நதியோ கடலோ நனையத் துடித்தேன்!
விதியோ மதியோ விழுந்து தவித்தேன்!
புரியாத புதிரில் புலன்கள் மயங்க
இருவிழித் திரைகளில் குழப்பமும் அழகே!
-அட்சரனின் வேதா
அழுத முகமாய் வீட்டுக்கு ஓடி வந்த மகளிடம், ஜிமிக்கி தொலைந்தால் போகட்டும் விடு என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் கனகவல்லி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவரது இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தார்கள் என்றால், தங்கம் விற்கும் விலைக்கு இப்படியா தொலைத்துவிட்டு வருவாய் என்று சொல்லி இன்னும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார்கள். ஆனால், கனகவல்லிக்கு மகளைத் திட்ட மனமில்லை. விலை அதிகமுள்ள ஆபரணத்தை யாரும் வேண்டுமெனத் தொலைப்பதில்லையே.
கஜேந்திரன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. மகளின் முகத்தை அழுந்தத் துடைத்து, கூந்தலை ஒதுக்கிவிட்ட கனகவல்லி,
“முகம் கழுவிட்டுப் படுத்துக்க. நாளைக்குக் காலேஜ் போகணும்ல” என்று சொல்ல, அவளும் தலையாட்டியபடியே எழுந்து சென்றாள்.
அறைக்குள் போனதும் அன்னையிடம் அங்கே நடந்ததைச் சொல்லவில்லை என்ற எண்ணம் அவளை இயல்பாக இருக்கவிடவில்லை.
புடவையிலிருந்து நைட்டிக்கு மாறும்போது, அட்சரனின் கைபட்ட இடுப்பில் இன்னும் சந்தனம் அழியாமல் இருப்பதைக் கவனித்தவள், குளியலறைக்குள் போய் பரபரவெனத் தேய்த்துக் கழுவினாள். கழுவிய பிறகும் அங்கே குறுகுறுப்பும் சந்தனத்தின் ஜில் உணர்வும் இருப்பது போன்ற பிரமை. அதை நினைத்தாலே மனம் ரயில் தண்டவாளமாய்த் தடதடத்தது.
அதே நேரம் வாயிலில் “கனகவல்லிக்கா” என்று சாந்தாவின் குரல் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது வேதவதிக்கு.
‘அங்கே பார்த்ததை அன்னையிடம் சொல்லிவிட்டால்? அப்படியே சொன்னால் கூடப் பரவாயில்லை. ஒன்றுக்கு இரண்டாய்க் கதை கட்டுவதில் சாந்தாவை மிஞ்ச ஆளில்லை இந்தத் தேன்மலையில். அவரது கற்பனைத்திறனை வைத்து எனது மனநிம்மதியைக் குலைத்துவிடுவாரோ?’

மூடிய கதவின் அருகே தன்னை மீறித் துடித்த இதயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பதற்றத்தோடு நின்றவள், அவர் போனதும் கதவைத் திறந்துகொண்டு அன்னையிடம் ஓடிவந்தாள்.
“ம்மா! அங்க என்ன நடந்துச்சுனா…”
“நீ சொல்லித்தான் உன்னைப் பற்றி எனக்குத் தெரியணுமா? தப்பான ஆளுங்களைக் கயல்விழியம்மா அவங்க வீட்டுப்படியில ஏத்தமாட்டாங்கனு உங்கப்பா சொல்லுவாரு. என் மவளைப் பற்றி என் கிட்டவே தப்பா சொல்ல இவளுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்? நல்லா நறுக்குனு கேட்டு அனுப்பிருக்கேன். நீ ஒன்னும் வருத்தப்படாத தங்கம். போய் தூங்கு.”
அன்னை தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் மனம் நெகிழ்ந்து போனவளுக்கு அன்றிரவு உறக்கம் கொஞ்சம் தாமதமானது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் நித்திரை தன்னில் அவளை இழுத்துக்கொண்டது.
அதே நேரம் ஜெயவிலாசத்தில் ஜெயசந்திரனின் முன்னே நின்று கொண்டிருந்தான் அட்சரன்.
அவரது முகத்தில் மெல்லிய அதிருப்தி. அவனுக்குச் சற்றுத் தள்ளி அட்சரனை நோட்டமிட்டபடி நின்றான் வானதியின் உடன்பிறந்த தமையனான ஆதித்யன்.
