“பெரும்பாலான மனுசங்க வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுறதை விட கடமைக்கு வாழுறாங்க… இதுக்கு என்ன காரணமா இருக்கும்? அவங்க கிட்ட வாழ்க்கைய ரசிக்கிறதுக்கான நேரம் இல்லைனு நினைக்கிறிங்களா? எல்லாருக்கும் குடுக்கப்பட்ட நேரம் என்னவோ ஒன்னு தான்… ஆனா அந்த நேரத்துல பணம், புகழ், பதவிக்குப் பின்னாடி அலையுறதுக்கு முன்னுரிமை குடுக்குறதால மனுசங்களுக்கு வாழ்க்கைய ரசிக்கிறதுக்கு நேரம் இருக்கிறதில்ல… எப்ப வாழ்க்கைய ரசிக்கணும்னு தோணும் தெரியுமா? நம்ம இன்னும் ரொம்பநாள் வாழப்போறதில்லனு தெரியுறப்ப… அப்ப தான் நம்ம வாழ்க்கையில அனுபவிக்க மறந்தது, ரசிக்க மறந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரும்… அதை அணுவணுவா ரசிச்சு வாழணும்னு ஆசை வரும்… எக்சாம் ஹால்ல கிடைச்ச நேரத்தை பூராவும் யோசிச்சு வேஸ்ட் ஆக்கிட்டு கடைசி அரைமணி நேரத்துல அவசரமா அடிச்சுப் பிடிச்சு அடிஷனல் ஷீட் வாங்கி எழுதுவோமே, அதே மாதிரி”
-நித்திலா
தி மேபோர்ன் பெவர்லி ஹில்ஸ் ஹோட்டல், பெவர்லி ஹில்ஸ், அமெரிக்கா…
உச்சபட்ச கோபத்தில் கொதித்து போயிருந்தாள் நிஹாரிகா. ஸ்ரீநயனி அவளை எப்போதுமே ஒரு பொருட்டாக கருதுபவளில்லை. அதற்கான காரணத்தை அவள் அறிவாள். அந்தக் கசப்புணர்வு இன்று நேற்றில்லை, இருவரும் ஒரே கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே தொடர்வது தான்.
அண்ணன் மனைவியான பிறகு அண்ணிக்கான மரியாதையைக் கொடுத்து தானே ஆகவேண்டுமென நிஹாரிகா கட்டிய கனவுக்கோட்டையை இடித்துத் தள்ளிய ஸ்ரீநயனி உறவை விட குணத்திற்கே மரியாதை என பொட்டிலடித்தாற்போல புரியவைத்திருந்தாள்.
பின்னர் சில கசப்பான சம்பவங்களால் குடும்பத்தை விட்டு விலகி அமெரிக்காவில் பணிபுரிய சென்ற போதும் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்தித்த போதும் நிஹாரிகா மீதான அலட்சியத்தை மட்டும் அவள் குறைத்துக்கொள்ளவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
முந்தைய தினத்திலிருந்து மனைவியின் கோபத்தைக் குறைக்கும் வழியறியாது திகைத்தான் சந்தீப். காதலித்து மணந்த மனைவியா? உடன் பிறந்த தங்கையா? அல்லாடியது அவன் மனம். இம்மாதிரியான சூழ்நிலைகளில் தானும் ஏன் தனது அண்ணனை போன்ற குணத்தினனாகப் பிறந்திருக்கக்கூடாது என நொந்துபோவான்.
இதே போல அண்ணியா தங்கையா என்ற நிலை அண்ணனுக்கு வந்திருந்தால் அவன் தயங்காமல் தங்கைக்குத் துணையாய் நிற்பான். குடும்பம் மனைவி எல்லாம் பிக்கல் பிடுங்கல் என்று சொன்னாலும் தங்கைக்காகவே திருமணம் செய்தவனாயிற்றே! அவன் அளவுக்குத் தனது மனவலிமை இல்லை என்பது சந்தீப்பின் எண்ணம்.
“நான் பேசிட்டே இருக்கேன்… நீங்க எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் சந்தீப்?”
நிஹாரிகாவின் உலுக்கலால் இயல்புநிலையை அடைந்தவன் அயர்ந்து போனான்.
“நான் என்ன தான் செய்யணும்னு நினைக்குற?”
