இவளா? எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாமல் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியவள் இப்படியா நான்காண்டுகள் கழித்து கண் முன்னே வந்து நிற்பாள்?
அடுத்து அவரது பார்வையில் சிக்கியவன் அவளருகே நின்று கொண்டிருந்த வாலிபன்.
வேகமாக அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டார் நர்மதா.
குற்றவுணர்ச்சியும் வேதனையும் மனதுக்குள் மண்டியது. ஆனால் அவரது மைந்தனுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பார்த்துவிட்டு சாதாரணமாக மீண்டும் அனுமன் சிலையைப் பார்க்கத் துவங்கினான்.
நர்மதாவுக்கு அது தான் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
கண்கள் அவளைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டாலும் காதுகள் அவளது பேச்சைக் கேட்டன.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“மேரேஜுக்கு இன்னும் ஒன் வீக் இருக்கே விக்கி… அதுக்குள்ள ஹனுமன் தரிசனத்துக்கு ஏன் அவசரப்பட்ட? பாரு எவ்ளோ கூட்டமா இருக்கு”

சலிப்புடன் அவள் கூற அருகே நின்ற விக்கி என்ற வாலிபனோ சிரித்தான்.
“வேற ஒன்னுமில்ல, விக்கி நித்தியோட மேரேஜுக்கு ஹனுமான்ஜியோட அருளை அட்வான்ஸ் புக்கிங் பண்ண என் வருங்கால மனைவியோட வந்திருக்கேன்… ஹவ் ஸ்மார்ட்ல நானு?”
திருமணமா? அடிநெஞ்சில் சுருக்கென வலித்தது நர்மதாவுக்கு. கண்ணீர் நிரம்பியது அவரது விழிகளில்.
ஆனால் அந்த விக்கியோடு நின்றவளோ அவனது புஜத்தில் அடித்தபடி அவனைக் கிண்டல் செய்தாள்.
“ஆமா! நீ ஸ்மார்ட் தான்… காதுல இருந்து மூளை ஒழுகுற அளவுக்கு ஸ்மார்ட்”
“ஷப்பா கடிக்காத நித்தி… கூட்டத்துல சத்தம் போட்டு சிரிக்க கூட முடியல”
“டேய் நான் ஜோக் சொல்லல, உன்னை கலாய்க்கிறேன்”
“அப்ப இனிமே கலாய்க்கப்போறேன்னு அனவுன்ஸ் பண்ணிட்டு கலாய்க்க ஆரம்பி… உன் பேச்சுல எது ஜோக் எது கலாய்னு தெரிய மாட்டேங்குது”
இவ்வளவு நெருக்கமாக நின்று அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்தால் காதலாக இருக்குமோ?
கிண்கிணி நாதமாக ஒலித்த அவளது சிரிப்பும் அதை ரசித்த அந்த வாலிபன் விக்கியின் கண்களில் தெரிந்த ஆதுரமும் எனது வயிற்றைப் பிசைகிறதே! ஆனால் நான் பெற்ற சீமந்த புத்திரன் யாரோ எவரோ போல அவர்களை அலட்சியப்படுத்துகிறானே! இப்படி ஒரு தர்மச்சங்கடமும் வேதனையும் மகனைப் பெற்ற எந்த அன்னைக்கும் நேரக்கூடாது.
ஆஞ்சநேயரின் செந்தூரத்தை வைத்து அவளது நெற்றியில் கோபுரவடிவில் திலகமிட்டு “ஜெய் பஜ்ரங்பலி, இந்தப் பொண்ணுக்குப் புத்திய குடு… அப்ப தான் எங்களுக்குப் பிறக்குற பசங்க டபுள் புத்திசாலிகளா வளருவாங்க” என்று குறும்பாக அந்த வாலிபன் வேண்ட அவளும் கண் மூடி நின்றாள்.
இதற்கு மேல் இக்காட்சியைப் பார்க்கும் சக்தியற்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியே வந்த நர்மதாவுக்கு மூச்சு முட்டியது.
கண்களில் நீர்ப்படலம்!
“அம்மா!”
மைந்தனின் குரல் கேட்டு அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார் நர்மதா.
கிருஷ்ணராஜசாகரின் பார்வைக்கு அது தப்பவில்லை.
“என்னாச்சும்மா? தரிசனம் பாக்க வந்த இடத்துல ஏன் அழுறிங்க?”
நர்மதாவின் கண்கள் மகனின் வதனத்தில் வேதனை இருக்கிறதா என தேடியது. கிருஷ்ணராஜசாகர் என்னவோ சலனமின்றி அமைதியாகத் தான் இருந்தான்.