“நான் முன்னாடியே சொல்லிட்டேனே! அரசியல் சார்ந்த யாரோட புத்தகத்தையும் என்னால ஏத்துக்க முடியாதுனு. மறுபடி மறுபடி நீங்க கேட்டாலும் என் பதில் இதுதான் சார்.”
இரு கரங்களையும் பின்னே கட்டிக்கொண்டு தோரணையாய் அவன் பதிலளித்த விதம், ஜெயசந்திரனை ஒரு நொடி திகைக்க வைத்தது. அவர் முன்னே கைகட்டி வாய் பொத்தி நிற்பவர்களையே பார்த்துப் பழகியவருக்கு அட்சரனும், அருள்மொழியும் சிம்மச்சொப்பனமே!

“ரெண்டு பயலுகளுக்கும் ஒருநாள் இந்த ஜெயசந்திரன் யாருனு தெரிய வைக்கணும்” என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாலும் அதை வெளியே காட்டவில்லை.
அரசியல்வாதியாயிற்றே! அவர் முன்னே நிற்கும் ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு ஓட்டு. எனவே, சாமர்த்தியமாகக் காய் நகர்த்துவது போலப் பேச ஆரம்பித்தார்.
“இந்தப் புக் அடுத்த எலக்சனுக்கு வகுக்கப்பட்ட வியூகத்துல ஒன்னு. இது சரியான டைம்ல சரியான ஒருத்தரால எடிட் செய்யப்பட்டா மட்டும்தான் எழுதப்பட்டிருக்குற கருத்து மக்கள் கிட்ட ஆழமா இறங்கும். இது என்னோட இமேஜ் சம்பந்தப்பட்ட விசயம் தம்பி. கொஞ்சம் யோசிச்சுச் சொல்லு.”
அட்சரன் அலட்சியமாய்க் கைகளை விரித்தான்.
“சாத்தியமில்ல சார்! உங்க கட்சிக்குனு ஒரு கொள்கை வச்சிருப்பிங்கல்ல, யாரோ சொல்லுறாங்கனு நீங்க அதை மாத்திப்பிங்களா? அதே மாதிரிதான் எங்க தொழிலுக்குனு நாங்க ஒரு கொள்கை வச்சிருக்கோம். அரசியல் சார்ந்த எந்தப் புத்தகமும் எங்க மூலமா எந்தப் பதிப்பகத்துக்கும் போகாது. நீங்க வேற ஏஜெண்ட் பாத்துக்கோங்க.”
ஆதித்யனுக்கு எரிச்சலானது. ஆனால், தன்னை விட நாலைந்து அகவைகள் இளையவன், சிறுவயது முதலே அவன் பார்க்க வளர்ந்தவனிடம் கோபத்தைக் காட்ட விருப்பமில்லை அவனுக்கு.
“விடுங்கப்பா. வேற ஏஜென்சில பேசிப் பாக்கலாம்” என்றான் அவன்.
அட்சரன் உதட்டோரம் துளிர்த்த எள்ளலானச் சிரிப்போடு அவர்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அவன் போனதும் ஆதித்யன் ஜெயசந்திரனிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தான்.
“ஏன்பா இவன் ஒருத்தன் தான் லிட்டரரி ஏஜெண்டா? இவனை விடத் திறமையானவங்க எத்தனை பேர் இருக்காங்க? ஏன் இவன் கிட்ட நாம தொங்கணும்?”
ஜெயசந்திரன் கணக்கிடும் பாவனையோடு மகனைப் பார்த்தார்.
“ஒரு மாநிலத்தோட முதலமைச்சரே இவன் கிட்ட இறங்கி வந்து பேசியும் இவ்வளோ திமிரா முடியாதுனுட்டுப் போறானே, அந்தத் திமிர்தான் என் ஈகோவ ஹர்ட் பண்ணுது ஆதி. நான் பாத்து வளர்ந்த சின்னப்பயலுக்கு இவ்வளோ திமிரானு மனசுக்குள்ள புகைச்சல். சரி விடு! ஒரு நாள் இல்லனா ஒரு நாள் நம்ம கிட்ட வசமா சிக்குவான். அன்னைக்கு என் ஈகோ எப்பிடிப்பட்டதுனு அவனுக்குக் காட்டுறேன்.”
ஜெயசந்திரன் சூளுரைத்ததை அறியாமல், மணமகன் அருள்மொழியிடம் அவரது அறையில் நடந்ததை விவரித்தான் அட்சரன்.
“நீ அவருக்கு ஒர்க் பண்ணிக் குடுத்தா நல்லா லாபம் கிடைக்கும் அச்சு.”
