கபூர் பேலஸ்…
சுமித்ரா கூரிய விழிகளால் பேரன்களை இமைக்காமல் நோக்கிக் கொடிண்டிருக்க நால்வருக்கும் இளம்வயதைப் போலவே இப்போதும் அவரிடம் மரியாதை கலந்த பயமே. பிரியாவும் ராதிகாவும் அமைதியாக அமர்ந்திருக்க, வீணா நமட்டுச்சிரிப்புடன் அனைவரின் முகத்தையும் பார்த்த வண்ணம் இருந்தார்.
பிந்துவும் நேகாவும் அப்போது தான் வீடு திரும்பியவர்கள் என்ன இந்த நேரத்தில் வட்டமேஜை மாநாடு கூடியிருக்கிறது என்று எண்ணியபடி “தாதி! ஏன் எல்லாரும் ஹால்ல இப்பிடி கூடியிருக்கிங்க?” என்று ஒரே குரலில் கேட்க
“எல்லாம் உங்க அண்ணனுங்களோட கல்யாண விஷயமா தான்” என்றார் சுமித்ரா ராகவையும் வருணையும் விசாரிக்கும் பார்வை பார்த்தபடி.
இதில் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எண்ணியபடி நேகாவும் பிந்துவும் சுமித்ராவைக் குழப்பத்துடன் நோக்கவும்
“ஒருத்தன் திடீர்னு ஒரு மதராசிப்பொண்ணைக் காதலிக்கிறேன், அவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொன்னான்… சரி அவன் ஆசைப்படுறானேனு எனக்குக் கொஞ்சம் கூட அவளைப் பிடிக்கலைனாலும் இவனுக்காக அவங்க வீட்டுல போய் பேசுனோம்… அந்தக் கடவுள் புண்ணியத்துல அந்தப் பொண்ணோட குடும்பம் நல்ல மாதிரியானவங்களா இருந்தாங்க… அதனால சரினு விட்டுட்டேன்… இப்போ இன்னொருத்தன் ஒரு ராஜஸ்தானி பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிப்பேனு அடம்பிடிக்கிறான்..
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இவங்க யாருக்கும் நம்ம கலாச்சாரம், பாரம்பரியம் மேல அக்கறையே இல்லை… ஏன் நம்மவங்கள்ல பொண்ணே இல்லையா? ஏன் சம்மந்தமில்லாதவங்களைக் காதலிக்கிறேனு சொல்லிக் குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ணுறாங்கனு விசாரிச்சிக்கிட்டிருக்கேன்” என்றார் என்னவென்று காட்டிக்கொள்ளாத உணர்ச்சியுடன்.
நம் வீடுகளில் இப்படி நிகழ்வது வழக்கம் தான். நமது கட்டுப்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இதையெல்லாம் தாண்டி ஒருவரை வாழ்க்கைத்துணைவராக நாம் ஏற்றுக்கொண்டாலும் பெரியவர்களால் அந்தக் கட்டுப்பாடுகளைத் தாண்டி அவ்வளவு எளிதில் சிந்திக்க இயலாது. இதையும் தாண்டி அவர்கள் ஒத்துக்கொள்வர், நமது மகிழ்ச்சிக்காக மட்டுமே தானே தவிர அவர்களால் அந்தப் புதிய உறவைச் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாது.
சுமித்ராவும் அப்படியே! பெங்களூரு அவரது கணவரின் காலத்தில் வியாபாரம் செய்யவென்று அவர்கள் கால் பதித்த இடம். ஆனால் அதற்காகத் தங்கள் பாரம்பரியத்தையோ, கலாச்சாரத்தையோ எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை அவர். அவரது உறவினர்களில் இருந்தே இரண்டு மருமகள்களையும் தேர்வு செய்திருந்தவருக்கு மூன்றாவது மகனின் காதல் திருமணமே சற்று ஏமாற்றம் தான்.
அப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அவர். ஆனால் இன்று நான்கு பேரன்களில் இருவர் தங்கள் கலாச்சாரத்துக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத இருவரை வீட்டின் மருமகளாக்கும் எண்ணத்துடன் இருப்பதை அவரால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ராகவுக்காக என்று யோசித்து தான் அவந்திகாவின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்றார்.
