“காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில கே-பியூட்டி ப்ராடக்ட்ஸ் சத்தமில்லாம நுழைஞ்சு இந்தியன் யூத்தை கவர் பண்ணிட்டிருக்காங்க… ஏகப்பட்ட சௌத் கொரியன் பியூட்டி பிராண்ட்ஸ் இன்னைக்கு இந்தியன் பியூட்டி ரீடெய்ல் சைட்ஸ் கூட டை-அப் வச்சு இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரிய திரும்பி பாக்க வச்சிருக்காங்க… இந்த மாதிரி சிச்சுவேசன்ல தான் ஜேஜூ ஷாப் கொரியன் காஸ்மெட்டிக் ப்ராண்ட் கூட சேர்ந்து டை-அப் வச்சுக்கிற ஐடியா எனக்கு வந்துச்சு… இது சம்பந்தமா நானும் ஜேஜூ ஷாப் சி.ஈ.ஓவும் பேசி முடிவெடுத்து கூடிய சீக்கிரம் கான்ட்ராக்ட் சைன் பண்ணப்போறோம்… இந்த கொரியன் அலை அடங்குறதுக்குள்ள எல்லாரோட வீட்டுலயும் ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ் இருக்கணும்.. அந்த டார்க்கெட்டை நோக்கி நான் ஓடிட்டிருக்கேன்”
-கிரிஷ்
ஆர்.எஸ். டவர்ஸ், ராஜா அண்ணாமலைபுரம்….
ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டடின் தலைமை அலுவலகம் கார்பரேட்டிற்குரிய கட்டுக்கோப்போடு இயங்கிக்கொண்டிருந்தது.
நிறுமத்தின் மீட்டிங் அறையில் முக்கியமான பங்குதாரர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
இன்னும் சில நாட்களில் ஜேஜூஷாப் தென்கொரிய பியூட்டி மற்றும் ஸ்கின்கேர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகப்போகிறது. அதற்கான கூட்டம் தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஜேஜூஷாப்பின் சீ.ஈ.ஓ கீ-மூன் ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதற்கு சென்னை வருவதாக இருந்தார். இறுதி நேரத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது சென்னை வருகை தடைபட இப்போது கிருஷ்ணராஜசாகரே தென்கொரியா செல்லவேண்டிய நிலமை.
தென்கொரிய தலைநகரான சியோலில் சியோச்சோ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஜேஜூஷாப் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததைக் கையெழுத்திட்டுக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டதை பங்குதாரர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தான் இப்ராஹிம்.

அடுத்த வாரம் கையெழுத்தாக வேண்டிய ஒப்பந்தத்திற்காக கிருஷ்ணராஜசாகர் நாளை மாலை கிளம்பவிருப்பதையும் கூறினான்.
பங்குதாரர்களில் சில பெருமுதலீட்டாளர்களும் அடக்கம். அவர்களுக்கு நிறுமத்தின் புதிய முயற்சிகளைப் பற்றிய விவரங்களைக் கூறவேண்டியது கட்டாயம். சிலர் நிறுமத்தின் அறிக்கைகளைப் படித்ததோடு போதுமென இருந்துவிடுவர்.
சில முதலீட்டாளர்கள் நேரடி விளக்கத்தை எதிர்பார்ப்பார்கள். பணம் போட்டவர்கள் விளக்கம் எதிர்பார்ப்பது நியாயம் தானே! எனவே இம்மாதிரியான கூட்டங்களில் ஆட்கள் அதிகம் இருக்கமாட்டார்கள்.
ஆனால் கேள்விகளுக்குப் பஞ்சமிருக்காது.
“உங்களோட ஜாயின் வென்சர் நல்ல லாபத்தைக் குடுக்கும்னு எப்பிடி நம்புறிங்க?”
