என் ஆன்மாவின் ஒரு பகுதி எப்போதும் உன்னைத் தேடிக்கொண்டே இருக்கும். அந்தச் சத்தம் உனக்குக் கேட்கிறதா, அல்லது என்னை விலக்கி வைக்க உனக்குள் பெருஞ்சுவர் எழுப்பிவிட்டாயா? தூரத்தில் நின்று என் தவிப்பை ரசிக்கிறாயா என்ன!
அன்று ஞாயிறு என்பதால் பொறுமையாக எழுந்தாள் வெண்பா. ஆனால் இல்லத்தரசிகளுக்கு வார விடுமுறை ஏது? அவளுக்கு முன்னரே எழுந்து வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள் அவளது அன்னை உமையாளும் அண்ணி ஹேமாவும்.
“ரொம்ப நேரம் தலையில ஹேர் பேக்கோட இருக்காதடி. அந்தக் கிழங்கை நான் பாத்துக்குறேன். நீ போய் ஷாம்பூ போட்டுக் குளி. உனக்கு சைனஸ் வேற”
அன்னையின் குரலில் ஒலித்த அக்கறையை முன்பின் தெரியாதவர்கள் கேட்டால் ஏதோ தனது மகளிடம் பேசுவதாகவே எண்ணிக்கொள்வார்கள். உமையாளைப் பொறுத்தவரைக்கும் மகளும் மருமகளும் அவருக்கு ஒன்றுதான்.
ஹேமாவுக்கு அந்தக் குடும்பத்தில் அதீத பிணைப்பு உருவாக உமையாள்தான் முக்கியக் காரணம். கணவன் எழிலன்கூட அதற்குப் பிறகுதான் என்பாள் அவள்.
இருபத்தியொன்றில் திருமணம், இருபத்திரண்டில் அவளது மைந்தன் ஆகாஷ் பிறந்தது என எதையும் அவள் இலகுவாகக் கடந்தது உமையாளின் அரவணைப்பால்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதோ ஆகாஷுக்கு ஆறு வயதாகிறது. கடந்த ஏழாண்டுகளில் ஹேமாவும் எழிலனும்கூடச் சண்டையிட்டதுண்டு. ஆனால் உமையாளுக்கும் அவளுக்கும் சின்ன மனஸ்தாபம்கூட வந்ததில்லை.
நாத்தனார் வெண்பாவுக்கு அவள் மணமாகி வந்தபோது வெறும் பதினேழு வயதுதான். தனது தங்கையை விட இளையவள் என்பதால் இயல்பாகவே அவள் மீது வாஞ்சை உண்டு.
தனது சின்னச் சின்ன ரகசியங்களையும் “மதினி இங்க வாங்களேன்” என்று தனியே அழைத்துக் கிசுகிசுக் குரலில் சொல்லும் நாத்தனாரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்!
ஒரு குடும்பத்தில் மாமியார், மருமகள், நாத்தனார் உறவில் சிக்கல் எழவில்லை என்றால் பெரும்பாலான பிரச்சனைகள் தவிர்க்கப்படும். அதற்கு உதாரணம் இந்த மூவரும்தான்.
வெண்பா பல் துலக்கிவிட்டுச் சமையலறைக்கு வரவும் உமையாள் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாவைச் செய்து முடித்து இறக்கவும் சரியாக இருந்தது.
“வாங்க மகாராணி! இப்பதான் விடிஞ்சுதாக்கும்? இந்தா! காபியைக் குடி. அங்க உனக்கு ஹேர் பேக் அரைச்சு வெச்சிருக்கேன். தலையில எண்ணெய் வெச்சு அதைப் போட்டுக்க. இன்னைக்கு அக்கா வீட்டுக்குப் போகணும். ஞாபகம் இருக்கா? துர்காவைப் பொண்ணு பாக்க வர்றாங்க”
காபியை எடுத்து உறிஞ்சியவள் “ம்ம்! மதினி போட்ட காபியா? டெய்லி மதினியவே காபி போடச் சொல்லும்மா. நீ போடுற காபி கஷாயம் மாதிரி இருக்கு” என்று அண்ணியைப் பாராட்டிய கையோடு அன்னையின் காலை வாரிவிட்டாள்.
