மாலை சூடிய மாசற்றக் காதல்!
மாங்கல்ய பந்தத்தில் இணைய
பூக்கள் சொரியும் புதுமணக் கோலம்!
நதியும் கடலும் நயமாய்ச் சேர
சந்தம் பாடும் யட்சனின் நேசம்!
ஓருயிர்ப்புள்ளியில் ஒன்றாய் பிணைய
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இல்லறம் இனிக்குதே வனமோகினிக்கு!
-அட்சரனின் வேதா
நுங்கம்பாக்கத்திலிருந்த அந்த டியூப்ளக்ஸ் வீட்டுக்கு அன்றைய தினம் காலையில் புத்துயிர் கிடைத்திருந்தது எனலாம். கோபத்தோடும் மனத்தாங்கலோடும் வீட்டை விட்டுக் கிளம்பிய மருமகளின் வருகையே அதற்கு காரணம்.
காலை பதினோரு மணிக்குச் சதானந்தனோடு வீடு வந்து சேர்ந்தவளை ராஜேஸ்வரி கண்ணீரோடு அணைத்துக்கொண்டார்.
“நீ முழுமனசோட தானே வந்திருக்க வேதா? யாரும் உன்னைக் கட்டாயப்படுத்தலையே?”
காலையிலிருந்தே அவளது வருகையை எண்ணி மகன் இருந்த நிலையை அறிந்தவராய் வினவினார்.
“நான் சந்தோஷமா வந்திருக்கேன் அத்தை. இனிமே போகமாட்டேன்.” அவள் சொன்னதும் பெரும் நிம்மதி அவருக்கு.
“நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடுடா. நாளைக்குக் காலேஜ் கிளம்பணும்ல” என்று சதானந்தன் ஆதுரமாகச் சொன்னதும், மாடியறைக்குச் சென்று தனது உடைமைகளை வைத்தாள். கண்களை மூடி நிதானித்தவளுக்கு அந்த அறையின் அமைதியே தனது உரிமையைப் பறைசாற்றுவதாய்! பால்கனியில் போய் நின்றவளின் பார்வை அட்சரனின் அறையுடைய பால்கனியை வலம் வந்தது.
முந்தைய இரவில் அவளுடன் வாட்ஸ்அப்பில் சாட் செய்தபோது, திடீரென ஒரு பதிப்பகத்துடன் மீட்டிங் ஏற்பாடாகியிருப்பதாகக் கூறியிருந்தான்.
“உன்னை அப்பா பிக்கப் பண்ணிப்பார் வேதா. நான் ஷார்ப்பா பத்து மணிக்கு அங்க இருக்கணும். மீட்டிங், லஞ்ச் எல்லாமே அங்கதான்” என்று சொல்லியிருந்தான்.
நெடிய பெருமூச்சுடன் அங்கிருந்து அறைக்குள் குளித்துக் காலையுணவைச் சாப்பிட்டு முடிக்கவும், பிரியம்வதா அங்கே வரவும் சரியாக இருந்தது.
“நீ இல்லாம இந்த ஏழு நாள் செம போரா இருந்துச்சு பேப்” என்றபடி அணைத்துக்கொண்டவளின் கையில் ஒரு ஷாப்பிங் பை.
“என்ன இது?”

“நான் இதுக்காகத்தான் வந்தேன் பேப். ப்ரோ இதை உனக்காகச் சிருஷ்டி பொட்டிக்ல ஆர்டர் பண்ணிருந்தார். இன்னைக்குத் திடீர்னு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுனதால அவரால போய் வாங்க முடியலனு என்னை வாங்க சொன்னார்” என்றவள், ராஜேஸ்வரியின் முகத்தில் பரிபூரண நிம்மதி பரவுவதைப் பார்த்துவிட்டுக் குறும்பாக அவரது தோளை இடித்தாள். “உங்களுக்கு இப்ப கோவம் வரணும் ஆன்ட்டி. உங்க மகன் அவரோட பொண்டாட்டிக்கு மட்டும் ஸ்பெஷலா வாங்கியிருக்கார்னு இப்ப நீங்க பொறாமைல பொங்கணும்.”
“க்கும்! அவன் இப்பிடி வாங்கி குடுத்துடமாட்டானானு நான் நினைச்ச நாள் அதிகம்டி பொண்ணே” என்றவர் அவளுக்குப் பழச்சாறு கொடுத்து உபசரித்தார்.
“நீ ரெஸ்ட் எடு பேப். நான் கிளம்புறேன்.”
