“பச்சை மையால் கையெழுத்திடும் என் இலக்கை நோக்கிய பயணத்தில், உன் நெஞ்சில் நான் வரைந்த காயங்களின் ஆழத்தை நான் மறந்துவிட்டேன். தனிமையின் வலியை என் வெற்றியால் நிரப்பிவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் உன் ஸ்பரிசத்தின் சிறு துளிக்கு முன்னால் என் வெற்றிகள் வெறும் காகிதங்களே!”
–நியதி
“பொண்ணோட நாத்தனார் எங்க? இங்க வாம்மா! நீதான் அவ கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போகணும்”
உறவுக்காரர்களில் மூத்த பெண்மணி ஒருவர் சொல்லவும் அலைபாய்ந்துகொண்டிருந்த கண்களை அடக்கியவளாய் பெண்கள் கூட்டத்துக்குள் நுழைந்தாள் நியதி.
மறுநாள் காலையில் முகூர்த்தம். பெண்ணை அழைத்துப் போய் மண்டபத்தில் தங்கவைக்க மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வருகை தந்திருந்தார்கள்.
பெண்ணுக்கு நலங்கு வைத்து ஆசீர்வதித்த பிற்பாடு மாப்பிள்ளை வீட்டார் கொண்டுவந்த புடவையை அணிவித்திருந்தார்கள். தனது மாமியாரின் தேர்வான ரோஜாவில் பார்டர் வைத்த மஞ்சள் வண்ணப் பட்டில் பேரழகியாய் மிளிர்ந்தாள் நிலா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளருகே நின்ற ஒன்றுவிட்ட சகோதரி “என்னடி உன் நாத்தனார் கண்ணு வீட்டுக்கு வந்ததுல இருந்து நம்ம நிலவன் பின்னாடியே போகுது. பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குற ஐடியாவா?” என்று கேட்க
“ஷ்ஷ்! அது சின்னப்பொண்ணு! படிக்க வேற செய்யுறா. இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்?” என மெதுவாக அவளது வாயை அடக்கினாள் நிலா.
“ஹூம்! பொண்ணை வெளிய குடுத்தா சொத்தும் சேர்ந்து போகுமேனு சொன்னேன். எனக்கென்ன வந்துச்சு?” என அவள் சலித்துக்கொண்டபோதுதான் நிலாவின் மூளையில் மின்னல் வெட்டியது.
‘ஆமால்ல! சும்மாவே இந்த நியதிக்குப் படிப்புச் செலவு அதிகம். இதுல இவளுக்கு அசல்ல மாப்பிள்ளை பாத்தா அவன் என்ன கேப்பானோ? அதெல்லாம் செஞ்சு இவ படிப்புக்கும் அழுவணும்னா என் புருஷனுக்கு என்ன மிஞ்சும்? யோசி நிலா! இவளுக்கு நிலவன் மேல ஆசை இருந்தா நல்லதுதானே? நிலவனுக்கும் வசதியான வீட்டுல பொண்ணெடுத்த மாதிரி இருக்கும். அவனோட தொழிலுக்கு பிரகாஷை உதவச் சொல்லலாம். சொத்தும் நம்ம வீட்டுக்குள்ளவே இருக்கும்’
இப்படிப் பலவிதமான கணக்கீடுகளுடன் புடவையைக் கட்டிக்கொண்டவள் இப்போது கண்களில் மலர்ச்சியோடு தன்னருகே வந்த நாத்தனாரைப் பார்த்து உளமாறச் சிரித்தாள்.
“யாரைத் தேடுற நீ?”
“உங்க ட்வின் பிரதரைத்தான் மதினி. ஆளையே காணலையே”
எந்தத் தயக்கமும் இல்லாமல் உடைத்துப் பேசியவள் நிலாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
“நிலவனுக்கு அம்மா வேலை குடுத்திருக்காங்க நியதி. பலகாரப் பந்திக்குத் தேவையான எல்லா பலகாரமும் ஃப்ரெஷ்ஷா வாங்கணும்னு கடையில ஆர்டர் குடுக்க அனுப்பிருக்காங்க” என்றாள் அவள்.
“ஓஹ்! ப்ச்! நான் நிலனைப் பாக்கலாம்னு ஆசையா வந்தேன் மதினி”
மனதிலிருப்பதை அப்படியே கொட்டியவளின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் நிலா போட்டுவைத்த கணக்குகளுக்கு வலுசேர்க்க இனி அவளிடம் மகிழ்ச்சிக்கு என்ன குறை!