“ஒரு மாறுதலுக்கு நீ எங்களுக்குச் செஞ்சு தரலாம்ல?” – உமையாள்.
“நான் பொறுமையா ரசிச்சு ரசிச்சுச் சமைப்பேன். உனக்கும் உன் மருமகளுக்கும் அவசரம் தாங்காது.”
“அதெல்லாம் நாங்க பொறுமையா இருப்போம். அடுத்த ஞாபிறு மதிய சமையல் நீதான் பண்ணணும். இதோ துர்காவுக்கு வரன் தகைஞ்சு கல்யாணம் முடிஞ்சுதுனா அடுத்து நீதான். உனக்கும் அவளுக்கும் ஆறே மாசம்தான் வித்தியாசம். சீக்கிரமா இதெல்லாம் கத்துக்க.”
“என்னமோ மாப்பிள்ளை நம்ம வீட்டு வாசல்ல கியூல நிக்குற மாதிரி பேசுறியேம்மா”
சரியாய் அச்சமயத்தில் கேட்ட தொண்டைச் செருமலில் கப்சிப்பானாள் வெண்பா. அது அவளது தந்தை செண்பகராமனின் தொண்டைச் செருமல்தான்.
செண்பகராமன் கொஞ்சம் கண்டிப்பான தந்தை. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மகளைத் தள்ளி நிறுத்தியே பழகிப்போனவருக்கு மனம் நிறைய இருக்கும் பாசத்தை வெளியில் கொட்டத் தெரியாது. மனைவி, மகள், மருமகள், மகன் என அனைவருக்கும் அவர் கண்டிப்பான மனிதர்தான். அதில் விதிவிலக்கானவன் ஆகாஷ் மட்டுமே!
அந்த ஆறு வயது சிறுவன் தாத்தாவையே ஓடவிடுவான். அவனைக் கண்டால் போதும், செண்பகராமனின் முகத்தில் வாடாத புன்னகையும் வற்றாத கனிவும் வானிலிருந்து கொட்டியதுபோல வந்து ஒட்டிக்கொள்ளும்.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ‘உமையாள் ஸ்டோர்’ என்ற பெயரில் எவர்சில்வர், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், வீட்டுபயோகப் பொருட்கள், விளக்குகள் விற்கும் கடை வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் சைக்கிளில் பாத்திரங்கள் கொண்டுபோய் விற்றவர்தான் செண்பகராமன்.
உமையாளைத் திருமணம் செய்ததும் சிறிதாகக் கடைபோல ஆரம்பித்தார். மனைவியின் ராசிதான் தனக்கு நல்ல காலத்தைக் கொண்டுவந்திருக்கிறதென அழுத்தமாக நம்பிய மனிதர் அவரது பெயரையே கடைக்கும் சூட்டினார்.
அன்றிலிருந்து அவர் நிலபுலன், சொத்து என எது வாங்கினாலும் உமையாளின் பெயரில் வாங்குவதே வாடிக்கை.
தந்தையையே குடும்பத்திலும் வியாபாரத்திலும் பின்பற்றும் எழிலன் குடும்பத் தொழிலின் நிர்வாகத்தில் நுழைந்ததும் பரிசுப் பொருட்களுக்கான செக்ஷனை இணைத்துவிட்டான்.
நல்ல வளமான குடும்பம்! அன்பான குடும்ப உறுப்பினர்கள்! அங்கே குதூகலத்துக்கும் சந்தோஷத்துக்கும் என்றுமே குறைவிருந்தது இல்லை.
நேரே சமையலறை வாயிலுக்கு வந்தவர் “சகலை போன் பண்ணுனார். மதியம் சாப்பாடு அங்க வெச்சுக்கலாம்னு சொல்லிட்டார். ஆகாஷை நான் குளிப்பாட்டிச் சாப்பாடு ஊட்டிவிடுறேன். நீயும் ஹேமாவும் சாப்பிட்டு மத்த வேலையை முடிங்க” என்க ஆமோதிப்பாய்த் தலையசைத்தார் உமையாள்.
