வெளிநாட்டில் சென்று தங்குவதற்கான அடிப்படை செலவுகளுக்காகவும் நந்தினியையே சார்ந்திருந்தான்.
முக்தாவுக்கு ஏனோ இதில் பிடித்தமில்லை.
“அவன் ஆம்பளை. உழைச்சு சம்பாதிச்சுப் படிக்கமாட்டானா? நீ உனக்கும் கொஞ்சம் சேர்த்து வை நந்து” என்பாள்.
அப்போதெல்லாம் நந்தினிக்கு அவன்மீது வானளவு நம்பிக்கை.
“எனக்குனு எதுக்குச் சேர்த்து வைக்கணும்? குமரன் என்னைப் பார்த்துப்பான் முக்தா” என்று சொல்பவளுக்கு உலகமே பணத்தில் பின்னால் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் புரியவைக்க முயன்று அப்போது தோற்றே போனாள் முக்தா.
அவனது துரோகத்தைப் பற்றி நந்தினி சொன்னதும் முக்தாவுக்குக் குமரனை வெட்டிப்போடும் அளவுக்கு வெறி. அதே நேரம் அட்டைப்பூச்சி போல தோழியை உறிஞ்சிக்கொண்டிருந்த ஒட்டுண்ணி தொலைந்தது என்ற சிறு நிம்மதியும் கூட.
எப்போது ஆதித்யனை முக்தாவிடம் நந்தினி அறிமுகப்படுத்தி வைத்தாளோ அப்போதிருந்தே அவன் மீது முக்தாவுக்கு நன்மதிப்புதான்.
யூடியூப் வீடியோக்களில் இறுக்கமே உருவாக வருபவனை அடிக்கடி அவள் பார்த்ததுண்டு. தனது தோழியைத் தற்கொலையிலிருந்து காப்பாற்றி தன்னம்பிக்கை அளித்து, அவளிடம் மனதைத் தொலைத்து காதலுக்காகக் காத்திருப்பவன் மீது மரியாதையும் கூடிப்போனது முக்தாவுக்கு.
இந்நிலையில் டெக்னோசிஸ் நிறுவனத்திலிருந்து பதினைந்து நாட்கள் தொழில்முறை பயணமாக முக்தாவை அமெரிக்காவுக்குப் போகச் சொல்லியிருந்தார்கள்.
அவர்கள் அங்குள்ள கார்பரேட் நிறுவனம் ஒன்றிற்காக வடிவமைத்த மென்பொருளில் ஒரு பிரச்சனை. அதைச் சரிசெய்ய முக்தாவே நேரில் போகவேண்டிய சூழல்.
பயணத்திற்கான ஏற்பாடு முடிந்து விமானம் ஏறும் தினத்தன்று அவளை வழியனுப்ப வந்திருந்தாள் நந்தினி.
அது வாரயிறுதி என்பதால் விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே தோழியோடு வந்து பேசிப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தாள் அவள்.
அப்போதுதான் அச்சம்பவம் நடந்தேறியது.
வாடகை கேப் ஒன்றில் வினிதாவை அணைத்தபடி வந்து இறங்கினான் குமரன்.
அவனும் அவளுமாகச் சேர்ந்து உடைமைகளை கேபில் இருந்து எடுத்து வைத்தார்கள்.
ஏதோ காதல் பறவைகள் போல அவ்வளவு அன்னியோன்யம் அவர்களுக்குள். குமரன் வினிதாவை ஒரு பையைக் கூட தூக்கவிடவில்லை.
“விடு பேபி. நான் தூக்கிக்கிறேன். நீ இந்தச் சூட்கேஸை மட்டும் உருட்டிட்டு வா. உனக்குக் கை வலிக்கும்”
இதே விமானநிலையத்தில் அவனது பெட்டிப் படுக்கைகளை கர்வத்தோடு தூக்கி வந்த நந்தினியை இக்காட்சி வதைத்துவிட்டது.
முக்தாவுக்கோ அவனைப் பாய்ந்து போய் அடித்து நொறுக்கும் அளவுக்குக் கோபம்.
ஜெர்மனிக்குச் செல்லும் முன்னர் இவனை விமானநிலையத்தில் வழியனுப்பி வைக்க, நந்தினி மைசூருவிலிருந்து அரக்க பறக்க வந்தபோது முக்தாவும் அவளோடு வந்திருந்தாள். அப்போது இதே குமரன் நந்தினியை வார்த்தைக்கு வார்த்தை ‘டி’ போட்டதும், அவளது ஆங்கிலத்தைக் கேலி செய்ததும் முக்தாவால் மறக்க முடியாத சம்பவங்கள்.