சலிப்பாகக் கேட்டான் அவன். உடனே நிஹாரிகாவின் கண்களில் கண்ணீர் பளபளத்தது.
“உங்களுக்கும் என் மேல சலிப்பு வந்துடுச்சுல்ல சந்தீப்… எவ்ளோ கஷ்டப்பட்டாலும் பரவால்ல, ஒரு பிள்ளைய பெத்துக்கடி, இல்லனா புகுந்தவீட்டாளுங்க மதிக்கமாட்டாங்கனு எங்கம்மா சொன்னாங்க… என் சந்தீப் அப்பிடிப்பட்டவர் இல்லனு எங்கம்மா கிட்ட உங்களுக்காக ஆர்கியூ பண்ணுனேன்… ஆனா நீங்க உங்க தங்கச்சிய பேசவிட்டு வேடிக்கை பாத்திங்கல்ல, என்ன இருந்தாலும் நயனி உங்க ரத்தம்… நான் அடுத்தவீட்டுப்பொண்ணு தானே?”
குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் அவள். அவளது அழுகை சந்தீப்பின் மனதைப் பிசைந்தது.
நிஹாரிகா இப்படி தான். யார் என்ன சொன்னாலும் கலங்காதவள் காதல் கணவன் முகம் மாறினால் கண்ணீர் விட்டுவிடுவாள். மற்றவர்கள் விசயத்தில் எப்படியோ சந்தீப்பை அவள் உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். அவன் மீதான நேசத்திற்காக அவள் எதையும் செய்வாள்.
மனைவியை ஆதரவாக அணைத்துக்கொண்டான் சந்தீப்.
“சாரி நிஹி… உன் மேல நான் வச்சிருக்கிற லவ் என்னைக்குமே குறையாது… நயனிய பத்தி உனக்கு நல்லா தெரியும்ல… அவளை பாக்குறதுக்கு நான் தனியா போயிருக்கணும்… என்னால தான் இப்பிடியெல்லாம் நடந்துடுச்சு”
கணவன் மன்னிப்பு கேட்டதும் நிஹாரிகாவின் சோகமெல்லாம் பறந்தோடிவிட்டது.
“வெளிய போயிட்டு வரலாமா?” என்று கேட்டவனிடம் வேண்டாமென மறுத்தவள் எழுந்து டிவியை ஆன் செய்தாள்.
அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து தோளில் சாய்ந்தபடி டிவியில் ஒவ்வொரு செயலியாக மாற்றிக்கொண்டே பேசினாள்.
“எனக்கு உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும் சந்தீப்… வேற எந்த சிந்தனையும் இல்லாம பணம் பதவி அதிகாரம் எதை பத்தின யோசனையும் நம்மளைத் தீண்டாம ஜஸ்ட் நீங்களும் நானும் நம்ம காதலும் மட்டுமே இருக்குற ஒரு மொமண்ட் எனக்கு வேணும்”
என்றைக்கும் இல்லாமல் மனைவி ஏக்கமாய் கேட்கையில் சந்தீப்பின் மனம் உருகிப்போனது.
அவனது தோளில் சாய்ந்தபடியே ஹுலு என்ற அமெரிக்க ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செயலியை தொலைகாட்சியில் ஓப்பன் செய்தவள் அதில் என்ன பார்க்கலாமென சந்தீப்பிடம் கேட்டாள்.
“எனக்கு டிவி சீரிஸ் பத்தி நோ ஐடியா பேபி”
“கேஸ்டில் ராக் பாக்கலாமா? சைக்காலஜிக்கல் ஹாரர் சீரிஸ்… செம த்ரில்லா இருக்கும்”
“பாக்கலாமே”
ஆனால் உடனே அதை பார்க்க ஆரம்பிக்காமல் முகப்பு பக்கத்திலேயே நடமாடியவள் “ஐய்! தி கார்டேஷியன்ஸ்” என உற்சாகமாக குதித்தாள்.
சந்தீப் புருவம் சுருக்கினான். ஏனோ சந்தீப்புக்கு அதைப் பார்ப்பதில் ஆர்வமில்லை.
