“சின்ன சின்ன சண்டை, குட்டி கோவம், இதோட சில்லுனு கொஞ்சம் ரொமான்ஸ்! அடடா இதுவல்லவா வாழ்க்கைனு இப்ப எல்லாம் நான் பாட்டு பாடாதக் குறை! ஆனா இந்தப் புவன் ஒரு வார்த்தை சொல்லட்டுமே! க்கும்! சொல்லமாட்டார்! ஆனா கண்ணுல மட்டும் டன் கணக்குல காதல் வழியும். பொண்ணுங்களைப் பொறுத்தவரை பேச்சுதான் நெருக்கத்தையும் உணர்வையும் பிரதிபலிக்குற கருவி. ஆனா ஆண்கள் எல்லாத்தையும் வாயால சொல்லுறதில்ல. அவங்களோட உணர்வுகளைச் செயல் மூலமா வெளிப்படுத்துவாங்க. என்னடா நாம வாயைத் திறந்து மனசுல உள்ளதைக் கொட்டுறோம், இந்தாளு ஒரு வரில பேசிட்டுப் போறானேனு யோசிக்காதிங்க. அவங்க செயல்ல காட்டுறப்ப உங்க எதிர்பார்ப்பு முழுசா நிறைவேறிடும்”
-ஆதிரா
ஆதிரா குளித்து உடைமாற்றிவிட்டு வந்தபோது புவனேந்திரன் மீண்டும் கவிழ்ந்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
“குளிச்சு ட்ரஸ் மாத்திட்டு மறுபடி தூங்குறதுக்கு உங்களால மட்டும்தான் முடியும். சோம்பேறி புவன்! எழுந்திரிங்க”
கையில் வைத்திருந்த டவலைச் சுருட்டி அவனது முதுகில் அவள் அடிக்கவும் சட்டென எழுந்து அமர்ந்தான் அவன். முகத்தில் உறக்கம் கலைந்த கடுப்பை விட அவள் டவலால் முதுகில் அடித்த வலியே அதிகமாய்த் தெரிந்தது.
‘வலிக்கிற மாதிரி அடித்துவிட்டேனோ?’ ஆதிரா திருதிருவென விழிக்கையிலேயே பெருமூச்சு விட்டுத் தனது கடுப்பை நீர்த்துப் போகச் செய்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பின்னர் “உனக்கும் எனக்கும் போன ஜென்மத்துல ஏதோ பெருசா பகை இருந்திருக்கும் போல. ஒவ்வொரு தடவையும் வலிக்குற மாதிரி அடிக்குற நீ” என்று சொல்ல ஆதிரா அவன் சொன்ன விதத்தில் சிரித்தாள்.
“சாரி புவன்”
“ஆஊனா இதைச் சொல்லிடு. ஆனா அடிக்குறது கிள்ளுறதுனு நடமாடும் வன்முறை கூடமா இரு. போடி”
ஆதிரா உடனே அவனருகே குனிந்து அவனது கன்னத்தை விரல்களால் பிடித்து இழுத்தவள் “கோவமா என் புருசனுக்கு? இப்பவும் சொல்லுறேன், உங்களுக்குப் பிஞ்சு உடம்பு புவன். ஆளுதான் பாக்க ஓங்குதாங்கா இருக்கிங்க” என்று சொல்ல
“இதையே சொல்லி சொல்லி என்னை அட்டாக் பண்ணுற நீ” என்று குறை சொன்னவனின் பார்வையில் சின்னதாய் ஒரு சலனம்.
தன் முன்னே குனிந்து முகமருகே முகம் உரச இருந்தவளை இடையோடு கையிட்டுத் தனது மடியில் அமரவைத்துக் கொண்டான்.

ஆதிராவும் ஜம்மென்று அமர்ந்து அவனது கழுத்தில் கைகளைக் கோர்த்துக்கொள்ள புடவை விலகி தெரிந்த காலில் கொலுசு கோடாய் மின்னியது.
அதிலிருந்த மூன்று மணிகளை விரல்களால் சுண்டிவிட்டவனின் இன்னொரு கரத்தின் விரல்கள் அவளது இடையில் அழுத்தமாய் அவற்றின் வேலையைச் செய்துகொண்டிருக்க விளையாட்டுப்போக்கு விடைபெற்று மோகத்தின் சாயல் இருவரிடையே!
கழுத்தோரமாய் முகம் புதைத்து, காலர் போனில் மீசையுரசி, அவளது ஈரக்கூந்தலின் குளுமையை உணர்ந்தது புவனேந்திரனின் வதனம். ஆதிராவின் கரங்கள் அவனது சிரத்தை இன்னும் தனக்குள் புதைத்துக்கொண்டன.
