“முப்பது, நாற்பதுகளில் மனைவியை இரண்டாம்பட்சமாக நடத்திவிட்டு ஐம்பதுகள், அறுபதுகளில் அவள் தன்னைத் தவிர்த்த உலகத்தில் பிள்ளைகள், டிவி சீரியல்களோடு ஐக்கியமாகியிருப்பதை ஆதங்கத்தோடு கடக்கிற கணவன்மார்கள் கடந்த தலைமுறைகளின் சோகச் சித்திரங்கள்!”
-வசுமதி
“குழிப்பணியாரமும் சட்னியும் பண்ணிருக்கேன் வசும்மா. ஐயாக்குப் பிடிக்குமா?”
சமையலறையில் வந்து நின்ற வசுமதியிடம் கேட்டார் ரேவதி. காமாட்சியின் வீட்டில் பணியாற்றுபவர். வசுமதி கேட்டாள் என்பதற்காக அவளது வீட்டில் வேலை செய்ய வந்து மூன்று நாட்கள் ஆகிறது. அவர் ஐயா என்று குறிப்பிடுவது வசீகரனை அல்ல. கமலநாதனை!
ஆம்! மகளின் வளைகாப்புக்கு முன்னர் மகன் – மருமகளின் பிரச்சனையைத் தீர்த்துவிடவேண்டுமென்ற உத்வேகத்தோடு அன்று காலையில் சென்னை மண்ணை மிதித்திருந்தார் மனிதர்.
வசீகரன் எழும்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்று அவரை அழைத்து வந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. வசுமதி அவரை உளமார்ந்த அன்போடு வரவேற்றாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளுக்காக செல்வராஜும் வீரலட்சுமியும் கொடுத்துவிட்ட பட்சணங்களை மருமகளிடம் கொடுத்துவிட்டார்.
“மனோகரம்னா உனக்கு உயிராமே? தங்கச்சி சொல்லுச்சு”
“ஆமா மாமா! அம்மா வீட்டுல செய்யுறப்ப சீனிப் பாகுல சுக்கு தட்டிப் போடுவாங்க. எவ்ளோ சாப்பிட்டாலும் நெஞ்சு கரிக்காது”
மனைவி, மகள், மகளிடம் ஒதுங்கிக்கொண்ட மருமகள் தன்னிடம் அன்பாய்ப் பேசுவதை மனதில் குறித்துவைத்துக்கொண்டார்.
“ஐயாக்குக் காபி கொண்டு வரட்டுமா?” – ரேவதி.
“இல்ல அக்கா! மாமா குளிச்சுட்டுத்தான் எதுவா இருந்தாலும் சாப்பிடுவாங்க. நீங்க போய் ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க. மாமா! நீங்க குளிச்சிட்டு வாங்க. சாப்பிட்டுட்டுக் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருங்க.”
கமலநாதனும் தலையசைத்தார். அவரது உடைமைகள் அடங்கிய பையை வாங்கி வார்ட்ரோபில் வைத்தாள் வசுமதி.
“இங்க ஒரு குழாய்ல ஹாட் வாட்டர் வரும். இதுல சாதா தண்ணி வரும். ரெண்டையும் உங்களுக்கு வேணும்ங்கிற அளவுக்குத் திறந்து வெச்சிருக்கேன். ஷவர்ல இப்ப மிதமான ஹீட்ல வெந்நீர் வரும். ட்ரெயின்ல வந்தது அலுப்பா இருக்கும்ல. வெந்நீர்ல குளிச்சா உடம்புக்கு இதமா இருக்கும். குளிங்க”
மருமகள் பேசிவிட்டுச் சென்றதும் தப்பு எங்கே நடந்திருக்குமென ஓரளவுக்குப் புரிந்துபோனது அவருக்கு.
மேம்போக்காகப் பார்க்கையில் மகிழினியும் குமுதவல்லியும் வசுமதியை நன்றாக நடத்தியதாகத்தான் தோன்றும். ஆனால் மாமியார், நாத்தனார் என்ற உறவு அவர்களை எல்லா நேரத்திலும் அப்படி இருக்க விடவில்லை என்பதே.
அவர்கள் வட்டாரத்தில் பெரும்பணக்காரனை மணமுடித்த மகிழினிக்குத் தங்களை விட செல்வநிலையில் குறைவான குடும்பத்தில் பிறந்த வசுமதி மீது முன்பிருந்தே ஒருவித அலட்சியம் உண்டு.