“அது எனக்குத் தெரியாதா? வானதியோட அப்பா, கயல் ஆன்ட்டியோட புருசன் – இந்த ரெண்டு காரணம்தான் அவரை நான் சகிச்சுக்கிட்டுப் பேசக் காரணம். விடு மச்சி! உன் மாமனார் என் மூளைய சூடாக்கிட்டார். வா! ஒரு பஃப் அடிச்சாதான் என் மைண்ட் அமைதியாகும்.”
நண்பர்கள் இருவரும் மாளிகைக்கு வெளியே வந்தார்கள். உறங்காமல் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்கள் சுழற்சி முறையில் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். இருவரும் ஒரு ஓரமாய் வராண்டாவில் அருகருகே அமர்ந்துகொள்ள, அட்சரன் சிகரெட்டை லைட்டரால் பற்ற வைத்தவன், புகையைக் கண்களை மூடி வெளியிட்டான்.

ஜெயசந்திரனால் உண்டான கசப்பான உணர்வும் புகையோடு சேர்ந்து வெளியேறியது போன்றதொரு உணர்வு அவனுக்கு.
“நான் இன்னைக்கு ஒரு விசயத்தைக் கவனிச்சேன் அச்சு.”
நண்பன் பீடிகை போடவும் என்னவென்பது போலப் புருவங்களை உயர்த்தினான்.
“அந்தப் பொண்ணு வேதாவ பாத்ததும் நீ ஸ்தம்பிச்சு நின்னியே. அதைத்தான் சொல்லுறேன்.”
“ப்ச்! அருள்…” என்றவன் இன்னொரு பஃப் இழுக்கப் போக, அதற்குள் சிகரெட்டை வாங்கித் தூர எறிந்தான் அருள்மொழி.
அட்சரன் புருவங்களை உயர்த்தவும், “ஒரு பஃப் ஓவர். இதுக்கு மேல நோ ஸ்மோக்கிங்” என்றான் அவன் கண்டிப்பான குரலில்.
“அராஜகத்துக்கு இன்னொரு பேரு இருந்துச்சுனா அது அருள்மொழினுதான் இருக்கும்” சிகரெட் பறிபோன புகைச்சலோடு சொன்னான் அட்சரன்.
“எப்பிடி? இரத்தக்கொதிப்புக்கு இன்னொரு பேரு அட்சரன்னு இருக்குதே, அதை மாதிரியா?” என்று அவனது காலை வாரினான் அருள்மொழி.
பதின்வயதில் இது போல விளையாட்டாய்ப் பேசிய தருணங்கள் இருவரது நினைவடுக்குகளிலும் புதைந்திருக்கின்றன. அவற்றின் வீரியம் குறையாமல் இன்னும் ஞாபகமிருக்கின்றன; அவையே மீண்டும் வந்தது போன்றதொரு உணர்வு.
அருள்மொழி கொஞ்சம் ஜாலி மூடில் இருப்பதைக் கண்டுகொண்ட அட்சரன், மெதுவாக வானதியைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.
“இன்னைல இருந்து மூனாவது நாள் நீயும் வானதியும் இந்நேரம் ஹஸ்பெண்ட் அன்ட் ஒய்ஃப் ஆகிருப்பிங்க அருள்.”
“ஏன்டா அந்த ஆக்சிடெண்டை இப்பவே ஞாபகப்படுத்துற?”
“ஆக்சிடெண்ட்னு சொல்லுறவன் ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச?”
மர்மப்புன்னகை பூத்தானேயொழிய, வாய் திறந்து காரணத்தைச் சொல்லாமல் அடம்பிடித்தான் விடாக்கண்டனான அருள்மொழி.
“என் கிட்ட சொன்னா என்ன குறைஞ்சிடும்?”
“நீ நேரா வானதி கிட்ட சொல்லுவ. அவ கல்யாணத்தை நிறுத்திடுவா.”
அட்சரன் குழம்பியதே இந்த இடத்தில்தான். ‘இவனுக்கு வானதியை மணமுடிக்க விருப்பமில்லை. அதே நேரம் இந்தக் கல்யாணமும் நடக்க வேண்டுமென்ற பிடிவாதம். என்னதான் ஓடுகிறது அருள்மொழியின் மூளைக்குள்?’
“ரொம்ப யோசிக்காத. நடக்கப்போற எல்லாத்துக்கும் நீ சாட்சியா இருப்ப. அதுவும் என் பக்கத்துல இருப்ப. அதனால இப்பவே வானதிங்கிறவ நமக்கு எதிர்ல நிக்குறானு யோசிக்கப் பழகு.”
