வேரற்று விழப்போகும் தருணத்திலும்
கிளையை உரிமையோடு பற்றத் துடிக்கும்
கடைசி இலை அவள்!
உதிர்ந்துவிடும் என்று தெரிந்தும்
தன் இருப்பை இலைமீது நிலைநாட்டத்
துடிக்கும் மூர்க்கமான காற்று அவன்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மனம் ஏதேன அறிந்தும் சரணடையத்
தடுப்பது எதுவோ?
-அட்சரனின் வேதா
ஹோண்டா ஷோரூமில் மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தாள் வேதவதி.
ஆனால் அவளைக் காட்டிலும் ஆர்வமாய்ச் ஸ்கூட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராஜேஸ்வரியும் சதானந்தனும்.

“உனக்கு எந்தக் கலர் பிடிச்சிருக்குனு சொல்லு வேதா. அதையே வாங்கிடலாம்” என்று சொல்லித்தான் அவளை அங்கே அழைத்து வந்திருந்தார்கள்.
காரணம், அன்று தாஜ் கோரமண்டலாவில் மழை நேரத்தில் அவசரத்துக்குக் கேப் கிடைக்காமல் வேதவதி தவித்த விதத்தைப் பெற்றோரிடம் கூறியிருந்தான் அட்சரன்.
“இவ ட்ரைவிங் கத்துக்கிட்டா ப்ராப்ளம் சால்வ்ட். எத்தனை நாள் ஸ்கூல் பொண்ணு மாதிரி இவளைப் பிக்கப் ட்ராப் பண்ணுறது? மருமகள் மருமகள்னு சீராட்டுறீங்கல்ல. இதுக்கு ஏதாச்சும் சொல்யூஷன் கண்டுபிடிங்க”
கடைசி வாக்கியத்தைத் தந்தைக்காகச் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
சதானந்தனும் ராஜேஸ்வரியும் முதலில் கார் வாங்கவே நினைத்தார்கள். ஆனால் வேதவதி பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம் மாமா” என்று அவள் பிடிவாதமாக மறுத்துவிடவே இருவருமாய்ச் சேர்ந்து ஸ்கூட்டி வாங்கத் தீர்மானித்தார்கள்.
கல்லூரி முடிந்ததும் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றவளை மாலையில் சீக்கிரமே வீட்டுக்குக் கிளம்புமாறு சதானந்தன் சொன்னதும் விஷயம் என்னவெனப் புரியாமல் வந்து சேர்ந்தாள்.
ராஜேஸ்வரி ஷோரூம் செல்லவேண்டுமென அவசரப்படுத்தவும் கடகடவென ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வேறு உடை அணிந்து கிளம்பினாள்.
பேச்சுக்குச் சொல்கிறார்கள் என்று நினைத்தவளுக்கு ஷோரூமில் போய் நின்றதும் மனமெங்கும் மலை போலத் தயக்கம்.
எந்தவித உரிமையுமில்லாத இடத்தில் செலவு வைக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி. அவள் அதனாலேயே அமைதியாகிவிட்டாள்.
முடிவில் லாவண்டர் வண்ணம் அவளுக்குப் பிடித்தமானது என்பதைப் பேச்சுவாக்கில் அறிந்து வைத்திருந்த ராஜேஸ்வரி அந்த வண்ணத்திலேயே ஸ்கூட்டியை வாங்கச் சொல்லிவிட்டார்.
பணம் செலுத்திவிட்டு ஸ்கூட்டியோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள் மூவரும்.
“என்னாச்சு வேதா? முகத்துல சுரத்தே இல்ல.”
“அது… என்னால உங்களுக்கு வீண்செலவுனு…”
“இப்பிடியெல்லாம் பேச உனக்கு யார் கத்துக் குடுக்குறாங்க? கல்யாணத்தைச் சீரும் சிறப்புமா பண்ண முடியல. இதெல்லாம் நாங்க ஆசையா செய்யுறது. நீ மறுப்பு சொல்லக்கூடாது”
ராஜேஸ்வரி கறாராகச் சொல்லிவிட லாவண்டர் வண்ண ஹோண்டா ஆக்டிவா வீடு வந்து சேர்ந்தது.