இன்றோ பணக்கார பெண்டாட்டிக்குக் கூஜா தூக்காதக் குறை.
இரு பெண்களும் வெறிப்பது குமரனுக்கு டெலிபதியில் புரிந்ததோ என்னவோ டெர்மினலுக்குள் போகாமல் நின்றவன் திரும்பிப் பார்த்தான். அவனது மனைவியும்தான்.
அங்கே கோபத்தோடு முக்தா அமர்ந்திருப்பதும், அவளருகே கலங்கிப்போன விழிகளோடு நந்தினி இருப்பதையும் பார்த்தவனுக்கு எவ்விதக் குற்றவுணர்ச்சியும் எழவில்லை என்றாலும் சிறிதே தடுமாறினான்.
வினிதாவுக்கு நந்தினியை ஒரே ஊர்க்காரி என்றளவிலும், குமரனுக்கு உறவுக்காரி என்ற முறையிலும் தெரியும். அவளின் உதவியால் தான் குமரன் வாழ்க்கையில் உயர்ந்தான், அவனது குடும்பத்தின் பொருளாதாரம் உயர்ந்தது என்பதெல்லாம் அவளிடமிருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்ட உண்மைகள்.
அதனால் நந்தினியைக் காட்டி “உங்க அத்தைமக நந்தினி தானே?” என்று வெள்ளந்தியாக அவள் கேட்க
“அவளா? அவ எதுக்கு ஏர்போர்ட் வரப்போறா பேபி? நீ வா. நம்ம போகலாம்” என்று மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்வதில் முனைப்பு காட்டினான் குமரன்.
“ஃப்ளைட்டுக்கு இன்னும் டைம் இருக்குங்க. அதுக்கு முன்னாடி ஏன் போகணும்? செக்கிங் எல்லாம் ஒன் ஹவருக்கு முன்னாடி பண்ணிக்கலாம்”
நந்தினியும் முக்தாவும் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிர் இருக்கையில் கணவனோடு அமர்ந்தவள் மொபைலை நோண்ட ஆரம்பிக்க, குமரனுக்கோ இருப்பு கொள்ளவில்லை.
முக்தா கடுப்போடு மொபைலை எடுத்து ஆதித்யனின் எண்ணுக்கு அழைத்தாள்.
“நீங்க எங்க இருக்கிங்க ஆதி?”
“ஹே பானர்ஜி! உனக்கு இன்னிக்கு ஃப்ளைட் தானே? ஏர்போர்ட் போயிட்டியா? நான் பக்கத்துல திரிச்சூலம் கிரிக்கெட் க்ரவுண்ட்ல இருக்கேன்”
“உடனே ஏர்போர்ட்டுக்கு வாங்க ஆதி”
“எதுக்கு?”
“நந்தினிக்கு இப்ப உங்க துணை தேவை. வரமாட்டிங்களா?”
முக்தா கத்தியதில் அடுத்தச் சில நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்தான் ஆதித்யன்.
“ஆதிய எதுக்குடி வரச் சொன்ன?” என்று மூக்கால் முகாரி பாடிக்கொண்டிருந்த நந்தினி தங்கள் எதிரே முறைப்புடன் வந்து நின்றவனைக் கண்டதும் கப்சிப்பானாள்.
“நான் இங்க வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை?”
சும்மாவே அவனது குரல் இடிமுழக்கம்தான். இப்போது இறுக்கமாக வேறு ஒலித்ததில் இரு பெண்களோடு சேர்ந்து சுற்றியிருந்தவர்களும் துள்ளி குதிக்காதக் குறை!
“ஆதி!”
மெதுவாகப் பேசு எனச் சைகை காட்டியவளை அலட்சியம் செய்தவன் அவளது கலங்கி சிவந்த விழிகளை அலட்சியப்படுத்தவில்லை.
“என்னாச்சு பானர்ஜி? எதுக்கு இவ அழுதிருக்கா?” என முக்தாவிடம் விசாரிக்க அவளோ எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த குமரனைக் காட்டினாள்.
“யார் அவன்?”
“குமரன். அவன் பக்கத்துல இருக்குறது அவனோட ஒய்ப்”
முக்தா சொன்னதுதான் தாமதம் சட்டையின் ஸ்லீவை மடித்துவிட்டவன் குமரனை நோக்கி நடக்க தொடங்கினான்.
நந்தினி பதறியடித்து எழுந்து அவனது முழங்கையைப் பற்றினாள்.
