“பறவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள அநேக நல்ல விஷயங்கள் இருந்தாலும் தன் கூட்டைக் கட்டிக் காப்பாற்றவும் தன் குஞ்சுகளையும் இணையையும் அரவணைக்கவும் அவை காட்டும் முனைப்பை மனிதர்கள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட குடும்பத்தின் மீது காட்டினால் இங்கே நிறைய திருமணங்கள் அதிருப்தியின்றி அன்போடு தொடரும்.”
-வசுமதி
மணையில் மகிழினியையும் சர்வானந்தனையும் அருகருகே அமர வைத்திருந்தார்கள். மகிழினி வழக்கத்தைக் காட்டிலும் நெகிழ்ந்து காணப்பட்டாள். தாய்மைக்குரிய பூரிப்பையும் வழக்கமான அவளது கடுகடு முகத்தையும் தாண்டி ஏதோ ஒரு நெகிழ்ச்சி அவளிடம்.
இத்தனை மாதங்கள் பிடிவாதமாய் அவளைப் பார்க்க விரும்பாமல் அவளுடன் எந்த விதத்திலும் தொடர்புகொள்ளாத கணவனின் வருகை கொடுத்த நெகிழ்ச்சியாக இருக்கலாம். அல்லது அவனிடம் கருத்து வேறுபாடுகொண்டு பிரிந்து பிறந்தகம் வரும் முன்னர் உதிர்த்த சொற்கள் கொடுத்த தாக்கத்தால் வந்த நெகிழ்ச்சி எனும் போர்வை போர்த்திய குற்றவுணர்ச்சியாக இருக்கலாம். அவளாலே இன்னதென அறுதியிட்டுக் கூற முடியாத உணர்வலைகள் அவளைத் தங்களுக்குள் புரட்டியெடுத்துக்கொண்டிருந்தன.
இருவருக்கும் மலர் மாலைகள் போட்டார்கள். மகிழினிக்குக் கன்னத்தில் சந்தனம் தீற்றி வளையல் போட்டுவிட்டார்கள். இருவரையும் பூக்களால் ஆசீர்வதித்தார்கள். கை நிறைய வெள்ளி மற்றும் தங்கக் காப்புகளும் அவற்றுக்குள் அடங்கிக் கிடந்த வண்ண வண்ணக் கண்ணாடி வளையல்களும் மகிழினியின் கரத்துக்குத் தனி சோபையைக் கொடுத்தன.
மாமியார் வந்து வளையல் போட்டுவிட்டபோது தன்னையறியாது பதற்றமும் தவிப்புமாய் மாறிப்போனாள் மகிழினி. சர்வானந்தனின் முகமோ எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அதே நேரம் கடுகடுவென இல்லாமல் இயல்பாய் இருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மொத்தத்தில் என்ன பிரச்சனையென இப்போதும் அவர்களின் குடும்பத்தினரால் கண்டறிய முடியவில்லை. வளைகாப்பு முடிவடைந்ததும் மகிழினிக்குத் திருஷ்டி சுற்றினார்கள். மற்றொரு பக்கம் மதிய விருந்து ஆரம்பித்தது.
“மகிழை முதல்ல சாப்பிடச் சொல்லுங்க மதினி. புள்ளத்தாய்ச்சி எவ்ளோ நேரம் பசியோட இருப்பா?” எனப் பரமேஸ்வரி சொன்னதும்
“அதில்ல மதினி. இன்னும் ஆளுங்க வருவாங்க. அதுக்குள்ள சாப்பிட வெச்சா…” எனத் தயங்கினார் குமுதவல்லி.
“வர்றவங்க வரட்டும். அவ சாப்பிடுற வரைக்கும் காத்திருக்கட்டும். முறை அது இதுனு பாத்தா நம்ம புள்ளை பட்டினியா கிடக்கும். நீங்க சாப்பாடு எடுத்து வைங்க அவளுக்கு”
பரமேஸ்வரியின் பேச்சைக் குமுதவல்லியால் தட்டிவிட முடியுமா என்ன? ஒரு தட்டில் சாப்பாடு போட்டு மகிழினிக்குக் கொடுத்துவிட்டார்.
வளைகாப்புக்கு வசுமதியின் குடும்பத்தாரும் வந்திருந்தார்கள். மகள் வராதது அவர்களுக்குப் பெரும் மனக்குறையாய்!