இரவில் வீடு திரும்பிய அட்சரன் ஸ்கூட்டியைப் பார்த்ததும் விசிலடித்தபடியே வீட்டுக்குள் வந்தான்.
“அதுக்குள்ள ஸ்கூட்டி வீட்டுக்கு வந்துடுச்சு. அவ எப்ப ட்ரைவிங் கத்துப்பாளாம்? எந்த ட்ரைவிங் ஸ்கூல்ல ஜாயின் பண்ணப்போறா?”
“ஏன்? உன் மகன் சொல்லிக் குடுக்கலாமே?” – சதானந்தன்.

அட்சரன் உடனடியாக மறுப்புரை வாசித்தான்.
“நான் இன்னும் ரெண்டு மாசத்துக்குப் பிசி. என்னால முடியாது. நாளைக்கு வேற ஏர்போர்ட் போகணும்”
ராஜேஸ்வரி புருவம் சுருக்கியவர் “எதுக்கு? காத்தால என்னை எழுப்பி காபி போடச் சொல்லுவியே” என்று சலித்துக்கொண்டார்.
“மலையாளி ரைட்டர் பிருந்தா பத்தி சொல்லிருக்கேன்ல. அவங்க நாளைக்கு வர்றாங்க. சின்னதா ஒரு மீட்டிங் பப்ளிஷிங் ஹவுஸ்ல”
பிருந்தாவின் பெயரைக் கேட்டதும் மாடிப்படியில் இறங்கிவந்த வேதவதியின் முகத்தில் இன்னும் வாட்டம் ஏறியது.
அதற்குள் அவளைப் பார்த்துவிட்டான் அட்சரன்.
“புது ஸ்கூட்டி எல்லாம் வந்திருக்கு. கங்கிராட்ஸ்”
“தேங்க்ஸ்” சுருக்கமாக முடித்துக்கொண்டவள் லிவிங் ரூமிலிருந்து ஃபேமிலி ரூமுக்குச் சென்றுவிட்டாள். அங்கிருக்கும் சாளரம் வழியே பார்த்தால் தரிப்பிடம் தெரியும்.
“காபி போடட்டுமா அச்சு?” என்ற ராஜேஸ்வரியிடம் மறுப்பு சொல்லிவிட்டு வேதவதியைத் தேடிப் போனான் அட்சரன்.
அவளது பார்வை ஜன்னல் மீது நிலைத்திருக்கவும் “எனக்கு ஒரு கப் காபி போட்டுத் தர்றீயா?” என்று கேட்டபடி அவளருகே வந்து நின்றான்.
அவனது குரல் கேட்டுத் திரும்பியவள் “ம்ம்” என்றபடி நகர எத்தனிக்கக் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தினான்.
“என் ரூமுக்குக் கொண்டு வந்துடுறியா? நான் அதுக்குள்ள ரெஃப்ரெஷ் ஆகிடுவேன்”
“ம்ம்”
யோசனையோடு அவளைப் பார்த்தபடி மாடிப்படிகளில் ஏறினான் அவன்.
ஏதோ சரியில்லை என்று அலாரம் அடித்தது அவனது மூளையில். பெற்றோருக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவோ அல்லது இயல்பாகவோ அவளிடம் சின்னச் சின்னதாய்த் தனக்கான வேலைகளைச் செய்யச் சொல்லிக் கேட்பது அட்சரனுக்கு இப்போது வாடிக்கையாகி இருந்தது.
வேதவதியும் முகம் சுணங்காமல் செய்பவள்தான். இன்று மட்டும் என்ன வருத்தம்?
அவன் உடைமாற்றி யோசிக்கையிலேயே காபியோடு வந்தாள் வேதவதி.
