“இந்த மல்லிமொக்கு ஆரத்தை மாட்டிக்கடி… நம்ம போறது கல்யாண வீட்டுக்கு… உன்னோட ஆபிஸ் பார்ட்டிக்கு இல்ல”
கையகல ஜரிகை வைத்த பட்டுப்புடவையின் முந்தானையை நீவியபடி அவள் அணிந்த ரூபி கழுத்தாரத்தை ஆட்சேபித்தபடி நின்றார் பூரணி, குட்டிமாவின் அன்னை.
“ப்ச்! நீ ரொம்ப ஓவரா பண்ணுறம்மா… விட்டா என்னை அம்மன் படத்துல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி நடமாடும் நகைக்கடையா மாத்திடுவ போல”
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் அவர் சொன்ன மல்லிமொக்கு ஆரத்தை அணிந்து கொண்டாள் குட்டிமா.
அன்னையும் மகளும் விவாதம் செய்ய ஆரம்பித்தால் இப்போதைக்குத் திருமணத்திற்கு சென்றது போல தான் என்று அங்கலாய்த்தார் திண்ணையில் புஷ்பம்மாவோடு அமர்ந்திருந்த செண்பகம்.
மேலகரத்தில் அவர்களின் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக செங்கோட்டைக்கு வந்திருந்தனர் சந்திரகலாவும் பூரணியும். கூடவே குட்டிமாவைப் பார்த்ததும் போலவும் ஆயிற்றல்லவா!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆனால் பூரணி அணியச் சொன்ன புடவையும் ஆபரணங்களும் எளிமை விரும்பியான குட்டிமாவிற்கு அதிகப்படியாகத் தோண ஆரம்பித்தது அன்னைக்கும் மகளுக்குமான அனல் பறக்கும் விவாதம்!
“சந்திரா இது சரி பட்டு வராது… அம்மையும் மகளும் எசல ஆரம்பிச்சா இன்னைக்குள்ள அதுக்கு முடிவு வராது… நீ போய் உன் மதினியையும் மருமகளையும் அழைச்சிட்டு வந்துடு தங்கம்” என்று அவர் கூறியதும் பூரணியைப் போலவே பட்டுப்புடவையை அணிந்து மல்லிகைப்பந்தை தலையில் சூடிக்கொண்டிருந்த சந்திரகலா குட்டிமாவின் அறையை நோக்கி சென்றார்.
“மதினி இன்னுமா ரெடியாகுறீங்க?”
கேள்வி கேட்டபடியே அறைக்குள் நுழைந்தவருக்கு பூரணியிடமிருந்து அலுத்துப் போன குரலில் பதில் வந்தது.
“நான் ரெடியாகி அரைமணி நேரம் ஆகுது கலா மதினி… உங்க மருமகள் தான் எப்போவும் போல அதை போட மாட்டேன், இதை போட மாட்டேனு அடம் பிடிக்கிறா”
அங்கே குட்டிமா லைட் க்ரீனும் ராயல் ப்ளூவும் கலந்த உப்படாவில் தயாராகி நின்றாள். சிகையை வழக்கம் போல காதோரம் மட்டும் எடுத்து க்ளச்சில் அடக்கி மீதத்தை தோள்களில் வழிய விட்டிருந்தவளை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு திருமணத்திற்கு வருவாயா என்று கேட்டுக்கொண்டிருந்தார் பூரணி.
அவள் அன்னையிடம் பதிலளிப்பதற்குள் சந்திரகலாவை கவனித்துவிட்டாள்.
“ப்ளீஸ் அத்தை… இவங்க கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க… உங்களுக்குப் புண்ணியமா போகும்”
இரு கரம் கூப்பி கண்களால் அன்னையைக் காட்டி பரிதாபமாக சைகைமொழியில் பேசியவளை நமட்டுச்சிரிப்புடன் பார்த்தபடி பூரணியிடம் மருமகளுக்காக பரிந்து பேச வந்தார் சந்திரகலா.
“இந்த ஹேர்ஸ்டைலுக்கு என்ன மதினி? அழகா தானே இருக்கு… குட்டிமா அப்பிடியே பூவையும் வச்சுக்கடா” என்றவர் “மதினி இந்த வளையல் டிசைன் நல்லா இருக்கே… எங்க வாங்குனீங்க?” என்று பூரணியின் கவனத்தைத் திசை திருப்பினார்.
