“மரணம் – என்னை மிஞ்சி யாருமே இல்லனு நினைக்கிறவங்களுக்குக் கடவுள் குடுக்குற சர்ப்ரைஸ்… மரணத்தை நேர்ல சந்திச்சு அதுல இருந்து மீண்டவங்களுக்கு எது மேலயும் பிடிப்பு வராது… அவங்க பாதையில வெறித்தனமா ஓடணும்னு தோணுமே தவிர தன்னோட ஓட்டத்தால யாரும் பாதிக்கப்படுறாங்களானு பாக்க தோணாது… சராசரி மனுசங்களுக்குள்ள உயிர்ப்போட இருக்க வேண்டிய மென்மையான உணர்வுகள் காணாம போய், இன்னொரு தடவை மரணத்தை சந்திக்குறப்ப வாழ்க்கையில ஜெயிக்க வேண்டியத எல்லாத்தையும் ஜெயிச்சிடணும்ங்கிற வெறி மட்டும் தான் மிச்சம் இருக்கும்… இது எல்லாமே தனக்காக யாருமில்லங்கிற நிலமைல மட்டும் தான்… எப்ப ஒரு மனுசன் பந்த பாசங்கள்ல சிக்குறானோ அப்ப அவன் மரணத்தை நினைச்சு பயப்படுவான்… சாவே வரக்கூடாதுனு நினைப்பான்… சப்போஸ் சாகக்கூடிய சூழ்நிலைல சிக்குறப்ப அவன் மனசு அவனுக்காக யோசிக்காது, என்னோட மரணத்துக்கு அப்புறம் நான் நேசிக்கிறவங்க எப்பிடி இருக்கப்போறாங்கனு துடிக்கும், பயப்படும்… அந்த வலியும் பயமும் மரணத்தை விட கொடுமையானது”
-கிரிஷ்
க்ளீன் ஈகில்ஸ் மருத்துவமனை…
கிருஷ்ணராஜசாகருக்கு நினைவு திரும்பியிருந்தது. வலிநிவாரணியின் புண்ணியத்தில் அறுவை சிகிச்சை காயங்களின் வலி தெரியவில்லை. மயக்க மருந்தின் வீரியத்திலிருந்து விழித்தவனுக்கு மனம் ஒருநிலையில் இல்லை.
கண்களைத் திறக்க முயன்றாலும் கனவு போல அவன் கண்ட கருப்பும் வெள்ளையுமான காட்சி முடிவேனா என அடம்பிடித்தது.
குளத்தின் நடுவே கொலைகாரன் பிஸ்டலோடு அம்ரித்தைக் குறி பார்த்தான். அம்ரித்தோ தாமரைப்பூவைப் பறிப்பதில் பிசியாகியிருந்தான். அவனை அழைத்து வந்த நிஹாரிகாவைக் காணவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்த கணத்தில் வேறேதையும் யோசிக்காது ஓடிச் சென்று அம்ரித்தைத் தூக்கியவனின் கண்கள் கொலைகாரன் பிஸ்டலின் ட்ரிக்கரை அழுத்துவதைப் பார்த்தன.
அடுத்த நொடி சுரீர் என உயிர் போகும் வலி அவனது புஜத்தில்.
“சாகர்”
பெருங்குரலெடுத்து கத்தியபடி ஓடி வந்த நித்திலாவின் கண்களில் அவனுக்காக துளிர்த்த கண்ணீர் காயத்தின் வேதனையை மட்டுப்படுத்துவது போல முட்டாள்தனமான எண்ணம்.
“சாகர்… உங்களுக்கு ரத்தம்… இங்க வந்துடுங்க”
கை நீட்டி அவள் அழைத்தது நிஜமா? எனக்காக அழுகிறாளா? அடுத்த நொடி கொலைகாரனின் பார்வை அவள் பக்கம் திரும்பியது.
எதையும் யோசிக்காமல் அவளுக்கும் அம்ரித்துக்கும் அரணாய் நின்றவன் அடுத்த தோட்டாவை வயிற்றில் தாங்கி நித்திலாவைக் காத்தான்.