“கே பாப் ஐடல்ஸ், கொரியன் ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ் மேல மக்களுக்கு இருக்குற ஆசை தான் நம்ம மூலதனம்… இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் நார்த் ஈஸ்ட், சென்னை மாதிரி சில இடங்கள்ல கொரியன் பியூட்டி ப்ராடக்ட்சுக்கு நல்ல வரவேற்பு இருக்கு… நார்த் ஈஸ்ட்ல சில இடங்கள்ல பாலிவுட் மூவிஸ் தடை பண்ணுறாங்க, பட் கே பாப்கு எந்த தடையும் இல்ல.. அந்த பீபிள் கொரியன்ஸ் கூட தங்களால கனெக்ட் ஆகமுடியுறதா நம்புறாங்க… நம்ம மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட் நடத்துன டார்க்கெட் மார்க்கெட்டிங் அனாலிசிஸ்படி கொரியன் பியூட்டி ப்ராண்ட்சுக்கு நல்ல வரவேற்பு இருக்குதுனு தெரிய வந்திருக்கு… மக்கள் அதை வாங்க தயங்குறதுக்குக் காரணம் விலை… நம்ம கொஞ்சம் அஃபோர்டபிள் ப்ரைஸ்ல குடுத்தோம்னா வீ வில் கேப்சர் த மார்க்கெட்”
“விலைய குறைச்சிங்கனா வீ வில் லூஸ் எலைட் கஸ்டமர்ஸ்”
விலை அதிகமான பொருட்களை வாங்குவதே கௌரவம் என எண்ணும் வகையறாக்களும் இருக்கிறார்கள் என்பதை ஒரு முதலீட்டாளர் நினைவுறுத்தினார்.
“அப்பிடி நடக்காது… ராந்த்வாவும் ஜேஜூவும் சேர்ந்து ஆரம்பிக்கப்போற ‘ஆர்.ஜே பியூட்டி’ ப்ராடக்ட்ஸ் அஃபோர்டபிள், லக்சரினு ரெண்டு ரேஞ்சுலயும் தயாராகும்… நம்ம எந்த தரப்பு கஸ்டமரையும் இழக்கப்போறதில்ல”
கிருஷ்ணராஜசாகர் நம்பிக்கையாய் உரைக்க முதலீட்டாளர்களும் திருப்தியானார்கள்.
கூட்டம் முடிவடைந்ததும் இப்ராஹிமுடன் தனது அலுவலக அறைக்குச் சென்றான் கிருஷ்ணராஜசாகர்.
இருக்கையில் சாய்ந்ததுமே இப்ராஹிம் மொபைலை நீட்டினான்.
“அம்ருவோட நம்பர்ல இருந்து கால் வந்துச்சு சார்… மீட்டிங் முடிஞ்சதும் குடுக்கலாம்னு இருந்தேன்”
கிருஷ்ணராஜசாகர் அதை வாங்கவில்லை.
“சைலண்ட்ல போடு இப்ராஹிம்”
“சார் குழந்தை உங்க காலுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பான்”
“வெயிட் பண்ணட்டும்… உடனே அவனுக்குக் கால் பண்ணுனா அப்பாவ இப்பிடி வீடியோ கால்ல பாத்தா மட்டும் போதும்னு நினைக்க ஆரம்பிச்சிடுவான்… இன்னைக்கு நான் அவன் கிட்ட பேசலனா அப்பா கூட இருந்தா இப்பிடி ஆகிருக்காதுனு தோணும்… அது தான் எனக்கு வேணும் இப்ராஹிம்”
“சார் அவன் அழுதுட்டான்னா?”
“அழுதாலும் தப்பில்ல… எவ்ளோ கண்ணீர் வருதோ அவ்ளோ அதிகமா அவன் என்னைத் தேடுவான்”
“சார்…”
“அவன் என்னோட இருக்கணும்… அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்… அம்ரு நம்பர்ல இருந்து கால் வந்துச்சுனா அட்டெண்ட் பண்ணாத”

கடினக்குரலில் கட்டளையிட்டவன் தென்கொரிய பயணத்திற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்குமாறு கூறிவிட இப்ராஹிம் கனத்த மனதோடு அவன் சொன்னதை நிறைவேற்ற ஆரம்பித்தான்.
தந்தை தன்னிடம் பேசுவானென அம்ரித் அங்கே காத்திருந்தான். காலையுணவைக் கூட சாப்பிடவில்லை. அவன் படித்துக்கொண்டிருக்கும் கிண்டர் கார்டனுக்கு விடுமுறை என்பதால் கபேக்குத் தன்னோடு வந்திருந்தாள் நித்திலா.
காலையிலிருந்தே டேப் மீதே கண்ணாய் இருந்தான் அம்ரித். விக்ரமிடம் அதில் எப்படி கால் செய்யவேண்டுமென கேட்டுத் தெரிந்துகொண்டவன் கிருஷ்ணராஜசாகரின் எண்ணுக்கு அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அம்ரித்தின் வதனம் வாடிப்போனது. விக்ரம் சமாதானம் செய்து சாப்பிடச் சொன்ன போது கூட வீடியோ காலில் தந்தையைப் பார்த்த பிறகு சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டான்.
மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கவில்லை. நித்திலாவுக்கு வேலை வந்துவிட அவனுக்குச் சூடாக பான்கேக் செய்து மேப்பிள் சிரப் ஊற்றி உலர் ஸ்ட்ராபெர்ரியை அதன் மீது தூவிக் கொடுத்துவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.
