“மத்தவங்களோட இரக்கத்தைச் சம்பாதிச்சு அதுல வாழணும்னு சுயமரியாதை இருக்குற எந்த மனுசனும் யோசிக்க மாட்டான்… முக்கியமா என்னை மாதிரி டிபரன்ட்லி ஏபிள்ட் பீபிள் யோசிக்கமாட்டாங்க… எங்களைப் பாத்து ஐயோ பாவம்னு யாரும் பரிதாபப்படுறதை நாங்க விரும்புறதில்ல… எங்களால உங்களை மாதிரி எல்லா வேலையும் செய்யமுடியும்… நாங்க உங்க கிட்ட எதிர்பாக்குறது எல்லாமே எங்க இயலாமைய சுட்டிக்காட்டி கேலி கிண்டல் பண்ணாம சகமனுசங்களா நடத்தணும்ங்கிறதை மட்டும் தான்… ஏன்னா அப்பிடிப்பட்ட கீழ்த்தரமான மனுசங்களும் இந்த உலகத்துல இருக்காங்க… அதுக்கு பெஸ்ட் எக்சாம்பிள்ஸ் சித்தி அண்ட் நிஹாரிகா… ஜோக் அடிக்கிற மாதிரி கூட அவங்க என்னோட டிஸ்செபிளிட்டிய சொல்லி சிரிப்பாங்க அவங்க ரெண்டு பேரும்… அவங்களை மாதிரி ஆளுங்களுக்காக சொல்லுற அட்வைஸ் தான் இது”
-நித்திலா
அக்சயா அப்பார்ட்மெண்ட்ஸ், ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம்…
ஞாயிறு காலைக்கே உரித்தான இலகுவான சூழல் தொலைந்திருந்தது அந்த ஃப்ளாட்டில்.
மூன்று படுக்கையறைகளில் ஒன்றில் வட்ட வடிவத்தில் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த ரிங்லைட்டின் முன்னே அமர்ந்து அதில் இணைக்கப்பட்டிருந்த மொபைலின் தொடுதிரையைப் பார்த்தபடி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாள் நித்திலா.
“ஹாய் வியூவர்ஸ்! திஸ் இஸ் நித்திலா ஃப்ரம் பேர்லி பியூட்டி சேனல்… இது ஒரு ப்ரமோசன் வீடியோ… நீங்க எல்லாரும் கமெண்ட்ஸ்ல கேட்ட ராந்த்வா ஸ்கின் கேர் நியூவா லாஞ்ச் பண்ணிருக்குற விண்டர் சேல்ஸ்ல மிச்சம் இருக்குற ஒரு ப்ராக்டான ஹேர் மாஸ்க் பத்தி நம்ம இந்த வாரம் ரிவியூ பண்ணப் போறோம்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தன் முன்னே வைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ ப்ளாஸ்டிக் டப்பாவைத் தட்டிக் காண்பித்து அதைப் பற்றிய விளக்கத்தை ஆரம்பித்தாள் நித்திலா.
அந்த காணொளி விளக்கத்துக்கான தொகையை ராந்த்வா அவள் பெற்றுக் கொண்டாலும் அதன் நிறை குறைகளை மறைக்காமல் விளக்கி காணொளியை படம் பிடித்துக்கொண்டிருந்தவள் இடையே அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எழுந்தாள்.
நாற்காலியின் அருகே கிடந்த காலணிகளை நிதானமாக அணிந்தவள் கதவைத் திறந்த போது அங்கே முகம் முழுவதும் எரிச்சல் மின்ன நின்றிருந்தாள் நிஹாரிகா.
முகத்தைச் சுளித்து “உன்னை ஒவ்வொரு தடவையும் சாப்பிட கூப்பிடுறது தான் என்னோட வேலையா? டைம் ஆச்சுனா வந்து கொட்டிக்க மாட்டியா? நான் என்ன உன்னோட சர்வண்டா?” என்று வெடித்தாள்.
