பிரிவின் நடுக்கம் ஒரு மின்னலாய்
பித்தாகி நின்றவள் காதலாய்
இரு அலைகளின் மௌனமாய்
மிதக்கும் படகுகளின் நடுக்கமாய்
வேலிக்கு வெளியே வேர்கள் பின்னிக்கொள்ளும்
வினோத பந்தமாய் காதலும் முளைக்குதே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
-அட்சரனின் வேதா
வேண்டாவெறுப்பாக அட்சரனின் அலுவலக அறையில் இருக்கும் சோஃபாவில் கைகளைக் கட்டிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தாள் வேதவதி. அவளது விழிகள் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தன அவளிடமிருந்து சற்று தொலைவில் இருக்கும் அவனது டெஸ்கில் அமர்ந்திருந்த அட்சரனையும் பிருந்தாவையும்.

‘இவளுக்காக விடியாத வேளையில் சர்க்கரை கூட சேர்க்காமல் அரைகுறையாய்க் காபி போட்டுக் குடித்துவிட்டு ஓடும் அளவுக்கு இவனுக்கு இவள் மீது பைத்தியக்காரத்தனமான காதல் போல’
காரணமில்லாமல் பொறாமை எட்டிப் பார்த்த மனம் ஞாயிறு கூட வீட்டில் இருக்காமல் இங்கே வந்து உட்கார்ந்து அவளை வேடிக்கை பார்க்க வைத்திருந்தது.
பிருந்தாவின் சிரிப்பு தனது காதில் யாரோ தீக்கங்கைச் செருகியது போல இருந்தது வேதவதிக்கு. அவளை அதைவிட ஆச்சரியப்படுத்தியது அட்சரனின் உடல்மொழி.
தன்னிடம் மட்டும் கேலியும் கிண்டலுமாக வாயடிப்பவன் பிருந்தாவிடம் அத்துணை பதவிசாகப் பேசுவதைக் கண்டதும் மனம் கொந்தளித்தது.
வார்த்தைக்கு வார்த்தை “உங்களுக்கு ஓகேதானே?” என்று அவன் கேட்பதும், “உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான் அட்சரன்” என அவள் பதிலளிப்பதும் வேதவதியைக் கடுப்பாக்கின.

“எல்லாமே ஓகேனா எதுக்குடா ஞாயிற்றுக்கிழமை கடைய திறந்து உக்காந்திருக்கீங்க?” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அவளை இன்னும் கொந்தளிக்க வைத்தது பிருந்தாவின் அட்சரனை நோக்கிய பார்வை. சர்க்கரை வியாதிக்காரனின் முன்னே ரெட் வெல்வெட் கேக்கை வைத்தால் எப்படிப் பார்ப்பானோ அப்படியொரு விழுங்கும் பார்வை.
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தால் மூளை சூடாகும் என்பதால் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றவளுக்கு “ஹேய் பேப்! அபூ சார் ஒரு ரீல்ஸ் போட்டிருக்கார் பாரேன்” என்று பிரியம்வதாவிடமிருந்து வந்த செய்தி சிறந்ததொரு திசைமாற்றியாய்!
அபூர்வன் – அவளது வகுப்பிற்குப் பொருளாதாரம் கற்பிக்கும் பேராசிரியர். வயது முன் முப்பதுகளில். பாடம் எடுக்கும் விதமும் மாணாக்கர்களிடம் பழகும் விதமும் தோழமையான அணுகுமுறையாக இருப்பதால் மொத்த வகுப்பும் அவனுக்கு விசிறிகள்.
அந்த ரசிகர் மன்றத் தலைவி பிரியம்வதா. இன்ஸ்டாகிராமில் அபூர்வன் ஒரு புகைப்படம், ரீல்ஸ் பதிவிட்டால் ஒரு வாரத்துக்கு அதைப் பற்றியே பேசித் தீர்ப்பார்கள் அனைவரும்.
வேதவதிக்கும் அபூர்வனை மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட க்ரஷ் போல.