அவனும் தந்தையிடமிருந்து மொபைல் அழைப்பு வருமென காத்திருந்தான். அவனோடு சேர்ந்து பான்கேக்குகளும் காத்திருந்தன.
நேரம் ஆனதேயொழிய கிருஷ்ணராஜசாகரிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை.
நித்திலாவும் மைந்தன் சாப்பிட்டிருப்பான் என்ற எண்ணத்தில் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.
சாவித்திரி அலுவலக அறையிலிருந்து வெளியே வந்தவர் ரிசப்சன் அருகில் அமர்ந்திருந்த அம்ரித்தின் முன்னே வைக்கப்பட்டிருந்த பான்கேக்குகள் அதன் மீது ஊற்றப்பட்டிருந்த மேப்பில் சிரப்பை முழுவதுமாக உறிஞ்சியிருந்தன.
இன்னுமா இவன் சாப்பிடவில்லை? திகைப்போடு அவனருகே வந்தவர்
“ஏன் இன்னும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடல அம்ரு?” என கனிவாய் கேட்க
“டாடிய பாத்தா தான் சாப்பிடுவேன்” என்றான் அம்ரித்.
சாவித்திரி உடனே விக்ரமை அழைத்தார்.
“என்னடா இது? நீ அப்பவே கால் பண்ண சொல்லிக் குடுத்தல்ல? இன்னும் டாடி பேசலனு சொல்லுறான்”
“இன்னுமா டாடிக்குக் கால் பண்ணி பேசல அம்ரு?”
அவனோ பரிதாபமாக விக்ரமை நோக்கினான்.
“டாடி ஃபேஸ் இதுல தெரியல அங்கிள்”
விக்ரம் டேபை வாங்கி கிருஷ்ணராஜசாகரின் எண்ணுக்கு அழைத்தான். முழு ரிங்கும் போய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று அழைத்தபோது வாரயிறுதியில் அம்ரித்தைக் காண வருவேன் என்றானே!
அம்ரித்தின் முகம் வாடுவதை விக்ரமால் சகிக்க முடியவில்லை.
“டாடிக்கு வேலை எதுவும் வந்திருக்கும் அம்ரு… முடிஞ்சதும் கால் பண்ணுவார்… நீ சாப்பிடு” என்று பான்கேக்கை நீட்ட அவனோ தட்டிவிட்டான்.
“டாடிய பாக்காம நான் சாப்பிடமாட்டேன்”

அவனது குரல் கீச்சிடவும் நித்திலாவின் கவனம் கலைந்தது. ஏன் அம்ரித் கத்துகிறான் என கிச்சனிலிருந்து வந்தவள் அவன் சாப்பிட அடம்பிடிப்பதைக் கண்டதும் திகைத்தாள்.
“அம்ரு என்னடா இது?”
அதட்டியபடியே வந்து சேர்ந்தவள் அவனது டாடி புராணத்தில் கொதிநிலைக்குப் போய்விட்டாள்.
கிருஷ்ணராஜசாகரின் மீது அளவில்லா வெறுப்பு பெருகியது. என் பிள்ளையின் மனதில் எப்படி இவ்வளவு எளிதில் இடம்பிடித்தான் என கறுவிக்கொண்டவள் எரிச்சலை மறைத்தபடி அம்ரித்தின் அருகே அமர்ந்தாள்.
“டாடி கிட்ட அப்புறமா பேசலாம்… நீ இப்ப குட்பாயா சாப்பிடு” என்று கொஞ்சல் மொழியில் பேசியவாறு இன்னொரு துண்டு பான்கேக்கை நீட்ட அதையும் தட்டிவிட்டான் அவன்.
“அம்ரு”
கோபத்தோடு கை ஓங்கிவிட்டாள் நித்திலா. அம்ரித் அன்னையின் கோபத்தைக் கண்டதும் அரண்டு நடுங்க சாவித்திரி அவளது ஓங்கிய கரத்தை இறக்கினார்.
“என்ன காரியம் பண்ண பாத்த? அவன் குழந்தை… அப்பிடி தான் பிடிவாதம் பிடிப்பான்.. அதுக்குக் கை ஓங்குவியா? எப்ப இருந்து இந்தப் புதுப்பழக்கத்தைக் கத்துக்கிட்ட நித்தி?” என்றார் கண்டிக்கும் தொனியில்.