பிரியம்வதா கொடுத்த ஷாப்பிங் பையை மார்போடு அணைத்துத் தனது அறைக்குக் கொண்டு வந்தவள் அதைப் பிரித்துப் பார்த்தாள். பர்ப்பிளுக்கும் லேவண்டருக்கும் இடையிலான வண்ண நெட் மாதிரியான மெல்லிய துணியில் பல்வண்ணத்தில் அழகான முப்பரிமாண லில்லி மலர்கள் வைத்துத் தைக்கப்பட்ட பால் கவுன் அது. வானதியின் திருமண வரவேற்பில் அட்சரன் வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. நிறைய கவுன்களை வாங்கித் தரும் கணவன் அமைவான் என்றானே! அனைத்தையும் நினைவு வைத்திருக்கிறான் இந்த ஈகோ மன்னன்!
கவுனிலிருந்த முப்பரிமாண மலர்களில் கூட நறுமணம் வீசுவது போல மாயை அவளுக்கு. புன்னகையோடு அதை மீண்டும் ஷாப்பிங் பேக்குக்குள் வைக்கும்போதே மொபைலில் ஏதோ செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் சத்தம். எடுத்துப் பார்த்தவள் அனுப்பியவன் அட்சரன் என்றதும் முறுவலித்தாள்.
“மினியன் கவுனைக் கொண்டு வந்து குடுத்துட்டாளா?” என்று கேட்டிருந்தான்.
“ம்ம். இப்பதான் பாத்துட்டிருக்கேன்” தட்டச்சில் பதில் அனுப்பினாள்.
“பிடிச்சிருக்கா?”
“எனக்குப் பிடிக்கணும்ங்கிறதுக்காக வாங்கிட்டுப் பிடிச்சிருக்கானு கேக்குறிங்களே?”
“கவுனை மட்டும்தானா?”
“ஆமானு சொன்னா என்ன பண்ணப்போறிங்க?”
“கவுன் வாங்கி தந்தவனைப் பிடிக்குற வரைக்கும் இது போல ஏதாச்சும் பண்ணிட்டே இருப்பேன்.”
“உங்களுக்கு அடிக்கடி செலவு வைக்கப் பிடிக்கல. என்னை இம்ப்ரஸ் பண்ணச் செய்யல தானே?”
“ஆல்ரெடி இம்ப்ரஸ் ஆகிப்போய் தானடி இருக்க.”
“நினைப்புதான்! வேலையை கவனிங்க.”
“உனக்கு என் மேல கோவம் எல்லாம் போயிடுச்சுனா இன்னைக்கு நான் வீட்டுக்கு வர்றப்ப இந்தக் கவுன்ல உன்னைப் பாக்கணும்.”
அதோடு ஆஃப்லைன் போய்விட்டான் அட்சரன். வேதவதி இந்தக் கவுனை மீண்டும் ஆசையாய்ப் பார்த்தாள்.
அன்று இரவில் அனைவரும் இரவுணவு உண்ட பிறகும் கூட வராத அட்சரனின் மீது ஏகத்துக்கும் கடுப்பானாள்.
“மீட்டிங் இழுத்துக்கிட்டே போகுதாம். ஹெல்வட்டாஸ் ரைட்டர் ஒருத்தரோட கதை நெட்ஃபிளிக்ஸ் சீரிஸுக்காக செலக்ட் ஆகியிருக்குதாம். பப்ளிகேஷன் கிட்ட பேசி ராயல்டிக்கான புரொசிஜரை செஞ்சிட்டிருக்கானாம். வர லேட் ஆகும்னு சொன்னான்டா” என்றார் சதானந்தன்.
வேதவதி சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தவள் அவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். போரடிக்கவே மொபைலில் பாடல் கேட்க ஆரம்பித்தாள். அவள் பாடல் கேட்டபடியே பீன்பேக்கில் சரிந்து கண்ணயர்ந்துவிட, சரியாக அட்சரனும் அந்நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
தான் வாங்கிக் கொடுத்த கவுனை வேதவதி அணிந்திருப்பாளா என்று ஆவலோடு வீட்டுக்குள் வந்தவன், அவளது அறைக்கதவு பூட்டியிருப்பதைப் பார்த்ததும் ஆவல் எல்லாம் வடியத் தனது அறைக்குள் போய்விட்டான். இரவுடைக்கு மாறிப் பால்கனிக்கு வந்தவன், பக்கத்து பால்கனியில் வேதவதி பீன்பேக்கில் சரிந்து கண்ணயர்ந்திருப்பதைப் பார்த்ததும் “வேதா” என்று கத்தப்போனான். பின்னர் அவள் இன்னும் தான் வாங்கிக்கொடுத்த கவுனை அணியவில்லை என்பதைக் கவனித்தான்.