“நான் மெட்ராஸ் போனப்பவே மருமகளுக்கு வாந்தியும் தலைசுத்தலுமா இருந்துச்சு. அவளால இவ்ளோ தூரம் ட்ரெயின்ல வர முடியாது சம்பந்தி.” என்று கமலநாதன் சொல்ல
“இருந்தாலும் முறைனு ஒண்ணு இருக்குல்ல சம்பந்தி. வசும்மா வராததை சொந்தக்காரங்க எப்பிடி எடுத்துப்பாங்களோ?” என்றார் செல்வராஜ் பரிதவிப்புடன்.
கூடவே “அடுத்த மாசம் நாங்க ஒரு எட்டு போய் அவளைப் பாக்கலாம்னு இருக்கோம்” என்றார்.
“போய்ப் பாருங்க சம்பந்தி. அவளுக்கும் உங்களைப் பாத்தா சந்தோஷமா இருக்கும். சுகமதிக்கு அப்ப லீவ் வந்துடும்ல? அவளையும் அழைச்சிட்டுப் போங்க”
இந்த உரையாடல்களைக் கேட்டபடி நடமாடினான் வசீகரன். அவனுக்குச் சர்வானந்தனிடம் பேசியே ஆகவேண்டும் என்ற துடிப்பு. ஆனால் அவன் அகப்படவேண்டுமே!
ஒருவழியாக அவனைத் தேடிக் கண்டுபிடித்த இடம் அவனது கார். கார்க் கண்ணாடியைத் தட்டி அவனிடம் பேசவேண்டுமெனச் சைகை காட்டச் சர்வானந்தனும் சிரித்த முகமாய்க் கார்க் கதவைத் திறந்து அவனை உள்ளே வர அனுமதித்தான்.
முன்னிருக்கைகளை இருவரும் ஆக்கிரமித்திருந்தார்கள்.
“நீங்க வளைகாப்புக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம் சர்வா.”
“மாமா அவ்ளோ தூரம் கூப்பிட்ட அப்புறமும் வரலனா மரியாதையா இருக்காதுல்ல வசீ. அதான் வந்தேன். மத்தபடி இங்க எதுவும் மாறிடலங்கிறதை நீங்க புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன்”
வசீகரனின் கண்களில் மெல்லிய கவலை படர்ந்தது. வளைகாப்புக்கு வந்ததை வைத்துச் சர்வானந்தனுக்கும் தங்கைக்குமான பிணக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாமென யோசித்தவனுக்குத் தலை பாரமானது.
“ஏன் சர்வா இவ்ளோ பிடிவாதம்? என்னதான் நடந்துச்சு உங்களுக்குள்ள? மகிழுக்கு சப்போர்ட் பண்ணி நான் பேச வரல. அவ என்ன தப்பு பண்ணுனானு சொன்னீங்கனா நிச்சயம் கண்டிக்குறேன். ப்ளீஸ் சர்வா! சொல்லுங்க”
சர்வானந்தனிடம் அலட்சியச் சிரிப்பு.
“நீங்களா வசீ? நீங்க எடுத்துச் சொல்லுவீங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்க விருந்துக்கு வந்தப்ப எங்கம்மாவை அவ என்னெல்லாம் பேசுனா. நீங்க பாத்துட்டுச் சும்மாதானே இருந்தீங்க வசீ? வசு நியாயமானவ. அவ உங்க தங்கச்சியோட தப்பைச் சுட்டிக்காட்டுனதுக்காக நீங்க பிரச்சனை பண்ணுனதா ஒரு செய்தி என் காதுக்கு வந்துச்சு. அந்தப் பிரச்சனை உங்களுக்குள்ள பூதாகரமாகி இப்ப உங்களுக்கும் வசுக்கும் ராசியில்லனு மாமா சொன்னார். உங்க பொண்டாட்டிகிட்டவே நியாயமா நடந்துக்க முடியாத மனுஷன் நீங்க. என்னோட பிரச்சனைக்கு எப்பிடி உங்களால நியாயமா யோசிக்க முடியும்?”
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சர்வானந்தன் பேசிவிட வசீகரனுக்கு வாயடைத்துப்போனது. தங்கைக் கணவனின் பேச்சில் அவனுக்குக் கோபம் எல்லாம் வரவில்லை. ஏனெனில் அவன் சொன்னது எதுவும் பொய்யில்லையே! ஆனால் உண்மையோ ஏற்றுக்கொள்ளக் கசப்பாக அல்லவா இருந்தது.
