அவனது அறையில்தான் சஞ்சயும் அட்சரனும் இருப்பார்கள் என்பதால் கதவைத் தட்டினாள்.
“யாரு? வாங்க வாங்க. நாங்க ரெடியாயாச்சு” சஞ்சயின் குரல் கேட்டது.
“எங்கடா அவன்?” அறைக்குள் பிரவேசித்த வானதி நண்பர்களிடம் கேட்க,
“எவன்?” என்றபடி வந்தான் அட்சரன்.
“உங்க ஃப்ரெண்ட். என் புருஷன்” என அவள் அழுத்தமாயச் சொல்லவும்,
“நல்ல மரியாதை புருஷனுக்கு” என்று சிரித்தான் சஞ்சய்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்னை ஞாபகமில்லனு சொன்னவனுக்கு இதுவே அதிகபட்ச மரியாதைதான்” என அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வரவேற்பிற்கான ஆடையின் காலரை இழுத்துவிட்டபடி வந்தான் அருள்மொழி.
அவனைப் பார்த்ததும் “நீங்க ரெண்டு பேரும் வெளிய போங்கடா” என்று கட்டளை போலப் பேச, அட்சரனும் சஞ்சயும் அவளை முறைத்தார்கள்.
“இன்னும் எங்களோட மேக் ஓவர் முடியல. பசங்க ரூமுக்குள்ள புகுந்து அராஜகம் பண்ணுற நீ வெளிய போ” என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.
“அப்ப போகமாட்டிங்க?” இடுப்பில் கையூன்றி விஷமமாய்ப் பார்த்தவள் அருள்மொழி அருகே போய் நின்றாள்.
“முடியாது.”
“சரி போகாதிங்க! பால்மணம் மாறாத பச்சிளம் பாலகர்கள் ரெண்டு பேரும் இப்ப ரொமான்ஸ் சீனை லைவா பார்க்கப் போறிங்க” என்றபடி அருள்மொழியின் கழுத்தில் அவள் கைகளைப் போட்டுக்கொள்ள,
“போய் தொலையுறோம். ரெண்டு சிங்கிள் பாய்ஸ் சாபம் உன்னைச் சும்மா விடாது நதி” என்று புலம்பிக்கொண்டே வெளியேறினார்கள் இருவரும்.
அவர்கள் போனதும் கைகளை விலக்கிக்கொண்ட வானதி, “ரெடியாயிட்ட போல ரிசப்ஷனுக்கு?” என்று கேட்க,
“நீ இதைக் கேக்குறதுக்காக வரலனு புரியுது. மார்னிங் முகூர்த்தத்துல இருந்து நீ கடுகடுனு தான் இருக்குற. என்ன விஷயம்?” என்றான் அருள்மொழி நேரடியாக. எப்போதும் சுற்றி வளைத்துப் பேசுவதில் விருப்பமில்லை அவனுக்கு.
“ம்ம்! நேத்து பேச்சிலர் பார்ட்டி முடிஞ்சதும் போதைல இருந்த உன்னை ரூம்ல கொண்டு போய் விட்டது நான் தான்.”
“ஓஹ்! தேங்க்ஸ்.”
“ம்ம்… வெல்கம்! அப்ப நீ பேசுன ஒரு விஷயம் இத்தனை நாளா நீ போட்ட டிராமாவை முடிச்சு வச்சிடுச்சு. கல்யாணம் நல்லபடி முடியட்டும்னு இவ்ளோ நேரம் கம்முனு இருந்தேன். இப்ப நீ எனக்குப் பதில் சொல்லவேண்டிய நேரம்”
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வானதி சொல்ல, அருள்மொழியின் புருவங்கள் சுழித்துக்கொண்டன. நெற்றியில் தட்டிக்கொண்டவன் “போதைல என்ன உளறுனேன்னு தெரியலையே” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்.
வானதி அவனது முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவள், “என்னை மறந்துட்டதா ஏன் பொய் சொன்ன?” என்று கேட்க, ஒரு நொடி அருள்மொழியின் விழிகளில் கலவரம். இதைத்தான் உளறிவிட்டோமோ என அவன் யோசிக்கும்போதே அவனது மோவாயை விடுவித்தாள் வானதி.