சின்னதாய் ஒரு ஏமாற்றம்!
‘நீ பேசுனதை அவ்ளோ சீக்கிரம் மறந்துடுவாளா என்ன? சும்மா கண்டதையும் யோசிக்காம அவ கூட பேசு’ என்றது அவனது மனசாட்சி.
சத்தம் போடாமல் சுவரேறி அவளது பால்கனியில் குதித்தவன் அவளை உலுக்கிவிட்டுக் காதில் “பே” என்று கத்தியதில் பதறியடித்துக்கொண்டு விழித்தாள் வேதவதி.
அருகே முழங்காலிட்டு அவளது பதற்றத்தைப் பார்த்துச் சத்தமாக நகைத்தவனை கடுப்பாக உறுத்துவிழித்தவள், “லூசு லூசு! இப்பிடியா கத்துவ? போய் தொலைடா” என்று அவனைச் சரமாரியாக அடிக்க, “ஏய்! ஃப்ளோல வாடா போடானு கூப்பிடுற? என்ன பயம் விட்டுப் போச்சா?” என்று சீண்டியபடியே அடிகளை வாங்கிக்கொண்டான் அட்சரன்.
“நீ செஞ்ச வேலைக்கு உன்னைக் கெட்ட வார்த்தைல கூட திட்டலாம். என்னெல்லாம் பேசுன நீ? அதுலயும் ‘இன் யுவர் ட்ரீம்ஸ்’னு சொன்னல்ல, அது என் கனவுல எல்லாம் வருது” என்றவள் அவனது சுருள் கூந்தலைப் பிடித்துக்கொண்டாள் இறுக்கமாய்.
“வலிக்குதுடி.”
“வலிக்கட்டும்ங்கிறேன். என்னைத் தூக்கியெறிஞ்சு பேசுனப்ப எனக்கு இதை விட அதிகமா வலிச்சுது. நீயும் அனுபவி.”
முகம் கசங்கச் சொன்னவள் முடியாமல் அவனை அணைத்துக்கொண்டாள் கண்ணீரோடு. இறுக அணைத்தவளின் கரங்களுக்குள் இப்போது இறக்கக் கூட அவனுக்குப் பிரியமே!
என்னென்னவோ சொல்ல நினைத்தவன் எதற்கும் குரல் நாண்கள் ஒத்துழைக்காமல் போனதில் தனது ஸ்பரிசத்தையே மொழியாக்கிக்கொண்டான். அவளை அணைத்து அடர்கூந்தலில் முகம் புதைத்தவன்,
“நீ விலகி நின்னப்ப தான் நீயில்லாம என்னால வாழமுடியாதுனு புரிஞ்சுது வேதா. இதை எந்த ஈகோவும் இல்லாம இப்ப நான் ஒத்துக்குறேன்” என்றான்.
வேதவதி அவனை விட்டு விலகியவள் எழுந்து நின்றாள்.
“ஏதோ சனிப்பெயர்ச்சி இஷ்யூவால கல்யாணம் லேட் ஆகுனு அப்பா கிட்ட சொன்னீங்களாமே?”
“ஆமா! சனி சென்னையில இருந்து பெயர்ந்து தேன்மலைக்குப் போயிடுச்சு. எப்பிடித் தாலி கட்டுறது?” என்றவன் உதட்டை மடித்து நமட்டுச்சிரிப்போடு கிண்டல் செய்ய, வேதவதி மீண்டும் கடுப்பாகி அவனது புஜத்தில் கடித்து வைத்தாள்.
அவளை விளையாட்டாகத் தள்ளிவிட்டவன், “நாளைக்கு ரேபிஸ்க்கு வேக்சின் போடணும்” என்று தொடர்ந்து அவளைக் கிண்டல் செய்ய, வேதவதி அவனது கேசத்தைப் பற்ற முயற்சிக்கவும் அட்சரன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
“நோ மோர் வயலென்ஸ். உனக்கு என்னைக் கடிக்கணும்னு ஆசையா இருந்தா அதை லவ் பைட்டா குடு. இப்பவே குடுத்தாலும் சம்மதம்தான். நீ என்னை மன்னிச்சதா எடுத்துக்குறேன்.” கொஞ்சலாகச் சொன்னவன் அவளது நாசியோடு தனது நாசியை உரசினான். ஊடல் மறைந்து கூடற்பொழுதுக்கான வேட்கை அவனது விழிகளில்.