நித்திலாவோ கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். எவ்வளவு கோபம் என்றால் இப்போது கிருஷ்ணராஜசாகர் மட்டும் எதிரில் இருந்தான் என்றால் அவனை இரண்டு கூறாக வெட்டிச் சாய்க்கும் அளவுக்குக் கோபம்.
“அந்தாள் என் பிள்ளைய மேனிபுளேட் பண்ணிட்டான்… சாப்பிடணும்னா கூட அவன் முகத்தைப் பாக்கணும்னு சொல்லுற அளவுக்கு என் பிள்ளைய மாத்திட்டான் ஆன்ட்டி… இத்தனை நாள் டாடிய பாத்து தான் சாப்பிட்டானா?”
கோபத்தில் அவள் வார்த்தைகளை அள்ளி வீச நல்லவேளையாக அந்நேரத்தில் கபேயில் வாடிக்கையாளர்கள் யாருமில்லை. கபே ஊழியர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல. எனவே நித்திலாவின் தவிப்பை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
அர்னவும் ரியாவும் அவளைச் சமாதானம் செய்ய முயன்றனர்.
“வோ பச்சா ஹே நித்தி… குஸ்ஸா மத் கரோ”
இருவரும் சமாதானம் செய்ய விக்ரமை ஒண்டி நின்ற அம்ரித்தோ “டாடிய பாக்கணும் அங்கிள்” என்று அழுகை கலந்த குரலில் கூற நித்திலாவுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டது அக்கணத்தில்.
மூன்றாண்டுகள் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட அம்ரித்தின் பாசத்தைக் கிருஷ்ணராஜசாகர் பங்கு கேட்டாலே பதபதைப்பவள் அவன் மொத்தமாக கொள்ளையிடுவதற்கான அடித்தளத்தைப் போட்டுவிட்டதை அறிந்தால் எப்படி நிம்மதியாக இருப்பாள்?
நினைக்க நினைக்க அம்ரித் பாலருந்திய நெஞ்சு எரிந்தது. அவனைத் தூக்கிச் சுமந்த தோள்கள் சோர்ந்தன. அவனைச் சுமந்த வயிறு வலித்தது.
வயிற்றெரிச்சலாக இருக்குமோ என அவள் யோசிக்கும்போதே அந்த வலி மெதுவாக கீழிறங்கி முழங்கால் மூட்டுகளில் நிற்க வேதனை தாளாமல் “அம்மா” என்று முனகியவாறு கால்கள் மடிய தரையில் அமர்ந்துவிட்டாள் நித்திலா.
சுரீர் சுரீர் என வலி மூட்டில் ஆரம்பித்து உச்சந்தலையைத் தாக்கியது. கண்கள் இருட்டிக்கொண்டு வர “விக்கி” என நண்பனை நோக்கி கை நீட்டினாள்.
“என்னாச்சு நித்தி?” ஓடிவந்தான் அவளது நண்பன்.
“கால் வலிக்குது”
வாய்விட்டு சொல்லி காலைப் பிடித்தபடி கண்ணீர் உகுத்தாள் நித்திலா.
அவ்வளவு நேரமாக பிடிவாதம் பிடித்த அம்ரித் அன்னையின் கண்ணீரைக் கண்டதும் தந்தையை மறந்தான்.
“நித்திம்மா” என்றபடி அவளருகே வந்தமர்ந்தான்.
அன்னை அழுவதை எந்தக் குழந்தையால் தான் பொறுத்துக்கொள்ள முடியும்? அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“ஹாஸ்பிட்டல் போகலாமா நித்தி?”
விக்ரம் தணிந்த குரலில் கேட்டான்.
“இது என்ன கேள்வி? நான் காரை கிளப்புறேன்”
சாவித்திரி வேகமாக வெளியேறினார்.
விக்ரம் நித்திலாவைக் கரங்களில் தூக்கிக்கொண்டான்.
வருவதாக அடம்பிடித்த அம்ரித்தை ரியாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் கிளம்பிச் சென்றான்.
அம்ரித் வலியோடு செல்லும் அன்னையைப் பரிதாபமாக பார்த்தபடி ரியாவோடு நின்றான்.
அப்போது அவனது டேபில் வீடியோ அழைப்பு வந்தது.
ரியா அதை கவனித்து “உன் டாடி கால் பண்ணுறார் பாரு” என அழைப்பை ஏற்று அவனிடம் நீட்ட அம்ரித்தின் முகம் மலர்ந்தது.
“டாடி”
ஆசையாக அழைத்தபடி ஆவலோடு திரையைப் பார்த்தவன் அங்கே கிருஷ்ணராஜசாகருக்குப் பதிலாக இப்ராஹிமின் முகம் வரவும் ஏமாந்துபோனான்.
