“சாகர் குரூப்போட பேர் பிசினஸ் வேர்ல்ட்ல ரொம்ப ஃபெமிலியர் ஆனது… அதை என்னோட அடையாளமா வச்சிக்க எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல… எனக்குனு ஒரு அடையாளத்தை ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்… பிசினஸ் பண்ணுற ஐடியா இருந்துச்சு… பட் எந்த ஃபீல்டை செலக்ட் பண்ணலாம், எதுல ப்ராஃபிடபிளிட்டி அதிகம்னு மார்க்கெட்டை கொஞ்சம் ஸ்டடி பண்ண வேண்டியது இருந்துச்சு… அப்ப தான் காஸ்மெட்டிக்ஸ் இண்டர்ஸ்ட்ரியோட அசுர வளர்ச்சி என் கவனத்துக்கு வந்துச்சு… காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில ஸ்கின்கேர் ப்ராடக்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதை மார்க்கெட்டை ஸ்டடி பண்ணி தெரிஞ்சிக்கிட்டேன்… ஒரு காலத்துல இந்தியன் மக்கள் ஃபேர் ஸ்கின் மோகத்துல இருந்தாங்க… ஆனா இப்ப உள்ள யங்ஸ்டர்ஸ் ஸ்கின் கலரை விட ஸ்கின்னோட பாதுகாப்புக்கு மெனக்கிடுறாங்கனு நான் தெரிஞ்சிக்கிட்டேன்”
– கிரிஷ்
கெட்வெல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை…
வெடித்துச் சிதற தயாராகும் எரிமலை அமைதியாய் புகையும். அதே போல மனதுக்குள் குமைந்தவாறு அமர்ந்திருந்தாள் நித்திலா. செவிலி கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்ட பிறகும் கூட ஒரு பொட்டு உறக்கம் வரவில்லை.
அவளுக்குத் துணையாக விக்ரம் அமர்ந்திருந்தான். சற்று முன்னர் தான் வந்தான். அவனிடம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் நித்திலா.
அதன் பின்னர் தான் இந்த நீண்ட அமைதி ஆரம்பித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விக்ரமுக்குக் கிருஷ்ணராஜசாகரின் தந்திரமான செயல்பாடுகள் பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதிலிருந்து மீள்வதற்கு அவனுக்குச் சிறிது நேரம் தேவை.
கைகளில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் மொபைல் இசைக்கவும் எடுத்துப் பார்த்தான். சாவித்திரி அழைக்கிறார் போல என தொடுதிரையைப் பார்த்தவன் அதில் வெளிநாட்டு எண் வரவும் குழம்பினான்.

நிறைய மோசடி வேலைகள் வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளிலிருந்து தானே ஆரம்பிக்கின்றன. எனவே மறுயோசனையின்றி அழைப்பைத் துண்டித்தான் விக்ரம்.
ஆனால் அடுத்த நொடியே மீண்டும் அழைப்பு வந்தது. விக்ரமும் சளைக்காமல் துண்டித்தான். இப்படியே எத்தனை முறை தொடரும்?
சலித்துப் போய் அழைப்பை ஏற்றவன் “யாருயா நீ ஸ்காமுக்குப் பிறந்த செவன் பாயிண்ட் ஃபைவ்? கட் பண்ண பண்ண விடாம கால் பண்ணுற… கார்ட் மேல இருக்குற நம்பரை கேக்க போறியா? சாரி என் கிட்ட கார்டே கிடையாது… இல்ல பேங்கோட பேக்-ஆபிஸ்ல இருந்து பேசுறேன்னு புருடா விடப்போறியா? ஏன்டா சைலண்டா இருக்க? பேசுடா டேய்” என கொதிக்க மறுமுனையில் இருப்பவர் தான் யாரென அவனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“லேடி வாய்ஸ்ல பேசி ஏமாத்த பாக்குறியாடா பாடிசோடா?” என அதற்கும் பொங்கினான்.
நித்திலாவின் கவனம் அவன் பக்கம் திரும்பியது.
“யார் விக்கி? ஏன் இவ்ளோ ஹார்ஷா பேசுற?”