அட்சரனால் எப்படி அது முடியும்? அவனுக்கு இருவருமே முக்கியம்தான். அருள்மொழியோ இருவரில் ஒருவரை நீ தேர்வு செய்தே ஆகவேண்டுமென அவனது கழுத்தைப் பிடிக்காதக் குறை.
“உங்க ரெண்டு பேரோட பெரும் ரோதனைடா எனக்கு” சலித்தபடி அருள்மொழியின் தோள்பட்டையில் அடித்தான் வேகமாக. அருள்மொழி சத்தமாக நகைத்தான்.
“இன்னும் வேதா விசயத்துல உள்ள மர்மத்தை நீ எனக்குச் சொல்லலை” என்று குறையும் சொன்னான்.
“பெருசா ஒரு மிஸ்ட்ரியும் இல்ல. அந்தப் பொண்ணை இங்க சந்திக்கிறதுக்கு முன்னாடி காட்டுக்குள்ள சந்திச்சேன். அப்ப குர்தி போட்டுச் சின்னப்பொண்ணா தெரிஞ்சா. வாயும் ஓவர். திடீர்னு ஷேரில பாத்ததும் மைண்ட் ஒரு மாதிரி ப்ளாங் ஆகிடுச்சு. வேற ஒன்னுமில்ல.”
“அது மட்டும்தானா? ஏதோ மேனுஸ்கிரிப்ட் அனுப்பச் சொன்னியே? நீயே உன் திருவாய் மலர்ந்து மேனுஸ்கிரிப்ட் அனுப்பச் சொல்லுறதெல்லாம் நடக்காத காரியம். ஹவ் இஸ் இட் பாசிபிள் நண்பா?”
“இன்னைக்குச் சந்திக்குறதுக்கு முன்னாடியே வானதி மூலமா அவ என்னைக் காண்டாக்ட் பண்ணுனா ஆபிஸ் நம்பர்ல. அப்ப அவ பேசாம, அவ ஃப்ரெண்டை பேச வச்சா. அந்தக் கடுப்புல வேதாங்கிற பேருல யார் என்னைக் கான்டாக்ட் பண்ணுனாலும் எந்த வகையிலயும் அவங்க கதைய ஏத்துக்கமாட்டேன்னு சொன்னேன். நேருல பாத்ததும் உண்மையாவே அந்தப் பொண்ணு முணுக்குனு கண்ணீர் வடிக்குற டைப்னு புரிஞ்சுது. ஷப்பா! அந்தக் கண்ணுக்குள்ள காவேரி டேம் இருக்கும் போல.”
அவன் சலிப்பாய்ச் சொல்லவும் அருள்மொழியால் குறுகுறுப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
“சோ அவ அழக்கூடாதுனு நீ மேனுஸ்க்ரிப்ட் அனுப்பச் சொல்லிருக்க.”
“அதுவும் ஒரு காரணம். இன்னொரு காரணம், அவளே முன்வந்து என் கதை நல்லா இருக்கும்னு சொன்னாளே, அந்தத் தைரியத்துக்கு ஒரு சான்ஸ் குடுக்கலாம்னு தோணுச்சு. ஆனா பாரேன், இப்ப வரைக்கும் மேனுஸ்கிரிப்ட் வரல.”
முடிக்கும்போது அவனையறியாமல் அவனது குரலில் காட்டமேறியது. ஹெல்வட்டாசிற்கு கதைகளை அனுப்புவதும், அந்தக் கதைகள் தேர்வாவதும் எழுத்தாளர்கள் மத்தியில் கௌரவமாகக் கருதப்படுகையில், தானே அனுப்பச் சொல்லியும் அலட்சியமாய் இருக்கிறாள் என்றால் இந்தப் பெண்ணுக்குச் சுதாரிக்கும் புத்தியில்லை என்றுதானே அர்த்தம்.
“சரி! ரொம்ப நேரம் பேசிட்டோம். வா! தூங்கப் போகலாம்.”
நண்பர்கள் இருவரும் அங்கிருந்து நடக்கும்போது, தரையில் ஏதோ மின்னியது அட்சரனின் காலுக்கடியில். அதை ஷூவால் மிதிக்கப்போனவன் சட்டெனக் கால்களை உயர்த்தினான். அது பெண்கள் அணியும் ஜிமிக்கி.