தன் கணவனைப்போல அண்ணன் ஒன்றும் முதலாளி இல்லையே! மாதச்சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன். அப்படிப் பார்த்தாலும் எல்லா விதத்திலும் வசுமதியின் நிலை தன்னை விடக் குறைவு என்ற எண்ணம் அவளுக்கு வலுவாக உண்டு.
குமுதவல்லிக்கோ தனது பேரழகு மகனை மணந்ததே வசுமதி போன்ற நடுத்தர வர்க்கத்துப் பெண்ணுக்குப் பெரும் வரம் என்ற நினைப்பு. அவனைப் பெற்றவளான தான்தான் என்ன சொன்னாலும் கேட்கவேண்டிய கட்டாயம் வசுமதிக்கு என்ற எண்ணவோட்டமும் அவருக்கு உண்டு.
‘என் மகனை மணக்காமலா இந்த வசதியான வாழ்க்கை இவளுக்கு வாய்த்தது? அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழக் காரணமானவளே நான்தான். நான் பார்த்து இவளை என் வீட்டு மருமகளாக்காவிட்டால் இவளுக்கு இந்த வாழ்க்கை ஏது? அதற்காக இவள் எனக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்’
இந்த இருவரின் சராசரி மாமியார் – நாத்தனார் மனநிலையின் அதீதமே வசுமதியை அவர்களை விட்டு விலக்கியது என்றால், அவர்கள் என்ன செய்தாலும் வசுமதியைக் குற்றவாளி கூண்டில் நிறுத்திய வசீகரனின் குணம் ஒரேயடியாக அவளது வாழ்க்கையிலிருந்து அவனை ஒதுக்கித் தள்ள வைத்துவிட்டது.
தன்னை அவள் பாசமாய் நடத்துவதிலேயே அவளது குணநலனைப் புரிந்துகொண்டார் கமலநாதன். அவர் குளித்து உடைமாற்றி லிவிங் ரூமுக்கு வந்தபோது சமையலறையில் மருமகளும் ரேவதியும் பேசுவது அவரது காதில் விழுந்தது.
சரியாக அந்நேரத்தில் குளித்து இலகு உடையில் வந்தான் வசீகரன்.
“நீ இன்னும் ஆபீஸுக்கு ரெடியாகல?” கமலநாதன் கேட்க
“லஞ்ச் ரெடி பண்ணணும்பா” என்றவன் “காபி குடிக்கிறீங்களா?” எனக் கேட்கும்போதே வசுமதி காபியோடு வந்தாள்.
கமலநாதனிடம் கொடுத்தவள் “உங்களுக்கு சாம்பாரும் வாழைக்காய்ப் புட்டும் செய்யச் சொல்லிருக்கேன் மாமா. ரேவதி அக்கா சமையல் ரொம்ப நல்லா இருக்கும். நீங்க அசந்து போயிடுவீங்க” என்று சொல்லும் சாக்கில் மாமனாருக்கான சமையல் எனது கணக்கு என்று கணவனிடம் சொல்லாமல் சொல்லிவிட்டாள்.
வீட்டில் இரண்டு சமையல் என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டார் கமலநாதன். இப்போது இது குறித்துப் பேசினால் சரிவராது என்பதால் மருமகளிடமிருந்து காபி கோப்பையை வாங்கி அருந்துவதோடு அமைதியாகிப்போனார்.
சிறிது நேரத்தில் மருமகளோடு காலையுணவைச் சாப்பிடுகையில் தங்கள் இருவரது தட்டிலும் குழிப்பணியாரம் சட்னியோடு இருக்க, வசீகரன் கோதுமை தோசையைப் பிய்த்துச் சாப்பிடப் போராடுவதையும் கண்டுகொண்டார்.
மாலையில் அவர்கள் அலுவலகம் முடித்து வந்ததும் “உங்க ரெண்டு பேருக்கும் நேரம் இருந்துச்சுனா என் ரூமுக்கு வாங்க. நாம கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.
வசுமதி முதலில் ஆஜரானாள். சில நொடிகள் இடைவெளியில் வசீகரனும் வந்துவிட்டான். கமலநாதன் இருவரையும் அங்கிருந்த நாற்காலிகளில் அமரச் சொல்லிவிட்டுத் தான் மெத்தையில் அமர்ந்தார்.
“மகிழுக்கு வர்ற வாரம் வெள்ளிக்கிழமை வளைகாப்பு வெச்சிருக்கோம். மாப்பிள்ளை கால்ல விழாதக் குறையா கெஞ்சி அவரை வளைகாப்புக்கு வரச் சம்மதிக்க வெச்சிருக்கேன். அவரும் வர்றதா சொல்லிட்டார். செல்வராஜ் சம்பந்தி வீட்டுலயும் நேர்ல போய் அழைப்பு வெச்சிட்டேன். உங்க ரெண்டு பேருக்கும் வர்றதுக்கு வசதிப்படுமா?”