“என்னாச்சு உனக்கு? உன் முகமே சரியில்ல” என்றவனிடம் கோப்பையைக் கொடுத்தவள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.
“எனக்கு இந்த ஸ்கூட்டி வாங்குனதுல இஷ்டமில்ல” என்றாள் மெதுவாகத் தலையைக் குனிந்தபடி.
காபியை ஒரு மிடறு அருந்திவிட்டு “ஏன்? உனக்குப் பிடிச்ச கலர்தானே? இதை ஓட்டுறதுக்குக் கத்துக்கவும் ஈசியா இருக்கும்.” என்றான் அட்சரன்.
“நான் அதை மீன் பண்ணல. எனக்குச் சங்கடமா இருக்கு”
“என்ன சங்கடம்?”
“இதெல்லாம் எந்த உரிமைல நான் ஏத்துக்குறது? எனக்குப் புரியல. என்னைக்கு இருந்தாலும் நான் இந்த வீட்டுல நிரந்தரமா இருக்கமாட்டேன். உங்க பிருந்தாதான் இருக்கப் போறாங்க”
‘உங்க பிருந்தா’வில் காபி புரையேறியது அட்சரனுக்கு.
தலையில் தட்டி இருமி முடித்தவன் “எப்பவோ நடக்கப்போறதை யோசிச்சு இப்ப ஏன் சங்கடப்படணும்?” என்று வினவியபோது வேதவதியின் சங்கடம் அவனிடமும் தாவியிருந்தது.
ஏனோ இன்னொரு பெண்ணின் பெயரைத் தன்னவள் என வேதவதி உச்சரித்தபோது மனமெங்கும் சொல்லவொண்ணா அசௌகரியம் சூழ்ந்தது அவனுக்கு. அதே நேரம் அவள் தனது காதலி இல்லை என்று சொல்லவும் மனம் வரவில்லை.
அவனே சொல்ல நினைத்தாலும் அவனது மூளை காலப்பயணம் செய்து அவனைத் தேன்மலையில் கொண்டு போய் நிறுத்திவிடும். அந்தச் சம்பவத்தை அவன் கடந்து போக நினைத்தாலும் இன்னுமே அது அவனுடைய ஈகோவுக்கு அடிதான். அதனால் வெளிப்படையாக எந்த உணர்வுகளையும் ஒப்புக்கொள்ள அந்த ஈகோ அட்சரனை அனுமதிக்கவில்லை. அதே நேரம் வேதவதி இப்படி அவதிப்படுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
“அப்பிடி இல்ல.” என்றவளை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தான்.

“ப்ச்! இங்க பாரு! இன்னைக்கு நிலைமைக்கு நீதான் அவங்க மருமகள். அந்த உறவுக்கான உரிமைய எடுத்துக்குறதுல எந்தத் தப்புமில்ல.”
“அப்பிடியா? அப்ப இன்னைக்கு நிலைமைக்கு நாமகூடதான் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப். அதுக்காக உங்க ரூம்ல வந்து தங்கிக்கவா?” தன்னை மறந்து எரிச்சலில் கேட்டுவிட்டாள் வேதவதி.
“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம். என் ரூம் கதவு உனக்காக எப்பவும் திறந்தே இருக்கும்.”
வேதவதி அவன் சொன்ன விதத்தில் குழம்பியவள் “நாம ஃப்ரெண்ட்ஸ்” என்று வாய்விட்டே அலறிவிட
“ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்னு கூட ஒரு ரிலேஷன்ஷிப் உண்டு” என்றவனின் பார்வையில் விஷமம் டன் டன்னாக வழிய எதிரில் நின்றவள் கடுப்பாகிப் போனாள்.
