சதானந்தன் எப்படி கேப் புக் செய்யவேண்டுமெனச் சொல்லிக் கொடுத்தார் அவளுக்கு.
“பைக் டாக்சியும் இருக்கு இதுல. உனக்குக் கார், ஆட்டோ, பைக் எது வசதியோ அதுல போகலாம். இப்ப நீயே புக் பண்ணு பாப்போம்”
வேதவதியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. எப்படியோ திருமூர்த்தி நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு ரைட் ஒன்றை புக் செய்தாள்.
“பணம் எப்பவுமே லொகேசனுக்குப் போய் இறங்குனதுக்கு அப்புறமா பே பண்ணும்மா.”
சிறிது நேரத்தில் ஆட்டோ வரவும் ஓ.டி.பி-யைச் சொல்லிவிட்டு ஏறினாள்.
“பத்திரமா போயிட்டு வாம்மா” சதானந்தன் வழியனுப்பிவைத்தார் அவளை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆட்டோ போகப் போக வேதவதிக்கும் திக்திக் உணர்வுதான் மனதுக்குள். இதுவரை அதிகபட்சமாக அவள் பயணம் செய்தது தேன்மலையிலிருந்து குற்றாலத்துக்குத்தான்.
முதல் முறையாக இந்த மெட்ரோபாலிட்டனில் தனியே பயணிக்கிறாள். அதுவும் அட்சரனின் அலுவலகத்துக்கு. அந்த எண்ணமே அவளது திக்திக் உணர்வை இன்னும் அதிகமாக்கியது.
ஒருவழியாக ஹெல்வட்டாஸை அடைந்து ஓட்டுநர் கேட்ட பணத்தை யூ.பி.ஐ வழியாகச் செலுத்தியபோது அவளது மனதில் குட்டியாய்த் தன்னம்பிக்கை துளிர்த்திருந்தது.
ஹெல்வட்டாஸிற்குள் தயக்கத்தோடு நுழைந்தவள் இலக்கியாவைப் பார்த்ததும் புன்னகைத்தாள். கூடவே இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவளை யாரெனத் தெரியாததால் சின்னதொரு குழப்பம் வேதவதியின் விழிகளில்!
“ஹேய் வேதா வந்துட்டியா?” உற்சாகமாக ஓடி வந்து வேதவதியைத் தோளோடு அணைத்துக்கொண்டாள் இலக்கியா.

அவள் அதோடு நிற்கவில்லை. அந்த இன்னொரு பெண்ணிடம் வேதவதியைக் காட்டி “இவ வேதவதி. மிஸஸ் வேதவதி அட்சரன்” என்றாள் புன்னகையோடு.
கூடவே “இவங்க பிருந்தா நாயர். அச்சுதான் இவங்களுக்கு லிட்டரரி ஏஜெண்ட்” என்றாள் இலக்கியா.
‘பிருந்தா’… அன்றொரு நாள் அட்சரனிடம் மொபைலில் பேசியபோது அவன் அழைப்பைத் துண்டிக்கும் முன்னர் யாரையோ பிருந்தா என அழைத்ததாய் நினைவு.
அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு வேதவதி புன்னகை முகமாய் “ஹலோ” என்க அந்தப் பெண்ணின் முகத்திலோ ஈயாடவில்லை.
“வேதா! அதுதான் அச்சுவோட ரூம். நீ அங்க வெயிட் பண்ணு, நான் பிருந்தா கூட பேசிட்டு வந்துடுறேன்”
வேதவதி தலையாட்டியபடி அட்சரனின் அறைக்குள் சென்றாள். நல்லவேளையாக அங்கே அவனில்லை. அந்த அறையைச் சில நிமிடங்கள் தனிமையில் நின்று ரசித்தாள்.
சரியாகப் பதினைந்து நிமிடங்கள் கழித்து வேதவதியை அழைக்க வந்தாள் இலக்கியா.
“இன்னைக்கு அச்சு மறுபடி உன் கதைய ரீட் பண்ணுவான். இன்னும் அவன்கிட்ட சொல்லலை. உன்னை மாதிரியே அவனுக்கும் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தோணுச்சு” என்று அவளது மேனுஸ்கிரிப்ட்டின் ஸ்பைரல் பைண்டிங்கை காட்டினாள்.
“வாயேன்! பக்கத்துல ஒரு கபே இருக்கு. அங்க போய் ஒரு காபி குடிக்கலாம். அப்பிடியே இந்தக் கதைல எனக்குச் சில மாற்றங்கள் பண்ணுனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதையும் சொல்லிடுறேன்”
இரு பெண்களும் கபேயில் காபி குடித்தபோதே கதையில் எந்தெந்த இடங்களில் மாற்றம் வந்தால் நன்றாக இருக்குமெனப் பொதுவாகக் கூறினாள் இலக்கியா.