“அங்கிள்”
என் அப்பா எங்கே என்ற கேள்வி அங்கிள் என்ற சொல்லில் புதைந்திருந்ததை இப்ராஹிம் கண்டுகொண்டான்.
“அம்ருவோட அப்பா வேலையில பிசியா இருக்காங்க… நெக்ஸ்ட் வீக் உன்னைப் பாக்க வருவாங்க, சரியா குட்டி?”
தந்தை வரப்போவதில்லை என அறிந்ததும் அம்ரித்தின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது. ரியா அவசரமாக அவனது கண்ணீரைத் துடைத்ததை இப்ராஹிம் பார்த்து மனம் நொந்தான்.
வேறென்ன செய்ய? சம்பளம் கொடுக்கும் முதலாளியின் பேச்சை மறுக்க முடியாதே!
குழந்தையிடம் பொய் சொல்லும் பாவத்தைச் செய்துவிட்டேன், அல்லா என்னை மன்னிப்பாயாக என மனதிற்குள் இறைவனிடம் மன்னிப்பு கேட்டான் இப்ராஹிம்.
“டாடி இப்ப எங்க? நான் பாக்கணும்” விசும்பியபடி கேட்டான் அம்ரித்.
“டாடி வேலையா இருக்காங்கம்மா… நீ மம்மிக்கு ஹெல்ப் பண்ணுவியாம்… அம்ரு குட்பாய் தான?”
எவ்வளவு முயன்றாலும் பேசும்போதே குரல் உள்ளே போய்விட்டது இப்ராஹிமுக்கு.
“நித்திம்மாக்குக் கால்வலி… ஹாஸ்பிட்டலுக்கு விக்கி அங்கிளும் சாவி பாட்டியும் கூட்டிட்டு போயிருக்காங்க”
அழுகையினூடே சொன்னான் அமிர்த்.
இப்ராஹிமுக்கு வேதனை. அம்ரித்தின் அருகே நின்ற ரியாவிடம் அவனைச் சமாதானம் செய்யும்படி வேண்டிக்கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.
“சார், நித்தி மேடம்…” என்றபடி நாற்காலியில் சாவகாசமாக சாய்ந்திருந்து இவ்வளவு நேரம் அம்ரித் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரிடம் நிலவரத்தைப் புரியவைக்க முயன்றவனின் பேச்சு பாதியில் நின்றது.
காரணம் கிருஷ்ணராஜசாகரின் முகத்தில் தோன்றிய புன்னகை.
மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவனைக்குச் சென்றிருப்பதை பிள்ளையின் அழுகுரல் வாயிலாக கேட்ட பிறகும் இவனால் எப்படி சிரிக்க முடிகிறது?
“சிம்லா ஹாஸ்பிட்டலுக்குக் கால் பண்ணு இப்ராஹிம்… பயாப்சி ரிப்போர்ட் நான் சொன்ன மாதிரி வரணும்”
“இது ரொம்ப குரூரமா தோணுது சார்… பாவம் அவங்க… அவங்களை விடுங்க, குழந்தை என்ன பாவம் பண்ணுனான்? அவன் கிட்ட ரெண்டு வார்த்தை பேசியிருக்கலாமே?
எப்போதும் நியாயத்தைப் பேசுபவன் இப்ராஹிம். சிலநேரங்களில் கொஞ்சமும் தயங்காமல் நியாயத்தைப் பேசுவதால் தான் கிருஷ்ணராஜசாகருக்கு அவனை பிடிக்கும்.
“பேசிருக்கலாம் தான்… அம்ரு கிட்ட பேசுனா என் மனசு நிலையா இருக்காது… இப்பவே ஃப்ளைட் கிடைச்சா சிம்லாக்கு ஓடி அவனை கட்டியணைச்சிக்கனு ஆர்டர் போடும்… அப்பிடி போனாலும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நைட் அவன் என் கூட இருப்பான்… அப்புறம் அவன் அங்க நான் இங்கனு தான் வாழணும்… என்னோட சின்ன சின்ன எமோசன்சை நான் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா தான் அவன் என் கூட நிரந்தரமா இருப்பான் இப்ராஹிம்”
“நித்திலா மேடம்…”
“ஐ டோண்ட் கிவ் அ டாம் அபவுட் ஹெர்”
இரக்கமின்றி சொல்லிவிட்டு கணினிக்குள் முகம் புதைத்தான் கிருஷ்ணராஜசாகர். இப்ராஹிம் பெருமூச்சோடு சிம்லாவில் இருக்கும் கெட்வெல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