நித்திலா அவளைத் தயக்கமாக பார்த்தவள் “வ்ளாக் சூட் பண்ணிட்டிருந்தேன் நிஹி… அதான் டைம் ஆனதை கவனிக்கல” என்கவும் உதட்டை அலட்சியமாகச் சுழித்தாள்.
“ஆமா பெரிய பியூட்டி வ்ளாகர்… பிசாத்து பிப்டி கே ஃபாலோயர்ஸுக்கு இவ்ளோ சீனா? உன் வீடியோவ பார்த்து தான் எல்லாருக்கும் அறிவுக்கண் திறக்கப் போகுது பாரேன்… ஓவரா பேசாம வந்தா ரெண்டு சப்பாத்தியாச்சும் மிஞ்சும்… இல்லைனா நீ இன்னைக்குப் பட்டினி தான்” என்றாள் உதாசீனமாக.
நித்திலாவின் முகம் வாடியது. அவளுடன் உணவுண்ணும் மேஜையை அடைந்த போது சைலேந்திரியின் கடுகடு குரல் கேட்டது.
“இவ ஒருத்திக்காக எல்லாரும் சாப்பிடாம காத்திருக்கணுமா? பெரிய மகாராணி… இவ சாப்பிடலைனா இந்த மனுசன் வேற பட்டினியா கிடப்பாரேனு யோசிக்க வேண்டியதா இருக்கு”
அவரது முணுமுணுப்பு சுருக்கென குத்தினாலும் அமைதியாக உணவு மேஜையில் அமர்ந்தாள் நித்திலா.
அனிச்சை செயலாக அவளது கண்கள் அங்கிருந்தபடி தெரிந்த ஹாலின் சுவரில் மாட்டப்பட்டிருந்த நிருபமாவின் புன்னகை தவழும் முகத்தை ஏறிட்டது.
டொம்மென்று வேண்டாவெறுப்பாக வைக்கப்பட்ட தட்டில் இரண்டு வறட்டு சப்பாத்திகள் விழ நித்திலாவின் மனமோ “நீ என்னைத் தனியா விட்டுட்டு போயிருக்க கூடாதும்மா” என்று வழக்கம் போல கூக்குரலிட்டது.
வாய் விட்டுச் சொல்லும் அளவுக்கு அவளுக்குத் தைரியம் இல்லை. அதாவது இந்த வீட்டைப் பொறுத்தவரை சைலேந்திரியை எதிர்த்துப் பேசும் தைரியம் அவளுக்கு இல்லை. காரணம் அவள் பயந்த சுபாவம் என்று எண்ணினால் நாம் ஏமாந்து தான் போவோம்.
அவளது இயல்பான தைரியம் தந்தை என்றால் மட்டும் பின்வாங்கி விடும். சைலேந்திரியின் நாக்கு தந்தை ஜனார்தனனை சுட்டு விடுமோ என்ற பயம் தான் நித்திலாவுக்கு. சொல்லப் போனால் அவளுக்கு இருக்கும் ஒரே பயம் அது மட்டுமே.
எனவே சைலேந்திரி என்ன கூறினாலும் மௌனமாக கேட்டுக் கொள்வாள். கூடவே அவளது சீமந்த புத்திரி நிஹாரிகாவின் திமிர் பேச்சையும் நித்திலா சகித்துக் கொள்ள காரணமும் அதுவே.
முக்கியமாக அவர்களின் அற்பத்தனங்களை அவள் கண்டுகொள்வதில்லை. எக்கேடோ கெட்டுப்போங்கள் என்னும் ஜென்நிலை..
ஆனால் எல்லாம் ஓரளவுக்குத் தான். அம்மாவும் பெண்ணும் ஒரு எல்லைக்கு மேல் அவளை வருத்த எண்ணினால் தகுந்த பதிலடியைக் கொடுத்துவிடுவாள்
“நித்தி குட்டி” என்றபடி ஜனார்தனன் வரவும் அவளது மனதின் சலசலப்பு அடங்கி அமைதியாக புன்னகைத்தாள் நித்திலா.
ஜனார்தனன் மகளின் அருகே அமர்ந்தவர் வெறும் இரண்டு சப்பாத்திகளை அவள் பிய்த்து எடுக்கச் சிரமப்படுவதை கண்டு சைலேந்திரியை முறைத்தார்.
