பரிதவிப்போடு கலங்கித் தவிக்கும் மனதிற்கு உடனடி தேவை ‘உனக்கு நான் இருக்கிறேன் என நம்பிக்கையளிக்கும் இன்னொரு மனம். தடுமாறிச் சரியவிருக்கும் நேரத்தில் ஒருவருக்குத் தேவை தாங்கிப் பிடிக்கும் ஒரு கரம். ஏனோ இவையெல்லாம் சிலருக்கு வாய்ப்பதே இல்லை. யாரோ ஒருவர் என்னைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிக்க மாட்டார்களா எங்கு ஏங்கும் நெஞ்சங்கள் அனேகம். அந்த யாரோ ஒருவர் உங்களின் வாழ்க்கைத்துணையாக இருக்கும் பட்சத்தில், குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
–ஆரபியின் சிந்தனை சிதறல்கள்
ஸ்டார் இன் பி.ஜி, நுங்கம்பாக்கம்…
கழுத்திலணிந்திருந்த தங்க செயினில் கோர்க்கப்பட்டிருந்த பிள்ளையார் டாலரை இதோடு ஆயிரம் முறை சுழற்றியிருப்பாள் ஆரபி. அலுவலகத்திலிருந்து வந்ததது முதல் யோசனையில் ஆழ்ந்திருந்தவளைக் கவனித்தபடியே முகம் கழுவி, ஆசுவாசமாகி இலகு உடைக்கு மாறியிருந்த அவளது தோழி ராகப்ரியா இதற்கு மேல் பொறுமை காக்க முடியாதென சமையலறை ஃப்ரிட்ஜில் வாங்கி வைத்திருந்த சிறிய மில்க் ஷேக் பாட்டில்களை எடுத்து வந்து தோழியிடம் ஒன்றை கொடுத்துவிட்டுத் தானும் அமர்ந்தாள்.
ஆரபி அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் யோசனையில் ஆழ, அவளது கையில் பட்டென ஒரு அடி விழுந்தது.
“அவுச்! என்னடி?” ராகப்ரியாவை முறைத்தவளிடம் மொபைல் போனைக் காட்டினாள் அவள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“அந்த மனுசன் வாட்சப்ல மெசேஜ் அனுப்பி எவ்ளோ நேரம் ஆகுது? ரிப்ளை பண்ணு ஆரு” என்று அதட்டினாள் ராகப்ரியா.
“எனக்குப் பேசுறதுக்குத் தயக்கமா இருக்கு ப்ரியா… தனியா மீட் பண்ண பயமாவும் இருக்கு… நான் போய் என்ன பேசுவேன்? வீட்டுல இவர் தான் உனக்கு ஃபிக்ஸ் பண்ணுன மாப்பிள்ளைனு சொல்லிட்டாங்க… என் சம்மதம் கேட்டு எதுவும் நடக்கல… போய் பேசுறதால மட்டும் என்ன நடந்துட போகுது?”
ஆரபி சொல்லவும் அவளது மொபைலை எடுத்து ராகப்ரியாவே அன்பரசனுக்குப் பதில் அனுப்ப ஆரம்பித்தாள்.
“ஏய் என்னடி பண்ணுற?”
பதறிய ஆரபியைக் கோபவிழிகளால் எரித்தவள் “நான் டைப் பண்ணி அனுப்புற வரைக்கும் மூச்சுவிடக்கூடாது நீ… உனக்கு நடந்த எல்லாம் எனக்கும் தெரியும்… அதுக்காக லைஃப்ல எந்த நல்லதும் எனக்கு நடக்காதுனு நீயே முடிவு பண்ணிடுவியா? ஒழுங்கா இவரை வீக்கெண்ட்ல மீட் பண்ணுற” என்று மிரட்டிவிட்டு படபடவென தொடுதிரையில் தட்டச்சு செய்து அன்பரசனுக்குப் பதிலையும் அனுப்பிவிட்டாள்.
ஆரபிக்குத் தவிப்பாக இருந்தது. ராகப்ரியா பதில் அனுப்பியதும் மொபைலை அவளிடம் கொடுத்தாள். எடுத்து வாசித்தவள் உடனே ‘ப்ளூ டிக்’ விழவும் திகைத்துப்போனாள். அப்படி என்றால் தனது பதிலுக்காக அவன் காத்திருந்தான் என்று தானே அர்த்தம்!
