“இன்னைக்கு எனக்கு செவன்டீன்த் பர்த்டே. எல்லாரும் விஷ் பண்ணாங்க. எப்பவும் போல நீ விஷ் பண்ணல. லண்டன்ல உனக்கு டைம் வேற மாதிரி இருக்கும்னு எனக்குத் தெரியும், ஆனா என் மனசு கேக்க மாட்டேங்குது.”
–வானதியின் கடிதம்…
சென்னையின் ஈரப்பதம் மிக்க காற்றிலிருந்து விடுபட்டு, மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு அந்தப் பிரம்மாண்டமான போயிங் விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுமார் பத்து மணிநேரப் பயணம். மேகங்களின் மடியில் தலைவைத்துத் தூங்கியவளை அருள்மொழியின் மென்மையான தட்டல் உறக்கத்திலிருந்து எழுப்பியது.
“வானதி! லண்டன் வந்தாச்சு.”
விமான நிலையத்தின் கண்ணாடிக்கதவுகளைத் தாண்டி வெளியே வந்தபோது, பிப்ரவரி மாதத்துக் குளிர், லண்டன் நகரை ஒரு மெல்லிய பனித்திரையாய் போர்த்தியிருந்தது. ஹீத்ரு விமான நிலையத்தின் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால் தெரிந்த வானத்தில் யாரோ சாம்பல் நிறப் புகையைப் பூசியது போலொரு மாயை. லண்டனின் அந்த உறைபனி காற்று இருவரின் சுவாசப்பைகளுக்குள் கூர்மையான ஊசியைப் போலத் தைத்துக்கொண்டு நுழைந்தது.

வெளியேறும் பாதையில் அவர்களுக்காகக் காத்திருந்தார் தர்மலிங்கம். இருவரையும் ஜோடியாகப் பார்த்தவரின் கண்களில் அத்துணை குதூகலம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அடடே! வாங்க வாங்க! ஃப்ளைட் ஜர்னி எப்பிடி இருந்துச்சு?”
“ரொம்ப போர் சித்தப்பா. நான் தூங்கிட்டேன்” என்றாள் வானதி சிரிப்போடு.
புன்னகையோடு இருவரையும் காரை நோக்கி அழைத்துச் சென்றார் தர்மலிங்கம். அவரது சொகுசு கார் லண்டனின் ஈரமான சாலைகளில் சத்தமின்றி ஹாம்ப்ஸ்டெட் நோக்கி விரைந்தது.
“ஆன்ட்டி மெகன் எப்படி இருக்காங்க மாமா? நியூசிலாந்து ட்ரிப் நல்லா போச்சா?” – அருள்மொழி.
“உன் ஆன்ட்டி மெகன் இப்ப ஹாம்ப்ஸ்டெட் தமிழச்சியாவே மாறிட்டாங்க. நீங்க வர்ற சந்தோஷத்துல காலையில இருந்தே செஃபை ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க,” என்றார் தர்மலிங்கம் சிரித்துக்கொண்டே.
ஜன்னலுக்கு வெளியே பிப்ரவரி மாதத்தின் காலநிலை ஓர் அழகியலாய், ஒரு மௌனமான ஓவியம் போல நகர்ந்தது. இலைகளை உதிர்த்துவிட்டு நிர்வாணமாய் நின்ற மரங்களின் கிளைகள், பனிக்காற்றில் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. பழைய செங்கல் கட்டிடங்களின் புகைப்போக்கிகளிலிருந்து கிளம்பிய புகை, அந்தச் சாம்பல் நிற வானத்தோடு ஐக்கியமாகிக் கொண்டிருந்தது.
இதெல்லாம் வானதிக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அற்புதமான காட்சிகள்! ரசிக்கத் திகட்டவா செய்யும்?
கார் ஹாம்ப்ஸ்டெட்டின் அமைதியான வீதிக்குள் நுழைந்து, ஐவி மேனரின் பிரம்மாண்டமான இரும்புக்கதவைத் தாண்டி நுழைந்தது. பெயருக்கேற்றாற்போல, அந்தப் பழங்காலக் கட்டிடத்தின் சுவர்கள் முழுக்கப் பச்சை நிற ஐவி கொடிகள், கம்பளிப் போர்வையைப் போலப் படர்ந்து கிடந்தன.
