“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் அதிகரித்துவிட்டது”
-சாரதா, தி நியூஸ் மினிட் – 25 பிப்ரவரி 2022
கோட்டூர் ரோடு, பாளையங்கோட்டை…
“இந்த இட்லி எடுத்து வைக்குற பாத்திரத்தை நீ எடுத்துக்க லெட்சுமி… அந்த கட்டைப்பையில என் கிட்ட இருந்த ரமணிசந்திரன் நாவல் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிருக்கேன்… மறக்காம எடுத்துட்டுப் போ”
தனது உடைமைகளை ஒதுக்கியபடி பேசிக்கொண்டிருந்த அந்த வயோதிகப்பெண்மணி செண்பகவள்ளிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். குரலில் சோர்வு தட்டியிருந்தது. காரணம் ஒரு மாதத்துக்கு முன்னால் தான் அவரது கணவர் சுந்தமூர்த்தி காலமாகியிருந்தார்.
முதுமையில் தனிமை கொடிது தானே. அதை அனுபவித்து சோர்ந்தவருக்கு இனிமையான செய்தியாய் வந்து சேர்ந்தான் அவரது ஒரே மகன் முத்துகுமரன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இனிமே நீ மட்டும் இங்க இருந்து என்னம்மா செய்யப் போற? ராதாவும் உன்னைத் தனியா விட வேண்டாங்கிறா… நான் ஃபேக்டரிக்குப் போனதும் அவளுக்கும் பொழுது போகலையாம்… அதோட உங்க பேத்தி ஸ்ருதிக்கு உன்னைப் பாத்தே ஆகணுமாம்”
இதற்கு மேல் செண்பகவள்ளிக்கும் மறுக்கத் தோணவில்லை. எவ்வளவு நேரம் தான் மூக்குக்கண்ணாடியும் புத்தகமுமாக நேரத்தைக் கழிப்பது. மனம் உறவுகளின் அண்மைக்காக ஏங்கியது.
எனவே தான் நாத்தனாரின் மகளான மகாலெட்சுமியை பொருட்களை ஒதுங்க வைக்க உதவியாக வரும்படி கேட்டுக்கொண்டார். அவளும் வந்தாள்.
உடைமைகளைப் பெட்டியில் அடுக்கி பாத்திரங்களை கட்டினாள். அவளுக்கும் செண்பகவள்ளியைப் போல புத்தகங்கள் என்றால் உயிர். எனவே தான் தனது உயிரினும் மேலான நாவல்களை அவள் வசம் ஒப்படைத்தார்.
கூடவே தனது பாத்திரங்கள் அனைத்தையும் கொடுக்க மகாலெட்சுமி தயங்கினாள்.
“எடுத்துக்க மகா… இதை கொண்டு போய் வைக்குறதுக்குச் சென்னையில இடமில்ல”
எங்கோ பார்த்தபடி கூறினான் முத்துகுமரன். மகாலெட்சுமி மௌனமாக பொருட்களை எடுத்துக் கொண்டாள். முகத்தில் ஒரு இறுக்கம்.
இருவரையும் காணும் போது செண்பகவள்ளிக்குத் தான் சுருக்கென்று மனதிற்குள் தைத்தது.
இருவரும் இளம்பருவத்தில் இருக்கையில் முத்துகுமரனுக்கு மகாலெட்சுமி என்றால் தனிப்பிரியம். கல்லூரிப்படிப்பை முடித்த கையோடு வேலை தேடச் சென்னைக்குக் கிளம்பியவன் கிளம்பும் முன்னர் அத்தை வீட்டாரிடம் மகாலெட்சுமியைத் தனக்கு மணமுடித்து தருமாறு கோரிக்கை வைத்து விட்டுத் தான் கிளம்பினான்.
ஆனால் அப்போது செண்பகவள்ளிக்குச் சிரமதிசையில் இருந்த நாத்தனாரின் மகளை தனது மகனுக்கு மணமுடிப்பதில் விருப்பமில்லை.