வேதவதி கண்கள் கனியப் பார்த்தவள், “ம்ஹூம்! அப்பிடி ஒன்னும் நீங்க எடுத்துக்கவேண்டாம். ஓடிப் போங்க” என்று அவனை விலக்கித் தள்ளினாள்.
“குட் நைட்! நாளைக்கு மானிங் பாக்கலாம்” என்றவள் வேகமாகத் தனது அறைக்குள் போய் பால்கனி கதவை அடைத்துக்கொண்டாள்.
“அடப்பாவி! இத்தனை நாள் என்னைக் கரிச்சுக் கொட்டுனதுக்கு ஒரு கிஸ் கூட மிஞ்சல.”
பரிதாபமாகச் சொன்னவன் சுவரேறி குதித்து அவனது அறைக்குப் போய்விட்டான்.
மறுநாள் விடியலில் அட்சரன் ஹெல்வட்டாசுக்குக் கிளம்பியவன், காலையுணவின்போது வேதவதியை ஹெல்வட்டாசுக்கு மதியம் வருமாறு கேட்டுக்கொண்டான்.
“நான் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகணுமே?”
“இன்னைக்கு ஒரு நாள் வா. அங்க இலக்கியாவும் சஞ்சயும் என் மேல ரொம்ப வருத்தமா இருக்காங்களாம். உன்னைப் பார்த்தா சாந்தமாவாங்க.”
“நீ போயிட்டு வாடா வேதா. நாளைக்குச் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போ” என்ற சதானந்தன், “அவங்க மட்டுமில்ல, உன் அத்தையும் நேத்துதான் அச்சு கிட்ட முகம் குடுத்துப் பேசுனா” என்க, அப்படியா என்பது போல ராஜேஸ்வரியிடம் திகைப்பாய் பார்வையை வீசினாள்.
“பின்ன? இவன் பேசுனதுக்கு இவனுக்குச் சப்போர்ட்டாவா பேச முடியும்?” என்றார் ராஜேஸ்வரி.
அட்சரன் பட்டெனக் கரம் குவித்தவன், “மறுபடி மலை ஏறாதீங்க. இப்பதான் லைஃப் ஸ்மூத்தா மாறியிருக்கு” என்க மூவரும் சிரித்தார்கள் அவனைப் பார்த்து.
அட்சரன் கேட்டுக்கொண்டதற்காக மதியம் ஹெல்வட்டாசுக்கு வந்தாள் வேதவதி. அவளைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்றார்கள் இலக்கியாவும் சஞ்சயும்.
“நீங்க ப்ளூப்பர்ஸைக் காட்டுனீங்களா அவர் கிட்ட?” என்று சஞ்சயிடம் சண்டை பிடித்தவள்,
“அந்த மடையனுக்கு வேற எப்பிடி உன் அருமையைப் புரிய வைக்கிறது வேதா? அவனுக்கும் தெரியட்டும், நீ எவ்ளோ தூரம் அவனைக் காதலிக்குறனு” என்றான் அவன் அமர்த்தலாக.
அவர்களோடு அட்சரனும் சேர்ந்துகொள்ள அன்றைய தினம் மாலையில் ஹெல்வட்டாசின் மாடியில் தேநீர் விருந்து அவர்களுக்கு.
“இப்ப தான் மச்சான் நீ மனுஷன் மாதிரி இருக்குற. ஒரு போட்டோ எடுக்கவா?”
அட்சரனும் வேதாவும் சேர்ந்து அமர்ந்திருக்க வழக்கம் போல அவளது தோளை அணைத்திருந்தான் அவன்.
“நீ எடு மச்சான்! தேன்மலையில இருந்து தங்கத்தைக் கட்டி இழுத்துட்டு வந்திருக்கோம்னு கேப்ஷனோட இன்ஸ்டால போஸ்ட் போடு.”
வேதவதி சிரிக்க, அந்தத் தருணத்தை அழகாய்க் கிளிக் செய்தான் சஞ்சய்.

“இன்னைக்கு நைட் உன் ட்ரீட் அச்சு” – சஞ்சயும் இலக்கியாவும் பரபரக்க, ஒப்புக்கொண்டான் அவனும்.
அன்றிரவு அவர்கள் வீடு திரும்பியதும் “நீங்க தூங்கப் போறீங்களா?” என கண்கள் பளபளக்கக் கேட்டாள் வேதவதி. அட்சரனைக் கவிழ்க்க இந்தப் பார்வை போதுமே!