“அவன் கிட்ட பேசவேண்டாம் ஆதி”
“இன்னும் உனக்கு அவன் மேல கரிசனம் இருக்குல்ல?”
கடுமையாய் ஒலித்தது அவனது குரல். முகம் சுண்டிப்போனது நந்தினிக்கு. அதைப் பற்றி எல்லாம் ஆதித்யன் கவலைப்படவில்லை.
அவளது கையைப் பற்றி அழைத்துச் சென்றவன் நேரே குமரனின் முன்னே போய் நின்றான்.
தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவன் தனது பார்வையில் இரு ஜோடி கால்களைக் கண்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
வினிதாவோ நெருக்கமாகப் பார்த்ததும் நந்தினியை அடையாளம் கண்டுகொண்டு புன்னகைத்தாள்.
அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று நந்தினி பரிதவிக்கையில் ஆதித்யன் வினிதாவிடம் பேச ஆரம்பித்தான்.
“நீங்க குமரனோட ஒய்ப், ரைட்?”
அவள் குழப்பத்தோடு எழுந்தாள்.
“ஆமா… நீங்க?”
ஆதித்யன் தன்னருகே நின்றிருந்த நந்தினியின் தோளை இறுக அணைத்துக்கொண்டான்.
“நான் ஆதித்யன். நந்தினியும் நானும் லவ் பண்ணுறோம்.”
“ஓஹ்! வாழ்த்துகள்” இப்போதும் வினிதாவுக்கு இவன் ஏன் தன்னிடம் பேசுகிறான் என்பது புரியவில்லை.
“உங்க ஹஸ்பெண்ட் வாங்குன கடனை எப்ப அடைக்குறதா இருக்கிறிங்க?”
ஆதித்யனின் கேள்வியில் பொறி கலங்கி போனான் குமரன்.
“கடனா? என்ன கடன்? என்னங்க சொல்லுறார் இவரு?”
வினிதா அவனை உலுக்கவும் “கட…னா… அப்பிடி எதுவும்…” எனத் திணறினான்.
ஆதித்யன் அவனைக் கேலியாகப் பார்த்தான்.
“ஓஹ்! சாருக்கு மறந்துடுச்சு போல. இவர் ஃபாரீன் போய் படிக்குறதுக்காக நந்தினி கிட்ட நிறைய பணம் கடனா வாங்குனார். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லிருப்பார்னு நினைச்சேன். ஏன் குமரன், உங்க ஒய்ப் கிட்ட எதையும் சொல்லலையா?”
திருடனுக்குத் தேள் கொட்டியது போல விழித்தான் அவன்.
“கடனா? இவரோட அம்மா நகைய வித்து ஃபாரீன் அனுப்புனதா சொன்னார்” – வினிதா.
“அப்பிடியா சொன்னிங்க குமரன்? உங்களுக்காகச் செலவு பண்ணுன ஒவ்வொரு ரூபாய்க்கும் நந்தினி கணக்கு வச்சிருக்கா… பில் கூட இருக்கு… இவரோட பேங்க் அக்கவுண்டுக்குப் பணம் அனுப்புன ட்ரான்சக்சன் சம்மரிய செக் பண்ணிட்டு எப்ப பணத்தைத் திருப்பித் தருவிங்கனு எனக்கு வாட்சப்ல மெசேஜ் பண்ணுறிங்களா? என்ன இருந்தாலும் நந்தினியோட சொந்தக்காரரா போயிட்டார்… இல்லனா போலீஸ் மூலமா பணத்தை வாங்கிருப்பேன்… நீங்க அவ்ளோ தூரம் போகவிடமாட்டிங்கனு நம்புறேன்… என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க”
ஆதித்யனின் குரலுக்கு ஒரு சக்தி உண்டு. அவன் கட்டளையிடும் தொனியில் பேச ஆரம்பித்தால் எதிராளி அதற்கு அடிபணிந்தே தீருவார். வினிதா மட்டும் எம்மாத்திரம்?
“சரிங்கண்ணா” என்றவள் பின்னர் தடுமாற்றத்துடன் “போலீஸ் எல்லாம் வேண்டாம்ணா. எங்க ஊர்ல எங்கப்பாக்குனு ஒரு பெயர் இருக்கு. அது கெட்டுடக்கூடாது. நான் பேங்க் ஸ்டேட்மெண்ட் செக் பண்ணிட்டு நந்தினியோட அக்கவுண்டுக்குப் பணத்தை அனுப்பிடுறேன். முடியாதபட்சத்துல அப்பா மூலமா நந்தினியோட அம்மா கிட்ட கேஷா குடுத்துடுறேன். இவரால நடந்த சிரமத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றாள்.
