சைக்கோபாத்களின் தனிமை, மறைக்கப்பட்ட துன்பங்கள், தன்னம்பிக்கையற்ற போக்கு போன்றவை வன்முறை மற்றும் குற்றவியல் நடத்தைக்கான தீவிரமான அறிகுறிகள் என்பதால் அவற்றை அடையாளம் காண்பது மிகமிக முக்கியம். ஒவ்வொரு சைக்கோபாத்தின் வாக்குமூலங்களைக் கேட்டறியும் போது தான் அவர்கள் எந்தளவுக்குப் பலகீனமாகவும் காயப்பட்டும் இருக்கிறார்கள் என்பது புரியும். இந்தச் சைக்கோபாத் குணங்களைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் இன்னும் நிறைய சைக்கோஃபார்மோதெரபி சிகிச்சை சோதனைகள், நியூரோ ஃபீட்பேக் மற்றும் ஒருங்கிணைந்த சைக்கோதெரபி ஆராய்ச்சிகள் கட்டாயம் தேவை. சைக்கோபாத்கள் பற்றி சமுதாயத்தில் இப்போதிருக்கும் பார்வை முழுமையற்றது. ஏனெனில் அவர்கள் அனுபவித்த தனிமையையும், துன்பங்களையும் யாரும் பெரிதாகக் கருதுவதில்லை. எப்போது இவையெல்லாம் முக்கியத்துவம் பெறுமோ, அப்போதுதான் சைக்கோபாத்கள் என்பவர்கள் இதயமற்றவர்கள் என்று நாம் பார்க்கும் கோணம் மாறி அவர்களும் பாதிக்கப்பட்ட மனிதர்களே என சிந்திக்க ஆரம்பிப்போம்.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
நிஷாந்தையும் இனியாவையும் கோவிலில் பார்த்த கையோடு ஜான் செய்த முதல் காரியம், தான் பார்த்த காட்சியை அப்படியே ஒரு வரி விடாமல் போட்டுக் கொடுத்தது தான்.
அவர் கூறியதைக் கேட்டதும் கலிங்கராஜனின் முகம் மிளகாய் சாப்பிட்டது போல சிவந்து போனது. ஜான் அதைக் கவனித்தபடியே எரிகிற தீயில் இன்னும் எண்ணெய்யை வார்த்தார்.
“இது எல்லாமே நம்ம முருகையாக்குத் தெரிஞ்சு தான் நடக்குது ஐயா… இனியாம்மாவ கோயில்ல வந்து கூப்பிட்டது அவரு தான்”
கலிங்கராஜனால் அதை நம்பவே முடியவில்லை. மகளது காதல் பற்றிய செய்தியை அத்துணை சுலபமாக நம்பியவரால் முருகையாவின் விசுவாசத்தை இலேசில் சந்தேகப்பட முடியவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“முருகையாக்குத் தெரிஞ்சா கட்டாயம் சொல்லிருப்பார் ஜான்… நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டுப் பேசுற” என்று சமாளித்தார் அவர்.
“நீங்க நான் சொன்னதை நம்பலனா இப்பவே முருகையாவ இங்க கூப்பிட்டு சாயங்காலம் கோயில்ல வச்சு இனியா கூட நிஷாந்தை பாத்தாரானு கேளுங்கய்யா”
ஜான் இவ்வளவு உறுதியாகச் சொன்னதால் கலிங்கராஜனின் நம்பிக்கை சற்று தளர்ந்தது. உடனே முருகையாவை அழைத்தார்.
“கூப்பிட்டிங்களாய்யா?” என்றபடி பணிவோடு வந்த பெரியவரிடம்
“சாயங்காலம் இனியாவையும் அந்த நிஷாந்த் பயலையும் கோயில்ல வச்சு ஒன்னா பாத்திங்களா முருகையா?” என அமைதியாக விசாரித்தார் கலிங்கராஜன்.