அவந்திகாவின் மீது அவருக்குச் சொல்லிக் கொள்ளுமளவுக்குப் பிடித்தம் இல்லை என்றாலும் கௌசல்யாவின் இன்முகம் அவர் மனதை ஈர்த்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். எனவே தான் பேரனுடைய பேச்சுக்கு அவர் ஆடிக்கொண்டிருந்தார். மூன்று மகன்களும் இந்தியா திரும்பியதும் ராகவின் நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கையில் மூத்தப்பேரன் தானும் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டு வரவும் அவருக்கு ஐயோவென்று இருந்தது.
“தாதி! ரதி ரொம்ப நல்லப்பொண்ணு… நீங்க பார்த்திங்கனா ஃப்ளாட் ஆயிடுவிங்க” என்று வருண் அவரைத் தாஜா செய்து ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்துவிட்டான் என்று தான் சொல்லவேண்டும்.
இப்போது அப்பாவியாய் நின்று கொண்டிருந்த கிஷோரையும் அமரையும் பார்த்தவர் “நீங்களும் யாரையும் காதலிச்சா சொல்லிருங்கடா… ஒரே நேரத்துல நாலு கல்யாணத்தையும் முடிச்சிடுவோம்” என்ற கேலிப்பேச்சுடன் வருணின் காதலுக்குத் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டார்.
மகன்கள் மூவரும் இந்தியா திரும்பியதும் முறைப்படி பிரதியுஷாவின் வீட்டில் சென்று பேசிவிடலாம் என்றவர் முதலில் வருணின் திருமணம் முடியட்டும் என்று சொல்லிவிட்டார். அதற்கு ராகவ் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.
அவனைப் பொறுத்தவரைக்கும் இரண்டு பிரச்சனைகளுக்கு அவன் தீர்வு கண்டுவிட்டான். இனி அவனுக்கு அவந்திகாவின் நிச்சயம் தன்னால் தான் நின்று போனது என்ற குற்றவுணர்ச்சியும் இல்லை, வருணின் எதிர்காலம் என்னாகுமென்ற வேதனையும் இல்லை.
அவன் அதை எண்ணி மகிழ, வருண் சுமித்ராவின் சம்மதத்தை பிரதியுஷாவிடம் தெரிவித்துவிட்டான். பிரதியுஷா இந்த மகிழ்ச்சியான விஷயத்தைத் தன் தோழிகளிடம் தெரிவித்துவிட்டு வீட்டினரிடமும் தன் காதல் விவகாரத்தைச் சொல்லிவிடவே முதலில் அவளது சகோதரன் ரன்வீருக்கு இதில் திருப்தியில்லை.
அவன் பக்கத்தில் இருந்து சலசலப்பு அடங்கும் வரை பிரதியுஷாவுக்கு திக்திக்கென்று இருந்தது. ஆனால் அவனும் வருணைப் பற்றி விசாரித்தவகையில் யாருமே வருணைப் பற்றியோ அவனது குடும்பத்தைப் பற்றியோ தவறாக எதுவும் சொல்லாத நிலையில் தங்கையின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டான். இன்னும் பிரதியுஷாவின் பாட்டி கல்யாணிதேவிக்கு மட்டும் தான் தெரிவிக்க வேண்டும். அவரும் இளையவர்கள் விஷயங்களில் எல்லாம் தலையிடுபவர் இல்லை. எனவே பிரதியுஷா கொஞ்சம் நிம்மதியுற்றாள்.
அதை தோழியரின் குடும்பத்திடம் பகிர்ந்துகொண்டபோது இரு குடும்பத்தினருக்குமே இது மகிழ்ச்சியான தகவலாகவே இருந்தது. இரு பெண்களும் ஒரே குடும்பத்தில் வாழ ஆரம்பித்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து கொள்வரே என்ற நிம்மதி அவர்களுக்கு.
ஆனால் பிரதியுஷாவால் முழுவதும் நிம்மதியாக இருக்க முடியாதவகையில் ராகவ் மற்றும் அவந்திகாவின் செய்கைகள் அவளைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தின.
ராகவின் அலுவலகத்துக்குச் சென்று அவனைச் சந்திக்காமல் திரும்பிய தினத்திலிருந்து ராகவின் அழைப்புகள் எதையும் அவந்திகா ஏற்கவில்லை. அவனுக்குமே அவந்திகாவைத் தவிர முக்கியமான எவ்வளவோ விஷயங்கள் இருக்கவே எங்கே போய் விடப்போகிறாள் என்று அசட்டையாக இருந்துவிட்டான்.