“நித்திமா டயட்ல இருக்காளாம்… அதான் அவளுக்கு ரெண்டு சப்பாத்தி மட்டும் போதும்னு சொன்னாங்க” என்றார் பொய்யான புன்னகையுடன்.
ஜனார்தனன் நம்பாத பார்வையுடன் நித்திலாவை நோக்க அவளும் சைலேந்திரி கூறியது தான் நிஜம் என்கவும் சமாதானமுற்று சாப்பிட ஆரம்பித்தார்.
நித்திலா சப்பாத்தியைச் சாப்பிட்டபடியே புருவம் உயர்த்தியவள் சற்று முன்னர் அவர் பேசிய வார்த்தைகளைத் தந்தையிடம் சொல்லட்டுமா என சைலேந்திரியிடம் சைகைமொழியில் புருவம் உயர்த்தி கேட்க திருடனுக்குத் தேள் கொட்டியது போல விழித்தார் அப்பெண்மணி.
இதுநாள் வரை தாய்மையின் சிகரமென அவர் நடித்த நடிப்பு மண்ணாகிவிடுமே! கூடவே ஜனார்தனனின் வெறுப்பை வேறு வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்.
மனம் குமுற அமைதியானார்.
“உன்னை அடக்குறதுக்கு எனக்கு வேற வழி கிடைக்காமலா போயிடும்?” என்ற பொருமலோடு நித்திலாவை வருத்துவதற்கான சந்தர்ப்பம் வருமென எண்ணிக்கொண்டார் சைலேந்திரி.
தந்தையும் மகளும் சாப்பிட்டு முடித்ததும் நித்திலா வெளியே கிளம்பத் தயாரானாள்.
“இன்னைக்குக் காலேஜ் லீவ்பா… நித்தி எங்க போறானு தெரியல… இப்பலாம் அவ போக்கு சரியா இல்லப்பா”
வருத்தம் போல காட்டி நஞ்சை கக்கினாள் நிஹாரிகா.
ஜனார்தனன் அவளுக்கு நித்திலா மீதிருக்கும் அக்கறையில் கவலைகொள்வதாக எண்ணிக்கொண்டார்.
“நித்திம்மா என்ன செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் நிஹி குட்டி”
இரு பெண்களையும் வருத்தாமல் பதிலளித்தவர் அக்கடாவென அவரது அறைக்குள் சென்றுவிட்டார்.
நித்திலா நிஹாரிகாவின் திகைத்த தோற்றத்தைக் கண்டு பொங்கிய சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டாள்.
“ரொம்ப சிரிக்காத… நீ இப்பலாம் அந்த நயனி கூட ரொம்ப க்ளோஸ் ஆகிட்ட போல… பணக்காரப்பொண்ணு, அவ கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கிட்டா நல்லா செலவளிப்பானு தானே அவ பின்னாடி போற”
போகிறவளைச் சீண்டிவிட்டாள் நிஹாரிகா.
நித்திலாவின் அமைதி அவளது கிண்டலில் தொலைந்து போனது.
“யார் சொன்னா அவ பின்னாடி சுத்துறேன்னு? இப்ப நான் போறது அவளோட அண்ணனை மீட் பண்ணுறதுக்காக… அவ அண்ணன் யாருனு தெரியுமா? ப்ச்! கூகுள் பண்ணி பாத்துக்க… எனக்கு டைம் ஆகுது… ஃபர்ஸ்ட் மீட்டிங்ல பங்க்சுவாலிட்டியா இருக்கணும்ல”
கோபமில்லாத குரலில் அவளுக்குக் குட்டு வைத்துவிட்டு கிளம்பினாள் நித்திலா
“உன்னை மாதிரி ஒருத்திய அவ அண்ணன் திரும்பிக்கூட பாக்கமாட்டான்”
வெறுப்பை உமிழ்ந்தபடி நிஹாரிகாவின் கண்கள் நித்திலாவின் கால்களை நோக்கின.