முருகையா வயோதிகத்தால் சுருங்கிய நெற்றியை யோசனையால் இன்னும் சுருங்க வைத்தவர் “ஆமாங்கய்யா… நம்ம சின்னம்மாவும் .நிஷாந்தும் நான் கோயிலுக்குப் போனப்ப ஒன்னா நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க… அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள்யா” என்றார்.
“அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு நீங்களே முடிவு பண்ணிடுவிங்களா? வயசுப்பொண்ணும் பையனும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிற அளவுக்கு இன்னும் நம்ம ஊர் இன்னும் வளரல… இதை நீங்க என் கிட்ட சொல்லிருக்கணுமா இல்லையா?” என்று கடுப்பேற கேட்டார் கலிங்கராஜன்.
முருகையாவின் வதனம் வாடிப்போனது.
“நம்ம சின்னம்மா அப்பிடியெல்லாம் முறை தவறிப் பழகுற பொண்ணுல்லங்களேய்யா”
“அவ வயசு அப்பிடிப்பட்டது முருகையா… என்ன சொன்னாலும் என் கிட்ட நீங்க இதை மறைச்சது தப்பு தான்”
“அதில்லங்கய்யா..”
முருகையா முடிப்பதற்குள் ஜான் ஆரம்பித்தார்.
“நம்ம அந்தப் பயலைக் கூப்புட்டு எச்சரிப்போம்யா… இவரைத் திட்டி எந்த பிரயோஜனமும் இல்லய்யா…. விசுவாசம் அது இதுனு எங்களுக்குப் பாடம் எடுக்குறவரோட விசுவாசத்தோட லெச்சணம் இதுதான்”
ஜான் இப்படி சொன்னதுதான் தாமதம், முருகையா அவரை அடிக்கப் பாய்ந்தார்.
ஜானும் கலிங்கராஜனும் சுதாரிப்பதற்குள் அடித்தும் விட்டார்.
“வாயை மூடு சொல்லிட்டேன்,.. என் விசுவாசத்தைப் பத்தி நீ பேசக்கூடாது… நீ செஞ்சிட்டிருக்குற திருட்டுத்தனம் எல்லாம் எனக்கும் தெரியும்… அதெல்லாம் ஐயா கிட்ட சொல்லி உன்னை வேலைய விட்டு அனுப்ப எனக்குக் கொஞ்சநேரம் ஆகாதுல… உன் புள்ளை பாவம்… தாயில்லா புள்ளை அது… அதுக்காக பாக்குறேன்… இன்னொரு வாட்டி நீ என் விசுவாசத்தைக் கிண்டல் பண்ணுனா உன்னைக் கொன்னுடுவேன்” என மிரட்டவும் செய்தார் அவர்.
இச்சம்பவத்தைத் தோட்டத்தில் இருந்த வேலையாட்கள் அனைவரும் பார்த்துவிட்டார்கள் என்றதும் ஜானுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
“நீ என்னைக் கொல்லுற வரைக்கும் நான் வேடிக்கை பாப்பேனாக்கும்? அதுக்கு முன்னாடி உன்னை நான் துடிக்க துடிக்க கொன்னுடுவேன் கிழவா” என அவரும் வார்த்தைகளை அள்ளித் தெளித்தார். இப்படியெல்லாம் பேசக்கூடியவர் இல்லை ஜான். இந்த மாற்றத்திற்கு காரணம் சாத்தான் வழிபாட்டுக்கூட்டங்களில் கொடுக்கப்படும் போதைமருந்து.
முருகையாவின் கோபத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது கலிங்கராஜனால். அவரது விசுவாசத்தைக் கேள்வி கேட்டால் அது அநியாயமென அவருக்கும் தெரியும். ஆனால் ஜான் போன்ற அமைதியான மனிதர் இவ்வாறு கொதிப்படைந்து வார்த்தைகளை மூர்க்கத்தனத்துடன் வெளியிட்டதை தான் அவரால் நம்பவே முடியவில்லை.
இரு ஊழியர்களுமே அவருக்கு முக்கியம். ஒருவருக்காக மற்றொருவரை அவரால் விலக்க முடியாது. எனவே இருவரையும் சமாதானம் செய்தார் அவர்.