அவனது பேச்சிலும் நிதானம். உடல்மொழியும் பதற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை. எவ்வாறு இவனால் எதுவும் நடக்காதது போல இருக்க முடிகிறது? ஒருவேளை நடிக்கிறானோ?
மகனின் தோள்களைப் பற்றிய நர்மதா கோவிலை நோக்கி கை நீட்டினார்.
“அங்க நான் பாத்தவளை நீயும் பாத்தல்ல… பாக்கலனு பொய் சொல்லாத கிரிஷ்…. நீ அவளைப் பாத்த… உன் கண்ணுல ஒரு ஆச்சரியம் தெரிஞ்சுது”
கிருஷ்ணராஜசாகர் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.
“பாத்தேன்மா… அதுக்கென்ன இப்ப?”
“என்னடா இப்பிடி கேக்குற?”
“வேற எப்பிடி கேக்கணும்மா?”
“அவ… அவ … அவ உனக்கு”
நர்மதா திக்கித் திணறி சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்தினார்.
“அவ நித்திலா… சோ வாட்? இந்தக் கோவில்ல நம்மளை சுத்தி எவ்ளோ கூட்டம் நிக்குது? அதுல இருக்குறவங்க எனக்கு எப்பிடியோ அப்பிடி தான் நித்திலாவும்… நீங்க ஏன் ஓவர்-ரியாக்ட் பண்ணுறிங்க?”
தோளைக் குலுக்கி அலட்சியத்தைக் காட்டிய மைந்தனை என்ன செய்வதென புரியாமல் நின்றார் நர்மதா.
அவர்களிடமிருந்து சில அடிகள் தொலைவில் அந்த நித்திலாவும் விக்கியும் கோவிலில் இருந்த மூதாட்டிக்கு உணவும் பணமும் கொடுப்பதை கவனித்தார். அவர்களின் பேச்சில் காதை பதித்தார்.
“உங்க பேர் என்னம்மா?”
ஆதுரத்துடன் இந்தியில் கேட்டார் அப்பெண்மணி.
“நான் நித்திலா, இவர் விக்ரம்… அடுத்த வாரம் எங்களுக்கு மேரேஜ்… எனக்குப் பேரண்ட்ஸ் கிடையாது… உங்களை அம்மாவா நினைச்சுக்கிறேன்… நாங்க நல்லா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா”
நர்மதாவின் நெஞ்சில் இரண்டாம் முறையாக இடி விழுந்தது
இருவரும் காலில் விழ அவர்களை மனம் நெகிழ்ந்து ஆசிர்வதித்தார் அந்தப் பெண்மணி.
“என் மகனோட ஆபரேசனுக்குப் பணமும் குடுத்து இப்ப அவனுக்கு மருந்து வாங்கவும் உதவிருக்கிங்க… ரொம்ப நன்றிம்மா” என்று தனது நன்றியையும் கூறினார் அவர்.
இப்போதும் கிருஷ்ணராஜசாகரின் கவனம் அவள் பக்கம் திரும்பவில்லை. இப்ராஹிம் நீட்டிய மொபைலில் யாரிடமோ காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான் அவன்.
“நாளைக்கு மானிங் சேம்பர் ஆப் காமர்ஸ் மீட்டிங்… ஈவ்னிங் ஃப்ளைட்ல நானும் அம்மாவும் இப்ராஹிம் கூட கிளம்பிடுவோம்… நீயும் உன் ஒய்பும் ஃபிப்த் ஹனிமூனை முடிச்சிட்டுச் இந்தியாக்கு வந்ததுக்கு அப்புறம் மத்ததை பேசிக்கலாம்”
அவன் பேசியது சந்தீப்பிடம் என்று நர்மதாவுக்குப் புரிந்தது. இரு பிள்ளைகளும் இரு துருவங்களாக நிற்கும் வேதனை எப்போதும் உள்ளது தான். இப்போதைய வேதனை மூத்தவனின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்பதை பற்றியது.
ஆஞ்சநேயரிடம் வைத்த வேண்டுதலை கூட அவரது மைந்தன் பலிக்காமல் செய்துவிட்டான். இனி யார் அவனை மாற்றப்போவதென குழம்பி வேதனையில் உழன்றபடி கண்ணீரைக் கட்டுப்படுத்தினார் நர்மதா.

வெகு ஆவலோடு பக்தியும் பரவசமுமாக கோவிலுக்கு வந்தவருக்கு ஹனுமன் பரிதவிப்பையும் வேதனையையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆனால் பெரியவர்கள் சொல்வார்களே, தெய்வம் சோதிக்கும் கைவிடாதென, அது போல ஹனுமனின் சோதனை தான் இதுவாக இருக்குமோ!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