“ஹாய் அன்பு! உங்க போட்டோ மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் பாத்தேன்… ஒரு க்ளையண்ட் கொஞ்சம் கெடுபிடியா பேசுனார்… அவரோட லாஸ்ட் ட்ரேடிங்ல கொஞ்சம் பிரச்சனை… அதனால தான் உடனே ரிப்ளை பண்ண முடியல… டோண்ட் டேக் மீ ராங்… வீக்கெண்ட் நான் ஃப்ரீ தான்… ஹார்ட் ராக் கபே, நுங்கம்பாக்கம்… மீட் பண்ணலாமா?”
படித்துவிட்டுத் தலையில் அடித்துக்கொண்டாள் ஆரபி.
“இதைப் படிச்சா நான் அலைஞ்சானா இருக்கேன்னு அவர் நினைக்க மாட்டாரா?” முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள் அவள்.
ராகப்ரியா நமட்டுச்சிரிப்புடன் “எவர்?” என்று கேட்க
“அவர் தான்… அன்பு” என்று மொபைல் திரையைக் காட்டி அவள் கூற தோழியோ சத்தமாகச் சிரித்தாள்.
“அவர் உன்னைப் பத்தி குறைவா நினைச்சுடக்கூடாதுனு ஏன் யோசிக்குற ஆரு? உனக்கு அன்புவ பிடிச்சிருக்கா?”
கனிந்த குரலில் கேட்டாள்.
ஆரபியின் கண்களில் ஒரு நொடி நாணம் வந்து போனது. அடுத்த நொடியில் கலவரம்!
“அவருக்கு என்னைப் பிடிக்கணும்ல?” ஐயம் அவளுக்கு.
ராகப்ரியா தோழியைத் தோளோடு அணைத்துக்கொண்டாள்.
“உன்னை யாருக்குடி பிடிக்காம போகும்? யாருக்கும் கெடுதல் நினைக்காத உன் மனசு, எதிரியா இருந்தாலும் மரியாதைக்குறைவா பேசி அவங்களுக்குக் கெடுதல் நினைக்காத உன் குணத்துக்கு உன்னை முழுசா பிடிச்ச, புரிஞ்சிக்கிட்ட ஒருத்தர் உனக்கு லைஃப் பார்ட்னரா கிடைப்பார்… உனக்கு அன்புவ பிடிச்ச மாதிரி அவருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கலாம்.. அதனால கண்டதையும் யோசிக்காத”
அந்நொடியில் அன்பரசனிடமிருந்து பதில் வந்தது.
“ஓ.கே ஆரு… செவன் ஓ க்ளாக் மீட் பண்ணலாம்”
ஆருவா? என அவள் திகைக்கும்போதே அடுத்த செய்தி வந்தது.
“எனக்கு உங்க போட்டோ பாத்ததும் பிடிச்சிடுச்சு… அதனால ஆருனு சொல்லிட்டேன்… டோன்ட் டேக் மீ ராங்”
ராகப்ரியா அனுப்பிய செய்தியிலிருந்த வரிகளை அவனும் சொல்லியிருக்க ஆரபியின் இதழ்களில் புன்சிரிப்பு முகிழ்த்தது.
தொடர்ந்து அவன் இன்னொரு செய்தியையும் அனுப்பினான்.
“முடிஞ்சா ப்ளூ கலர் ட்ரஸ்ல வாங்க… இது ரெக்வஸ்ட் தான் ஆரு… போட்டோல நீங்க அந்த ட்ரஸ்ல இருந்திங்க”
ஆரபிக்கு இவ்வளவு நேரமிருந்த தயக்கம், பயம், இனம்புரியாத பாரமெல்லாம் அகன்றது. இளம்பெண்ணுக்குரிய மெல்லிய நாணம் குடியேறியது அவளிடத்தில்.
“சரி” என்று பதிலளித்தவள் அடுத்து என்ன பதில் வருமோ என காத்திருக்க “குட்நைட் ஆரு” என்று அழைப்பை முடித்துக்கொண்டான் அன்பரசன்.