“எல்லாத்தையும் இப்பவே தலையில போட்டுக் குழப்பிக்கணும்னு அவசியமில்ல. அச்சுவும் அவனோட ஒபீனியனைச் சொல்லுவான். மொத்தமா அந்த சேஞ்ச் எல்லாத்தையும் பண்ணிடு. உனக்கும் சுலபமா இருக்கும்”
“சரி இலக்கியா” என்றவள் தயக்கத்தோடு “அவங்க… அந்த பிருந்தா எங்க?” என்று வினவவும் இலக்கியாவின் முகம் மாறிப்போனது. வேதவதியை ஊன்றிப் பார்த்தவள் தன் மனதில் பட்டதைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“இங்க பாரு வேதா! அச்சுக்கும் உனக்கும் இடையில ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். அதுக்காக அவனை விட்டுத் தூரமா நிக்காத. இந்த உலகத்துல இடைவெளிய ஃபில்லப் பண்ணுறதுக்குனு சில ஜீவராசிகள் இருக்குதுங்க. அதுங்கல்ல யாரும் உங்க ரெண்டு பேருக்குள்ள வந்துடக்கூடாது.” என்றாள் இலக்கியா அக்கறையோடு.
வேதவதிக்கு ஒன்று புரியவில்லை. ஆனால் இலக்கியாவின் பேச்சிலிருந்த அக்கறை அவளது மனதைத் தொட்டதால் தலையாட்டிவைத்தாள்.
இருவரும் பேசிக்கொண்டே காபியைக் காலி செய்தபோது சஞ்சயிடமிருந்து இலக்கியாவுக்கு மொபைல் அழைப்பு. பேசி முடித்தவள் “சஞ்சய் கவிநேசனை மீட் பண்ணப்போயிருக்கான். அங்க என்ன வரச் சொல்லுறான். நீ ஹெல்வட்டாஸ் போ வேதா. அச்சு இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவான். ரெண்டு பேருமா பேசி ஒரு முடிவை… இல்லல்ல ரெண்டு முடிவை எடுங்க. ஒன்னு உன் கதையப் பத்தி. இன்னொன்னு உங்க வாழ்க்கைய பத்தி” என்றாள் தீவிரக்குரலில்.
அதற்கும் வேதவதியின் பதில் தலையாட்டல்தான்.
இலக்கியா கபேயிலிருந்து ஹெல்வட்டாஸின் தரிப்பிடத்துக்குப் போய் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட வேதவதி ஹெல்வட்டாஸுக்குள் நுழைந்தாள்.
அட்சரனின் அலுவலக அறையில் ஆள் நடமாட்டம் தெரியவும் அவன்தான் வந்துவிட்டானென அங்கே சென்றவள் உள்ளே தீப்பிழம்பாகக் கொதித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்ததும் மிரட்சியோடு நின்றுவிட்டாள்.
“உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்” என்று சொன்னபோதே குரல் பேசவில்லை. உருமியது.
வேதவதி பதில் பேசாமல் நிற்கவும் அவனது கோபத்துக்கு வாகாய்ப் போனது.
இருக்கையிலிருந்து எழுந்தவன் “உன்னை யார் இங்க வரச் சொன்னது? என்னை அசிங்கப்படுத்துறதுக்குனே வந்தியா நீ? இன்னைக்குப் பிருந்தாவ இலக்கியா என்னெல்லாம் பேசியிருக்கா தெரியுமா? உன்னால அன்னைக்கு என் நடத்தைய உன்னோட மொத்த ஊரும் கேவலமா பேசுச்சு. இன்னைக்கு உன்னைக் காரணமா வச்சு பிருந்தாவ ஹர்ட் பண்ணிருக்கா இலக்கியா. எல்லாத்துக்கும் ஆரம்பப்புள்ளி நீதான். நீ மட்டும்தான்” என்று கை நீட்டிக் குற்றம் சாட்டினான்.
வேதவதிக்கு நிஜமாகவே எதுவும் புரியவில்லை. பிருந்தா காயப்பட்டால் இவன் குதிக்கிறான். அது மட்டும் புரிந்தது. மேற்கொண்டு எதையும் புரிந்துகொள்ளும் அமைதியும் தெளிவும் இப்போது அவளிடம் இல்லை.
“எல்லாருமா சேர்ந்து வற்புறுத்தி என்னை உன் கழுத்துல தாலி செயினைப் போட சொன்ன அந்த மொமண்ட்டை என் வாழ்க்கைல மோசமான மொமண்டா நினைக்குறேன். அட்சரன்னா என் ஃபீல்ட்ல இருக்குறவங்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆன விதம் மட்டும் என் ஃபீல்ட் ஆளுங்களுக்குத் தெரிய வந்துச்சுனா என் மூஞ்சிக்கு முன்னாடி நக்கலா சிரிப்பானுங்கடி.”
இதைச் சொல்லும்போதே அவமானக்கன்றலும், காயப்பட்ட ஈகோவும் தெளிவாகத் தெரிந்தது அட்சரனின் முகபாவனையில்.
வேதவதி மட்டும் ஆசைப்பட்டா இங்கே வந்தாள்?