“இதுவா? ஸ்ரீகுமரன்ல தான் வாங்குனேன் மதினி… பழைய வளையலையும் போட்டுட்டு எக்ஸ்ட்ராவா ஏழாயிரம் குடுத்தோம்… இவங்கப்பா தான் செலக்ட் பண்ணுனாங்க”
அவர் எதிர்பார்த்தது போலவே குட்டிமாவின் விரித்த கூந்தல் அலங்காரத்திலிருந்து பூரணியின் கவனம் வளையலின் பக்கம் திரும்பிவிட மாமியாருக்கு இன்னொரு கும்பிடு மூலம் நன்றி தெரிவித்தவள் மடமடவென வளையல்களை அணிந்து கொண்டாள்.
கண்ணாடியில் தனது அலங்காரத்தைச் சரி பார்த்தவள் “ஓகே லேடிஸ்… ஐ அம் ரெடி… கிளம்புவோமா? மணி மாமா காரோட வர்ற நேரமாச்சு” என்று அங்கிருந்து நகர எத்தனிக்க
“வகிட்டுல குங்குமம் வைக்காம போறா பாருங்க… இதுக்குத் தான் நான் இவளை சத்தம் போடுறது” என்று மகளின் மகத்தான மறதியைச் சுட்டிக்காட்டி சந்திரகலாவிடம் பூரணி குறைபடவும்
“நான் ஒன்னும் மறக்கலயே… பூஜை ரூம்ல இருக்குற குங்குமத்தை வச்சுக்கலாம்னு நினைச்சேன்… உடனே நீ என்னை குறை சொல்லுறதுல சிக்சர் அடிக்க நினைப்பியே” என்று சமாளித்தபடியே ட்ரஸ்சிங் டேபிள் கண்ணாடி முன்னே இருந்த குங்குமச்சிமிழிலிருந்து மோதிர விரலால் தொட்டு வகிட்டு நடுவில் வைத்துக் கொண்டாள் குட்டிமா.
சந்திரகலா “அவ தான் வச்சுட்டாளே மதினி… இன்னும் முறைக்கணுமா? வாங்க கார் ஹாரன் சத்தம் கேக்குது பாருங்க” என்று பூரணியை அழைத்துச் செல்ல குட்டிமாவும் தனது போன் சகிதம் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியேறினாள்.
வெளியேறியவளின் புடவை முந்தானை எதிலோ மாட்டிக்கொள்ள நகர முடியாமல் நின்றவள் பின்னே திரும்பி பார்க்க அறைக்கதவின் தாழில் சிக்கியிருந்தது அவளின் புடவை நுனி.
“ப்ச்… இதுக்குத் தான் நான் ஷேரி கட்டுறதே இல்ல” என்று முணுமுணுத்தவள் முந்தானையை இழுத்து செருகி கொள்ள போக அந்நேரத்தில் மனதில் கணவனின் நினைவு அலையாய் எழுந்தது.
எப்போதுமே புடவையின் முந்தானையை அவள் நீளமாக விடுவதால் ஏதாவது பொருளில் அது சிக்கிக் கொள்வது வழக்கம். இதை பல முறை கண்டுவிட்ட சின்னா “எதுக்கு ராஜமாதா மாதிரி இவ்ளோ லெங்க்தா முந்தானையை விடுற?” என்று கேலி செய்ய
“அப்போ ஓல்ட் மூவில வர்ற மாதிரி இடுப்பு வரைக்கும் முந்தானையை விட்டுக்கவா?” என்று இதழைச் சுழித்து பழிப்பு காட்டினாள் அவள்.
“அதுல்லாம் வேண்டாம்… இப்பிடி இழுத்து சொருகுனா போதும்” என்று சொன்னதோடு அதை செய்தும் விட்டவனின் விரல்களால் உண்டான குறுகுறுப்பு இப்போதும் இடையில் மிச்சமிருப்பது போன்ற பிரமை அவளுக்கு.
உடனே தலையை உலுக்கிக் கொண்டவள் “காத்தாலயே அவனை நினைச்சேனா இன்னைக்கு முழுக்க வேற எதுலயும் கவனம் போகாது… எப்பிடியும் அந்த மகாராஜா என்னைப் பத்தி யோசிச்சிருக்க கூட மாட்டார்… ஆனா என் மனசு இருக்குதே அது தான் எனக்குத் துரோகம் பண்ணுது… ஏய் மனசே! ஒழுங்கு மரியாதையா எனக்கு விசுவாசமா இருக்கணும்… சரியா?” என்று தன் மனதுக்குக் கடிவாளம் போட்டாள்.
