பரந்து விரிந்த நீலவானின் பின்னணியில் கம்பீரத்தை உடுத்திக்கொண்டு நின்றது தென்காசி காசிவிஸ்வநாதர் – உலகம்மன் கோவிலின் இராஜகோபுரம்.
கழுத்தை உயர்த்தி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான் நெடுநெடுவென வளர்ந்திருந்த வாலிபன் ஒருவன். பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்பு போல அவன் கழுத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தது கருப்பு நிற பெரிய ஸ்ட்ராபில் இணைந்திருந்த சோனி ஏ6700 கேமரா.
“உஃப்” என்றபடி நெற்றியில் பூத்திருந்த வேர்வையை வழிந்தெறிந்தவன் தன்னுடன் வந்த மூன்று தோழமைகளைப் பார்த்தான்.
அவர்களோ சற்று தூரத்தில் தள்ளுவண்டியில் விற்றுக்கொண்டிருந்த மொறுமொறு உளுந்தவடையை சட்டினி தொட்டுச் சுவைத்துக்கொண்டிருந்த இளம்பெண்ணொருத்தியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
“அடேய் இங்க திரும்புங்கடா” அந்த வாலிபனின் அதட்டலில் அந்த மூவரின் தலைகளும் அவன் பக்கம் திரும்பின.
“இன்ஸ்டால ஃபேமஸான இன்ஃப்ளூயன்சர்னு சொன்னதால தான் இந்தப் பொண்ணை வச்சு ஃபோட்டோஷூட் எடுக்க நான் ஒத்துக்கிட்டேன், வந்ததுல இருந்து இவ பண்ணுற அலட்டல் ரொம்ப ஓவரா இருக்கு. ராஜகோபுரத்தைப் பாத்துக்கிட்டே நடந்து கோவிலுக்குள்ள போற ஷாட் இப்ப எடுத்தா தான் நல்லா இருக்கும். இவ எப்ப வடைய முழுங்கி முடிக்க? நான் எப்ப ஷூட் பண்ண?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்த மூவரில் முதலில் அவளுக்கு ஆதரவாகப் பேச வந்தான் ஒருவன். பெயர் தருண்.
“இந்தப் பொண்ணு கூட மட்டும் ஷூட் பண்ணுனோம்னா நம்ம எங்கயோ போயிடுவோம். புரிஞ்சிக்க தல. கோவப்படாத”
அவனைத் தொடர்ந்து மகேஷ் என்பவனும், மூவரில் எஞ்சியிருந்த ஒரே ஒரு பெண்ணான பவித்ராவும் நெடியவனைச் சமாதானம் செய்ய எத்தனிக்க நல்லவேளையாக உளுந்தவடைகளை உண்ட மகிழ்ச்சியில் ஏப்பம் விட்டபடி அங்கே வந்து நின்றாள் இன்ஸ்டாக்ராம் பிரபலமான அங்கிதா.
“ஹாய் கய்ஸ்! நான் பணம் எடுத்துட்டு வரல. அவர் கிட்ட ஜிபே இல்லையாம்… யாராச்சும் குடுத்திடுறிங்களா?” என்று கேட்டு நெடியவனின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கினாள் அந்த அங்கிதா.
அவன் வாய் திறப்பதற்குள் தருண் பர்சோடு தள்ளுவண்டிக்கடையை நோக்கி ஓடிவிட பெருமூச்சு விட்டுத் தனது கோபத்தைத் தணித்த நெடியவன் அங்கிதாவுக்கு வீடியோ எடுக்கப்போகிற கோணத்தை விளக்க ஆரம்பித்தான்.
“நீ இப்பிடியே நடந்து கோவிலுக்குள்ள போகணும்… நான் பின்னாடி இருந்து தான் ஷூட் பண்ணுவேன். உன் தலை கோபுரத்தை நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமா உயரணும். அப்பிடியே ரவுண்ட் அடிச்சு உன் முகத்துல வந்து கேமரா நிக்கும். அந்த நேரத்துல உன் கண்ணுல பக்தி தெரியணும். கோபுரத்தோட சிற்பத்தை நீ ரசிக்கிற மாதிரி ஹிப் லெவல் ஷாட் ஒன்னு எடுத்ததும் கோவிலுக்குள்ள போயிடலாம். ஓ.கே, நான் சொன்னது புரிஞ்சுதுதானே?”