அவளும் குட்நைட்டை அனுப்பிவிட்டு அதற்கு ப்ளூ டிக் அடையாளம் வருகிறதா என பார்த்துவிட்டு வந்ததும் குதூகலத்தோடு ஆப்லைனுக்குச் சென்றாள்.
அவளை மலர்ந்த முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்த ராகப்பிரியாவுக்கு மனம் நிறைந்து போனது. தேவையற்ற பயம், கழிவிரக்கம் ஒழிந்து தோழி சந்தோசமாக இருக்கவேண்டுமென தானே அவளும் ஆசைப்பட்டாள். அதற்கு அன்பரசன் காரணமாக இருப்பான் எனில் அவனே அவளுக்கு வாழ்க்கைத்துணையாக வரட்டுமென இறைவனிடம் வேண்டிக்கொண்டாள்.
சனிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்கள் பாக்கியிருந்த நிலையில் ஆரபிக்கும் அன்பரசனுக்கும் கடிகார முட்கள் நகராமல் நிற்பது போன்ற பிரமை.
இரு தினங்களிலும் ‘குட்மானிங்’, ‘குட் நூன்’, ‘குட் நைட்’கள் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதைத் தாண்டி வேறென்ன பேசுவதென இருவருக்கும் புரியவில்லை. நேரில் பார்த்து விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளாதவரை தேவையற்ற நெருக்கத்தை வம்படியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென்ற எண்ணம்!
அன்பரசன் சொன்னான் என்று அழகான நீல நிறத்தில் காட்டனில் கவுன் மாடல் டாப் ஒன்றை வாங்கிக்கொண்டாள் ஆரபி.
அவர்கள் எதிர்பார்த்த சனிக்கிழமையும் வந்தது. பங்குச்சந்தை விடுமுறை என்றாலும் சனிக்கிழமைகளில் ஆரபிக்கும் ராகப்ரியாவுக்கும் அறிக்கை தயாரிப்பு வேலை இருக்கும். அதை முடித்துவிட்டு பி.ஜிக்குத் திரும்பினார்கள்.
வந்ததும் ஆரபியைக் குளிக்க அனுப்பி அவளுக்கு ஆடை அலங்காரத்திற்கு டிப்ஸ் சொல்ல ஆரம்பித்தாள்.
“இன்னைக்கும் போனி டெயில் வேண்டாம் ஆரு… ஃப்ரீ ஹேர் விடு.. இந்த நியூட் லிப்ஸ்டிக் போட்டுக்க… கண்ணுக்குக் காஜல் ப்ளாக்ல வேண்டாம்… இந்த ஷேட் போடு”
அவள் சொன்னபடியெல்லாம் கேட்டு ஆரபி தயாரானதும் அவளே கேப் புக் செய்து தோழியை வழியனுப்பிவைத்தாள்.
குறுகுறுப்போடு நுங்கம்பாக்கம் ஹார்ட் ராக் கபேக்கு வந்தவள் அன்பரசன் எங்கே என தேடியபோதே கபே ஊழியர் ஒருவர் அவன் கபேயின் ஒரு பகுதியான தோட்டத்தில் காத்திருப்பதாக வந்து சொல்லவும் ஆரபியும் வழிந்த கூந்தலை ஓரம் தள்ளிவிட்டு மெதுவாக நடந்து போனாள்.
அங்கே அவளைப் போலவே ஆகாயநீல நிறத்தில் உடையணிந்து ஐந்தடி பத்தங்குலத்தில் யாரோ ஒரு இளைஞன் முதுகு காட்டிக்கொண்டு நிற்கவும் சந்தேகத்தோடு “அன்பு?” என்று அழைக்க அவனும் திரும்பினான் “ஆரு” என்ற அழைப்போடு.
ஆரபியின் உடலில் மெல்லிய பதற்றம்! உதட்டின் மேல்பகுதியில் வியர்வை முத்துக்கள் பூக்கத் தொடங்க அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக பளீரென புன்னகைத்தான் அன்பரசன்.
அவனது விழிகள் அவளை ரசனையாய் அளவிட்டபோது அனிச்சையாக ஆரபியின் விழிகள் தரையை நோக்கின. அந்தப் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை அவளால்! அதை நாணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!
