சைக்கோபாத் என்றதுமே பொதுவாக அமெரிக்கன் சைக்கோ நாவலில் வரும் பேட்ரிக் பேட்மேன் தான் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவார். ஆனால் நடப்பு வேறு மாதிரி உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நரம்புளவியல் குறைபாடு கொண்ட ஒரு பெண் அக்குறைபாடு கொண்ட ஆணை விட ஆபத்தானவள் என்கின்றனர் அவர்கள். பொதுவாக சைக்கோபாத் என்றதுமே இரக்கமற்ற, குற்றங்கள் செய்யக்கூடிய, சமூகவிரோத நடத்தை கொண்ட கொடூரன் என்றே மக்கள் கருதுகிறார்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்ற பொதுமைப்படுத்துதல் காரணமாக மேற்சொன்ன குணாதிசயங்கள் பெண்களுக்கும் இருக்கும் என்பதை யாரும் சிந்திப்பதேயில்லை. சைக்கோபாத்கள் பணம், அதிகாரம் மற்றும் கட்டுப்படுத்தும் திறனைச் சொந்தமாக்கிக்கொள்வதில் விழிப்பாக இருப்பார்கள் என்கிறார் கார்பரேட் உலகிலுள்ள சைக்கோபாத்களை அணுகுவதில் நிபுணரும், ஆங்கிலா ரஷ்கின் பல்கலைகழகத்தில் பணியாற்றும் மருத்துவர் க்ளைவ் படி. சைக்கோபாத்கள் வன்முறையானவர்கள், சமூகவிரோதிகள் என்று சொல்வதெல்லாம் ஒரு குறுகிய பார்வை என்கிறார் அவர். பெண் சைக்கோபாத்களிடம் மூர்க்கத்தனமும், வன்முறையும் குறைவாக இருப்பதால் அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்கிறார் அவர். பெண் சைக்கோபாத்கள் உடல்ரீதியான வன்முறையை விட வார்த்தை ரீதியான வன்முறையில் வல்லவர்களாக இருப்பார்களாம். பிறரைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவது, பொய் பேசி அடுத்தவர்களைக் காயப்படுத்துவது போன்றவை உடலால் அடிக்கும் போது உண்டாக்கும் வலியை விட அதிக வேதனையைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கும்.
-From an article from ‘The Guardian’
ஊமை வெளிச்சம் அந்தக் குகையில் நிலவிய சூழலை இறுக்கமாக்கிக்கொண்டிருந்தது. மெழுகுவர்த்திகளின் மினுக் ஒளியும் இருளின் தீவிரத்தைக் குறைப்பதில் தோல்வியுற, காட்டுக்குகையின் உள்ளே சாத்தான் வழிபாட்டுக்காக தரையில் சில பல வினோத அடையாளங்கள் வரையப்பட்டிருந்தன.
சாத்தான் வழிபாட்டுக்குழுவின் மாதாந்திரக்கூட்டத்தோடு சேர்த்து இருளின் இளவரசனான சாத்தானிடம் தங்களது கோரிக்கைகளை வைக்கும் ‘ப்ளாக் மாஸ்’ என்ற சடங்கும் அன்றைய தினம் நடைபெறவிருந்ததால் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் உடலை முழுவதும் மறைக்கும் சிவப்பு வண்ண ஆடையில் அங்கே குழுமியிருந்தனர்.
குகை முழுவதும் போதையூட்டும் புகைமூட்டம் நிரம்பி இருப்பவர்களின் பார்வையை மங்கலாக்கிக்கொண்டிருந்தது.
அப்போது சாத்தான் சிலைக்கு முன்னே வந்தான் ரோஷன். அவனது ஓநாயான பத்ரா பத்திரமாகச் சாத்தானின் காலடியில் படுத்திருந்தது. அதன் கண்கள் அங்கிருந்த அரைகுறை வெளிச்சத்தில் பளபளவென மின்னின.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ரோஷணும் அங்கிருந்தவர்களைப் போலவே நீளமான சிவப்பு வண்ண அங்கி ஒன்றை அணிந்திருந்தான். அவன் தன்னை தானே ‘ப்ளாக் ப்ரீஸ்ட்’ என்று அழைத்துக்கொண்டான்.