நித்திலாவிற்கு சுருக்கென வலித்தது. அதை காட்டிக்கொள்ளாமல் கூந்தலை பின்னே தள்ளியபடி வெளியேறினாள்.
இப்போதெல்லாம் அன்னையும் மகளும் தன்னை அடிக்கடி சீண்டி நிம்மதியிழக்கச் செய்கிறார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால் தன்னைக் கிள்ளுக்கீரை என எண்ணிவிடுவார்கள். ஏதாவது செய்து அவர்களின் வாயை அடைக்கவேண்டும் என யோசித்தபடி வந்தவள் அப்பார்ட்மெண்ட் வாயிலை அடைந்த போது ஆட்டோ என்று எதிர்படவும் அதை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.
அதே நேரம் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பார்க் எலான்சா ஹோட்டலின் ‘லா கபான்சா’ ரெஸ்ட்ராண்டில் தங்கையோடு அமர்ந்திருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
ஸ்ரீநயனி அவள் முன்னே இருந்த வாட்டர் மெலன் ஃபெட்டா சாலடைத் தீர்ப்பதில் முனைந்திருந்தாள்.
அவள் தமையனை அங்கே அழைத்து வரக் காரணம் நித்திலா.
ராந்த்வா சரும பாதுகாப்பு தயாரிப்புகளை ரிவியூ செய்ததால் உண்டான கலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவளை அழைத்திருந்தாள்.
“இன்னும் உன்னோட ரோல்மாடல் வரல? பங்க்சுவாலிட்டிக்கு என்ன ஸ்பெல்லிங்குனு கேப்பா போலயே?”
கிருஷ்ணராஜசாகர் பொருமலோடு கூற ஸ்ரீநயனி தனது கைக்கடிகாரத்தை நோட்டமிட்டாள்.
“வந்துடுவாங்கண்ணா”
சலித்தபடி உச்சு கொட்டினான் கிருஷ்ணராஜசாகர்.
சாலட் சாப்பிட்டபடி ஸ்ரீநயனி நேரத்தைப் போக்க கிருஷ்ணராஜசாகரோ பொறுமையிழந்தான்.
“நான் இது வரைக்கும் யாருக்காகவும் வெயிட் பண்ணுனதில்ல நயனி… ஃபர்ஸ்ட் டைம் உன் ரோல்மாடல் என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்குறா”
அவன் எரிச்சலோடு மொழிந்த போது “சாரி நயனி… ட்ராஃபிக் கொஞ்சம் அதிகம்” என்ற சமாதானத்தோடு நித்திலா வந்து சேர்ந்தாள்.
அவளது குரலைக் கேட்டு ஸ்ரீநயனியின் முகம் விகசிக்க கிருஷ்ணராஜசாகரோ எரிச்சலோடு குரல் வந்த திசையை பொறுமையிழந்தவனாக ஏறிட்டான்.
சென்னை நகரின் வெயிலில் சிவந்திருந்த முகத்தில் ஏ.சி காற்று மோதியதும் உண்டான ஆசுவாசம் மெல்லிதாகப் பரவ ஸ்ரீநயனியிடம் புன்னகையை வீசியபடி அவர்களை நெருங்கியவளைப் பார்த்த விழிகளை ஏனோ அவனால் அகற்ற முடியவில்லை.
எளிய ஒப்பனையில் எவ்வித செயற்கையான நளினத்தையும் காட்டாமல் இயல்பான உடல்மொழியோடு ஸ்ரீநயனி காட்டிய இருக்கையில் அமர்ந்தவள் கிருஷ்ணராஜசாகரிடம் சம்பிரதாயமாகப் புன்னகைத்தாள்.
அவளது சிரிப்பில் தலையை உலுக்கிக்கொண்டவன் மீண்டும் கறார் பேர்வழி ஆனான்.
தொண்டையைச் செருமியவன் “நான் டேரக்டா எதுக்காக மீட் பண்ணிருக்கோம்னு சொல்லிடுறேன்” என்று ஆரம்பிக்க
“அது எனக்குத் தெரியும் சார்” என்றாள் நித்திலா நேருக்கு நேராக அவனைப் பார்த்தபடி.