“கொஞ்சம் நிமிர்ந்து பாத்திங்கனா என் மனசுல உள்ளதை மறைக்காம சொல்லிடுவேன்” சீண்டலுடன் அன்பரசன் கூறவும் நிமிர்ந்தவளின் கண்களில் இன்னும் நாணம் மிச்சமிருந்தது.
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி சாதாரணமாக இருப்பவளைப் போல அவள் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவளது ஒரு காலின் பெருவிரல் பூமியை அழுத்திக்கொண்டிருப்பதை அன்பரசன் கவனித்துவிட்டான்.
அந்தக் கணத்தில் கொள்கை, கோட்பாடு, நிபந்தனை எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை அவனுக்கு.
“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு ஆரு” என்றான் அவன்.
“எனக்கும்” சுருக்கமாக தனது பிடித்தத்தை அவள் சொல்லிவிட இருவரும் ஒருவரையொருவர் பார்வையால் தழுவிக்கொண்டார்கள்.
“சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என்றவன் அவள் சரியென்றதும் இருவருக்காகவும் அவன் முன்பதிவு செய்திருந்த மேஜையை நோக்கி அழைத்துச் சென்றான்.
ஆரபிக்காக இருக்கையை நகர்த்தி அமரும்படி அவன் சொன்னதும் அவள் மறுப்பு கூறாமல் அமர்ந்தாள்.
எடுத்தவுடனே சாப்பாட்டுராமனாக அவனே ஆர்டர் செய்யாமல் மெனுவை அவள் பக்கம் நகர்த்தியதும் ஆரபியைக் கவர்ந்தது.
“எனக்கு ப்ளூபெர்ரி மொஜிட்டோ போதும்” என்றவளிடம் இதைச் சாப்பிடு அதைச் சாப்பிடு என வற்புறுத்தவில்லை.
முதல் சந்திப்பில் ஒரு ஆண்மகன் தன்னிடம் எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதை ஒவ்வொரு பெண்ணுமே கவனிப்பாள். அதை வைத்தே அவன் தனக்கேற்றவனா என்பதை ஓரளவுக்கு அனுமானித்தும் விடுவாள்.
ஆரபியும் அதையே செய்து கொண்டிருந்தாள்.
அவன் மொபைலில் செய்தி அனுப்பிய விதம், நாற்காலியை நகர்த்தி அமரச் சொன்ன விதம், நீ முதலில் ஆர்டர் செய் என அவளுக்கு முன்னுரிமை குடுத்த முறை எல்லாம் ஆரபியின் மனதில் அன்பரசன் ஒவ்வொரு படியாக உயர்வதற்கு வழிவகை செய்துவிட்டன.
“ஒன் ப்ளூபெர்ரி மொஜிட்டோ, ஒன் சீசர் சாலட், ஒன் சிக்கன் ஃப்ளாட் ப்ரட்”
ஆர்டர் கொடுத்தவன் ஆரபி தன்னையே பார்க்கவும் “என்னடா சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போல, இவனுக்குச் சமைச்சுப் போட்டே நம்ம ஆயுள் கழிஞ்சிடுமோனு யோசிக்குறிங்களா?” என்று கேலியாகக் கேட்டான்.
ஆரபி மிரட்சியுடன் இல்லை என்றாள் அவசரமாக. அவளது பெற்றோர் இவன் தான் மருமகன் என்று முடிவே செய்துவிட்டார்கள். இந்தச் சம்பந்தமும் கைகூடாமல் போனால் ஆரபியால் வார்த்தை கணைகளைத் தாங்கவே முடியாது.
அவள் மிரண்டு விழித்ததும் “ஹேய் ஈசி! நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்… ஆக்சுவலி உங்களைப் பாக்குறதுக்கு முன்னாடி கியூரியாசிட்டியால வயித்துப்பசி பெருசா தெரியல… இப்ப பாத்துட்டேன்ல… அந்தத் திருப்தில சாப்பிட்டுத் தெம்பாகப் போறேன்” என்றான் இலகுவாக.
அவனது இலகு பேச்சு ஆரபியின் மிரட்சியைப் போக்கிவிட்டது.
“அப்புறம் உங்களைப் பத்தி உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க” என்று அவன் கேட்க ஆரபியும் சொல்ல ஆரம்பித்தாள்.