சர்வானந்தன் அவனது மனம் படும் பாட்டினைக் கண்டுபிடித்துவிட்டான். உடனடியாகக் குற்றவுணர்வுக்கும் ஆளானான்.
“சாரி வசீ! உங்களை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல. ஆனா நீங்க உங்க தங்கச்சி விவகாரத்துல எப்பவும் நியாயமா இருக்கமாட்டீங்கனு தோணுது”
“அப்பிடி இல்ல சர்வா! இது அவ வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரம். இதுல நான் நியாயமாதான் இருந்தாகணும். ப்ளீஸ்! என்ன பிரச்சனைனு சொல்லுங்க”
சர்வானந்தன் தனக்கும் மகிழினிக்கும் பிரச்சனை முகிழ்த்த நாளில் நடந்த அனைத்தையும் அதற்குக் காரணமான அவளது ஜட்ஜ்மென்டல் குணத்தால் அவ்வப்போது குடும்பத்தால் உண்டான சங்கடங்களைப் பத்தியும் சொல்ல ஆரம்பித்தான்.
திருமணமான புதிதில் பரமேஸ்வரியிடம் அன்பும் அரவணைப்புமாகத்தான் மகிழினி இருந்தாள். அல்லது அப்படி இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாள். பரமேஸ்வரியும் அவளைத் தனது மகளாகவே கருதி அன்பு காட்டினார்.
ஆனால் அவரது மைந்தனுக்கு அன்னை என்றால் உயிர். அதுவும் தன்னை மிஞ்சிய பாசம் அவர் மீது என அறிந்தபோது அவளால் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இத்தனைக்கும் சர்வானந்தனின் குடும்பத்தார் எந்த விதத்திலும் அவளுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்ததேயில்லை. இவ்வளவு ஏன்? அவள் கொஞ்சம் தனிமையை விரும்புகிறாள் என்பதற்காகச் சொந்த ஊரிலேயே அவர்கள் தனிக்குடித்தனம் போக ஏதுவாகப் புது வீடு கட்டச் சொல்லிவிட்டார் சர்வானந்தனின் தந்தை வரகுண பாண்டியன்.
ஆனாலும் அன்பும் பண்புமாய்த் தன்னைக் கவனிக்கும் மாமியாரிடம் மகிழினிக்கு ஒட்டுதல் வரவில்லை. கணவனை அவர் இயக்குவதாகவே கற்பனை செய்துகொண்டு அவ்வப்போது அந்தக் கற்பனையால் உண்டான கசப்புகளை அவரிடம் காட்டிக்கொண்டே இருப்பாள்.
அவளின் இந்தச் செயல்கள் கருவுற்ற பின்னர் இன்னும் தீவிரமானது. அதற்கான சாம்பிள்தான் வசீகரன் – வசுமதி விருந்துக்கு வந்தபோது நடந்த சம்பவம்.
இதற்கெல்லாம் படுகேடாக ஒரு நிகழ்வு நடந்தேறியது. அதுதான் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், கட்டப்போகிற வீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாமெனக் கலந்தாலோசனை செய்த நிகழ்வு.
அதில் பரமேஸ்வரி தனது தேர்வுகளைச் சொல்ல அப்போதே முகம் மாறிப்போனது. தனது வீடு, தனது குழந்தை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இவர் ஏன் தலையிடுகிறார் என முகம் அப்போதே மாறியது அவளுக்கு.
“இதைத்தான் வைக்கணும்னு கட்டாயமில்ல சர்வா. மருமகளுக்கு என்ன பிடிக்குதோ அதை வை. என் பங்குக்கு ஒரு பேரைச் சொன்னேன்” என்றதோடு பரமேஸ்வரி அந்த விவகாரத்தையே மறந்துபோனார். ஆனால் அவரது மருமகள் மறக்கவேண்டுமே!
அன்று இரவு எதேச்சையாகப் பெயர் விவகாரம் பற்றிய பேச்சு வருகையில் தனது அன்னையின் தேர்வுகள் குறித்துச் சொல்லிவைத்தான் சர்வானந்தன். இத்தனைக்கும் அந்தப் பெயர்கள்தான் உறுதியென அவன் சொல்லவில்லை.
ஆனால் அந்த நேரத்தில் மகிழினியின் நாவில் சனி தான் குடியேறியிருக்க வேண்டும். என்ன பேசுகிறோமெனப் புரியாமல் வார்த்தைகளைச் சிதறடித்தாள் அவள்.