“வெளிநாட்டு நம்பர்ல இருந்து கால் பண்ணிருக்கான் நித்தி… ஸ்காம் நம்பர்னு நான் கண்டுபிடிச்சதும் ஸ்ரீநயனினு லேடி நேம் சொல்லி லேடி வாய்ஸ்ல பேசி என்னை ஏமாத்த பாக்குறான்”
ஸ்ரீநயனி என்ற பெயரில் நித்திலா நிதானித்தாள். மேற்கொண்டு வசவுகளை அள்ளிவிடப்போன விக்ரமைத் தடுத்தவள் அவனிடமிருந்து மொபைலை வாங்கிக்கொண்டாள்.
“நயனி?”
சந்தேகமாக வினவினாள் நித்திலா.
மறுமுனையில் ஸ்ரீநயனி விக்ரமின் பேச்சால் வந்த கடுப்பை உதறிவிட்டு உற்சாகத்தோடு “அண்ணி” என்றாள்.
நித்திலாவுக்கு அவளைப் போல உற்சாகமாக பேச முடியவில்லை. ஒட்டுமொத்த உணர்வுகளும் அடங்கி அமைதியாய் ஓய்ந்து போய் இருந்தவளுக்கு அதற்கு மேல் பேசுவதற்கு குரல் எழவில்லை.
“அண்ணி பேசுங்க ப்ளீஸ்”
ஸ்ரீநயனி இறைஞ்சினாள்.
அடைத்துக்கொண்ட தொண்டையைச் சிரமப்பட்டுச் செருமி சரி செய்துகொண்டாள் நித்திலா.
“சொல்லு நயனி”
“எப்பிடி இருக்கிங்க அண்ணி?”
“உங்க அண்ணன் சிம்லாக்கு வர்ற வரைக்கும் நல்லா இருந்தேன்”
சுருக்கமான பதில் தான். ஆனால் கேள்விக்குச் சொந்தகாரியின் மனதில் சுருக்கென தைத்தது. இப்படியெல்லாம் பேசுபவள் இல்லை நித்திலா என்பது ஸ்ரீநயனிக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் தமையனின் கைங்கரியத்தால் வந்த வினை.
“இப்ராஹிம் எல்லாத்தையும் சொன்னார் அண்ணி… அண்ணா… ப்ச்”

“எனக்கும் எல்லாம் தெரியும் நயனி”
ஸ்ரீநயனிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது. அண்ணிக்கு எப்படி உண்மை தெரிந்திருக்கும்? அண்ணன் அவ்வளவு எளிதில் தெரியவிட்டிருக்க மாட்டானே? அவனது திட்டத்தில் எப்போதுமே ஓட்டை விழுந்ததில்லை.
“உன் அண்ணா சாதாரண டியூமரை கேன்சர் டியூமர்னு பொய் பயாப்சி ரிப்போர்ட் குடுக்க வச்சு என் வாய்ல இருந்தே அம்ரித் இனிமே அவரோட பொறுப்புனு சொல்லவச்சது வரைக்கும் எல்லாமே தெரியும்… அம்ரித் மேல இருக்குற பாசத்தால மட்டும் தான் இப்பிடி செஞ்சார்னு சொன்னா அதை நான் நம்பமாட்டேன்”
ஸ்ரீநயனிக்கு தமையனின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடலாமா என்று ஒரு கணம் தோன்றியது. ஏற்கெனவே அவர்களுக்குள் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை. இப்போது கிருஷ்ணராஜசாகரின் திட்டத்தைக் கூறிவிட்டால் மொத்தமாக நித்திலா அவனை வெறுத்துவிடுவாளே!
அவர்கள் மீண்டும் வாழ்க்கையில் இணைவதற்கான சாத்தியக்கூறாக அம்ரித் இருப்பதால் சேர்ந்தால் தான் என்ன தப்பு என்று தோன்றியது ஸ்ரீநயனிக்கு.
கொஞ்சம் சுயநலமான எண்ணம் தான். கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை அடியோடு மறந்துவிட்டு என் அண்ணனோடு சேர்ந்து வாழேன் என நித்திலாவிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கோரிக்கைவிடுப்பாள் அவள்?