தி கார்டேஷியன்ஸ் என்ற ஷோ, ஐந்து கார்டேஷியன் மற்றும் ஜென்னர் சகோதரிகளின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஒளிபரப்பும் நேரலை நிகழ்ச்சி. கிட்டத்தட்ட நம்மூர் பிக்பாஸ் போல. ஐவருமே ஒவ்வொரு பிசினஸில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்தனர். அவர்களில் இருவர் பில்லியனர்கள் மூவர் மில்லியனர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நிஹாரிகாவுக்கு பணம், பகட்டான வாழ்க்கை மற்றும் அழகின் மீது பித்து உண்டு. எனவே அவளுக்கு அந்த ஷோ பிடித்ததில் ஆச்சரியமில்லை
அவள் அந்த ஷோவின் தம்நெயிலைத் தொட்டதும் ஒவ்வொரு எபிசோடாக விரிந்தது.
“ஐ லவ் கிம் கார்டேஷியன்… ஃபைவ் சிஸ்டர்ஸ்ல அவங்க தான் ரொம்ப கார்ஜியஸா இருப்பாங்க”
நிஹாரிகா சிலாகித்தபடி எபிசோடை ஓடவிட்டாள்.
“பட் ஐ டோண்ட் திங்க் சோ நிஹி… கிம்ல ஆரம்பிச்சு கய்லி ஜென்னர் வரை எல்லாருமே காஸ்மெட்டிக் சர்ஜரில அவங்க இயற்கை அழகை தொலைச்சிட்டாங்க… கெண்டல் ஜென்னர் மட்டும் தப்பிச்சிட்டாங்க… சொல்லப் போனா அவங்க தான் கார்ஜியஸ் அண்ட் ரியல் பியூட்டி”
நிஹாரிகா டிவியைப் பார்க்காமல் வியப்பாகச் சந்தீப்பை நோக்கினாள்.
“பார்றா! அப்ப சார் கெண்டலோட ஃபேனா? இதுவரைக்கும் என் கிட்ட சொல்லவேல்ல”
அவள் குறைபடவும் சிரித்தவன் “ஃபேன்னு சொல்ல முடியாது… பட் ஷீ இஸ் அட்ராக்டிவ்” என்று சொல்லி நிஹாரிகாவின் காது மூக்கில் புகைவர வைத்தான்.
“என்னை விட அவங்க அட்ராக்டிவா?”
சட்டென எழுந்து இடுப்பில் கையூன்றி கேட்டாள் நிஹாரிகா.
“கொஞ்சம் அட்ராக்டிவ் தான்”
அடுத்த நொடி படுக்கையில் கிடந்த தலையணையால் சந்தீப்புக்குத் தர்ம அடி கிடைத்தது.
தாக்குதல் நடத்திய மனைவியை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டவன் அதன் பின்னர் மையலில் மூழ்கிவிட யாருமற்ற அனாதையாக ‘தி கார்டேஷியன்ஸ்’ ஷோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது தொலைகாட்சி.
********
தி வுட்பெக்கர் கபே, லாங்வுட்…
அன்றைய பரபரப்பு முடிந்து ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் இருக்கும் போது தனது கபே வ்ளாகுக்கான படப்பிடிப்பை ஆரம்பித்தாள் நித்திலா.
‘பேர்லி’ யூடியூப் சேனல் கிட்டத்தட்ட பத்து இலட்சம் சப்ஸ்கிரைபர்களோடு வெற்றிகரமாக இயங்கிவருகிறது. கபே வ்ளாகுகளோடு சேர்த்து அவ்வபோது ஜக்கு மலை சிகரம், சிம்லா நகர்வலம் போன்றவற்றையும் வ்ளாகுகளாக பதிவேற்றுவாள்.
மற்ற ஊழியர்கள் ஓய்வாக இருந்த நேரத்தில் வேலையை ஆரம்பித்தாள் நித்திலா.
தனக்கு முன்னே இருக்கும் கண்ணாடி பேழையில் ட்ரைபோட் உதவியால் சோனி வ்ளாகிங் கேமராவை நிற்க வைத்தவள் அப்போது வந்த ஆர்டர்களில் ஐஸ்ட் காபி, மச்சியாடோ, எஸ்ப்ரஸோ மற்றும் கபே ஓ லெய்ட் நான்கும் அடக்கம்.
