காலைப்பனிக்குள் காயும் வெயிலாய்!
காற்று அசைக்கும் கிளையின் இலையாய்!
அரும்புக்குள் தேனாய் தத்தளிக்கும் மனம்!
மொழிகளைத் தவிர்க்கும் மௌன வேட்கையாய்!
உதடுகள் மறுக்க உணர்வுகள் பூவாய்!
உள்ளும் ஒளியாய் பூத்தது காதலும்தானே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
-அட்சரனின் வேதா
காலையில் சோம்பல் முறித்தபடி எழுந்த அட்சரனின் பார்வையில் விழுந்தாள், அவனை முறைத்தபடி அருகில் அமர்ந்திருந்த வேதவதி.
“குட்மானிங் வேதா!” எழுந்து அமர்ந்தவன் அவளை அணைக்க வரவும், நறுக்கென அவனது இடுப்பில் கிள்ளிவைத்தாள் கோபத்தோடு.

“அம்மாஆஆ!” என அலறியபடி விலகியவனிடம், “எதுக்கு இங்க வந்தீங்க?” என்று கடுப்பாய் வினவினாள்.
“நீ நேத்து போட்ட ஆடியோ மெசேஜைக் கேட்டதுக்கு அப்புறமும் வராம இருந்தேன்னா, பறிபோகப்போறது என் வாழ்க்கைதானே” என்றான் அவன் ஆதங்கத்தோடு.
வேதவதி புருவத்தை ஆச்சரியமாய் உயர்த்தியவள், “இப்ப நீங்க வந்ததால மட்டும் நான் என் முடிவை மாத்திப்பேனா? நெவர். கூலிங் ஆஃப் பீரியடுக்கு அப்புறம் நீங்க உங்க வழியைப் பாருங்க. நான் என் வழியைப் பாக்குறேன்” என்று கையை வீசிக் கோபமாய்ச் சொல்லவும், அவளது கையைப் பற்றிக்கொண்டான் அட்சரன்.
“நான் பண்ணுனது தப்புதான் வேதா. ஐ அம் ரியலி சாரி. எனக்கு என் ஈகோவை விட நீதான் முக்கியம். வெறும் நாப்பத்தெட்டு மணிநேரம் யாரோ ஒருத்தி மாதிரி நீ பேசுனதையே என்னால தாங்கிக்க முடியல. ஒரேயடியா நீ யாரோ ஒருத்தியா மாறுனா நான் பைத்தியமாகிடுவேன். இதெல்லாம் புரிஞ்சதால்தான் ஓடிவந்தேன். என்னை நம்புடி.”
வேதவதி அவனை நம்பாதப் பார்வை பார்த்தாள். “ஈகோவுக்காக உங்க அப்பாவை விலக்கி வச்ச ஆள் நீங்க. உங்க வாய்ல இருந்து வர்ற வார்த்தையை நம்ப முடியல என்னால.”
பதில் சொன்னபடி எழுந்திருக்கப் போனவளின் கையைப் பற்றியவன், “நீ என்னை லவ் பண்ணுற வேதா” என்றான் ஆதங்கமாய்.
“இல்லனு சொன்னேனா? காதல் ரொம்ப வினோதமானது. அது சரியானவங்க மேலதான் வரணும்னு கட்டாயமில்ல. உங்களை மாதிரி ஈகோயிஸ்ட் மேல வந்த காதலுக்காக மொத்த வாழ்க்கையையும் என்னால பணயம் வைக்க முடியாது. வாழ்க்கையை நிம்மதியா வாழக் காதல் மட்டும் போதாது.”
ஆணித்தரமாகச் சொன்னவள், அவனது முகம் கலங்குவதைத் திருப்தியோடு பார்த்தாள்.
“இதுவரைக்கும் என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை மத்தவங்க எடுத்தப்ப யார் மனசும் காயப்படக்கூடாதுனு நான் யோசிச்சேன். ஆனா அதுல எக்கச்சக்கமா காயப்பட்டது நான்தான். நான் நினைச்சா இப்பவே உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு என் வீட்டோட இருந்துட முடியும். எங்க அப்பா அம்மா என்னைத் துரத்தப் போறதில்ல. அட்ஜெஸ்ட் பண்ணி வாழுனு அட்வைஸ் பண்ணவும் போறதில்ல. நான் யோசிக்குறது அத்தை மாமாவுக்காக. என் முடிவை அவங்க சப்போர்ட் பண்ணுறவரைக்கும் நான் இந்த உறவுல இருந்து விலகப்போறதில்ல. நாம பேசுன மாதிரி கூலிங் ஆஃப் பீரியட் முடியும். அதுக்குள்ள நாம ரெண்டு பேரும் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவங்கனு அவங்களுக்கே புரிஞ்சிடும். யாருக்கும் சங்கடமில்லாம பிரிய நான் எடுத்துக்கப் போற அவகாசம் இது. என் மனசை மாத்தலாம்னு கனவு கூட காணாதீங்க.”