கார் நின்றதும், மாளிகையின் கனமான தேக்கு மரக் கதவைத் திறந்து கொண்டு மெகன் ப்ரவுன் வெளியே வந்தார். தர்மலிங்கத்தின் மனைவியாய், ஐவி மேனரின் உரிமையாளினியாய் எவ்வித படாடோபமும் இல்லாமல் ஆர்ப்பரிப்புடன் இளையவர்களை அவர் வரவேற்றார்.
“வெல்கம் ஹோம், அருள்! வெல்கம் வானதி!”

ஆங்கிலம் கலந்த தமிழில் மெகன் வரவேற்றபோது, வானதிக்கு அந்நிய தேசத்திலும் சொந்த வீட்டின் பாசத் தித்திப்பு தெரிந்தது. மெகன் வானதியை அள்ளி அணைத்துக்கொண்டார்.
‘இவரைப் பிடிக்குமென அருள் சொன்னதில் தவறேயில்லை. அவன் சொன்னது போலவே கண் பார்வையில், உடல்மொழியில், கொஞ்சும் பேச்சில் என எதிலும் இனிமையும் இதமும் மட்டுமே.’
மாளிகைக்குள் நுழைந்ததும், அந்த அறையின் வெப்பம் வானதியின் மேனியை வருடியது. சமையலறையிலிருந்து வந்த மணம் அவளது நாசியைத் தூண்டியது.
“என்ன இது? இங்கயும் சாம்பார் வாசனை வருது?” என்று வானதி ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.
மெகன் சிரித்துக்கொண்டே, “உங்களுக்காகவே நம்ம செஃப் இட்லியும் சாம்பாரும் பண்ணிருக்கார். இங்க எப்பவும் சவுத் இந்தியன் ஃபுட் தான். தர்மாவும் அருளும் இங்கிலீஷ் ஃபுட்டை எதிரியா பாப்பாங்க” என்றார்.
வானதிக்குத் தாய்நாட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்த உணர்வே இல்லை. சுற்றிப் பார்த்தவளுக்கு ஐவி மேனரின் ஒவ்வொரு அறையும் ஒரு ஆங்கில நாவலின் பக்கங்களைப் போல ரசனையாய் தெரிந்தது. அவளைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றான் அருள்மொழி.
“ரெஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடலாம்.”
அவன் குளியலறைக்குள் புகுந்துகொள்ள கதவை யாரோ தட்டும் சத்தம். வானதி போய் திறக்க அங்கே புன்னகை தவழும் வதனத்தோடு காபி ட்ரேயைப் பிடித்துக்கொண்டு நின்றார் ஆர்தர்.
“வெல்கம் இங்க் கேர்ள்!” அவர் வரவேற்ற விதத்தில் வானதியின் முகத்தில் பூக்களின் மலர்ச்சி.
“ஹலோ ஆர்தர்” சினேகமாக அவளும் பேசினாள்.
“உங்களுக்கு காபில சுகர் எவ்ளோ இருந்தா சரியா இருக்கும்?” என அன்பாகக் கேட்டபடியே சர்க்கரை கட்டிகளைக் காபியில் போட்டார் அவர்.
கூடவே அருள்மொழிக்கு ஏத்த விதமாய் இனிப்பைச் சேர்த்தார். சரியாக அருள்மொழி குளித்துவிட்டு வெளியே வர, இருவரும் சிரிப்போடு பேசிக்கொண்டார்கள். ஆர்தர் மீது அவனுக்கு இருக்கும் மரியாதையை அருள்மொழியின் உடல்மொழியில் கண்டுகொண்டாள் வானதி. கூடவே இருவரும் சங்கேதமாய் பேசிக்கொள்கிறார்களோ என்ற ஐயம்.
“நீங்க சொன்ன எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன் சார். டென்ஷன் வேண்டாம். என்ஜாய் யுவர் ஹனிமூன்” என்றவர் வெளியேறியதும்,
“என்ன ஏற்பாடு?’ என வினவினாள் வானதி அவனிடம்.
“நாம ஹனிமூனுக்கு ஸ்காட்லாந்து போகப்போறோம். எடின்பெரோ…” என்று பயணிப்பது போலச் சைகை காட்டினான் அவன்.
