“அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதியளிப்பார்கள்”
-முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் செகரட்டரி நிகிடா க்ரூச்சேவ்
மவுண்ட் கல்லூரி மாணவர் சந்திப்பிற்கு பிறகு அருள்மொழி தனது கவனத்தை அரசியலில் செலுத்த வானதியோ அடுத்து நெசவாளர்களை அவன் சந்திப்பதற்கான வேலைகளில் மூழ்கிப் போனாள்.
நிதர்சனாவில் ஆரம்பித்து மொத்த ஐ.பி.சி சென்னை அலுவலகமும் அவரவர் டெஸ்கும் பீன் பேக்கும் மடிக்கணினியுமே கதியென வேலையில் ஆழ்ந்துவிட்டனர்.
இதற்கிடையே ஆகாஷ் கண்ணப்பன் வானதியை அடிக்கடி மொபைலில் தொடர்பு கொண்டு பேசுவார். அவர்களின் பேச்சுவார்த்தையின் சாராம்சம் அடுத்த தேர்தல் தான்.
தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் முடிவுற்றதும் வானதி மீண்டும் பழையபடி அவளது அரசியல் நுண்ணறிவு பிரிவு பொறுப்பை ஏற்றுக்கொண்டு மேற்கு வங்காளத்திற்கு வந்து விடும்படி கட்டளையிட்டுவிட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தமிழக தேர்தலுக்கான வேலைகள் எந்தளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் தனது ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் அவ்வபோது வீடியோ கான்பரன்சில் மீட்டிங் நடத்துவதும் அவரது வழக்கம்!
அன்றைய தினம் அப்படியான மீட்டிங் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அனைத்துக் குழுக்களும் தத்தமது வேலைகளைப் பற்றி அவருக்கு தெரிவித்துவிட அடுத்து அவர் சொன்ன செய்தியில் அங்கிருந்த அனைவரும் இது என்னடா புது தலைவலியென தமக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
“நம்ம தமிழ்நாடு யூனிட்ல ரீசண்டா சேர்ந்த இண்டர்ன்ஸ் தான் இப்ப ஹாட் நியூஸ்… நம்ம கன்சர்ன் லேபர் எக்ஸ்ப்ளாய்டேசன் பண்ணுறதா தமிழ்நாட்டு ரூலிங் பார்ட்டியோட டிவி சேனல், நியூஸ் பேப்பர்ஸ்ல போட்டு நம்ம நேமை டேமேஜ் பண்ண பாக்குறாங்க… இது நமக்கு பெருசா எந்த பாதிப்பையும் உண்டாக்காது… பட் இது நம்ம செய்யுற கேம்பெய்ன் ஒர்க்கை சிவியரா அட்டாக் பண்ணும்… அவங்க இத வச்சு நியூ புரொபகேண்டா கிரியேட் பண்ணி இண்டர்நெட் முழுக்க வைரல் ஆக்குவாங்க… இத சமாளிக்க வேண்டிய பொறுப்பு பார்ட்டி பீபிள் கையில தான் இருக்கு… இது சம்பந்தமா நீங்க பார்ட்டி ஹெட்டோட பி.ஏ கிட்ட பேசிடுங்க வானதி”
வானதி சரியென தலையசைத்தாள். வீடியோ கான்பரன்ஸ் முடிந்ததும் கிஷோர் அவனது பீன் பேக்கில் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் ஆழ்ந்தபடியே புலம்ப துவங்கினான்.
“என்ன நதி இது புது பிரச்சனை? இவ்ளோ நாள் கஷ்டபட்டு செஞ்ச வேலை எல்லாத்துக்கும் மொத்தமா சேர்த்து ஆப்பு வச்சிட்டாங்க… என்ன பண்ண போற நீ?”