“சை! உங்ககிட்ட பேச வந்தேன் பாருங்க” என்று அவள் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க
“சரி போய்க்கோ! நாளைக்கு மார்னிங் நான் பிருந்தாவ பிக்கப் பண்ணுறதுக்கு ஏர்போர்ட் கிளம்பணும். எனக்குக் காபி மட்டும் போட்டுக் குடு. அம்மாவ எழுப்ப வேண்டாம்” என்று சொல்லி இன்னும் அவளைக் கடுப்பாக்கினான்.
சட்டென நின்றவள் “நீங்க உங்க காதலிய பாக்கப் போறதுக்கு நான் ஏன் காபி போட்டுக் குடுக்கணும்? வேணும்னா நீங்களே போட்டுக் குடிங்க” என்றாள் சுள்ளென்று.
ஸ்கூட்டி விவகாரத்தில் வந்த சங்கடம் பிருந்தாவின் பெயரைக் கேட்டதும் எரிச்சலாக உருவெடுத்திருந்தது அவளிடம். ஏன் இந்த எரிச்சல்? காரணம் வேறு புரிந்து தொலைக்கவில்லை. போதாக்குறைக்கு அட்சரனின் சீண்டல் வேறு.
“எனக்குக் காபி போடத் தெரியாது. அம்மாக்கு அப்புறம் நீ கொஞ்சம் சுமாரா காபி போடுற. அதனாலதான் உன்னைப் போடச் சொல்லுறது”
பெரிய கண்களில் கோபத்தோடு அவள் பேசுவது அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.
“எனக்கு ஆல்ரெடி மைண்ட் சரியில்ல. நான் போறேன்”
வெளியேற முயன்றவளின் கை அவன் வசம்.

“கையை விடுங்க” முறைப்போடு சொன்னவளைப் பொறுமையாகப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் தனது பார்வையின் கூர்மையால் அவள் கண் கலங்கவும் “உஃப்” என்றான்.
“இப்ப என்ன நடந்துடுச்சுனு கண் கலங்குற நீ? இத்துனூண்டு தலைக்குள்ள ரொம்ப பெருசு பெருசா பாரத்தை ஏத்தாத வேதா”
“உங்களுக்கு என் சிச்சுவேஷன் புரியல. ஒரு பக்கம் உங்க பேரண்ட்ஸ் என் மேல நிறைய அன்பும் அக்கறையும் வச்சிருக்காங்க. இன்னொரு பக்கம் உங்க காதல். எனக்குத் தீக்கு நடுவுல நிக்குற மாதிரி இருக்கு”
நாசி விடைத்தது அவளுக்கு. அழுகையைக் கட்டுப்படுத்தினாலும் கண்ணீருக்குக் கரை போட முடியவில்லை அவளால்.
“நீ ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிற வேதா. அதான் சொன்னேனே, என் பேரண்ட்ஸ் மருமகள்னு உனக்கு ஆசையா பண்ணுறாங்க. அதை ஏத்துக்குறதுல உனக்கு என்ன கஷ்டம்?”
“உங்க பேரண்ட்ஸ் எனக்காக யோசிக்குறதும் நான் அவங்க மேல மரியாதை வச்சிருக்குறதும் ஒன்வே ட்ராஃபிக் மாதிரி இருக்கு. நீங்க என்னைக்காச்சும் என் அப்பா அம்மா வீடியோ கால் பண்ணுறப்பவாச்சும் முகம் காட்டியிருக்கீங்களா? ரொம்ப கவனமா நீங்க தள்ளி நிக்குறீங்க. ஆனா நான் மட்டும் ஒட்டி உறவாடணும்ல”
“அவ்ளோதானே? இதுதானே உன் பிரச்சனை? எங்க உன் ஃபோன்?”
“எதுக்கு?”
“உன்கிட்ட கேக்குறதுக்கு நானே எடுத்துட்டு வந்துடுவேன்” என்றவன் அவளது அறைக்குப் போய் போனை எடுத்துக்கொண்டும் வந்தான்.
பாஸ்வேர்டைப் போட்டு அவன் போனைத் திறக்கவும் வேதவதி அதிர்ந்தே போனாள்.