விளக்கமாகச் சொன்னவன் கேமராவில் அங்கிதா நடப்பதை வீடியோவாக்க ஆரம்பித்தான்.
ஆனால் அவன் எதிர்பார்த்த பாவனைகளை அங்கிதா தரவில்லை.
“எம்மா! புடவையை வச்சு தரைய பெருக்கிட்டுப் போகச் சொல்லலை. லாவகமா அந்த முந்தானையை காத்துல பறக்கவிட்டு முன்ன இழுத்து கைக்குள்ள வச்சுக்க”
“க்ராஜுவலா தலை உயர்ந்து கோபுரத்தைப் பாக்கணும். நீ என்ன வெடுக்வெடுக்னு தூக்குற?”
“உன் கண்ணுல பக்தி தெரியணும்”
“இவ்ளோ சிரிப்பு வேணாம்… லைட்டா உதடு மட்டும் வளைய சின்னதா சிரிக்கணும்”
அவனும் போராடிப் பார்த்துவிட்டான். அவன் எதிர்பார்த்தது போல வீடியோ வரவில்லை. அங்கிதாவுக்கும் அவன் சொன்னதைச் செய்யத் தெரியவில்லை.
ஒரு போட்டோஷூட் மற்றும் வீடியோ படப்பிடிப்புக்குச் சுளையாக இருபத்தைந்தாயிரம் வாங்கியிருந்தாள். போதாக்குறைக்கு பயணச்செலவு, தங்குமிடச்செலவு, உணவு, இதோ இப்போது விழுங்கினாளே பதினைந்து உளுந்தவடைகள் இதுபோல அவ்வபோது அரைப்பதற்கு என அனைத்துச் செலவுகளும் இந்த நால்வரின் தலையில்தான்!
அவளிடம் போராடிப் பார்த்துச் சோர்ந்துவிட்டான் அந்த நெடியவன்.
“ரிலாக்ஸ் ஏ.கே. நாம வேணும்னா இன்னொரு தடவை ட்ரை பண்ணலாம்” என்று அங்கிதா சொல்ல
“நோ வே! நீ எக்ஸ்ப்ரசன்னா கிலோ என்ன விலைனு கேக்குற ஆளா இருக்க. எல்லாம் இவனுங்களைச் சொல்லணும். நீ இன்ஸ்டாக்ராமின் கயாடு லோஹர்னு சொல்லி என்னை ப்ரெய்ன் வாஷ் பண்ணிட்டானுங்க. நீ இந்த ஷூட்டுக்கு செட் ஆகமாட்ட. கிளம்பு” என்று படபடத்தான் இவ்வளவு நேரம் நெடியவன் நம்மால் அழைக்கப்பட்ட இந்தக் கதையின் நாயகனான ஏ.கே என்ற ஆதித்யன்.
“வாட்? இங்க இருந்து நான் எப்பிடி சென்னைக்குப் போவேன்?” என அங்கிதா குழந்தை போல கேட்க
“இப்பிடியே பொடிநடையா நடந்தனா தென்காசி பஸ் ஸ்டாண்ட் வரும். அதோ அப்பிடியே போய் ஆட்டோ பிடிச்சா தென்காசி ரயில்வே ஸ்டேசன்ல இறங்கிடலாம். எது வசதியோ அப்பிடி போ. எங்களை விட்டுரு தாயே” என்று கையெடுத்துக் கும்பிடாதக் குறையாகச் சொன்னான் அவன்.
உடனே அங்கிதாவின் பார்வை தருண், மகேஷ், பவித்ராவின் பக்கம் கடுப்போடு பாய்ந்தது.
“அங்க என்ன லுக்கு?” கண் முன்னே ஆதித்யனின் கை சொடக்கிடவும்
“நான் பணம் கொண்டு வரல ஏ.கே” என்று கொஞ்சினாள் அங்கிதா.
தலையிலடித்துக்கொண்டவன் “டேய் குடுத்து அனுப்பிவிடுடா” என்று தருணிடம் சைகை காட்ட அவனும் பணத்தை நீட்டினான்.
“ஹோட்டலை நைட் தானே செக்கவுட் பண்ணுவிங்க கய்ஸ்”
அங்கிதா கேட்கவும் மூவரும் அவளை உஷ்ணமாகப் பார்த்தார்கள்.