அதற்குள் காரின் ஹாரன் “பாம் பாம்” என்று மீண்டும் கதற ஆரம்பிக்க வேகமாக வெளியேறியவள் பெரியவர்களுடன் காரில் அமர அது மேலகரத்தை நோக்கி வேகமெடுத்தது.
மேலகரத்திலுள்ள தாய்பாலா மண்டபத்தை அடைந்த காரிலிருந்து பெண்கள் அனைவரும் இறங்கினர். மண்டபத்தின் வாயிலில் இப்போதைய அலங்கார பாணியில் பொன்னிற தட்டிகளும், தூண்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க அதன் மேல்பாகத்தில் இரு பக்கமும் பொன்னிற யானைச்சிரங்கள் பதிக்கப்பட்டிருந்தது.
அந்த அலங்காரம் குட்டிமாவிற்கு அவளது திருமணத்தை நினைவூட்டியது. அவளுக்குக் கோபம் சின்னா மீது தானே தவிர அவர்களின் உறவின் மீது அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. எனவே அவளும் அதை ரசித்தபடியே தான் பெரியவர்களுடன் மண்டபத்தினுள் நுழைந்தாள்.
ஆனால் உள்ளே சென்ற பிறகு திருமணச்சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கவும் அவள் மனம் சின்னாவின் நினைவுகளில் தத்தளிக்கத் துவங்கியது.
மாங்கல்ய தாரணத்தின் போது மணப்பெண்ணின் வதனம் செவ்வண்ணம் கொண்டு மலர மணமகனின் முகத்திலோ சொல்லவொண்ணா உணர்வொன்று இழையோடியது. அவளின் செவ்வணண வதனம் சொல்லும் எண்ணற்ற உணர்வுகளைக் கவிதையாய் கண்டு ரசிப்பவனின் பாவனை அந்த மணமகனின் கண்களில்!
அவர்களை வாழ்த்திவிட்டுப் பரிசு கொடுக்கக் கிளம்பியவர்களை உறவுக்காரப்பெண்மணிகள் பிடித்துக்கொண்டனர்.
குட்டிமாவைக் கண்டதும் அவர்களுக்குக் குஷியாகிவிட்டது. பின்னே புதிதாய் திருமணமானப் பெண்ணைக் கண்டதும் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்று பாக்கி இருக்கிறதே! அதை கேட்பது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா! கிடைத்த வாய்ப்பைத் தவற விட முடியுமா? எனவே கேட்டே விட்டார்கள்!
“என்ன செண்பாம்மா பேத்திக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆயிடுச்சே… எதாச்சும் விசேஷம் உண்டா?”
அந்தக் கேள்வியில் ஆச்சி, புஷ்பம்மா, அம்மா மற்றும் அத்தையின் வதனத்தில் பல்ப் எரிவதைக் கண்டதும் குட்டிமாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
அதே கடுப்புடன் புஷ்பம்மாவின் காதைக் கடிக்க ஆரம்பித்தாள் அவள்.
“புஷ்பாக்கா நான் என்ன ப்ளே ஸ்டோரா? கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல குழந்தைய டக்குனு டவுன்லோட் பண்ணிக் குடுக்குறதுக்கு? தீஸ் பீபிள் ஆர் சோ ரிடிகுலஸ்”
“ப்ச்! புதுசா கல்யாணமான பொண்ணைப் பாத்தா எல்லாருக் கேக்குறது தான்டா குட்டிமா… நம்ம மேல உள்ள அக்கறைல கேக்குறாங்க… ஆமா இல்லனு பதில் சொல்லிட்டா போச்சுடா… அதுக்கு ஏன் இவ்ளோ கோவம்?”
“ஐயோ இந்த என்கொயரி கமிட்டியோட அக்கறைல எனக்குப் புல்லரிச்சுப் போச்சு… பாருங்களேன்”
இருவரும் இரகசியமாக முணுமுணுப்பதை கண்டுகொண்ட பூரணி இருவரையும் கண்டிப்பது போல முறைக்கவே “இவங்க வேற அடிக்கடி முறைச்சுக்கிட்டே இருக்காங்க” என்று கூறியபடி அமைதியானாள் குட்டிமா.
சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவதற்குள் இம்மாதிரி ஆயிரம் விசாரிப்புகள்! சின்னா வரவில்லையா? நீ மட்டும் தனியாகவா வந்தாய்? அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்வான்? வீடு போட்டது போட்டபடி கிடக்குமே என்ற ஆதங்கங்கள்!
இதையெல்லாம் கேட்டு குட்டிமாவின் செவிகள் மட்டுமல்ல இதயமும் இரத்தம் வடித்தது. காரணம் அந்தக் கேள்விகள் விசாரிப்புகள் ஒவ்வொன்றும் சின்னா என்ற ஒருவனின் நினைவை ஆயிரம் முறை அவளுக்குள் எழுப்புகிறதே!
கிளம்பும் தருவாயில் சற்றே சோர்ந்த முகத்துடன் இவர்களை எதிர்கொண்டார் இன்னொரு உறவுக்காரப்பெண்மணி. அவரைக் கண்டதும் குட்டிமாவிற்குள் அலுப்பு குடிகொண்டது.
“ஓ மை காட்! அடுத்த சி.பி.ஐ ஆபிசரா? என் மாமியார் கூட என் கிட்ட குட் நியூஸ் இருக்கானு கேக்கல… ஆனா சொந்தக்காரங்கங்கிற பேர்ல இதுங்க பண்ணுற அட்டூழியம் இருக்குதே! இலஞ்சி குமாரரே ப்ளீஸ் ஹெல்ப் மீ! இந்த ஆன்ட்டிய கொஞ்சநேரத்துக்கு மியூட் மோட்ல போடுங்களேன்… நாளைக்குக் காத்தால கோயிலுக்கு வந்து பத்து தேங்காய் விடலை போடுறேன்… ப்ளீஸ்பா ப்ளீஸ்”
ஆனால் பரிதாபத்திலும் பரிதாபமாய் இலஞ்சி குமாரரின் செவிகளில் அவளது வேண்டுதல் அப்போது விழவில்லை. அவரும் இரண்டு மனைவிகளுக்கு ஆளுக்கொன்றாய் செவிகளை ஈந்தாக வேண்டிய கட்டாயம்! அதன் விளைவு அப்பெண்மணி நலம் விசாரிப்பு என்ற அஸ்திரத்தை வெகு கவனமாக எய்ய ஆரம்பித்தார்.
ஆனால் அவர் கொஞ்சம் நாகரிகமானவர் போல! இன்னுமா நல்ல செய்தி இல்லை என்று கேட்டு குட்டிமாவை சங்கடப்படுத்தவில்லை. வெறுமெனே புதிய இடம் பிடித்திருக்கிறதா? சின்னாவின் வேலை நேரம் இப்படி பொதுப்படையாக கேட்டவர் குட்டிமாவின் மனதில் நல்லவராகப் பதிந்து போனார்.
அவரது நலம் விசாரிப்பு முடிய செண்பகம் ஆரம்பித்துவிட்டார்.
“இப்போ கணேஷன் ஒழுங்கா இருக்கானா சுகுணா?”
அந்தப் பெண்மணியோ முகம் கசங்க “இல்லங்கத்த! இன்னும் அவர் பாழாப்போன குடிய விடல… ஒரு காலத்துல எப்பிடி இருந்த மனுசன், இப்பிடி குடிச்சு அழியுறாரேனு வயித்தெரிச்சலா இருக்கு… என்ன பண்ணுறது? பிள்ளைங்க இருக்காங்களே! அவங்களுக்காக நான் மெஸ் வச்சு நடத்துறேன்… அந்த வரும்படில தான் வீட்டுச்செலவு ஓடுது அத்தை… நானும் போகாத கோயில் இல்ல, வைக்காத வேண்டுதல் இல்ல… என்னைக்காச்சும் ஒரு நாள் இந்த மனுசன் மாறுவார்னு காத்திருக்கேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.
“நியாயப்படி இந்தம்மா கோயில் கோயிலா அலையக்கூடாது… நல்லதா ஒரு ரீ-ஹேபிலிடேசன் சென்டர்ல அந்தாளை சேர்த்து விட்டுட்டு தான் உண்டு தன்னோட பசங்க உண்டுனு வாழ ஆரம்பிச்சிருக்கணும்” அப்பெண்மணிக்குக் கவுண்டர் கொடுத்தது குட்டிமாவின் மனசாட்சி.