செண்பகராமன் அங்கிருந்து செல்லப் போனவர் “நீ இன்னைக்குப் போட்டுக் குடுத்த கொத்தமல்லிக் காபி நல்லா இருந்துச்சு உமா” என்று சொல்லிவிட்டுப் போக உமையாளின் முகத்தில் புன்னகைத் தீற்றல்கள்!
சற்று முன்னர் மகள் மனைவியின் காபியைக் கலாய்த்ததைக் கேட்ட மனிதர் மனைவியின் மனம் நோகிவிடக் கூடாதெனப் பாராட்டிவிட்டுப் போனார்.
வெண்பா அதைக் கேட்டு வாயைப் பிளந்தாள்.
“பார்றா! உன்னைக் கலாய்ச்சா ஓடி வந்துடுறார். எங்கப்பா அந்தக் காலத்து க்ரீன் ஃபிளாக். நீ ரொம்ப லக்கிம்மா”
இது அந்த வீட்டில் சகஜமான காட்சிதான் என்றாலும் மனைவியின் முக மாறுதலைக் கவனித்து அதற்கேற்ப செயலாற்றும் தந்தையின் துரிதமான செயல்பாடு வெண்பாவைத் திகைக்கவைத்தது. அதில் அவளுக்குக் கொஞ்சம் பெருமையும்தான்.
“எல்லாக் காலத்துலயும் அன்பான புருஷன்மார் இருக்கத்தான் செய்யுறாங்கடி. உங்க காலத்துல அதுக்குத் தினுசு தினுசா ரெட் ஃபிளாக், க்ரீன் ஃபிளாக்னு பேர் வெச்சுக்கிறீங்க”
“பேர் வெச்சுமே சில ஆம்பளைங்க டாக்சிக்காதான் இருக்காங்க. என்கூட வேலை பாக்குற பத்மினி அக்கா வீட்டுல அவங்க புருஷன் ரொம்ப டாக்சிக்”
“நீ நல்ல கதை எதையும் கேக்கமாட்டியாடி? இந்த வீட்டுல உன் அப்பாவும் அண்ணனும் நடந்துக்குற விதத்தைப் பாக்குறல்ல. எல்லா ஆம்பளைங்களும் டாக்சிக்கா இருக்கமாட்டாங்க. நீ இங்க வா! தலைக்கு எண்ணெய் வெச்சுவிடுறேன்”
மகளுக்கும் மருமகளுக்கும் ஞாயிறு ஆகிவிட்டால் கூந்தலுக்கு மூலிகை எண்ணெயும், வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை அரைத்து ஹேர் பேக்கும் தயார் செய்துவிடுவார் உமையாள்.
மற்றபடி இடையில் ஒரு நாள் நிச்சயம் நல்லெண்ணெய்க் குளியல் உண்டு. வெறும் கூந்தலில் ஷாம்பூ போடுவதில் எப்போதுமே உமையாளுக்கு உடன்பாடு கிடையாது.
சமையலறையின் வெளியே பின்வாயிலை நோக்கிய படிக்கட்டில் வெண்பா அமர எண்ணெயைத் தலையிலும் கூந்தலிலும் தடவிவிட்டார் உமையாள்.
வெண்பாவுக்கு நீளமான கருங்கூந்தல் வர அவரது எண்ணெயும் ஹேர் பேக்கும்தான் முக்கியக் காரணிகள். மருமகளுக்கு சைனஸ் என்பதால் அவளுக்கு மட்டும் கொஞ்சம் சூடு செய்து தலையில் தேய்த்துவிடுவார்.
மூலிகையின் கம்மென்ற மணம் நாசியில் ஏற கண்மூடி அமர்ந்திருந்தாள் வெண்பா.