கண்களை மூடி கைகளை உயர்த்தியவன் “இருளின் இளவரசனான சாத்தானே! அரசர்க்கெல்லாம் அரசனே, இந்த நிமிடம் உன் முன்னே மன்றாடி நிற்கிறேன், என்னிடம் உங்கள் மீதான என் நம்பிக்கையைத் தவிர வேறு எதுவுமில்லை” என்றவன் விசித்திர அடையாளங்களின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞனின் அருகே வந்தான்.
அவன் கால்சராயுடன் சட்டையின்றி நின்று கொண்டிருந்தான்.
அந்த இளைஞனின் பின்னே போய் நின்ற ரோஷண் அவனுடைய முதுகில் மதுபானத்தை ஊற்றினான்.
“இருளின் இளவரசனே! இந்த மனிதன் ஆசைப்படுவது அனைத்தையும் இவனுக்கு அளிப்பீர்களாக!” என்று சொன்னபடி திரும்பி அங்கே நின்று கொண்டிருந்த ராக்கியைப் பார்க்க அவன் தீப்பந்தத்தோடு ஓடோடி வந்தான்.
அந்தத் தீப்பந்தத்தால் இளைஞனின் முதுகில் ஆங்காங்கே சூடுபோட்டான் ரோஷண்.
“ஷ்ஷ்”
வலியில் அந்த இளைஞன் முனகவும் “இந்தச் சின்ன வேதனைய சகிச்சு தியாகம் பண்ணுனா சாத்தானோட அருள் கிடைக்கும்” என்று ரோஷண் கூறவும் பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டான் அவன்.
அடுத்து ஒரு சிறிய ப்ளேடை வாங்கி அந்த இளைஞனின் முதுகில் கீறியபடியே பேசினான் ரோஷண்.
“இந்த மனிதனுக்குக் கௌரவமான வாழ்க்கையையும், சந்தோசத்தையும் கொடுப்பீராக! இவரது எதிரிகள் வீழ்வதை இவரைக் காணச் செய்வீர்களாக! எடுத்த காரியம் அனைத்திலும் இவருக்கு வெற்றியைக் கொடுப்பீராக!” என்று சொல்லி முடித்து அந்த இளைஞனின் முதுகில் வழிந்த இரத்தத்தை வழித்தெடுத்தான் அவன்.
அதை சாத்தான் சிலையின் காலடியில் பூசிவிட்டு வந்தவன் “உன் நெஞ்சுல கை வச்சு உன்னோட ஆசை எல்லாத்தையும் சாத்தான் கிட்ட சொல்லு முத்து” என்றான்.
ஆம்! இத்தகைய கொடூர சடங்குக்கு ஒப்புக்கொண்டு அதை செய்யும் வரை பல்லைக் கடித்து வேதனையைத் தாங்கிக்கொண்டவன் முத்துவே.
கண்களை இறுக மூடி ஒரு கையை மார்பில் வைத்து அவன் சாத்தானிடம் வேண்ட ஆரம்பித்தான்.
“உங்களை எல்லாரும் இருளோட இளவரசன்னு சொல்லுறாங்க… என் வாழ்க்கைல இருக்குற இருள் போகணும்… என் திறமைக்கு ஏத்த அங்கீகாரம் கிடைக்கணும்… பணம் அதிகாரத்தை விட திறமையிருந்தும் அங்கீகாரம் கிடைக்காம தவிக்குற வேதனை தான் ரொம்ப கஷ்டமானது… அந்த கஷ்டத்தை போக்கி என் வாழ்க்கையில நான் உயரணும்… என்னை பாத்து இந்த ஊரே ஆச்சரியப்படணும்”
முத்து வேண்டும்போதே ரோஷண் ராக்கியிடமிருந்து ஒரு கை நிறைய உப்பு வாங்கி அதை முத்துவின் முதுகில் இரத்தம் கசிந்து கொண்டிருந்த பச்சைக்கீறல் மீது பரபரவென தேய்த்தான்.
காயத்தின் மீது உப்பைத் தேய்த்தால் உண்டாகும் வேதனையையும் சகித்துக்கொண்டான் முத்து. வேதனை எவ்வளவு அதிகமோ அவ்வளவு தூரம் சாத்தானின் மனம் கனியும் என்று கூட்டங்களில் ரோஷண் முழங்கியது அவனது செவிகளில் இப்போதும் ஒலித்தது.
