ஹோட்டல் மெரிடியனின் ரெஸ்ட்ராண்ட் பகுதி…
பிரதியுஷாவும் ராகவும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். பிரதியுஷா வந்ததிலிருந்து தன் மனதிலுள்ள விஷயங்களை வெளிப்படையாகக் கொட்டிக் கொண்டிருந்தாள். ராகவ் காபியை ருசித்தபடி அவள் சொல்வதைக் கதை கேட்பதைப் போலக் கவனித்துக் கொண்டிருந்தான்.
“ராகவ் ஹனிபிக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் குடுங்க… நீங்க ரொம்ப அவசரப்பட்டா அவ வேற மாதிரி முடிவெடுத்திருவா… கோவம் வந்துச்சுனா அவ எதையும் யோசிக்க மாட்டா… அப்புறம் மறுபடியும் கௌசிக்கா தான் தலைகுனிஞ்சு நிக்கணும்… ஆல்ரெடி விக்ரம் விஷயத்துலயே அவங்க மனசொடைஞ்சுப் போயிட்டாங்க… இப்போ மறுபடி ஹனிபி எதாச்சும் ஏடாகூடமா பண்ணி வைச்சா அதோட விளைவு கௌசிக்காவைத் தான் பாதிக்கும்” என்று அவள் சொல்லவும் காபி கப்பைக் கீழே வைத்தவன் உச்சுக் கொட்டிவிட்டு கேலிப்புன்னகையுடன் பிரதியுஷாவைப் பார்த்தான்.
“எவ்ளோ அக்கறை ஃப்ரெண்டோட ஃபேமிலி மேல! ஐ அம் இம்ப்ரெஸ்ட் பாபி(அண்ணி)… இந்த அக்கறையைப் பார்த்ததும் எனக்கு என்ன தோணுதுனா பேசாம இந்த ரிலேஷன்ஷிப்பை பிரேக் பண்ணுனா என்னனு தோணுது… பிரேக் பண்ணிடவா?” என்று தலையைச் சரித்துப் புருவம் உயர்த்திக் கேட்டவனின் குரலில் பிரதியுஷாவுக்கு உள்ளுக்குள் திகில் பரவியது. ஆனால் இவன் ஏன் அப்படி செய்யப்போகிறான் என்ற எண்ணம் அவளுக்குத் தைரியம் அளித்தது. எனவே நம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தாள் அவள்.
“ஏன் இப்பிடிலாம் பேசுறிங்க ராகவ்? இதால உங்க லவ் தான் பாதிக்கப்படும்”
“அஹான்! நான் யாரை லவ் பண்ணுறேன் பாபி?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீங்க ஹனிபியை லவ் பண்ணுறிங்க தானே! அப்பிடி சொல்லித் தானே உங்க ஃபேமிலியோட அவங்க வீட்டுல வந்து பேசினிங்க”
“நான் அவந்திகாவைக் காதலிக்கிறேனு உங்க கிட்ட சொன்னேனா? இல்லைனா அவளே வந்து உங்க கிட்ட சொன்னாளா? ஏன் இப்பிடி குழந்தையா இருக்கிங்க?” என்று ஏளனத்துடன் கேட்டு பிரதியுஷாவை அதிர வைத்தான் அவன்.
“லவ் பண்ணலைனா அப்புறம் எதுக்குக் கல்யாணம் அது இதுனு கௌசிக்காவைக் குழப்பிவிட்டிங்க?” என்ற பிரதியுஷாவின் குரலில் கோபத்தின் சாயல்.
“லவ் பண்ணுனா தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ரூல் இருந்துச்சுனா இந்தியாவுல முக்கால்வாசி பேருக்கு வாழ்க்கையில கல்யாணமே நடக்காது பாபி! அதுவுமில்லாம பிரதியுஷாங்கிற யானையைக் கட்டுப்படுத்துறதுக்கு எனக்குக் கிடைச்ச அங்குசம் அவந்திகா… அவ எவ்ளோ சீக்கிரமா என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வர்றாளோ அவ்ளோ சீக்கிரமா நீங்களும் பய்யாவும் ஒன்னு சேருவிங்கனு நான் கால்குலேட் பண்ணி காயை நகர்த்துனேன்… பட் நான் எதிர்பார்த்ததை விட ரிசல்ட் ரொம்ப சீக்கிரமா வந்துடுச்சு”
“திஸ் இஸ் டூ மச் ராகவ்… நீங்க உங்க லைபோட சேர்த்து அவந்திகா லைபையும் ஸ்பாயில் பண்ணிட்டிருக்கிங்க… அவளுக்கு வாழ்க்கையைப் பத்தி ஆயிரம் கனவுகள் இருக்கு… எந்தத் தைரியத்துல நீங்க இப்பிடி அவளோட ஃபேமிலியை ஏமாத்துறிங்க?”
“ஏன் இந்த உலகத்துல ஏமாத்துறதுக்கான உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கா ‘பாபி’?
“எனக்கும் வருணுக்கும் இடையில இருக்கிற பிரச்சனை என்னனு உங்களுக்குத் தெரியாது ராகவ்… இதுல தேவையில்லாம நீங்க அவந்திகாவைக் கொண்டு வராதிங்க பிளீஸ்”
“அப்போ நீங்க வருண் பய்யாவைப் பத்தி கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க… உங்க பிராப்ளமை பேசித் தீர்த்துக்கோங்க… உங்களுக்கும் பய்யாவுக்கும் பிரிக்க முடியாத உறவு எப்போ வருதோ அப்போ தான் நான் அவந்திகாவைப் பத்தி யோசிப்பேன்”
“எனக்கும் வருணுக்கும் இடையில எல்லாம் முடிஞ்சுப் போச்சு ராகவ்”
“அப்போ எனக்கும் அவந்திகாவுக்கும் இடையில எல்லாமே ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சுடும்… பரவால்லையா?”
“நீங்க ஹனிபியைப் பத்தி யோசிக்கவே மாட்டிங்களா ராகவ்? அவளுக்கு இப்போ தான் நிச்சயதார்த்தம் நின்னு போச்சு.. இப்போ நீங்களும் பிரேக் பண்ணுனிங்கனா அவ லைப் என்னாகும்?”
“ஐ டோன்ட் கேர்… யாரு அந்தப் பொண்ணு? ஜஸ்ட் ட்வென்ட்டி ஒன் டேய்ஸ் ஒரே வீட்டுல இருந்தோம்… அவ்ளோ தான்… ஆனா வருண் பய்யா எனக்கு உயிர்… முன்னப் பின்ன தெரியாத அந்தப் பொண்ணா என்னோட பய்யாவானு பார்த்தா நான் என்னோட வருண் பய்யாவைப் பத்தி தான் யோசிப்பேன்… அவளோட லைப் மேலே உங்களுக்கு அக்கறை இருந்துச்சுனா நீங்க வருண் பய்யாவைப் பத்தி யோசிங்க” என்று முடிவாக உரைத்துவிட்டு எழுந்தான்.
“எனக்கு அவந்திகாவை நினைச்சா பாவமா தான் இருக்கு… ஆனா அவளோட ஃப்ரெண்டுக்கு அவ மேல துளி கூட அக்கறை இல்லைனு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் மட்டும் என்ன பண்ண முடியும்?” என்ற கேள்வியுடன் நின்றவனை வெறித்தாள் பிரதியுஷா. ஆனால் ராகவின் பார்வையில் கிஞ்சித்தும் இளக்கமில்லை.
அவ்வளவு தான் விஷயம் என்பது போல அவன் அங்கிருந்து வெளியேறிவிட பிரதியுஷாவுக்குத் தன்னால் தான் இவ்வளவு அனர்த்தங்களும் நடக்கிறதோ என்று தோண ஆரம்பித்துவிட்டது. ராகவின் வார்த்தைகளில் இருந்து அவனுக்குச் சிறிது கூட அவந்திகாவின் நலனிலோ கௌசல்யாவின் நிலையிலோ அக்கறை இல்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
யோசனையுடன் அங்கிருந்து வெளியேறியவளுக்கு மனம் முழுவதும் குழப்பமேகங்கள் சூழ்ந்திருக்க இரண்டு வாரங்கள் இப்படியே கடந்தது. இந்த இருவாரத்தில் அவந்திகாவின் விரக்தியும், கௌசல்யாவுக்கு அவந்திகாவின் திருமணத்திலுள்ள ஆர்வமுமாகச் சேர்ந்து பிரதியுஷாவைப் பாடாய்ப்படுத்த ரித்திமாவும் அவந்திகாவும் ஒரு நாள் அவளிடம் சொல்லிவிட்டு ராகவின் அலுவலகத்துக்கு அவனைப் பார்க்கச் சென்றனர்.
பிரதியுஷா மறுக்க மறுக்கக் கேளாமல் அங்கே சென்ற இருவருக்கும் அங்கே காத்திருப்பு தான் பதிலாகக் கிடைத்தது. அலுவலகம் ஆரம்பித்த வேளையில் சென்றவர்களை மதியம் வரை ராகவ் சந்திக்கவேயில்லை. ஒரு கட்டத்தில் அவந்திகா பொறுமையிழந்து எழப் போன நேரத்தில் கிஷோர் “ஹாய் அவந்திகா! வாட் அ சர்ப்ரைஸ்… ஏன் இங்கே வெயிட் பண்ணிட்டிருக்க? பய்யாக்கு கால் பண்ணலையா நீ?” என்று கேட்டவனுக்கு ஒரு முறைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
“உங்க அண்ணாவுக்கு நான் வந்தது எப்போவோ தெரியும்… ஆனா மீட்டிங் இருக்குனு சொல்லி எங்களை வெயிட் பண்ணச் சொன்னான்…. இதோ ஆஃப்டர் நூன் ஆயிடுச்சு, இன்னும் உங்க அண்ணாவோட தரிசனம் கிடைக்கலை” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு நிற்க
ரித்திமா அவசரமாக “ஹனிபி! எதாவது பிஸியான ஒர்க் இருக்கும்… நம்ம வெயிட் பண்ணலாம்” என்று அவளைப் பொறுத்திருக்குமாறு கூறவும் தான் கிஷோரின் பார்வை ரித்திமாவைச் சந்தித்தது.
அவளைப் பார்த்ததும் கண்ணில் சுவாரசியம் கூட “உன் ஃப்ரெண்டுக்கு இருக்கிற பொறுமை கூட உனக்கு இல்லையே அவந்திகா… மூனு பேரும் மூனு விதமா இருக்கிங்க… ஒருத்தவங்க ஓவர் ஆட்டிட்டியூட், இன்னொருத்தவங்க பொறுமைசாலி, இடையில நீ எல்லாம் கலந்த கலவை!” என்று சொல்லவே பிரதியுஷாவைப் பத்தி அவன் சொன்னதில் எரிச்சலுற்ற ரித்திமா
“ஹலோ! உங்களுக்கு உஷாவைப் பத்தி தெரியலைனா தயவு பண்ணி அவளைப் பத்தி பேசாம இருங்க.. சும்மா வாய்க்கு வந்ததைப் பேசிகிட்டு” என்று வெடித்தவளைப் பார்த்துச் சிரித்தவன்
“இப்போ தான் பொறுமைசாலினு பட்டம் குடுத்தேன்… அதுக்குள்ள தாம்தூம்னு குதிச்சதால பட்டம் வாபஸ்… எனி ஹவ் அவங்க எப்பிடி பட்டவங்களா இருந்தாலும் அவங்களால எங்க வருண் பய்யா பட்ட கஷ்டத்தைலாம் பார்த்தா யாரா இருந்தாலும் அவங்க மேல கோவம் தான் வரும்” என்று அழுத்தமானக் குரலில் சொல்லிவிட்டு தன் சகோதரனுக்குத் தான் ஒன்றும் சளைத்தவன் இல்லை என்று நிரூபித்தான்.
“ஓகே! நீங்க குடும்பத்தோட ஒன்னா உக்காந்து கோவப்பட்டுக்கோங்க… ஆனா நாங்க இங்க வந்து மூனுமணி நேரத்துக்கு மேலே ஆச்சு… இப்பிடி எங்களை இன்சல்ட் பண்ணுனவனைப் பத்தி நான் யோசிக்கிறதா இல்லை… வா ரித்தி… இனிமே அவனா நேர்ல வந்து நின்னாலும் நான் பேசப்போறதில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ரித்திமாவை அழைத்துக் கொண்டு வெளியேறினாள் அவந்திகா.
கிஷோர் அவளைத் தடுக்க முற்படவில்லை. இந்நிலையில் அவளும் ராகவும் சந்தித்தால் அது கண்டிப்பாக நல்ல விதமான பேச்சுவார்த்தையாக இருக்காது என்பதை அறிந்தவன் ராகவின் அலுவலக அறைக்குச் சென்றான்.,
“பய்யா! இப்போ தான் அவந்திகாவும் அவளோட ஃப்ரெண்டும் கிளம்பிப் போனாங்க” என்றவனின் பேச்சைக் கேட்டதும் தான் ராகவிற்கு அவளைத் தான் அலுவலகம் வரச் சொன்னதே நினைவுக்கு வந்தது.
“அவ செம கோவத்துல போறா பய்யா” என்றவனிடம்
“நான் மீட்டிங் பிஸியில மறந்துட்டேன் கிஷோர்… இப்போ என்ன பண்ணுறது?” என்று கேட்டு விழித்துக் கொண்டிருந்தான் ராகவ்.
அவந்திகா நல்ல காலத்திலேயே அவளுக்கும் தனக்கும் ஒத்துவராது என்று பக்கம் பக்கமாக உரையாற்றுவாள். இதில் இன்றையச் சம்பவத்துக்குப் பின்னர் அவள் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசுவதே ஆச்சரியம் தான் என்று ராகவிற்கு நன்றாகப் புரிந்துவிட்டது.
அதோடு சில தினங்களுக்கு முன்னர் பிரதியுஷாவிடம் அவந்திகாவைப் பற்றித் தனக்கு அக்கறையில்லை என்று வேறு சொல்லியிருந்தான். அதனால் உடனே அவளைச் சந்தித்துவிட்டால் பிரதியுஷா தனது எச்சரிக்கையின் தீவிரத்தன்மையை உணராமல் போய்விடுவாள்; அது வருணின் வாழ்க்கையைப் பாதித்துவிடும் என்ற கோணத்தில் யோசித்தான் அவன். அதனால் அவந்திகாவை மறந்து தான் மீட்டிங்கில் இருந்தது கூட நல்லது தான் என்று தன்னைச் சமாதனப்படுத்திக் கொண்டான் ராகவ்.
ஆனால் தான் ஒரு விதமாக இந்தப் பிரச்சனையை அணுகினால் அவந்திகா வேறுவிதமாக யோசிப்பவளாயிற்றே என்று ஆயாசத்துடன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே தனது அலுவலகத்துக்குத் திரும்பியிருந்த அவந்திகா அங்கே வெடித்துக் கொண்டிருந்தாள்.
“இனிமே யாராச்சும் ராகவுக்குத் தான் உன் மேலே எவ்ளோ லவ்னு டயலாக் பேசுனா அதுக்கு அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு மூச்சுவாங்க நின்றவளிடம்
“கூல் டவுன் ஹனிபி… ஒர்க் பிஸியில மறந்துருக்கலாம் தானே… நீ ஏன் இதை இன்சல்ட் பண்ணுறதா நினைக்கிற?” என்று அவளை அமைதிப்படுத்தும் எண்ணத்தோடு பேச ஆரம்பித்த பிரதியுஷாவைக் கையமர்த்தினாள் அவந்திகா.
“அவன் நீ நினைக்கிற மாதிரி இல்லை உஷா… அவனுக்கு அவந்திகா தானேனு அலட்சியம்… இதுவே அவங்கம்மாவோ பாட்டியோ இல்லை நீயே கூட போயிருந்தாலும் அடிச்சுப் பிடிச்சு ஓடிவந்திருப்பான்… ஆனா நானும் ரித்தியும் அவனுக்கு தேர்ட் பெர்சன் தானே… அதான் இவ்ளோ அலட்சியம்… இப்பிடி அலட்சியப்படுத்துறவனைத் தான் நான் கல்யாணம் பண்ணியே ஆகணும்னு நீயும் சித்தியும் அடம்பிடிக்கிறிங்க… அவன் சரியான திமிர் பிடிச்சவன் உஷா… அவனுக்கு என் மேலே லவ்வெல்லாம் கிடையாது… ஒரு மனுஷன் நம்மளைக் காதலிக்கிறானா இல்லையாங்கிறது அவனோட கண்ணுலயே தெரியும்… அவன் கண்ணுல என்ன அவனோட செய்கையில கூட, துளியளவு காதல் இல்லை… பிச்சைக்காரங்களுக்குக் காசு போடுறவங்களுக்கு இருக்கிற அலட்சியம் தான் அவனோட செய்கையில நிறைஞ்சிருக்கு… இனியும் அவனைக் கல்யாணம் பண்ணுனா தான் ஆச்சுனு யாரும் என்னைக் கட்டாயப்படுத்துனா அவ்ளோ தான்” என்று பொரிந்து கொட்டிவிட்டு அடங்கினாள்.
பிரதியுஷாவுக்குப் புரிந்துவிட்டது இதற்கு மேல் இவளிடம் பேசி பிரயோஜனமில்லை என்று. அதே நேரம் ராகவிற்கும் அவந்திகா மீது அப்படி ஒன்றும் அக்கறையில்லை என்பது அவனது இச்செய்கையால் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
அதே நேரம் அவந்திகாவால் தன்னையோ தன்னைச் சார்ந்தவரையோ யாரும் அலட்சியப்படுத்துவதையோ தாங்கிக்கொள்ள இயலாது. அந்த அலட்சியத்தை அவளால் மறக்கவும் இயலாது.
இந்த இரு துருவங்களையும் பற்றி யோசித்தே மனதைக் குழப்பிக் கொண்ட பிரதியுஷா தன்னால் நேர்ந்த அனர்த்தங்களைத் தானே சரிசெய்ய எண்ணி வருணைச் சந்திக்க சென்றாள். அவனுக்காக ரெஸ்ட்ராண்டில் காத்திருந்தவளுக்குத் தன் எதிரே வந்து நின்ற வருணைப் பார்த்ததும் உள்ளுக்குள் உருக்கிவிட்டது.
ஜீவனிழந்த கண்கள், புதராய் வளர்ந்திருந்த தாடி, ஒழுங்காய் வாரப்படாத சிகை என பார்ப்பதற்கு வேறு யாரோ போல தோற்றமளித்தவனின் முகம் களையிழந்து காணப்பட்டது.
எவ்வளவு கம்பீரமாக, ஆண்மையின் இலக்கணமாய் வலம் வந்த அந்த ஆறடி ஆண்மகனைத் தனது பிரிவு இவ்வாறு மாற்றிவிட்டதே என்ற வருத்தம் எழவும் பிரதியுஷாவுக்குக் கண்கள் கலங்கத் தொடங்கியது.
“ரதி!” என்றவனின் அழைப்பில் இத்தனை நாட்கள் பிடித்துவைத்திருந்த பிடிவாதம் நெருப்பிலிட்டக் கற்பூரமாய்க் கரைய கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள் பிரதியுஷா.
கண்களில் நீர்வழிய “ஐ அம் சாரி வருண்… நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல… என்னால தான் நீ இப்பிடி ஒரு கோலத்துல இருக்க” என்று சொன்னவளை இருக்கையில் அமரச்சொன்னவன்
“அழாதே ரதி பிளீஸ்! நீ மட்டும் இல்லை, நானும் தப்பு பண்ணிருக்கேன் தானே! நான் உன்னை லவ் பண்ணுறேங்கிற ஒரே காரணத்துக்காக நான் நினைச்சப்படி தான் நீ நடந்துக்கணும்னு பிடிவாதம் பிடிச்சிருக்கக் கூடாது ரதி… உன்னோட வேலையை நீ எவ்ளோ லவ் பண்ணுறேனு தெரிஞ்ச நானே, கல்யாணத்துக்கு அப்புறம் அதைத் தூக்கிப் போடுனு சொன்னா உனக்குக் கோவம் தானே வரும்? நாம கோவத்தைப் பேசி தீர்த்துக்காம சண்டை போட்டுப் பிரிஞ்சது தான் தப்பு ரதி… இதோ இப்போ இருக்கிற இதே பொறுமை அப்போ இருந்திருந்தா இந்தப் பிரிவே வந்திருக்காது… இதுல என்னோட பங்கு அதிகம்” என்று சொல்லிவிட்டு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“இனிமே எந்தப் பிரச்சனை வந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்… இனிமே நமக்குள்ள பிரிவே வரக்கூடாது… அப்பிடி இன்னொரு தடவை நடந்துச்சுனா இட் வில் பி த லாஸ்ட் டே இன் மை லைஃப்” என்று சொன்னவனின் மார்பில் சாய்ந்து கொண்டவளின் மனநிலையும் அதுவே.
அவளுக்கு இருந்த ஒரே கலக்கம் இந்த ஞானோதயம் தனக்கு முன்னரே வந்திருந்தால் அவந்திகாவுக்கும் ராகவுக்குமிடையேயான இந்தக் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமே என்பது தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