“ம்மா! துர்காவுக்கு எங்க மாப்பிள்ளை பாத்திருக்காங்க? நேத்து வாட்ஸ்அப்ல கேட்டப்ப போட்டோ மட்டும் அனுப்புனா. மேற்கொண்டு பேச வெக்கமா வருதுனு சொல்லிட்டா”
“விருட்சம் பில்டர்ஸ் இருக்குல்ல. அந்தக் குடும்பத்து மூத்த மகனுக்குத்தான் கேட்டிருக்காங்க. அவங்கல்லாம் பரம்பரைப் பணக்காரங்க. மனோ அக்காவோட ஃபிரெண்ட்தான் மாப்பிள்ளையோட சித்தி. அவங்க, நான், உன் பெரியம்மா எல்லாரும் செங்கோட்டையில ஸ்கூல் படிக்குறப்ப இருந்தே ஃபிரெண்ட்ஸ். அவங்க ரெண்டு பேரும் ஒரே கிளாஸ். காலேஜ் படிக்க நாங்க சாரா டக்கர் வந்தப்ப அவங்க சென்னைக்குப் போயிட்டாங்க. அவங்கப்பா அப்பவே தாசில்தாரா இருந்தவர் தெரியுமா?”
அன்னை சொன்ன கதையைக் கேட்டபடியே உம்கொட்டினாள் வெண்பா. சரியாய் அந்நேரத்தில் குளித்து முடித்துத் தலையில் டவலைச் சுற்றிக்கொண்டு வந்தாள் ஹேமா.
“அவங்க அரசியல்வாதி குடும்பம்தானே அத்தை? அந்தக் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியோட ஓனர்ஸ்ல ஒருத்தரான ராஜவேலுதானே நம்ம தொகுதிக்கு எம்.எல்.ஏவா இருந்தாரு.”
ஹேமா ஒரு நடமாடும் ‘கரண்ட் அஃபயர்ஸ்’ புத்தகம். அரசியல், விளையாட்டு, பொருளாதாரம் என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருப்பாள். அவள் சொன்ன செய்தி வெண்பாவுக்குப் புதிய செய்தி.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், வகுப்பில் நடத்த வேண்டிய பாடத்துக்கான தயாரிப்பு, நூலகம் தவிர வேறு எதையும் கவனிக்காத ஈராயிரத்தின் குழவி அவள். சினிமா, கிரிக்கெட் போல அரசியலும் அவள் அலர்ஜி என ஒதுக்கி வைத்தத் தளம்.
“அரசியல்வாதி குடும்பமா? கண்டிப்பா துர்காவுக்கு இந்தச் சம்பந்தத்தைப் பேசணுமா?” எனக் கேள்வி எழுப்பினாள் அவள்.
ஹேமாவின் முகத்தில் திகைப்பு!
“அதுல என்ன இருக்கு வெண்பா? அரசியல்வாதினாலே மோசமாதான் இருப்பாங்கனு ஏன் ஜட்ஜ் பண்ணணும்? பெரியத்தையோட ஃபிரெண்ட் குடும்பம்னு வேற சொல்லுறாங்க. இதெல்லாம் தெரியாமலா பெரியத்தை பொண்ணு பாக்க வரச் சொல்லியிருப்பாங்க?”
உமையாளுக்கு மருமகளின் பேச்சே சரியெனத் தோன்றியது.
“அதானே? பணக்காரங்கனாலே இரக்கமில்லாதவங்க, கார்ப்பரேட்னாலே வரியில ஏமாத்துவாங்கனு பொதுப்படையா யாரையும் பேசக் கூடாது வெண்பா. குந்தவை அக்கா ரொம்ப நல்ல டைப். அவங்க வீட்டுக்கு நம்ம துர்கா மருமகளா போனா அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்”
“அதெல்லாம் சரிதான்! துர்கா கல்யாணம் பண்ணிக்கப்போறது அவங்க மகனைத்தானே? நாளைக்கே அப்பாவை மாதிரி நானும் அரசியலுக்குப் போறேன்னு அவர் சொல்லிட்டார்னா?”
“போனாதான் என்ன? அதுல என்ன தப்பிருக்கு? நீ இவ்ளோ தூரம் யோசிக்காத வெண்பா. நல்ல குடும்பம், நல்ல மனுஷங்க இந்தக் காலத்துல கிடைக்குறதே கஷ்டம். அரசியல்வாதி குடும்பம்ங்கிறதால நல்ல சம்பந்தத்தை இழந்துடக் கூடாது. பெரியத்தை ரொம்பத் தெளிவு.”
அரசியல்வாதி என்றாலே மோசமாகத்தான் இருக்க வேண்டுமா என ஒரு பாடமே எடுத்தாள் ஹேமா. ஏனோ சரியாய் அந்நேரத்தில் நேத்ரனின் முகம் நினைவுக்கு வந்துபோனது வெண்பாவுக்கு.