அடுத்து அதே காயத்தின் மீது டக்கீலா ஊற்றப்பட்டது. வேதனை உச்சத்தைத் தொட கண்களை இறுக மூடிக்கொண்டான் முத்து.
கஞ்சாவை புகைத்த ரோஷண் புகையை வாய்க்குள் அடக்கிக்கொண்டு முத்துவின் முதுகில் வாய் குவித்து காயத்தில் படுமாறு ஊதினான்.
“இருளின் இளவரசன் நீடூழி வாழ்க”
குகையே அதிருமாறு அவன் கத்த மொத்தக் கூட்டமும் வெறியோடு முழங்கியது.
பின் முத்துவிடம் திரும்பினான் அவன்.
“என் கூட சேர்ந்து இந்தக் கூட்டத்தை வழிநடத்த சாத்தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்குறார் முத்து” என்றான்.
முத்துவால் அவன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“உண்மையாவா பிரதர்?”
“உண்மை தான்… இனிமே ஒவ்வொரு சடங்கையும் நீ கவனிக்கனும்…. சாத்தானை வழிபடுறதை விட்டுடக்கூடாது” என்றவன் அன்றைய கூட்டத்திற்கு வந்தவர்களிடம் வசூலித்த பணத்தைப் பார்த்து முத்துவுக்கே பிரமிப்பு தான்.
அவன் மட்டுமே கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ரூபாய் இச்சடங்குக்காக கொடுத்திருக்கிறானே! அது ரோஷணுக்குச் செலுத்தவேண்டிய தட்சணை. அவனைப் போல நான்கு பேருக்கு சடங்கு முடிந்திருந்தது. ஐந்தாவதாக ஒரு ஆளும் காத்திருக்கிறார்.
ஒரே நாளில் கிட்டத்தட்ட கால் இலட்சத்தைச் சம்பாதிப்பதற்கும் திறமை வேண்டுமல்லவா!
முத்துவின் மூளை அந்தப் போதைக்கும் நடுவே யோசித்தது. அவனைத் தவிர வேறு யாருக்கும் இப்படிப்பட்ட யோசனைகள் வரவில்லை. கஞ்சாவையும் மதுபானங்களையும் கொடுத்து ரோஷண் வரவிடாமல் செய்தான் என்றே கூறவேண்டும்.
அங்கிருந்த கஞ்சாவின் புகையில் குகையிலிருந்த கல்லுக்குக் கூட போதையேறியிருக்கும். பின்னே அந்தக் கூட்டத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்?
போதை தலைக்கேறி அங்கே நிலவிய கொடூரம் கூட புத்தியில் உறைக்காதவண்ணம் இருந்த கூட்டத்தில் கிளாரா, நவநீதம் மற்றும் ஜானும் அடக்கம்.
அடுத்து ரோஷணின் பார்வை கிளாராவின் பக்கம் திரும்பியது.
அவளும் தட்டுத் தடுமாறி முத்து நின்ற அதே அடையாளக்குறியீடுகளின் நடுவே நின்றாள்.
அங்கியின் முக்காட்டை நீக்கியதும் முதுகின் மேல்பகுதி தெரிய முத்துவுக்கு செய்யப்பட்ட அதே கொடூரமான சடங்கு அவளுக்கும் செய்யப்பட்டது.
வேதனையில் துடித்த உதடுகளைப் பற்களால் அடக்கிக்கொண்டாள் கிளாரா.
மனம் முழுவதும் ஏகலைவனை எப்படியாவது தனது வலையில் வீழ்த்தவேண்டும் என்ற எண்ணமே நிரம்பியிருந்தது.
“சாத்தான் கிட்ட வேண்டிக்கோங்க” என ரோஷண் கூறவும் கண்களை மூடிக்கொண்டாள் கிளாரா.
“ஏகலைவனுக்கு என் மேல எப்படியாச்சும் காதல் வரணும்… அவர் மட்டும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டார்னா நான் கலிங்கராஜனை விவாகரத்து பண்ணிட்டு அவரோட போயிடுவேன்… எனக்கு இந்த வாழ்க்கை சலிச்சுப் போச்சு… எனக்கு ஏகலைவன் வேணும்”
வேண்டி முடித்ததும் கிளாரா சாத்தானுக்குப் பலி கொடுக்க கூட்டி வந்த ஆட்டுக்குட்டியை ஜான் ரோஷணிடம் கொடுத்தார்.
