“Audaces fortuna iuvat – யார் ஒருத்தர் தைரியமா ஒரு காரியத்தைச் செய்ய துணிஞ்சு இறங்குறாங்களோ அவங்களுக்கு அதிர்ஷ்டம் எப்பவும் துணையா இருக்கும்னு ரோமானிய கவிஞர் வேர்ஜிலஸ் மாரோ சொல்லிருக்கார்… ரிஸ்க் எடுத்து புது காரியத்தைச் செய்யுறது ஒரு கலை… அது எல்லாருக்கும் கைவராது… முக்கியமா முட்டாள்களுக்குக் கைவராத கலை அது… ஒரு முட்டாள் பேராசையோடு எடுக்கிற ரிஸ்க் முதலுக்கே மோசமாகிடும்”
-கிரிஷ்
ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா…
அன்று ஏனோ அதிகாலையிலேயே விழித்து விட்டான் கிருஷ்ணராஜசாகர். நர்மதாவோடு வாக்கிங் போய்விட்டு வந்தவன் தேநீரைக் குடித்து குளிரின் தாக்கத்தைப் போக்கிக்கொண்டான்.
நேரம் கழிய காலையுணவை அறைக்கே கொண்டு வரச் சொல்லிவிட்டான்.
இமாச்சல பிரதேசத்தின் பிரத்தியேக உணவான ‘மத்ரா’வும் சப்பாத்திகளும் நர்மதாவுக்குப் பிடித்துப்போய்விட அதையே அவருக்கு ஆர்டர் செய்தவன் தனக்கு ‘துக்பா’ என்ற நூடுல்ஸ் கலந்த சூப்பை ஆர்டர் செய்திருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இஞ்சி பூண்டின் நறுமணத்துடன் கமகமவென தயாராக்கும் இந்த சூப் கம் நூடுல்சின் தாயகம் திபெத். ஆனால் இமாச்சல பிரதேசத்திலும் அதை விரும்பி உண்பார்களாம். (துக்பா ரெசிபி)

கிருஷ்ணராஜசாகர் வேகமாக நூடுல்சின் நடுவே ஆங்காங்கே கிடந்த சிக்கன் துண்டுகள், கேரட்டை மற்றும் இதர காய்கறிகளைக் காலி செய்த விதத்தைப் பார்த்து நர்மதா அயர்ந்து போனார்.
பின்னர் தனது தட்டில் இருந்த சப்பாத்தியை மத்ரா என்ற வெள்ளை கொண்டைக்கடலை க்ரேவியில் தோய்த்து வாயில் வைக்கப் போனவர் அறைக்குள் இப்ராஹிம் வரவும் புன்னகைத்தார்.
“வாப்பா! நீயும் எங்க கூட சாப்பிடு”
“உங்க பேரனுக்குக் குடுத்துட்டு மீதி இருந்தா எனக்கு குடுங்க மேடம்”
இப்ராஹிம் சொல்லி முடித்ததும் அன்னையும் மகனும் திகைப்பில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பார்க்க விக்ரமின் கையைப் பிடித்தபடி அறைக்குள் வந்தான் அம்ரித்.
அவனைப் பார்த்ததும் சப்பாத்தியை வைத்துவிட்டு கையை டிஷ்யூவில் துடைத்துக்கொண்டு எழுந்த நர்மதா தடுமாறியவாறு நடந்து அவனை அணைத்துக்கொண்டார்.
“என் செல்லம்”
கன்னங்களில் முத்தமிட்டவர் உச்சி முகர்ந்தார்.
புதியவர் என்பதால் அம்ரித் சற்று மிரண்டான். அவனது கண்கள் கிருஷ்ணராஜசாகரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.
மகனைக் கண்ட கணத்திலிருந்து ஐம்புலன்களும் வேலைநிறுத்தம் செய்துவிட்டனவோ என ஐயம் கொள்ளுமளவுக்கு அவனுக்கு அதிர்ச்சி.
நித்திலா கூறினாலன்றி அம்ரித் தன்னை தந்தையாக ஏற்றுக்கொள்ளமாட்டான் என தீர்க்கமாக நம்பியிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
மனதின் ஓரத்தில் இருந்த வருத்தத்தை இறுக்கமெனும் முகமூடி அணிந்து மறைத்துக்கொண்டான்.