“நான் சூப்பர் மார்க்கெட்ல இருந்தேன். இலக்கியா கால் பண்ணி மேனுஸ்கிரிப்ட்டுல இடறல்னு…” அவள் ஆரம்பிக்கும்போதே அட்சரனின் பார்வை அவனது மேஜையிலிருந்த ஸ்பைரல் பைண்ட் செய்யப்பட்ட மேனுஸ்கிரிப்ட்டிடம் பாய்ந்தது.
“இனிமே உன் கதைக்கு இங்க இடமே கிடையாது” என்றவன் சற்றும் யோசிக்காமல் வெறுப்போடு அதை அவள் மீது தூக்கியெறிந்தான்.
அவன் வீசிய வேகத்தில் தனது முகத்தில் வந்து மோதிய ஸ்பைரல் பைண்டிங் நழுவி தரையில் விழுவதை வலியோடும் அதிர்ச்சியோடும் பார்த்தபடி நின்றாள் வேதவதி.
நூற்றியெண்பது பக்கம் கொண்ட ஸ்பைரல் வேகமாய் மோதியதில் அவளது முகமே சிவந்து போய்விட, சுரீர் வலி அந்நொடியில்.
எதிரே நின்ற அட்சரனின் கண்களிலிருந்து கோபக்கணைகள் அவளை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்க எப்போதும் அந்த விழிகளை எதிர்கொள்ள அஞ்சுபவளுக்கு இம்முறை அனைத்தும் மரத்துப் போன நிலை. அனைத்தும் மரத்துப் போன பிறகு அச்சம் மட்டும் மூளைக்கு உறைக்குமா என்ன?
தரையில் கிடந்த ஸ்பைரல் பைண்டிங்கையும் அதை வீசியவனையும் மாறி மாறிப் பார்த்தவள் ஏதோ ஒரு வேகத்தில் மூர்க்கமாய் அவனது சட்டையின் காலரைப் பற்றினாள்.
“என்னைப் பிடிக்காதுனு தெரியும். அதுக்காக நான் எழுதுன கதைய தூக்கி எறிவீங்களா?”
அட்சரனின் மூச்சுக்காற்று அவளது முகத்தில் கோபமாய் மோத சுழித்தப் புருவங்களோடு அவனது சட்டை காலரைக் கொத்தாகப் பற்றியிருந்தவள் அவ்வளவு இலகுவில் இதை விடப்போவதில்லை என்பது அவனுக்குப் புரிந்து போனது.
“ஷர்ட்டை விடு வேதா”

“எதுக்கு விடணும்? உங்களுக்குக் கோவம் வந்துச்சுனா யாரை வேணாலும் மட்டுமரியாதை இல்லாம நடத்துவீங்களா? கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் சரி, பெத்தத் தகப்பனா இருந்தாலும் சரி, அட்சரன் தி கிரேட்டோட கோவத்துக்கு முன்னாடி யாருமே நிக்க முடியாதுனு உங்களைப் பாத்து எல்லாரும் மெச்சுவாங்கனு நினைக்குறீங்களா?”
“நீ லூஸ் டாக் விடுற வேதா” எச்சரிக்கும் தொனி அட்சரனின் பேச்சில்.
“ஏன்? எடுத்தெறிஞ்சு பேசுறது உங்களுக்கு மட்டும்தான் வருமா? எதிர்ல இருக்குறவங்க அமைதியா போறாங்கனா எகிறிக்கிட்டே இருப்பீங்களோ? இல்ல, என்னைப் பாத்தா உங்களுக்கு எப்பிடி தெரியுது? அன்னைக்கு நீங்க மட்டுமா அசிங்கப்பட்டீங்க? நானும்தான். நான் அன்னைக்கு அமைதியா நின்னது தப்புனா நீங்க என்னை மயக்கத்துல இருந்து எழுப்புறதா சொல்லி நடந்துக்கிட்ட விதமும் அதை என்கிட்ட மறைச்சதும் தப்புதானே? நடந்ததுக்கு நீங்களும் நானும் சரிபாதி காரணம். அது எப்பிடி நீங்க என் மேல எல்லா பழியையும் தூக்கிப் போடுவீங்க? ஏன்னா செஞ்சது தப்புனு உணர்றதை விட பொறுப்பையும் பழியையும் பொம்பளைங்க மேல தூக்கிப்போடுறது ஆம்பளைங்களுக்குக் கை வந்த கலை. அதைத்தான் நீங்களும் பண்ணுறீங்க.”
அட்சரன் இறுகிய தாடையோடு அவளது கையை பலங்கொண்ட மட்டும் தனது சட்டை காலரிலிருந்து பிரித்தெடுத்தான். இன்னும் அவன் கோபத்தின் பிடியிலிருப்பதை அவனது இறுகிய தாடை சொன்னது.
“நானும் பிருந்தாவும் காதலிக்குறோம்” என்றான் கடினமானக் குரலில். வேதவதியின் கோபம் வடிந்து அவள் மலங்க மலங்க விழிக்கையிலேயே “நீதான் எங்களுக்கு இடையில வந்திருக்க வேதா” என்றான் எவ்வித இளக்கமுமின்றி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