“என் பாஸ்வேர்ட் எப்பிடி தெரியும் உங்களுக்கு?”
“அன்னைக்கு தாஜ் கோரமண்டல்ல இருந்து திரும்பி வர்ற வழில நான் சொன்னதைக் கேட்டு நீ டென்சன் ஆகி அந்த டென்சனை மறைக்க போனை நோண்டுன. அப்ப பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன்”
“கழுகு கண்ணு உங்களுக்கு”
சிரித்தபடியே கஜேந்திரனின் எண்ணுக்கு அழைத்தான் அட்சரன்.
“யாருக்குக் கால் பண்ணுறீங்க?”
“என் மாமனாருக்கு” அவன் கண் சிமிட்டவும்
“விளையாடாதீங்க. போனைக் குடுங்க” என அவள் பிடுங்க முயன்றபோதே “வேதாம்மா சொல்லுடா” என்று கஜேந்திரன் அழைப்பை ஏற்றுவிட்டார்.
“ஹலோ மாமா! வேதா இல்ல. நான் அட்சரன் பேசுறேன்”
திடீர் மருமகனாகிப் போனவன் இதுவரை ஒருநாள் கூட முகம் கொடுத்துப் பேசாததில் கஜேந்திரனுக்கும் கனகவல்லிக்கும் எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு.
அவன் திடுதிடுப்பென மொபைலில் பேசவும் அதிர்ச்சியில் கஜேந்திரனிடமிருந்து குரலே வரவில்லை.
“ஹலோ”
“ஹான்! சொல்லுங்க தம்… மாப்பிள்ளை” திணறிக்கொண்டே பேசினார் கஜேந்திரன்.

“எப்பிடி இருக்கீங்க? அத்தை நல்லா இருக்காங்களா? வேதா இல்லாம அங்க உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுனா இங்க வந்துட்டு அவளைப் பாத்துட்டுப் போங்களேன்”
சாதாரணமாக அவன் பேச கஜேந்திரனுக்கு மலைப்பில் வார்த்தைகள் வரவில்லை.
“ஆ… சரி மாப்பிள்ளை. கண்டிப்பா நானும் கனகாவும் வருவோம்”
“அத்தை எங்க?”
“அவ யாழினி வீட்டுக்குப் போயிருக்கா மாப்பிள்ளை”
“ஓகே! வந்ததும் நான் அவங்களை விசாரிச்சதா சொல்லுங்க. வேதாகிட்ட போனைக் குடுக்குறேன்”
சிலையாய்ச் சமைந்தவளின் கையில் போன் திணிக்கப்பட்டது.
“பேசு” கண்களால் சைகை காட்டினான்.
“அ…அப்பா”
எப்படியோ தந்தையிடம் பேசி முடிக்கையில் அதிர்ச்சி மொத்தமும் வடிந்து போனது வேதவதியிடம்.
“சரிப்பா! குட் நைட்”
அழைப்பை முடித்துக்கொண்டவள் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
“என்ன? சந்தோஷமா? இனிமே ஸ்கூட்டிய பாக்குறப்ப சங்கடமா இருக்காதுல்ல?”
“ஏன் நீங்க எங்கப்பாகிட்ட பேசுனீங்க?” மெய்யாகவே புரியாமல் கேட்டாள் வேதவதி.
“என்ன நீ? பேசுனாலும் குத்தம் சொல்லுற. பேசலனாலும் குத்தம் சொல்லுற. போடி”
சலிப்பாய் அவன் கையசைத்ததும் நழுவப் பார்த்தாள் வேதவதி. மீண்டும் அவள் கை அவன் வசம் சிக்கிக்கொண்டது.