“எனக்காகத்தானே அந்த வீடு கட்டுறீங்க? நான்தானே புள்ளை பெத்துக்கப் போறேன்? அப்ப என் தேர்வுதானே ஃபைனலைஸ் ஆகணும். ஆனா இங்க எல்லாம் தலைகீழாதான் நடக்கும்ல.”
“அவங்க சொன்னதை நாம வைக்கணும்னு அவசியமில்ல மகிழ். நீ டென்ஷன் ஆகாத”
“எப்பிடி டென்ஷன் ஆகாம இருக்க முடியும்? அவங்க மூஞ்சில முழிக்கவே பிடிக்காமதான் தனி வீடு கட்டிட்டுப் போறது. அதுக்கும் என்ன பேர் வைக்கலாம்னு அவங்களே சொன்னா எனக்கு எரிச்சல் வராதா? சீ! கல்யாண வீடா இருந்தா நான்தான் பொண்ணா இருக்கணும், எலவு வீடா இருந்தா நான்தான் பொணமா இருக்கணும்னு நினைக்குற டைப்”
அவளது பேச்சுச் சர்வானந்தனை உசுப்பிவிட்டது.
“வாயை மூடு! வரவர நீ மரியாதையில்லாம பேசுற மகிழ். இதுவரைக்கும் நம்ம சம்பந்தப்பட்ட எதுலயாச்சும் எங்கம்மா தலையிட்டிருக்காங்களாடி? வாய்க்கு வந்ததைப் பேசாத. போ”
“உங்கம்மாய்கூட இருக்குறதே பெரிய தலையீடுதான். எப்பப் பாத்தாலும் அம்மா அம்மானு அவங்களைப் பத்தி மட்டுமே யோசிப்பீங்களா?”
“அவங்களைப் பத்தி மட்டும் யோசிக்குறவனா இருந்தா நீ ஆசைப்பட்டதுக்காகப் புது வீடு கட்டித் தனிக்குடித்தனம் போகச் சம்மதிச்சிருக்கமாட்டேன். என் அம்மா மகன் மருமகளோட வாழ்க்கையில மூக்கை நுழைச்சு அதிகாரம் பண்ணுற டைப்பா இருந்தா நாம தனியா போகச் சம்மதிச்சிருக்கமாட்டாங்க. நீ உங்க வீட்டுல நடக்குறதை வெச்சு எங்கம்மாவைக் கற்பனை பண்ணிக்கிறபோல”
வசீகரனின் வாழ்க்கையில் தேவையற்ற தலையீடுகளை மகிழினியும் குமுதவல்லியும் செய்வது சர்வானந்தனுக்குத் தெரியாதா என்ன?
தங்களைச் சொல்லிவிட்டானே என்ற ஆங்காரத்தில் கண் மண் தெரியாமல் வசைமாரி பொழிய ஆரம்பித்தாள் மகிழினி.
“இங்க பேச்சு நம்மளைப் பத்தி. ஏன் என் குடும்பத்தை இழுக்குறீங்க? எங்க மதினி ஒண்ணும் என்னை மாதிரி இல்ல. ஒண்ணுக்கும் வக்கில்லாத வீட்டுல இருந்து வந்ததால என் அண்ணன் காசைக் கரியாக்குது. அதுக்குத்தான் நானும் அம்மாவும் அப்பப்ப அண்ணன்கிட்ட சிக்கனமா இருனு போன் பண்ணிப் பேசுவோம். நாங்க ஒண்ணும் உங்கம்மா மாதிரி புருஷன் பொண்டாட்டிக்குள்ள சிண்டு முடிஞ்சு விடல. உங்கம்மாவைச் சொன்னதும் அப்பிடியே எகிறிக்கிட்டு வர்றீங்க? உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்குப் பணிவிடை செய்யவும் புள்ளை பெத்துக்கவும் மட்டும் பொண்டாட்டினு ஒருத்தி தனியா தேவைப்படுது. அதையும் உங்கம்மாவே செஞ்சுட்டா அங்க பொண்டாட்டிக்கான தேவையே இருக்காதுல்ல?”
அடுத்த நொடி சர்வானந்தனின் கரம் அவளது கன்னத்தைப் பதம் பார்த்தது. முகமெங்கும் கோபம் தெறிக்க ருத்ராவதாரமாய் நின்றான் அவன்.