“எடின்பெரோவா? எடின்பெர்க் தானே?” “ஸ்காட்டிஷ் பீப்பிள் எடின்பெரோனு தான் சொல்லுவாங்க. அதுதான் சரியான உச்சரிப்பு” எனத் திருத்தினான் அருள்மொழி.
“ப்ச்! எடின்பெர்க் தான் சொல்ல நல்லா இருக்கு. எடின்பெரோஓஓஓஓ… கேக்கவே சிரிப்பா இருக்கு.”
கேலியாய்ச் சொன்னவள் ரெஃப்ரெஷ் ஆகி வந்ததும் காலையுணவை முடித்துக்கொண்டார்கள் இருவரும்.
பின்னர் ஓய்வெடுக்க அருள்மொழியின் அறைக்குள் வந்தவள், அறையின் கலைநயத்தில் லயித்து ஒவ்வொரு செங்கல்லையும் ரசித்த தருணத்தில் அந்த மேஜை அவளது பார்வையில் சிக்கியது. அழகான வேலைபாடுகள் கொண்ட மேஜை அது. அதன் இழுப்பறைகள் பூட்டப்படாமல் இருக்கவும், அதற்குள் என்ன இருக்கிறதெனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தித் தள்ள, திறந்தாள்.
ஏதேதோ காகிதங்கள்! சட்ட ஆவணங்கள்! ஒவ்வொரு இழுப்பறையாகத் திறந்தவள், பெரியதொரு கதவுடன் கூடிய லாக்கர் போன்ற இழுப்பறையைத் திறந்ததும் இதயம் ஒரு கணம் துடிப்பை நிறுத்தியது. காரணம், அந்த இழுப்பறை முழுவதும் இருந்த கடிதத்தின் என்வலப்கள் அனைத்தும் அவளது கையெழுத்தைத் தாங்கி இந்தியாவிலிருந்து வந்து பன்னிரண்டு ஆண்டுகள் லண்டனில் வாசம் செய்யும் என்வலப்கள்! அவை சிதையாமல், மங்காமல் அங்கே வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

அந்த நொடியில் வானதிக்குள்ளே ஓர் இனம்புரியாத உணர்ச்சிப் பெருக்கெடுத்தது. கண்களில் மெல்லிய ஈரக்கசிவு.
‘இவை உன் நினைவுகளை அவன் பத்திரப்படுத்தி வைத்திருப்பதன் சாட்சி’ என்றது அவளது மனம். நெகிழ்ச்சியில் உருகியிருந்த மனதில் வார்த்தைகளை அவளும் நம்பி மகிழ்ந்தாள்.
ஆனால், அடுத்த நொடியே அந்த ஈரத்தை ஒரு கனல் சுட்டெரித்தது. அருள்மொழி கடிதங்கள் குறித்துத் தன்னிடம் உதிர்த்த அலட்சியமான வார்த்தைகள் அவளது நினைவில் வந்து மோதின.
‘முதலில் உன்னை ஞாபகமில்லை என்ற பொய். உன் கடிதங்களை நான் படிப்பதில்லை, தீயில் போட்டுவிடுவேன் என்று அடுத்த பொய்! என்னை எவ்வளவு பெரிய முட்டாளாக நினைத்திருப்பான் இவன்?’
அவளது நெகிழ்ச்சி சட்டென்று ஆவேசமாக மாறியது. அவளது அன்பையும் ஏக்கத்தையும் ஏளனம் செய்வது போல, அந்தக் கடிதங்களின் என்வலப்களை மட்டும் வைத்துக்கொண்டு, “படிக்கவில்லை” என்று அவன் சொன்ன அந்தப் பொய் அவளைப் பிய்த்து எடுக்காத குறை. தனது உணர்வுகளோடு அருள்மொழி சதுரங்க ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பது அவளுக்குப் புரிந்தது.
கோபத்தோடு அந்த என்வலப்களை இழுப்பறைக்குள் இருந்து வெளியே எடுத்தாள். பண்டில் பண்டிலாகக் கட்டி வைத்திருந்தான். அதுவும் ஆண்டு வாரியாக. அவள் எடுத்து வைக்கவும் அருள்மொழி அந்த அறைக்குள் வரவும் சரியாக இருந்தது. அவனைப் பார்த்ததும் வந்ததே ஆத்திரம்!
என்வலப் பண்டிலை எடுத்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள் வானதி. குறி தவறாமல் அவனது முகத்தில் மோதி தரை அந்தப் பண்டிலை முத்தமிட்டதும், அடுத்த பண்டில் தாக்குதல்.