தன்னைப் பற்றி, தனது பெற்றோரைப் பற்றி, தன் தோழி ராகப்ரியா பற்றி, செய்து கொண்டிருக்கும் பணியைப் பற்றி என நீளமாக அவள் பேசிக்கொண்டிருக்கையிலேயே அன்பரசன் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட்டது.
மொஜிட்டோவை அவள் பக்கம் நகர்த்தியவன் “சோ உங்க அப்பா அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்… நான் ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன் ஆரு… உங்களுக்கு இந்த நேமை யார் செலக்ட் பண்ணுனாங்க?” என்க
“எங்க தாத்தா” என்றாள் அவள் கண்களில் பரவசம் மின்ன.
“என்ன கண்ணு டாலடிக்குது? தாத்தா மேல பேத்திக்கு அவ்ளோ பாசமோ?” விளையாட்டாகக் கேட்டபடி சாலட்டிலிருந்த காய்கறியை முட்கரண்டியால் குத்தி ஆரபியிடம் நீட்டினான். நீட்டினான் என்பதை விட அவளுக்கு ஊட்ட முயன்றான் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஆரபியும் தாத்தாவைப் பற்றி நீண்டநாட்கள் பேச வாய்ப்பு கிடைத்த உற்சாகத்தில் அவன் ஊட்டியதை விழுங்கியவள் “ஆமா! எங்க தாத்தாக்கு நான்னா ரொம்ப இஷ்டம்… தாத்தா நான் குழந்தையா இருந்தப்ப எனக்காக ஸ்பெஷலா செய்ய சொன்ன தங்க கொலுசை அப்பிடியே வச்சிருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிய பிறகே அவன் நீட்டிய காய்கறியை உண்டதையே உணர்ந்தாள்.
உடனே திகைத்துப் போய் முட்கரண்டியையும் அன்பரசனையும் மாறி மாறி பார்த்தவள் “அது… நான் பேச்சு சுவாரசியத்துல…” என்று அவள் தடுமாற அவனோ மந்தகாசப்புன்னகையோடு அதே முட்கரண்டியால் உண்ண ஆரம்பித்தான்.
ஆரபி பேசாமல் அமர்ந்திருக்கவும் சாப்பிட்டபடியே “அந்தக் கொலுசை பத்திரமா வச்சுக்க… நமக்குப் பிறக்கப்போற பொண்ணுக்குக் கால்ல போட்டுவிடலாம்” என்றதும் அவளது கண்கள் “என்னது நம்ம பொண்ணா?” என்ற வாக்கியத்தின் இழுவைக்கு ஏற்றபடி விரிந்தன. அவன் தன்னை ஒருமையில் உரிமையோடு விளித்ததில் பெண் மனம் படபடத்தது.
அன்பரசன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு புருவத்தை உயர்த்தியபடி ஆரபியை ஏறிட்டான். அந்தப் பார்வையில் அவளது உதடுகள் இரண்டும் பசை போட்டு ஒட்டிக்கொள்ளாத குறை!
“ஏன் மேடமுக்கு பொண் குழந்தை பிடிக்காதா? பெண்ணே பெண்ணுக்கு எதிரினு சரியா தான் சொல்லிருக்காங்க” என்று பொய்க்கோபத்தோடு முட்கரண்டியை சாலட் பவுலில் அவன் போடவும்
“ஐயோ! நான் அப்பிடி சொல்லலைங்க… எனக்கு எந்தக் குழந்தைனாலும் ஓ.கே தான்… ஆனா நீங்க..” என்று அவள் விளக்கம் கொடுக்க முன்வரும் முன்னர் லெட்டூஸ் இலையை ஏந்திய முட்கரண்டி அவள் முன்னே நீட்டப்பட்டது.
ஆரபி சாப்பிடாமல் பார்க்கவும் மீண்டும் அவனது புருவங்கள் ஏறியிறங்கின. அவசரமாக அதை விழுங்கியவள்
“நம்ம இன்னும் ஒருத்தரை பத்தி இன்னொருத்தர் தெரிஞ்சுக்கவே இல்ல… அதுக்குள்ள குழந்தை அது இதுனு பேசுனதால…” என்று சொன்னபடி பாதி வார்த்தையை விழுங்கிக்கொண்டாள்.