“பெருசா என்ன பண்ணுவா? மிஞ்சி மிஞ்சி போனா பத்து பவுன் போடுவாளா? என் மகன் படிப்புக்கும் நம்ம அந்தஸ்துக்கும் இது ரொம்ப கம்மி” என்று கணவரிடமே அவரது தங்கையின் பெண் தங்கள் குடும்பத்துக்குத் தகுதியானவளில்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்.
இத்தனைக்கும் சுந்தரமூர்த்தி அரிசி வியாபாரி ஒருவரிடம் கணக்குப்பிள்ளையாக தான் பணியாற்றினார். இருப்பினும் அந்தஸ்து பேதத்தால் அன்று நாத்தனாரின் மகளை ஒதுக்கி வைத்தார்.
கூடவே எளிய குடும்பம் ஒன்றில் மகாலெட்சுமிக்கு வரன் ஒன்றை பார்த்து மைந்தன் திருநெல்வேலிக்குத் திரும்புவதற்குள் திருமணத்தையும் முடித்து வைத்தார்.
முத்துகுமரனுக்கு மகாலெட்சுமியின் திருமணம் முடிந்த செய்தி அதிர்ச்சியோடு வலியையும் கொடுத்தது. இருப்பினும் ஒரு கால் கட்டு போட்டுவிட்டால் மகன் பழைய சம்பவங்களை மறந்துவிடுவான் என்று மனப்பால் குடித்தபடி அம்பாசமுத்திரத்தில் பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த ஒற்றைப்பெண்பிள்ளை ராதாவை தனது மகனுக்கு மணமுடித்து வைத்தார்.
திருமணம் முடிந்து ஸ்ருதியும் பிறந்தாள். ஆனால் முத்துகுமரனின் முகத்தில் படர்ந்த வெறுமை மாறவில்லை.
அன்று ஒதுக்கி வைத்த நாத்தனாரின் மகள் தான் மகன் அருகில் இல்லாத நேரத்தில் உடல்நலக்குறைவு என்றால் அத்தை என்று பாசத்தோடு ஓடி வந்தாள்.
சுந்தரமூர்த்தியின் மரணத்தின் போது மகாலெட்சுமியும் அவளது கணவரும் தான் செண்பகவள்ளிக்கு ஆறுதலாக இருந்தனர். அத்தருணங்களில் தான் செல்வச்செழிப்பு எனும் போலிக்கு ஆசைப்பட்டு எப்பேர்ப்பட்ட குணவதியை இழந்துவிட்டோமென்பது செண்பகவள்ளிக்குப் புரிந்தது.
வாழ்க்கை எனும் குறிப்பேட்டை வயோதிகத்தில் புரட்டிப் பார்த்தால் ஆங்காங்கே நாம் செய்த தவறுகள் மாபெரும் எழுத்துப்பிழைகளாக சிதறிக் கிடக்கும். அந்த எழுத்துப்பிழைகள் இன்றி வாழ்க்கையை எழுதியிருந்தால் அது எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும் என காலங்கடந்து மனிதமனம் சிந்திக்கும்.
அத்தகைய நிலை தான் செண்பகவள்ளிக்கும். அவரது வாழ்க்கை குறிப்பேட்டில் அவர் விட்ட முதல் எழுத்துப்பிழை அந்தஸ்து பேதம் காட்டி அன்பான மகாலெட்சுமியை மகனிடமிருந்து பிரித்தது.
முடிந்தது முடிந்தே விட்டது. இனி திருத்துவதற்கு வழியில்லை. இது தான் நிதர்சனம் என புரிந்து தன்னைத் தேற்றிக் கொண்டார் அவர்.
இதோ அனைத்தையும் மூட்டை கட்டியாயிற்று. இரவு ஏழு ஐம்பதுக்கு நெல்லை எக்ஸ்பிரஸ்சில் சென்னையை நோக்கிய அவரது பயணம் ஆரம்பிக்கப் போகிறது.
மகாலெட்சுமி மாலை வரை இருந்து இருவருக்கும் விடைகொடுக்க செல்லும் தருவாயில் சுந்தரமூர்த்தி பணியாற்றிய மொத்த அரிசிவியாபாரி சரவணபெருமாள் வந்து நின்றார்.