“வானதி! என்ன பண்ணுற?” என அவன் நெருங்கும் முன்னரே ஆவேசம் மேலிட அனைத்துப் பண்டில்களையும் வீசினாள் அவள்.
“அதை வைச்சிடு! எடுக்காத” என அவன் எச்சரிக்கவும், அதை ஓரமாக வைத்தவள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுத்து வீசினாள். பண்டில்களை விட அதிக கனமான புத்தகங்கள் அருள்மொழியைத் தாக்க, அவன் கத்தினான்.

“பைத்தியமா நீ? வை அங்க. வலிக்குது வானதி.”
“வலிக்கட்டும்டா, எத்தனை பொய் எத்தனை வெறுப்பு! எனக்கு வலிச்சுதுல்ல, இப்ப உனக்கும் வலிக்கட்டும். அதுக்குத்தான் வீசுறேன்.” கை ஓயும் மட்டும் வீசி முடித்தவள் கடுஞ்சீற்றத்தோடு அருள்மொழியை முறைத்தாள்.
“ஐ ஹேட் யூ அருள்!”
கத்திவிட்டு அந்த அறையை விட்டு வானதி வெளியேற, அருள்மொழி நெற்றியைத் தேய்த்துக்கொண்டான். சரியாக அவனது நெற்றிப்பொட்டில் அவள் வீசிய புத்தகம் ஒன்று தாக்கியிருந்தது. பொறுமையாக அனைத்துப் புத்தகங்களையும் என்வலப் பண்டில்களையும் சேகரித்துப் பழையபடி வைத்து மேஜையின் இழுப்பறையைப் பூட்டினான்.
அப்போது முகத்தைத் தூக்கியவள், விமானம் ஏறி எடின்பெரோவை அடையும் வரை அவனிடம் பேசவேயில்லை. அவர்கள் தங்குவதற்காகக் கோதிக் பாணி கோட்டையில் இயங்கும் ஹோட்டலில் கலைநயத்துடன் காட்சியளித்த அறையோ, பழங்கால மரச் சாமான்களோ, வெல்வெட் திரைகளோ வானதியை ரசனையில் ஆழ்த்தவில்லை.
“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நைட் நான் வர லேட் ஆகலாம். நீ வெயிட் பண்ணாம டின்னர் ஆர்டர் பண்ணி சாப்பிடு” என்றவன் கிளம்பிப் போய்விட்டான்.
இவ்வளவு தூரம் அழைத்து வந்து தன்னை இந்த அறைக்குள் சிறை வைத்துவிட்டுப் போனவனை எண்ணி வானதிக்கு அத்துணை கடுப்பு. ஆனால் தனியே ஊர் சுற்றவும் பிரியமில்லாமல் இரவைக் கழித்தாள் தனியே.
மறுநாள் காலையில் அவள் உறக்கம் கலைந்தபோது அறைக்கு வந்து சேர்ந்தான் அருள்மொழி. கையில் ஒரு லெதர் கோப்பு. பத்திரமாக அதைத் தனது உடமைகளை வைத்திருக்கும் பெட்டியில் வைத்துப் பூட்டினான்.
“நீ எவ்ளோ ஜாக்கிரதையா இருக்கல்ல? நான் தான் முட்டாள். உன்னை மாதிரி ஒருத்தனை கூடவே வச்சுக்கிட்டு போனுக்குக் கூட லாக் போடாம இருந்திருக்கேன்” என்றாள் வானதி கசப்போடு.
அருள்மொழியின் இதழ்களில் கேலிப்புன்னகை.
“திருட்டுப்பயம் இல்லாத ஊர்ல கூட வீட்டைப் பூட்டிட்டுத் தான் தூங்குவாங்க. திருடன் வரமாட்டான்ங்கிற நம்பிக்கைல கதவைத் திறந்து போட்டுட்டு யாரும் தூங்குறதில்ல. நம்பிக்கைக்கும் முட்டாள்தனத்துக்கும் நூலளவு இடைவெளிதான். உன்னோடது முட்டாள்தனமா நம்பிக்கையானு நீயே முடிவு பண்ணிக்க.”