ஆர்வமாய்ப் பிரியம்வதா அனுப்பிய ரீல்ஸைப் பார்த்துக்கொண்டிருந்தவள் ஒவ்வொன்றாய் ஸ்க்ரால் செய்ததில் பிருந்தா கிளம்பியதையும் அட்சரன் அவளருகே வந்து அமர்ந்ததையும் கவனிக்கவில்லை.
அவளது மொபைலைப் பிடுங்கியவன் திரையில் இருந்தவனைப் பார்த்ததும் கொஞ்சம் அசௌகரியமாய் உணர்ந்தான்.
“இது யாரு?” யோசனையோடு மொபைலின் தொடுதிரையில் தெரிந்த ஆணையைக் காட்டிக் கேட்டான் அட்சரன்.

முதலில் திடுக்கிட்டு பின்னர் நிதானித்து சின்ன சிரிப்போடு “எங்க எகனாமிக்ஸ் புரொபசர் அபூர்வன் சார். எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும். எங்க கிளாசுக்கே இவர்தான் க்ரஷ்” என்றாள் வேதவதி கண்களில் ஆர்வத்தையும் ஆவலையும் நிரப்பியவளாய்!
மற்ற நேரங்களில் சிக்கனமாய் வார்த்தைகளைச் சீரிய இடைவெளியில் உச்சரிப்பவள் இப்போது மட்டும் மடை திறந்த வெள்ளமாய் பேசவும் அட்சரனின் கண்கள் இடுங்கின.
ஏதோ ஒரு அசௌகரியம் தன்னை எரிச்சலுக்குள் ஆழ்த்த முயலுவதை உணர்ந்தபடியே கண்டிக்கும் தொனியில் பேச ஆரம்பித்தான்.
“கத்துக் குடுக்குற குருவை யாராச்சும் க்ரஷ் ப்ரஷ்னு சொல்லுவாங்களா? என்ன பசங்க நீங்க எல்லாம்? குருவுக்குனு ஒரு மரியாதை இருக்கு. அவரை நல்ல நோக்கத்தோட பாக்காதவங்களோட கண்ணைச் செத்துப்போன அப்புறம் நரகத்துல தனியா தோண்டி வறுத்தெடுப்பாங்க. மறந்துடாத”
அவன் படபடவென வெடிக்கவும் வேதவதியின் முகம் சுண்டிப்போனது.
தனது மொபைலை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்.
“க்ரஷ்னா ஒன்னும் கெட்டவார்த்தை இல்ல. நாங்க யாரும் எங்க அபூ சாரைத் தப்பான நோக்கத்துல பாக்கல. அவருக்குக் கல்யாணம் கூட ஆகிடுச்சு. இன்னொருத்தவங்க ஹஸ்பெண்டை யாராச்சும் தப்பான நோக்கத்தோட பாப்பாங்களா?”
முதல் முறையாகச் சிடுசிடுவெனப் பேசியவளை ஆச்சரியமாகப் பார்த்தான் அட்சரன்.
‘இவள் பேசி நான் கேட்பதா? நெவர்’
கொம்பு முளைக்காத சாத்தானாய்ச் சிலுப்பிக்கொண்டு “ஏய் வேதா..” என ஆரம்பித்தவனிடம் ‘நீ கொஞ்சம் அடங்குப்பா’ என்பது போல கையை உயர்த்தினாள் வேதவதி.
“எல்லாரும் உங்க கேர்ள் ஃப்ரெண்ட் மாதிரி அடுத்தவங்க புருசனைப் பாத்து ஜொள்ளு விடுறதை உரிமைனு மார்தட்டிக்கிறதில்ல. எங்களுக்கும் எது நாகரிகம், எது அநாகரிகம்னு தெரியும்”
பிருந்தாவை அவள் குறிப்பிட்டதும் அட்சரனின் தாடை இறுகியது. இப்போதுதான் கிளம்பியிருந்தாள். ஏதோ ஒரு காரணத்துக்காக அவள் இங்கே திரும்பி வந்து அவளது காதில் இந்தப் பேச்சு விழுந்துவிட்டால்?
அவள் வராமலே கூட போகட்டுமே! அதென்ன இன்னொருத்தியைப் பற்றித் தப்பாய்ப் பேசுவது?