நர்மதாவின் அணைப்பிலிருந்த அம்ரித் அவனை நோக்கி கை நீட்டினான்.
“டாடி….”
அவ்வளவு தான்! கையிலிருந்த சாப் ஸ்டிக்கை அப்படியே வைத்துவிட்டு ஓடிவந்து அம்ரித்தை அணைத்துக்கொண்டான். நர்மதா அவர்கள் பேசிக்கொள்ளட்டுமென விலகிவிட தந்தையும் மகனும் உணர்ச்சிப்போராட்டத்தில் இருந்தனர்.
அம்ரித்தைத் தன்னோடு சேர்த்தணைத்த கிருஷ்ணராஜசேகரின் தேகம் புல்லரித்து அடங்கியது. அவனது சிகை, முகம், மோவாய், தோள் என ஆதுரமாய் வருடியவனின் கரம் மெதுவாக நடுங்குவதை இப்ராஹிமும் நர்மதாவும் கவனித்தனர். குழந்தைகளிடம் இதுவரை பேசியதில்லை என்பதால் உண்டான பதற்றமா? இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்த மைந்தனின் ஸ்பரிசம் பட்டதும் அவனுக்குள்ளிருந்த தந்தை விழித்துக்கொண்டானோ என்னவோ!
“டாடி”
“அம்ரு… நான் உன் டாடினு உங்கம்மா சொன்னாளா?”
கிருஷ்ணராஜசாகரின் குரலில் ஒருவித அமைதியின்மையும் பதற்றமும் தெரிந்ததோ?
“இல்ல… விக்கி அங்கிள் சொன்னாங்க”
அம்ரித் விக்ரமைக் கைகாட்ட கிருஷ்ணராஜசாகரின் கண்களில் முதன்முறையாக நன்றியுணர்ச்சி தெரிந்தது. யாருக்கும் நன்றிக்கடன் பட விரும்பாதவன் அவன். விக்ரம் செய்த சகாயத்திற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என தடுமாறினான் அக்கணம்.
அதை உணர்ந்தவனாக விக்ரம் புன்னகைத்தான்.
“அம்ருக்கு நீங்க தான் அப்பா… அதை யாராலயும் மாத்த முடியாது… நித்தியோட பிடிவாதம் ஒரு நாள் மாறும்… அவளுக்காக நீங்க உங்க மகனைப் பிரிஞ்சிருக்க வேண்டாம்”
“நித்திலா இதுக்கு எப்பிடி சம்மதிச்சா?”
“அவளுக்கு நியாய அநியாயம் புரியும் மிஸ்டர் க்ரிஷ்”
உடனே அலட்சியச்சிரிப்பு அவனிடம். நித்திலா இவனுக்கு என்ன அநியாயம் செய்திருப்பாள்? விசித்திரமானவன் என விக்ரம் நினைத்துக்கொண்டான்.
“அவளுக்கு நியாய அநியாயம் புரியுமானு தெரியல… ஆனா உங்களுக்குப் புரியும்னு நான் நம்புறேன்… அம்ரித் என் கூடவே இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்… இத்தனை வருசம் அவனுக்கு ஒரு அப்பாவா செய்யாத எல்லாத்தையும் காலம் முழுக்க செஞ்சு பாக்கணும்னு நினைக்குறேன் விக்ரம்… பட் நித்திலாவால இதை புரிஞ்சிக்க முடியாது”
“நித்திலா என் கிட்ட எதையும் மறைச்சதில்ல… உங்களோட ஜெண்டிமென் அக்ரிமெண்ட்ல இருந்து அவ இங்க வந்து சேர்ந்த வரைக்கும் எல்லாமே எனக்குத் தெரியும்… உங்களோட நேச்சர் தெரிஞ்சதால அவளுக்கு உங்க கூட அம்ரித்தை அனுப்பி வைக்க விருப்பமில்ல”
“ஃப்ரெண்டுக்கு சப்போர்ட்டா விக்ரம்?”