“அந்தப் பய செஞ்ச காரியத்துக்கு நீங்க ரெண்டு பேரும் ஏன் சண்டை போட்டுக்கிறிங்க? ஜான் இப்பலாம் உனக்கு ரொம்ப கோவம் வருது… இது சரியில்ல… முருகையா நீங்களும் இப்பிடி கை நீட்டிருக்கக்கூடாது” என இருவரையும் கண்டித்தவர் ஜானிடம் நிஷாந்தைச் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதுவும் இனியா பள்ளிக்குப் போயிருக்கும் சமயத்தில் தான் அவனை வீட்டுக்கு அழைக்கவேண்டுமென சொல்லிவிட்டார் அவர்.
அவர் சொன்னபடி இனியா பள்ளிக்குச் சென்றதும் ஒரு நாள் நிஷாந்தை ஜான் சாந்திவனத்துக்கு அழைத்து வந்தார். இனியாவை முத்து ஒருதலையாகக் காதலிப்பது நல்லவேளையாகக் கலிங்கராஜனுக்குத் தெரியவில்லை என்று எண்ணி அவர் நிம்மதியடையும் அளவுக்குக் கலிங்கராஜன் நிஷாந்திடம் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
“உனக்குனு இந்தச் சமுதாயத்துல என்ன அடையாளம் இருக்கு தம்பி? உன் தகுதிக்கு என் பொண்ணு இருக்குற பக்கத்துக்கு நீ வரலாமா? ஏகலைவன் சாரோட மருமகனா போயிட்ட… இல்லனா உன்னை என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரியாது… இனிமே என் பொண்ணு பின்னாடி காதல் கீதல்னு சுத்துறதா கேள்விப்பட்டேன்னா யோசிக்காம ஏகலைவன் சார் கிட்ட இதை பத்தி சொல்லிடுவேன்… ஜாக்கிரதை”
அவரது மிரட்டலுக்கு நிஷாந்த் அசருவான் என ஜானுக்குத் தோன்றவில்லை. இனியாவையும் கண்காணிக்கவேண்டுமென கலிங்கராஜனிடம் போட்டுக்கொடுத்தார் அவர்.
அதன் விளைவு கலிங்கராஜன் மகளின் மொபைல் போனைப் பிடுங்கிக்கொண்டார்.
“நான் இன்ஸ்டாக்ராம்ல நம்ம புராடக்ட்ஸ் பத்தி விளம்பரம் பண்ணுறேன்பா… அதுக்கு எனக்கு மொபைல் வேணும்” என இனியா என்னென்னவோ சொல்லிக் கேட்டுப் பார்த்தும் அவளது மொபைல் போனும் மடிக்கணினியும் இனி திருப்பித் தரப்பட மாட்டாது என கறாராகச் சொல்லிவிட்டார் கலிங்கராஜன்.
இனியாவின் மொபைல் பறிமுதல் செய்யப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவன் முத்துவே. ஒரு வாரம் இனியாவின் இன்ஸ்டாக்ராம் கணக்கில் எந்தப் பதிவும் வரவில்லை என்றதும் நேரே ஜானின் வீட்டுக்கே போய் சாந்திவனத்தில் எதுவும் பிரச்சனையா என விசாரிக்க ஆரம்பித்தான்.
“முதலாளி ஐயா கிட்ட நிஷாந்த் பயலையும் முருகையா கிழவனையும் மாட்டிவிட்டேன் முத்து… ஐயா கோபத்துல கொந்தளிச்சு நிஷாந்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு… அதோட இனியாம்மாவோட மொபைலையும் லேப்டாப்பையும் பிடுங்கி வச்சிட்டாரு… இனிமே அந்தப் பொண்ணு இந்த ஜென்மத்துல இன்ஸ்டா பக்கம் தலை வச்சு படுக்க மாட்டா முத்து”
ஜம்பமாகத் தனது பெருமையைப் பீற்றிக்கொள்வதாக எண்ணி முத்துவிடம் நடந்ததை உளறிவிட்டார் ஜான்.