“உங்க மகன் வருவார் மாமா. என்னை எதிர்பாக்காதீங்க.”
வசுமதி சட்டெனச் சொல்லிவிட கமலநாதனுக்கு அவளது பதிலில் அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவர் எதிர்பார்த்த பதில்தான். ஆனாலும் அப்படியே விட்டுவிட மனமில்லை.
“எனக்குப் புரியுதும்மா. உங்க அத்தை சொன்னா, உங்களுக்குள்ள பிரச்சனை. வீட்டுல ரெண்டு சமையல் போகுதுனு. உங்க பிரச்சனைக்குள்ள நான் எப்பவும் தலையிடமாட்டேன். ஆனா இதுக்கு என்ன தீர்வுனு நீ நினைக்குற? இந்தக் கேள்வியை உன்கிட்ட கேக்குறதுக்கு ஒரே ஒரு காரணம்தான். என் மகனால இந்த விஷயத்துல நியாயமா யோசிக்க முடியாது. அவன் குணம் அது. நீ அப்பிடி இல்ல. சொல்லு”
வசீகரன் கடப்பாறையை விழுங்கியவனைப்போல அமர்ந்திருந்தான். மனமெங்கும் இறுக்கம். வாயைத் திறக்க விடாமல் ஏதோ ஒரு தடை அவனது தொண்டையைக் கட்டிப்போட்டிருந்தது.
வசுமதி தொண்டையைச் செருமிக்கொண்டாள்.
“நான் உங்க மகன்கிட்ட அதிகமா எதையும் எதிர்பாக்கல மாமா. ஒரு மனுஷியா என்னோட சின்னச் சின்ன ஆசைகளை இவர் புரிஞ்சிக்கணும். பொண்டாட்டி, மருமகள், அம்மானு எனக்கான ஸ்தானத்தைப் பத்தி மட்டும் யோசிக்காம இவர்கூட வாழுற சக மனுஷியா எனக்குள்ள இருக்குற வசுமதியை இவர் வசுமதியாவே வாழவிடணும். இவர், நான், எங்க குழந்தை இதுதான் எங்களோட குடும்பம்ங்கிற எண்ணம் இவர் மனசுல வரணும். இவரோட குடும்பமும், என்னோட குடும்பமும் எங்க குடும்பத்தோட முடிவுகள்ல தலையிடுறதை நான் விரும்பல. இது என் வீடு, இங்க இருக்குறது எங்க குடும்பம்னா எனக்குத்தானே இங்க முக்கியத்துவம் இருக்கணும். எல்லாத்துக்கும் எங்கம்மாவைக் கேக்கணும், எங்கம்மா மனசு நோகுது, என் தங்கச்சி அழுறானு அவங்க புராணத்தைப் பாடுறதுக்கு இவர் எதுக்கு இங்க என்கூட வாழணும்? எனக்குப் புரியுது, மகிழோட நிலைமை இப்ப சரியில்ல. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவ சோகமா இருக்குறானா இங்க நானும் அழுது வடியணுமா?
உங்க மகளுக்காச்சும் நல்ல புருஷன், நல்ல மாமியார் அமைஞ்சாங்க. எனக்கு அந்தக் குடுப்பினையும் இல்ல. நல்ல குடும்பத்தை அவ வாய்க்கொழுப்பால இழந்ததுக்கு நான் ஏன் மாமா இங்க நிம்மதியை இழந்து வாழணும்? தங்கச்சி தங்கச்சினு அவளை நினைச்சு இவர் என்னோட உணர்வுகளை ஒரு பொருட்டா மதிக்குறதேயில்ல. இவரோட அம்மாவும் தங்கச்சியும் அங்க கஷ்டப்பட்டா நான் இங்க கஷ்டப்படணுமா? அவங்க சந்தோஷமா இருந்தா மட்டும்தான் நான் இங்க நிம்மதியா வாழமுடியுமா? ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி அவளுக்கு அமைதியான வாழ்க்கையைக் கூடக் குடுக்க முடியாத ஒரு மனுஷனோட வாழ்ந்து நான் நிறைய பாடம் கத்துக்கிட்டேன், அதுல முதல் பாடம் என் அம்மா அப்பா, என் தங்கச்சி, என் குடும்பம்னு அவங்களைப் பத்தி மட்டும் யோசிச்சு சுயநலமா இருக்குறது. ரெண்டாவது விஷயம் சரியோ தப்போ என் பிடிவாதம்தான் எனக்கு முக்கியம்னு இருக்குறது. இதைக் கத்துக்கிட்டது உங்க மகன்கிட்ட இருந்துதான் மாமா. அதே சுயநலத்தோடதான் நான் வளைகாப்புக்கு வரமாட்டேன்னு சொல்லுறேன். இதுக்கு மேல என்ன பிரச்சனைனு உங்க மகன்கிட்ட கேளுங்க. நான் ப்ரஷாகூட வாக்கிங் போயிட்டு வர்றேன்”
வசுமதி அங்கிருந்து வெளியேறியதும் மகனைக் கண்டனமாகப் பார்த்தார் கமலநாதன்.