மனசாட்சியின் குரலில் குட்டிமாவிற்குள் உறங்கி கொண்டிருந்த புரட்சிப்பெண் விழித்துக்கொண்டாள்.
“ஏன் ஆன்ட்டி இப்பிடி ஒருத்தரோட நீங்க இருந்தே ஆகணும்னு என்ன கட்டாயம்? பேசாம நீங்க உங்க வாழ்க்கைய பாத்துட்டுப் போகலாமே… குடும்பத்தை பத்தி பொண்டாட்டியோட கஷ்டத்தை பத்தி யோசிக்காத மனுசனுக்காக நீங்க ஏன் இவ்ளோ கஷ்டப்படுறீங்க?”
படபடவென பொரிந்து தள்ளியவளை வழக்கம் போல பூரணி முறைக்க சந்திரகலாவோ அமைதியாய் இரு என சைகை காட்ட புஷ்பம்மாவும் செண்பகமும் என்ன செய்வதென அறியாது அவளையும் அந்தப் பெண்மணியையும் பார்த்து வைத்தனர்.
குட்டிமாவின் பேச்சில் அவர் கோபம் கொள்வாரோ என்ற தயக்கம் பெரியவர்களுக்கு. ஆனால் அவர்களின் தயக்கத்திற்கு அவசியம் நேராது அப்பெண்மணி விரக்தியுடன் சிரித்தார்.
“நீ இந்தக் காலப்பொண்ணுல்ல… அதான் டக்கு டக்குனு முடிவெடுக்க சொல்லுறடா… இன்னைக்கு என் புருஷன் குடிக்கிறதுக்குக் காரணமே குடும்பத்தொழில் நசிஞ்சு போனது தான்… ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் நடந்துச்சு… அதுல எனக்கு முதுகெலும்புல அடி பட்டு காப்பாத்த முடியாத சூழ்நிலை… எனக்காக காசை காசுனு பாக்காம தண்ணியா செலவளிச்சார் மனுசன்… என் கூட இருக்க பொம்பளைங்கனு யாருமில்ல… புள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஆஸ்பத்திரில ஜடமா கிடந்த என்னை கவனிச்சிக்கிட்டவர் அவர் தான்… எட்டு மாசம் இப்பிடியே கழிஞ்சதுல அவரோட ஹோட்டல்ல இருந்தவங்க பணத்தை கையாடல் பண்ணி நஷ்டப்படுத்திட்டாங்க… ராஜா மாதிரி வாழ்ந்த மனுசன் எல்லாத்தையும் வித்து கடனை செட்டில் பண்ணிட்டார்… நானும் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டேன்… ஆனா சொந்தத்தொழில் நசிஞ்ச சோகத்துல அவர் தான் குடியில மூழ்கிட்டாரு… பிள்ளைப்பேறுல ஆரம்பிச்சு ஆக்சிடெண்ட் ஆன வரைக்கும் எனக்கு எல்லாமுமா இருந்தவரை இந்த மாதிரி நேரத்துல தனிச்சு விட்டுட்டா நான் அன்பு இல்லாத அரக்கியா ஆயிடுவேன்டா… குடிக்கிறது தப்பு தான்… நான் இல்லனு சொல்ல மாட்டேன்… என்னைக்காச்சும் ஒரு நாள் அவர் இதுல இருந்து மீண்டு சரியாயிடுவார்னு நான் நம்புறேன்… ஆனா இந்தச் சின்ன தப்புக்காக அவர் செஞ்ச பெரிய பெரிய நல்ல விசயத்தை நான் மறந்துடக் கூடாதுல்ல”
அவர் சொன்ன கடைசி வரி தனக்காக சொல்லப்பட்டதோ? ஒரு கணம் திகைத்துப் போனாள் குட்டிமா.
சின்னஞ்சிறு தவறுக்காக நம்மிடம் அன்பு செலுத்துபவர்களை நாம் ஒதுக்கி வைப்பது மாபெரும் தவறு தானே! சின்னா செய்ததும் தவறு தான்! ஆனால் கொலைக்குற்றம் இல்லையே! தான் அவனிடம் பொறுமையாய் விளக்கியிருந்தால் இப்போது நேர்ந்திருக்கும் பிரிவு தவிர்க்கப்பட்டிருக்குமோ!