உடனே மனநிலை மாறிப்போனது. தன்னிடம் அவன் பேசிய விதமும், இறுதியாகக் கண்சிமிட்டிவிட்டுப் போன விதமும் காலத்துக்கும் அவளுக்கு மறக்காது.
“வெண்பா” ஹேமா அவளைப் பிடித்து உலுக்கியதும்தான் பேச்சு அரசியலில் இருந்து பூரி சுடுவதற்கு மாறிவிட்டதையே உணர்ந்தாள் அவள்.
“போய்க் குளிச்சிட்டு வா. சூடா பூரி சாப்பிடலாம்”
நேரே தனது அறைக்கு வந்தவள் குளித்து இதமான காட்டன் நைட்டியை அணிந்து கூந்தலை உலர்த்தியபடி ஹாலுக்கு வந்தபோது ஆகாஷுக்குப் பூரி ஊட்டிக்கொண்டிருந்தார் செண்பகராமன்.
“நீங்க சாப்பிட்டீங்களாப்பா?”
“இனிமேதான்! நீ சாப்பிடு.” என்றவர் “ஹேர் டிரையர் போட்டுக் காயவையம்மா. போன வாரம்தானே ஜலதோஷம் குணமாச்சு” என்க சரியெனத் தலையாட்டிவிட்டு ஹேர் டிரையரைத் தேடி ஓடினாள் வெண்பா.
அதிகமாய்ப் பேசாவிட்டாலும் பேசுகிற இரண்டு வாக்கியங்களில் தனது அக்கறையைக் காட்டிவிடுவார் அவளது தந்தை.
ஹேர் டிரையர் ஓடும்போதே எழிலன் அவளிடம் பேனா கேட்டபடி வந்து நின்றான்.
“ஒரு பேனாகூட சொந்தமா வெச்சுக்கமாட்டியா? நீயெல்லாம் என்ன பிசினஸ்மேன்?” கிண்டல் செய்தபடி தனது ஹேண்ட்பேக்கிலிருந்து பேனாவை எடுத்து அவனிடம் நீட்டினாள் வெண்பா.
“எல்லாமே சிஸ்டம் வேலையா மாறிடுச்சு. நானும் உன்னை மாதிரி டீச்சரம்மாவா இருந்திருந்தா பேனாவும் ஹேண்ட்பேக்குமா இருந்திருப்பேன்”
கிண்டலாகச் சொல்லிவிட்டு அவன் போய்விட அவன் சொன்ன டீச்சரம்மா என்ற வார்த்தை மீண்டும் நேத்ரனை ஞாபகப்படுத்தியது அவளுக்கு.
“எவ்ளோ கிண்டலா சொன்னான் அவன்? ஜெயிக்குறதுக்கு முன்னாடியே என்ன ஒரு ஆட்டிட்யூட்? ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனா தொகுதிப் பக்கமே எட்டிப் பாக்கமாட்டான்”
அங்கே அவள் யாரைப் பற்றித் தன் மனதுக்குள் அத்தனைக் கடுகடுத்துக் கொண்டிருந்தாளோ, அந்த நேத்ரன், தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டத்தின் செம்மண் மைதானத்தில் தன் நண்பனோடு நின்று புழுதி பறக்கும் கபடி விளையாட்டை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் முதலாளி, அந்தத் தொகுதியின் வேட்பாளர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மைதானத்தில் விளையாடும் அந்த இளைஞர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.
தொடை தட்டி, ‘கபடி… கபடி…’ என்று சீறிப்பாயும் அந்த வீரர்களின் மூச்சுக்காற்றோடு அவனது உற்சாகக் கூச்சலும் கலந்திருந்தது. அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையில் செம்மண் புழுதி படிந்திருந்ததை அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
அந்த ஸ்ரீவைகுண்டம் கபடிக் குழு, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. ஏதோ நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல அந்த அணி. கடந்த ஐந்து வருடங்களாக அந்த அணிக்கான முழு ஸ்பான்சர்ஷிப்பையும் நேத்ரன்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கவனித்து வருகிறான்.