அதே நேரம் வருணின் காதல் மீண்டும் இணைந்த மகிழ்ச்சியான தகவல் வேறு கிடைத்துவிடவே தனது திட்டம் வெற்றி பெற்றுவிட்ட பூரிப்புடன் சுற்றியவனுக்கு அவந்திகா என்ற ஒருத்தியை மறந்து போனதில் ஆச்சரியம் ஏதுமில்லையே. ஆனால் அவனே அவளைத் தேடிச் செல்லும் நாளும் வருமென்று அவன் அப்போது அறியவில்லை.
சுமித்ராவின் மூன்று மகன்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பவும் இரு குடும்பத்தினரும் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தனர் எனலாம். ஆனால் கௌசல்யா அவந்திகாவிடம் எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை. பின்னே என்னவாம்! அவள் வயதுப்பெண்ணுக்குத் திருமணம் என்றால் இருக்கும் இனிமையான மனநிலை எதுவுமின்றி எப்போதும் போல அழுக்கு ஜீன்சும், தொளதொள டிசர்ட்டுமாக இஞ்சி தின்ற குரங்கு போல சுற்றி வந்தவளிடம் எதையும் சொல்லும் எண்ணமும் அவருக்கில்லை.
போதாக்குறைக்கு பிரதியுஷாவும் அவளுக்கு அறிவுரை சொல்லி வெறுத்துப் போய்விட்டாள். இப்போதெல்லாம் ரித்திமா கூட அவந்திகாவுக்கு ஆதரவாகப் பேசவே இருவரிடமும் நடக்கும் எதையும் தெரியப்படுத்தவில்லை.
இவ்வாறிருக்க மொத்த கபூர் குடும்பமும் பிரதியுஷாவின் வீட்டுக்கு வருகை தருவதாகக் கூறவும் அவந்திகாவுக்கு அன்றைக்குப் பார்த்து வெளிவேலை வந்துவிட்டது. அவளைக் கடிந்து கொண்ட கௌசல்யாவை பிரதியுஷா தான் அமைதிப்படுத்தினாள்.
“விடுங்க கௌசிக்கா… அவ இருந்தாலும் முகத்தைத் தூக்கிவைச்சிட்டே இருப்பா.. அவளுக்கு அப்புறமா சொல்லிக்கலாம்” என்று சொன்னவள் கையோடு ரித்திமாவையும் சேர்த்து அவந்திகாவுடன் அனுப்பிவிட்டாள்.
இருவரும் சென்றதும் ராகவின் குடும்பத்தினர் பிரதியுஷாவின் இல்லத்துக்கு வந்து திருமணப்பேச்சுவார்த்தைகளை பேசிமுடித்தனர். இரண்டு திருமணங்களும் ஒரே நேரத்தில் வைப்பது நல்லதல்ல என்றும், அவந்திகாவின் ஜாதக்கப்படி அவளுக்கு இன்னும் ஆறுமாதங்கள் கழித்து தான் திருமணம் செய்யவேண்டும் என்று இருப்பதால் முதலில் வருண் பிரதியுஷாவின் திருமணமே நடபெறட்டும் என்று பேசிமுடித்தவர்கள் நிச்சயதார்த்தத்துக்கும் நாள் குறித்துவிட்டுச் சென்றனர்.
மாலையில் வீடு திரும்பிய ரித்திமாவும் அவந்திகாவும் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை தத்தம் குடும்பத்தினரிடம்.
அவந்திகாவும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் பிரதியுஷா தோழியரிடம் அனைத்தையும் கூறிவிட்டாள். அனைத்தையும் முழுவதுமாகக் கேட்ட அவந்திகாவும் ரித்திமாவும் இரு விஷயங்களை எண்ணி மகிழ்ந்தனர்.
ஒன்று பிரதியுஷாவுக்கு அவள் விரும்பியவனுடன் திருமணம் நடக்கப் போகிறது. இரண்டாவதாக இப்போதைக்கு அவந்திகாவுக்கு அவள் விரும்பாதவனுடன் திருமணம் நடைபெறப் போவதில்லை. நினைத்தாலே மனதில் சந்தோச சாரல் தூவ பிரதியுஷாவை வாழ்த்தினர் இருவரும்.