இந்த எண்ணங்கள் உதயமானதும் காதல் கணவனின் அன்பு செய்கைகள் ஒவ்வொன்றாய் மனதில் கிளர்ந்தெழ துவங்கியது குட்டிமாவிற்கு.
அப்பெண்மணிக்குத் தைரியம் சொல்லி விடைபெற்றவர்கள் அன்றைய தினத்தில் மேலகரத்திலுள்ள உறவினர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டை அடையும் வரை குட்டிமாவிற்கு சின்னாவின் நியாபகங்கள் தான்.
அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தவளின் மனக்கண்ணில் லேப்டாப்பும் கையுமாக அமர்ந்திருக்கும் அவளும், அவளிடம் காபி கோப்பையை நீட்டும் சின்னாவும் வந்தனர்.
“தலைவலிக்குதுனு சொன்னியே… இந்தா ஸ்ட்ராங்கான காபி… ஒரே அடில கப்புனு அடிச்சிடு…. தலைவலி பறந்து போயிடும்”
“கப்புனு அடிக்கிறதுக்கு இது என்ன சரக்காடா?”
“ஐயோ அம்மணிக்குச் சரக்கு அடிக்கணும்னு வேற ஆசையாக்கும்? ஓவரா பேசாம காபிய குடி”
“குடிக்கிறேன்டா குடிக்கிறேன்… ஆனா என் லேப்டாப்ல நெட் கனெக்ட் ஆக மாட்டேங்கிறது… ஜி.எஸ்.டி சாப்ட்வேர்ல அவுட்புட் ஃபைல் எடுத்துட்டேன்… பட் சைட்ல அப்லோட் பண்ணுறதுக்கு நெட் கனெக்ட் ஆகலயே”
சோகமாய் பிதுங்கிய அவளது உதடுகளைப் பிடித்தவன் “ஆ ஊனா இப்பிடி பண்ணிடு… அட சீ முதல்ல காபிய குடி… அதுக்குள்ள மோடம்ல என்ன பிரச்சனைனு பாக்குறேன்… அப்பிடியும் சரியாகலயா இருக்கவே இருக்கு ஜியோ தன் தனா தன்… மொபைல் ஹாட்ஸ்பாட்ல வேலைய பாரு… அவ்ளோ தான்.. ப்ராப்ளம் சால்வ்ட் பொண்டாட்டி… எங்க நல்ல புள்ளையா காபி குடிச்சிட்டு மாமாவோட கைமணம் எப்பிடி இருக்குனு சொல்லு பாப்போம்” என்று செல்லம் கொஞ்சவும் குட்டிமாவின் பதற்றம் அகன்று முகம் தெளிந்தது.
“வாவ்! இதுக்கு தான் நீ வேணுங்கிறது” என்றவள் “தேங்க்யூடா” என்று அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.
“ஐய்யே! நான் உன்னை காபி குடிக்க சொன்னேன்டி… என் கன்னத்தை எச்சில் பண்ண சொல்லல”
அவன் டீசர்ட்டில் கன்னத்தைத் துடைத்துக்கொள்ள அவளோ மீண்டும் மீண்டும் முத்தமிட அந்தக் காட்சியில் இப்போது கண்கள் கரித்துக் கொண்டு வந்தது குட்டிமாவிற்கு.
“நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்… நீ எனக்கு எப்போவுமே சப்போர்ட்டா தானே இருந்திருக்க… ஜாபை ரிசைன் பண்ண சொன்னங்கிறத யோசிக்க தெரிஞ்ச எனக்கு, நீ சப்போர்ட்டிவா இருந்த மொமண்ட்ஸ் எப்பிடி மறந்து போச்சுடா? எல்லாமே என் தப்பு தான்… ஐ மிஸ் யூ பேட்லி… ஆனா நீ என்னை மிஸ் பண்ணவே இல்ல… அதான் ஒரு போன் கால் கூட இல்ல… போன் பண்ணுனாலும் சைலண்ட் ட்ரீட்மெண்ட் குடுக்குற” என்று வாய் விட்டுப் புலம்பினாள் அவள்.
அவளது புலம்பல் சென்னையிலிருக்கும் சின்னாவிற்கு கேட்டு விட்டதோ என்னவோ அவனே அவளது மொபைலுக்கு அழைத்தான்.
ஒரு வினாடி கூட தாமதிக்காது போனை காதுக்குக் கொடுத்தவள் “ஹலோ! சொல்லு சின்னா” என்றாள் தவிப்புடன்.
