வார்த்தைகளால் காயங்களை நெய்தவர்கள்
உறவுக்கயிற்றின் இறுக்கம் தளர்ந்ததும்
இயல்பாகினர் மௌனத்தின் மெல்லிய இழைகளால்!
தனித்தீவுகளாக மாறப்போகும் உற்சாகத்தில்!
-அட்சரனின் வேதா
வானதி வந்த தினத்தில் அட்சரன் வேதவதியோடு பேசி ஒரு முடிவை எடுத்திருந்தான். அதில் அவளுக்கும் சம்மதம் என்றதும் கொஞ்சமாய் மனக்கிலேசம் அடங்கியது அவனுக்கு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
உறவுச்சிக்கல்களை மில்லினியல்கள் கையாண்ட விதத்துக்கும், ஜென் ஜி தலைமுறையினர் கையாளும் விதத்துக்கும் வித்தியாசமுள்ளது.
காதலிலோ உறவிலோ பிரிவு வந்தாலோ மனக்கசப்பு வந்தாலோ விரோதம் பாவிப்பதும், வெறுப்போடு பிரிவதும் மில்லினியல்கள் காலத்தோடு முடிந்து போனது.
ஜென் ஜி தலைமுறை பிரிவைக் கூட சுமூகமாகவே அணுக விரும்புகிறார்கள். அதனால்தானோ என்னவோ பிரிவதற்கான கால அவகாசத்தைக் கூட கூலிங் ஆஃப் பீரியட் மூலம் கடக்கும்போது யாருக்கும் காயமின்றி எந்த வெறுப்புமின்றி கடக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
அட்சரன் வேதவதியின் விஷயத்தில் இந்தக் ‘கூலிங் ஆஃப் பீரியட்’ என்பது அவர்கள் இருவரும் மீண்டும் சேருவதற்கான அவகாசம் அல்ல; மாறாக, எந்தக் காயமும் இல்லாமல் விரோதமும் இல்லாமல் பிடிக்காத இந்த உறவிலிருந்து ஒருவரையொருவர் விடுவித்துக் கொள்வதற்கான ஒரு அமைதியான வழியே!
உடனடி பிரிவை நிச்சயம் பெரியவர்கள் அவசரமுடிவாகவே கருதுவார்கள் என்பதால் அட்சரன் இந்த முடிவை யோசித்து அதற்கு வேதவதியிடம் சம்மதமும் வாங்கிவிட்டான்.
வேதவதியும் அவன் சொன்னதை ஏற்று மேனுஸ்கிரிப்ட் விவகாரத்தில் சமாதானம் ஆனாற்போலதான் தெரிந்தது அவனது பார்வைக்கு. வானதி அழைத்ததும் அவளுடன் வெளியே செல்ல அவள் சம்மதித்ததே அதற்குச் சான்றாய்.
திரும்பி வந்தபோது இரு பெண்களின் கைகளிலும் ஆடைகள் அடங்கிய காகிதப்பைகள்.
“என்கிட்ட நிறைய ட்ரஸ் இருக்குனு சொன்னேன் அத்தை. வானுதான் வாங்கி குடுத்தா இதெல்லாம்” என்று ராஜேஸ்வரியிடம் ஆர்வமாய் ஒவ்வொரு உடையையும் காட்டியவளின் முகத்தில் வாட்டமில்லாதது அட்சரனுக்குப் பெரும் நிம்மதியாய்!
“எல்லாமே அழகா இருக்கு. இந்த ஹேர்கட் கூட உன் முகத்துக்கு ரொம்ப அழகா இருக்கு” மருமகளின் மோவாயைக் கிள்ளிப் பாராட்டினார் ராஜேஸ்வரி.
மகன் செய்துவைத்த கிறுக்குத்தனங்கள் எதுவும் தெரியாதே அவருக்கு.
அட்சரன் அசட்டையாகத் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.
“ஒழுங்கா இருந்த முடியை அங்கங்க கட் பண்ணிட்டு வந்திருக்கு. இது அழகாம்”
வாய்க்குள் முணுமுணுத்தவனைக் கீழ்த்தளத்திலிருந்து அண்ணாந்து பார்த்தாள் வானதி. அவனும் வேதவதியும் சமாதானமாகிவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு நண்பனின் பார்வை ரசனைப்பார்வையாகத் தோன்றிவிட்டது.