அன்பரசன் புரிந்தது என்பது போல் தலையாட்டினான்.
“நீ சொல்லுறதும் சரிதான் ஆரு… நீ உன்னைப் பத்தி சொன்ன… நான் என்னைப் பத்தி சொல்லவேல்லயே… ஐ அம் அன்பரசன்… என் அப்பா அம்மாக்கு மூனு பசங்க… அக்கா, நான், என் தம்பி அருண் மூனு பேரும்… என்னோட அக்கா கங்காவை ஆலங்குளத்துல கல்யாணம் பண்ணி குடுத்திருக்கோம்… மாமா அங்க ரைஸ் மில் வச்சிருக்காங்க… அக்காக்கு ஒரே ஒரு பொண்ணு… அவ இந்த வருசம் காலேஜ் செகண்ட் இயர் போகுறா” என்றதும் ஆரபியின் விழிகளில் குறுகுறுப்பு ஏறியது.
“புரியுது… அக்காவோட பொண்ணு என் பொண்ணு மாதிரி… நான் தூக்கி வளத்த குழந்தை அவ… சோ அவளைக் கல்யாணம் பண்ணுற ஐடியா எங்க குடும்பத்துல யாருக்கும் வந்ததில்ல…. அருண் எம்.பி.ஏ முடிச்சிட்டான்… ஜாப்கு ட்ரை பண்ணிட்டிருக்கான்… எங்க ஃபேமிலி இருக்குறது நல்லூர்ல… அப்பா ரிட்டயர்மெண்டுக்கு அப்புறமா சும்மா இருக்கப் பிடிக்காம ஆலங்குளம் பஸ் ஸ்டாண்ட்ல ஃப்ரூட் ஷாப் வச்சிருக்கார்… இப்ப என்னைப் பத்தி சொல்லிடுறேன்.. நான் இப்ப SAB ABAP சீனியர் கன்சல்டண்டா ஒர்க் பண்ணிட்டிருக்கேன்… நல்ல சேலரி… பட் எனக்கு பிசினஸ் பண்ணணும்னு ஆசை.. அதுக்கான ப்ளானை அப்பா கிட்ட சொல்லிட்டேன்… இப்ப நோட்டீஸ் பீரியட்ல ஒர்க் பண்ணிட்டிருக்கேன்… இது முடிஞ்சதும் என் பிசினசுக்கான வேலைய ஆரம்பிச்சிடுவேன்… சொந்தத்தொழில் செய்யுற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்குறதுல உனக்கு எதுவும் அப்ஜெக்சன் இருந்துச்சுனா இப்பவே நீ சொல்லிடலாம்”
இல்லை என மறுத்தாள் ஆரபி.
“உன்னைப் பத்தி நீ சொன்ன வரைக்கும் ரொம்ப சாஃப்டான நேச்சர் உள்ள யார் வம்புக்கும் போகாத பொண்ணுனு தெரியுது… என்னைப் பத்தி நானே சொல்லிடுறேன்… எனக்கு ட்ரிங்ஸ், ஸ்மோக்கிங் இதுல்லாம் சுத்தமா ஆகாது… உடம்பு மேலயும் உயிர் மேலயும் அக்கறை இருக்குறதால பழகிக்கல… அப்புறம் நான் கொஞ்சம் கோவக்காரன்… எல்லாத்துக்குலாம் கோவம் வராது… நான் ரொம்ப நம்புறவங்க என் கிட்ட பொய் சொன்னாலோ, என் கண் மறைச்சு எதாச்சும் காரியம் பண்ணுனாலோ கோவம் வரும்… மத்தபடி கொஞ்சம் பிடிவாதம் உண்டு… அப்புறம்..” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே
“எங்க வீட்டுல நீங்க தான் மருமகன்னு முடிவே பண்ணிட்டாங்க அன்பு” என்றாள் ஆரபி.
அன்பரசனின் பேச்சு பாதியில் நின்று போனது.
“அப்ப அவங்க சொன்னதுக்காக நீ இங்க வந்தியா?” அவனது குரலில் தெரிந்த மாற்றம் அவளைப் பதற வைத்தது.