கையில் பணக்கட்டு ஒன்று. அதை முத்துகுமரனிடம் நீட்டினார்.
“சுந்தரமூர்த்தி ஐயா என் கிட்ட வேலை பார்த்த வரைக்கும் கணக்குல ஒரு ரூவா கூடவும் செய்யாது குறையவும் செய்யாது… அவ்ளோ நேர்மையான மனுசன் தம்பி… ஐயா தள்ளாத காலத்துலயும் கணக்கு எழுத வந்தப்ப எனக்கு உங்க மேல ரொம்ப வருத்தம்… இப்பிடி வயசான காலத்துல பெத்தவங்களை தனியா தவிக்க விட்டுட்டு இந்த மனுசன் மெட்ராசுல உக்காந்திருக்கானேனு திட்டாத நாள் இல்லை… இப்ப ஐயாவும் போய் சேர்ந்தாச்சு… அம்மாவ பத்திரமா பார்த்துக்கோங்க… என்னால முடிஞ்சது… இந்தப் பணத்தை வாங்கிக்கோங்க”
“இதுல்லாம் எதுக்கு சார்?”
“வாங்கிக்கோங்க தம்பி… ஐயாவ வெறும் வாய் வார்த்தைக்கு நான் ஐயானு சொல்லலை… எங்கப்பாவோட இடத்துல வச்சு தான் சொல்லுறேன்… அம்மா வெறுங்கையோட வந்தாங்கனு நீங்க என்னைக்கும் சொல்லிக் காட்டிடக்கூடாது பாருங்க… வாங்கிக்கோங்க”
முத்துகுமரன் அதற்கு மேல் வாதிடாமல் வாங்கிக் கொண்டான். ஏனென்றால் வரும் போதே அவனது மனைவி பாடிய பாட்டு அப்படி.
“இந்த 2BHK வீடு நமக்கே மூச்சு முட்டுது… இதுல உங்கம்மாவ எங்க தங்க வைக்குறது? உங்களுக்கும் ஸ்ருதிக்கும் வடிச்சுக் கொட்டியே நாள் முழுக்க என் நேரம் எல்லாம் கிச்சன்லயே கழியுது… உங்கம்மா இங்க வந்தாங்கனா காலையில ஒரு காபி, மதியம் கேழ்வரகு கஞ்சி, சாயங்காலம் டீனு வகை வகையா செஞ்சு குடுக்கணும்… அதோட ஒரு ஆள் எக்ஸ்ட்ராவா வந்தா செலவு என்ன ஆகும்னு யோசிச்சிங்களா? அவங்களுக்கு மாசமாசம் பணம் அனுப்பிட்டா உங்க அத்தை மகள் வந்து பார்த்துக்க மாட்டாளா? சும்மாவே அத்தை அத்தைனு உருகுவாளே அவ”
அத்தோடு பதினைந்தே வயது நிரம்பிய ஸ்ருதி வேறு!
“ஆச்சியும் இங்க வந்துட்டாங்கனா எனக்கு ப்ரைவேசியே இருக்காதுப்பா… லூஸ் ஹேர் விடக்கூடாதுனுவாங்க… ஹேர் கலர் பண்ணக்கூடாதுனுவாங்க… ரொம்ப போர் அடிக்கும்பா… ஆச்சிய கூட்டிட்டு வரவேண்டாம்பா”
மனைவி மகளின் எதிர்ப்பை மீறி அதை அன்னையிடம் மறைத்து முத்துகுமரம் செண்பகவள்ளியை அங்கே அழைத்துச் செல்ல காரணம் மனசாட்சி குத்தியது தான்.
திருமணமாகி சில தினங்களிலேயே ராதா தான் யார் என்பதை காண்பிக்க ஆரம்பித்துவிட்டாள். அதன் விளைவாக அவ்வபோது செண்பகவள்ளிக்கும் ராதாவுக்கும் முட்டிக்கொள்ளும். இடையில் முத்துகுமரனின் தலை தான் உருளும்.