“என்ன அச்சு, வேதாவ சைட் அடிக்கிறியா?” இடுப்பில் கையூன்றி கண் சிமிட்டி அவள் கேட்ட விதத்தில் அவன் தலையிலடித்துக்கொள்ளாத குறை.
“என் டேஸ்ட் அந்தளவுக்குக் கேவலம் இல்ல” என்றான் மிதப்பாக.
அடுத்த நொடி வேதவதியின் கண்கள் முறைப்பாய் அவனை எரிக்க அந்தப் பார்வையை அமர்த்தலாக எதிர்கொண்டவன் ஏளனச்சிரிப்பை உதிர்த்தான்.

தொடர்ந்து நிற்காமல் அவன் நகர்ந்து போய்விட்டான்.
ராஜேஸ்வரி கிடைத்த இடைவெளியில் வானதியின் மொபைலில் இருந்து அருள்மொழிக்கு அழைப்பு விடுத்துவிட்டார் விருந்துக்கு வருவதற்காக.
அவனும் சம்மதித்துவிட்டான்.
“நிஜமா சம்மதிச்சானா?” எனப் பலமுறை கேட்டவளை யோசனையோடு பார்த்தார் ராஜேஸ்வரி.
“இந்த வீட்டுல சில விஷயங்கள் முரணா இருக்கு. உங்க வீட்டுல எல்லாம் நார்மலாதானே இருக்கு?” என்று குறிப்பு காட்டி வினவினார்.
அதில் வானதி சுதாரித்துக்கொண்டாள்.
“ஆமா! நார்மலாதான் இருக்கு ஆன்ட்டி. அது அண்ணியோட ஃபேமிலி விருந்துக்குக் கூப்பிட்டாங்க. அருள் வரமுடியாதுனு சொல்லிட்டான். அதான் இங்க வரச் சம்மதிச்சானானு கேட்டேன். வேற ஒன்னுமில்ல”
ராஜேஸ்வரியின் பார்வையில் இன்னும் சந்தேகத்தின் கூறுகள்!
“அருள் இங்க லா ப்ராக்டீஸ் பண்ணுறதுக்கான வேலையில இறங்கியிருக்கான் ஆன்ட்டி. அதனாலதான் விருந்தெல்லாம் வேண்டாம்னு சொன்னான்.”
“ம்ம்! நம்பிட்டேன்டி. நல்லா சமாளிக்குற. உங்க எல்லாரையும் இத்துனூண்டு குழந்தைங்களா பாத்தவ நான். என்கிட்டயே சாமர்த்தியமா சமாளிக்குற. நீ பொழைச்சுக்குவ. அப்பிடியே இந்தச் சாமர்த்தியத்தை என் மருமகளுக்கும் கத்துக் குடு.”
வேடிக்கையாகப் பேசிச் சிரித்துக்கொண்டார்கள் ராஜேஸ்வரியும் வானதியும்.
எந்தவித சந்தேகமும் வராமல் தங்களது ‘கூல் – ஆஃப்’ பீரியடுக்குள் நுழைந்திருந்தார்கள் அட்சரனும் வேதவதியும். வாய்மொழியாக அன்று இரவே அவர்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள் இருவரும்.
ஒருவர் மற்றொருவரை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது என்பது முதல் விதி. இருவரது குடும்பத்தாருக்கும் எவ்விதச் சந்தேகமும் வராத விதத்தில் நடந்துகொள்ளவேண்டும் என்பது இரண்டாம் விதி. மூன்றாம் விதி இருவரும் மற்றொருவரின் தனியுரிமையில் தலையிடக்கூடாது என்பது.
இப்படி விதிமுறைகள் போட்டு வாழ்க்கையை எதிர்கொள்ள அவர்கள் தயாரானபோது வேதவதிக்கும் மாற்றுச்சான்றிதழ் பல்கலைக்கழகத்திலிருந்து கொடுத்துவிட்டார்கள்.
அவள் லயோலாவில் முதுகலை வணிகவியல் முதலாமாண்டைத் தொடர எவ்விதத் தடையுமில்லை இனி.
அவள் கல்லூரியில் சேர வேண்டிய நாளுக்கு முந்தைய இரவில் சதானந்தன் அட்சரனுக்கு ஒரு வேலை கொடுத்தார்.
“நாளைக்குக் காலையில நீதான் வேதாவ காலேஜ்ல கொண்டு போய் ட்ராப் பண்ணனும்.”
“நானா?” என அதிர்ந்தவன் மேற்கொண்டு பேசும் முன்னர் அவர் காரணங்களை அடுக்கினார்.