“இப்ப தான் நியாயம் அநியாயம் தெரிஞ்சவன்னு சொன்னிங்க… அதுக்குள்ள ஃப்ரெண்டுக்குச் சப்போர்ட் பண்ணுறேன்னு சொல்லுறிங்களே… நான் நியூட்ரலா பேசுறேன் கிரிஷ் சார்… அம்ரித் இல்லனா நீங்க நித்திய ஒரு பொருட்டா கூட எடுத்திருக்கமாட்டிங்கல்ல, அதே போல இப்பவும் இருக்கணும்னு அவ எதிர்பாக்குறா… நீங்க இங்க இருக்குற வரைக்கும் அம்ரித்தைப் பாக்குறதோ பழகுறதோ அவளுக்குப் பிரச்சனை இல்ல… ஆனா உங்க கூட அவ அம்ரித்தை அனுப்பமாட்டா… அனுப்புனு என்னாலயும் சொல்ல முடியாது”
ஆவலும் ஆர்வமுமாக இருந்த கிருஷ்ணராஜசாகர் இப்போது யோசனைவயப்பட்டான்.
விக்ரம் அவனிடம் பேசியது போதுமென அம்ரித்திடம் விடைபெற வந்தான்.
“அங்கிள் ஈவ்னிங் வர்றேன்… நீ டாடி கூட சமத்தா இருக்கணும்”
“ஓ.கே அங்கிள்… பை”
விக்ரம் கிளம்பியதும் கிருஷ்ணராஜசாகர் ஒருபுறம் அமர்ந்துவிட்டான்.
டாடி என ஓடிவந்து கழுத்தைக் கட்டியபடி நின்ற அம்ரித்தின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன்
“அம்ரு குட்டிக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? பாட்டி கிட்ட சொல்லுங்க” என்று பின்னே இருந்து நர்மதா கூறவும் இப்படி தான் கொஞ்சல்மொழியில் குழந்தைகளிடம் பேசவேண்டும் போல என்று மனதில் குறித்துக்கொண்டான்.
உடனே அம்ரித்தின் கண்களில் பிரகாசம்.
“பாட்டி எனக்கு திராமிசு பிடிக்கும்… அப்புறம் க்ரீம் ப்ருலீ, பேட்டர்ன்பெர்க் கேக்…”
அவன் அடுக்கிக்கொண்டே செல்ல கிருஷ்ணராஜசாகர் அயர்ந்தான்.
கபேயில் வேலை செய்கிறேன் என்று பிள்ளைக்கு பாஸ்ட்ரி உணவு வகைகளாக கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறாள் என மனதுக்குள் நித்திலாவிற்கு திட்டு விழுந்தது.
“இதுல வெறும் சுகரும் மைதாவும் தான் இருக்கும் குட்டி… ஓவரா சாப்பிட்டா ஹெல்த்துக்கு நல்லது இல்ல”
பொறுப்பான தந்தையாக அவன் அறிவுரை கூற அம்ரித் சுணங்கினான்.
நர்மதா மகனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
“இதெல்லாம் எப்பவாச்சும் சாப்பிடுவாங்க க்ரிஷ்… நித்திலா ரெகுலரா குடுத்து பழக்கிருக்க மாட்டா”
கிருஷ்ணராஜசாகர் அன்னையின் பேச்சை ஆமோதிப்பது போல காட்டிக்கொண்டான்.
டாடி டாடி என்று மூச்சுக்கு முன்னூறு முறை அழைத்து குதூகலித்த அம்ரித் அவனுக்குள் இளக்கத்தை உண்டாக்கினான். எனவே இறுக்கம் தளர்ந்து அவனிடம் இன்முகத்தோடு பேச ஆரம்பித்தான்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே! முதலில் கொஞ்சல்மொழி பேச்சு கடினமாக இருந்தாலும் என் பிள்ளை இவன் என்ற உணர்வு கொடுத்த உரிமையில் இலகுவாகப் பேசிய கிருஷ்ணராஜசாகர் மைந்தனோடு விளையாட ஆரம்பித்தான்.
*******
எல் டொராடோ அப்பார்ட்மெண்ட், கால்மண்ட் ட்ரைவ், கலிஃபோர்னியா…
அமைதியான சூழலில் அமைந்திருந்த எல் டொராடோ அப்பார்ட்மெண்டின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு நிஹாரிகாவை இறங்கும்படி பணித்தான் சந்தீப்.