“அ… அதுக்கில்ல” என்று சமாளிக்கப் பார்த்தவளை முறைத்தே இடத்தைக் காலி செய்ய வைத்தான் ஆதித்யன்.
நால்வரும் எதற்காக தென்காசிக்கு வந்தார்களோ அக்காரியமே நடக்காமல் போய்விடவும் சோர்ந்து போய் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்னே நின்றார்கள்.
அந்நேரத்தில் அவர்களைக் கடந்து ஆலயத்தை நோக்கி சென்றாள் ஒரு இளம்பெண்.
அரக்கு நிற மங்கலகிரி காட்டன் புடவை அணிந்து கூந்தலை இரு பக்கமும் எடுத்து க்ளட்சில் அடக்கி முதுகை மறைத்து விரித்து விட்டிருந்தாள். அடர்கூந்தலின் நடுவே மல்லிகைச்சரம் ஜம்மென்று அமர்ந்திருந்தது.
அவசரமேயில்லாமல் மெதுவாக ஆலயத்தை நோக்கிச் சென்றவளை முதலில் பார்த்தவன் ஆதித்யன்.
நடையில் நிதானம், ஒற்றை மடிப்பில் அணிந்திருந்த புடவை முந்தானையைப் பிடித்திருந்த இலாவகம், ஒல்லியுமில்லாமல் அதிகச் சதையுமில்லாமல் இருந்த நடுத்தர உடல்வாகு – இவை அனைத்தையும் தன்னைக் கடந்து அந்தப் பெண் போன சில வினாடிகளில் அவளது பக்கவாட்டுத்தோற்றத்தை வைத்து கிரகித்துக்கொண்டவன் சட்டென எழுந்தான்.
“ஹேய் பவி! நீ ஓடிப்போய் அந்தப் பொண்ணு கூட பேச்சு குடு”
பவித்ராவை விரட்டினான்.
அவளும் ஓடினாள். அந்தப் பெண்ணிடம் எதையோ சொல்வதைக் கவனித்தவாறு மூன்று ஆடவர்களும் அவர்களை நெருங்கினார்கள்.
“நாங்க சென்னைல இருந்து இந்த வேலையா வந்தோம்… ஆனா நாங்க புக் பண்ணுன இன்ஸ்டாக்ராம் இன்ஃப்ளூயன்சருக்கு ஏ.கே சொன்ன மாதிரி சரியான ரியாக்சன்ஸ் குடுக்க தெரியல நந்து”
முன்பே தெரிந்தவர்களைப் போல அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“பவி”
ஆதித்யனின் குரல் கேட்டதும் இருவரும் திரும்பினார்கள்.
பக்கவாட்டுத் தோற்றத்தை விட நேரில் பார்க்கையில் அழகாக, பாந்தமாக இருந்தாள் அந்தப் பெண். பவித்ரா அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“இவ நந்தினி… எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்து வீடு இவங்களோடது… லீவுக்கு இங்க வர்றப்பலாம் நானும் நந்துவும் செய்யாத சேட்டையே இல்ல”
பவித்ரா உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போக ஆதித்யன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“ஹாய்” அறிமுகமாகிக்கொள்வதற்காக கை நீட்டினான் அந்த நந்தினியிடம்.
ஆனால் அஞ்சனவிழிகளிலோ மிதமிஞ்சிய சோகம் கப்பியிருந்தது.
‘கைகுலுக்குவது அவ்வளவு பெரிய தவறா?’
ஆதித்யனின் எண்ணம் போன போக்கில் அவளே சினேகமாகப் புன்னகைத்து கரம் குவித்து வணக்கம் கூறினாள்.
“ஒரு சின்ன ஹெல்ப்”
“என்ன?” இப்போது விழிகளில் சோகமில்லை. குயில் கூவியது போல ஒலித்த குரலின் ஜாலத்தால் ஆதித்யன் அதைக் கவனியாது போயிருக்கலாம்.
“நாங்க நாலு பேரும் சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்னு சென்னைல நடத்துறோம்… ஃபேமஸ் இன்ஃப்ளூயன்சர்ஸ் எல்லாம் எங்களோட க்ளையண்ட்ஸா இருக்காங்க… எங்க கம்பெனிக்காக ஒரு இன்ஸ்ட்ராகிராம் விளம்பர ரீல்ஸ் எடுக்கலாம்னு ப்ளான் பண்ணி இங்க வந்தோம்… பட் அந்த இன்ஃப்ளூயன்சர் பொண்ணால எல்லாம் போச்சு… இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்க எங்களுக்காக அந்த ரீல்ஸ் வீடியோல நடிக்க முடியுமா?”