தான் சொன்னதையெல்லாம் கேட்டு முத்து தன்னைப் பார்த்து பிரமிப்பான் என்று நினைத்தவருக்கு, கண்கள் கோபத்தில் சிவக்க அவரது சட்டையைப் பற்றியதும் ஆச்சரியமாகிப்போனது.
“முத்து என்னடே இதெல்லாம்.,..” என அவனது கையைச் சுட்டிக் காட்டியவரைக் கோபத்தோடு கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான் முத்து.
“என்னால ஒரு நாள் அவ வீடியோ பாக்காம இருக்க முடியாதுய்யா… இனியானா எனக்கு அவ்ளோ பிடிக்கும்னு உனக்கும் தெரியும்ல…. சொல்லு தெரியும்ல?”
ராட்சசத்தனமான பலத்தோடு கழுத்தை நெறித்தவனிடம் விழி பிதுங்க “ஆ…. ஆமா” என்றார் ஜான்.
“அப்ப ஏன்யா போனை பிடுங்குற லெவலுக்கு பிரச்சனைய கொண்டு போன? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…” பல்லைக் கடித்தபடி கழுத்தை இன்னும் இறுக்கமாக நெறித்தான் முத்து.
அவன் முரடன் என்பதை ஜான் நன்கறிவார். ஆனால் இப்படிப்பட்ட மூர்க்கத்தனத்தை இதுவரை அவனிடம் கண்டதில்லை. நல்ல உயரமும் பருமனும் கொண்டவனுக்குள் பிசாசு எதுவும் புகுந்துகொண்டதோ என ஐயமுறும் அளவுக்கு முத்துவின் பிடி மூர்க்கமாய் இருந்தது.
ஜான் அவனிடமிருந்து விடுபடத் துடித்தார். போராடினார். ஒரு கட்டத்தில் சோர்வடைந்து கண்கள் சொருகியபோது முத்துவே விடுவித்தான்.
அவனது கண்கள் இரண்டும் கோவைப்பழங்களைப் போல சிவந்திருந்தன.
மூச்சு வாங்கியது ஜானுக்கு. பார்வை மங்கியிருக்க இருமலோ நிற்காமல் வந்து சாகடித்தது.
குரல்வளையே நொறுங்கியிருக்கும் என்ற சந்தேகம் அவருக்கு. விண்விண்னென வலித்தது தொண்டை.
மரணபீதியோடு முத்துவைப் பார்த்தார் ஜான். இப்போதும் அவனது உருவம் மங்கலாகத் தான் தெரிந்தது.
“இங்க பாரு, இனியாவ பாக்காம என்னால இருக்கமுடியாது… அடிக்கடி பொன்மலைக்கு வந்தா ஊர்க்காரங்க சந்தேகப்படுவாங்கனு என் மேக்கப் திறமையால ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேசம் போட்டு பைத்தியக்காரன் மாதிரி சாந்திவனத்துக்கு முன்னாடி திரியுறேன்… எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் அவளோட இன்ஸ்டாக்ராம்ல வர்ற வீடியோவும் அவ அப்பப்ப போடுற போட்டோவும் தான்… அதுக்கு ஆப்பு வச்சிட்டியேய்யா… நல்லா கேட்டுக்க, இன்னொரு தடவை இனியா விவகாரத்துல நீ மூக்கை நுழைக்கக் கூடாது” என்றான் அவன்.
“டேய்….பைத்தி…யமா நீ? அந்த… அந்தப் பொண்ணு… ப… பணக்காரப்பொண்ணு… அவ … அப்பா… இதுக்கு சம்…மதிக்க… அந்தப் பொண்ணு இன்னொரு… பையனை… காதலிக்குறாடா”
தொண்டை வலித்தாலும் பரவாயில்லை எனத் திணறலுடன் அவனுக்கு அறிவுரை கூறினார் ஜான்.