நந்தினி அவளையும் குமரனையும் மாறி மாறி பார்த்தாள்.
‘இந்தப் பெண் மிகவும் நல்லவளாக இருக்கிறாள். ஆனால் குமரன் இவளையும் ஏய்த்துப் பிழைக்க எண்ணுவானே!’
அதை எல்லாம் தாண்டி அவள் மனம் குமரனின் பயந்த தோற்றத்தில் குளிர்ந்து போயிருந்தது. தனக்குச் செய்த துரோகத்தைப் பற்றி கடுகளவு குற்றவுணர்ச்சி இல்லாமல் அவன் உலாவியதே அவளுக்கு இத்தனை நாட்கள் பெரும் மனக்குறையாக இருந்தது.
சில நிமிடங்களில் அவனைப் பயம் கொள்ள வைத்து, நடுங்க வைத்து, ‘ஐயோ நம் குட்டு உடைந்துவிடுமோ’ எனப் பரிதவிக்க வைத்து ஆதித்யன் தனக்குப் பதிலாக அவனைப் பழி தீர்த்த விதம் அவளது இத்தனை மாத ஆதங்கத்தைத் துடைத்தெறிந்தது.
நந்தினியின் முகத்திலிருந்த கலக்கம் தீர்ந்ததைக் கவனித்தபடியே குமரனின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனது காதருகே குனிந்தான் ஆதித்யன்.
“காதல்ங்கிற பேருல நீ நந்தினிக்குச் செஞ்ச துரோகத்தை உன் ஒய்ப் கிட்ட சொல்லுறதுக்கு ஒரு நிமிசம் ஆகாது. ஆனா நான் சொல்லமாட்டேன். ஒரு பைசா மிச்சமில்லாம நந்தினியோட காசு திரும்ப வரணும். வரலனா உன்னோட ஃப்ராடுத்தனத்தை உன் மாமனார் கிட்ட எடுத்துட்டுப்போவேன். நந்தினிக்குச் செஞ்ச துரோகத்தை நினைச்சு ஒவ்வொரு நாளும் நீ பயந்துக்கிட்டே வாழணும்”
அவன் பேச பேச குமரனின் முகத்தில் பயத்தின் ரேகைகள் படர்ந்தன. வேர்த்து வழிந்தவனின் சட்டையை விடுவித்தான் ஆதித்யன்.
“ஹேப்பி ஜர்னி”
வினிதாவிடம் சொல்லிவிட்டு நந்தினியோடு முக்தா அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்துவிட்டான்.
“என்ன சொல்லுறான் அந்த ஃப்ராட்?” – முக்தா.
“நந்தினி கிட்ட சுரண்டுன ஒவ்வொரு ரூபாயும் திரும்ப வரணும். இல்லனா அவன் செஞ்சதை அவனோட மாமனார் கிட்ட சொல்லுவேன்னு மிரட்டி வச்சிருக்கேன். அவனோட ஒய்ப் நல்லப்பொண்ணா இருக்கு. கண்டிப்பா நந்தினி அவனுக்குச் செலவளிச்ச பணம் திரும்ப வந்துடும்”
நிதானமாகக் கூறினான் ஆதித்யன்.
“அவனை நாலு அறை அறைவிங்கனு எதிர்பார்த்தேன்” முக்தா ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கினாள்.
ஆதித்யன் நந்தினியைத் தோளோடு அணைத்தபடி சிரித்தான்.
“அவன் எனக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்கான். எனக்கு நந்தினி கிடைக்குறதுக்கு ஒரு வகையில அவனும் காரணமா போயிட்டான் பானர்ஜி. அதுக்காகக் கொஞ்சம் கருணை காட்டிருக்கேன். ஆனா ஒன்னு, வாழ்நாள் முழுக்க அவன் செஞ்ச கேவலமான வேலை பொண்டாட்டிக்கும் மாமனாருக்கும் தெரிஞ்சிடுமோனு பயந்து வாழணும். இதுதான் பெரிய தண்டனை”
ஆதித்யனின் பேச்சில் முக்தாவின் மனம் நிறைந்தது.
அவளை விமானம் ஏற்றிவிட்டு நந்தினியைத் தனது காரில் அழைத்துக்கொண்டு கிளம்பினான் ஆதித்யன். பயணம் முழுவதும் அவனைப் பார்ப்பதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்த நந்தினியின் மனம் சொல்லவொண்ணா உணர்வில் ஆழ்ந்திருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