பிடிவாதமாகச் சொன்னவள் அறையிலிருந்து வெளியேற, அவளை அப்படியே விட மனமில்லாமல் “வேதா…” என்று பரிதவித்தவனாய்த் தொடர்ந்தான் அட்சரன்.
அவன் இரவில் வந்து சேர்ந்த விவரம் வேதவதியின் பெற்றோருக்குத் தெரியும். மருமகனைக் கண்டதும் பூரித்துப்போனார்கள் இருவரும்.
“நைட் வந்தீங்கனு வேதா சொன்னா. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாமே? சம்பந்தி நல்லா இருக்காங்களா மாப்பிள்ளை?”
“ரொம்ப நல்லா இருக்காங்க மாமா. இப்பவே மணி நைன் ஓ கிளாக் ஆகிடுச்சே. நீங்க ஷாமில்லுக்குக் கிளம்பியாச்சா? உங்களோட லைப்ரரியைப் பாக்கணும்னு நினைச்சேன்.”
சில நொடிகளுக்கு முன்னர் வாணலியில்லாமல் அடுப்பில்லாமல் வறுத்தெடுக்கப்பட்டவனைப் போலன்றி, அத்துணை இயல்பாகப் பேசியவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வேதவதி.
“இன்னைக்குச் சாயந்திரம் வந்ததும் லைப்ரரிக்குப் போகலாம் மாப்பிள்ளை. கனகு! மாப்பிள்ளைக்குக் காபி குடும்மா. நான் கிளம்புறேன் மாப்பிள்ளை” என கஜேந்திரன் ஷாமில்லுக்குக் கிளம்பினார்.
“உங்களுக்குத் தோசைதான் பிரியம்னு வேதா சொல்லிருக்கா. குளிச்சுட்டு வாங்க. தோசை ஊத்துறேன்” என்றார் கனகவல்லி.
“எனக்குனு ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டாம் அத்தை. இன்னைக்கு எல்லாருக்கும் என்ன பிரேக்பாஸ்டோ அதையே நானும் சாப்பிட்டுக்குறேன்.”
மருமகனின் குணத்தை அறிந்து பூரித்துப் போனார் கனகவல்லி. “மாப்பிள்ளைக்கு வேணுங்கிறதை எடுத்துக் குடு” மகளிடம் கட்டளையிட்டுவிட்டு மீண்டும் சமையலறைக்குள் போய்விட்டார் அவர். வேதவதி முறைப்போடு அவளது அறைக்குள் செல்ல, அட்சரனும் அவளைத் தொடர்ந்தான்.
“குளிச்சுட்டு வாங்க.”
பதில் பேசாமல் இடுப்பில் கையூன்றிப் பார்த்தான் அவளை.
“என்ன?”
“நான் சொன்னதுல ஒரு வார்த்தையைக்கூட நீ நம்பலல்ல?”
“ஆமா!”
“நீ நம்பணும்னா நான் என்ன செய்யணும்?”
“நம்பிக்கையை வார்த்தையால ஜெயிக்க முடியாது. ஒருத்தரோட செயலை வச்சுதான் அவங்க மேல நம்பிக்கை வரும்.”
“ஓகே.”
இலகுவாகச் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் போனவன் திரும்பி வந்தபோது அங்கே வேதவதி இல்லை. அவளது சத்தம் சமையலறையில் கேட்டது. “என்ன சமைச்சுக் குடுத்தாலும் சாப்பிடுவார்மா. அத்தை வளர்ப்பு அப்பிடி.”
ஹாலுக்கு வந்தவன் “வேதா” என்றழைக்கவும், காபி தம்ளரோடு வந்தவள் “சாப்பிடுவோமா? நாம மட்டும்தான் சாப்பிடல” என்க, “நீ எனக்காக வெயிட் பண்ணுறியா?” என்று கேட்டவனின் கண்களில் விஷமத்தனம்.