“ப்ச்! எல்லா ஸ்டேட்லயும் நம்ம இண்டர்ன்ஷிப்புக்கு ஆள் எடுக்குறது வழக்கம் தான்… ஆக்ஸ்வலி ரூலிங் பார்ட்டியோட டார்கெட் ஆப்போசிசன் தான்… அவங்களுக்கு ஒர்க் பண்ணுறதால இப்ப நம்மளும் ஹாட் நியூஸா மாறிட்டோம்” இது நிதர்சனாவின் ஆதங்கம்.
வானதி பொறுமையாக அனைத்தையும் கேட்டுவிட்டு அருள்மொழியின் உதவியாளனுக்கு அழைத்தாள்.
“அருள் சார் எப்போ ஃப்ரீயா இருப்பார்னு சொல்லுங்க சங்கர்… நான் அவர் கிட்ட முக்கியமான ஒரு ப்ராப்ளம் பத்தி பேசணும்”
“சார் இன்னைக்கு மதுரை டிஸ்ட்ரிக்ட் செகரட்டரி சந்திரகுமார் கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கார் மேடம்”

“ஓகே! அந்த டிஸ்கஷன் முடிஞ்சதும் நான் கால் பண்ணுனத அவருக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க… நான் அவரை மீட் பண்ணணும்னு சொல்லிடுங்க”
“ஓகே மேடம்”
சங்கரிடம் பேசிவிட்டு அருள்மொழியைச் சந்திக்கும் போது பிரச்சனையின் தீவிரத்தைப் புரியவைக்க வேண்டும் என்பதால் அவளே ஆளுங்கட்சியின் செய்தி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளை இணையதளத்தில் பார்க்கத் துவங்கினாள்.
“இளம் மாணவர்களின் உழைப்பை உறிஞ்சும் இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சில்! தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் என முழக்கமிடும் த.மு.கவின் இன்னொரு முகம்!”
“தங்களது தேர்தல் வியூகப்பணிகளைச் செய்வதற்காக த.மு.க கட்சித்தலைமை நியமித்துள்ள இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சில் நிறுவனம் மாவட்டந்தோறும் கல்லூரி மாணவர்களை இண்டர்ன்ஷிப் என்ற பெயரில் சுரண்டி வருகிறது”
வானதி பொறுமையாக அதை வாசித்து முடித்தவள் அருள்மொழியைச் சந்திப்பதற்கான நேரத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
**********
தமிழ்நாடு முன்னேற்ற கழக தலைமை அலுவலகம், அண்ணாசாலை…
அருள்மொழியின் அலுவலக அறையில் அவனது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார் சந்திரகுமார். மதுரை மாவட்ட செயலாளரான அவரது இத்தனை வருட கட்சிப்பணியில் இது வரை தலைமையுடன் நேரடி சந்திப்பு என்ற நிகழ்வு நடந்ததே இல்லை.
திடீரென அருள்மொழியின் உதவியாளன் முந்தைய தினம் மாலை சென்னைக்கு வந்து அருள்மொழியை நேரில் சந்திக்கும்படி கூறவும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தலைமையே கவனிக்கும் அளவுக்குத் தனது செயல்பாடுகள் இருந்திருக்கிறது என்ற இயல்பான கர்வத்துடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார் அவர்.
அவரது சென்னை வருகை இரகசியமாக இருக்கவேண்டுமென்ற கட்டளையை அவர் கடைபிடிக்கவில்லை. அவர் கடைபிடிக்க மாட்டார் என்பது தெரிந்தே விடுக்கப்பட்ட கட்டளை அது என்பதை கட்டளையிட்டவனைத் தவிர வேறு யாரும் அறியார்!
சந்திரகுமாரின் சென்னை வருகை யாருடைய காதுக்குப் போகவேண்டுமோ அவருக்குப் போய் சேர்ந்தது உறுதியானதும் தான் அருள்மொழி அவரைத் தனது அலுவலக அறைக்குள் அழைத்து பேச்சை ஆரம்பித்தான்.
ஆரம்பக்கட்ட பேச்சு மதுரையில் கட்சியின் நிலமை, அங்குள்ள ஓட்டுவங்கி, உறுப்பினர்களின் செயல்பாடு என கட்சியைச் சுற்றியே நகர்ந்தது.