“நீ அந்தக் காலேஜோட அலும்னி. உன்னோட ஒய்பா அவ அங்க அறிமுகமானா வேதாக்குத் தனி மரியாதை கிடைக்கும். அவளோட போய் ஹெச்.ஓ.டியை மீட் பண்ணிடு”
சதானந்தன் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டியவன் அங்கிருந்து நகர முயல மெதுவாகத் தொண்டையைச் செருமினார்.
“இன்னும் ஸ்மோக் பண்ணுறியா என்ன?”
அட்சரனின் தேகம் விறைத்தது. நிமிர்ந்து தந்தையைப் பார்த்தவன் “உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா அதுல? ஐ அம் அன் அடல்ட். அப்பாவா இருந்தாலும், யூ காண்ட் கொஸ்டீன் மை பர்சனல் சாய்ஸஸ்” என்று அலட்சியமாகப் பதிலளிக்க

“உன் ஈகோ இருக்குதே, அது நிக்கோடினை விட நச்சானது. ரெண்டையும் விட்டுட்டா உன் உடம்பும் மனசும் இன்னும் ஆரோக்கியமா மாறும்” என்று சொல்லிவிட்டுப் போனார் அவர்.
மறுநாள் விடியலில் ஒரே பரபரப்பாக இருந்தாள் வேதவதி. மனம் நிறைய ஆர்வம் இருந்தாலும் அதை விட அதீதமாய்ப் பயமும் மிரட்சியும் கொட்டிக் கிடந்தன.
இந்தப் பெருநகரத்தின் இளம் தலைமுறையோடு தன்னால் இணைந்து படிக்க முடியுமா என்ற கேள்வி மாபெரும் சந்தேகமாய் அவளுக்குள் உருண்டு கொண்டிருந்தது.
ஒருவழியாகக் குளித்து வானதி வாங்கிக் கொடுத்த மெரூன் வண்ண ரேயான் குர்தி செட்டை அணிந்துகொண்டாள். காலையுணவின் போது அவள் சரியாகச் சாப்பிடவேயில்லை என்பதைக் கண்டுகொண்டார் ராஜேஸ்வரி.
“என்ன நீ? இப்பிடி கொறிக்குற?”
அதட்டி மிரட்டிச் சாப்பிடவும் வைத்தார். அவள் சாப்பிட்டுக் கிளம்பி நிற்கவும் அட்சரன் வரவும் சரியாக இருந்தது.
“வா! கிளம்பலாம்” அவன் தன்னை அழைத்ததை வேதவதியால் நம்பவே முடியவில்லை. ராஜேஸ்வரியாலும்தான்.
“நீங்களா? உங்ககூடவா நான் வரணும்?”
அட்சரன் ஏற இறங்க அவளைப் பார்த்தவன் “வர இஷ்டமில்லனா உன் மாமனார் கிட்ட சொல்லு.” என்று கிளம்ப எத்தனிக்க
“ஐயோ! நில்லுங்க நில்லுங்க! நான் வர்றேன்” என்று அவசரமாகச் சொன்னவள் “போயிட்டு வர்றேன் அத்தை” என்று விடைபெற்றுவிட்டு அவன் பின்னே ஓடினாள்.
அட்சரன் கார்க்கதவைத் திறந்த சத்தம் கேட்டதும் ஓடிப்போய்ப் பின்னிருக்கையை ஆக்கிரமித்தாள்.
அட்சரன் இக்காட்சியைப் பார்த்துவிட்டு இடுப்பில் கையூன்றி முறைத்தான்.
‘நான் இவளுக்கு டிரைவரா?’ கடுகடுத்தவன் கார்க்கண்ணாடி அருகே குனிந்து விரல்களைச் சொடுக்கினான்.
வேதவதி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“மேடம் உங்களுக்கு டிரைவரா இருக்குறதுக்கு எவ்ளோ சம்பளம் தர்றதா இருக்கீங்க?” நக்கலாக அவன் கேட்டதும் அவள் முதலில் மலங்க மலங்க விழித்தாள்.
“இறங்கி முன்னாடி போய் உக்காரு. ப்பே” என்று கடுப்பாய்க் கையசைக்க அவளும் முறைப்போடு கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“டென்சன்ல பின்னாடி போய் உக்காந்துட்டேன். ரொம்ப ஓவராப் பண்ணாதீங்க” என்று உதட்டைச் சுழித்துவிட்டு முன்பக்கத்துக் கதவைத் திறந்து அமர்ந்துகொண்டாள்.