வேதவதி அவனை முறைத்தபடியே சமையலறைக்குள் போனவள் இருவருக்கும் தட்டுகள், இட்லி வைத்திருந்த பாத்திரம், சாம்பார் பாத்திரத்தை எடுத்து வந்து ஹாலில் வைத்தாள்.
காபி குடித்தவனிடம், “இங்க டைனிங் டேபிள் கிடையாது. தரையில உக்காந்துதான் சாப்பிடணும். சம்மணம் போட்டு உக்காரத் தெரியுமா?” என வேண்டுமென்றே சீண்டியவளாய் வினவ, “நதியோட நிச்சயதார்த்தம் நடந்துச்சே, அன்னைக்கு ஈவ்னிங் உன் இடுப்புல சந்தனம் பூசிவிட்டப்ப நான் தரையிலதான் உக்காந்திருந்தேன்” என்றான் தெனாவட்டாக.
வேதவதியின் முகம் செந்தூரம் பூசிக்கொள்ள, “ஆமா இல்லனு மட்டும் சொன்னா போதாதா? ஃப்ளாஷ்பேக் வரைக்கும் போவீங்களா?” எனச் சிடுசிடுத்தாள் அவள்.
“அழகான மொமண்ட்டை அப்பப்ப ஞாபகப்படுத்திக்கிட்டா காதல் இன்னும் பெருகுமாம்.”
“பெருகிட்டாலும்…”
இருவருக்கும் தட்டில் இட்லியை எடுத்து வைத்துச் சாம்பார் ஊற்றியவள் அவனை அமருமாறு கண் காட்டியதும் அட்சரனும் அமர்ந்தான். தன்னை நெருங்கிச் சம்மணமிட்டு அமர்ந்தவனை முறைத்தாள் வேதவதி. இருப்பினும் எதையும் சொல்லாமல் நகர்ந்து அமர்ந்தவள், அவன் மீண்டும் வேண்டுமென்றே நெருங்கி அமரவும் பொங்கிவிட்டாள்.

“ஏன் என் மடியில வந்து உக்காருங்களேன்!”
“இப்ப அத்தையும் மாமாவும் இருக்குறாங்க. அப்புறமா உக்காந்துக்குறேன்” என்றான் அட்சரன் குறும்புச்சிரிப்போடு.
“உங்களை என்ன பண்ணுறது?”
“என்ன வேணும்னாலும் பண்ணிக்க. எனக்கு நோ அப்ஜெக்ஷன்.”
“இப்பிடி நக்கலா பேசுதுல்ல, இந்த வாயை ஜோக்கர் வாய் மாதிரி கிழிச்சுத் தையல் போட்டுவிடணும் போல இருக்கு.”
“இந்த வாய்க்கு அதை விட பெஸ்டா ஒரு தண்டனை இருக்கு. அதை குலாப் ஜாமூனோட சேர்த்து நிறைவேத்துனா நல்லா இருக்கும்.”
விஷமத்தோடு சொன்னவன் தன் முன்னே சுடச்சுடப் பரிமாறப்பட்ட இட்லி சாம்பாரில் கவனமானான். அவனது காலின் பெருவிரல் வேதவதியின் கால் பெருவிரலைத் தீண்டிக்கொண்டே இருக்க, கடுகடுத்தபடி இட்லியை விழுங்கினாள் அவள்.
“ஒழுங்கா காலை எடுத்துடுங்க. இல்லனா கிள்ளி விட்டுருவேன்.”
“ஏன் எப்பவும் வன்முறையாவே யோசிக்குற? அன்பா பொறுமையா இருக்கக் கத்துக்க.”
கனகவல்லி ஆங்காங்கே நடமாடியதால் வேதவதி அவனிடம் கத்த முடியாமல் தவித்தாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல திருமலை கோவில்ல சுதாராணி மகளுக்குக் கல்யாணம். நாம குடும்பத்தோட போகணும் வேதா. செங்கோட்டை லைப்ரரிக்குச் சாயந்திரமா போ” என்றார் கனகவல்லி மகளின் தட்டில் இன்னொரு இட்லியை வைத்தவராக.
“சரிம்மா.”
“உங்களுக்குச் சிரமம் எதுவும் இல்லையே மாப்பிள்ளை?”