அருள்மொழி கேட்டை அனைத்துக்கும் எவ்வித தங்குதடையின்றி பதிலளித்தார் சந்திரகுமார். ஆனால் இவற்றை அடுத்து அவன் கேட்ட கேள்வியில் தான் அவர் அமைதியாய் சமைந்தார்.
“மதுரைல நடக்கப் போற மாநில மாநாட்டுக்கான வேலை எந்தளவுல போயிட்டிருக்கு சார்?”
சந்திரகுமாரின் முகத்தில் ஈயாடவில்லை. ராமமூர்த்தி இந்த மாநாட்டு வேலைகளை ரகசியமாகச் செய்து முடிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் அருள்மொழிக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. இப்போது பதிலளிக்க தடுமாறியவரை புன்னகையுடன் எதிர்கொண்டான் அவன்.
“இவ்ளோ நேரம் எல்லா கேள்விக்கும் கரெக்டா பதில் சொன்ன நீங்க இந்தக் கேள்விக்குத் தடுமாறுறத பாத்தா என்னவோ தப்பா இருக்குதே”
உடனே சுதாரித்த சந்திரகுமார் “அப்பிடிலாம் ஒன்னும் இல்ல தலைவரே! நீங்க திடுதிடுப்புனு கேட்டதும் எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல” என்று சமாளிக்க அதை நம்புவதற்கு அருள்மொழி ஒன்றும் குழந்தை இல்லையே!
தனது மனவுணர்வை முகத்தில் மறைக்காது காட்டியவன் “இந்தக் கட்சிக்குள்ள மெம்பர்ஸ் எல்லாரும் ரெண்டு பிரிவா இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும்… நான் அரசியலுக்கு வந்ததுல அதிருப்தில இருக்குறவங்க எல்லாரும் யாரோட தலைமைல ஒன்னு கூடி நிக்குறாங்கனும் எனக்குத் தெரியும்… அவங்க எல்லாருமா சேர்ந்து மதுரைல மாநாடு நடத்தி எனக்கு எதை புரியவைக்கப் பாக்குறாங்கங்கிறது ரொம்ப நல்லா தெரியும்… அந்த எதிர் கோஷ்டில நீங்க தான் முக்கியமான நபர்னு தெரிஞ்சும் நான் ஏன் உங்களை மீட் பண்ண வரச் சொன்னேன் தெரியுமா?” என்று கேட்க சந்திரகுமார் சங்கடத்தில் நெளியத் துவங்கினார்.
அருள்மொழி இவ்வளவு நேரம் இருந்த இலகு பாவனையை விடுத்து தீவிரக்குரலில் பேச ஆரம்பித்தான்.
“நீங்க தலைவரா ஆக்க நினைச்சவருக்கு சி.எம் போஸ்டும் நாற்காலியும் வெறும் கனவு தான்… ஆனா எனக்கு அது மானப்பிரச்சனை… அனுபவமில்லாம அரசியல்ல இறங்கிட்டேனு என்னை பாத்து வைக்கப்பட்ட கேலி விமர்சனத்துக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துல தான் நான் இந்த எலக்சனை சந்திக்கப் போறேன்… இதுல ஜெயிக்கிறதுக்காக நான் எதையும் செய்யுறதுக்குத் தயாரா இருக்குறப்ப எனக்கு எதிரா நிக்குறவங்களை நசுக்குறதுக்கு ஒரு நிமிசம் ஆகாது”
தெளிவாய் பேசியவனது இல்லை இல்லை மிரட்டியவனது பேச்சில் சந்திரகுமாருக்கு வியர்க்க அவர் புறம் தண்ணீர் தம்ளரை நகர்த்தியவன்
“தண்ணி குடிங்க… அதுக்கப்புறம் கண்டினியூ பண்ணுறேன்” என்கவும் மனிதர் மடமடவென கண்ணாடி தம்ளர் தண்ணீர் முழுவதையும் காலி செய்துவிட்டு தனது கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.