“வாயை மூடு! இதுதான் உன் லிமிட். உனக்கு என்னைப் பத்திப் பேச மட்டும்தான் உரிமை இருக்கு. பிருந்தாவ எதுக்குடி இழுக்குற? நான் உன்னைப் பேசுனா நீயும் என்னைப் பத்தி மட்டும்தான் பேசணும். அவளை இங்க இழுக்கக்கூடாது”
ஆட்காட்டி விரலை நீட்டி அவன் எச்சரிக்கவும் வேதவதியின் முகம் கறுத்துப்போக அவன் முன்னே நிற்கப் பிடிக்காமல் வெளியேறினாள் அவள்.
சிகையைச் சிலுப்பிக்கொண்டு அவள் செல்லவும் அட்சரன் பெருமூச்சுடன் இடுப்பில் கையூன்றிக்கொண்டான்.
“ஆ ஊன்னா இந்த முடியைத் திருப்பிட்டுப் போறது! போயேன்! யாருக்கு நஷ்டம்?”
அவன் பேசும்போதே திரும்பியும் வந்தாள் அந்த அறைக்குள். அவனை முறைத்தபடி அவனது மேஜையருகே சென்றவள் ட்ராயருக்குள் இருக்கும் ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட கோப்பு ஒன்றினை எடுத்துக்கொண்டாள்.
“ஏய்! அதை எதுக்கு எடுக்குற?”
“இனிமே என் கதைக்காக நீங்க யார்கிட்டவும் பேச வேண்டாம். என் லிட்டரரி ஏஜெண்டை நான் மாத்திக்கிறேன்”
முறைப்பாய்ச் சொல்லிவிட்டு ஸ்பைரலோடு அவள் வெளியேற அட்சரன் அவளது கோபத்தையும் பேச்சையும் நம்பவியலாதவனாய் நின்றான்.
வெளியே மழைச்சாரல்! இந்தத் தூறலில் ஸ்கூட்டியில் போனால் என்னாவது?
சற்று முன்னர் பிருந்தா ஒரு பைக் டாக்சியில் கிளம்பிப் போனபோது துடிக்காத மனம் வேதவதிக்காகத் துடித்தது.
தாமதிக்காமல் அலுவலக அறையிலிருந்து வெளியே ஓடி வந்தான் அவன்.
“ஏய் வேதா! நில்லுடி”
அவசரத்தில் அவன் குரல் அதிகாரமாய் ஒலிக்க இலக்கியாவும் சஞ்சயும் கூட என்ன விஷயமென எட்டிப் பார்த்தார்கள்.
அதற்குள் வாசலைத் தாண்டி போக முயன்றவளின் கையைப் பிடித்து இழுத்திருந்தான் அட்சரன்.
“விடுங்க என்னை. அந்தப் பிருந்தா…” என்று ஆரம்பித்தவளின் வாயைப் பொத்தியவன் “சாரி! இனிமே வாய்ஸ் ரைஸ் பண்ணமாட்டேன். போதுமா?” என்க வேதவதியும் மலை இறங்கினாள்.
“சாரி சொன்னா மட்டும் போதாது.” என்று முரண்டு பிடித்தவளிடம்
“வேற என்ன செய்யணும்? கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கணுமா?” என்றபடி அவன் நெருங்க திகிலடைந்தவள் அவனது மார்பில் கை வைத்துத் தள்ளினாள்.
“என்ன பேசுறீங்க நீங்க? இது ஆபிஸ்” என்றாள் படபடப்புடன்.
“அது என்கூட சண்டை போடுறதுக்கு முன்னாடி உனக்கு ஞாபகம் வரலையா? நாம அடிச்சுக்க ஆரம்பிச்சா எனக்கு எல்லா இடமும் வீடு மாதிரிதான் தெரியுது”
“இனிமே பிருந்தாவ வச்சு என்னை ஏதாச்சும் சொன்னீங்கனா அவ்ளோதான். நான் உங்ககூட பேசவே மாட்டேன்”
“அதே மாதிரி நீயும் உங்க அபூஊஊ சாரோட ரீல்ஸை என் முன்னாடி வச்சுப் பாத்தனா அவ்ளோதான்.”