“சீ! பொண்ணா நீ? என்ன வார்த்தை பேசுறனு கூடவா புரியாது? இதே வார்த்தையை உன் அம்மா அண்ணனை வெச்சு வசு பேசுனா சும்மா இருப்பீங்களாடி? இது கோவத்துல வந்த வார்த்தை மாதிரி தெரியல. இவ்ளோ அசிங்கமும் உன் மனசுல இருந்திருக்கு. உன்னைப் பாக்கவே அருவருப்பா இருக்கு. உன்கூட வாழ்ந்ததுக்கே நான் அவமானமா ஃபீல் பண்ணுறேன்”
முகத்தில் அருவருப்பைக் கொட்டி மகிழினி சொன்ன வார்த்தைகளின் வீரியத்தைக் குறைக்க முயன்றுகொண்டிருந்தான் சர்வானந்தன்.
மகிழினி பேயறைந்தது போல நிற்க அன்று இரவு வீட்டை விட்டுச் சென்றவன் மறுநாள் காலையில்தான் வந்தான். வந்தவன் பரமேஸ்வரி கொடுத்த பழச்சாறைப் பருகிக்கொண்டிருந்த மகிழினியின் கையைப் பிடித்து எழுப்பினான்.
வரகுணபாண்டியனும், பரமேஸ்வரியும் என்ன நடக்கிறதெனப் புரியாமல் தவித்தபோதே அவளை வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்றான். பின்னே ஓடிவந்த பெற்றோரின் கூக்குரல்களைக் கண்டுகொள்ளாமல் அவளைக் காரில் ஏற்றினான்.
“என்ன நடக்குது சர்வா?” – வரகுணபாண்டியன்.
“இனிமே இவளுக்கு இந்த வீட்டுலயும் என் வாழ்க்கையிலயும் இடம் கிடையாது”
பிடிவாதமாய்ச் சொன்னவன் அன்று மகிழினியை அவளது பிறந்தகத்தில் கொண்டுபோய்விட்டவன் கமலநாதனின் பேச்சால் மனம் கரைந்து வளைகாப்புக்கு வந்திருந்தான். அவன் இடத்தில் இன்னொருவன் இருந்திருந்தால் தாயைப் பழித்தவளை எந்நாளும் திரும்பிப் பார்த்திருக்கமாட்டான் என்பதே உண்மை.
சர்வானந்தன் சொன்ன அனைத்தையும் கேட்டு முடித்த பிற்பாடு வசீகரனுக்குத் தலை சுற்றியது. மேலோட்டமாகப் பார்த்தால் மகிழினியும் வசுமதியைப் போலத் தனது முன்னுரிமைக்காகப் பேசியதாகத்தான் தோன்றும்.
ஆனால் புகுந்த வீட்டின் சூழல், வளர்ந்த விதம், மரியாதையான வார்த்தைகள் இவை மட்டுமே மகிழினியையும் வசுமதியையும் வித்தியாசப்படுத்திக் காட்டின. அவை மட்டுமா? பரமேஸ்வரி ஒன்றும் அனைத்து விவகாரங்களிலும் தலையீடு செய்பவரில்லை.
தங்கையா இந்த மாதிரி அநாகரிகமான வார்த்தைகளை உதிர்த்தாள்? அதைச் சர்வானந்தன் வாயால் கேட்டபோதே வசீகரனுக்கு அருவருத்துப்போனது. அதை நேரில் கேட்டவனுக்கு எப்படி இருக்கும்?
கூடவே தங்கை தனது மனைவியின் குடும்பத்தைப் பற்றியும் மட்டமாகப் பேசியிருக்கிறாள். எங்கிருந்து இந்த முரட்டுத் தைரியம் அவளுக்கு வந்திருக்கும்?
‘வேறு எங்கிருந்து? உன்னிடமிருந்துதான். வசுமதி நல்லதே சொன்னாலும் நீ அதைக் குதர்க்கமாக எடுத்துச் சபை நடுவில் அன்றொரு நாள் சாடினாயே! அதை வைத்து மதினியை என்ன சொன்னாலும் அண்ணன் நம் பக்கம்தான் நிற்பான் என்ற தைரியத்தில் பேசியிருப்பாள்’ என்றது அவனது மனசாட்சி.
ஏன் வசுமதி தனது அன்னையிடமும் தங்கையிடமும் பேச்சைக் குறைத்துக்கொண்டாள் என்பதற்கு ஒருமாதிரியாக விடை கிடைத்ததுபோல உணர்ந்தவனுக்கு மேற்கொண்டு சர்வானந்தனிடம் தங்கையின் வாழ்க்கைக்காகப் பேசும் துணிச்சல் அற்றுப்போனது.