அவன் அந்த ஆட்டுக்குட்டியைத் தலைகீழாகப் பிடித்து ஹாக்சா ப்ளேடு ஒன்றால் அதன் கழுத்தை அறுக்க, இரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக இறந்து போனது.
தரையில் வைக்கப்பட்ட பாத்திரமொன்றில் சொட்டியிருந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை எடுத்து கிளாராவின் நெற்றியில் பூசிவிட்டான் ரோஷண். ஆட்டுக்குட்டியின் உடல் பத்ராவுக்கு இரையானது.
“சாத்தான் கிட்ட வேண்டுதல் வச்சுக்கிட்டிங்களா?” என விசாரித்தான்.
“சீக்கிரம் ஏகலைவன் கவனம் என் பக்கம் திரும்பணும்னு வேண்டிக்கிட்டேன்… என் புருசன் இன்னும் என் கூட இருக்குறாரே, ஒருவேளை இந்த வேண்டுதல் தப்பானதுனு சாத்தான் நிறைவேத்தாம போயிடுவாரா?” சந்தேகமாக வினவினாள் கிளாரா.
“நம்பிக்கை தான் சாத்தான் வழிபாட்டுல முக்கியமானது கிளாரா மேடம்… புருசன் இருந்தா என்ன? சாத்தானுக்கு இந்த மாதிரி திருமணம் மீறி உறவு வச்சவங்களை ரொம்ப பிடிக்கும்… கட்டுப்பாடுகளைத் தகர்த்து சுதந்திர வாழ்க்கைய வாழத் தேவையான சக்திய உங்களுக்குச் சாத்தான் குடுப்பான்”
ரோஷண் சொல்லவும் சன்னப்புன்னகை அவளிடம். சாத்தானின் பிரசாதமாக ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தம்ளரில் ஊற்றி அவளிடம் நீட்டினான். குமட்டிக்கொண்டு வந்தாலும் அதை அருந்தினாள் கிளாரா.
அன்றைய கூட்டம் முடிய, இக்காட்சியைப் பார்த்து குதூகலித்த ஜானையும் நவநீதத்தையும் விசித்திரமாகப் பார்த்தபடி முத்து கிளம்பினான்.
முதுகு எரிந்தது. அதற்கு மருந்து போட்டால் தான் இனி உறக்கம் வரும். அவன் மற்றவர்களைப் போல மாதாந்திர வழிபாட்டுக்கூட்டம் நடந்த இரவன்று குகையிலேயே தங்கமாட்டான்.
பெரிதாக ‘ஜாப் சேட்டிஸ்பேக்சன்’ கிடைக்காவிட்டாலும் ஓட்டுநர் தொழில் தான் அவனுக்குச் சாப்பாடு போடுகிறது. அதற்கு குந்தகம் வருமாறு நடந்துகொள்ளவே மாட்டான்.
அதனால் நள்ளிரவில் போதையில் தள்ளாடினாலும் ஓநாய் நரிகளைப் பற்றிய கவலையின்றி கிளம்பிச் சென்றுவிடுவான்.
வீட்டுக்கு வந்தவனுக்கு இன்னும் முதுகு எரிச்சல் அடங்கவில்லை. தலைசிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டாக உருவெடுப்பதற்கு இதை விட பன்மடங்கு வலியைக் கூட அவன் சகிக்கத் தயார்.
அவன் நினைத்திருந்தால் கையிலிருந்த சேமிப்பை வைத்து மும்பையிலேயே ‘மேக்கப் ஆர்ட்டிஸ்ட்’ ஆகியிருக்கலாம். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. போயும் போயும் சில ஆயிரங்களை ஈட்டித் தரும் மேக்கப் செய்யவா பிறந்தவன் அவன்?
திரையுலக ஜாம்பவான்களுடன் பணியாற்றி தன் திறமையை உலகுக்குப் பறைசாற்ற விரும்பியவனுக்கு இப்படிப்பட்ட செயல்கள் அற்பத்தனமாக தெரிந்ததில் ஆச்சரியமில்லை.
ஒருவித ‘நார்சிஸ்ட்’ மனநிலை அவனுடையது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கவலை இல்லை.