கழுத்து வளைவில் அவன் வைத்த முத்தத்தில் கோடி இதழணைப்பின் சிலிர்ப்பைத் தனக்குள் உணர்ந்தவள் கொஞ்சமாய் நெளிய “ப்ச்! லெட் மீ என்ஜாய் தி மொமண்ட் ஆதி” என்று கரகரத்த குரலில் அவள் காதருகே கூறினான் புவனேந்திரன்.
‘நீ என்னமோ செய்துகொள்’ என்று விடுவதற்கு அவள் தயாராக இருந்தாலும் அவளை ஆட்கொண்ட நாணம் விடமாட்டேன் என்கிறதே!
தாபத்தின் வீரியம் அதிகமானதில் கழுத்தோர மென்முத்தங்கள் வன்முத்தங்களாக மாறிவிட தன்னை அடித்து விளையாடிய மனைவிக்குப் பரிசாய் ‘லவ் பைட்களைக்’ கொடுத்தான் புவனேந்திரன்.
‘நாங்கள் என்ன பாவம் செய்தோம்’ என பரிதாபமாய் விழித்த அவளது கன்னக்கதுப்புகளில் அழுத்தமாய் முத்தமிட்டவன் முத்தத்தின் வெம்மையில் மனைவி இளகவும் அவளை மொத்தமாய் ஆட்கொண்டான்.
“புவன்” மார்பில் கைவைத்தவளின் கண்களில் மெல்லிய மிரட்சி! அவளுக்கு இப்போதுதான் மடிப்பெடுத்துக் கட்டிய புடவையைப் பற்றிய கவலை.
“ப்ளீஸ் ஆதி” உருகிப்போன குரலில் சொன்னவனுக்கோ புடவையே பெருங்கவலை!
“ப்ச்! என்னங்க?” சிணுங்கியவள் விலக நினைக்க விடுவானா அவன்?
கொஞ்சம் முரடாய் அவளை இழுத்துத் தனது கரவளையத்தில் சிறைப்பிடித்தவனின் கண்களில் தாபத்தின் ஆட்சி!
“புவன்” ஆதிராவின் குரலில் தெரிந்த உருக்கம் அவனை எப்படி விலகவிடும்?
அதென்னவோ நெருக்கமானப் பொழுதுகளில் ஆதிராவின் ‘புவன்’ என்ற அழைப்பு ஒன்றே அவனுக்குக் கிளர்ச்சியூட்டி விடுகிறது. இப்போதும் கூட!
இனி விலக விருப்பமில்லை என்பதை அவளது விழிகள் சொன்னாலும் அவளுக்குப் புவனேந்திரனின் ‘ப்ளீஸ் ஆதி’ வேண்டும். மூச்சுக்கு முன்னூறு முறை அவன் அதைச் சொன்னாலும் அவள் கேட்கத் தயார்!
காதல் நிறைந்த கண்களைச் சுருக்கி “ப்ளீஸ் ஆதி” என்று சொல்லி அவளது விலகலை அவன் போக்கும் தருணங்கள் ஆதிராவிற்கு அத்துணை இன்பமாய் இருக்கும். மனைவியின் மனமறிந்த கணவனாகப் புவனேந்திரனும் நடந்துகொள்ள தேனிலவுக்கு வந்ததன் பலனைத் திகட்ட திகட்ட அனுபவித்தார்கள் இருவரும்.
அவனது கரங்களில் பூத்து, அவனது அணைப்பில் மலர்ந்த பெண்ணிலவு அவனை விட்டு விலக எத்தனிக்க, “கண்டிப்பா வெளிய போகணுமா?” எனக் கிசுகிசுத்தான் புவனேந்திரன் அவளது காதுகளில்.
“ம்ம்” அவனது புஜத்தில் முகம் முட்டியவளுக்கு இப்போது நீளமாய் பேசும் எண்ணமில்லை.
அவனது தீண்டலில் மெய் மறந்த தருணங்கள் அவள் நினைவில் ஒரு அலையாய்! சிவந்த கன்னங்களில் நாணம் செந்தூரமாய்! அவன் கொடுத்த முத்தங்கள் இன்னும் கழுத்திலும் இதழிலும் கதகதப்பாய்!
விரிந்த கூந்தலிடையே இன்னும் அவனது விரல்கள் புகுந்திருப்பதாய் ஒரு மாயை.