மறுமுனையில் சின்னா அமைதி காத்தவன் “குட்டிமா” என்று ஆரம்பிக்க பின்னே இன்னொரு நபரின் குரலும் கேட்டது. அது அவர்களின் பக்கத்து ஃப்ளாட்காரரான நடேசனின் குரல்.
“சாகேத் சார் நாளைக்கு என் பேத்தியொட பர்த்டே… டைமண்ட் ஹார்ட் ஹோட்டல்ல வச்சு க்ராண்டா செலிப்ரேட் பண்ணுறோம்… நீங்களும் உங்க மிசசும் கட்டாயம் வரணும்”
நடேசனிடம் குட்டிமா பாட்டி வீட்டிற்கு சென்றிருப்பதாக அவன் கூறுவது மறுமுனையில் அவளுக்குத் தெளிவாக கேட்டது.
“இட்ஸ் ஓகே சாகேத் சார்… அப்போ நீங்க கண்டிப்பா வரணும்”
குடும்பத்தினரை தவிர மற்ற அனைவருக்கும் அவன் சாகேத் தான். நடேசனின் அழைப்பை ஏற்றுக்கொண்டவன் மனைவியின் அழைப்பு இன்னும் இணைப்பில் இருப்பதை உணர்ந்துவிட்டு மொபைலைக் காதில் வைத்தான்.
“அது… வந்து… நீ இல்லாம வீடு ரொம்ப வெறுமையா இருக்குடி குட்டிமா”
தயக்கத்துடன் மொழிந்தான் சின்னா அலையஸ் சாகேத். அதை கேட்டதும் மறுமுனையில் இருந்த குட்டிமா அலையஸ் தேவிக்குச் சந்தோசம் தானே துளிர்த்திருக்க வேண்டும். ஆனால் மாறாக அவளுக்குள் எரிச்சல் மூண்டது.
அதே எரிச்சலுடன் “வெறுமையா இருக்குனா தெர்மாகோல் வச்சு அடைச்சுக்கோடா… ஆளையும் மூஞ்சியையும் பாரு… நல்லா கேட்டுக்க, பத்து நாள் இல்ல, பத்து மாசம் ஆனா கூட நான் செங்கோட்டை பார்டரை தாண்டுறதா இல்ல… இனிமே எனக்குக் கால் பண்ணுனேனு வையேன், உன் மண்டைய உடைச்சிடுவேன்” என்று கத்திவிட்டாள்.
“என் மண்டைய உடைக்கணும்னா அதுக்கு நீ செங்கோட்டை பார்டரை தாண்டி தானே ஆகணும் பொண்டாட்டி” மறுமுனையில் அப்பாவியாய் பேசி அவளை இன்னும் கொந்தளிக்கச் செய்தான் சின்னா.
“பொண்டாட்டினு கூப்பிடாதடா… ஒழுங்கா போனை வை… ஏய் நீ என்ன வைக்குறது? நானே வைக்குறேன்”
‘பீப்’ சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்படவும் “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவளுக்கு இவ்ளோ கோவம் வருது? வேலைய ரிசைன் பண்ண சொன்னப்ப கூட இப்பிடி கத்தலயே” என்று மொபைலை தனது தாடையில் இடித்தபடி யோசிக்க ஆரம்பித்தான் சின்னா.
எது எப்படியோ மனைவியின் குரலைக் கேட்ட உற்சாகம் குமிழிட வீட்டின் வெறுமை சற்றே அகன்றது போல தோன்றியது அவனுக்கு.
ஆனால் அவனது உற்சாக குமிழை உடைத்து விளையாடும் குழந்தையாய் மனசாட்சி அவனை எச்சரித்தது.
“ரொம்ப சந்தோசப்படாத மேன்… உன் பொண்டாட்டி போட்ட சபதத்தை மறந்துட்டியா? பத்து மாசம் ஆனாலும் அவ செங்கோட்டை பார்டரை தாண்ட மாட்டாளாம்… டூ சம்திங்… இல்லனா உன் பொழைப்பு சிரிப்பா சிரிச்சிடும்” மனசாட்சியின் எச்சரிக்கையை அசை போட்டவனுக்கு சில மணி நேரத்தில் உபாயமும் சிக்கியது. அந்த உபாயமாவது அவனுக்குக் கை கொடுக்குமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