“அவர் எங்களோட புரொபசர்”
“பிருந்தா ஜஸ்ட் அ ரைட்டர்” என்றவன் “அது.. இந்த ஆபிஸ்ல அவ ரைட்டர் மட்டும்தான்” என்றான் அழுத்தமாய்.
பின்னர் அவனது பின்னந்தலையில் சுருண்டிருந்த கூந்தலைக் கோதிக்கொண்டவன் “உன் மேனுஸ்கிரிப்ட்ல இலக்கியா ஒரு சின்ன பிரச்சனை இருக்குறதா சொன்னா. அவ சொன்ன அப்புறம்தான் எனக்குமே அது உறுத்தலா இருந்துச்சு. அதைப் பத்தி பேசலாமா?” என்று வினவ சரியாக அந்நேரத்தில் சாரலாய்த் தூவிய மழையும் நின்றுவிட்டது.
‘என்னைச் சமாதானம் செய்ய இவன் மெனக்கிடுகிறானா?’
இதம் பரவியது வேதவதியின் உள்ளத்தில்!
அவனது பேச்சுக்கு அவளும் சரி என்க இருவருமாய்ச் சேர்ந்து மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கே செடிகளுக்கு மத்தியில் இருக்கும் மரபெஞ்சில் இருந்த ஈரத்தைத் துணி ஒன்றால் துடைத்தார்கள்.
மழை பெய்து ஓய்ந்த மாலை வேளையில் அந்த மொட்டைமாடியும் அதை அழகாக்கும் பசுமைப்போராளிகளான செடிகொடிகளும் ஃப்ரெஷ்ஷாகக் காட்சியளித்தன.
ஸ்பைரலின் பக்கங்களைப் புரட்டிவிட்டு இலக்கியா சொன்ன பக்கங்களில் புக்மார்க் வைத்திருந்தான் அவன். அதை அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் வேதவதியின் பார்வை முழுவதும் அட்சரன் மீதே!
ஹெல்வட்டாஸுக்கு வந்த போதிருந்த மனநிலை மாறியிருந்தது அவளிடம். தன்னிடம் மன்னிப்பு கேட்டவனை நினைத்து இதழ்களில் முறுவல் கூட பூத்திருந்தது அவளுக்கு.

ஜில்லென்று வீசிய காற்றில் அவனது அலை அலையான சுருண்ட கூந்தல் நெற்றியில் சரிவதும், அதைச் சரி செய்தபடி அவன் புக்மார்க் வைத்த பக்கங்களைச் சோதிப்பதும் என்றுமில்லாத திருநாளாய் வேதவதியை உற்று நோக்க வைத்தது.
சுருள் கூந்தலும், கொஞ்சம் வெளிர் நிறமுமாய் அவனைப் பார்த்து யட்சன் என்று எண்ணி மருண்ட நாளின் நினைவு இப்போது வர தன்னையறியாமல் புன்னகைத்தாள் வேதவதி. இப்போதும் அதே பாலைப்பூ நறுமணத்தோடு கூடிய பெர்ஃபியூம் வாசனை அவன் மீது.
புக்மார்க் வைக்கப்பட்ட பக்கத்தைப் பார்க்கையில் மோவாயை வருடுவது, பின்னந்தலையைக் கோதுவதென அவன் செய்த மேனரிசங்களைப் பார்த்தவளுக்கு அந்நேரத்தில் அட்சரன் இன்னொருத்தியின் காதலன் என்ற எண்ணமெல்லாம் புத்தியில் உறைக்கவேயில்லை.
இதையெல்லாம் அறியாமல் மேனுஸ்கிரிப்ட்டை ஆராய்ந்துவிட்டு வேதவதியை ஏறிட்டவனின் விழிகளில் ஏகத்துக்கும் அதிருப்தி.
சட்டென அவனது பார்வை தனது விழிகளைச் சந்தித்ததும் வேதவதியின் ரசனை சங்கிலி சட்டென அறுந்துபோனது. இப்போது கதையைப் பற்றிய எண்ணங்களோடு உள்ளுக்குள் பரபரப்பு!