பின் சரிந்தவன் நித்திலாவின் மடியில் இருந்தான். அவளது கதறலும், சந்தீப்பின் குரலும் காதில் ஒலிக்க நினைவுகளிலிருந்து மீண்டவன் கண்களைத் திறந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வெளிச்சத்தைப் பார்க்காததால் கண்கள் கூசின. சில முறை மூடித் திறந்து வெளிச்சத்திற்கு விழிகளைப் பழக்கப்படுத்திக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள் நிரம்பிய அறையில் ஆர்ம் ஸ்லிங்கோடு படுக்கையில் கிடக்கும் தன் நிலையை எண்ணிப் பார்த்தான். உடன் யாருமில்லை என்ற வெறுமையுணர்வு அவனை விழுங்கி ஏப்பம் விடுவதற்குள் செவிலி ஒருவர் அறைக்குள் வந்தார்.
அவனுக்கு நினைவு திரும்பியதைக் கவனித்துவிட்டு மருத்துவரை அழைத்து வந்தார்.
மருத்துவர் காயம் வலிக்கிறதா என விசாரித்துவிட்டு அவனால் எழுந்து உட்கார முடிகிறதா என சோதித்தார்.
குண்டடி பட்ட கரத்துக்குச் சிறிது நாட்களுக்கு ஆர்ம் ஸ்லிங்கின் உதவி தேவை என்றார்.
அவனால் இயல்பாக சுவாசிக்க முடிகிறது என்பதை உறுதிபடுத்தியவர் இனி லைஃப் சப்போர்ட்டிங் சிஸ்டத்திற்கு வேலை இல்லை என அதை நீக்கச் சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும்படி கூறினார்.
“நிறைய ப்ளட் லாஸ் ஆகியிருக்கு மிஸ்டர் கிரிஷுக்கு… சோ இவருக்குக் கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை… இவரைப் பாக்க ஃபேமிலி மெம்பர்சுக்கு மட்டும் தான் பெர்மிசன் உண்டு… அவங்களும் மாஸ்க் இல்லாம வரக்கூடாது… யாரும் இவரைத் தொட்டுப் பேச விடாதிங்க”
செவிலிக்கு அறிவுரைகளைக் கொடுத்துவிட்டு சென்றார் மருத்துவர்.
அவரும் கிருஷ்ணராஜசாகருக்கு ஆன்டி-பயாடிக் மற்றும் வலிநிவாரணி மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு சென்றதும் மீண்டும் தனிமை.
பொதுவாக எதிர்பாராவிதமாக துப்பாக்கிச்சூட்டில் சிக்கிக்கொண்டவர்களுக்கு ஆன்சைட்டியும், மீண்டும் மீண்டும் அந்நிகழ்வை நினைவுப்படுத்தி பார்க்கும் பழக்கமும் வந்துவிடும். அதுவும் ஒரு ட்ராமா (trauma) தானே.
அதே நிலையில் தான் கிருஷ்ணராஜசாகரும் இருந்தான். போதாக்குறைக்குத் தனிமை வேறு!
இந்த தனிமை அவனை மருட்டியது. துப்பாக்கிச்சூட்டின் இலக்கான மைந்தனை எண்ணி அவனை கவலை கொள்ள வைத்தது. அவனது பாதுகாப்பை நினைத்து நொந்து போக வைத்தது.
தனது செயல்பாடுகளாலும், தொழில் நடவடிக்கைகளாலும் எவ்வளவு வெறுப்பையும், எதிரிகளையும் சம்பாதித்திருக்கிறோம் என்பதை இந்த ஒரு விபத்தால் புரிந்துகொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
அத்துணை வெறுப்பும் தன்னைத் தாக்காமல் அம்ரித்தைக் குறி வைத்தது அவனை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியது.
என் எதிரிகளின் சதிக்கு அவன் ஏன் பலியாக வேண்டும்? குழந்தைக்கு செல்வச்செழிப்பான வாழ்க்கையை விட பாதுகாப்பான வாழ்க்கையே முக்கியம்.