“டாக்டர் என்னை இப்ப நடக்கக்கூடாதுனு சொல்லிருக்காங்க… எப்பிடியும் ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கணும்… இந்த ஒரு மாசம் நான் அம்ரித்தை காண்டாக்ட் பண்ணப்போறதில்ல… உன் அண்ணன் எப்பிடி என் மகனோட பாசத்தைப் பகடைக்காயாக்கி ஜெயிச்சாரோ அதே வழில நானும் போகப்போறேன்”
நித்திலாவின் இந்த பேச்சு ஸ்ரீநயனிக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அவளுக்கு இப்போது நித்திலாவின் மீதும் கோபம் வந்தது.
“உங்க ரெண்டு பேரோட சண்டையில அம்ரித்தை ஏன் பலியாடு ஆக்குறிங்க அண்ணி? அண்ணன் இப்பிடி தான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்… இப்ப அண்ணனோட ஃபீமேள் வெர்சனா நீங்க ஏன் மாறணும்னு நினைக்கிறிங்க? பெத்தப்பிள்ளையோட வேதனை உங்க கண்ணுக்குத் தெரியலையா?”
“இப்ப நான் அம்ரு கிட்ட பேசுனா மட்டும் அவன் என் கிட்ட ஓடோடி வந்துடுவானா நயனி? கட்டாயம் வரமாட்டான்… ஏன்னா உன் அண்ணன் அவனை அப்பிடி மயக்கி வச்சிருக்கார்… அப்பா கூட இருக்கிறது தான் நல்லதுனு வெறும் ஏழே நாள்ல என் பிள்ளை மனசுல பதிய வச்சிட்டார்… என் பிள்ளை என்னை சென்னைக்குக் கூப்பிடுறானே தவிர அவன் இங்க வர்றதை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல… அப்பா கூடவே இருந்துக்கலாம், அம்மாவ வீடியோகால்ல பாத்தா மட்டும் போதும்னு நினைக்குறான் அம்ரித்… அவன் அப்பா மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான பாசத்துக்கு முன்னாடி நான் கூட அம்ரித்துக்கு முக்கியமா தெரியல நயனி… அவனா என்னைத் தேடி சிம்லாவுக்கு வர்ற வரைக்கும் நான் அவன் கூட பேசப்போறதில்ல”
இவள் என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள் என சலித்துப்போனாள் ஸ்ரீநயனி.
“நீங்க ஸ்மார்ட்டா மூவ் பண்ணுவிங்கனு நினைச்சேன் அண்ணி”
“புரியல நயனி”
“நீங்க இவ்ளோ யோசிக்கிறிங்க, எங்க அண்ணா இதை யோசிக்காமலா இருப்பார்? உங்களுக்கும் அம்ரித்துக்கும் இடையில இடைவெளி விழ விழ அவர் அம்ரித்தோட உலகமா மாறிடுவார்… நீங்க எடுத்த இந்த முடிவால அம்ரித்தை இழந்துடுவிங்க… அண்ணா அதை தான் எதிர்பாக்குறார்… அவர் எதிர்பாத்த மாதிரியே நீங்களும் நடந்துக்கிறிங்கண்ணி”
ஸ்ரீநயனி விட்டேற்றியாகக் கூறிய செய்தியில் நித்திலா யோசனைக்குள்ளானாள்.
“உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கா அண்ணி?”
“உன்னோட நியாயமான குணம் மேல எனக்கு எப்பவும் நம்பிக்கை இருக்கு நயனி”
“அப்ப நான் சொல்லுற மாதிரி செய்யுங்க… கண்டிப்பா அம்ரித் உங்க கிட்ட வந்துடுவான்”
ஸ்ரீநயனி கூறிய திட்டத்தை முழுவதுமாக காது கொடுத்து கேட்டாள் நித்திலா. அது சரியாக வருமா? தயங்கினாள் அவள்.
சரியாக வருமென ஸ்ரீநயனி அடித்துக் கூறினாள்.