அவனது மூளை உடனேயே ஒற்றை ஜிமிக்கியோடு நின்ற வேதவதியின் உருவத்தை நினைத்துப் பார்த்தது. ஜிமிக்கியைத் தேடவந்ததாகச் சொன்னாளே!
முழங்காலிட்டு அந்த ஜிமிக்கியை எடுத்தவன், தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
மறுநாள் விடியலில் திருமலைக்கோவிலுக்குக் கிளம்பினார்கள் அனைவரும். படியேறி முருகனிடம் வருவதாகக் கயல்விழி வேண்டுதல் வைத்திருந்தார். மருமகள் ரேகாவையும் உறவுக்காரப்பெண்களையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்பிவிட்டார். வானதி மணப்பெண் என்பதால் வீட்டில் இருந்துகொண்டாள்.
மாலையில் தயக்கத்தோடு அங்கே வந்து சேர்ந்தாள் வேதவதி. வரும்போதே அட்சரன் இருக்கிறானா என்று கண்களால் துலாவியபடி இடங்களை அலசி ஆராய்ந்திருந்தாள். நல்லவேளையாக வானதியும் யாழினியும் மட்டும்தான் அங்கே இருந்தார்கள்.
“காலேஜ் விட்டு வர இவ்ளோ நேரமாகிடுச்சாடி?” உரிமையாய்க் கோவித்துக்கொண்ட வானதி, திடுமென முகம் தீவிரமாக மாற, “அச்சுக்கு மேனுஸ்க்ரிப்ட் அனுப்புனியா?” என்று கேட்க, வேதவதியோ தனது மறதியை நினைத்துத் தலையில் அடித்துக்கொண்டாள்.
“இன்னும் அனுப்பல.”
குரல் அந்த அறையின் வாசலில் கேட்கவும் வாரிப்போட்டுக்கொண்டு எழுந்தவள், அந்த அறைக்குள் பிரவேசித்த அட்சரனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடியே, “இ… இப்பவே அனுப்பிடுறேன்” என்று மொபைலில் ஜிமெயிலைத் தட்டினாள்.
“அப்புறம் அனுப்பலாம். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். வெளிய வா.”
அட்சரனின் குரலில் சினேகமோ இதமோ இல்லை. வேதவதி வானதியைப் பார்த்தாள். ‘போகட்டுமா?’ என்று கண்களால் வினவினாள்.
அதைக் கண்டுகொண்டவனோ, “ரெண்டே நிமிசம்தான். உன்னைக் கடிச்சு முழுங்குற எண்ணமெல்லாம் இல்ல” என்றபடி வெளியேறினான்.
அவன் போனதும், “என்னனு கேட்டுட்டு வா! மேக்சிமம் கான்ட்ராக்ட் டேர்ம்ஸ் பற்றிச் சொல்லுவான். அது ரைட்டருக்கும் ஏஜெண்டுக்குமான இரகசியம். அதான் உன்னைத் தனியா கூப்பிடுறான்” என்றாள் வானதி.
வேதவதியும் புத்தகம் பற்றியதானப் பேச்சாக இருக்குமோ என்ற ஆர்வத்தில் அட்சரனைத் தொடர்ந்தாள். இருவரும் வராண்டாவில் வந்து நின்றார்கள்.
அவள் ஆர்வமாக, “வந்துட்டேன் சார்! சொல்லுங்க” என்றாள். ஆர்வமாய்ப் பேசுகையில் அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போலப் பெரிதாக மலர்ந்திருந்ததை இப்போதுதான் அட்சரன் கவனித்தான்.
சட்டெனத் தலையை உலுக்கிக்கொண்டு, தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஜிமிக்கியை எடுத்தவன், அவளது கையைப் பிடித்து உள்ளங்கையில் அதை அழுத்தமாய் வைத்தான்.

அவனது கரத்துக்கும் அவளது கரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட ஜிமிக்கியைத் தாண்டியும் ஸ்பரிசித்துக்கொண்டன இரு கரங்களும்.
மெல்லிய பூங்கரத்தில் அவனது கரம் தீண்டியதும், வேதவதிக்குச் சுற்றியிருந்த காட்சிகள் யாவும் மங்கலாகி அவன் மட்டுமே பிரதானமாகத் தெரிந்தான்.
“ஹலோ” என்று அவன் அதட்டியதும் சட்டென அவனது கையை விலக்கியவள், ஜிமிக்கியைப் பார்த்ததும் இன்னும் முகம் மலர்ந்தாள்.