“எனக்கு ஒரு சிரமமும் இல்ல அத்தை. வேஷ்டி கட்டத் தெரியாது எனக்கு. அது ஒன்னுதான் சிரமம்.”
கனகவல்லிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “உங்களுக்குச் சௌகரியப்பட்ட மாதிரி டிரஸ்ல வாங்க மாப்பிள்ளை.”
அன்னையிடமும் தந்தையிடமும் அவன் ஏதோ நீண்டநாட்கள் பழகியவனைப் போலப் பேசுவதைக் குறுகுறுவெனப் பார்த்தாள் வேதவதி. சாப்பிட்டு முடித்ததும் தனது அறைக்குள் வந்தவள் புடவையைத் தேடியபோது பர்பிள் வண்ண மல்மல் புடவை கண்ணில் பட்டது. அதைக் கையில் வைத்து வருடியவள், அறைக்குள் விசில் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள்.
“அழகான சாரி. இதுல உன்னைப் பார்த்த மொமண்ட்டை என்னால மறக்கவே முடியாது.”
“என்னாலயும் அந்த மொமண்ட்டை மறக்கவே முடியாது. தேவையில்லாம என் லைஃபைக் காம்ப்ளிகேட் ஆக்குன மொமண்ட்ல ஒன்னாச்சே.”
வேதவதி சுள்ளென்று பேசவும் அட்சரனின் புருவங்கள் ஏறியிறங்கின. “அதாவது நாம பார்த்துக்கிட்ட மொமண்ட் உன் லைஃபைக் காம்ப்ளிகேட் ஆக்கிடுச்சு. அப்பிடித்தானே?”
“அப்பிடித்தான்! ரொம்ப சிம்பிளா அமைதியா போய்க்கிட்டிருந்த வாழ்க்கை தடம் மாறுனதே அங்கதானே. ஆனா ஒன்னு, ஒவ்வொருத்தர் மாதிரி அது எனக்குக் கிடைச்ச அவமானத்துக்கான தொடக்கப்புள்ளினு நான் குதர்க்கமா யோசிக்கமாட்டேன்.”
தன்னை அவள் குத்திக் காட்டுவது அட்சரனுக்குப் புரியாமல் இல்லை. சன்னச்சிரிப்போடு அவளை நெருங்கியவன், “நீ எவ்ளோ திட்டுனாலும் எனக்குக் கோவம் வராது. இந்த ஊர் எனக்கு ஏதோ மாயமந்திரம் போட்டுடுச்சுனு நினைக்குறேன். ஹனிமூன் வந்த ஃபீல்தான் வருதே தவிரக் கோவம் வரமாட்டேங்குது” என்றான்.
வேதவதி புடவையை மார்போடு அணைத்துக்கொண்டபடி அவனை முறைத்தாள். “அது எப்பிடி எதுவுமே நடக்காத மாதிரி ஃப்ளர்ட் பண்ணுறிங்க?”
“யாருக்கு என்ன வேணுமோ அதைப் பத்தி மட்டும்தானே யோசிப்பாங்க. உனக்கு என்கூடச் சண்டை போடணும். எனக்கு உன் கூட ஃப்ளர்ட் பண்ணணும். ஆனா ஒன்னு, ஒவ்வொரு வார்த்தைக்கும் நீ கோவப்படுறதுக்கு டென் செகண்ட்ஸ் முன்னாடி கொஞ்சூண்டு வெட்கப்படுறல்ல, அது பாக்க நல்லா இருக்கு. ஹெவன்லி ஃபீல்!”
வேதவதி முகத்தைச் சுளித்தவள், “ரொம்ப ரொம்ப க்ரிஞ்ச் ப்ரோ” என்று நக்கலாய்ச் சொல்லிவிட்டு நகர, அட்சரனுக்குச் சின்னதாய் ஓர் அதிர்ச்சி.
“எதே? ப்ரோவா? நீ கெட்ட வார்த்தைல கூட திட்டு. ஆனா ட்ரெண்டுங்குற பேருல ப்ரோ க்ரோனு கூப்பிட்டனு வையேன், கனவுல கூட அப்பிடி கூப்பிட முடியாதபடிக்குப் பண்ணிடுவேன்.”
“என்ன பண்ணுவீங்க? ஹான்!” முறைத்தபடி நெருங்கி வந்தவளின் பின்னங்கழுத்தைப் பற்றிக்கொண்டான் அட்சரன்.