பின்னர் எச்சிலை விழுங்கிவிட்டு “தலைவரே…” என்று இழுக்க வேகமாக கையுயர்த்தி போதுமென்று சைகை காட்டிவிட்டு தனது திட்டத்தை அவரிடம் விவரிக்க ஆரம்பித்தான்.
சந்திரகுமாருக்கு வேறு வழியில்லை. கேட்டு முடித்தார்.
“இதை செஞ்சிங்கனா உங்களுக்கு கட்சில பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு”
அவன் முடிக்கவும் “இதை தான் தலைவரே உங்க சித்தப்பாவும் சொன்னார்… அவருக்கும் உங்களுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்லையே” என்று தயங்க
“அவர் சொன்ன பிரகாசமான எதிர்காலம் அவருக்குக் கீழ ஒரு போஸ்டிங்க குடுத்து உங்களை உக்கார வைக்கிறதா இருக்கலாம்… இல்லனா அவர் மினிஸ்டர் ஆனதும் கவர்மெண்ட் கான்ட்ராக்ட், டீலிங்கை உங்க கிட்ட ஒப்படைக்குறதா கூட இருக்கலாம்… ஆனா நான் சொன்ன பிரகாசமான எதிர்காலத்துல நீங்க அசெம்ப்ளில எம்.எல்.வா நிக்குற சீன் தான் வருது” என்று கூறிவிட்டு பார்க்க அவரது கண்களில் ஆர்வம் ஜொலித்தது.
இது போல பொன்னான வாய்ப்பை யார் தான் வேண்டாமென்பார்! இருப்பினும் அவருக்குத் தயக்கம்!
“இல்ல தலைவரே! எனக்கு மதுரைல நல்ல செல்வாக்கு இருக்குங்கிறது உண்மை தான்… ஆனா நம்ம கட்சி ஆட்சில இல்லனதும் அவ்ளோவா என் முகத்த அந்தப் பக்கம் காட்டல… இப்ப தேர்தலுக்குனு ஓட்டு கேட்டு அங்க போனா மக்கள் என்னை கண்டுக்கவே மாட்டாங்க தலைவரே”
இவ்வளவு தானா என்பது போல புருவத்தை ஏற்றியிறக்கினான் அருள்மொழி.
“அதுக்கும் என் கிட்ட ஒரு ப்ளான் இருக்கு… நம்ம கட்சி சார்பா நான் நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகளை அடுத்தடுத்த மாசங்கள்ல சந்திக்கிறதா இருக்கேன்… மூனு சந்திப்புக்கு முன்னாடியும் களத்துல நிறைய வேலை பாக்கணும்… சோ அதுக்கு மூனு குழுவ நியமிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்… உங்களுக்கு நெசவாளர் குறை கேட்பு குழுவோட தலைவர் பொறுப்பை குடுக்கலாம்னு நான் முடிவு பண்ணி ரொம்ப நாளாகுது… அது சம்பந்தமா நெசவாளர்கள் அதிகம் இருக்குற பகுதிகளுக்கு நீங்க போய் உங்க தலைய காட்டுங்க… மக்களுக்கு உங்க நியாபகம் வந்துடும்”
சந்திரகுமாரின் முகம் தெளிவடைந்தது. இப்போது அவரது கண்களில் சட்டமன்ற உறுப்பினர் ஆகும் கனவு தான் மின்னியது. இனி அவன் என்ன கட்டளையிட்டாலும் செய்து முடிக்க அவர் தயார்.
“சரிங்க தலைவரே” வாயெல்லாம் பல்லாக சிரித்தவரிடம் தனது அடுத்தக்கட்ட வேலையைச் சொல்லவும் அவர் உற்சாகமாகிவிட்டார்.