ராதாவின் பிறந்தகத்தினர் சொத்து சுகத்தை இழந்த பின்னரோ மாமியாரும் மருமகளும் இன்னும் உக்கிரமாகவே மோதிக்கொள்வர். அந்த மோதலால் உண்டான காயங்கள் இன்னும் ராதாவின் நெஞ்சில் பச்சை ரணமாக இருக்கிறது. செண்பகவள்ளிக்கு வயோதிகத்தின் மூப்பால் அந்த ரணம் ஆறி தழும்பாகிவிட்டதால் அவருக்குப் பெரிதாக கவலை ஒன்றுமில்லை.
இருப்பினும் முத்துகுமரனுக்குள் திக் திக் தான்.
மகாலெட்சுமியிடம் விடைபெற்றுக் கொண்டு அன்னையோடு திருநெல்வேலி சந்திப்புக்குச் செல்ல ஆட்டோவைப் பிடித்தான்.
பாளை மார்க்கெட், முருகன்குறிச்சி, கொக்கிரகுளம், ஆற்றுப்பாலம் என ஒவ்வொன்றாக கடக்க கடக்க செண்பகவள்ளிக்கு இனி இவ்விடங்களைத் திரும்ப காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.
ஆட்டோ இரயில் நிலையத்தில் நின்றதும் முத்துகுமரனுடன் நெல்லை எக்ஸ்ப்ரஸ் வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி நடக்கத் துவங்கினார்.
“மகாவையும் நம்ம கூட கூட்டிட்டு வந்திருக்கலாம்… அவ நம்மளை ரயில் ஏத்திவிட்டுட்டுக் கிளம்புறேன்னு சொன்னா” என்றார் செண்பகவள்ளி.
முத்துகுமரனோ “எதுக்குமா வேஸ்டா ஐம்பது ரூபா செலவு பண்ணி ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் எடுக்கணும்… அவளுக்கு வீண்செலவு” என்றான்.
“இல்லப்பா… இப்ப ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் பத்து ரூபா தான்”
செண்பகவள்ளி என்ன சொன்னாலும் முத்துகுமரன் அவள் வரவேண்டியதில்லை என்று தான் கூறினான்.
மகன் வேண்டாமென்பதற்கு ஐம்பது ரூபாய் தான் காரணமா? இருக்கையில் தன்னை அமர வைத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற முத்துகுமரனை நோக்கினார் செண்பகவள்ளி.
வயதுக்கு மீறிய மூப்பு. தலையில் நரை அதிகமாகிவிட்டது. முகத்திலோ நிரந்தர வாடகைதாரராக குடியேறிவிட்ட விரக்தி.
என் மைந்தனின் இந்நிலைக்கு நான் தான் காரணமா? விரும்பியவளை மணந்திருந்தால் அவன் மகிழ்ந்திருப்பானோ? இப்படி கடமையே என இவன் வாழ எனது வெட்டி கௌரவம் தானே மூலம்!
மனம் கனத்தது செண்பகவள்ளிக்கு. மகன் நீட்டிய தண்ணீர் பாட்டிலை வாங்கி பையில் வைத்து பத்திரப்படுத்தியவர்
“ராதா நல்ல மாதிரி நடந்துக்குறாளா குமார்?” என்று வினவ
“இனிமே அவ எப்பிடி நடந்துகிட்டா என்னம்மா? ஸ்ருதிக்காக நான் உழைக்குறேன், அவளுக்காக மட்டும் தான் நான் வாழுறேன்” என்றான் அவன்.
“என்னப்பா இப்பிடி சொல்லுற? நம்ம பிள்ளைங்களுக்காக வாழுறது தப்பு இல்ல… ஆனா புருசன் பொண்டாட்டிக்கு இடையில இருக்குற உறவும் முக்கியம்”
முத்துகுமரன் சத்தமாக நகைத்தான்.