என்னால் அதை அம்ரித்துக்குத் தரமுடியாது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் இருக்க முடியுமா?
தனக்காக கண்ணீர் விட்ட நித்திலா அவன் மனக்கண்ணில் தோன்றினாள். அவளுடன் இருந்த நான்காண்டுகளில் இம்மாதிரி அனர்த்தங்கள் அம்ரித்திற்கு நேர்ந்திருக்காது. அவளால் பணக்கார வாழ்க்கையை அம்ரித்திற்கு கொடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் பாதுகாப்பாக அவனை வளர்த்தெடுத்திருந்தாள்.
அந்தப் பாதுகாப்பை உடைத்து அவனை இங்கே அழைத்து வந்து இத்தகைய வெறுப்பு வேலைக்கு இலக்காக்கியதை தவிர உருப்படியான காரியம் ஒன்றையும் தான் செய்யவில்லை என்பதை கிருஷ்ணராஜசாகர் புரிந்துகொண்டான்.
இனி அம்ரித் இங்கே இருப்பது பாதுகாப்பல்ல. அவனை நித்திலாவோடு சிம்லாவுக்கே அனுப்பிவைத்துவிடலாமென்ற முடிவுக்கு வந்தான்.
அம்ரித்தும் அங்கே போகவேண்டுமென சில நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறான். எது எப்படியோ கிருஷ்ணராஜசாகரிடம் போட்ட சவாலில் நித்திலா ஜெயித்துவிட்டாள். சொன்னபடி அம்ரித்தை அழைத்துச் செல்ல அவளுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறதே!
ஆனால் கிருஷ்ணராஜசாகரின் மனசாட்சியோ இப்போதும் நீ தான் ஜெயித்தாய் என்றது. எப்படி என யோசித்தான் அவன்.
“இப்பவும் நீ நினைச்சா அம்ரித்தோட மனசை மாத்த முடியும்… ஆனா நீ செய்ய மாட்ட… நீயா மனசு மாறி அம்ரித்தை அவ கூட அனுப்பி வைக்கலனா இப்பவும் நித்திலாவால அம்ரித்தை சிம்லாவுக்குக் கூட்டிட்டுப் போகமுடியாது கிரிஷ்”
அது சரி! அவனது மனசாட்சியும் அவனை மாதிரி தானே யோசிக்கும்.
கிருஷ்ணராஜசாகர் உறங்கிவிட்டானா என சோதிக்க வந்த செவிலியிடம் தனது மனைவியைப் பார்க்கவேண்டுமென்றான் அவன்.
செவிலியும் அவனது பாதுகாப்புக்காக சந்தீப் அனுப்பி வைத்த பாதுகாவலர்களிடம் செய்தி தெரிவித்தார். கூடவே முகக்கவசம் அணிந்து வரும்படி அறிவுரை வேறு!
அவர் சொன்ன அறிவுரைகளின்படி முகக்கவசத்தோடு வந்த நித்திலா கிருஷ்ணராஜசாகர் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் பிரவேசித்தாள்.
வந்தவளின் மனம் இறுகிப்போய் இருந்தது. அந்த இறுக்கத்தை படுக்கையில் கண் மூடிக் கிடந்த கிருஷ்ணராஜசாகர் இன்னும் அதிகரித்தான்.
முந்தைய தினம் எடுத்திருந்த முடிவு அவளைச் சந்தர்ப்பவாதி ஆக்கிவிட்டதால் உண்டான இறுக்கமாக இருக்கலாமோ?
கிருஷ்ணராஜசாகரின் கையில் ஒட்டி உறவாடிய ஆர்ம்ஸ்லிங்கை பார்த்தபடி அவனிடமிருந்து சில அடிகள் தொலைவில் அமர்ந்தாள். குனிந்த தலையை நிமிர்த்தும் எண்ணமில்லை போல.
அவள் அமர்ந்ததும் கண் விழித்தான் கிருஷ்ணராஜசாகர்.