‘ஏன் இவன் முகத்தில் இப்படி ஒரு அதிருப்தியான பாவனை? இலக்கியா சொன்ன பிரச்சனை எதுவாக இருக்கும்? ஒருவேளை எனது எழுத்துநடை சொதப்பிவிட்டதா? அல்லது மொழியை என்னால் இலாவகமாகக் கையாள முடியவில்லையா?’
பரிதவிப்புடன் பெண்ணவள் நோக்க ஸ்பைரலை மூடிவிட்டு அவளை இன்னும் ஆழ்ந்து நோக்கியவனின் இதழோரம் வெடிக்கத் துடித்தது குறுஞ்சிரிப்பு.
“லுக் வேதா! எப்பவும் சொல்லுறதுதான். உன்னோட மொழி நடை ஒரு கவிதை மாதிரி இருக்கு. ஆனா…” அவன் இழுத்ததில் வேதவதியின் இதயத்தில் சூறாவளி!
“ஆனா என்ன? கதையோட போக்கு நல்லா இல்லையா? நான் இன்னும் கத்துக்குட்டி மாதிரி உணர்வுகளைச் சரியா கையாளாம எழுதுறேனா? எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க ப்ளீஸ்”
குரலில் இருந்த இறைஞ்சுதல் தொனி அவளது விழிகளிலும்.
அட்சரனின் இதழில் இப்போது குறுஞ்சிரிப்பு முழுமையாய் விரிந்திருந்தது.
“சரி! ஓபனாவே சொல்லிடுறேன். உன் கதை நல்லா இருக்கு. மேலோட்டமா பாத்தா எனக்கும் இலக்கியாவுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா கதையில வர்ற ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் கல்யாணமான தம்பதிகள். அவங்களோட காதலை அழகா படம் பிடிச்சுக் காட்ட முடிஞ்ச உன்னால கல்யாண வாழ்க்கைய சரிவர எழுத முடியல. லவ்ல இருந்த ஸ்பார்க் கல்யாணத்துக்கு அப்புறம் மிஸ்ஸிங். ரொம்ப ஓப்பனா சொல்லணும்னா ‘லவ் மேக்கிங் காட்சிகள்ல’ நீ ரொம்ப திணறுற”
அவன் சொன்னதும் வேதவதியின் முகம் கன்றிச் சிவந்து போனது. பார்வையை அவனிடம் வைக்க முடியாமல் எங்கெங்கோ மாற்றினாள்.
அவளால் எப்படி திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையைக் கச்சிதமாகக் கதைகளில் சொல்ல முடியும்? மணமாகாத வரை அது ஒரு அழகான கற்பனை மட்டுமே! ஊடல் காட்சிகளில் பூவையும், நதியையும், கடலையும் உவமையாகச் சொல்லி ஏதோ ஒப்பேற்றிக்கொண்டிருந்தாள் என்பது அவளுக்கே தெரிந்த உண்மை.
காதலை வரையறுக்கத் தெரிந்த மனதுக்கு அதன் அடுத்தக் கட்டமான தாம்பத்தியத்தை யோசித்துப் பக்குவமாக எழுத்துகளில் வெளிப்படுத்தத் தெரியவில்லை.
கைகளைக் கோர்த்து கோர்த்துப் பிரித்தவள் “அது… நான் இன்னும் அந்த வாழ்க்கைக்குள்ள போகல இல்லையா? அதான் ஒரு லிமிட்டைத் தாண்டி என்னால யோசிக்க முடியல. சிலர் எல்லாம் மத்தவங்க கதையப் படிச்சு அதுல இருக்குற காட்சிகளைப் பட்டி டிங்கரிங் பாத்து தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட சீனை எழுதிடுறாங்க. என்னால அதைச் செய்ய முடியல. அது என் கற்பனைக்கும், எழுத்துக்கும் அவமானம்னு நினைக்குறேன்.” என்றாள் நிதானமாக.
அட்சரன் அவளை மெச்சுதலாகப் பார்த்ததை அவள் எங்கே அறிவாள்? பார்வை முழுவதும் அவளது கரத்தில் அல்லவா பதித்திருந்தாள்!