மணப்பெண்ணுக்காக பிரகாஷ் ஆசையாக அனுப்பிவைத்த காரில் கம்பீரமாய்த் தனது நாத்தனாருடன் ஏறியமர்ந்தாள். தனது மொபைலை நாத்தனாரிடம் கொடுத்தவள் “இந்தா! நீயே போன் பண்ணி நிலவனை சீக்கிரமா மண்டபத்துக்கு வரச் சொல்லு” என்றாள்.
அவள் மனதிலுள்ள கணக்குகளை அறியாத நியதியோ ஆர்வமாய் மொபைலை வாங்கி நிலவனின் எண்ணுக்கு அழைத்தாள்.
“சொல்லு நிலா! நீ இன்னும் கிளம்பல?” என மறுமுனையில் அவன் கேட்டதும் உற்சாகமானது அவளுக்கு.
“நான் நியதி பேசுறேன்” என்று அதே உற்சாகம் கொப்புளிக்கும் குரலில் அவள் சொல்லவும் மறுமுனையில் நிலவன் திகைத்துப்போனான்.
‘இந்தப் பெண்ணிடம் எப்படி நிலாவின் மொபைல் போனது?’
“நாங்க பொண்ணழைப்புக்கு வந்திருக்கோம் நிலன். வந்ததும் உங்களைத் தேடுனேன். காணலனதும் மதினிகிட்ட கேட்டேன்”
“என்ன? நீ நிலாகிட்ட போனை குடு” அவசரமாகச் சொன்னான் நிலவன்.
மொபைலும் நிலாவின் கைக்கு மாறியது. அவள் நமட்டுச் சிரிப்போடு காதில் வைத்தாள்.
“நீ எப்ப வர்ற நிலவா? நியதி உன்னைக் காணலனு புலம்புறா”
“ப்ச்! நிலா கவனமா பேசு. ஆளுங்க காதுல விழுந்தா என்ன நினைப்பாங்க?” என அதட்டினான் அவன்.
“அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டாங்க. நான் என்ன பொய்யா சொல்லுறேன்?” என்றவள் “ஏன் நியதி நீ வந்ததும் நிலவனைத் தேடுனல்ல?” என நாத்தனாரைச் சாட்சிக்கு அழைக்க “ஆமா!” என்று அவள் ஆர்வமாய்ப் பதிலளிக்க அனைத்தும் நிலவனின் செவிகளில் விழுந்தது.
“நான் இப்ப வந்துடுவேன். நீங்க பத்திரமா கிளம்புங்க” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்த நிலவனுக்குப் பலகாரம் ஆர்டர் கொடுக்க வந்த இடத்திலேயே திகைப்பில் மூச்சு வாங்கியது.
‘நியதிதான் சின்னப்பொண்ணு. நிலாவுக்கு என்ன ஆச்சு?’ எனச் சிடுசிடுத்தது அவனது மனம்.
அவனுக்கும் நியதியைப் பார்த்ததும் மனம் சலனமுற்றதுதான். ஆனால் இந்த வயதில் பெண்ணைப் பார்த்தால் ஆணின் மனம் சலனமடைவது இயல்பு என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டானே! ஆனால் நியதி துடுக்கான பெண்ணாக இருக்கிறாள். யாரிடம் என்ன பேசுவதெனத் தெரியவில்லை. இதுவே நிலாவின் இடத்தில் வேறொருத்தி இருந்திருந்தால் நாத்தனாருக்குக் கூச்சமே இல்லையென எண்ணியிருப்பாள்.
ஆயிரம் விதங்களில் யோசித்தாலும் கடைசியில் நிலவனின் நெஞ்சோரத்தில் நியதி தன்னைத் தேடியதாகச் சொன்னது தித்திப்பைக் கொடுத்தது என்பதுதான் உண்மை.
பலகாரங்களை எத்தனை மணிக்கு மண்டபத்துக்கு எடுத்துவர வேண்டுமெனச் சொல்லிவிட்டு அவனும் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானான். மணப்பெண்ணின் சகோதரனுக்குத் திருமணத்தில் ஆயிரம் வேலைகள் இருக்குமே!