“நீ ஆசைப்பட்டா இன்னைக்கு நைட்டை தூக்கத்துல வேஸ்ட் பண்ணவேண்டாம்” என்றபடி அவளது மணிக்கட்டில் கைவிரல்களால் ஊர்ந்து விளையாடியபடியே கேட்டான்.
“எப்ப பாரு டர்ட்டியா யோசிக்குற நீ” என்றவள் அவனது முடியைப் பிடிக்க, “வலிக்குதுடி” என்று கெஞ்சிய பிறகு விடுவித்தாள்.
“தூங்கக்கூடாது. ஆனா நீங்க நினைக்குற மாதிரியும் இல்ல.” கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டுப் போனவள் திரும்பி அவனது அறைக்கு வந்தபோது, அவன் வாங்கியிருந்த லேவண்டர் கவுன் அவளது உடலைத் தழுவியிருந்தது.
தரையில் புரண்ட கவுனைக் கைகளில் அள்ளியபடி அவள் வந்த கோலம் அவனை ரசனையில் ஆழ்த்துவதாய்! கவுனைக் கைகளால் விரித்துக் காட்டியவள், “நல்லா இருக்கா?” என்று ஆசையாய்க் கேட்டாள்.
அவளிடம் அவன் காண விரும்பிய அப்பாவித்தனமான அழகு அந்நேரத்தில் அவளது விழிகளில் தெரிவதாய்! அதிலேயே அட்சரனின் கண்கள் கலங்கிப்போயின.
“அழகு! அப்பிடியே சிண்ட்ரெல்லா மாதிரி இருக்க” என்றவன் தனது கைகளால் நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தான். கூடவே அவளது இடையைப் பற்றி தன்னோடு இழுத்து அணைத்துக்கொண்டான்.

“கல்யாணம் பண்ணிக்கலாமா வனமோகினி? உனக்கு ஓகேனா மட்டும்.”
“பண்ணிக்கலாம்! நோ அப்ஜெக்ஷன் மை டியர் சுருட்டை முடி யட்சன்!”
சந்தோஷ மிகுதியில் இடையோடு சேர்த்து அவளைத் தன்னுயரத்துக்குத் தூக்கியவன் அப்படியே சுற்ற, கவுனும் அழகாய் விரிந்து இருவரையும் சூழ்ந்தது. மறுநாள் இருவரும் சேர்ந்து சதானந்தன் – ராஜேஸ்வரியிடம் தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார்கள்.
“ஏதோ சனிப்பெயர்ச்சியாமே? இந்த நேரத்துல கல்யாணம் பண்ணலாமானு ஜோசியர்கிட்ட கேக்கணும்” என்று சதானந்தன் வேண்டுமென்றே அட்சரனைச் சீண்ட,
“இந்த ட்வென்டி ட்வென்டி சிக்ஸ்ல போய் ஜோசியம் ஜாதகம்னு பூமர் மாதிரி பேசாதீங்கப்பா. எனக்கு இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் அவன் முகத்தைத் தூக்கிக்கொண்டு.
“நீ என்னடா சாக்லேட் வாங்கித் தாப்பாங்கிற ரேஞ்சுல கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்லுற.” ராஜேஸ்வரியும் சதானந்தனும் அவனை வேண்டுமென்றே வெறுப்பேற்றியதை வேதவதி அறிந்துகொண்டதால் அவளும் சிரித்தாள்.
“சிரிக்காதடி. அடுத்து உனக்கு மைண்ட் மாறிச் சண்டை போட்டுப் போறதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கணும்.”
முடிவில் சதானந்தனும் ராஜேஸ்வரியும் கஜேந்திரன் – கனகவல்லியிடம் திருமணம் பற்றிப் பேசி முடித்த பிற்பாடுதான் ஹெல்வட்டாசுக்குக் கிளம்பினான் அவன்.
காரில் ஏறும் முன்னர், “சாரியில நீ ரொம்ப அழகு வேதா. அந்தப் பர்ப்பிள் சாரியை மறக்க முடியல” என்றவன் தலைசுற்றுவதைப் போலச் செய்து காட்டவும், சிரித்தபடி ஸ்கூட்டியைக் கிளப்பினாள் வேதவதி.