“வாயை மூடுய்யா… எனக்கு எல்லாம் தெரியும்… இனியாவ எப்பிடி எனக்குச் சொந்தமாக்கிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… அதுக்கு இடையூறா அவ அப்பன் வந்தாலும், காதலன் வந்தாலும், அந்தக் கிழவன் முருகையா வந்தாலும் போட்டுத் தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்… நீ வந்தாலும் சேம் ட்ரீட்மெண்ட் தான்” என்றான் அவன் கடுமையாக.
ஜானின் மனம் படபடவென அடித்துக்கொண்டது.
“அந்த… பொண்ணு… இனியா… இனியாம்மாக்கு… உன்னை… பிடிக்க…”
“பிடிக்கலனா அவளைக் கொன்னுட்டு நானும் செத்துடுவேன்”
பைத்தியக்காரன் போல முத்து என்றோ கத்தியது இப்போது கூட தனது காதில் ஒலிப்பதாக ஜான் இதன்யாவிடம் கூறினார்.
அவர் கூறிய அனைத்தையும் கேட்ட இதன்யா யோசனையோடு மோவாயைத் தடவிக்கொண்டாள்.
“முத்து இப்ப எங்க இருப்பான்? கொல்லத்துல அவன் ஃப்ரெண்ட் வீட்டைத் தவிர வேற எங்கல்லாம் அவன் போக சான்ஸ் இருக்கு?” சீற்றத்துடன் கேட்டாள் அவள்.
ஜான் பயத்துடன் எச்சிலை விழுங்கிக்கொண்டார்.
“அந்த இடத்தைத் தவிர வேற எங்கயும் போகமாட்டான் மேடம்”
“மறுபடியும் பொய் சொல்லி எங்களை ஏமாத்தணும்னு நினைச்ச, வாழ்க்கை முழுக்க நீ ஜெயிலை விட்டு வெளியவே வரமுடியாதபடி பண்ணிடுவேன் ஜாக்கிரதை”
பாதி விசாரணையை முடித்துக்கொண்டவள் ஜானை எச்சரித்துவிட்டு வெளியே வந்தபோது மகேந்திரன் முக்கியமான தகவலொன்றைக் கூறினார்.
“ஜான் சொன்ன அடையாளத்தை வச்சு முத்துவோட ஸ்கெட்சை டெவலப் பண்ணிட்டோம் மேடம்”
“அப்பிடியா? வாங்க போய் பாப்போம்”
விசாரணைக்குழுவின் அலுவலக அறைக்குள் ஜான் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட படத்தை வைத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் மார்த்தாண்டனும் முரளிதரனும்.
இதன்யா வந்ததும் அவளிடம் படத்தைக் காட்டினார் முரளிதரன்.
முதலில் சாதாரணமாகப் பார்த்த இதன்யா ஏதோ உறுத்த “முரளி சார் கொஞ்சம் அந்த பேப்பரைக் குடுங்க” என்று வாங்கி உற்றுப்பார்க்க ஆரம்பித்தாள்.
பார்த்த சில நொடிகளிலேயே அந்தப் படத்திலிருந்த முத்து யாரென கண்டுகொண்டாள் அவள்.
சென்னையிலிருந்து திரும்பி வந்த இரவன்று தேவாலயத்தின் முன்னே பாதிரியார் பவுலிடம் பேசிவிட்டு மறைந்து மறைந்து போனதே ஒரு ஹூடி உருவம், அவனே தான் ஸ்கெட்சில் இருந்தான். தேவாலய விளக்கின் வெளிச்சத்தில் அன்று இதன்யா அவனது முகத்தைத் தெளிவாகப் பார்த்திருந்தாளே! பாதிரியாரும் சொன்னாரே பக்கத்து ஊர்க்காரன் முத்து என. அதே பெயரில் வேறொருவன் இருக்கலாமென அசட்டையாக இருந்துவிட்டோமோ? இதன்யாவுக்குள் இவ்வளவு எளிதாக இவனைத் தப்பவிட்டோமே என்ற இயலாமை உருவெடுத்து அது கோபமாய் விஷ்வரூபமெடுத்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