வானதி சீற்றத்தோடு போர்வையைத் தூக்கியெறிந்தாள். “உன் பார்வைக்குப் பன்னிரண்டு வருஷமா நான் முட்டாளா தானே இருக்குறேன்.”
அருள்மொழி பெருமூச்சு விட்டான்.
“நான் உன்கூட எந்த கம்யூனிகேஷனும் வச்சுக்க விரும்பல. அதனால நீ எழுதுன லெட்டரைப் படிச்சிட்டு எரிச்சிடுவேன்! என்வலப்பைத் தூக்கிப் போட மனசில்ல. தூக்கியெறிய நினைக்குறப்ப ஏதோ ஒன்னு தடுத்துடும். அதான் சேர்த்து வச்சேன். நான் மறைக்காம ஒரு விஷயத்தைச் சொல்லிடுறேன். நான் ஒரு திட்டத்தோட தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்தத் திட்டத்தோட நோக்கம் உன்னைக் காயப்படுத்துறது இல்ல. மேக்கியவெல்லியனிசம் கேள்விப்பட்டிருக்கியா? இலக்கை அடையுறதுக்கு யாரை வேணும்னாலும் பகடைக்காயா பயன்படுத்துறது. அதைத்தான் நான் ஃபாலோ பண்ணுறேன். இதுக்காக எனக்கு வருத்தம் இல்ல. எல்லாம் முடிஞ்சு ஒரு நாள் என் மனசு உங்க எல்லாரோட மனசை மாதிரியும் இயல்பா மாறும். அப்ப எனக்குள்ள ஒரே ஒரு ஆசை மட்டும்தான் இருக்கும். அந்த ஆசை – உன்னோட வாழுறது மட்டும்தான். ஆனா அதுவரைக்கும் நான் இப்பிடித்தான் இருக்கப்போறேன்.”
“உன்னோட அந்த ஆசைக்கான கட்டம் வரைக்கும் நான் இந்த உறவுல பொறுமையா நிலைச்சிருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்க. எனிவே, எனக்கு இந்த ரூம்ல அடைஞ்சு கிடக்க பிடிக்கல” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“சர்க்கஸ் லேன் வரைக்கும் போகலாமா?” என வினவினான்.
இருவரும் குளித்துக் குளிருக்கான ஆடைகள் அணிந்து கிளம்பினார்கள். அவன் என்னதான் உருக்கமாய் பேசினாலும் வானதியின் மனம் ஒரு பக்கம் தகித்துக் கொண்டிருந்தது. அருள்மொழிக்கு அப்படியெல்லாம் இல்லை. இயல்பாகவே இருந்தான்.
எடின்பரோவின் சர்க்கஸ் லேன்– கற்கள் பதிக்கப்பட்ட குறுகலான நடைபாதையின் இருபுறமும் பழங்கால வீடுகள், அவற்றின் சுவர்களில் பரவிக் கிடக்கும் கொடிகள், அதிலாடும் மலர்கள், பின்னணியில் செயிண்ட் ஸ்டீபன் தேவாலயத்தின் கோபுரம். அது காதலர்களின் சொர்க்கம் போன்ற இடம். நல்ல மனநிலையில் வந்திருந்தால் வானதியாலும் அதை ரசித்திருக்க முடியும். ஆனால் கூடவே ஆறடிக்கு ஒரு தலைவலி நடந்து வரும்போது அவளால் எப்படி இதமாக உணர முடியும்?
அவளுக்காகத் தனது நடையின் வேகத்தைக் குறைத்து நடந்து வந்த அருள்மொழியின் வதனத்தில் மெல்லிய கேலியுடன் கூடிய சிரிப்பு ஒட்டியிருந்தது.
“பொறுமையா இந்த லேனோட அழகை ரசிச்சுக்கிட்டே போகலாம். நமக்கு வேற என்ன வேலை இருக்கு?”

“சரிதான்! என்ன வேலை இருக்கு? அப்புறம் எதுக்கு ஹனிமூனுக்குக் கூட்டிட்டு வந்த? இது ஹனிமூன் இல்ல, ஹவுஸ் அரெஸ்ட். போதாக்குறைக்குத் தேவையில்லாததைப் பேசி என்னை இரிட்டேட் வேற பண்ணுற. அழகாம் அழகு! மை ஃபுட்!”