“எல்லா நேரமும் நாம ரொமான்ஸைத் தொடங்குறதுக்குக் குலாப் ஜாமூன் தேவையில்ல பொண்டாட்டி மேடம். இன்னொரு தடவை ப்ரோனு கூப்பிட்டுப் பாரேன். அப்புறம் தெரியும்.”
சின்னதாய் ஒரு மிரட்டல்தான்! உள்ளுக்குள் பரபரத்தாலும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் இமைகளைக் கொட்டியபடி நின்றாள் வேதவதி. இப்படி நிற்பது அட்சரனுக்கும் அவஸ்தைதான். ஒன்று முத்தமிடவேண்டும், இல்லையேல் விலகிவிட வேண்டும். இரண்டுங்கெட்டானாய் நாசிகள் உரசும் அளவுக்கு நெருங்கி நின்றும் இருவரது உதடுகள் இணையாமல் விரதம் காப்பது பெருங்கொடுமையாய் இருந்தது அவனுக்கு.
தங்களுக்குள் இருக்கும் விலகலை ஒற்றை முத்தத்தில் இல்லாமல் போகச் செய்யும் அளவுக்கு வேகம் இருந்தாலும், எதிரில் நிற்பவளின் மனநிலையை மதிக்கவேண்டுமே!
“உஃப்!” பெருமூச்சு விட்டபடி அவளது பின்னங்கழுத்தை விடுவித்தவன், “ரொமான்ஸ் விஷயத்துல மட்டும் மனுஷன் சிவிலைஸ்டு ஆகிருக்கவேண்டாம்னு தோணுது. ரொம்ப நியாயமா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என்று கடுப்போடு முணுமுணுத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
அவனால் வேதவதியின் நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளது நம்பிக்கையின்மையில் நியாயம் இருப்பது போலத் தனது தவிப்பிலும் நியாயம் இருப்பதாக எண்ணினான் அட்சரன். அவன் செய்த கிறுக்குத்தனங்களின் விளைவு, அனைத்தையும் உதறி நீயே என் சரணாகதியெனச் சத்தியம் செய்தாலும் வேதவதி அவனைச் சந்தேகத்தோடு அணுகுகிறாள். அவளது நம்பிக்கையை ஜெயிப்பது கஷ்டம் என்றாலும் செய்துதான் ஆகவேண்டுமெனத் தீர்மானித்தான் அவன்.
சிறிது நேரத்தில் கனகவல்லியிடம் தையல் வகுப்புக்கு வந்த பெண்கள், அட்சரன் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவனிடம் குசலம் விசாரித்தார்கள். அவர்களிடமும் எந்தவிதத் தடையுமில்லாமல் அவன் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தபடி மடிக்கணினியை எடுத்துக்கொண்டாள் வேதவதி.
“தம்பி தங்கமான புள்ளையா இருக்கு. அந்தச் சாந்தா என்னவெல்லாம் சொன்னா? அம்புட்டும் கனகவல்லிக்கா மேல இருக்குற வயித்தெரிச்சல். கடன் வாங்காம சண்டை சச்சரவு இல்லாம கௌரவமா வாழுறவங்களைக் கண்டா புகைச்சல் வராமலா இருக்கும்?”
வேதவதி நழுவதைக் கண்டவன், “ஏய்! எங்க போற?” என்று கேட்க, “எங்கயோ போறேன். உங்களுக்கென்ன?” என்று ஆரம்பித்தவள் கனகவல்லி வரவும் சிரித்த முகமாய் “யாழு வீட்டுக்குப் போறேன்” என்றாள்.
“மாப்பிள்ளை வந்திருக்கார். அங்க போய் என்ன பண்ணப்போற? அவருக்குப் பொழுது போகாது. ஒழுங்கா வீட்டுல இரு” கனகவல்லி தடையுத்தரவு போட்டுவிட, தனது அறைக்குள் போய் அமர்ந்துகொண்டாள் வேதவதி.