அட்சரனும் காரின் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்தான். கார் கிளம்பியதுமே வேதவதியின் இதயம் எகிறிக் குதிக்க ஆரம்பித்தது.
கைவிரல்களைப் பிரித்துப் பிரித்துக் கோர்த்தாள். பிணைந்த விரல்கள் நெறிவதைப் பார்த்தபடியே கார் ஓட்டிக்கொண்டிருந்த அட்சரனின் இதழ்களில் சின்னதாய் முறுவல்.
‘இவளை என்ன பலி மேடைக்கா அழைத்துப் போகிறேன்? ஏன் இவ்வளவு பயம்?’
தனக்குள்ளே எண்ணிக்கொண்டவன் காரை ஓட்டுவதில் கவனமானான்.

எச்சிலை விழுங்கியவள் மொபைலில் அழைப்பு வரவும் கண்களை மூடித் திறந்து தன்னைச் சமனப்படுத்திக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.
“ப்பா!”
“வேதா இன்னைக்குக் காலேஜுக்கு முதல் நாள். மனசு படபடனு இருக்கும். அதுக்காகப் பயந்துடக்கூடாது. சரியா?”
“சரிப்பா”
“சாப்பிட்டியா?”
“ம்ம். தோசை சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டாச்சா?”
“இப்பதான் ஆச்சுடா. மில்லுக்குக் கிளம்பிட்டிருக்கேன். அதான் போறதுக்குள்ள உன்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டா நிம்மதியா இருக்குமேனு கால் பண்ணுனேன். உன் அம்மா யாழினி வீட்டுக்குப் போயிருக்கா. உனக்குக் கிளாஸ் முடிஞ்சதும் அவகிட்ட பேசிடு. நீ ஒரு நாள் பேசலனா கூட அவளுக்குத் தூக்கம் வரமாட்டேங்குதுடா”
“ம்ம்.. சரிப்பா! நீங்க வேலைக்குக் கிளம்புங்க”
அழைப்பைப் பேசிவிட்டுத் துண்டித்தவளுக்குத் தொண்டை வறண்ட உணர்வு.
அதே நேரம் காரும் நின்றது. என்னவென அவள் மிரளுகையில் காரை ஓரங்கட்டிய அட்சரன் காரிலிருந்து இறங்கிப் போக வேதவதியோ திகைத்தாள்.
கல்லூரிக்கு நேரமாகிவிட்டது. இவன் எங்கே போகிறான்? எட்டிப் பார்த்தவள் அவன் தண்ணீர் பாட்டிலோடு வரவும் சின்னதொரு குழப்பத்தோடு காத்திருந்தாள்.
காருக்குள் அமர்ந்தவன் அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
“எதுக்கு?”
“போன் பேசுனது ரெண்டு நிமிசம். அதுக்குள்ள ரெண்டாயிரம் தடவை நீ உதட்டை ஈரமாக்கிட்டே இருந்த. தாகம்னு தெரிஞ்சுது. அதான் வாங்குனேன். குடி”
‘இவன் என்னைக் கவனித்தானா?’ ஆச்சரியப்பார்வையோடு தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டவள் மடமடவெனக் குடித்துக் காலி செய்தாள்.
அட்சரனுக்கு அவளது பதற்றம் அநாவசியம் எனத் தோன்றியது. அதே சமயத்தில் எல்லா மனிதர்களும் ஒரே போல இருக்கமாட்டார்கள் என்ற உண்மையும் புரிந்ததால் அவளைக் கிண்டல் செய்ய மனம் வரவில்லை.
தண்ணீரைக் குடித்து முடித்தவளிடம் “இவ்ளோ டென்சன் ஆகுறதுக்கு அவசியமில்ல. அது நல்ல காலேஜ். உனக்கு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும். இன்னும் ரெண்டே மாசத்துல உன்னோட நேச்சரே மாறும்” என்றான் சாதாரணக்குரலில்.
வேதவதி மீண்டும் விரல்களைக் கோர்த்துப் பிரிக்கவும் சட்டென அவள் பக்கம் திரும்பினான். கையை அவன் அமர்ந்திருந்த இருக்கையின் மேல்பகுதி மீது போட்டுக்கொண்டபடி தலை சாய்த்து அவளைப் பார்த்தவனைக் குழப்பம் ததும்பிய விழிகளால் ஏறிட்டாள் வேதவதி.