“நடிக்கணுமா?” விழிகளில் தெரிந்த மிரட்சியில் மான் தோற்றது என்றது ஆதித்யனின் மனம்.
“பயப்படாதிங்க… நீங்க பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம்… ஜஸ்ட் நான் சொன்ன மாதிரி வீடியோக்கு நீங்க போஸ் குடுத்தா போதும்… நோ டயலாக்ஸ்… எல்லாத்தையும் நாங்க எடிட்டிங்கில பாத்துப்போம்”
பவித்ராவும் இறைஞ்சுவது போல பார்க்கவும் அந்த நந்தினி ஒப்புக்கொண்டாள். ஆதித்யன் அவள் என்ன செய்யவேண்டும் என்பதை விவரித்தான்.
அவர்கள் எடுக்கப்போவது இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ். அதுவும் அவர்களின் நிறுவனமான ‘ஃபீனிக்ஸ் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தின்’ விளம்பரத்திற்காக எடுக்கப்போகிற ரீல்ஸ்.
இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமை எடுத்தாலே பெண்கள் புடவை கட்டிக்கொண்டு, அதிக முகப்பூச்சில்லாமல் கோவிலுக்குள் செல்வது, பூக்கள் வாங்குவது, கோவில் சுற்று பிரகாரங்களில் நடப்பது போன்ற வீடியோக்கள் வரிசையாக வருகின்றன அல்லவா!
அவற்றை ‘ஏஸ்திட்டிக் வீடியோ’ அதாவது அழகியலுடன் கூடிய காணொளி என்பார்கள்.
பல்வேறு கோணங்களில் பலவிதமான ஃப்ரேம்களில் எடுக்கப்படும் இத்தகைய வீடியோக்களைப் பார்க்கையில் நம்மை அறியாமல் ரசிக்கத் தோன்றும். மனதுக்கு இதமான பின்னணி இசையை வேறு மென்மையாக வீடியோவில் ஒலிக்கச் செய்வார்கள்.
அத்தகைய வீடியோவை தங்கள் நிறுவன விளம்பரத்திற்காக எடுத்து இன்ஸ்டாக்ராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றப் போவதாக ஆதித்யன் எடுத்துச் சொன்னதும் நந்தினியும் நடிக்க ஒப்புக்கொண்டாள்.
அங்கிதா எதையெல்லாம் செய்யத் தடுமாறினாளோ அதை வெகு இயல்பாக நந்தினி செய்து முடித்தாள். அவளது அப்பாவித்தனமான முகம் கேமராவில் பார்க்கையில் அவ்வளவு அழகாகத் தெரிந்தது ஆதித்யனுக்கு.
அழகியல் காணொளி எடுக்க வந்தவன் நந்தினியின் காதில் ஆடிய சிறிய ஜிமிக்கிகளை ‘குளோஸ்-ஆப்’ கோணத்தில் எடுத்தபோது அவளின் அழகில் தடுமாறிப்போனான்.
“தல! கவனம் சிதறுது” தருண் எச்சரிக்கவும் வேலையில் கவனமானான்.
மெல்லிய பாதங்களால் அவள் நடைபோட்டதை எடுக்கையில் கொலுசுகளை ரசிக்க ஆரம்பித்தது ஆதித்யனின் மனம்.
‘அட! இந்தப் பெண் கால் விரல்களில் மருதாணி வைத்திருக்கிறாளே!’
அதிசயித்தான் அவன். அவன் பார்த்த பெண்கள் எல்லாம் மெஹந்திக்கு மாறியவர்கள்.
கரம் குவித்து இறைவனை வணங்கியவளின் விரல்களிலும் தொப்பியாய்ச் சிவந்து சிரித்தது மருதாணி.
தருண் ஒரு முறையும், மகேஷ் இரு முறையும் தொண்டையைச் செருமி அவனை நிஜவுலகுக்கு அழைத்து வரவேண்டியதாயிற்று.
தடுமாற்றத்திலும், நந்தினியை இரசிப்பதிலும் கவனம் சிதறினாலும் அதிகநேரம் எடுக்காமல் முக்கால் மணி நேரத்தில் வீடியோ படப்பிடிப்பை முடித்துவிட்டான் ஆதித்யன்.