“என்னை மட்டுமில்லாம மந்திரமூர்த்தி தெய்வநாயகத்தையும் நீங்க சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி தலைவரே… நாங்க எல்லாரும் ஒரே நேரத்துல கட்சிக்குள்ள வந்தவங்க… கட்சிக்காக ராப்பகலா உழைச்சிருக்கோம்… ஆனா எங்களுக்குப் பின்னாடி வந்தவங்கல்லாம் இப்ப எம்.எல்.ஏவா இருக்காங்க… உங்கப்பாக்கு அப்புறம் ஆதி தம்பி காலத்துல இது மாறும்னு காத்திருந்தோம்… இப்போ உங்களால அந்த மாற்றம் வந்திருக்கு… நீங்க கவலையே படாதிங்க தலைவரே… மதுரை மாநாடு கோலாகலமா நடக்கும் ஆனா நீங்க போட்ட திட்டப்படி… நாளைக்கு மந்திரமூர்த்தியையும் தெய்வநாயகத்தையும் வரச் சொல்லிடுறேன்… அவங்க கிட்டவும் நீங்க பேசிட்டிங்கனா இந்தக் கட்சில உங்களுக்கு எதிரா நிக்குறதுக்கு யாரும் இருக்கமாட்டாங்க”
“கண்டிப்பா… என் பி.ஏ இந்நேரம் அவங்க கிட்ட பேசிருப்பார்… எனி ஹவ், உங்களோட சென்னை விசிட் பத்தி சித்தப்பா கேட்டா எப்பிடி சமாளிப்பிங்க?”
“மதுரை மாநாடு சம்பந்தமா அவரை பாக்குறதுக்கு தான் சென்னைக்கு வந்தேன்னு சொல்லுவேன்… கட்சித்தலைமைக்குச் சந்தேகம் வந்துடக்கூடாதேனு கட்சி ஆபிஸ்ல தலைய காட்டுனேன்னு சமாளிச்சிடுவேன் தலைவரே… என்னோட அரசியல் வாழ்க்கைய ஆரம்பிச்சு வச்ச உங்களுக்குக்காக இதை கூட செய்யமாட்டேனா?”
சொன்னதோடு விடைபெற்றவர் அங்கிருந்து வெளியேறவும் அகத்தியனை அழைத்தான் அருள்மொழி.
“மாமா நான் போட்ட ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆயிடுச்சு… ஆனா என்னால அரசியல்ல யாரையும் நம்ப முடியாது… சோ சந்திரகுமாரை கண்காணிக்க ஆள்களை ஏற்பாடு பண்ணீடுங்க”
“இப்போவே அதுக்கான வேலைய ஆரம்பிக்கிறேன் அருள்… அப்புறம் இன்னொரு விசயம், சி.பி.ஐ ஆபிசர்ஸ் இன்னைக்கு யூனிகார்ன்ல பண்ணுன என்கொயரில ஒரு பெரிய உண்மை தெரிய வந்திருக்கு”
“என்ன மாமா?”
“எந்த கம்பெனிஸ் யூனிகார்ன்ல இன்வெஸ்ட் பண்ணுனதா சொல்லி உன்னை சி.பி.ஐ அரெஸ்ட் பண்ணுனாங்களோ அந்தக் கம்பெனிஸ்ல எல்லாம் உன் சித்தி வருணாவோட தம்பிக்கு ஷேர்ஸ் இருக்கு… ஒருவேளை அது ராமமூர்த்தியோட பினாமி கம்பெனியா இருக்கலாம்னு சி.பி.ஐ சந்தேகப்படுறாங்க”
அகத்தியன் இச்செய்தியைத் தெரிவித்துவிட்டு அழைப்பை முடித்துக்கொள்ள அருள்மொழி யோசனையில் ஆழ்ந்தான்.
அகத்தியன் சொன்னது போலவே ராமமூர்த்தி தனது பினாமி நிறுவனங்களுக்குக் கொடுத்துவிட்டு ஆதித்யனைச் சமாளிக்க யூனிகார்னில் முதலீடு செய்திருப்பாரோ என்ற சந்தேகம் அவனுள் முகிழ்த்தது.