“எனக்குப் புது இடம்னா பயம்” என்றாள் மெதுவாக.
“அடேங்கப்பா! நீயா பயப்படுற? என் ஆபிஸ்ல என்னோட ரூம்ல நின்னு என் சட்டையைப் பிடிச்சுப் பேசுனவளுக்குக் காலேஜுக்குப் போக பயம்னு சொன்னா எப்பிடி நம்புறது?” நம்பாதவனாகத் தோள்களைக் குலுக்கினான் அட்சரன்.
“புது ஆளுங்க மத்தில இருக்குறதுக்குப் பயம். அதுவும் இந்த ஊர், இந்தக் கல்ச்சர் எனக்கு வித்தியாசமா இருக்கு” என்றாள் தவிப்போடு.
“எல்லா ஊர்லயும் மனுஷங்கதான் இருக்காங்கனு நினைச்சா அந்தப் பயம் போயிடும். அப்புறம் இங்கயும் கன்சர்வேட்டிவ் மக்கள் இருப்பாங்க. சுதந்திரமான மனுஷங்களும் இருப்பாங்க. மனுஷங்களை டாக்கில் பண்ண கத்துக்கலாம் இந்த ஜன சமுத்திரத்துல. ஓபன் மைண்டோட இரு. யாரும் உன்னைக் கடிச்சு முழுங்கிட மாட்டாங்க”
அவன் அழுத்தமாய்ச் சொல்லவும் சின்னதாய் தைரியத்தின் துளிர் அவள் மனதில்.
“ம்ம்”
அடுத்த நொடி கார் கிளம்பியது.
லயோலா கல்லூரியை அடைந்ததும் வேதவதியோடு வணிகவியல் துறையை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.
“உங்களுக்கு எப்பிடி இந்த இடம் தெரியும்?” வேதவதி ஆச்சரியமாய் வினவ
“நான் இந்தக் காலேஜ்லதான் படிச்சேன்” என்றான் அவன் நடந்தபடியே.
“அப்பிடியா? என்ன மேஜர்?”
“காமர்ஸ்”
“நீங்களுமா? காமர்ஸ் படிச்சுட்டு எப்பிடி புக், லிட்டரரி ஏஜெண்ட்?”
“நீயும்தான் காமர்ஸ் ஸ்டூடண்ட். கதை எழுதுறியே” என்றபடி நின்றவன் “நீ ரொம்ப கேள்வி கேக்குற. நார்மலா பேசுனா இப்பிடித்தான் கேள்வி கேட்டுட்டே இருப்பியோ?” என்று வினவ
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு…” என இழுத்தாள் அவள்.
“என்னைப் பத்தி நீ தெரிஞ்சிக்க எதுவுமில்ல. வா! ஹெச்.ஓ.டி கிட்ட நேத்து பெர்மிசன் வாங்குனேன். அவர் பிசியாகுறதுக்குள்ள பேசிட்டு வந்துடலாம்”
வணிகவியல் துறைத்தலைவர் அவனை இன்முகத்தோடு வரவேற்றார்.
“வெல்கம் அட்சரன். இவங்கதான் நீ சொன்ன ஸ்டூடண்டா?” என்றார்.
“ஆமா சார்! இவங்க வேதா. எம்.காம் ஃபர்ஸ்ட் இயர்ல ஜாயின் பண்ணப்போறாங்க. இதுக்கு முன்னாடி குற்றாலம் பராசக்தி காலேஜ்ல படிச்சாங்க”
“ஓஹ்! ஏன் டிசி வாங்கி இங்க ஜாயின் பண்ணிருக்காங்க?”
“கல்யாணம் ஆகிடுச்சு சார்”
அட்சரன் ஒரேயடியாக இப்படி போட்டு உடைப்பான் என வேதவதி நினைக்கவில்லை. அவளது முகத்தில் சின்னதாய் சங்கடம் பரவியது.
“படிச்சிட்டிருக்கப்பவே கல்யாணமா?”
“எதிர்பாராம நடந்துடுச்சு சார். அதுக்காகப் படிப்பை விடமுடியாதுல்ல”

“யாஹ்! பை த வே இவங்க ஹஸ்பெண்ட் வரலையா?”
“நான்தான் சார் இவங்க ஹஸ்பெண்ட்”
மீண்டும் வேதவதியின் முகத்தில் சங்கடம்.