சன்னச் சிரிப்பு அவனிடம். நிமிர்ந்து பார்த்தவளுக்குள் ஒரு கலக்கம். இதைக் காரணம் காட்டி எனது கதையை நிராகரித்துவிடுவானோ?
ஆனால் அட்சரனின் விழிகளில் இருந்ததோ அக்கறை மட்டுமே!
தலையைச் சரித்து அவளைப் பார்த்தபடி “இது உடல்சார்ந்த விசயம் இல்ல வேதா. இது ஒரு ஃபீலிங். இங்க பாரு, நீ எப்பிடி எழுதிருக்கனு…” என்றவன் காகிதங்களைப் புரட்டி அவளிடம் காட்டினான் ஒரு காட்சியை.
‘அவன் அவளைத் தொட்டான். அவள் வெட்கத்தில் சிவந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டனர். பார்வையின் நீட்சியாய் அவர்களுக்குள் அழகிய உறவொன்று பூவின் இதழைப் போல மலர்ந்தது’
“இது என்னமோ ஸ்கூல் டெக்ஸ்ட் புக் மாதிரி இருக்கு பாரு. ஒரு ஆணும் பொண்ணும் இணையுற தருணத்தை வார்த்தைகளால விவரிக்க முடியாதுதான். ஆனா வெறுமெனே ‘பார்வை’ ‘வெட்கம்’னு எழுதுறது ரொம்ப ஃப்ளாட்டா இருக்கு. அது தேடலுக்கான தருணம் வேதா.
அவனோட தீண்டல் அவளுக்குள்ள உண்டாக்குற மாறுதல்களை நீ சொல்லல. அவனோட கை அவ தோள் மேல படுறப்ப அங்க ஒரு நடுக்கம் இருக்கணும். அந்த ஸ்பரிசம் அனல் காத்தா அவ உடம்புக்குள்ள ஊடுருவணும். இந்த இடங்கள்ல வசனம் கம்மியா இருக்கணும். வர்ணனை அதிகமா இருக்கணும். நீ இந்த இடத்தை அந்நியப் பார்வையில இருந்து எழுதுற. அந்தப் பொண்ணோட உணர்வுகளுக்குள்ள இறங்கி அந்த ஸ்பரிசத்தோட ஆழத்தை உணர்ந்தா மட்டும்தான் உன்னால இந்தச் சிக்கலான பகுதிய நல்லபடியா எழுத முடியும்.”
வேதவதிக்குள் இப்போதும் குழப்பமே! அறியாத ஒன்றை எழுதுவதே சிரமம். அதை உணர்ந்து எழுது என்றால் எப்படி சாத்தியம்? என்னதான் கற்பனை என்றாலும் அதற்கும் எல்லை இருக்கிறதே! கண்கள் காணாததை, காதுகள் கேட்காததை, மனம் உணராததை எப்படி கற்பனைக்குள் புகுத்தி அதற்கு வார்த்தை வடிவம் கொடுப்பது?
இருப்பினும் அவன் சொன்ன விதத்தில் நம்பிக்கையும் துளிர்த்தது அவளுக்குள். அதன் அடையாளமாய் கண்களில் நன்றியுணர்ச்சியோடு அவனை ஏறிட்டாள். இம்முறை தயக்கமோ பரிதவிப்போ இல்லை வேதவதியின் பார்வையில்.
அவளைக் கண்கள் கனியப் பார்த்தான் அட்சரன்.
“கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற காதல், வெறும் முத்தமும், கட்டில்ல கட்டிப் புரளுறதும் மட்டும் இல்ல. அது ஒருத்தரோட இன்னொருத்தரோட கரையுற வித்தை. உன்னோட ஹீரோயின் மித்ரா ஏன் இன்னும் ஹீரோவ யாரோ ஒரு வேத்து மனுஷன் மாதிரியே பாக்குறா? அவன் விரல்கள் அவ கூந்தலோட விளையாடுறப்ப, அவளோட உலகமே அந்த ஒரு புள்ளியில ஸ்தம்பிச்சு நிக்கணும். இதெல்லாம் ஒரு பொண்ணுக்கு ஆணோட நெருக்கத்துல இயல்பா வரக்கூடிய உணர்வு. அந்த உணர்வை நீ புரிஞ்சிக்கிட்டு எழுது”
தன்னிடமிருந்த அச்சு பிரதியை வேதவதியிடம் நீட்டினான் அட்சரன்.