ஒரு கையை சுவரில் ஊன்றி அவனைச் சிறை செய்வது போல நின்றவள் விசாரணையை ஆரம்பித்தாள்.

“பன்னிரண்டு வருஷமா உனக்கு என்னைப் பத்தின ஞாபகம் வரணும்னு பைத்தியம் மாதிரி நான் லெட்டர் எழுதி அனுப்புனேன். நீ என்னைப் லூசுனு நினைச்சிருப்பல்ல. எதுக்கு என்கிட்ட பொய் சொன்ன? எதுக்கு இங்க வந்திருக்க? என்னை அவ்ளோ தூரம் பிடிக்கலனு சொன்னவன் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?”
கோபாவேசமாய் அவள் கேள்விகளைக் கேட்டபோதே அருள்மொழியின் மொபைல் இசைக்க, இருவரது கவனமும் அங்கே திரும்பியது. இருவருக்கும் அருகே கிடந்த டீபாயின் மீதுதான் மொபைல் இருந்தது. தொடுதிரையில் ‘சஞ்சனா காலிங்’ என்று வரவும், அருள்மொழி வேகமாய மொபைலை எடுக்கப் போக, அவனுக்கு முன்னர் அதை எடுத்தவள் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள்.
கண்களாலேயே ‘தள்ளி நில்லு’ என்று எச்சரித்தவள், சஞ்சனா பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.
“விஷ் யூ அ ஹேப்பி மேரீட் லைஃப் அருள். என் குழந்தைக்காக நான் கடவுள் கிட்ட பிரார்த்திக்குற ஒவ்வொரு தடவையும் உங்களுக்காகவும் வேண்டிப்பேன். நீங்க மட்டும் தைரியம் குடுக்கலனா ஆதர்ஷை எக்ஸ்போஸ் பண்ணுறதுக்கான தைரியம் எனக்கு வந்திருக்காது. சந்தோஷமா இருங்க. உங்க ஒய்பையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க.”
அருள்மொழி எச்சிலை விழுங்கியபடி நிற்கையிலேயே அழைப்பைத் துண்டித்த வானதி, மொபைலை அவன் மீது வீச, அவன் கேட்ச் பிடித்துக்கொண்டான்.
“என்ன நடக்குது இங்க? இவளைத்தானே ஆதர்ஷ் ஏமாத்துனான்? உனக்கு எப்பிடி இவளைத் தெரியும்? அப்ப இது எல்லாமே உன்னோட பிளானா? என்ன செஞ்சிட்டிருக்குற அருள்? பொய், நாடகம், சதினு ஏன் இப்பிடி போகுது உன் புத்தி? ஐ டிசர்வ் யுவர் ஆன்சர்ஸ்”
கோபத்தோடு அவள் கேட்க, அருள்மொழி அலட்டிக்கொள்ளாமல் மொபைலை மீண்டும் டீபாய் மீது வைத்தான். பின்னர் நிமிர்ந்து நின்றவன்,
“நான் தான் சஞ்சனாவைத் தூண்டிவிட்டு உன் கல்யாணத்தை நிறுத்துனேன். ஆதர்ஷ் கேரக்டர் மோசம்னு நம்பத்தகுந்த இடத்துல இருந்து ஆதாரத்தோட எனக்குத் தகவல் கிடைச்சுது. அந்தப் பொண்ணைப் பாத்துப் பேசுனேன். நான் உன்னை ஒரு சீட்டர் கிட்ட இருந்து காப்பாத்திருக்கேன். நியாயப்படி நீ எனக்கு நன்றியோட இருக்கணும்” என்றான் திமிராய்.