எரியும் காயத்தோடு இரவில் படுத்தவன் மறுநாள் வழக்கம் போல சவாரிக்காக திருநெல்வேலிக்குக் கிளம்பிவிட்டான். திருநெல்வேலி இரயில் நிலைய ஸ்டாண்டில் டாக்சியோடு அவன் காத்திருக்கையில் ஜானின் மொபைலில் இருந்து அழைப்பு வந்தது.
முதலாளியின் மகளுக்கு மாறுவேடப்போட்டிக்காக மேக்கப் செய்யவேண்டுமென அவர் சொன்னது,ம் முத்து எரிச்சலுற்றான்.
“இந்திரா காந்தினா உன் முதலாளி மகளுக்கு அவ்ளோ லேசா போயிடுச்சா? அவங்களோட ஆளுமையும் கம்பீரமும் தனி… இது என்ன குழந்தைக்கு ஒட்டுமீசை வச்சு முண்டாசு கட்டுனா பாரதி ஆகிடுவாங்கங்கிற மாதிரி விளையாட்டா? இந்த மாதிரி சில்லறை வேலைக்குலாம் என்னை கூப்பிடாதண்ணே”
“ஐயோ இது அப்பிடில்ல முத்து… சில படத்துல எல்லாம் மேக்கப் போட்டு இன்னொரு ஆள் மாதிரி தத்ரூபமா மாத்துவாங்கல்ல, அதே போல வேலைடா… கொஞ்சம் யோசி… என் முதலாளி மக ஒன்னும் சாதாரண ஆள் இல்ல… இன்ஸ்டாகிராமுல பெரிய ஆளு அது.. இந்த வேலை பாத்துக் குடுத்தனா உன் பேரு இன்னும் நிறைய பேருக்குத் தெரிய வரும்டே”
இன்ஸ்டாக்ராம் இன்ஃப்ளூயன்சர் என்றதும் கொஞ்சம் யோசித்தான் முத்து. அதோடு வேலையும் கொஞ்சம் சவாலானது என்பது புரிந்ததும் சாந்திவனத்துக்கு வந்து இனியாவுக்கு மேக்கப் செய்துவிட சம்மதித்தான்.
சொன்ன தேதியில் அவள் முன்னே போய் நின்ற பிறகு தான் இந்த வேலையை மறுத்திருந்தால் எத்தகைய தேவதையை இழந்திருப்பான் என்பதைப் புரிந்துகொண்டான் முத்து.
பதினேழு வயது பெண்ணை இப்படி வெறிப்பது நாகரிகமில்லை என முதிர்ச்சியடைந்த புத்தி ஆயிரம் முறை அறிவுறுத்தினாலும் அரிதாரம் பூசுபவனின் மனம் அதைக் கேட்க வேண்டுமே!
மும்பையில் எத்தனையோ பேரழகிகளைப் பார்த்தவன், தொழில்ரீதியாகப் பழகியவன் அவன். ஆனால் இனியாவைப் போன்ற மென்மை யாரிடத்திலும் இல்லை என அடித்துக் கூறுவான்.
மென்மை என்பது தேகத்தில் இல்லை. பார்க்கும் பார்வை, உதிர்க்கும் வார்த்தை, முகிழ்க்கும் சிரிப்பு என அனைத்திலும் மென்மையைக் கொண்டவள் என அவளை ஆராதித்தபடியே அரிதாரத்தையும் பூசி முடித்தவன் இனியாவின் பாராட்டில் நனைந்துவிட்டுப் போக மனமின்றி கிளம்பினான்.
அன்றிலிருந்து காதல் என்ற பைத்தியக்காரத்தனம் அவனைப் பிடித்துக்கொண்டது. அவனது ஊன், உறக்கத்தைக் காவு வாங்கியது. அதற்கடுத்த மாதம் கூடிய சாத்தான் வழிபாடு கூட்டத்தில் மீண்டும் முதுகில் கீறி சடங்கு நடத்தி சாத்தானிடம் வேண்டிக்கொண்டான்.
இம்முறை அவன் வேண்டியது இனியாவை. ஆம்! அவள் என்றுமே தனக்கு மட்டும் சொந்தமாக வேண்டுமென்பதறாக வேண்டுதல் வைத்தான் முத்து. அவனது வேண்டுதல் எக்காலத்திலும் பலிக்காதென தெரியாமல் பைத்தியக்காரனைப் போல ரோஷண் கொடுத்த ஆட்டு இரத்தத்தைப் பருகினான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