சின்னச் சின்ன பாராட்டுகள் நமது முழு நாளையே இனிமையாக்கிவிடும் வல்லமை படைத்தவை. அன்றைய தினம் கல்லூரியிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் இனிய கனவில் மிதந்தவள் வீடு வந்தபோது, சதானந்தனும் ராஜேஸ்வரியும் எங்கோ கிளம்பத் தயாராகி இருந்தார்கள்.
“வேலூர்ல ஒரு கல்யாணம்டா. நானும் மாமாவும் போயிட்டு நாளைக்கு ஈவினிங் வருவோம். நீ வீட்டைப் பாத்துக்க. ஹான், அந்தப் பையனைக் கொஞ்சம் வேலை வாங்கு. நீயே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்காத. வரட்டுமா?”
“சரி அத்தை. காரைச் ஸ்பீடா ஓட்டாதீங்க மாமா” என்று அன்பாய் அவர்களை வழியனுப்பிவைத்தாள். அவர்கள் சென்றதும் வீட்டின் தனிமை கொஞ்சம் அசௌகரியமாய் அவளை உணரச் செய்தது.
“சாரி கட்டுனா என்ன?” தன்னைத் தானே கேட்டுக்கொண்டவள், கிரீம் வண்ணமும் பீச் வண்ணமும் பாதி பாதியாய் வந்து பார்டரில் மெல்லிய ஜரிகையிட்ட புடவையை அணிந்துகொண்டு தன்னையே கண்ணாடியில் பார்த்தாள்.
“நீ அழகுதான் வேதா” தன்னைத் தானே பாராட்டிக்கொண்டவள் காபி போடுவதற்கான சமையலறைக்கு வந்து சேர்ந்தாள்.
இன்னும் சிறிது நேரத்தில் அட்சரன் வீட்டுக்கு வந்துவிடுவான். தன்னைப் புடவையில் பார்த்தால் அவனது எதிர்வினை எப்படி இருக்கும்? சிறு முறுவலுடன் காபி போட்டுக்கொண்டிருந்த வேதவதியின் கண்கள் எதிர்பார்ப்புடன் சமையலறை வாயிலுக்கும் கேஸ் அடுப்புக்கும் மாறி மாறி நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன.
அட்சரன் ஹெல்வட்டாசிலிருந்து திரும்பியவன், “வேதா ஃப்ரீயா இருந்தா காபி போடேன் ப்ளீஸ். நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்று அவள் சமையலறையிலிருப்பதை அறியாமல் அறிவிப்பு போல உரத்தக் குரலில் சொல்லிவிட்டு அவனது அறைக்குப் போய்விட்டான்.
எப்போது வேண்டுமானாலும் அவன் சமையலறைக்கு வருவான்! அதை எதிர்பார்த்தே ஆவலாய்க் காத்திருந்தன வேதவதியின் விழிகளும் மனமும். சரியாகப் பால் பொங்கிய தருணத்தில் சமையலறைக்குள் ஆள் வரும் அரவம் கேட்டது அவளுக்கு. பாலைக் கப்பில் இருந்த டிக்காஷனில் கலந்தபோதே பாலைப்பூவின் நறுமணம் வெகு அருகில். கூடவே விசில் ஒலியும். அட்சரன்தான் வந்திருக்கிறான் என்பதைப் பார்க்காமலே அவள் கண்டுகொள்ள இந்த அறிகுறிகள் போதாதா?
காபியைக் கலந்தபடி திரும்பியவளைப் பாதாதி கேசம் பார்த்த அட்சரனின் விழிகளில் ரசனை ஒரு காதல் கவிதையாய்! வேதவதி காபி கோப்பையைக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டவன் அங்கிருந்து நகராமல் ஒரு கையைச் சமையல் மேடையில் ஊன்றி இன்னொரு கையால் காபியைப் பருக ஆரம்பித்தான். அவனது விழிகள் தனக்கும் சமையல் மேடைக்கும் இடையே சிக்கித் தன்னையே நோக்குகிற வேதவதியின் மீது பசை போட்டாற்போல ஒட்டிக்கொண்டன.
“திடீர்னு என்ன ஷேரி? இப்பிடி எக்கச்சக்கமா அழகா இருந்தா நாங்க எப்பிடித் தாக்குப்பிடிக்கிறது?” விளையாட்டாகக் கேட்டபடி காபியை அருந்தினான் அவன்.
“ஷேரியில நான் அழகா இருப்பேன்னு காலையில யாரோ சொன்னாங்க. திடீர்னு கட்டிப் பாக்கலாம்னு தோணுச்சு. கட்டச் சொன்னவங்க இவ்ளோ அழகை எதிர்பாக்கல போலயே” பதிலடி கொடுத்தவளின் விழிகளில் குறும்பு!