நித்திலாவின் ஒவ்வொரு தயக்கமும் அவளுக்கும் அம்ரித்திற்குமிடையேனான உறவில் நிரந்தர பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்பதை தெளிவாகப் புரியவைத்தாள். அதை தான் கிருஷ்ணராஜசாகரும் விரும்புகிறான் என ஸ்ரீநயனி கூறினாள்.
தனக்கு உதவவேண்டுமென இவள் ஏன் துடியாய் துடிக்கிறாள்? நியாயப்படி கிருஷ்ணராஜசாகருக்கு ஆதரவாகத் தானே ஸ்ரீநயனி நிற்கவேண்டும்! அவளது இயல்பை அறிந்திருந்தும் இந்தக் கேள்வி நித்திலாவுக்குள் எழுந்தது. மறைக்க விரும்பாமல் அதை வெளிப்படையாக அவளிடமே கேட்டாள்.
“நான் மட்டும் கண்டபடி பேசி அண்ணாவ குழப்பலனா நீங்க உங்களோட சிம்பிள் லைஃபை அழகா என்ஜாய் பண்ணிட்டிருந்திப்பிங்கல்ல அண்ணி, என்னால தானே உங்க லைஃப் இப்பிடி காம்ப்ளிகேட்டடா மாறி நிக்குது? எனக்குள்ள தீராத நோயா இந்தக் குற்றவுணர்ச்சி இருக்குற வரைக்கும் என்னால என் ஃபேமிலி கூட நெருங்கவே முடியாதுண்ணி… ஒருவகையில பாத்தா உங்களுக்கு நான் உதவுறது என் சுயநலத்துக்காகவும் தான்”
“உன்னால சுயநலமா யோசிக்க முடியாது நயனி.. ஐ நோ யூ வெரி வெல்… டோண்ட் ப்ளேம் யுவர்செல்ஃப்… நானும் சில தவறுகளை செஞ்சிருக்கேன் நயனி… அதனால தான் நான் கஷ்டப்படுறேன்”
அண்ணி தவறுகள் என்று எதை சொல்கிறாள்? அண்ணனை மணந்ததையா? அவனுடன் வாழப்பிடிக்காமல் பரஸ்பர விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் அவன் வாழ்க்கையை விட்டு விலகியதையா? அல்லது அவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமாக அம்ரித்தைப் பெற்றெடுத்ததையா?
இதில் ஒன்றில் தான் கிருஷ்ணராஜசாகருக்கும் நித்திலாவுக்குமிடையே நிகழ்ந்த பிரிவுக்கான காரணம் ஒளிந்திருப்பதாக ஸ்ரீநயனி ஊகித்தாள். அதை கேட்டால் பழைய சமாச்சாரங்களைப் பேச விரும்பவில்லை என நித்திலா பதிலளிக்கக்கூடுமென அமைதி காத்தாள்.
தனது யோசனைக்கு அண்ணி செவிசாய்த்ததே போதுமென்ற நிம்மதியோடு அவளது உடல்நலன் குறித்து விசாரித்தாள். அவளுடன் பேசுவதற்காக மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டாள்.
“எனக்குனு இருக்குற ஒரே ஒரு அண்ணி நீங்க தானே” என்றவளின் பேச்சில் பழைய உற்சாகமான ஸ்ரீநயனி தெரிந்தாள்.
“ஒரே ஒரு அண்ணியா?”
நித்திலா கிண்டல் செய்யவும் ஆம் என்றாள் அவள்.
“கூடப் பிறந்த காரணத்துக்காக மட்டும் ஒருத்தனுக்கு அண்ணன் ஸ்தானம் குடுக்கமுடியாதுல்ல… நான் அண்ணன்னு நினைக்காதவனோட பொண்டாட்டி எப்பிடி எனக்கு அண்ணி ஆகமுடியும்?”
ஸ்ரீநயனிக்குக் கிருஷ்ணராஜசாகரைப் போல கூர்மையான நாக்கு என அவ்வபோது நித்திலா எண்ணுவாள். அது உண்மை என்பதை இப்போது நிரூபித்தாள் அவள்.
“இன்னுமா உனக்கும் அவளுக்கும் செட் ஆகல?”