அவந்திகாவுக்கும் ராகவைத் தான் ஆகாதே தவிர, வருண் என்றுமே அவளைப் பொறுத்தவரை ஒரு நல்ல காதலன் தான். பிரதியுஷாவைப் பிரிந்திருக்கையில் கூட அவளைப் பற்றிப் பேசி, சிந்தித்தே உயிர்வாழ்ந்தவன் அவன். அது ஒன்றே அவன் மீதான அவந்திகாவின் மரியாதையை அதிகரித்தது எனலாம்.
அவந்திகாவின் எண்ணம் முழுவதும் பிரதியுஷாவின் காதல் கைகூடியதிலேயே மூழ்கியிருக்க ‘என் வாழ்விலும் இப்படி ஒருவன் வருவான்; எனக்காகவே பிறந்து, என்னையே உயிராக நேசித்து, எனக்காகவே வாழப்போகிற ஒருவன் எங்கிருக்கிறானோ?’ என்று எண்ணிபடி இரவில் உறக்கத்தில் ஆழ்ந்தாள் அவள்.
அதன் பின்னர் அவளது பொழுதுகள் யாவும் பிரதியுஷாவை ரித்திமாவுடன் சேர்ந்து கேலி செய்வதிலும் வருண் அவளைச் சந்திக்க வருகையில் இருவரையும் கிண்டல் செய்வதிலும் சிறப்பாகக் கழிந்தது. இவ்வாறிருக்கையில் வருணின் இல்லத்தில் ஏதோ விசேஷம் என்று அன்று காலையில் எழும்போதே கௌசல்யா அவந்திகாவிடம் சொல்ல
“சித்தி இன்னைக்கு ஃபங்சன்னு நீங்க இப்போ சொன்னா என்ன அர்த்தம்? எனக்கு இன்னைக்கு ஒர்க் இருக்கு” என்று அவள் மறுத்துவிட்டாள்.
“வந்து உன் தலையைக் காட்டிட்டுப் போயிடு அவந்திகா… இது உஷாவோட கல்யாணத்துக்காக நடக்கிற முக்கியமான பூஜை… நீயில்லைனா நல்லா இருக்காது”
“இம்பாஸிபிள் சித்தி! ஐ ஹேவ் லாட் ஆஃப் ஒர்க்ஸ் டுடே… உஷா லோன்லியா ஃபீல் பண்ணுனா ரித்தியை அவ கூட கூட்டிட்டுப் போங்க… நாளைக்கு ஒரு பர்த்டே ஈவெண்ட் இருக்கு.. இன்னைக்கு பர்த்டே பேபியோட வீட்டுக்குப் போய் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணனும்.. நான் வர முடியாது” என்று ஸ்டைலாகத் தோளைக் குலுக்கிவிட்டுக் குளியலறையை நோக்கிச் செல்பவளை என்ன தான் செய்வது என்று கௌசல்யாவுக்குப் புரியவில்லை.
நான்கு வயது சிறுமி என்றால் பிரம்பு வைத்து மிரட்டலாம்; இருபத்து நான்கு வயது பெண்ணை அப்படி செய்ய முடியாதல்லவா!
பிரதியுஷா கௌசல்யாவுக்கு அழைத்தவர் அவரிடம் ஒரு ஐடியாவைச் சொல்லவே “இது சரிபடுமா உஷா? இந்தப் பொண்ணால நான் என்னென்ன தகிடுதத்தம்லாம் பண்ணவேண்டியதா இருக்கு பாரு” என்று சலித்துக் கொண்டபடி அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.
வீட்டினர் அனைவரும் பிரதியுஷா மற்றும் ரித்திமா குடும்பத்துடன் வருண் வீட்டுக்குச் சென்றபிறகு சாவகாசமாக அவந்திகா சன் டியூ அலுவலகத்துக்குச் சென்றாள். அவள் சொன்னதைப் போல பெரிதாக ஒரு வேலையும் அவளுக்கு இல்லை.
ஆனால் கபூர் பேலஸிற்குச் செல்ல அவளுக்குப் பிடிக்காததால் வயிற்றுவலி என்று பொய் சொல்லி வகுப்புக்குச் செல்லாமல் இருக்கும் சிறுமியைப் போல வேலை இருக்கிறது என்ற ஒரு பொய்யை வைத்தே வருண் குடும்பத்தினரைச் சந்திக்கும் தருணங்களைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
சன் டியூ அலுவலகத்துக்குள் வந்ததும் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. சிறியதோ பெரியதோ இது அவர்களின் அலுவலகம். அவர்களின் கனவுகளை நிஜமாக்கிய இடம். இந்த இடம் கொடுக்கும் நிம்மதியே இப்போதைக்குத் தனக்குப் போதும் என்று எண்ணியவளாய் மொபைலை எடுத்தவள் ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு அவளது வேலையை ஆரம்பித்தாள்.