சீறியவளின் வாயிலிருந்து வந்த வசவுகள் அவனை இன்னுமே குதூகலமாக்கின. அவளுடன் நடந்தபடியே காதருகே குனிந்தவன்,
“இப்ப கோவம் எதுக்கு மிசஸ் அருள்மொழி? நான் ஹோட்டல்ல சொன்ன விஷயத்துக்காகவா? இல்ல ஹனிமூனை வேஸ்ட் பண்ணுறோமேங்கிற ஏக்கத்துலயா?” என்று விஷமமாகக் கேட்க, அவனது சூடான மூச்சுக்காற்று புகைவடிவமாய் அவளது கன்னங்களைத் தீண்டிச் சென்றது.

அந்த கதகதப்பில் கன்னம் சிவப்பது போன்ற மாயை அவளுக்கு. சட்டென விலகியவள், “ஷட்டப் அருள். என்கிட்ட விளையாடாத. பிளர்ட் பண்ணுனாலும் அதை என்னால ரசிக்க முடியல” என்றாள் வரவழைத்துக் கொண்ட கடுகடுப்போடு.
“நான் பிளர்ட் பண்ணலயே. ஒரு நல்ல புருஷனா பொண்டாட்டியோட கோவத்துக்குக் காரணம் என்னனு கேக்குறேன். ஆனா ஒன்னு, இந்தக் குளிருக்கு உன் கோபச்சூடு ரொம்ப இதமா இருக்கு. கோவத்துல அப்பிடியே கன்னம் மூக்கு சிவக்குறது இந்த எடின்பரோவோட பனிக்கு அப்பிடியே கான்ட்ராஸ்டா அள்ளுது போ.”
வானதி அவன் வேண்டுமென்றே தன்னைச் சீண்டுவதைக் கண்டுகொண்டவள், “உன்கூட அவுட்டிங் வந்தேன்ல, என்னைச் சொல்லணும். போடா” என்று திரும்பிப் போக எத்தனிக்க, அருள்மொழி அவளது பாதையை மறித்து நின்றான்.
“கோவப்பட்டா நல்லா இருக்குனு சொன்னேன் தான். அதுக்குனு கோவம் மட்டுமே பட்டுக்கிட்டிருந்தா எப்பிடி? நாம இங்க ஹனிமூனுக்கு வந்திருக்கோம். பி லைக் அ லவ்லி கப்பிள்” என்றபடி அவளது கையைக் கோர்க்க வந்தான்.
இன்னும் இரண்டு அடிகள் தள்ளி வந்தவளோ, “உன்கூட லவ்லி கப்பிள் அவதாரமா? எந்த லவ்லியான புருஷன் பொண்டாட்டி மேல நூத்தியம்பது கோடிக்கு மானநஷ்ட வழக்கு போட்டு அதுக்காக கோர்ட் படி ஏறுவான்? எந்த லவ்லி புருஷன் அவ ஆசையா எழுதுன லெட்டரைப் படிச்சதா கூட காட்டிக்காம திமிர்த்தனமா தீயில போடுவான்? எல்லாத்தையும் பண்ணிட்டு இங்க வந்து ரோமியோ அவதாரம் எடுக்குற. நானும் ஜூலியட் மாதிரி ‘ஓ மை ரோமியோ’னு ஓடி வந்து உன்கூட ரொமான்ஸ் பண்ணனுமா? ஹான்” என்று கத்த,
“லிசன்! அந்த மானநஷ்ட வழக்கு என் வேலை. லெட்டரை எரிச்சப்ப நீ என் பொண்டாட்டியா வருவனு எனக்கு ஜோசியம் எல்லாம் தெரியாது. அதை தனியா டீல் பண்ணிக்கலாம்” என்றான் அருள்மொழி பெருந்தன்மையோடு.
“அவ்ளோ மெச்சூரிட்டி எனக்குக் கிடையாது. நீ என்னை நிர்மூலமாக்குவேன்னு சொன்னல்ல.”
“ஏன்டி உன் கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் செலக்டிவ் அம்னீசியால இருந்தியா? இதெல்லாம் அப்ப ஞாபகம் வரலையா?”
“அது வேற! இது வேற! கோவமா இருக்குறப்ப நீ செஞ்ச திமிர்த்தனம் எல்லாம் ஒவ்வொன்னா ஞாபகம் வருது. அப்ப நான் திட்டத் தான் செய்வேன்.”