புவனேந்திரனின் மனமோ தன்னிடம் ஒன்றிய ஆதிராவின் சரணடைதலை பெரும் பரிசாக நினைத்தது. தாம்பத்தியம் என்பது உடல்ரீதியான நெருக்கம் மட்டுமில்லையே! ஒரு பெண் தனது ஆழமான நம்பிக்கையையும் அன்பையும் பொக்கிஷமாய் ஆணுக்குத் தாரை வார்க்கும் தருணம் அது. அந்நேரத்தில் அவளது விழிகளில் தெரியும் உணர்வில் ஆண் என்பவன் அவளது நேசத்தை அறிந்துகொள்வான்.
எப்போது அந்த விழிகளில் நேசத்தின் ரேகைகள் படர்கிறதோ அப்போதுதான் அந்த ஆணுக்கு அவன் முழுமையானவன் என்ற நம்பிக்கையே வரும். ஒரு பெண்ணின் நேசம் ஆணுக்குக் கொடுக்கும் மனோபலம் அதீதமானது. அவளது நம்பிக்கை அவனுக்குக் கொடுக்கும் தைரியத்தை வேறு எதுவும் கொடுத்துவிடாது.
விளையாட்டுப்பேச்சும், குறும்புச்செய்கைகளும், நாணத்தின் இழையோடும் பொழுதுகளும் அத்துணை அழகாய்ப் புவனேந்திரனுக்குத் தெரிந்தன ஆதிராவின் அண்மையில்!
உணர்வுகளின் பிரளயம் முடிந்த பிறகு உண்டாகும் நீண்டதொரு அமைதியில் அந்த அறை ஆழ்ந்திருந்தது.
புவனேந்திரன் ஆதிராவின் நெற்றியில் விழுந்திருந்த கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டான். அவனுடைய சின்னதொரு அன்புச் செய்கையில் அவள் உள்ளம் பனியாய் உருகிப்போனது.
காதல் தருணங்களின்போது உடலில் குதியாட்டம் போட்ட ஹார்மோன்கள் ஓய்வு நிலைக்குப் போனதும் வயிறு கத்தத் துவங்கியது இருவருக்கும். இரவே சரியாகச் சாப்பிடவில்லை.
மடமடவென இன்னொரு குளியல்! தனித்தனியே குளித்து தண்ணீரை வீணாக்கவேண்டாமென்ற நல்லெண்ணம் இருவருக்கும்! இந்த நல்லெண்ணத்தாலேயே காலையுணவு இன்னும் கொஞ்சம் தாமதமானது.
“ரிலாக்ஸா மேக்சி போட்டுக்க ஆதி. இங்கயும் புடவையோட சுத்தனுமா?” என்று சொல்லி அவள் கொண்டு வந்த வெண்ணிற மேக்சி ட்ரஸ் ஒன்றை அணியச் சொன்னான்.
அவனுமே இலகுவாய் டீசர்ட் கேஸ்வல் பேண்ட்ஸ் அணிந்து கொண்டான்.
ஊர் சுற்ற இந்த உடை சௌகரியமாக இருக்குமே!
காலையுணவை முடித்துக்கொண்டு இருவரும் காரில் கிளம்பினார்கள்.
சூச்சிப்பாறா அருவி, எடக்கல் குகைகள் இரண்டையும் பார்க்கலாமெனப் புவனேந்திரன் திட்டமிட்டிருந்தான். அருவியில் குளிக்கும் எண்ணமெல்லாம் இருவருக்கும் இல்லை.
அந்தக் கானகமும் அதன் நடுவே இருக்கும் மலையிலிருந்து விழும் அருவியும் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்குமெனக் கேள்விப்பட்டிருக்கிறான் புவனேந்திரன்.

அதை மனைவியோடு ரசிக்கும் எண்ணம் மட்டுமே அவனுக்கு. அதே நேரம் ஆதிராவுமே அருவி விழுவதை அத்துணை ரசித்தாள். அங்கே குழந்தைகள் அருவியில் குளிப்பதையும், ஆங்காங்கே குரங்குகள் சண்டையிடுவதையும் கைகாட்டி அவள் பேச அவன் கேட்கவென நேரம் கடகடவென ஓடியது.
அடுத்து எடக்கல் குகைக்குச் செல்ல காரைக் கிளப்பினான் புவனேந்திரன்.
“குகைனா ரொம்ப சின்னதா இருக்குமா புவன்? யூடியூப்ல சின்னதா ஒரு வழிய காட்டுறாங்க. அது மூலமா போனா படிக்கட்டு வருது. அப்புறம்தான் குகை வருது. எனக்கு நெருக்கமான ப்ளேஸ்னா பயம்” கண்களில் மிரட்சியோடு சொன்னாள் ஆதிரா.