“இல்ல… அவங்க சொன்னதுக்காக நான் வரல… நீங்க என் கிட்ட பேசுன விதம் எனக்குப் பிடிச்சிருந்துச்சு… இங்க வந்ததுல இருந்து நான் உங்களைக் கவனிச்சிட்டிருக்கேன்… கோவம், பிடிவாதம் எல்லாம் ஒவ்வொரு மனுசனுக்கும் உண்டு அன்பு… அதை வெளிப்படுத்துற விகிதாச்சாரம் மாறும்… நீங்க அதை கொஞ்சம் அதிகமா வெளிப்படுத்துற நபரா இருக்கலாம்… என்னால அதை ஹேண்டில் பண்ண முடியும்னு நம்புறேன்”
பதற்றம் மெல்ல மெல்ல குறைந்து தெளிவாக அவள் பேசியபோது அன்பரசனுக்கு இவள் தான் என் மனைவி என்ற தீர்மானம் மனதில் தோன்றிவிட்டது.
பொதுவாக ஏற்பாட்டுத் திருமணங்களை எள்ளி நகையாடுபவர்கள் சொல்லும் காரணமே “அது எப்பிடி பேசுற பத்து நிமிசத்துல ஒருத்தரை உங்களால லைஃப் பார்ட்னரா டிசைட் பண்ண முடியுது?” என்பதே.
அன்பரசனின் ரூம் மேட் கூட அதைச் சொல்லி கேலி செய்து தான் அவனை அனுப்பி வைத்திருந்தான்.
காதலிப்பவர்கள் மட்டும் யுகயுகமாகப் பழகிவிட்டா காதலிக்கத் தொடங்குகிறார்கள்? அவர்களும் குறுகிய காலத்தில் தானே காதல்வயப்படுகிறார்கள்? அந்தக் காதலின் அடிப்படையில் நடக்கும் திருமணங்கள் மட்டுமே உண்மையான நேசத்தின் அடையாளம் என்றால் காதலித்து மணக்கவிருப்பவளின் தந்தையிடமே காதலன் வரதட்சணை வாங்குகிறானே? இது எந்த விதத்தில் புனிதத்தில் சேர்த்தி?
இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டு அவனது வாயை அடைத்த பிற்பாடே அன்பரசனும் ஹார்ட் ராக் கபேக்கு வந்து சேர்ந்தான்.
ஆரபி தெளிவாய்ப் பேசியதும் அவனும் ஒரு முடிவுக்கு வந்தான்.
“எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல முழுச்சம்மதம்… நான் இன்னைக்கே அம்மாக்கு கால் பண்ணி சொல்லிடுறேன்… முழுசா இன்னும் முப்பது நாள் என் கையில இருக்கு… அந்த முப்பது நாளும் நம்ம பேசி பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்”
ஆரபி சரியெனத் தலையாட்டினாள்.
அவளுக்கும் இந்த ஏற்பாட்டில் சம்மதமே! பின்னர் அவன் நீட்டிய சிக்கன் ஃப்ளாட் ப்ரட் துண்டை மறுப்பு கூறாமல் சுவைத்தவள் அவர்களுக்குப் பின் மேஜையில் காதலர்கள் சண்டையிடுவதில் கவனம் செல்லவும் திரும்பிப் பார்த்தாள்.
“நம்ம லவ் பண்ணுனப்பவே நீ உன் எக்ஸ் கூட பேசிட்டிருந்திருக்க… நீ யாருக்கும் உண்மையா இல்லடி… எல்லாத்தையும் இப்பவே முடிச்சிக்கலாம்” என்று கத்தித் தீர்த்துவிட்டு கண்ணீரைப் புறங்கையால் துடைத்தவாறு அங்கிருந்து சென்றான் காதலன்.
காதலியோ சிலை போல நின்று கொண்டிருந்தாள். ஆரபி இருவரைப் பற்றியும் எண்ணி வருத்தப்பட்டபோதே “இதுக்காகவே என் மனைவிக்கு நான் முதல் காதலா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்” என்று சொன்னபடி ஆரபியிடம் இன்னொரு துண்டு சிக்கன் ஃப்ளாட் ப்ரெட்டை நீட்டினான் அன்பரசன். இப்போது அவளும் சிலையானாள் அதைச் சுவைக்க மறந்தவளாக.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