நான்கு பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் குழு அவற்றை ஆர்டர் செய்துவிட்டு குதூகலமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
நித்திலா அவற்றை தயாரித்தபடியே கபே வ்ளாகை படம்பிடிக்க ஆரம்பித்தாள்.

“ஹலோ வியூவர்ஸ்! வெல்கம் டூ பேர்லி சேனல்… இன்னைக்கு கபே வ்ளாக்ல வெரைட்டீஸ் ஆப் காபி ட்ரிங்ஸ் தான் பாக்கப்போறோம்… முதல்ல காபி பீன் வெரைட்டீஸை பாப்போம்”
வாய் பேசினாலும் கை அதன் போக்கில் வேலை செய்துகொண்டிருந்தது.
“உலகத்துல நாலு வெரைட்டீஸ் காபி பீன்ஸ் இருக்கு… அதுல ரொம்ப அதிகமா பயன்படுத்தப்படுறது அரபிக்கா காபி பீன்ஸ், ரொபஸ்டா காபி பீன்ஸ் இந்த ரெண்டும் தான்… அரபிக்கா குறிப்பிட்ட பகுதிகள்ல மட்டும் தான் விளையும்… சோ இது கொஞ்சம் காஸ்ட்லி… ரொபஸ்டா அப்பிடி இல்ல… நிறைய பகுதிகள்ல விளையுற காபி செடிகள் இந்த குடும்பத்தைச் சேர்ந்தது தான்”
கண்ணாடி தம்ளர்களில் காபி திரவத்தை அவற்றின் பெயர்களுக்கேற்ற அளவுகளில் ஊற்றியபடி பேசிக்கொண்டிருந்தாள் நித்திலா.
விரல் நுனிகளில் காபி பவுடரின் சிதறல், ஏப்ரனில் சிதறிய சிறுதுளி பால்நுரை என அக்மார்க் பாரிஸ்டாவாக காட்சியளித்தவளின் கன்னத்தில் அடிக்கடி முத்தமிட்டு தொந்தரவு கொடுத்தது அழகுக்காக வெட்டப்பட்டிருந்த கூந்தல் கற்றை.
அதை ஒதுக்கியபடி அவள் வ்ளாக் எடுத்துக்கொண்டிருந்ததை ஐந்து ஜோடி கண்கள் ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தன. கல்லூரி மாணவர்கள் குழுவில் நால்வர் தானே இருந்தனர் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஐந்தாவது நபர் யாராக இருக்கமுடியும்? கிருஷ்ணராஜசாகரே தான்.
அன்று மாலை விமானத்தில் அவனும் நர்மதாவும் சென்னைக்குக் கிளம்பவிருக்கின்றனர். எனவே மைந்தனோடு நேரத்தைச் செலவளிப்பதற்காக வந்தவனின் கண்ணில் நித்திலா வ்ளாக்கிற்காக பேசும் காட்சி பட்டுவிட அமைதியாய் எப்போதும் அமரும் மேஜையில் அமர்ந்தான்.
“கபே ஓ லெய்ட் – இந்த காபியோட ஆரிஜின் ஃப்ரான்ஸ்… காபி டிகாசனும் ஹாட் மில்கும் ஈக்வல் ரேசியோல இருக்கும்” என சொல்லிக்கொண்டே சென்றவள் அர்னவ் வரவும் பேச்சை நிறுத்தினாள்.
“காபி ரெடி அர்னவ்”
ட்ரேயில் அடுக்கி வைக்கப்பட்ட கோப்பைகளை அவனிடம் நீட்டினாள்.
“ஃபிப்த் ஆர்டர் ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி” என்றான் அர்னவ்.
என்ன உளறுகிறாய் என்பது போல நித்திலா அவனைப் பார்க்க அர்னவ் மத்திய மேஜையில் அமர்ந்திருந்த கிருஷ்ணராஜசாகரைக் காட்டினான்.
அவனைப் பார்த்ததும் நித்திலாவின் விழிகள் கலவரம் பூசிக்கொண்டன.
“நீ அவங்களுக்கு சர்வ் பண்ணு… அவரை நான் கவனிச்சிக்கிறேன்” என்றபடி ஏப்ரனைக் கழற்றிவிட்டு கிருஷ்ணராஜசாகர் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி விரைந்தாள்.