“எப்பிடி இருக்கிங்க சாகர்?”
மெதுவாக வினவினாள்.
“உயிரோட இருக்கேன்… உனக்குச் சர்ப்ரைஸ் ஒன்னு வச்சிருக்கேன்”
இன்னும் நான்கு தோட்டாக்களால் காயப்பட்டாலும் இவனது ஆட்டிட்டியூட் அழியாது என்று சலித்துக்கொண்டாள் நித்திலா.
“ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருக்குற?”

“உங்களுக்கு இன்ஃபெக்சன் ஆகிடும்னு நர்ஸ் சொன்னாங்க… சோ”
பட்டும் படாமலும் பேசியபடி முகக்கவசத்தைக் கழற்றியவளைக் கூர்ந்து கவனித்தவன் “எனக்காக நீ கண்ணீர் விட்டது ஞாபகம் இருக்கு நித்தி” என்றான் மெதுவாக.
இவ்வளவு நேரம் அவனது முகத்தைப் பார்க்காதவள் தலையை உயர்த்தினாள். அவளது விழிகளில் கண்ணீர்!
“ஐ அம் ஆல்ரைட் நவ்… அழாத”
“நான் ஒன்னும் அழல… உங்களை மாதிரி ஒருத்தருக்காக நான் ஏன் அழப்போறேன்?”
தடுமாறிய குரலை இழுத்துப் பிடித்தபடி கேட்டாள்.
“அப்ப உன் கண்ணுல இருந்து கண்ணீர் வர்ற மாதிரி என் கண்ணுக்குத் தெரியுதே, இதுல்லாம் ஹலூசினேசனா?”
கிருஷ்ணராஜசாகரின் கேள்வி கிண்டலோடு வந்தது.
நித்திலா ரோசத்தோடு கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். ஆனால் சிவந்த நாசி நுனி அவளது அழுகையின் ஆழத்தைச் சொல்லுகிறதே! அதை எப்படி மறைப்பாள்?
மீண்டும் அவனைப் பார்க்காமல் பேச முயன்றாள்.
“நான்…”
“நீயும் அம்ரித்தும் சிம்லாக்குப் போயிடுங்க நித்தி”
நித்திலாவின் கண்கள் கிருஷ்ணராஜசாகரிடம் தஞ்சமடைந்தன. இவன் நிஜமாகவா கூறுகிறான்? அவனது முகபாவனையைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தாள்.
“ஏன் இந்த முடிவு?”
“இங்க அவனுக்குப் பாதுகாப்பு இல்ல”
அவள் நினைத்ததை தான் அவனும் நினைத்திருக்கிறான். எனவே சிம்லாவில் பாதுகாப்பாக இருக்கட்டுமென முடிவு செய்திருக்கிறான்.
வந்த வேலை முடிந்தது. நினைத்த காரியம் நடந்துவிட்டது. ஆனாலும் அடைந்த வெற்றியில் புளங்காகிதம் வர மறுத்தது.
ஏன் என்னால் சந்தோசப்பட முடியவில்லை?
குழப்பமான உணர்வுகள் பனிப்படலமாக மாறி இதயத்தை ஆக்கிரமிப்பதற்குள் என்னவெல்லாம் செய்து கிருஷ்ணராஜசாகர் அம்ரித்தை சென்னைக்கு அழைத்து வந்தான் என்பது நினைவுக்கு வந்தது.
தனக்கு மரணபயத்தைக் காட்டியவன் அல்லவா! மறக்க முடியுமா என்ன?
ஏதோ தீர்மானித்தவளாக நிமிர்வாக பார்த்தாள் நித்திலா.
“நானும் இந்த முடிவுக்குத் தான் வந்திருக்கேன் சாகர்… அம்ரித்தும் நானும் சிம்லாவுக்கே திரும்பிப் போயிடுறோம்… அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க”
என்ன என்பது போல புருவத்தை மேலேற்றி வினவினான் அவன்.