அவளது விழிகளில் தடுமாற்றமோ சலனமோ இல்லை. நிச்சலனமான விழிகள் அவை! நேர்மையும் நியாயபுத்தியும் கொண்டவர்களின் விழிகள் இப்படி தான் இருக்கும்! தினந்தோறும் இப்ராஹிமைப் பார்க்கிறானே!
“மார்க்கெட்டிங் டீம் உங்களோட ரிவியூ ஸ்டைலை புகழுறாங்க… ஆனா ரீசண்டா வைரலான வீடியோவுக்கான ரியாக்சனை பாத்ததுக்கு அப்புறம் என்னால புகழ முடியல… அந்த வீடியோவால என்னோட நியூ லாஞ்சோட சேல்ஸ் எவ்ளோ பாதிக்கப்பட்டிருக்குனு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்பிடி என்னால உங்களை புகழ முடியும் சொல்லுங்க… இதுக்கு ஒரே ஒரு சொல்யூசன் தான் இருக்கு… சீக்கிரம் உங்க ரிவியூ வீடியோவ டெலிட் பண்ணிட்டு விண்டர் கலெக்சன் பத்தி பாசிட்டிவ் ரிவியூ ஒன்னை போஸ்ட் பண்ணுறதுக்கான வேலைய ஆரம்பிங்க”
நித்திலா இதை எதிர்பார்த்து தான் வந்தாள். சரும பாதுகாப்பு தயாரிப்பில் கோலோச்சும் ராந்த்வாவின் மேலாண்மை இயக்குனர் கட்டாயம் தன்னை மறுப்பு வீடியோ வெளியிடும்படி வேண்டுவான் என்பதை கூடவா அவளால் யோசிக்க முடியாது?
எல்லாம் தெரிந்தும் அவள் வந்ததற்கான நோக்கம் ஒன்றே ஒன்று தான். வாடிக்கையாளர்களிடம் சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று.
இனி மேலாண்மையும் அவர்களின் தயாரிப்பிலுள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ளட்டுமே என்ற எண்ணம்.
கிருஷ்ணராஜசாகரின் பேச்சுத்தொனி வேறு அவளுக்குள் எரிச்சலை உண்டாக்கிவிட்டது.
“பாரபென் ஃப்ரீனு நீங்க சொல்லுற புராடக்ட்ஸ்ல சோடியம் பென்சோனேட் இருக்கு… அது விட்டமின் சி கூட கலந்தா தோல்ல மோசமான விளைவை உண்டாக்கும்… உங்களோட ராந்த்வா ஸ்கின் கரெக்ட் சீரம்ல வாசனைக்காக நீங்க கலக்குற பென்சைல் ஆல்கஹாலோட அளவு ஃபைவ் பர்சென்டேஜுக்கும் அதிகம்… அது விதிமுறைய மீறுன அளவு… உங்க ராந்த்வா மாய்சுரைசர்ல புரோலிபீன் கிளைகோலோட அளவு நாப்பது சதவிகிதம்… ரூல்ஸ்படி முப்பத்தாறு சதவிகிதத்தை தாண்டக்கூடாது… உங்களோட விண்டர் லாஞ்ச் ஸ்கின் கேர் ப்ராடக்ட்ஸ் எல்லாமே அதிகளவுக்கு டாக்சிக் கெமிக்கல்சால தயாரிக்கப்பட்டதுனு நான் குடுத்த நெகட்டிவ் ரிவியூ ஹன்ட்ரெட் பர்சென்டேஜ் சரியானது தான் மிஸ்டர் கிருஷ்ணராஜசாகர்”
தெள்ளத்தெளிவாக தன் தரப்பு நியாயத்தைக் கூறினாள் நித்திலா. ஆனால் எதிரிலிருப்பவன் அதை கேட்க தயாராக இருக்க வேண்டுமல்லவா! மனம் முழுவதும் அடைந்த நஷ்டத்தின் காரணமாக கோப அனல் வீசியதால் நியாயமான விவாதம் கூட திமிர்ப்பேச்சாக அவனது செவிகளில் விழுந்தது.