பெண்ணழைப்பு முடிந்த பிறகு வீட்டிலிருந்து மண்டபத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு வசந்தாவும் வைத்தியநாதனும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
நிலவன் வீட்டிற்கு வந்து குளித்து உடைமாற்றி மண்டபத்துக்குச் செல்லத் தயாரானான்.
அவன் உடைமாற்றி வீட்டின் கதவைப் பூட்டுகையில் அவனது மொபைல் இசைத்தது. யாரென்று எடுத்துப் பார்த்தால் புதிய எண்ணாக இருந்தது. முதல் அழைப்பை அலட்சியப்படுத்தியவன் இரண்டாம் முறை வரவும் ஏற்றான்.
“நான் நியதி பேசுறேன்” மீண்டும் ஆர்வமாய் வந்தது குயிலோசையாய் ஒரு குரல்.
நிலவன் என்ன ஏதென விசாரித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாய் “என் நம்பர் எப்பிடி கிடைச்சுது உனக்கு? எதுக்குக் கால் பண்ணுன நீ? யாருக்கும் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?” எனச் சிடுசிடுவென எரிந்து விழவும் மறுமுனை அமைதியானது.
“ஹலோ! லைன்ல இருக்குறியா?” என மீண்டும் அவன் காய
“மதினியோட ரெயின் ட்ராப் வளையல் செட் அவங்க ரூம் கப்போர்ட்ல மூணாவது அடுக்குல இருக்குதாம். அதைப் பாக்ஸோட எடுத்துட்டு வருவீங்களாம். அதுக்குத்தான் கால் பண்ணுனேன்” என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலச் சொன்னவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ஒரு மாதிரியாகிவிட்டது நிலவனுக்கு.
“ப்ச்! கொஞ்சம் அதிகமா கத்திட்டேன் போலையே”
நிலாவின் அறையிலிருந்து வளையல் வைத்திருக்கும் டப்பாவை எடுத்துக்கொண்டு ஆலங்குளத்தில் இருக்கும் மண்டபத்துக்குத் தனது பைக்கில் கிளம்பினான் நிலவன்.
மண்டபத்தை அடைந்ததும் மனம் குறுகுறுத்தது.
“ஏன் தம்பி இவ்ளோ லேட்டாவா வருவீங்க?” என்று ஆதுரமாக வரவேற்ற பூபேந்திரன் வருங்கால மருமகளின் அறை இருக்குமிடத்துக்குக் கொண்டுபோய்விட்டார் அவனை.
கதவைத் தட்டினான் நிலவன். கதவு திறந்து உதயமான முகத்துக்குச் சொந்தக்காரி அவனைக் கண்டதும் சட்டெனத் திரும்பி உள்ளே போய்விட அவனது ஒன்றுவிட்ட சகோதரி வளையல் டப்பாவை வாங்கிக்கொண்டாள்.
நிலவனின் பார்வை மனத்தாங்கலோடு அந்த அறையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நியதியிடம் படிந்தது.
‘இப்போதே சாரி சொல்லிவிடலாமா? இப்போது சொன்னால் இந்த அறையில் இருக்கும் உறவுக்காரப் பெண்கள் என்ன ஏதென்று விசாரிப்பார்களே!’
யோசனையோடு அங்கிருந்து நகர்ந்தான் நிலவன். இன்னும் சிறிது நேரத்தில் பெண் மாப்பிள்ளைக்கு நலங்கு வைத்துச் சிறிய நிச்சயதார்த்தம் போல ஒரு நிகழ்வு நடந்தேறும். அதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பிரகாஷ் தனது அறைக்கு வரவழைத்துக்கொண்டான் நிலவனை.
தனது நண்பர்களிடம் அவனைப் பெருமிதமாக அறிமுகம் செய்தும் வைத்தான். அதன்பின்னர் இளைஞர்களின் பேச்சில் இலகுவாக நேரம் கழிய சரியாய் நிச்சயதார்த்த நிகழ்வின்போது மீண்டும் நியதியும் நிலவனும் கண்களால் மோதிக்கொண்டார்கள்.
அடர்ப்பச்சையும் வயலட் வண்ணமும் கலந்த காஞ்சிபுரம் பட்டுத் தாவணியில் அளவான ஆபரணங்களுடன் கண்கள் நிறைய ஆதங்கத்தோடு நின்றவளை அப்படியே விட்டுவிட மனமில்லை நிலவனுக்கு.
“நியதி!”
அவன் அழைத்ததும் பார்வையில் கடுமை குறைந்தது.