மற்ற வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவராமல் புன்னகைத்தபடியே
“எதுக்கு இங்க வந்திருக்கிங்க? அம்ரு இங்க இல்ல” என்றாள்.

கிருஷ்ணராஜசாகரின் பார்வை அவளது விரல்களை நோட்டமிட்டது. அதில் இன்னும் காபி பவுடர் ஒட்டியிருந்தது.
“நான் அம்ருவ பாக்க வரல”
பின் ஏன் வந்தாய் என்பது போல புருவம் உயர்த்தினாள்.
“இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ளைட்ல நானும் அம்மாவும் சென்னைக்குக் கிளம்புறோம்… அதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்”
நித்திலா எவ்வளவோ மறைக்க முயன்றும் அவளது வதனத்தில் நிம்மதியான சிரிப்பு மலர்ந்தது. கிருஷ்ணராஜசாகர் அதை கண்டுகொண்டான்.
அலட்சியபாவனை ஒன்று அவனது உடல்மொழியில் தெரிந்தது.
“ரொம்ப சந்தோசப்பட்டுக்காத… ஐ வில் பி பேக்… அப்பிடி திரும்பி வர்றப்ப நான் அம்ருவ என் கூட அழைச்சிட்டுப் போயிடுவேன்… நீயே அவனை என் கூட அனுப்பி வைப்ப”
அவனது அலட்சியத்தில் அவள் எரிச்சலுற்ற போது “நித்தி” என்றபடி வந்து சேர்ந்தான் விக்ரம். அவனோடு வந்த அம்ரித் கிருஷ்ணராஜசாகரைப் பார்த்ததும் “டாடி” என உற்சாகக்கூவலோடு அவனை இடையோடு கட்டிக்கொண்டான். கைகளில் அவன் வாங்கிக்கொடுத்த டேப் இருந்தது.
கிருஷ்ணராஜசாகர் மகனின் சிகையை வருடி நெற்றியில் முத்தமிட்டபோதே நித்திலா விக்ரமிடம் கண்களால் சைகை காட்டியதை கவனித்தான்.
விக்ரமின் கையில் மருத்துவமனையின் கோப்பு ஒன்று இருந்தது. நித்திலா செய்த சைகையை அவன் கவனிக்கவில்லை.
‘கெட்வெல் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல்’
“இன்னும் பயாப்சி ரிப்போர்ட் வரல நித்தி” என்றான் அவன்.
பயாப்சி என்றதும் கிருஷ்ணராஜசாகரின் புருவம் சுழித்துக்கொள்ள நித்திலாவோ அவனுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாதே என பரிதவிப்போடு விக்ரமின் கையைப் பற்றினாள்.
“அங்க போய் பேசலாம்”
அவனைத் தன்னோடு இழுத்துச்சென்றவளைக் காணும் போது கிருஷ்ணராஜசாகர் அசவுகரியமாக உணர்ந்தான்.
மெதுவாக மைந்தனிடம் எங்கே போனீர்கள் என விசாரிக்க ஆரம்பித்தான்.
“விக்கி அங்கிள் டாக்டர் அங்கிளைப் பாக்க போனாங்க… நானும் கூடப்போனேன்”
“எதுக்கு டாக்டர் அங்கிளைப் பாக்க போனிங்க?”
“நித்திம்மாக்கு லெக் பெய்ன்… அதுக்கு டாக்டர் அங்கிள் தானே மருந்து குடுப்பாங்க”
கால்வலி என்றதுமே கிருஷ்ணராஜசாகருக்கு எதுவோ புரிந்தது.
ஒருவேளை மீண்டும் நித்திலாவுக்கு?
சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது என்றது மனம்.
ஒருவேளை அப்படி இருந்தால் உனக்கு நல்லது தானே? குயுக்தியாய் கூறியது மூளை.
கூடவே ஆனந்த்சாகரின் ஒதுக்கம், நிஹாரிகாவின் இரகசியத்திட்டம், சாகர் குழுமத்தின் எதிர்காலம் என அடுத்தடுத்து காரணங்களை அடுக்கியது அந்தப் பொல்லாத மூளை.
முடிவில் கோணல் சிரிப்பை உதிர்த்தவன் மைந்தனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“டாடி இன்னைக்கு ஈவ்னிங் சென்னைக்குக் கிளம்புறேன் குட்டி”
உடனே அம்ரித்தின் முகம் வாடியது.