“எனக்கும் அந்த க்ரீடி கூஸுக்கும் எப்பவுமே செட் ஆகாது… அவளைப் பத்தி பேசுனா என் மூட் ஸ்பாயில் ஆகிடும்… இப்பவும் அவ கொஞ்சம் கூட மாறலண்ணி… எப்பவுமே பணம், பதவி, அதிகாரம், ஆடம்பரம்னு அதை பத்தி மட்டுமே நினைக்கிறவ”
நித்திலாவின் மனம் அவள் என்ற பதத்திற்கு சொந்தக்காரியான நிஹாரிகாவை பற்றி நினைக்கும் போதே கசந்தது.
அவளைப் பற்றி பேச விரும்பாமல் ஸ்ரீநயனியின் உடல்நலனை விசாரித்தாள் நித்திலா.
“ஐ அம் அப்சல்யூட்லி ஃபைன் அண்ணி… நெக்ஸ்ட் மன்த் நான் இந்தியாக்கு வர்றேன்… அது வரைக்கும் அம்ரித் கிட்ட பேசாம இருக்காதிங்க அண்ணி”
சரி என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போனவள் அடுத்து அவள் கூறிய விசயத்தில் புன்னகைத்தாள்.
“சரி சரி… சொல்லிடுறேன்… என் ஃப்ரெண்ட் விக்ரம் தான்… அவன் கொஞ்சம் அலர்ட்டா இருப்பான்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
விக்ரம் அனைத்தையும் கவனித்துவிட்டு யார் பேசியது என்பதை ஓரளவுக்கு ஊகித்துவிட்டான்.
நித்திலாவும் ஸ்ரீநயனி கூறியதை மறைக்காமல் அவனிடம் விவரித்தாள்.
“அம்ருவ பத்தி யோசிச்சு சொல்லிருக்காங்க… மிஸ்டர் கிருஷ்ணராஜசாகரோட தங்கச்சிக்கு இவ்ளோ நியாயபுத்தியா? நம்பவே முடியல நித்தி” என்றான் அவன்.
“அவ எப்பவுமே தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் முகத்துக்கு முன்னாடி சொல்லிடுவா விக்கி… அவளை ஸ்காம் காலர்னு நீ திட்டுனல்ல… நீ ஓவர் அலர்ட்டா இருக்கியாம்… உன்னை அலர்ட் ஆறுமுகம்னு சொல்லுறா”
விக்ரம் அதை கேட்டு முறைக்க நித்திலாவோ அன்றைய நாளின் ஆரம்பம் கொடுத்த சோகத்தை மறந்து வாய் விட்டுச் சிரித்தாள்.
அவளது சிரிப்புக்குக் காரணமானவள் மீது விக்ரமுக்கு ஆர்வம் பிறந்தது. இந்தளவுக்கு நித்திலாவின் நலனை நாடுபவள் ஏன் இத்தனை ஆண்டுகள் அவளைத் தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை என்ற கேள்வியும் அவனுக்குள் உதயமானது.
அதே நேரம் சென்னையிலோ நித்திலாவை பார்க்கவேண்டுமென அம்ரித் அழத் துவங்கியிருந்தான். உண்ணாமல் அழுது கரையும் பேரனைச் சமாதானம் செய்ய முடியாமல் நர்மதா சோர்ந்து போனார்.
வேறு வழியின்றி இப்ராஹிமின் எண்ணுக்கு அழைத்து கிருஷ்ணராஜசாகரிடம் தகவல் தெரிவிக்கும்படி கூறினார்.
‘ஆர்.ஜே பியூட்டி’ என்ற புதிய நிறுவனத்தின் ஆரம்பவேலைகளில் பிசியாக இருந்தவன் தகவல் கிடைத்ததும் இன்னும் அம்ரித்திற்கு அழைத்து பேசாத நித்திலா மீது கடுஞ்சினமுற்றான்.
அதே கோபத்தோடு அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் வீட்டை அடைந்த போது அம்ரித்தின் பேச்சு சத்தம் கேட்டது.
“இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன் நித்திம்மா” நித்திலாவிடம் பேசுகிறான் போல! பேசி முடிக்கட்டும் என காத்திருந்தான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