முறைத்துக்கொண்டு நின்றவள் அவனது விழிகளில் தெரிந்த பாவனையில் எதைப் படித்தாளோ, சட்டென்று கண்களைச் சுருக்கினாள்.
“நீ என்னைச் சமாதானம் பண்ணத் தான் இங்க அழைச்சிட்டு வந்தியா?” என ஐயத்தோடு வினவினாள்.
அருள்மொழி தோள்களை அசட்டையாகக் குலுக்கியவன், “அதுக்கும் சேர்த்துதான்” என்றான்.
“அப்ப என் லெட்டரைப் படிச்சதை மறைச்சதுக்காக நீ வருத்தப்படுற?”
“நான் லெட்டரைப் படிச்சதை உன்கிட்ட மறைச்சதை நினைச்சு நீ வருத்தப்படுறதைப் பார்த்ததும் எனக்கு வருத்தமா இருந்துச்சு.”
வானதி தலையைப் பிடித்துக்கொண்டாள்.
“எப்பா சாமி! நீ கமலஹாசன் ஃபேன்னு தெரியும். அதுக்குனு இவ்ளோ குழப்பாதடா.” கண்களை மூடிக்கொண்டு சொன்னவள் அவன் சிரிப்பதைக் கேட்டதும் விழி மலர்ந்தாள்.
சின்னதொரு கனிவு அருள்மொழியின் முகத்தில்!
“நான் ஏதாச்சும் சொன்னா நீ பதிலடி குடுத்துடுற. ஆனா எந்த நம்பிக்கைல நீ என்னை மாதிரி ஒருத்தனோட ஆட்டிட்டியூடை சகிச்சுக்குற? இந்தப் பொறுமைய எப்பிடி இழுத்துப் பிடிக்குற?”
இப்போதும் வானதியின் முகத்திலும் சின்னதொரு முறுவல்.
“ஏன்னா உன்னை நான் இப்பவும் என் ஃப்ரெண்ட் அருளா தான் நினைக்குறேன். யூ ஆர் அ புரோக்கன் சைல்ட். வாழ்க்கைல இழப்புகளைச் சந்திச்சவன் கிட்ட என்னால விரோதம் வைக்க முடியாது.”
அந்த நொடியில் அருள்மொழியின் விழிகளில் சட்டென ஒரு மாற்றம். அது வேதனையா, கழிவிரக்கமா என அறியும் முன்னர் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
“புரோக்கன் சைல்ட்! நீ மட்டும்தான் அப்பிடி சொல்லிருக்க. ஆனா ரியாலிட்டி என்னன்னா நான் ஓர் அனாதை. இந்த உலகம் என்னை அப்பிடித்தான் பாக்குது” என்றவன் பெருமூச்சுவிட்டபடி அவள் பக்கம் திரும்பினான்.
“ம்ம்! வாழ்க்கை பயணத்துல எல்லாருமே ஒரு நாள் அம்மா அப்பா இல்லாம வாழணும் அருள். அப்பிடி பாத்தா மனுஷன் தன்னோட வாழ்க்கைல ஏதோ ஒரு காலகட்டத்துல அனாதை ஆகிடுவான். அவனை உருவாக்குன ஃபேமிலி மறைஞ்சாலும் அவன் உருவாக்குன ஃபேமிலி அவனுக்காக இருக்கும்ல?”
அருள்மொழி அவளது சிகையைக் கோதிக் கொடுத்தவன், “நீ மெச்சூர்டான பொண்ணா மாறிட்ட வானதி. நான் லண்டனுக்கு வந்து உன்னோட நட்பை இழந்ததுக்காக வருத்தப்பட வைக்குற. எனக்கு இந்த வருத்தம் பிடிக்கலனாலும் என் லைஃப்ல வேற மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்னு தோண வைக்குற நீ” என்றான் மென்மையாக.
சுபாவத்துக்குப் பொருந்தாத மென்மை ஆண்களிடம் தென்பட்டால், அது அவர்களின் கம்பீரத்தை இன்னும் அதீதமாக்கிவிடும். அந்நேரத்தில் வானதியின் கண்களுக்கு அருள்மொழியும் அப்படித்தான் கம்பீரமாகத் தெரிந்தான். இத்தனை நாட்கள் இருந்த கடுகடு மனநிலை மாறிவிட்டது அவர்கள் இருவருக்கும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