வானதி விரக்தியும் கோபமுமாக நகைத்தவள், “நன்றியா? மை பூட்! பொய் சொல்லி இத்தனை வருஷம் நீ என்னை நோகடிச்சிருக்க. அதுக்காகவும் நன்றியோட இருக்கணுமா? பிரண்ட் கிட்ட பொய் சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல?” என்று கொந்தளிக்க,
“நிறுத்து! நீ என் பிரண்ட் இல்ல. உன்னை நான் எப்பவோ அந்த உறவுல இருந்து தூக்கியெறிஞ்சிட்டேன். நீ ஒரு கொலைகாரி. என் குடும்பத்தைக் கொன்னவங்களுக்கு வழிகாட்டுனவ நீ. உன்னை ஞாபகம் இருக்குனு சொல்லிக்க நான் அசிங்கப்பட்டேன். அதான் பொய் சொன்னேன். போதுமா?” என்று அவளை விட அதீத கோபத்தோடு சொன்னான் அருள்மொழி.
இருந்த இலகுவான உடல்மொழி, உற்சாகமான மனநிலை எல்லாம் மாறி அவள் தன்னைக் குற்றவாளியாய் விசாரிக்கவும் வெடித்துவிட்டான். வானதி செயலிழந்து போனாள் அவனது பதிலில்.
“நான்… நான் என்ன செஞ்சேன்? அது ஃபயர் ஆக்சிடெண்ட் அருள். மின்கசிவால…”
அருள்மொழி இடுங்கிய விழிகளோடு “ஏய்” என்று கத்தியதில் பேச்சு நின்று போனது வானதியிடம்.
“ஆக்சிடெண்டா? என் குடும்பத்தைக் கொலை பண்ணுனாங்கடி. என் அம்மா, அப்பா, கர்ப்பமா இருந்த என் அத்தைனு எல்லாரையும் அடிச்சே கொன்னாங்க. எல்லார் உடம்பும் எரிஞ்சு சாம்பலாகுற வரைக்கும் அங்க எப்பிடி ஒரு ஃபயர் சர்வீஸ் வண்டி கூட வரல? இட் வாஸ் அ ப்ரீ பிளான்ட் மர்டர். ஊருக்குத்தான் அது தீ விபத்து. அதைத் தீ விபத்தா ஜோடிச்சது உன் அப்பன்.”
கை நீட்டி குற்றம் சாட்டியவன் கோபத்தோடு அவளது தோள்களைப் பற்றிக்கொண்டான்.

“சுந்தரபாண்டியபுரத்துல எங்க புதுவீடு பால்காய்ச்சுன ஈவ்னிங் எங்க கூட வா, அப்புறமா தோப்பு வீட்டுக்குப் போகலாம்னு சொன்னேனா இல்லையா? நீ வரமாட்டேன்னு அடம்பிடிச்ச. யார் வந்தாலும் என் குடும்பம் கார்ல கிளம்பிப் போயிடுச்சுனு சொல்லு வானதினு சொன்னேனா இல்லையா? என்னடி பண்ணுன நீ? கொலைகாரனுங்க கிட்ட நாங்க எங்க இருக்கோம்னு சொன்ன. நீயும் எங்க கூட வந்திருந்தாலோ, அவனுங்க கிட்ட நான் சொன்ன மாதிரி நாங்க கார்ல கிளம்பிப் போயிட்டோம்னு சொல்லிருந்தாலோ இன்னைக்கு என் அப்பா, அம்மா, என் அத்தை, என் அத்தையோட பாப்பா எல்லாரும் உயிரோட இருந்திருப்பாங்க. உன்னால நான் எல்லாரையும் இழந்துட்டு அனாதையா நிக்குறேன். யூ டிசர்வ் மை ஹேட்ரெட் வானதி. விளக்கம் போதுமா? என் முன்னாடி நிக்காம கிளம்பிடு. ரிசப்ஷன்ல நல்ல கப்பிளா நடிக்கணும்ல?”
சொன்னவன் கதவை நோக்கி அவளைத் தள்ளிவிட, நிலைகுலைந்தவளாய் அந்த அறையிலிருந்து வெளியேறினாள் வானதி. தன்னை மீறி கோபத்தில் கூட அவள் மீதான வெறுப்பிற்கானக் காரணத்தை அவளிடம் சொல்லி வானதியை வருத்திவிடக்கூடாதென அவன் எடுத்தப் பிரயத்தனங்களை அவனே உடைத்துவிட்டான் அருள்மொழி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