“லுக்! நான் உன்னோட கெமிஸ்ட்ரி பேப்பரை கரெக்ட் பண்ண வந்த டீச்சர் இல்ல… ஐ அம் அ பிசினஸ் மேன்… எவ்ரி பிசினஸ் ஹேஸ் ஒன்லி ஒன் ரூல்… தட் இஸ் டூ ஏர்ன் ப்ராஃபிட்… நீ சொல்லுற விகிதாச்சாரம் பத்தி ஐ டோண்ட் கேர்… நீ புரொமோசனுக்காக வாங்குன அமவுண்டை விட அதிகமான அமவுண்ட் உன்னோட அக்கவுண்டுக்கு க்ரெடிட் ஆகும்… ஒழுங்கா உன்னோட நெகடிவ் ரிவியூ வீடியோவ டெலீட் பண்ணிட்டு ராந்த்வா ஸ்கின் கேர் பத்தி நல்ல மாதிரி ஒரு வீடியோவ அப்லோட் பண்ணுற… இல்லைனா”
அவன் பாதியில் நிறுத்தவும் நித்திலாவின் புருவங்கள் முடிச்சிட்டது.
“இல்லைனா என்ன பண்ணுவிங்க மிஸ்டர் சாகர்?”
இறுக்கமாக அவளும் வினவினாள்.
“இதுக்காக நீ பெரிய விலைய குடுக்க வேண்டியதா இருக்கும் நித்திலா”
மிரட்டலா எச்சரிக்கையா என வகை பிரித்தறியா குரலில் உரைத்தான் அவன்.
“அண்ணா”
இவ்வளவு நேரம் அமைதி காத்த ஸ்ரீநயனி கண்டனக்குரல் எழுப்பினாள். நித்திலா அவளைப் பார்வையால் அமைதி காக்கும்படி சைகை காட்டிவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தாள்.
“வாட்டெவர்! கடைசியா இன்னொரு பாயிண்டையும் ஆட் பண்ணிக்கோங்க… ஒரு ப்ராடக்டை வைக்குற கண்டெய்னரை டிசைன் பண்ணுறப்ப அது எர்கனாமிக்ஸ் டிசைனா இருக்கணும்னு நான் படிச்சிருக்கேன்… ஃபார் எக்சாம்பிள் ஒரு சீரம் பாட்டிலை ஓப்பன் பண்ணுறப்ப, திறக்க ஈசியா இருக்கணும்… திறந்ததும் சீரம் சிந்துற அளவுக்கு உயரம் கம்மியா அதை டிசைன் பண்ணக்கூடாது… அந்தப் பாட்டில் தரையில விழுந்து நொறுங்கி கஸ்டமர் கையில காயம் வரக்கூடாதுனா கண்ணாடிக்குப் பதிலா ப்ளாஸ்டிக் பாட்டிலை கண்டெய்னரா யூஸ் பண்ணணும், ப்ராடக்டை விட அந்தக் கண்டெய்னரோட டிசைன் ஏஸ்திட்டிக்கா இருக்கணும்… நீங்க நியூவா அறிமுகப்படுத்திருக்குற ஸ்கின் கரெக்ட் சீரமோட பாட்டில் ரொம்ப வொர்ஸ்டா டிசைன் பண்ணப்பட்டிருக்கு… ப்ராடக்ட் குவாலிட்டி, எர்கனாமிக்ஸ் டிசைன்னு அடிப்படை அறிவு கூட இல்லாமலா நீங்க இந்த பிசினஸ்குள்ள வந்திங்க? இப்பவும் சொல்லுறேன், உங்க புராடக்ட்ல என்ன இருக்குதோ அதை தான் நான் சொன்னேன்… பிசினஸோட மோட்டிவ் பத்தி சொன்ன உங்களுக்கு புத்திசாலி பிசினஸ்மேனோட தகுதி என்னனு தெரிஞ்சிருக்கும்… புத்திசாலியான பிசினஸ்மேன் சறுக்கலை சமாளிக்கத் தெரிஞ்சவன், தொழில்ல நடந்த தப்ப சரி செஞ்சு மறுபடி அதே தப்பு நடக்காதபடி கண்ட்ரோல் பண்ண தெரிஞ்சவன்… அதை விட்டுட்டு தப்பு இருக்குனு சொன்னவங்களை டார்க்கெட் பண்ணி அடிக்குறது புத்திசாலி பிசினஸ்மேனுக்கு அழகு இல்ல மிஸ்டர் கிருஷ்ணராஜசாகர்”
வெறும் இன்ஃப்ளூயன்சருக்கு என்ன தெரியுமென அலட்சியமாக எண்ணியவனுக்கு நித்திலாவின் பேச்சு பிரமிப்பை உண்டாக்கியது. அவளது பேச்சிலிருக்கும் உண்மையை அவனது வணிகமூளை ஏற்றுக்கொண்டது.