அவளுக்கு அங்கே வர விருப்பமில்லை என்றாலும் கணவன் அழைத்துவிட்டானே என்று வேண்டாவெறுப்பாக வந்திறங்கினாள்.
இறங்கியதும் ஸ்ரீநயனியின் மொபைலுக்கு அழைத்தான் அவன்.
அவள் இந்நேரம் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியிருப்பாள் என ஊகம்.
அவனது ஊகத்தை மெய்ப்பிப்பது போல அழைப்பை ஏற்றவளும் தனது ஃப்ளாட் எண்ணைச் சொல்ல இருவரும் மின்தூக்கி உதவியால் இரண்டாம் தளத்தில் சென்று இறங்கினர்.
நிஹாரிகா கண்களைச் சுழற்றி அந்த ரெசிடெண்சியல் கம்யூனிட்டியின் ஃப்ளாட்களை பார்த்தபடி கணவனுடன் நடந்தாள். ஆடம்பரமான கேட்டட் கம்யூனிட்டி அது. நல்ல வசதியாகத் தான் வாழ்கிறாள் என நாத்தனாரை மனதிற்குள் கறுவிக்கொண்டபடி முன்னேறினாள்.
D1 என்ற ஃப்ளாட்டின் அழைப்புமணியை அழுத்தினான் சந்தீப். அடுத்த நொடி கதவு திறந்தது.
ஐந்தடி உயரத்தில் சுண்டிவிட்டால் ரத்தம் வரும் நிறத்தில் மெழுகு பொம்மையாக நின்று கொண்டிருந்த ஸ்ரீநயனியைப் பார்த்ததும் நிஹாரிகாவுக்கு புகைச்சல். அவளது பார்வை ஸ்ரீநயனியின் சிகையை வட்டமிட்டது.
கரும்பட்டு போல மின்னிய கூந்தலைப் பொறாமையோடு பார்த்தவள் வெளிப்பார்வைக்குச் சிரித்தாள்.
“ஹவ் ஆர் யூ நயனி?”
வீட்டினுள் இருந்தவளோ “நீ ஹவ் ஆர் யூனு கேக்கிறப்பவே இவ இவ்ளோ வசதியான இடத்துல நல்லா வாழுறாளேங்கிற பொறாமை தெரியுதே நிஹாரிகா” என்று அண்ணன் மனைவியைப் பெயர் சொல்லி அழைத்து உள்ளே வரும்படி கூறினாள்.
நிஹாரிகாவின் முகம் கறுத்துப்போக சந்தீப் சமாளித்தவாறு மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.
லிவிங் ரூமின் சோபாக்கள் இருவரையும் விழுங்கிக்கொண்டன.
சோபாவின் முன்னே இருந்த டீபாயில் டுலிப் மலர்கள் சிரித்தன. அதன் எதிரே எலக்ட்ரிக் ஃபயர் ப்ளேசும் அதன் மேல மாட்டப்பட்டிருந்த சித்திரங்களும் தங்கையின் கலாரசனையைச் சந்தீப்புக்குச் சொல்லாமல் சொன்னது.
ஸ்ரீநயனி தனது கூந்தலை பின்னே தள்ளி விட்டு கண்ணாடி திறப்பின் அருகே கிடந்த ‘S’ வடிவ இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.

“என்ன விசயம்? திடீர்னு அமெரிக்கா வந்திருக்க? எதுவும் பிசினஸ் மீட்? இல்லனா நியூ வென்சரா?”
சந்தீப் ஏதோ சொல்லப்போக அவனது கையை அழுத்திய நிஹாரிகா அவளே பேச ஆரம்பித்தாள்.
“என்னோட ட்ரீட்மெண்டுக்காக வந்தோம் நயனி”
“ட்ரீட்மெண்ட் எடுக்குற அளவுக்கு உனக்கு என்ன வியாதி வந்திருக்கு?”