“எக்கச்சக்கசக்கமாஆஆஆன அழகு! இப்ப நான் காபியை ருசிக்கிறதா இல்ல உன்னை…” என்றவனின் தோளைப் பிடித்துத் தள்ளினாள் வேதவதி.

“இப்ப எல்லாம் வாயைத் திறந்தாலே டர்ட்டியா பேசுறிங்க.”
“ஏய் காபியை ருசிக்கவா உன்னை ரசிக்கவானு சொல்ல வந்தேன்டி. வரவர உன் மூளைதான் டர்ட்டியா சிந்திக்குது.”
வேதவதி வெட்கமும் சிரிப்புமாய் அவனைத் தலை சரித்துப் பார்த்தவள் இரு கரங்களையும் அவனது தோளில் பதித்துக்கொண்டாள்.
“தேங்க்ஸ் ஃபார் சுகர்லெஸ் காபி” – அட்சரன் கிண்டல் செய்ததும்தான் காபிக்குச் சர்க்கரை போடவில்லை என்பதே நினைவுக்கு வந்தது அவளுக்கு.
“உங்களைப் பார்த்தா எல்லாமே மறந்துடுது எனக்கு” என்று அதற்கும் அவனையே குறை சொன்னாள்.
“இப்ப நானும் இதே டயலாக்கைச் சொல்லணுமா?”
“அது உங்க இஷ்டம்.”
“எல்லாமே என் இஷ்டமா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?” அழுத்தமாய் ஏக்கமாய் வினவியவன், “ஷேரி வேற மனுஷனை டெம்ப்ட் பண்ணுது. பேசாம நாளைக்கு மானிங் வரைக்கும் நான் காந்தாரி மாதிரி கண்ணைக் கட்டிக்கட்டுமா?” என்று கேட்டு அவளது புடவை முந்தானையை எடுத்துக் கண்களில் கட்டுவது போல விளையாட்டாகச் சொல்லி தனது தவிப்பை மறைத்துக்கொண்டான்.
மனம் கொண்ட மையலை மனம் கவர்ந்தவனே சொல்ல, வேதவதிக்கு அதைக் கேட்பதற்குத் திகட்டவா போகிறது!
“பதில் சொல்லணும்” என்று சின்னதாய் மிரட்டல்.
“பிஹேவ் யுவர்செல்ஃப்” என்றவள் அவனை விலக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் சிரிப்போடு.
தனது அறைக்குள் வந்து பால்கனியில் நின்றவளுக்கு அந்தி வானத்தில் ஆழ்கடல் முத்தாய்த் தெரிந்த தெளிவற்ற நிலவு, இன்று அதீத அழகோடு மிளிர்வதாய் ஒரு பிரமை! எல்லாம் அவள் பின்னே வந்து நின்ற அட்சரனின் கரம் அவளது இடையில் பதியும் வரை மட்டுமே!
திடுக்கிட்டுத் திரும்பியவள் “என்ன?” என்று கண்களால் வினவ,
“எவ்ளோ நேரமாச்சு சாரி கட்டுறதுக்கு?” என்றான் விஷமப்பார்வையோடு.
“இருபது நிமிஷம்! இந்தச் சாரி வழுவழுனு இருக்குல்ல, சரியா கொசுவம் வைக்க முடியாம வழுக்கிட்டே இருந்துச்சு.”
“ப்ச்! உன்னோட இருபது நிமிஷ முயற்சியும் போராட்டமும் வேஸ்டாகப் போகுது வேதா.” சொன்னவனின் பார்வையில் கொப்புளித்த தாபத்தை இனியும் தடுக்க முடியாதென வேதவதிக்குத் தெரிந்துபோனது.
“அட்சரன்…” மெல்ல அவள் அழைத்ததில் அவன் உடல் சிலிர்த்துக்கொள்ள, இனியும் பால்கனியில் நின்று பொழுதை வீணாக்க விரும்பாதவன் அள்ளிக்கொண்டான் அவளைப் பொக்கிஷமாய்!

கதவுகள் மூடப்பட்டுத் திரைச்சீலைகள் இழுத்துவிடப்படுவதைத் திரைப்படம் போல வேடிக்கை பார்த்த வேதவதிக்கு, அட்சரன் தன் அருகில் வரவும் பதற்றம் பீடிக்க ஆரம்பித்தது.