அப்போது “மே ஐ கமின் சார்?” என்று சங்கரின் குரல் கேட்க உள்ளே வருமாறு பணித்தான் அருள்மொழி.
“கேம்பெய்ன் மேனேஜர் மேம் கால் பண்ணிருந்தாங்க சார்… உங்களை மீட் பண்ணி இம்ப்பார்ட்டெண்ட் ப்ராப்ளம் பத்தி டிஸ்கஸ் பண்ணணும்னு சொன்னாங்க”
வெறுமெனே உம் கொட்டியவன் “நாளைக்கு மானிங் மீட் பண்ண வரச் சொல்லிடுங்க சங்கர்… அதுக்கு முன்னாடி எனக்கு மூனு கம்பெனிஸ் பத்தி டீடெய்ல் வேணும்… அதை பத்தி விசாரிக்க சேகர் தான் சரியான ஆள்… சோ அவரை கொஞ்சம் வரச் சொல்லுங்க” என்றான்.
சங்கரும் சரியென்று வெளியேறியவன் அடுத்த சில மணி நேரத்தில் சேகருடன் உள்ளே வந்தான்.
“ஹெட் ஆபிஸ்ல நடந்த என்கொயரில முக்கியமான சில உண்மைகள் வெளிய வந்திருக்கு சேகர்… நீங்க என்ன பண்ணுறீங்க, நம்ம இன்வெஸ்டார் லிஸ்ட்ல இருக்குற கெட்வெல், பீஜியன் அண்ட் ஸ்வான் இந்த மூனு கம்பெனிஸ் பத்தி ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணுங்க… கம்பெனியோட புரொமோட்டர் யாரு, மேஜர் ஷேர்ஹோல்டர்ஸ் யாரு, எப்ப ஆரம்பிச்சாங்கனு ஈச் அண்ட் எவ்ரி டீடெய்லும் எனக்கு இந்த வீக்கெண்டுக்குள்ள வேணும்”
சேகர் சரியென்று கூறிவிட்டு சங்கருடன் வெளியேறவும் அடுத்து என்ன பிரச்சனை என யோசித்தவனின் மனக்கண்ணில் வந்து நின்றாள் வானதி.
ஏதோ முக்கிய பிரச்சனை குறித்து தன்னுடன் பேசவேண்டும் என்றாளாமே! அப்படி என்ன தலை போகிற பிரச்சனை என்ற கேள்வியோடு தனது மொபைலை எடுத்தவனின் கரம் யூடியூபில் செய்தி சேனல்களை தேடத் துவங்கியது.
இது அவனது தினசரி வேலை தான்! அவ்வபோது செய்திகளைப் பார்த்து நாட்டுநடப்புகளை அறிந்து கொள்வான்.
வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் தங்களைப் பற்றியும் ஐ.பி.சி பற்றியும் வந்திருந்த உழைப்பு சுரண்டல் செய்தி அவன் கண்களில் பட்டது.
பெருமூச்சுடன் மொபைலை மேஜை மீது வைத்தவன் இதை தான் வானதி குறிப்பிட்டிருப்பாள் என யூகித்துக் கொண்டான்.
பிரச்சனைகள் அணிவகுத்து காத்து நிற்கும் போது தான் ஒரு மனிதனின் மெய்யான மனவுறுதியை நாம் கண்டுகொள்ள முடியும். புத்திசாலிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவார்கள்! அதிபுத்திசாலிகளோ அந்தப் பிரச்சனையை உண்டாக்கிய காரணிகளைக் கண்டுபிடித்து அவற்றை விட்டு விலகுவார்கள்! முட்டாள்கள் மட்டுமே பிரச்சனைகளைக் கண்டு அஞ்சி அது குறித்து மற்றவர்களிடம் அழுது புலம்பி அவற்றுடனே வாழ்வார்கள்!
இதில் வானதியும் அருள்மொழியும் எந்த வகையறாவினர் என்பதை அவர்களது நாளைய சந்திப்பு தான் தீர்மானிக்கும்!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction