“நான் கொண்டிருக்கும் கொள்கைகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரானவள் நீ. ஆனாலும், விதிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு உண்டு போலும்; உன்னை மட்டுமே என் தலையெழுத்தாக எழுதி வைத்துவிட்டது.”
ராஜவிலாசம், மகாராஜநகர்…
சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது அந்த பங்களாவுக்குள். தோட்டமும் விருட்சங்களும் சூழ்ந்த பங்களா பெயருக்கேற்ற ராஜகம்பீரத்துடன் இருந்தது அந்த மாலை நேரத்துச் சந்திரோதயத்தில்!
பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலைக்கு முன்னே காராமணிச் சுண்டலும் கொழுக்கட்டையும் படைக்கப்பட்டிருக்க விநாயகர் அகவலைப் பாடி முடித்தார்கள் அந்த வீட்டின் இரண்டு எஜமானிகளும்.
மூத்தவர் அந்த ராஜவிலாசத்தின் பெயருக்குச் சொந்தக்காரரான ராஜவேலுவின் மனைவி அங்கயற்கண்ணி. இளையவரான குந்தவை ராஜவேலுவின் இளைய சகோதரரான மார்த்தாண்டனின் மனைவி.
அண்ணனும் தம்பியும் தங்களது பூர்வீக பங்களாவில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். தம்பி தொழிலைக் கவனிக்க அண்ணனோ அரசியலில் மூழ்கினார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இருவருக்குமே ஆணும் பெண்ணுமாக இரு மகவுகள்! மூத்தவர் ராஜவேலுவின் மூத்தப் புதல்வி புவனாவுக்கு மதுரையில் திருமணமாகி மதுஸ்ரீ என்ற ஆறு வயது மகள் இருக்கிறாள். அவளுக்கு அடுத்துப் பிறந்தவன் புகழேந்தி. சித்தப்பா மார்த்தாண்டனுடன் இணைந்து அவர்களது குடும்பத் தொழிலான விருட்சம் எஸ்டேட்ஸ் அண்ட் பில்டர்ஸை நிர்வகித்து வருகிறான்.
இளையவரின் புதல்வன்தான் ராஜவேலுவின் அரசியல் வாரிசாய் நாம் சந்தித்த நேத்ரன். தொழிலில் மும்முரமாய் இருந்தாலும் பெரியப்பாவின் மீதான அதீத பாசத்தால் அரசியலிலும் அடியெடுத்து வைத்திருந்தான். அவனது தங்கை நிருபமா கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.
செல்வத்துக்கும் சந்தோஷத்துக்கும் குறைவற்ற வீடு அது. இரு சகோதரர்களும் தங்களது பிள்ளைகளிடையே பாகுபாடோ ஏற்றத்தாழ்வோ பார்த்ததில்லை.
பிள்ளைகளும் தங்களது தந்தையரைப் போல ஒருவருக்கொருவர் துணையாய் ஒற்றுமையாய் இருந்தார்கள் என்பதுதான் இங்கே சிறப்பு.
புகழேந்திக்கு முப்பது வயதாகிவிட்டது. இந்த ஆண்டு அவனுக்குத் திருமணமாகிவிடுமெனக் குடும்ப ஜோதிடர் சொல்லியிருந்தார். எதற்கும் சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருக்குமாறு அவர் சொல்லிவிட அங்கயற்கண்ணியும் குந்தவையும் தவறாமல் விரதமிருக்கத் தொடங்கினார்கள்.
ஒரு பக்கம் அவனுக்குப் பெண் பார்க்கும் படலமும் நடந்துகொண்டிருந்தது. கடவுள் அருளால் வீட்டுக்கு வரப்போகிற மருமகள் தாங்கள் கடைப்பிடித்து வருகிற ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்றுபவளாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் அதிகபட்ச வேண்டுதல்.
சாம்பிராணியும் ஊதுபத்தியும் நறுமணத்தைப் பரப்ப விநாயகர் வெள்ளை எருக்குமாலை அணிந்து ஜம்மென்று அமர்ந்திருக்க அவரைப் பூஜித்து முடித்தார்கள் குந்தவையும் அங்கயற்கண்ணியும்.
ராஜவேலுவும் மார்த்தாண்டனும் கட்டுமான நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிவிட்டார்கள். பக்தி என்று வந்துவிட்டால் அவர்களும்கூடக் கடவுள் முன்னே அடக்கமே உருவாய் வந்து நிற்பார்கள்.
கற்பூர ஆரத்தி முடிந்ததும் காராமணிச் சுண்டலைக் குந்தவை கொடுக்க பயபக்தியோடு வாங்கி வாயில் போட்டுக்கொண்டார்கள் இருவரும்.
“மகனுக்குக் கல்யாணம் ஆகணும்னு பிரம்மச்சாரி சாமிகிட்ட வேண்டிக்கிறியே அங்கயற்கண்ணி” என ராஜவேலு கிண்டல் செய்ய
“சாமி விஷயத்துல கிண்டல் பண்ணாதீங்க” என்று அங்கயற்கண்ணி முறைக்க
“அந்தப் பிரம்மச்சாரி சாமிதான் நம்ம புகழுக்கு ஏத்த பொண்ணு வீடு ஒண்ணை நம்ம கண்ணுல காட்டிருக்கு மாமா” எனக் குந்தவை சொல்லவும் மற்ற மூவரின் கண்களிலும் ஆச்சரியம்.
“ஈவ்னிங் உங்ககிட்ட சர்ப்ரைஸா சொல்லலாம்னு வெச்சிருந்தேன்” என்றவர் “என் ஃபிரெண்ட் மனோ பத்தி உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல அக்கா. அவ பொண்ணுக்கு வரன் தேடுறா. நம்ம புகழ் பத்திச் சொன்னேன். போட்டோவும் அனுப்புனேன். மனோவும் அவ பொண்ணு போட்டோ அனுப்பியிருக்கா. பொண்ணு பெருமாள்புரத்துல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. அப்பிடியே புரொபசர் ஆகுறதுக்கான எக்ஸாமுக்கும் படிக்குறாளாம். இங்க பாருங்க” எனத் தனது மொபைலின் வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படத்தை அங்கயற்கண்ணியிடம் காட்டினார்.
புகைப்படத்திலிருந்த பெண்ணைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துப்போனது.
“பேர் என்ன?”
“துர்கா! இவ குழந்தையா இருந்தப்ப செங்கோட்டையில பாத்தது. எங்கப்பாவைப் பாக்கப் போனப்பதான் இவ பிறந்திருந்தா”
“பொண்ணு எனக்குப் பிடிச்சிருக்கு. புகழ்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு மேற்கொண்டு பேசிடலாம் குந்தவை. நீயே இதைப் பாத்துக்க. உன்னைவிட யாரால புகழுக்கு நல்ல பொண்ணைக் கொண்டுவர முடியும்?”
அங்கயற்கண்ணி இப்படித்தான்! குந்தவை ஒரு காரியம் செய்தார் என்றால் அது கச்சிதமாக இருக்கும் என்று அழுத்தமாக நம்புபவர். அவர் ஒரு பொறுப்பைக் கையில் எடுத்தால் நிச்சயம் அதைச் சரியாகச் செய்து முடிப்பார் என்ற உறுதி!
“சரி அக்கா!” என்றவரிடம்
“சின்னவன் இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கணுமே?” என அங்கயற்கண்ணி கேட்கும்போதே வெளியே கார் வரும் சத்தம் கேட்டது.
“இந்தா வந்துட்டானே!” என முகம் மலர்ந்தவர் உடனடியாக வேலையாட்களை அழைத்தார்.
“காபி, ஸ்நாக்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா? கட்சியாளுங்க வந்துட்டாங்க. கடகடனு கொண்டுபோய்க் குடுங்க” என ஆணையிட்டுவிட்டு “பிள்ளையாருக்குச் செஞ்ச பிரசாதம் இருக்கு. இதை ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டுட்டு வேலையைக் கவனிங்க. நீ சின்னவனுக்குப் பிரசாதம் எடுத்து வெச்சிட்டல்ல குந்தவை?” என்று கேட்க
“அவனுக்கும் புகழுக்கும் எடுத்து வெச்சிட்டேன் அக்கா. நம்ம ராணியம்மா எல்லாத்துக்கும் நொரநாட்டியம் பேசுவா. அவளுக்கு வேண்டாம்” என்று குந்தவை சொல்லவும் அங்கயற்கண்ணியிடம் புன்னகையின் சாயல்.
“ஒரே பொண்ணுல்ல! கொஞ்சம் அதிகாரம் பண்ணணும் குந்தவை. அப்பதான் புகுந்த வீட்டுல சமாளிச்சு வாழ முடியும்”
வேலையாட்கள் பிரசாதச் சுண்டலை எடுத்துக்கொண்டு போகவும் கட்சியாட்களுடன் நேத்ரன் வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது. அவனது வலதுகரம் போல வந்த நிகிலனுடன் ஏதோ தீவிரமாய்ப் பேசிக்கொண்டே நடந்து வந்தவன் வீட்டுக்குள் கமழ்ந்த ஊதுபத்தி, சாம்பிராணியின் நறுமணத்தை ரசித்துக் கண்களை மூடிக்கொண்டான்.
“நீங்க பண்ணுற பூஜைக்கு இந்நேரம் இந்த வீட்டுல ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் நடந்திருக்கணும் பெரியம்மா” என்றான் கிண்டலாக.
“உனக்குக் கல்யாண ஆசை வந்துடுச்சு போலையே” அவனுக்குச் சளைக்காமல் அங்கயற்கண்ணி பேச
“எம்.எல்.ஏ ஆகுறப்ப என் பொண்டாட்டி கூடவே இருந்தா எனக்குக் கசக்கவா செய்யும் பெரியம்மா” என்று அவன் கண்சிமிட்ட வந்திருந்த கட்சி ஆட்கள் சிரித்தார்கள்.
அங்கயற்கண்ணியும் உடன் சிரித்தவர் “உங்கம்மா புகழுக்குப் பொண்ணு பாத்திருக்கா. அந்தப் பொண்ணுக்குத் தங்கச்சி இருக்கானு விசாரிக்குறேன். இருந்தா ஒரே மேடையில ரெண்டு கல்யாணத்தையும் பண்ணிடலாம்” என்றார்.
அப்போதுதான் இடையில் வெட்டினான் நிகிலன்.
“பொண்ணெல்லாம் ஏற்கெனவே பாத்தாச்சு. கொஞ்சம் டைம் குடுத்தா உங்களுக்குச் சிரமம் வெக்காம இவனே கல்யாணத்தைப் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுவான் அத்தை”
அங்கயற்கண்ணியும் குந்தவையும் ‘இது என்ன புதுக்கதை’ என்ற ரீதியில் நேத்ரனைப் பார்க்க அவனைக் காப்பாற்ற ராஜவேலு அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டார்.
அந்த வீட்டில் அரசியல் பேசுவதற்காகத் தனியறை உள்ளது. கட்சியாட்கள் வந்தால் அங்கேதான் கூடுவார்கள். அவர்களுக்குச் சாப்பாடு, பானம் எல்லாம் அந்த அறைக்கே போய்விடும்.
ராஜவேலுவும் நேத்ரனும் அங்கே செல்ல அவர்களைத் தொடர்ந்து கட்சியின் பிரமுகர்களும் சென்றார்கள். அங்கயற்கண்ணியும் குந்தவையும் வீட்டுக்கு வருபவர்களை வெறும் வயிற்றோடு அனுப்புவதில் உடன்பாடு இல்லாதவர்கள்.
அடுத்த சில நிமிடங்களில் காபியும் சிற்றுண்டியும் அந்த அறைக்குள் வேலையாட்களால் கொண்டுசெல்லப்பட்டது.
குந்தவை தனது தோழியிடம் பேசுவதில் மும்முரமானார். அவரது தோழி மனோன்மணிக்கு இரண்டு புத்திர செல்வங்கள். மூத்தவன் ராணுவத்தில் இருந்தான். இளையவள்தான் துர்கா.
அங்கயற்கண்ணிக்குத் துர்காவைப் பிடித்துப்போனதெனத் தோழியிடம் தெரிவித்தார் அவர்.
“நீ புகழோட ஃபோட்டோவைத் துர்காவுக்குக் காட்டுனியா மனோ? என்ன சொன்னா அவ?”
“நேத்துதான் காட்டுனேன்டி. அவளுக்குப் பிடிச்சிருக்குதாம். ஆனா மகாராணி வாயைத் திறந்து சொல்லலை. பொண்ணுக்குப் பிடிச்சா அவருக்கும் ஓகேதான். நீ உன் ஓரகத்தி மகன்கிட்ட பேசிட்டுச் சொல்லு. பொண்ணு பாக்குறதுக்குச் சரியான நாள் குறிச்சிடுவோம்”
“சரி! கரண் எப்பிடி இருக்கான்?”
“நல்லா இருக்கான்னு சொல்ல ஆசையாதான் இருக்கு. அவன் பாக்குற மேஜர் வேலை அப்பிடிப்பட்டது இல்லையே. இப்ப தவாங்ல இருக்கான். போன மாசம் கூட யாங்ட்சேல சீனா ஆர்மி கல்வீச்சுல ஈடுபட்டுச்சுனு பிரச்சனை போச்சு. மனசு பதறிடுச்சுடி. அவனுக்காகத் தினமும் ஆயிரம் தடவை சாமி கும்பிடுறேன்”
குந்தவைக்கு அவரது மனநிலை புரிந்தது. மனோன்மணிக்கு மகனை ராணுவத்திற்கு அனுப்ப விருப்பமேயில்லை. ஆனால் அவரது மைந்தனின் பிடிவாதத்தால் வேறு வழியின்றிச் சம்மதித்தார். அவனும் இப்போது மேஜர். அவனுக்குக் கீழே நூற்றியிருபது ராணுவ வீரர்களைக் கொண்ட கம்பெனி கமாண்டர் அவன்.
பணி உயர்ந்தால் ஆபத்தும் உயர்வது ராணுவத்தில் சாத்தியம் என்பதால் தான் மனோன்மணிக்கு இத்துணை பயம்! அவரிடம் இதமாகப் பேசி மனதை ஆறுதல்படுத்தினார் குந்தவை.
அதே நேரம் அரசியல் பேச்சு முடிவடைந்து மறுநாள் தேர்தல் பிரச்சாரத்துக்கு நேத்ரனோடு தானும் செல்வதாகக் கட்சியாட்களிடம் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் ராஜவேலு.
“அடுத்த வாரம் தலைவரும், பொதுச் செயலாளரும் தூத்துக்குடிக்கு வர்றாங்க. அங்க மேடையில நம்ம கட்சி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேப்பாங்க. நாம போகணும் நேத்ரன். அதுக்குள்ள நீ உன் தொகுதிக்குள்ள சின்னச் சின்ன வேலையைப் பாத்து வை”
“சரி ராஜுப்பா!”
“அதை விடு! ஏதோ பொண்ணு பாத்திருக்கனு உன் ஃபிரெண்ட் சொன்னானே”
ராஜவேலு அவனது தோளில் கைபோட்டுத் தோழனைப்போல வினவவும் நேத்ரனிடம் மந்தகாசப் புன்னகை.
“பாக்க மட்டும்தான் செஞ்சேன் பெரியப்பா. மேற்கொண்டு நோ ஐடியா. அவன் ஏதோ கிண்டல் பண்ணுறான்” என்றான்.
“ம்ம்… புரியுது. ஆனா உன் வயசுக்கு நீ ரொம்ப கவனமா இருக்கணும். இல்லனா தேவையில்லாத பிரச்சனையில இழுத்துவிட்டுடுவாங்க”
பெண்கள் விவகாரத்தில் ஓர் அரசியல்வாதி அதுவும் இளம் அரசியல்வாதி சிக்கினான் என்றால் அவனது அரசியல் வாழ்க்கைக்கு அதுவே பெரிய கரும்புள்ளியாகிவிடும். அதனால்தான் ராஜவேலு தம்பி மகனை எச்சரித்தார்.
நேத்ரனுக்கும் அது புரிந்ததால் சரியென ஏற்றுக்கொண்டான்.
“நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன் பெரியப்பா” எனக் கழன்றுகொண்டான் அவன்.
படிகளில் ஏறி மேல்தளத்தில் அமைந்திருக்கும் அவனது அறைக்கு வந்தவன் நேரே குளியலறைக்குள் போய்விட்டான். இந்த அலைச்சல், வெயில் இதெல்லாம் அவனைக் கொஞ்சம் சோர்வடைய வைத்தனதான். ஆனாலும் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இந்த அரசியல் பயணத்தில்!
தன்னைக் காணும் கண்களில் தெரியும் பிரமிப்பும் மரியாதையும் புதுவிதப் போதையாய்!
குளித்து முடித்து இலகுவான டீ-ஷர்ட்டுக்குள் புகுந்த பிறகுதான் நேத்ரனுக்குப் புத்துயிர் வந்தது போலிருந்தது.
நிகிலன் சரியாய் அச்சமயத்தில் அந்த அறைக்குள் வந்தான். அவன் கையில் சில அறிக்கைகள் அடங்கிய கோப்புகள் இருந்தன.
“இந்தா மச்சி! இதெல்லாம் நீ நிக்குற தொகுதியில உள்ள பிரச்சனைகள். இது இன்னைக்குப் போனோமே அந்த ரங்கநல்லூர் பகுதியில உள்ள பிரதான பிரச்சனைகளோட ஃபைல். அந்த ஊருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒண்ணு இருக்கு. ஆனா அங்க போறதுக்கான வழியில ப்ராப்பரான ரோடு இல்ல. மழை பெஞ்சா சேறும் சகதியுமா இருக்குனு நிறைய புகார்.”
ரங்கநல்லூர் என்றதும் நேத்ரனின் கண்களில் ஒளிகூட நிகிலன் அவன் தோளில் அடித்தான்.
“வருங்கால எம்.எல்.ஏ மாதிரி பிஹேவ் பண்ணுடா. டீச்சரம்மாவைத் தூக்கி ஓரமா போடு.”
“இதென்ன வம்பா இருக்கு? எம்.எல்.ஏனா ஒரு பொண்ணு அழகா இருந்தா ரசிக்கக் கூடாதா? பெரியப்பாவும் கவனமா இருனு எச்சரிக்குறார். நீயும் உன் பங்குக்கு அட்வைஸ் பண்ணுற”
“எல்லாம் உன் மேல இருக்குற நல்லெண்ணத்துலதான். பள்ளிக்கூட ஆசிரியையைத் தொந்தரவு செய்த தமிழ்நாடு முன்னேற்றக் கழக வேட்பாளர்னு நியூஸ் சேனல்ல உன் போட்டோ வந்துடக் கூடாதுங்கிற ஆதங்கம் எங்களுக்கு. எலக்சன் வரைக்கும் உங்க மனசைக் கொஞ்சம் கண்ட்ரோல்ல வெய்ங்க வேட்பாளரே!”
“உஃப்”
உதட்டைக் குவித்துப் பெருமூச்சு விட்டான் நேத்ரன்.
“சரி! இவ்ளோ தூரம் சொல்லுற. கேட்டுக்குறேன்! ஸ்ரீவைகுண்டத்துல கபடி டீமை மீட் பண்ணப் போகணும் நாளைக்கு, மறந்துடாத. பசங்க எதுவும் கால் பண்ணுனாங்களா? நேஷனல் லெவல் போட்டிக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு”
“நீ இருக்குறப்ப அவனுங்களுக்கு என்ன கவலை? அந்தப் போட்டிக்குத்தான் ரெடியாகிட்டிருக்கானுங்க. ஒரு பையன் மட்டும் காலேஜ் ஃபீஸ் பத்திப் பேசணும்னு சொன்னான்”
“அவன் நம்பர் குடு. பேசுறேன்”
அரசியல்வாதியின் முக்கியத் தகுதியே மக்களோடு தன்னைப் பிணைத்துக்கொள்வதுதான். அந்த வகையில் நேத்ரன் படுபுத்திசாலி. அவனது பெரியப்பா எம்.எல்.ஏவாக இருந்த தொகுதியில் அவனுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகம்.
ராஜவேலுவைப் பார்க்க முடியாதவர்கள்கூட எம்.எல்.ஏ அலுவலகத்தில் வந்து அவனிடம் பேசிவிட்டுப் போவார்கள். தங்களில் ஒருவன் எனுமளவுக்கு அவனிடம் பழகவில்லை என்றாலும் தங்களுக்கு ஒரு தேவை என்றால் வந்து நிற்பான் என்ற நம்பிக்கை உண்டு தொகுதி மக்களுக்கு.
தேர்தலே இன்னும் முடியாதபோதும் எம்.எல்.ஏ என்று அவனுக்கு அவனே தைரியமாய்ச் சொல்லிக்கொள்ளக் காரணமும் அந்த மக்கள் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஓட்டாய் மாறும் என்ற உறுதிதான்.
அரசியல் அவனுக்குத் தொழிலை விட சுவாரஸ்யமான களமாகத் தெரிந்தது. அதில் இறங்கி விளையாடத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டான் நேத்ரன்.
அதே நேரம் அரசியலைப் பற்றிய புரிதல் இல்லாத அரசியல்வாதி என்றாலே மோசம் என எண்ணும் சராசரிப் பெண்ணொருத்தியை அவனது வாழ்க்கையில் நுழைத்து அவனைப் பாடாய்ப்படுத்தத் தயாரானது விதி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