“எங்களைத் தேடி இனி எப்பவும் நீங்க சிம்லாவுக்கு வரக்கூடாது… அம்ருவ உரிமை கொண்டாடக்கூடாது… வரமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க”
நித்திலா கேட்ட சத்தியத்தில் கிருஷ்ணராஜசாகர் திகைத்தான். சிம்லாவில் அவன் பாதுகாப்பாக இருப்பான் என்று தான் அனுப்பிவைக்க எண்ணினான். இவள் என்னவென்றால் ஒரேயடியாகத் தனக்கும் அம்ரித்துக்கும் இடையிலுள்ள உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறாள்! எப்போது இம்மாதிரி சந்தர்ப்பம் வருமென காத்திருந்தாள் போல.
“ஏன்? அவன் என்னோட மகன் தானே? நான் பாக்க வரக்கூடாதா?” எரிச்சலோடு வினவினான்.
“வரக்கூடாது சாகர்… அப்பிடி வந்திங்கனா நானும் அம்ருவும் கண் காணாத இடத்துக்குப் போயிடுவோம்”
“நீ எங்க போனாலும் நான் கண்டுபிடிச்சிடுவேன் நித்தி”
“இந்த நாலு வருசத்துல எங்களைக் கண்டுபிடிக்க முடிஞ்சுதா உங்களால?”
“நான் உன்னை தேட ட்ரை பண்ணல… எனக்கு பிள்ளை இருக்கான்னு தெரிஞ்சிருந்தா நீ போன ஒரு மாசத்துலயே கண்டுபிடிச்சிருப்பேன்”
“உங்களோட வெட்டிப்பெருமைய கேக்குறதுக்கு நான் இங்க வரல சாகர்… இனிமே என்னையும் என் பிள்ளையையும் தேடி நீங்க வரக்கூடாது… நாங்க இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ளைட்ல சிம்லா கிளம்புறோம்”
“அவ்ளோ அவசரமா?”
“உங்க மனசு மாறி நீங்க அடுத்த திட்டம் போடுறதுக்குள்ள சுதாரிச்சிக்கிறேன் சாகர்… உங்க கண்ணுல நான் பாக்கணும்னு ஆசைப்பட்ட மரணபயணத்தை கன்ஷாட் ஆனப்ப நான் பாத்துட்டேன் சாகர்… என்னோட ஆசை நிறைவேறிடுச்சு… இங்க நான் வேஸ்ட் பண்ணுற ஒவ்வொரு செகண்டும் உங்களுக்கு அடுத்த ப்ளான் போடுறதுக்கு நான் குடுக்குற அவகாசம்… அவ்ளோ ரிஸ்க் எடுக்க விருப்பமில்ல”
இளக்கமின்றி உரைத்தவளைப் பார்க்கும் போது சுருக்கென்றது கிருஷ்ணராஜசாகருக்கு. இப்படிப்பட்டவள் இல்லை நித்திலா. ஒருவேளை தனது சமீபத்திய நடவடிக்கைகளால் அவளது குணாதிசயத்தில் மாற்றம் நேர்ந்திருக்குமோ?
“கெட் வெல் சூன்… இதுவே நம்ம சந்திக்கிறது கடைசியா இருக்கட்டும்”
சொல்லிவிட்டு எழுந்தவள் அவனது முகத்தைப் பார்க்காமல் வெளியேறினாள்.
அம்ரித்தைப் பார்க்கக்கூட அவனுக்கு அவகாசம் அளிக்கவில்லை. நீ அவளுக்கு அவகாசம் அளித்தாயா? அவளைப் பயத்தின் பிடியில் தள்ளிவிட்டு மகனோடு சொகுசு கப்பலில் போனவன் தானே நீ?
நித்திலா சென்ற பிறகு அந்த அறை வெறுமையாகத் தோற்றமளித்தது கிருஷ்ணராஜசாகருக்கு. எப்படியும் அம்ரித்தை அனுப்பிவைக்கும் முடிவுக்கு வந்தாயிற்று! இனி வருந்தி என்னவாகப் போகிறது?