“எப்பவுமே உணர்வுகளைத் தீண்டாத கதைகளை வாசகர்கள் விரும்ப மாட்டாங்க. நான் ஒன்னும் செக்ஸை பட்டவர்த்தனமா காட்டுற மாதிரி உன்னை அடல்ட் ஒன்லி டைப் காட்சியை எழுதச் சொல்லலை. ஏன்னா செக்ஸ் வேற, ‘Intimacy’ வேற. உன்னோட கதைக்குத் தேவை ஆழமான ஆத்மார்த்தமான நெருக்கம். லவ் மேக்கிங் சீன்ஸ்ல அந்த ஆத்மார்த்தமான நெருக்கம் மிஸ் ஆகுது. அதைச் சரி பண்ணுனு சொல்லுறேன். புரியுதா?”
“ம்ம்! கொஞ்சமா புரியுது” கண்களில் குழப்பத்தோடும் மிரட்சியோடும் சொன்னாள் வேதவதி.
“இந்தச் சீனை எல்லாம் மறுபடி எழுது. அப்பிடி எழுதுறப்ப உன் மூளையால யோசிக்காத. மனசால யோசிச்சு உணர்வுகளைச் சரிவர எழுத்துல கொண்டு வா. அந்தப் பெண்ணோட மனசுக்குள்ள இறங்கிப் பாரு, வார்த்தைகள் தானா வரும். கண்டிப்பா உன் கதை வாசகர்களோட மனசைத் தொடும்”
வேதவதி மெல்லத் தலையாட்டினாள். அவள் கைகள் தன்னிச்சையாக அவளது அச்சுப் பிரதியை வருடின. அட்சரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் ஒரு காட்சியாய் விரிந்தது. மேனுஸ்கிரிப்ட்டை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
சட்டெனக் கண்களில் குறும்பு மிளிர “இவ்ளோ டீடெய்ல் இண்டிமசி பத்தி சொல்லுறீங்க. அனுபவமோ?” என்று துடுக்காகக் கேட்டுவிட்டாள்.
கேட்ட பிறகுதான் ‘வர வர உனக்கு வாய் நீளுகிறது வேதா’ என்று தலையில் குட்டியது அவளுடைய மனசாட்சி.
அட்சரனுக்கு அவளது கேள்வியில் சிரிப்பு வந்துவிட்டது. சின்னதொரு ரசனை கவிதையை அவன் விழிகள் அவள் மீது எழுத ஆரம்பித்தன.
“எனக்குக் கல்யாணம் மட்டும்தான் ஆகியிருக்கு. இண்டிமசில அனுபவம் வரணும்னா நீதான் கோ-ஆபரேட் பண்ணணும்”
சொன்னவன் இரண்டு அடிகள் முன்னே எடுத்து வைக்கவும் பெண்ணவளுக்குத் தொண்டை எல்லாம் உலர்ந்த உணர்வு.
“இப்பிடிப் பின்னாடி போனா எங்க இருந்து எனக்கு அனுபவம் வர்றது?”

கேட்டபடியே அவளது தோளில் கை போட்டவன் “அர்த்தம் புரியாத விசயத்துக்கு எடக்குமடக்கா கேள்வி கேக்க வேண்டியது. அப்புறம் திருதிருனு முழிக்க வேண்டியது.” என்று சொல்லி அவளது தலையில் குட்டினான்.
சில நொடி சம்பாஷணையில் மனமெங்கும் குட்டி குட்டியாய் நட்சத்திரமழை பொழிந்த உணர்வு வேதவதிக்கு. அதை வார்த்தையால் சொல்லவோ உடல்மொழியால் வெளிப்படுத்தவோ முடியாதபடிக்கு அட்சரனின் அண்மை அவளைக் கட்டிப்போட்டுவிட அந்த அழகான மழைக்காலத்து மாலை நேரத்தில் வேதவதியின் மனதிலும் கள்ளம் புகுந்துகொண்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