கைகளைக் கூப்பினான் வசீகரன்.
“அந்த நேரத்துல உங்க மனசு எப்பிடியெல்லாம் காயப்பட்டிருக்கும்னு ஒரு மகனா எனக்குப் புரியுது சர்வா. மகிழ் பேசுன அருவருப்பான வார்த்தைகளுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். இதை மறந்துடுங்கனு சொல்ல எனக்கு எந்தத் தகுதியும் இல்ல சர்வா. நீங்க பொண்டாட்டியைச் சந்தோஷமா வாழவெச்ச மனுஷன். உங்ககிட்ட குறை கண்டுபிடிச்சு இவ்ளோ பிரச்சனை பண்ணிருக்கானா இங்க தப்பு என் தங்கச்சிதானே? என்னால அவ பேசுனதுக்கு மன்னிப்பு மட்டும்தான் கேக்க முடியும். அவளைப் பத்தி யோசிங்கனு உங்ககிட்ட சொல்ல வந்தவன் இப்ப எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டுச் சொல்லுறது?”
“மன்னிப்பு கேக்க வேண்டிய ஆள் நீங்க இல்ல. மகிழ் மன்னிப்பே கேட்டாலும் அதை ஏத்துக்குற பக்குவம் இன்னும் எனக்கு வரல. அவ பேசுன வார்த்தைகள் எப்பிடிப்பட்டதுனு தெரியாம என் ஃபேமிலி, உங்க ஃபேமிலி எல்லாம் என்னைத் திமிர் பிடிச்சவன்னு கூட நினைச்சுக்கட்டும். இந்த விஷயம் வெளிய தெரியவேண்டாம். நமக்குள்ள இருக்கட்டும். யாரும் மகிழைக் குறைவா நினைச்சுட வேண்டாம். அதே நேரம் அவளை மன்னிச்சு ஏத்துக்கனு என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் கூடாது. அவ முகத்தைப் பாக்கவே கூடாதுனு இருந்தவன் இன்னைக்கு இவ்ளோ தூரம் வந்திருக்கேன். இதே மாதிரி ஒரு நாள் அவ வார்த்தைகளை மறந்து அவளை ஏத்துக்குற பக்குவமும் எனக்கு வரும்”
சர்வானந்தன் தெளிவாகப் பேசிய விதம் வசீகரனை மெச்சுதலாய் அவனைப் பார்க்க வைத்தது. இன்று இல்லை என்றாலும் என்றோ ஒரு நாள் தங்கையின் வாழ்க்கை சீராகிவிடுமென்ற நம்பிக்கை அவனுக்குள் உதயமானது.
அதே நேரம் தனது எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் பூதாகரமாய் உருவெடுத்தது அவனுக்குள். பிரிந்திருந்தாலும் மகிழினியை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் என்றோ ஒரு நாள் வருமெனச் சர்வானந்தன் நம்புகிறான். ஆனால் ஒரே வீட்டில் இருந்தும் தனது மனைவி தன்னிடம் நம்பிக்கையற்றுப் போனதை வேதனையோடு நினைத்துப் பார்த்தான் வசீகரன்.
தந்தையின் அறிவுரைகள் இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தன.
‘உன் தங்கைக்கு அவளது கணவன் இருக்கிறான். உன் அன்னைக்கு நான் இருக்கிறேன். உன் கடமை உனது மனைவியைக் கவனித்துக்கொள்வது மட்டுமே! அதிலிருந்து நீ தவறினாய்! இனியும் தவறைச் சரிசெய்ய முயலாவிட்டால் நீ உன் வாழ்க்கையை நிரந்தரமாக இழப்பாய்!’
அசரீரியாய்க் கமலநாதனின் அறிவுரை காதில் ஒலித்த கணத்தில் வசீகரனுக்குள் சின்னதாய் முகிழ்த்தது ஒரு தெளிவான தீர்மானம். அந்தத் தெளிவான தீர்மானம் அவனுக்கும் வசுமதிக்குமான இடைவெளியைக் குறைக்குமா? தனது நிபந்தனைகளுக்கு வசீகரன் ஒப்புக்கொண்டால் மட்டுமே இனி வாழ்க்கையெனப் பிடிவாதமாய் இருக்கும் வசுமதியின் எண்ணப்போக்கு மாறுமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