“கொஞ்சநாள் இருங்க டாடி”
குழந்தை கெஞ்சவும் மனம் கரைந்து போனது கிருஷ்ணராஜசாகருக்கு. கண்கள் கூட கலங்கிப்போனது.
அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மகனின் வாசனையைத் தனக்குள் வேண்டியமட்டும் நிரப்பிக்கொண்டான்.
“டாடி சீக்கிரமே வருவேன்… அப்ப உன்னை என்னோட கூட்டிட்டுப் போயிடுவேன்”
அவன் மார்பில் சாய்ந்திருந்த அம்ரித் தலை தூக்கினான்.

“நிஜமா வருவிங்களாப்பா?”
ஆவலாய்க் கேட்டான்.
“கண்டிப்பா வருவேன் குட்டி… நீ அது வரைக்கும் அம்மா கூட சமத்துப்பிள்ளையா இருக்கணும்”
“சரிப்பா”
தலையாட்டினான் அம்ரித்.
“டாடிக்கு கிஸ் குடு பாப்போம்”
“உங்க டாடி குத்தும்”
“அது டாடி இல்லடா… தாடி”
கிருஷ்ணராஜசாகர் மைந்தனின் பேச்சைத் திருத்திவிட்டு அவன் கன்னத்தில் முத்தம் பதித்தபடி செல்பி எடுத்துக்கொண்டான். மைந்தனின் டேபில் தன்னுடைய மொபைல் எண்ணைப் பதிவு செய்தான்.
“எதுவும் வேணும்னா டேப்ல இருந்து டாடிக்குக் கால் பண்ணு… பை”
அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு எழுந்தபோது மனதில் இனம்புரியாத வெறுமை சூழ்ந்தது. இந்த வெறுமை தற்காலிகமானது என தனக்குத் தானே சொல்லிக்கொண்டவாறு அம்ரித்தை அவனது அன்னையிடம் செல்லும்படி பணித்தவன் அவன் நித்திலாவின் அறையை நோக்கிச் செல்லவும் கபேயை விட்டு வெளியேறினான்.
இந்த வெறுமையுணர்வை அவனால் தாங்கிக்கொள்ள முடியுமென தோன்றவில்லை.
காரிலேறி சீட்பெல்டை மாட்டியவன் ப்ளூடூத்தில் இப்ராஹிமைத் தொடர்புகொண்டான்.
“எனக்குச் சில டீடெய்ல்ஸ் இன்னைக்கு ஈவ்னிங்குள்ள வேணும் இப்ராஹிம்… நீ உடனே சிம்லா கெட்வெல் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலுக்குப் போ… அங்க இருக்குற….”
மறுமுனையிலிருந்த இப்ராஹிம் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.
“பயாப்சி ரிப்போர்ட் எனக்குச் சாதகமா வரணும்”
“சாதகமா மீன்ஸ்? புரியல கிரிஷ் சார்”
இப்ராஹிம் குழம்ப கிருஷ்ணராஜசாகர் இளக்கமின்றி அதை கூறினான். அவன் கூறியதைக் கேட்டு இப்ராஹிம் அதிர்ந்தான்.
“இது தப்பு சார்”
“சரி தப்பு பாத்தா எனக்கு வேண்டியது கிடைக்காது இப்ராஹிம்… டு வாட் ஐ சே”
கட்டளையிட்டுவிட்டுக் காரைக் கிளப்பியனின் நோக்கமெல்லாம் அம்ரித்தைத் தன்வசப்படுத்துவதும், சாகர் குழுமத்தின் அதிகாரத்தைக் கையகப்படுத்துவதும் மட்டுமே என்பதை உணர்ந்த இப்ராஹிம் நித்திலாவுக்காகப் பரிதாபப்பட்டான். ஏன் அவள் மீது கிருஷ்ணராஜசாகருக்கு இரக்கம் வரவில்லை என்ற கேள்வி பூதாகரமாக அவனுக்குள் உருவெடுத்தது.
அதை விட பெரிய காரியத்தைக் கிருஷ்ணராஜசாகர் அவனிடம் ஒப்படைத்திருப்பதால் வேறு வழியின்றி செய்து முடிக்கக் கிளம்பினான் இப்ராஹிம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