“க…கதவு திறந்திருக்கு” என்று அவனை விலக்கப் போனவளை, “அதெல்லாம் உள்ள வர்றப்ப லாக் பண்ணியாச்சு” என்று விஷமப்புன்னகையோடு வாரியணைத்துக் கொண்டான் அட்சரன். கன்னம் வருடி, கூந்தல் இழைகளைக் காதோரம் ஒதுக்கி, கைவிரல்களை நீவி அவள் பதற்றத்தைத் தணித்தவனாய் சின்னதொரு முத்தத்தை ஈன்றான் அவளது கழுத்தோரம்.
அடிவயிற்றில் உருண்ட பதற்றப் பந்து சட்டென மார்புக்கூட்டுக்குள் ஏறியது போல இருந்தது வேதவதிக்கு.
அடுத்த முத்தமோ அவளது காலர் போனில்! முத்தம் என்னவோ ஈரமுத்தம்தான்! ஆனால் அவற்றைச் சுமந்திருந்த அட்சரனின் உதடுகள் வேட்கையில் தீயாய் அல்லவா தகித்தன!
இதமான அவனது அணைப்பிலும் முத்திரையாய்ப் பதிந்த முத்தங்களிலும் சகலமும் மறந்தவளாய் உருகிப்போனவள், கழுத்து வளைவில் பதிந்த அவனது உதடுகளின் உரசலில் கற்பூரமாய்க் கரையவும் ஆரம்பித்தாள். மேனி நோகாத மென்முத்தங்களில் ஆரம்பித்த சிருங்காரப் பொழுது, வன்முத்தங்களின் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியபோது மெய்யாகவே வேதவதி புடவை கட்ட அடைந்த சிரமங்கள் வீணாயின.
அச்சாரமாய் இதழ்கள் போரிட எங்கிருந்து வந்ததோ மாபெரும் வேட்கை! அது சுனாமியாய் மாறி அவர்களைச் சுழற்றியடிக்க, நீ நான் என்ற பிரிவினை மறைந்து நாமென்ற பிணைப்பு இறுகி அகமலர்ந்த பொழுதினில் வேதவதி பெருங்காதலோடு தன்னை அட்சரனிடம் ஒப்புக்கொடுத்தாள்.
ஒரு பெண்ணின் சரணாகதி அவளது காதலையும் நம்பிக்கையையும் வென்ற ஆணுக்குக் கொடுக்கும் போதை தனித்துவமானது! அந்தச் சரணாகதிப் பொழுதில் ஆளவும் ஆட்கொள்ளப்படவும் விரும்பும் ஆணுக்கு அவளை விட அற்புதம் வேறென்ன இருந்துவிடப்போகிறது? கிடைத்தற்கரிய புதையலாய் வேதவதியை அள்ளிக்கொண்ட அட்சரன் மனமொன்றி அவளோடு இரண்டறக் கலந்தான்.
காதலுக்கும் கூடலுக்கும் காலநேரம் தீர்மானிக்க முடியாது. தன்னியல்பாய்த் தன்னிச்சையாய்ப் பூக்கும் இந்த அழகான உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு மீண்ட பிறகே இந்த உண்மை அட்சரனுக்கும் வேதவதிக்கும் புரிந்தது. அவன் மேனியின் பாலைப்பூ நறுமண பெர்ஃபியூமின் வாசனை இப்போது அவள்மீதும் ஒட்டிக்கொண்டது.
அவனது நெற்றியில் புரண்ட சுருள் கேசத்தை ஒதுக்கியவள், “ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லி அவனது கன்னத்தில் முத்தமிட, வேண்டுமென்றே அவளை விலக்கினான் அட்சரன்.
“புடவை குடுத்த டெம்ப்டேஷனுக்குக் கொஞ்சமும் குறையாத டெம்ப்டேஷனைக் குடுக்குது உன் முத்தம். போதும்டி! இதுக்கு மேல உன்னைப் படுத்த விரும்பல.”
“இந்த வியாக்கியானமெல்லாம் காலம் கடந்தா தான் புரியும்ல?” என்றவள் அவனது புஜத்தில் அடிக்க,
“அம்மாஆ” என்று கத்தினான் அட்சரன்.
“என்னாச்சு?”
“ஆங் நொன்னாச்சு! நாளைக்கும் ரேபிஸ் வாக்சின் போடணும் நானு.”
“உன்னை…”
மீண்டும் அவனது கேசத்தை அவள் கொத்தாய்ப் பற்றி இழுக்க, சண்டையும் சமாதானமுமாய் அன்றைய இரவு கடந்து போனது அழகாய்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