ஸ்ரீநயனியின் குரலில் எள்ளல் கொஞ்சம் அதிகமோ! முகம் சுருக்கினாள் நிஹாரிகா. தங்கைக்கும் மனைவிக்கும் இடையே போர் ஆரம்பித்துவிடுமோ என்ற பயத்தில் சந்தீப்பே தங்களின் அமெரிக்க வருகைக்கான காரணத்தைக் கூறினான்.
“ஃபோர் இயர்ஸ் ஆகியும் எங்களுக்குப் பேபி இல்ல… அந்த ட்ரீட்மெண்டுக்கு வந்தோம்”
“ஓ! நல்லது… என்னை எதுக்குப் பாக்க வந்திங்க?”
“நீ நல்லா இருக்கியானு பாக்க வந்தோம்”
“எனக்கு என்ன? கூகுளோட பேரண்ட் கம்பெனியில சோர்சிங் மேனேஜர், லக்சரி ஃப்ளாட், காஸ்ட்லி கார், ஹைஃபையான லைஃப்னு ஜாலியா இருக்கேன்”
கர்வத்தோடு சொன்னபடி கால் மேல் காலைப் போட்டு அமர்ந்தாள் ஸ்ரீநயனி. அவள் வாழும் விதத்தை விட அதை விவரித்த விதம் நிஹாரிகாவுக்குள் எரிச்சலை உண்டாக்கியது. எப்படியாவது ஸ்ரீநயனியை மனம் நோகச் செய்துவிடவேண்டுமென்ற வெறியில் வன்மத்தைக் கக்கினாள்.
“ஜாலியா இரு நயனி… இன்னும் எத்தனை வருசம் வாழ்க்கைனு தெரியாம மரணபயத்தோட வாழுறதை விட இப்பிடி பாசிட்டிவா லைஃபை அப்ரோச் பண்ணணும்… அதுக்காக ஃபேமிலி, ப்ரதர்ஸ் எல்லாரையும் விட்டுட்டு இப்பிடி தனியா இருக்கணுமா நயனி? வாழுற வரைக்கும அவங்க கூட சேர்ந்து சந்தோசமா இருக்கலாமே?”
அவளுக்காக சந்தோசப்படுவது நடித்து சந்தடி சாக்கில் குத்திக் காட்டிய நிஹாரிகாவை ஏளனமாகப் பார்த்தாள் ஸ்ரீநயனி. கொட்டுவது தேளின் இயல்பு என்று தெரிந்த பிறகு அதிர்ச்சியடையவோ கோபப்படவோ என்ன இருக்கிறது!
மனதில் நஞ்சை வைத்துக்கொண்டு நாவில் தேனைத் தடவி பேசுபவளுக்குப் பதிலடி கொடுக்காவிட்டால் அது தனக்கு இழுக்கு என சிலிர்த்துக்கொண்ட ஸ்ரீநயனி கொடுத்த பதிலடியில் சகோதரர்களையும் இடித்துரைக்க தவறவில்லை.
“என்ன ஃபேமிலி, என்ன ப்ரதர்ஸ்? ஒருத்தன் பொண்டாட்டிய வச்சு வாழத் தெரியாதவன், இன்னொருத்தன் பொண்டாட்டிதாசன்… இவனுங்க ரெண்டு பேரையும் கன்ட்ரோல் பண்ணாம உங்க இஷ்டத்துக்கு இருங்கடாப்பானு விட்டுட்டு அக்கடானு வேற வேலைய கவனிக்கிற பேரண்ட்ஸ்… எவ்ளோ அற்புதமான குடும்பம்ல? இந்தக் குடும்பத்தோட சேர்ந்து வாழுறதுக்கு நான் தனியா வாழ்றது பெட்டர்”
வஞ்சப்புகழ்ச்சியணியில் கைதேர்ந்தவள் என நிரூபித்தாள் ஸ்ரீநயனி.
“நயனி” சந்தீப்பின் குரல் உயர்ந்தது.
உடனே விருட்டென இருக்கையிலிருந்து எழுந்தாள்.