நந்தினி அசரடிக்கும் அழகியில்லை. ஆனால் அவளைப் பார்க்கையில் ஆதித்யனின் மனம் இதமாக உணர்ந்தது. சிறுபிள்ளைகளைப் போல அப்பாவித்தனமான அழகு அவளுடையது. அதை விகல்பமில்லாமல் ரசித்த ஆதித்யனுக்கு அவளது விழிகளில் குடியேறியிருந்த சோகத்தின் காரணம் மட்டும் என்னவெனத் தெரியவில்லை. நந்தினியும் அதிகம் பேசும் பெண்ணாகத் தோன்றவில்லை.
காசி விஸ்வநாதரை வணங்கி திருநீறு பூசிக்கொண்டு வெளியே வந்தார்கள்.
“உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா நந்தினி?”
ஆதித்யன் கேட்டதும் மற்ற மூவரின் கருமணிகள் தெறித்து கண்களை விட்டு வெளியே வராதக் குறை.
பவித்ரா அவனது புஜத்தில் கிள்ளினாள்.
“என் மானத்தை வாங்கிடாத ஏ.கே” காதுகளில் கிசுகிசுத்துவிட்டு நந்தினியை நோக்கி தர்மசங்கடமானப் புன்னகையொன்றை வீசினாள்.
“நம்பரா? எதுக்கு?” கண்களில் கலக்கத்தோடு வினவினாள் அவள்.
அவளது மிரட்சியில் சட்டென முறுவலித்தான் ஆதித்யன்.
“ஐயோ தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க இவ்ளோ நேரம் வீடியோ ஷூட்டுக்கு டைம் ஒதுக்குனிங்க. அதுக்கான பேமெண்டை ஜிபே பண்ணிடலாம்னு கேட்டேன்”
அடுத்த நொடி ‘அவசரப்பட்டுத் தவறாக எண்ணிவிட்டோமே’ என்று நாக்கைக் கடித்தவள் “பரவால்ல சார்… பவி என்னோட ஃப்ரெண்ட். நீங்க எல்லாரும் அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ். அப்ப எனக்கும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி தானே! ஃப்ரெண்ட்சுக்குள்ள காசு பணம் வாங்குறது தப்பு” என்றாள்.
அழகு, அப்பாவித்தனத்தோடு நல்ல மனமும் கொண்டவள்! ஆதித்யனின் மனம் இன்னொரு ப்ளஸ் பாயிண்டைக் குறித்துக்கொண்டது.
“அப்ப நான் கிளம்புறேன். ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்னு அம்மா கிட்ட சொல்லிட்டு வந்தேன். இங்கயே டைம் ஆகிடுச்சு. இன்னும் லேட் பண்ணுனா அம்மா டென்சன் ஆகிடுவாங்க”
அவள் விடைபெற்றாள். பளீரென வெயில் அடித்தாலும் தென்காசியே டல்லடித்தது ஆதித்யனுக்கு.
‘போகாதே பெண்ணே! இன்னும் சிறிது நேரம் உன் ஜிமிக்கி ஆட, கூந்தல் கற்றை உன் கன்னத்தை முத்தமிட, வெண்பற்கள் பளீரிட பேசிக்கொண்டே இரேன்’
ஆதித்யனின் மனதின் குரல் இவ்வாறிருக்க நந்தினியோ விடைபெற்றாள்.
‘ஐயோ போகாதே!’ என்பது போல அவனது கரம் உயர அதை அமுக்கிப் பிடித்து நந்தினிக்கு டாட்டா காட்டினார்கள் மூவரும்.
அவள் ஆட்டோவில் ஏறியதும் ஆதித்யனின் கரத்தை விடுவித்தவர்கள் “என்ன ஆச்சு ஏ.கே உனக்கு?” என ஒரே குரலாகக் கேட்கவும் அசட்டுச்சிரிப்புடன் பின்னந்தலையில் தட்டிக்கொண்டான் அவன்.
“தல! ஆர் யூ ஓ.கே?” தருண் சந்தேகமாகக் கேட்க
“இல்லடா. இங்க ஒரு மாதிரி இருக்கு” என்று தனது இடப்பக்க மார்பைத் தொட்டுக் காட்டியவனின் விழிகள் ஆட்டோ சென்ற திசையை நோக்கிக் கொண்டிருந்தன.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