அவர்களின் பயிற்சி, விளையாட்டு உடைகள், ஷூக்கள், ஆரோக்கியமான உணவு, வெளியூர் பயணச் செலவு என அத்தனையும் நேத்ரனின் பொறுப்புதான். அவனது இந்த ஆதரவால், அந்த ஊர்ப் பையன்கள் பல மாநிலங்களைச் சுற்றிவந்து, பல கோப்பைகளை வென்று ஊருக்குப் பெருமை சேர்த்திருந்தார்கள்.
மேட்ச் முடிந்து அந்த இளைஞர்கள் அனைவரும் வியர்வை சொட்டச் சொட்ட அவனிடம் வந்தனர்.
“அண்ணே! அடுத்த வாரம் கிளம்பணும்ணே,” என்று ஒருவன் உற்சாகமாகக் கூற,
“சூப்பர்டா! இந்தத் தடவையும் கப் நம்ம டீமுக்குத்தான் வரணும். அடிச்சுத் தூக்குங்க. உங்களுக்கு என்ன தேவையோ அண்ணன் நான் பார்த்துக்கிறேன். டிக்கெட், தங்குற இடம் எல்லாம் ஆபீஸ்ல சொல்லிட்டேன். மேனேஜர் பக்காவா ஏற்பாடு பண்ணிடுவாங்க,” என்று ஒவ்வொருவரின் தோளையும் தட்டிப் பாராட்டினான்.
அப்போது அணியின் முக்கியமான ஆட்டக்காரனான செல்வம், சற்றுத் தயங்கியபடி நேத்ரன் அருகே வந்தான். “அண்ணே… அது… நேத்து காலேஜ்ல என் கடைசி செமஸ்டர் ஃபீஸ் முழுசையும் உங்க ஆபீஸ்ல இருந்து கட்டிட்டாங்கண்ணே. நீங்க இல்லைனா நான் படிப்பையே பாதியில விட்டுருப்பேன். எங்கப்பாவும் உடம்பு சரியில்லாமப் படுத்துட்டார்…” என்று சொல்லும்போதே அந்தப் பையனின் குரல் லேசாக உடைந்து தழுதழுத்தது.
அவன் தோளில் வாஞ்சையாகக் கைபோட்டுத் தட்டிய நேத்ரன், “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா? ஸ்போர்ட்ஸ் உன் அடையாளமா இருக்கலாம். ஆனா படிப்பு உனக்கான ஆயுதம். நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும், அதுதான் எனக்கு வேணும். ஃபீஸ் கட்டுறது என் வேலை, ஒழுங்காப் படிக்க வேண்டியது உன் வேலை. மேற்கொண்டு உனக்குப் படிக்கவோ, இல்ல வீட்ல வேற என்ன உதவி வேணும்னாலும் அண்ணன்கிட்ட கேளு, எந்தத் தயக்கமும் வேண்டாம், சரியா? போய்த் தைரியமாப் படி! பெரிய மனுஷனாட்டம் தேங்க்ஸ் எல்லாம் சொல்லக் கூடாது” என்று கனிவாகச் சிரித்தான்.
அருகில் நின்ற நிகிலனுக்கு, அவனது இந்த மறுபக்கம் எப்போதும் போல ஆச்சரியத்தைக் கொடுக்கத் தவறவில்லை.
அதிகாரமும், பதவிக்கான தாகமும் நிறைந்த ஓர் உலகத்தில் தான் செய்யும் எந்த உதவியையும் வெளியே சொல்லிக்கொள்ளாத, தன் பெயரோ புகைப்படமோ எதிலும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தூய்மையான மனம் அவனுடையது.
அந்தச் செம்மண் மைதானத்தில், தன் உதவியால் உயரும் அந்த இளைஞர்களின் முகத்தில் தெரியும் ஒளியை ரசித்தபடி அமர்ந்திருந்த நேத்ரனைப் பார்த்தால், யாராக இருந்தாலும் தங்கள் கோபத்தை மறந்து அவன் அன்பின் வீச்சில் தொலைந்துபோவார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை! இந்த அன்பு அவன் மீதான சின்னப் பிடித்தமின்மையை வெண்பாவின் மனதிலிருந்து போக்குமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