“அட போம்மா… இன்னைக்குப் பார்க்குற புருசன் பொண்டாட்டில முக்காவாசி பேர் கடமையேனு குழந்தைங்களுக்காக வாழுறவங்க, இல்லைனா அன்னியோன்யமா இருக்குற மாதிரி காட்டிக்கிறவங்க தான்… பிறந்துட்டோம், வாழணுமேம்மா… அவ்ளோ தான்”
எந்த இடத்திலும் உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என்று அவன் குறை சொல்லவில்லை. ஆனால் செண்பகவள்ளியின் மனம் சுட்டது.
சற்று நேரத்தில் வண்டியின் கதவுகள் திறக்கப்பட முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் கம்ப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்தனர் இருவரும். தங்களது பெர்த்தை தேடி அமர்ந்ததும் ஸ்ருதியிடமிருந்து அழைப்பு வந்தது முத்துகுமரனுக்கு.
“அப்பா எனக்கு அல்வா வாங்கிட்டு வர்றீங்க தானே?”
“இல்லடா… கடை பூட்டியிருந்துச்சுனு கிளம்பிட்டேன்”
மகளிடம் பொய் கூறினான் அவன்.
“போங்கப்பா… நீங்க ஆச்சிய பார்த்ததும் எங்களை மறந்துடுவிங்கனு அம்மா சொன்னாங்க… அது ஹண்ட்ரெட் பர்செண்டேஜ் கரெக்ட்… நான் உங்க கூட டூ”
அழைப்பைத் துண்டித்தாள் ஸ்ருதி.
முத்துகுமரன் புன்னகையோடு மொபைலை தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.
“என்ன சொன்னா உன் மகள்?”
“அவளுக்கு அல்வா வாங்கிட்டுப் போகலனு கோவம்”
“அப்பவே சொல்லியிருந்தா லெட்சுமி வீட்டுக்காரரை விட்டு வாங்க சொல்லிருக்கலாமே குமார்”
“எதுக்குமா அவங்களுக்கு வீண் சிரமம்? அடுத்த தடவை பார்த்துக்கலாம்”
அல்வா பற்றிய பேச்சோடு மகாலெட்சுமி பற்றிய பேச்சுக்கும் முற்றுபுள்ளி வைத்தான் முத்துகுமரன்.
பின்னர் தன் மகளைப் பற்றி அன்னையிடம் கூற ஆரம்பித்தான்.
“ஸ்ருதி ரொம்ப நல்லா படிக்குறாம்மா… என்ன ஒன்னு, எப்ப பார்த்தாலும் போனும் கையுமாவே இருக்குறா… அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ரீல்ஸ் பண்ணுறாங்கனு இப்ப அதையே செஞ்சிட்டு இருக்கா” என்றவன் தனது மகள் வடிவேலு, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களை போல நடித்துக் காட்டிய வீடியோக்களை செண்பகவள்ளியிடம் காட்டினான்.
பேத்தியின் உடல்மொழியைப் பார்த்ததும் செண்பகவள்ளிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“நல்லா நடிக்கிறா உன் பொண்ணு”
சிரிப்பை அடக்கிக் கொண்டபடி கூறினார் அவர்.
“அது என்னவோ உண்மை தான்… உங்க மருமகளுக்கு இதுல ஒரு பெருமை… இந்த வருசம் பப்ளிக் எக்சாம்.. படிக்க சொல்லு ராதானு சொன்னா குழந்தைக்கு இருக்குற திறமைய வளர்க்கணும்னு பக்கம் பக்கமா டயலாக் பேசுறா…. இதுல அம்மாவும் பொண்ணும் கூட்டு… நான் மட்டும் தனியாள்”
மைந்தனின் ஸ்ருதி புராணத்தைக் கேட்டபடி ரயிலின் தடக்தடக் அசைவை ரசிக்க ஆரம்பித்தார் செண்பகவள்ளி.
ராதாவும் ஸ்ருதியும் இப்போது மாறிவிட்டதை அறியாது அவர்களிடம் இறுதிநாட்களில் பாசத்தை வேண்டி கிளம்பியவருக்கு அது வெறும் கானல் என்பது அப்போது தெரியவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