“என்னோட வார்த்தைகள் உன்னை ரொம்ப பாதிச்சிடுச்சுனு நினைக்குறேன். நான் அப்ப கோவத்துல இருந்தேன். என் கண்ணுக்கு நீ அப்ப சந்தர்ப்பவாதியா தெரிஞ்ச. அதனால ஹார்ஷா நடந்துக்கிட்டேன். நீ அப்பிடிப்பட்டவ இல்லனு இப்ப தெளிவாகிடுச்சு. நானும் உன்னை மதிக்குறேன் தானே? அப்புறம் என்ன தயக்கம்? சும்மா சும்மா கண்ணீர் விடாத இனிமே. மண்டை சூடாகுது எனக்கு”
அழுத்தமாய்க் கட்டளையிடும் தொனியில் சொன்னவனின் பேச்சை அவளாலும் மறுக்க முடியவில்லை. சரியெனத் தலையசைத்தாள்.
“என்ன அரைகுறையா தலையாட்டுற? வாயைத் திறந்து சரினு சொல்லு”
“சரி”
“ப்ச்! உனக்கு நானே ஸ்கூட்டி ஓட்டக் கத்துத் தர்றேன். ஃபீஸ் வேண்டாம். இப்பவாச்சும் முழுமனசோட சரினு சொல்லு”
வேதவதி பதில் எதுவும் பேசவில்லை. அவளது விழிகள் அவனையே ஆழ நோக்கின.
இருவருக்குள்ளும் இருக்கிற உறவின் தாத்பரியத்தை அவனது விழிகளில் புரிந்துகொள்ளும் தவிப்பு அவளுக்கு. பெண்கள் இப்படித்தான்! சுவாரசியம், ரசனை என்று எதிர்காலமில்லாத தன்னைக் குழப்புகிற ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்களுக்குச் சரியான காரணம் புரியவேண்டும். இல்லையென்றால் புரிந்துகொள்ள முயல்வார்கள்.
அட்சரன் அவளது மோவாயைப் பற்றி முகத்தை வேறுபக்கமாகத் திருப்பினான்.
“இப்பிடி பாக்காத நீ. இந்தப் பார்வை தேன்மலை காட்டுல உன்னை முதல்ல பாத்தேனே, அந்த மொமண்ட்டை ஞாபகப்படுத்துது”
சொன்னதோடு அவளது முதுகில் கை வைத்து மெல்லமாய்த் தள்ளிவிடவும் செய்தான்.
இந்தப் பேச்சும் வேதவதியைக் குழப்பியது. அவள் மெதுவாய் நடந்து வெளியேறிவிட பெருமூச்சொன்றை விட்டான் அட்சரன். பின்னந்தலையின் சிகைக்கூட்டத்தில் கையால் கோதிக்கொண்டான்.
தனது உள்ளங்கையால் கண்களை மூடியவன் “பாக்குறதைப் பாரு, வனமோகினி மாதிரி” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டான்.
மறுநாள் விடியலில் வேதவதியையும் அன்னையையும் தொந்தரவு செய்யாமல் அவனுக்குத் தெரிந்த அளவுக்குக் காபியோ போட்டுக் குடித்தவன் விமானநிலையத்துக்குப் போய்விட்டான்.
சரியாக அவனது கார் கிளம்பிய சத்தத்தில் கண் விழித்த வேதவதி பால்கனியிலிருந்து பார்க்கையில் அட்சரனின் கார் அந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தது.

சென்னையில் இல்லாத போக்குவரத்து வசதியா? இப்படி அலையகுலைய அவனே போகவேண்டுமா? மனத்தாங்கலோடு கேட்டுக்கொண்டவள் தன்னையே மானசீகமாகக் கடிந்தும் கொண்டாள்.
“அவன் காதலிய பிக்கப் பண்ணப்போறான். உனக்கென்ன வந்துச்சு?”
சத்தமாக முணுமுணுத்தபடி மீண்டும் படுக்கையில் விழுந்தவளுக்கு மேற்கொண்டு உறக்கம் வரவில்லை. அதற்கான காரணமும் அவளுக்குத் தெரியவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