“ம்ம்”
“கொஞ்சம் அப்பிடி வாங்க. பேசணும்”
“வாங்க” ‘ங்க’வில் அழுத்தம் கொடுத்து அவள் கேட்டதும்
“வா! போதுமா?” என்று சிறு குழந்தையைச் சமாதானம் செய்வது போலத் தனியே அழைத்துப் போனான் நிலவன்.
அது ஒன்றும் ஆள்வரத்தில்லாத இடமில்லை. மண்டபத்தின் பக்கவாட்டு காரிடார். வெளியே மரங்களில் தொங்கிய ஃபேரி லைட் சரங்களைப் பார்த்தபடி நின்றவளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பதென அவனுக்குத் தெரியவில்லை.
தொண்டையைச் செருமிவிட்டு “அது.. நான் அப்ப கொஞ்சம் வேலையா இருந்தேன். அதான்…” எனச் சமாளிக்கப் பார்க்க
“என்னைப் பாத்தா ஆம்பளைகிட்ட வழியுறவ மாதிரி தெரியுதா உங்களுக்கு?” என நேரடியாகவே வினவினாள் நியதி.
நிலவனோ அதிர்ந்துபோனான்.
“சீ! நான் அப்பிடியெல்லாம் யோசிக்கல நியதி.” என வேகமாய் மறுத்தான். பார்த்த முதல் நாளிலிருந்து அவனது மனம் ஒரு கணமும் மறக்க விரும்பாத தேவதைப் பெண் அவள்.
அவளைப் பற்றி அவன் தவறாக எண்ணுவானா? ஆனால் அவனுக்குக் கவலை இருந்தது, அவர்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றி. இந்தச் சமுதாயத்தைப் பற்றி!
“அப்பிடி யோசிக்கலனா நான் போன் பண்ணுனதும் நீங்க கத்தியிருக்கக் கூடாது. எனக்கு உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. இதுல என்ன தப்பிருக்கு? நீங்க யாரோ ஒருத்தர் இல்ல. நாம இப்ப ரிலேட்டிவ். இன்னொண்ணும் சொல்லிக்கிறேன் நிலன். பார்வையில நேர்மை இல்லாத ஆம்பளைகிட்ட எந்தப் பொண்ணும் வலியப் போய் பேசமாட்டா. எனக்கு உங்களைப் பத்தி நல்ல ஒப்பீனியன் இருந்ததாலதான் உங்க நம்பரை உரிமையா வாங்கிப் பேசுனேன். அது உங்களுக்குத் தொந்தரவா இருந்தா, சாரி. இனிமே அப்பிடி….”
பேசிக்கொண்டே போனவளின் கரம் அவனது கரத்தில் சிக்குண்டதும் பேச்சை நிறுத்திவிட்டாள்.
“நிலன்”
இவ்வளவு நேரம் பாடம் எடுத்தவள் இப்போது குழந்தையாய் விழிக்க நிலவனின் கரம் அவள் அணிந்திருந்த பச்சை வளையல்களில் ஒன்றை மட்டும் ஆட்காட்டி விரலால் கவ்விக்கொண்டது.
கரம் தீண்டியபோது வராத வெட்கம் இப்போது வர விழிகளை அவனிடமிருந்து அகற்றாமல் நின்றாள் நியதி.
“சாரி! நான் உன்னைத் தப்பா நினைக்கல. நீ வலிய வந்து பேசுறதாவும் யோசிக்கல. எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு. ஆனா வேற யாரும் உன்னை ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டா அது எனக்குக் கஷ்டமா இருக்கும். அதனாலதான் கண்டிப்பாப் பேசுனேன். உன்னைக் காயப்படுத்தியிருந்தா சாரி”
அவனது விளக்கத்தைக் கேட்டதும் அவளுக்குள் இருந்த ஆதங்கம் துணிகொண்டு துடைத்தது போல மாயமாய் மறையப் பளீரெனப் புன்னகைத்தாள் நியதி.
“பேப்பர் கட்டு வாங்கிட்டுப் போனீங்க. லவ் லெட்டர் எழுதியாச்சா?” என சாதாரணமாய் அவள் கேட்க அவனிடம் அந்த இலகுப் பேச்சு மீண்டுவிட்ட திருப்தி பெருமூச்சாய் வெளிப்படுவதாய்!