“என்ன பண்ணி வெச்சிருக்க பாத்தியா? உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை இருக்கார். உன் அம்மைக்காரிக்கு நான் இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் செத்துப்போயிட்டோமாடா?”
“அப்பா” அலறிவிட்டான் வசீகரன்.
என்ன வார்த்தை பேசிவிட்டார் இந்த மனிதர்! வார்த்தையின் வீரியத்தைச் சகித்துக்கொள்ளவே அவனுக்கு நேரம் பிடித்தது.
“என் பொண்டாட்டியை நானும், உன் தங்கச்சியை மாப்பிள்ளையும் பாத்துக்கமாட்டோமாடா? எல்லா பிரச்சனையும் உன் தலையிலனு காட்டிக்கிட்டு நீ புனிதன் வேஷம் கட்டுறியா என்ன? அவங்களைப் பத்தி யோசிச்சு நீ உன் வாழ்க்கையைக் கோட்டை விட்டுட்ட. முட்டாளாடா நீ?”
“புரியுதுப்பா”
“என்ன புரியுது? என்ன பண்ணி வெச்ச? எல்லாத்தையும் சொல்லு”
வசீகரன் பெருமூச்சுடன் தங்களது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் சொல்லிவிட்டான் அவரிடம். அனைத்தையும் கேட்டு முடித்ததும் கமலநாதனுக்கு ஆயாசமாக இருந்தது.
அற்புதமான பெண் தங்களுக்கு மருமகளாக வாய்த்திருக்கிறாள். அவளை வைத்து வாழத் துப்பில்லாத மகனை எப்படித் திட்டுவதெனத் தெரியவில்லை அவருக்கு.
“நீ எவ்ளோ சம்பாதிக்கிற, நம்ம வீட்டுக்கு அனுப்புற காசு, உன் தங்கச்சிக்கு அப்பப்ப அனுப்புற காசுல பத்துல ஒரு பங்கு இருக்குமா அந்தக் கேக்குக்குச் செலவு பண்ணுன காசு? அதுக்காக அல்பத்தனமா மருமகளைக் கண்டிச்சிருக்க. உன் சம்பாத்தியத்துல அவ வீட்டுக்கு எதையும் செய்யமுடியாதுனு சொல்லாம சொல்லிட்ட. அதான் மருமக இந்த நிலைமையிலயும் வேலைக்குப் போறா.
நீ எப்பேர்ப்பட்ட புருஷன்னு தெரிஞ்சிக்க ஒரே ஒரு காட்சி போதும்டா.” என்றவர் மகனின் கையைப் பிடித்து அந்த அறையின் வெளியே இருந்த பொதுவான பால்கனிக்கு இழுத்துச் சென்றார். அங்கே இருந்து பார்த்தால் கேட்டட் கம்யூனிட்டியின் பூங்கா தெரியும்.
அதை நோக்கிக் கை காட்டினார் கமலநாதன். அங்கே தூரத்தில் புள்ளிகளாய்த் தெரிந்தார்கள் வசுமதியும் ப்ரஷாந்தியும்.
“கர்ப்பமா இருக்கப்ப நீதான் மருமகளுக்குத் துணையா இருக்கணும். நீ வாழவெச்ச லட்சணத்துக்கு வாக்கிங் போகக்கூட உன்னைத் துணையா சேர்த்துக்கல அவ. நாளைக்குப் புள்ளை பிறக்கும். நீ அப்பவும் அந்தப் புள்ளையைக் கவனிக்காம உன் தங்கச்சி, உன் அம்மாவைப் பத்தி கவலைப்படு. இந்த அப்பன் நமக்கு அப்பனா இருக்கவே துப்பில்லாதவன்னு அதுவும் உன்னை விலக்கி வெச்சிடும். ஒரு நாள் நானும் உன் அம்மாவும் போய் சேர்ந்துடுவோம். உன் தங்கச்சி இன்னைக்கு இல்லனாலும் அவ புருஷன்கூட ராசியாகிக் குடும்பமா வாழப்போயிடுவா. அவங்களுக்காக உன் பொண்டாட்டியைத் துச்சமா நடத்துன நீதான் கடைசில என்னனு கேக்க நாதியில்லாம இருக்கப்போற. எழுதி வெச்சிக்க, இதுதான் உன் தலையெழுத்து”
தந்தையின் கண்டிப்பு எந்த வயதிலும் பிள்ளைகளின் தவறுகளைச் சீரமைக்கும். அதிலும் இம்மாதிரியான செருப்படித்தனமான கண்டிப்புகள்தான் வசீகரன் போன்ற ஆணைத் திருத்த வல்லவை.