“கிடைச்சிடுச்சா? எங்க கிடைச்சுது? இதோட திருகாணி கிடைக்கலையா?” படபடவெனக் கேள்விகள் கொட்டின அவளிடமிருந்து.
“ரொம்ப கேள்வி கேக்குற நீ. உன் கண்ணுல அவங்க படலையா?”
“எவங்க?”
“நேற்று ஐயோ அம்மானு ஒரு லேடி கத்துச்சே, அவங்கதான்.”
“சாந்தாக்காவா? எங்க?” திடுக்கிட்டவள் பயத்தோடு சுற்றும் முற்றும் தேடினாள்.
அட்சரன் அவளது காதருகே விரல்களைச் சொடுக்கியவன், “அவங்க போயாச்சு. என் கையோட உன் கை ஒட்டியிருந்ததை ஸ்கேன் பண்ணிட்டுத்தான் போனாங்க” என்றான் வேண்டுமென்றே.
வேதவதியின் முகம் மாறியது. அதைக் கவனித்த அட்சரன் “உஃப்” என்று உதடு குவித்து காற்றை வெளியேற்றினான்.
“ஏன் நீங்க அவங்க வந்ததும் சொல்லலை?” குறை சொன்னாள் வேதவதி.
“எதே? இங்க பாரு, உன் ஜிமிக்கிய எடுத்துப் பத்திரமா குடுத்திருக்கேன். உன்னை என் மெயிலுக்கு மேனுஸ்க்ரிப்ட் அனுப்பச் சொல்லிருக்கேன். இதுக்கெல்லாம் நீ எனக்கு நன்றியோட இருக்கணும். அதை விட்டுட்டுக் குறை கண்டுபிடிக்குற? அந்தம்மா ஸ்கேனிங் ஐய்சோட அங்க இங்க நடமாடும்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்? இப்ப என்ன? அழப்போறியா? அந்த மூலை உனக்குக் கரெக்டா இருக்கும். அங்க உக்காந்து அழு.”
வார்த்தைகளால் தன்னைக் காய்ச்சி எடுத்தவனை முறைத்தாள் வேதவதி.
“நீங்க கையை வச்சிட்டுச் சும்மா இருந்தா நான் ஏன் அழப்போறேன்?” என்றாள் துடுக்காக.
அது போதாதா அட்சரனைத் தூண்டிவிடுவதற்கு!
தாடை இறுக அவளை நெருங்கியவன், “நானும் அந்தத் தாத்தாவும் பாட்டுப் பாடி என்ஜாய் பண்ணிட்டிருந்தோம். குறுக்க இந்த கௌஷிக் வந்தாங்கிற ரேஞ்சுக்கு எண்ட்ரி குடுத்தவ நீ. நீ வந்தது தெரியாம பாடிட்டிருந்த என் கை தவறுதலா இடுப்புல பட்டுருச்சு. எல்லா தப்பும் உன் மேலதான்” என்றவன் அவளை ஆட்காட்டிவிரலால் சுட்டிக்காட்டும்போது மிகவும் நெருங்கி நின்றிருந்தார்கள் இருவரும்.
இரண்டு மேகங்கள் மோதும் மின்னல் தருணமதில் அவர்களிடையே இருந்த இடைவெளியின் தடிமன் ஒரு காகிதத்தின் தடிமனே!
வேதவதியின் கண்ணிமைகள் பட்டாம்பூச்சியைப் போல அடிக்கவும், சற்றுத் தள்ளி நின்றுகொண்டான் அட்சரன்.
நிதானமாக அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான். பாசிப்பருப்பு வண்ண அனார்கலி குர்தி, மெரூன் வண்ண துப்பட்டாவில் அழகுதான்.
“நேற்று போல எதுவும் சம்பவம் நடந்துடக்கூடாதுனு ரொம்ப கவனமா டிரஸ் பண்ணிருக்க போல.”
அவன் சொன்னதற்கான அர்த்தம் புரிந்ததும் வேதவதியின் இரத்தம் என முகம் சிவக்க, சரியாக அந்நேரத்தில் தேன்மலையின் செல்போன் டவர் வேலை செய்ததில் அவளது மொபைலிலிருந்து மின்னஞ்சல் ஹெல்வட்டாசுக்குப் போனதற்காக நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டது.
“மெயில் அனுப்பிட்டேன்”
கண்களை உருட்டிச் சொன்னவள், அதற்கு மேல் அங்கே தாக்குபிடிக்க முடியாமல் அனார்கலி அழகாய்க் காற்றில் மிதக்க அறைக்குள் ஓடிவிட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