“நான் இருக்கேன்ல”
அவளது கன்னத்தில் கை வைத்து இதமாய்ச் சொன்னவன் நியோலித்திக் காலத்து கோட்டு ஓவியங்கள் இருக்கும் எடக்கல் குகைகள் இருக்கும் பகுதியை நோக்கி காரை விரட்டினான்.
ஆதிராவின் க்ளாஸ்ட்ரோஃபோபியா பற்றி தெரிந்தும் அவன் அங்கே செல்ல முடிவெடுக்க காரணம் அந்த ஃபோபியாவை அவள் ஜெயிக்க வேண்டும் என்பது மட்டுமே!
உடனே அது நடக்காது என்றும் தெரியும். ஆனால் சின்னதாய் ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என்ற நப்பாசை.
எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் என் மனைவிக்கு இந்தச் சின்ன பயம் மட்டும் எதற்கு என்ற நியாயமான ஆதங்கம்.
கார் எடக்கல்லை அடைந்ததும் வாகனங்களை நிறுத்தும் பகுதியில் நிறுத்திவிட்டு ஆதிராவோடு நடக்க ஆரம்பித்தான் புவனேந்திரன்.
குகைக்குச் செல்ல டிக்கெட் கொடுக்கும் கவுண்டருக்குச் செல்லவே அடர் கானகத்தின் வழியே செங்குத்தானப் பாதையில் ஒன்றரை கிலோமீட்டர் நடக்கவேண்டும். ஆதிராவுக்குக் குஷியாக இருந்தது.
அவர்களைப் போல எண்ணற்ற மக்கள் நடந்து வந்தார்கள். ஆங்காங்கே கடைகள் சின்னதாய் இருந்தன. கால் வலிக்கையில் அங்கே அமர்ந்துவிட்டு நடையைத் தொடர்ந்தார்கள். ஒருவழியாக டிக்கெட் கவுண்டரில் அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு முதலில் அவர்கள் சென்ற இடத்தில் செங்குத்தாக பாறைகளில் படிகள் இருந்தன.
அடுத்து பாறைகளின் இடுக்குகள் வழியே செல்லவேண்டும். அதுதான் ஆதிராவுக்குச் சவாலாகத் தெரிந்தது.
“என் கையைப் பிடிச்சுக்க. சுத்தி பாறை நிக்கும். சின்ன வழி இது. ஆனா உன் கூட நான் இருக்கேன்ல. தைரியமா வா”
இரண்டு பாறைகளின் நடுவே இருந்த சின்ன பாறை இடுக்கின் வழியே நுழைந்தபோதே ஆதிராவுக்கு மூச்சடைக்கும் உணர்வு. ஒருவழியாய் உள்ளே நுழைந்த பிறகோ குகைக்குள் நிற்கும் பாறைகள் யாவும் அவளை நெருக்க வருவது போல ஒரு மாயை.
“புவன்… புவன்” திணறினாள் அவள்.
“ரிலாக்ஸ்! அங்க பாரு! சின்னக்குழந்தை அவங்கப்பாவோட கையைப் பிடிச்சு நடந்து போகுது. நீ பெரியவ ஆதிரா. ஒன்னும் ஆகாது. இந்தப் பாறை எல்லாம் கை கால் முளைச்சு உன்னை நெருங்காது. உன் மனசு உன்னைப் பயப்படுத்த நினைக்குறப்ப நீ அதை ஜெயிக்கணும். வா!”
கை நீட்டியவனிடம் பயத்தோடு தனது கரத்தையும் தன்னையும் ஒப்படைத்தாள் அவள்.
சிறியதொரு குகைக்குள் அவளுக்கு இருந்த பயத்தை ஜெயிக்க கிடைத்த ஒரே ஒரு கருவி புவனேந்திரனின் கரம் மட்டுமே. அதை விடாமல் சிக்கெனப் பிடித்துக்கொண்டாள்.
“கம் ஆன் ஆதி! உன்னால முடியும்.” மனதுக்குள் சொல்லிக்கொண்டே அடுத்த இடுக்கின் முன்னே இருந்த உலோகப்படியில் காலடி எடுத்து வைத்தவள் மேலே வந்ததும் முகத்தில் மோதியது இதமான மலைக்காற்று.
சட்டென இதயத்தை அடைத்த உணர்வு போய் பரந்து விரிந்த இடத்துக்கு வந்ததும் சுதந்திரமாய்ச் சுவாசத்தை விழுங்கினாள்.

இனி எல்லாம் திறந்தவெளி படிகட்டுகள் தானாம்! ஆசையோடு புவனேந்திரனின் கரம் பற்றி நடக்கையில் கால்வலி எல்லாம் தூரமாய் போனது.
ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னர் அந்தக் குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கு சாட்சியாய் நெடிதுயர்ந்த சுவர் போன்ற பாறைகளில் கோடுகளாய் செதுக்கப்பட்ட வரிகள் அவர்கள் வாழ்வியலை உணர்த்தும் ஓவியமாய்!
ஊழியர் ஒருவர் அதை விளக்க பொறுமையாய் கேட்டார்கள்.
மீண்டும் கீழே இறங்கியபோதும் பாறையிடுக்கு வழிகளில் சின்னதாய் ஒரு அசௌகரியத்தை மட்டும் உணர்ந்தாள் ஆதிரா. ஆனால் பயமில்லை. அடிக்கடி போக வர இருந்தால் இந்த அசௌகரியமும் மறைந்துவிடும் என்றான் புவனேந்திரன்.
கீழே வந்து காரில் அமர்ந்ததும் “எப்பிடி இருந்துச்சு இந்த அனுபவம்?” எனக் கேட்டவனிடம்
“தேங்க்ஸ்! என் பயம் அனாவசியமானதுனு புரியுது. ஆனா உடனே மாறாது” என்றாள்.
“அது தெரியுமே! ஏதோ என்னால செய்ய முடிஞ்ச சின்ன முயற்சி. பயப்படுவனு தெரிஞ்சும் இங்க கூட்டிட்டு வந்ததுல எனக்கும் கொஞ்சம் சங்கடம்தான். ஆனா என் புத்திசாலியான பொண்டாட்டி எல்லாத்தையும் ஈசியா ஹேண்டில் பண்ணுவாங்கிற நம்பிக்கை.”
ஆதிரா சில நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தவள் “நீங்க எனக்காக நிறைய யோசிக்குறிங்க புவன். என் பிசினஸ் நடைமுறை, என்னோட க்ளாஸ்ட்ரோஃபோபியானு ஒவ்வொன்னையும் நீங்க யோசிக்கிறிங்க. உங்க அளவுக்கு நான் யோசிக்கலையோனு தவிக்க விடுறிங்க. நீங்க இப்பிடி செய்யுறப்ப ஆரம்பத்துல சங்கடமா இருந்தாலும் முடிவுல என்னவோ எனக்காக யோசிக்கிறிங்களேங்கிற இதம் மனசுக்குள்ள பரவுது. ரொம்ப சந்தோசமா இருக்கேன் புவன்” என்று மனம் நிறைந்து சொல்ல
“நீ பாராட்டணும்னு நான் எதையும் செய்யல ஆதி. இதெல்லாம் செஞ்சா எனக்கே ஒரு சந்தோசம். புருசன்னா பொண்டாட்டியோட கொஞ்சி குலாவி பிள்ளை பெத்துக்குறவன் மட்டுமில்ல. அவளோட சின்ன சின்ன தயக்கத்தை உடைக்குறவனாவும் அவன் இருக்கணும். உனக்காக நான் யோசிக்காம வேற யாருடி யோசிப்பாங்க?” என அவன் உரிமையாய்க் கேட்டு கன்னம் கிள்ள அவள் முகம் பூவாய் மலர்ந்தது.
சட்டென நெஞ்சில் கைவைத்துக் கொண்டவள் “ப்ச்! உங்க ‘டி’ கூட நெஞ்சை தீண்டுதே! ப்பா! குரல்லயே வசியமருந்து வச்சிருக்கிங்க, பாருங்க, நான் மயங்கிட்டேன்” என்று மயங்கிவிழுவது போல நடித்தாள்.

புவனேந்திரன் விசமப்பார்வையோடு சட்டென நெருங்கவும் கண் விழித்தவள் அவனைத் தள்ளிவிட்டாள்.
“காருக்குள்ள இருக்குறோம். யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க?”
“என்ன நினைச்சா எனக்கு என்னடி பொண்டாட்டி? நீ இப்பிடி தள்ளி விடுறப்பதான் பிடிவாதமா நினைச்சதைச் செய்யணும்னு தோணுது”
“தோணும் தோணும்! முதல்ல காரை எடுங்க. வயிறு பசில கத்துது” என ஆதிரா கிண்டலாய்ச் சொல்ல புவனேந்திரனும் காரைக் கிளப்பினான்.
இவ்வாறான அழகானக் காதல் பொழுதுகளும், மனம் விட்டுப் பேசிய உரையாடல்களும், செல்ல சீண்டலுமாய் அற்புதமாய் நகர்ந்தது ஆதிரா புவனேந்திரனின் தேனிலவு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