“உன் அம்மைக்காரி உன் ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டுனப்ப, இந்தப் பையனுக்கு இப்ப கல்யாணம் பண்ணலனா வாழ்க்கை முழுக்க இவன் சாமியார் மாதிரி தனியாதான் நிப்பான்னு சொன்னாரு ஜோசியர். அவசரமா உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சோம். ஆனா பாரு, இப்பவும் நீ தனியாதான் வாழுற. இதுக்கு ஜாதகம் காரணமானு தெரியல. ஆனா சொந்தப் பொண்டாட்டியை மதிக்கத் தெரியாத உன் குணம்தான் காரணமா அமையப்போகுது. என் பொண்டாட்டியைப் பாத்துக்க எனக்குத் தெரியும், மாப்பிள்ளை அவரோட சம்சாரத்தைப் பாத்துப்பாரு. ஆனா நீ இப்பிடியே போனா யாருமில்லாம நிக்கப்போற”
வசீகரனுக்குக் கசப்பு மருந்தைப் புகட்டிவிட்டு தனக்கென்ன என்பதுபோலப் போய்விட்டார் கமலநாதன். அன்றிலிருந்து இரண்டாம் நாள் அவர் திருநெல்வேலிக்கு ரயில் ஏறவும் செய்தார்.
‘தனியே நிற்கப்போகிறாய்’ என்று அவர் சொன்னதன் பொருளை நிஜத்தில் அனுபவிக்கும் வாய்ப்பை வசீகரனுக்கு வழங்கியது மகிழினியின் வளைகாப்பு.
மனைவியின்றித் தனியே போய் நின்றவனை உறவுக்காரர்கள் பார்த்த விதமே சரியில்லை. பெண்களோ அவனது முதுகுக்குப் பின்னே கிசுகிசு பேசினார்கள்.
“இவன் அம்மாக்கும் தங்கச்சிக்கும் வாய் நீளம். வாழ வந்த பொண்ணை என்னென்ன பேசுனாங்களோ? இவன்தான் அம்மையும் தங்கச்சியும் கொலை பண்ணுனாலே கமுக்கமா இருப்பானே! எல்லாருமா சேர்ந்து அந்தப் பொண்ணை என்னென்ன செஞ்சாங்களோ? அதான் அவ வராம இருக்குறா”
“அவளும் முழுகாம இருக்குறா அக்கா. ரெண்டு கர்ப்பவிதிங்களை ஒரே வீட்டுல வைக்கக்கூடாதுனுவாங்க. அதுக்காக வராம இருந்திருப்பா”
“க்கும்! அவ என்ன இங்கயேவா இருக்கப்போறா? வளைகாப்புக்கு வந்துட்டுப் போகப்போறா. என்னமோ நடந்திருக்கு. அதான் வசுமதி வரல”
ஆளாளுக்கு இவ்வாறு பேச அனைத்தையும் கேட்டும் கேட்காதவனைப்போல நின்றான் வசீகரன். அவனது மனதுக்குள்ளோ தனியே இருக்கும் வசுமதி பாதுகாப்பாய் இருக்கவேண்டுமே என்ற கவலை.
ரேவதி, ப்ரஷாந்தி, காந்திமதி அவளுடன் இருப்பார்கள் என்றாலும் இரவில் உறங்குகையில் அவளுக்கு ஏதோ ஒரு அவசரம் என்றால் யார் அவளுக்குத் துணையாய் இருக்க முடியும் என்ற தவிப்பு.
தவிப்பும், கவலையும், உறவுக்காரர்களின் குத்தல்பேச்சும் அவனைப் பாடாய்படுத்த, இன்னும் அவனைப் போராட்டத்தில் ஆழ்த்துவதாய் அமைந்தது சற்று நேரத்தில் அங்கே வந்த சர்வானந்தனின் வருகை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