தவறை நிவர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான். அதே நேரம் அவனது ஈகோ அந்த தவறு பரவுவதற்கு காரணமாக இருந்தவளை அப்படியே விட்டுவிட அனுமதிக்கவில்லை.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் லெக்சர்… நான் எப்பிடிப்பட்ட பிசினஸ்மேன்னு யூ.ஜி கூட முடிக்காத நீ சர்டிஃபிகேட் குடுக்க வேண்டாம்…. பை த வே, உன்னால வந்த நஷ்டத்தோட விளைவை நீ சந்திப்ப… யூ மே கோ நவ்”
அவனது அலட்சியத்தில் அவமானமாக உணர்ந்தாள் நித்திலா. ஸ்ரீநயனியின் கண்கள் அவளிடம் இறைஞ்சின.
“சாரி சிஸ்”
“இட்ஸ் ஓ.கே நயனி… நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு… பை”
உனது மிரட்டல் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் அவனிடம் விடைபெறாமல் எழுந்தவளின் கால் நாற்காலிக்குள் சிக்கிக்கொள்ள வேகமாக வெளியே எடுத்தவள் தடுமாறி விழப்போனாள்.
கிருஷ்ணராஜசாகர் அவசரமாக அவளது புஜத்தைப் பற்றி நிறுத்தவில்லை என்றால் விழுந்திருப்பாள்.
அவனது பிடி இறுகியதும் விழவில்லை என்பதை உணர்ந்து விழி மலர்ந்தவளை அவசரமாக தான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர சொன்னான்.
அவனது திடீர் கனிவுக்குக் காரணமென்ன என்பது புரியாதா நித்திலாவுக்கு?
உயர வேறுபாட்டால் ஒரு காலணி இல்லாமல் கால்கள் தடுமாறுவதை அவன் கண்டுகொண்டான்.
இவ்வளவு நேரம் இருந்த அலட்சியம் அகன்றதற்கு காரணம் இரக்கம் என அறிந்ததும் நித்திலாவுக்கு முகம் கறுத்துவிட்டது. சக மனிதர்கள் அவளிடம் இரக்கம் காட்டினால் நித்திலாவுக்குப் பிடிக்காது.
வேகமாக எழுந்தவள் தடுமாறியபடி நாற்காலிக்குள் சிக்கிக்கொண்ட செருப்பை எடுத்தாள்.
“பி கேர்ஃபுல்”
ஆதுரமாக ஒலித்த கிருஷ்ணராஜசாகரின் குரலைக் கேட்க பிடிக்கவில்லை.
செருப்பை அணிந்துகொண்டு எழுந்தவள் “உங்க இரக்கம் எனக்குத் தேவையில்ல மிஸ்டர்” என்று சீறிவிட்டு ஸ்ரீநயனியைக் கூட பார்க்க விரும்பாமல் விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள்.
க்ஷண நேரத்தில் அவளது குணம் மாறியதில் ஸ்ரீநயனி குழம்பியிருக்க, தனது மிரட்டலைக் கூட இலகுவாக எடுத்துக்கொண்டவள் கவனமாக இருக்கும்படி ஆதுரமாகக் கூறியதற்கு ஏன் சீறினாள் என்ற யோசனையோடு நின்றான் கிருஷ்ணராஜசாகர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