“கோவம் வருதா? நியாயப்படி நீ கோவப்பட வேண்டியது உன் பொண்டாட்டி மேல… நான் வாழப்போற நாள் கம்மினு இங்க வந்ததுல இருந்து ரெண்டு தடவை இன்டேரக்டா சொல்லிட்டா இவ… அதை நீ கவனிச்சிருக்க மாட்டல்ல… நீ எப்ப தான் இவளோட ஹிடன் மோட்டிவை புரிஞ்சிக்க போறண்ணா? இவ உன்னை ஒன்னுமில்லாம ஆக்குறதுக்கு முன்னாடி சுதாரிச்சிக்க”
கூடப்பிறந்த தமையனை எச்சரித்தாள் ஸ்ரீநயனி. சந்தீப்பின் முகம் சோர்ந்துவிட்டது.
“ஏன் எல்லாரும் இவளைக் குறை சொல்லுறிங்க? சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து வந்தவங்கிறதுக்காகவா? அன்னைக்கு கிரிஷ் என் ஒய்பை தப்பா பேசுனான்… இன்னைக்கு நீ… உங்களுக்கு இவளைப் பாத்தா பாவமா இல்ல?”
மனைவிக்காக பரிந்து பேசினான் சந்தீப்.
ஸ்ரீநயனியின் இதழ்கள் எள்ளலாக வளைந்தன.
“மிடில் க்ளாஸ் பொண்ணுனு குறை சொல்லுறேனா? என்னைப் பத்தி தெரிஞ்சும் நீ இந்தக் கேள்விய கேக்கலாமா? நான் சரினு சொன்னதாலயும் இன்னொருத்தவங்களோட சம்மதத்தாலயும் தான் இவளுக்கு இந்த வாழ்க்கையே கிடைச்சுதுனு எப்பிடி மறந்தண்ணா?”
ஸ்ரீநயனி பழைய சம்பவங்களைக் குறிப்பு காட்டி பேசவும் சந்தீப் வாயடைத்துப் போனான்.
ஸ்ரீநயனி மட்டும் சம்மதிக்காவிட்டால் ஆனந்த்சாகர் தனது காதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கமாட்டார் என்பது உண்மை. அவனது மௌனத்தை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய நிஹாரிகா இருவரையும் வெட்டுவது போல முறைத்தாள்.
ஆத்திரம் அறிவை மறைத்தது மட்டுமல்ல, இத்தனை நாட்கள் அவள் ரகசியமாக வைத்திருந்த திட்டத்தையும் போட்டு உடைக்க வைத்தது.
“இவ வாய்க்கு வந்தபடி பேசுறா… என் ஒய்பை பத்தி தப்பா பேசாதனு கன்னத்துல ரெண்டு போடாம நிக்கிறிங்க… உங்களை ஒட்டுமோத்த சாகர் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீக்கும் ராஜா ஆக்கணும்னு நான் எவ்ளோ போராடுறேன்? அதை புரிஞ்சிக்காம தங்கச்சிய பாத்ததும் பாசம் கொட்டுதா சந்தீப்?”
கோபத்தில் மனதில் இருப்பதை வாய் தவறி உளறினாள் நிஹாரிகா.
ஸ்ரீநயனி அவளது பேச்சின் சாராம்சம் புரிபடவும் சினம் மேலிட இளைய அண்ணனையும் அண்ணியையும் நோக்கினாள்.
“ஓ! புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் இப்பிடி ஒரு எண்ணம் வேற இருக்கா? அடச்சீ எழுந்திருங்க ரெண்டு பேரும்”
அவள் உறுமவும் உளறியதை எண்ணி அஞ்சியவாறு எழுந்தாள் நிஹாரிகா. சந்தீப்புக்கு மனைவியின் பேச்சு கொடுத்த அதிர்ச்சி தங்கையின் உதாசீனத்தைக் காட்டிலும் அதிகம்.
“துரோகிங்களுக்கு என் வீட்டுல இடமில்ல… கெட் லாஸ்ட்”
கதவை நோக்கி கை காட்டினாள் ஸ்ரீநயனி. முகத்தில் அத்துணை அருவருப்பு. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் துரோகிகளே என அவளது பார்வை இருவரையும் தூற்றியது. அவமானக்குன்றலோடு மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறினான் சந்தீப். மனமெங்கும் வன்மமும் பேராசையும் நிறைந்த நிஹாரிகா தனது உளறலை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் கையைப் பிசைந்தபடி அவனோடு கிளம்பினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