அவள் கட்டிலில் ஒரு பக்கம் அமர்ந்து தட்டச்சு செய்ய, இன்னொரு பக்கம் அமர்ந்தவனோ இலக்கியாவிடம் ஐபேட் மூலமாக உரையாடினான். வீடியோ அழைப்பில் வேதவதியையும் காட்டினான். ‘எப்படியோ நல்லா இரு’ என்று சைகையில் ஆசிர்வதித்தவள், அவனிடம் சில நாட்களுக்கு முன்னர் வந்த மேனுஸ்கிரிப்ட் ஒன்றைப் பற்றிச் சொல்லவும், கொஞ்சம் போலப் பொறுமை விடைபெற்றது அட்சரனிடமிருந்து.
“அந்தக் கதையை நான் படிச்சிட்டேன். நல்லா இருக்கு. ஆனா வார்த்தைகள் அங்க அங்க தொங்குது. வாக்கிய அமைப்பு, வேற்றுமை உருபுனு ஒன்னுமே தெரியல. நாம உக்காந்து தமிழ் இலக்கணம் பாடம் எடுக்க முடியாது இலக்கியா. ரிஜெக்ட் பண்ணிடு.”
கறாராக அவன் சொல்வதைக் கவனித்தாள் வேதவதி. “ஆனா ரைட்டர் கொஞ்சம் ஃபேமஸான ஆளு.”

“சோ வாட்? இங்க எழுத்துக்குத்தான் மரியாதை. பிரபலத்துவத்துக்கு இல்ல. தயவுதாட்சண்யம் பாக்காம இப்பவே ரிஜெக்ட் பண்ணு. அதிகமா பேசுனாங்கனா கான்ஃபரன்ஸ் கால் போடு. நான் பேசுறேன்.”
அழைப்பைத் துண்டித்தவன் வேதவதி தன்னையே பார்க்கவும், என்ன என்பது போல் தோள்களைக் குலுக்கினான். அவள் பதில் பேசாமல் இருக்கவும் அவனே அவளது எண்ணவோட்டத்தைக் கண்டறிந்தாற்போலப் பேசினான்.
“இந்த ஈகோவைத் தூக்கியெறிஞ்ச லவர் பாய் அவதாரம் எல்லாம் உனக்கு மட்டும்தான். மத்தபடி அட்சரன் எப்பவும் யாருக்காகவும் மாறமாட்டான்” என்றான் நெற்றியில் சரிந்த தனது கேசத்தைச் சுண்டிவிட்டவனாய்!
அன்று மாலை கஜேந்திரன் வந்ததும் அவரோடு தேன்மலையில் அவர் நடத்தும் தனியார் நூலகத்துக்குப் போய்விட்டான். மொத்தமே நானூறு சதுர அடி கொண்ட அந்த கிராமத்து நூலகத்தை அவர் கச்சிதமாய் வைத்திருப்பதைப் பார்வையிட்டவன், “டிஸ்ட்ரிக்ட் லைப்ரரி ஆபீஸர்கிட்ட இதை வில்லேஜ் லைப்ரரியா மாத்துறதுக்குப் பேசி பாக்கலாமே மாமா?” என்றான்.
“அதுக்கு நிறைய புரொசிஜர் இருக்கு மாப்பிள்ளை. நம்ம ஊருல மக்கள் தொகை கம்மி. குறைஞ்சது ஆயிரம் பேர் இருக்குற ஊர்லதான் பகுதிநேர நூலகமோ கிராமப்புற நூலகமோ அமைப்பாங்க. அதுலயும் இருநூறு மெம்பராவது இருக்கணும். இந்த லைப்ரரிய நான் என்னோட சொந்த ஆர்வத்துல நடத்துறேன். தேன்மலை அரண்மனைக்காரங்க இந்தக் கட்டிடத்தைக் குடுத்திருக்காங்க. சின்னதா ஒரு ஆத்மதிருப்தி. குழந்தைங்க, பெரியவங்கனு ஆளுங்க வந்து உக்காந்து ரெண்டு புத்தகத்தைப் புரட்டுறப்ப ஒரு சந்தோஷம் கிடைக்குது எனக்கு.”

வாசிப்பில் கஜேந்திரனுக்கு இருக்கும் ஆர்வம்தான் அவரது மகளை எழுதத் தூண்டியிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான் அட்சரன். நூலகத்தை மூடும் வரை மாமனாரும் மருமகனும் அங்கேயே இருந்தார்கள்.
“மாப்பிள்ளையும் நானும் வர டைமாச்சுனா தூங்கிடுங்க கனகு” என்று கஜேந்திரனும் மொபைலில் தகவல் சொல்லிவிட்டார் வீட்டினருக்கு. கதவை அடைத்துவிட்டு மெதுவாக நடந்தார்கள் இருவரும்.