அவனுக்குள் மிச்சமிருந்த மகன் மீதான பாசமும் விடைபெற்றுவிட பழைய கிருஷ்ணராஜசாகராக கண் மூடி அமர்ந்திருந்தான்.
இந்தச் சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அம்ரித்தை எப்பாடுப்பட்டாவது தன்னுடனே இருக்க வைத்திருப்பான்.
இதற்கு காரணமானவர்களை அவன் சும்மா விடுவதாக இல்லை. அவனது ஒட்டுமொத்த சந்தேகமும் குவிந்த இடம் நிஹாரிகா. அவளுக்கும் பர்மான் குடும்பத்துக்கும் இடையில் திடீரென அதிகரித்த நெருக்கம் அதற்கு இன்னும் வலுவூட்டியது.
தன்னைப் பழி வாங்க எண்ணிய ஆயுஷ் பர்மானுக்கு அவள் ஏன் உடந்தையாய் இருந்திருக்கக்கூடாது?
அவன் யோசிக்கும் போதே காவல்துறை ஆணையர் முகக்கவசத்துடன் வந்தார். அவனை நலம் விசாரித்துவிட்டு சாகர் நிவாசில் நடந்த விசாரணையின் சாரம்சத்தைக் கூறினார்.
அதில் நிஹாரிகா சொன்ன ஒரு விசயத்தை மட்டும் கிருஷ்ணராஜசாகரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவன் மெக்கலமின் காரியதரிசியான ஃப்ளாரண்ட் டி க்ரூஸை அவசரமாகப் பார்க்கவேண்டுமென சொல்லவேயில்லை. அவள் பொய் சொல்லியிருக்கிறாள் என ஆய்வாளரிடம் அவளை மாட்டிவிட அதிகநேரம் ஆகாது.
அப்படி செய்தால் கிருஷ்ணராஜசாகர் சராசரி மனிதன் ஆகிவிடுவானே!
எவ்வளவு சாமர்த்தியமாக கொலைகாரனிடம் அம்ரித்தைச் சிக்கவைத்திருக்கிறாள். குழந்தையிடம் கூட வெறுப்பைக் கொட்டும் அவள் இனி தங்கள் குடும்பத்தின் அங்கமாக இருக்கக்கூடாது. இப்படியே போனால் அவள் சந்தீப்பை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நிஹாரிகா சந்தீப்பின் காலைச் சுற்றியிருக்கும் பாம்பு. அந்தப் பாம்பை சாமர்த்தியமாகத் தான் அவன் காலில் இருந்து கழற்றியெறிய வேண்டும்.
சட்டத்தின் பிடியில் அவளை ஒப்படைக்கலாம். ஆனால் சந்தீப் அவளைக் காப்பாற்றிவிடுவான். இந்த விவகாரத்தை தந்திரமாக கையாள வேண்டும்.
காவல்துறை ஆய்வாளர் பேசி முடிக்கட்டுமென காத்திருந்தவன் தனக்குச் சோர்வாக உள்ளதென கூறிவிட அவரும் மறுநாள் விசாரணைக்கு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஆய்வாளர் கிளம்பியதும் தீவிர யோசனையில் ஆழ்ந்தான் கிருஷ்ணராஜசாகர். அம்ரித்தைக் கொலை செய்யும் அளவுக்குப் போன நிஹாரிகாவை அப்படியே விடக்கூடாதென்ற பிடிவாதம் வெறியைப் போல அவனுக்குள் ஏறியது. மாலையில் அவனைக் காண வந்த சந்தீப் நித்திலாவும் அம்ரித்தும் விமானம் ஏறிவிட்டதாகச் சொன்ன செய்தி கிருஷ்ணராஜசாகருக்கு நிஹாரிகாவின் மீதிருக்கும் கோபத்தை இன்னும் அதிகரித்தது. அந்தக் கோபத்தின் விளைவாக சந்தீப் – நிஹாரிகாவின் பிரிவுக்கான பிள்ளையார்சுழி அங்கே போடப்பட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