கிளையண்டிடம் பேசிவிட்டு வெட்டியாகப் பொழுதைப் போக்கவிரும்பாமல் யூடியூபுக்குள் நுழைந்தவள் பாடல்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நீ எங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக என்னைத் தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் ஏன் கடலில் சேர்கிறாய்
பாடலின் இடையில் யாரோ பின்னே நிற்பது போல அவளது உள்ளுணர்வு எச்சரிக்கவும் திரும்பியவள் அவள் பின்னே நின்றவனைக் கண்டு மெய்யாகவே ஆச்சரியப்பட்டுப் போனாள்.
“நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்க? உங்க வீட்டுல ஏதோ ஃபங்சன்னு கேள்விப்பட்டேன்” என்று அலட்சியமாகக் கேட்டவளை அவளுகுச் சற்றும் குறையாத அலட்சியத்துடன் எதிர்கொண்டான் ராகவ்.
“அதே தான் நானும் கேக்கிறேன்… அங்கே ஃபங்சன் நடக்கிறப்போ மேடம் இங்கே என்ன வெட்டி முறிக்கிறிங்க?” என்று கேலிவிரவியக் கடினமான குரலில் கேட்டவனை வெட்டுவது போல் முறைத்த அவந்திகா இதற்கு மேல் அவனுடன் பேச விரும்பவில்லை என்பது போல மீண்டும் காதில் ஹெட்போனை மாட்டவும் ராகவ் எரிச்சலுடன் மொபைலையும் ஹெட்போனையும் பிடுங்கியவன்
“இனாஃப்… நீ யாரோட பேச்சையும் கேக்க மாட்டேனு சபதம் போட்டிருக்கியா? ஒழுங்கா நீ இப்போ என்னோட கிளம்பி வர்ற… இல்லைனா…” என்றவனை இடைமறித்தவள்
“இல்லைனா என்னடா பண்ணுவ? நீ வந்து ஒரு பத்து நிமிசம் இருக்குமா? பத்து நிமிசம் வெயிட் பண்ணுனதுக்காக நீ வந்து கூப்பிட்டதும் நான் உன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி ஓடிவரணுமா? அன்னைக்கு உன் ஆபிஸ்ல த்ரீ ஹவர்ஸுக்கு மேல வெயிட் பண்ணுனோமே… அப்போ நீ வந்தியா? ஏன் இந்த உலகத்துலயே நீ மட்டும் தான் பிஸியான பிஸினஸ் மேனோ? நாங்களும் பிஸி தான்… சோ உன் கூடல்லாம் வர முடியாது… நீ எந்த வழியா வந்தியோ அந்த வழியாவே திரும்பிப் போயிடு… போறப்போ மறக்காம கதவைச் சாத்திட்டுப் போ! தேவையில்லாதவங்க வந்து என்னை தொந்தரவு பண்ணுறாங்க” என்று கொட்டித் தீர்த்துவிட்டு அவன் கையிலிருக்கும் தனது மொபைலையும் ஹெட்போனையும் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.
“கெட் அவுட்” என்று சொல்லிவிட்டு மீண்டும் நாற்காலியின் கைப்பிடியில் காலைப் போட்டு அமர்ந்தவள் ராகவ் என்ற ஒருவன் அங்கே இல்லை என்பது போல பாடலைக் கேட்க ஆரம்பித்தாள்.
தன்னை அன்று அவன் அலட்சியப்படுத்தியதை அவ்வளவு எளிதாக அவளால் மறக்க இயலாது. அவன் அளவுக்கு இல்லையென்றாலும் இந்தப் பதிலடி அவனுக்குக் கட்டாயம் தான் எப்படிப்பட்டவள் என்பதைப் புரியவைத்திருக்கும் என்று எண்ணியபடி அவள் பாடல்வரிகளில் கவனமானாள்.
ராகவ் அவளது செய்கையில் திகைப்புற்றவன் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் அவளைப் பார்க்க அவந்திகாவோ அவளது ஆதர்ச கதாநாயகனின் பாடலைக் கண்ணாற ரசித்துக் கொண்டிருந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