“கல்யாண விஷயத்துல எதுவும் பிரச்சனை இல்லையே மாப்பிள்ளை?”
“அதெல்லாம் இல்ல மாமா. சனிப்பெயர்ச்சில என் ராசிக்கு ஏதோ இஷ்யூனு தள்ளிப் போட்டிருக்காங்க. மத்தபடி இப்ப நீங்க தாலி எடுத்துக் குடுத்தாலும் வேதா கழுத்துல கட்ட நான் ரெடியா இருக்குறேன்.”
சொன்னவனின் தோளில் அவர் உரிமையாய்க் கை போட்டுக்கொள்ள, அட்சரனுக்கு அந்த இடத்தில்தான் வேதவதியின் பெரியவர்களைப் பற்றிய யோசனைக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. இருவரும் வீட்டுக்கு வந்து அமைதியாகச் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட தட்டுகளை எடுக்கப் போனவனிடம், “இதெல்லாம் நீங்க செய்யாதீங்க மாப்பிள்ளை” எனச் சங்கடமாய்த் தடுத்தார் கஜேந்திரன்.
“ஏன் மாமா? சென்னைல என் அப்பா அம்மாவை வேதா அவ்ளோ அன்பா மரியாதையா நடத்துவா. அவளோட பேரண்ட்ஸை நானும் அப்பிடித்தானே நடத்துறதுதானே சரி? குடுங்க. இதுல என்ன இருக்கு? எங்க அம்மாவுக்கு நான் சமையலுக்குக் காய்கறி எல்லாம் கட் பண்ணிக் குடுப்பேன்” என்றபடி தட்டுகளை வாங்கிக்கொண்டான் அட்சரன்.
கஜேந்திரனுக்கு அந்த இடத்தில் உச்சி குளிர்ந்து போனது. கைகழுவிவிட்டு உறங்கச் சென்றுவிட்டார் அவர். அட்சரனின் பேச்சில் உறக்கம் கலைந்து வேதவதியும் வந்துவிட்டாள். அவன் பேசியதை அவளும் கேட்டுவிட்டாள்தான். ஆனாலும் முழுதாய் நம்பிக்கை மலர மறுத்தது அவளுக்குள். சமையலறைக்குள் புகுந்தவள் அட்சரனிடமிருந்து தட்டுகளை வாங்கிக்கொண்டாள்.
“நான் கழுவிக்குறேன். நீங்க தூங்குங்க” என்றவளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தான் அட்சரன்.
“தூங்கச் சொன்னேன் உங்களை.”
“நாங்க கழுவக்கூடாதா? இந்த விஷயத்துல நீ அசல் கிராமத்துப்பொண்ணுனு நிரூபிக்குற வேதா.”
“அதிதி தேவோ பவ. கேள்விப்பட்டதில்ல?”

அட்சரனுக்குச் சுர்ரெனக் கோபம் தலைக்கேறியது. “நான் ஒன்னும் விருந்துக்கு வரல.”
வேதவதி ‘அப்படியா’ என்பது போலக் கண்களை விரித்துக் கேலிப்பார்வை பார்த்துவிட்டு, கைகளைத் துணியில் துடைத்துக்கொண்டாள்.
“நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காக எதையும் செய்யல” விறைப்பாய்ச் சொன்னான் அவன்.
“நான் அப்பிடி சொன்னேனா?”
“உன் பார்வை சொல்லுதுடி. இந்தப் பார்வைல இருந்த அப்பாவித்தனமும் நம்பிக்கையும் எங்க போச்சு?”
“அதை நீங்க இழந்துட்டீங்க. ஒருவேளை நீங்க என் நம்பிக்கையைக்கூட ஜெயிக்கலாம். ஆனா சரி தப்பு பத்தி யோசிக்காம நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுன என்னோட அப்பாவித்தனத்தை எப்பவும் நீங்க மறுபடி பாக்க முடியாது.” உறுதியாய்ச் சொல்லிவிட்டுப் போனவளை எண்ணிக் கவலை வந்தாலும், ‘ஒருவேளை நீ என் நம்பிக்கையை ஜெயிப்பாய்’ என்று அவள் சொன்னதில் சாந்தமடைந்தது அட்சரனின் உள்ளம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