துறைத்தலைவரின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“நீ ஸ்டூடண்டா இருந்தப்ப இவ்ளோ அனுசரணையான ஹஸ்பெண்டா மாறுவனு யோசிச்சதேயில்லப்பா. மேரேஜ் எல்லாரையும் மாத்திடுது”
ஆக இவனது திமிர்த்தனம் கல்லூரியில் இருக்கும் பேராசிரியருக்கும் அறிமுகம்தானே போல! மனதுக்குள் கறுவிக்கொண்டாள் வேதவதி.
“இவங்க கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். யார்கிட்டவும் ஈசியா பழக மாட்டாங்க. அதனாலதான் நானே ஃபர்ஸ்ட் டே காலேஜுக்கு அழைச்சுட்டு வந்தேன்”
“டோண்ட் வொரி அட்சரன். நீ நம்ம பையன். உன் ஒய்புக்கு இங்க எந்தப் பிரச்சனையும் இருக்காது. அகாடெமிக் ரெக்கார்ட் எல்லாம் எப்பிடிம்மா? யூ.ஜில என்ன பர்செண்டேஜ்?”
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் வித் டிஸ்டிங்ஷன் சார்”
“ஓஹ்! வெரி குட் வெரி குட்! அப்ப பிரச்சனையே இல்ல. தைரியமா கிளாசுக்குப் போங்க”
அவர் சொல்லும்போதே சில பெண்கள் வந்தார்கள். மாணவிகள்தான்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கிற இன்டர் காலேஜ் செமினார் பற்றி கேட்க வந்தார்களாம்.
அவர்களில் ஒருத்தியிடம் வேதவதியை அறிமுகப்படுத்தினார் துறைத்தலைவர்.
“பிரியம்வதா! இந்தப் பொண்ணு உன் கிளாஸ்லதான் ஜாயின் பண்ணப்போறாங்க. நேம் வேதா. இவங்ககூட இருந்து கொஞ்சம் கைட் பண்ணும்மா”
“கண்டிப்பா சார்” என்றவள் வேதவதியிடம் நட்பாய் முறுவலித்தாள்.
“கிளாசுக்குப் போகலாமா?” என்று கேட்டாள்.
வேதவதி கலக்கமாய் அட்சரனைப் பார்த்தாள். அதைக் கவனித்த பிரியம்வதாவின் சிரிப்பு இன்னும் விரிந்தது.
“என்ன இது? ஃபர்ஸ்ட் டே கிண்டர் கார்டனுக்குப் போற குழந்தை அவங்கம்மாவ பரிதாபமா பாக்குற மாதிரி ஒரு லுக் விடுறீங்க. கம் ஆன்! நாங்க இருக்கோம். சியர் அப்”
வேதவதியின் தோளில் தட்டினாள் பிரியம்வதா.
அட்சரனும் துறைத்தலைவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தான்.
“உன்னை அழைச்சிட்டுப் போக அப்பா வருவார். நான் கிளம்புறேன்” என்று அவளது வலதுகரத்தைப் பிடித்து அழுத்தியவன் விடைபெற்றான்.

பிரியம்வதாவும் அவளுடன் வந்த பெண்களும் வேதவதியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே செல்வதைத் திரும்பி நடந்தவனின் காதுகள் கவனித்தன.
“ஹூ இஸ் ஹீ? ரிலேட்டிவா? தெரிஞ்சவரா?”
“அது… அவர்… அவர் என்னோட ஹஸ்பெண்ட்”
நடந்தவனின் இதழ்களில் அவனையறியாமல் முறுவல் பூத்தது. தனது மனைவியாக அவளை அறிமுகப்படுத்தியபோது ஓரக்கண்ணால் வேதவதியின் முகபாவனையில் ஒட்டியிருந்த சங்கடத்தைக் கவனித்திருந்தான்.
அழுதாலும் புரண்டாலும் இந்த உறவை மாற்றவா முடியும்? ஆனால் ஆசையாக ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை அவர்கள்.
எப்படியும் பிரியப்போகிறோமென்ற தெனாவட்டில் இருவரும் உறவைப் பிறருக்குப் பறைசாற்றத் தயங்கவில்லை என்பதுதான் அவர்களின் மனமறிந்த உண்மை. யோசனையோடு கல்லூரியை விட்டு வெளியேறிய அட்சரனின் கார் அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து ஹெல்வட்டாஸுக்குப் பறந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