“இன்னும் எழுதல. யார் காதலியின்னே தெரியாம அனாமத்தா எழுத முடியாதுல்ல”
“அப்ப காதலிக்காகக் காத்திருக்கீங்களா? யாரும் அத்தைப்பொண்ணு, மாமாப்பொண்ணு சின்னவயசுலயே பேசி முடிச்ச வரலாறு இருக்குதா?”
மெல்லிய கவலை அவளது பேச்சில். அது நிலவனுக்குச் சிரிப்பு மூட்டியது.
“எல்லா அத்தைப்பொண்ணு, மாமாப்பொண்ணுங்களும் என்னைவிடப் பெரியவங்க. அவங்களுக்குக் கல்யாணமும் ஆயாச்சு”
“ஹப்பாடா!”
அவள் நிம்மதிப் பெருமூச்சுவிடவும் நிலவனிடம் சிரிப்பு வெடித்தது.
“சரி! பேப்பரை வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா லவ் லெட்டர் எழுதுங்க. உங்க ராசிக்குச் சீக்கிரமே காதலி வரப்போறாளாம்”
“யார் இப்பிடியெல்லாம் கிளப்பிவிடுறது?”
“வேற யாரு? தி ஒன் அண்ட் ஒன்லி நியதி, நான்தான்.” என்றவள் “நீங்க ஷர்ட் பேண்ட்டைவிட வேஷ்டிச் சட்டையில ஹேண்ட்சம்மா இருக்குறீங்க நிலன்” என்று பாராட்டவும் நிலவனின் முகத்தில் சின்னதொரு தடுமாற்றம்.
இந்த ஆண்களுக்கு மனதுக்குப் பிடித்தவளின் புகழ்ச்சியையும் பாராட்டையும் எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாது. நன்றியும் சொல்லமாட்டார்கள். வெட்கமும் படமாட்டார்கள். தேமே என்று நின்றுவிடுவார்கள். நிலவன் மட்டும் விலக்கா என்ன?
“ஹலோ! இப்பிடிப் பேந்தப் பேந்த முழிக்காம ‘நீயும் தாவணியில அழகா இருக்க நியதி’னு சொல்லணும். ஐயோ, இதுகூடத் தெரியல.”
அவள் நெற்றியில் அடித்துச் சலித்துக்கொள்ள அவனிடமிருந்து கையை உருவும் வரை அவளது பச்சை வண்ண வளையலும் அவனது ஆட்காட்டி விரலும் கவ்விக்கொண்டுதான் கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லவேளையாக அந்தச் சம்பவம் முடிந்த பிறகு அங்கே விஜயா வந்தார். மருமகளின் சகோதரனிடம் ஒரு புன்னகையையும் மகளிடம் கண்டிப்புப் பார்வையையும் காட்டினார்.
“எதுவும் வேணுமா அத்தை?” என அவன் கேட்டதும் உள்ளம் குளிர்ந்தது.
“ஒண்ணுமில்ல தம்பி!” என்றவர் மகளிடம் “இங்க என்ன பண்ணுற?” எனக் கண்டிப்புத் தொனியில் வினவ நிலவனுக்கோ பதறியது உள்ளே!
ஆனால் நியதி அலட்டிக்கொள்ளவில்லை.
“நிலா மதினியோட ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் வீட்டுல இருக்குதாம். அதை எடுத்துட்டு வரணும்னு சொல்லச் சொன்னாங்க. அதான் இவங்ககிட்ட சொல்லிட்டிருந்தேன்” எனச் சரளமாய்ப் பொய் ஒன்றை அவிழ்த்துவிட்டாள்.
விஜயாவின் முகம் மருமகளின் பெயரைக் கேட்டதும் மலர்ந்துபோனது. செல்ல மகனின் மனம் கவர்ந்த அன்பு மருமகளாயிற்றே! தெரிந்துதான் அவளை வைத்துப் பொய் சொல்லிச் சமாளித்தாள் நியதி.
“அப்பிடியா? அதை எடுத்துட்டு வந்துடுங்க தம்பி” என்று சொல்லிவிட்டுக் கையோடு மகளையும் அழைத்துப்போனார் அந்தப் பெண்மணி.
நிலவன் பெருமூச்சோடு அங்கே நிற்க அன்னையோடு சென்றுகொண்டிருந்த நியதியோ கழுத்தைத் திருப்பி அவனைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டுப் போனாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction



