“எனக்கு கிப்ட் ராப்பர்ஸை சேர்த்து வைக்கிறது ரொம்ப பிடிக்கும்… இது வரைக்கும் ஒரு நாப்பது கவர் சேர்த்து வச்சிருக்கேன்… ராப்பர்சோட பளபளப்பு, அதை கட்டியிருக்குற ரிப்பனோட வழுவழுப்பும் ஒவ்வொரு தடவை பாக்குறப்பவும் கிப்ட் கிடைச்ச மொமண்டை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும் எனக்கு”
-நித்திலா
ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா…
ரிசார்ட்டின் குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் மைந்தனோடு அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர். அவன் இத்துணை பொறுமையாக பேசி பார்த்திராத நர்மதாவின் கண்கள் இக்காட்சியை ஆவலோடு ரசித்துக்கொண்டிருந்தது.
“எனக்கு ரோமா டயானா ஷோ பாக்க ரொம்ப பிடிக்கும் டாடி… ஆனா நித்திம்மா போன் தரமாட்டாங்க… பேபிஸ் மொபைல் ஃபோன் பாத்தா அய்ஸ்ல ப்ராப்ளம் வருமாம்”
“அப்பிடியா? கொஞ்சநேரம் பாத்தா ஒன்னும் ஆகாது… நீ ஏன் அம்மாவோட மொபைலை கேக்குற?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஏன்னா எனக்கு மொபைல் கிதையாதே”
கையை விரித்து உதட்டைப் பிதுக்கி பரிதாபமாக வைத்துக்கொண்டு அச்சிறுவன் சொன்ன விதத்தில் கிருஷ்ணராஜசாகருக்கு அவனை அள்ளிக் கொஞ்சலாம் போலிருந்தது.
அதையே செய்தான். அவனது பந்து கன்னங்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அம்ரித் கூச்சத்தில் சிரித்தான்.
“ப்பா குத்துதுப்பா”

கிருஷ்ணராஜசாகர் புரியாமல் விழிக்க நர்மதா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டார்.
“உன் தாடி குத்துதாம் உன் புள்ளைக்கு… அதை தான் சொல்லுறான்”
கிருஷ்ணராஜசாகர் உடனே தனது மோவாயைத் தடவிப் பார்த்தான். இத்தனை நாட்களில் ஷேவ் செய்ய மறந்ததை கன்னத்து ரோமங்கள் நினைவுறுத்தின.
“ஓ! டாடி இன்னைக்குக் க்ளீன் ஷேவ் பண்ணிடுறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனோடு விளையாட ஆரம்பிக்கையில் அவனது மொபைல் இசைத்தது.
அழைத்தவளின் பெயரைப் பார்த்ததும் மெல்லிய திகைப்பு அவனுக்குள் இழையோடியது.
“பாட்டி கூட பேசிட்டு இரு அம்ரு… டாடி இப்ப வந்துடுறேன்”
பேசுபவள் யாரென அறிந்தால் நர்மதாவின் மனம் புண்படும். எனவே தூரமாகச் சென்று நின்றவன் “சொல்லு நயனி” என்றான் அமைதியாக.
மறுமுனையில் பேச நினைத்த ஸ்ரீநயனிக்கோ பேச்சு வரவில்லை. தொண்டைக்குள் யாரோ கான்க்ரீட்டை வைத்து தடுப்புச்சுவர் எழுப்பியதை போல உணர்ந்தாள்.
“நயனி… நயனிம்மா ஆர் யூ ஓ.கே?”
கிருஷ்ணராஜசாகரின் குரலில் தெரிந்த பதற்றத்தில் ஸ்ரீநயனியின் கண்கள் கலங்கின. யாருக்கு எப்படியோ ஸ்ரீநயனிக்கு அவளது அண்ணன் அன்பானவன். அவளுக்காக எதையும் செய்பவன். இனியும் செய்வான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. குடும்ப உறுப்பினர்களில் ஸ்ரீநயனி மட்டும் அவனுக்கு ஸ்பெஷல்.
கடந்த காலத்தில் நேர்ந்த அனர்த்தம் ஒன்றினால் தமையனிடம் பேசுவதை அறவே நிறுத்தியவளுக்கு வீட்டுக்கு வந்த போது நிஹாரிகா கோபத்தில் உளறிய செய்தியைச் சொல்லியே ஆகவேண்டுமென்ற அவசரம்.
“நயனி என்னம்மா ஆச்சு? உடம்பு சரியில்லையா? நான் வேணும்னா வரட்டுமாடா?”
“அண்ணா…”
பிசிறின்றி வந்த குரலில் அழுகை தொனியே அதிகமாக இருக்க கிருஷ்ணராஜசாகரும் ஒரு கணம் அமைதியானான்.
எத்தனை ஆண்டுகள் கழித்து அவனது தங்கை அண்ணா என அழைத்திருக்கிறாள். அம்ரித்தின் ‘டாடிக்கு’ சற்றும் குறையாதது ஸ்ரீநயனியின் அண்ணா என்ற அழைப்பு.
“சொல்லுடா… இத்தனை வருசம் கழிச்சு எனக்குக் கால் பண்ணிருக்க? எதுவும் பிரச்சனையா?”
“பிரச்சனை இல்லண்ணா… உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்… ‘சாகர் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்’ சம்பந்தப்பட்டது”

அமெரிக்கா சென்றதிலிருந்து குடும்பத்தினரையோ தொழிலையோ ஒரு பொருட்டாக கூட ஸ்ரீநயனி கருதியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று தொழில் குறித்துப் பேசுகிறாள் என்றால் ஏதோ நடந்திருக்க வேண்டும்.
“சொல்லு நயனிமா”
“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி இங்க சந்தீப் அண்ணாவும் நிஹாரிகாவும் வந்திருந்தாங்க… அவளுக்கும் எனக்கும் வழக்கம் போல முட்டிக்கிச்சுண்ணா… அப்ப அவ கோவத்துல மனசுல இருக்குற திட்டத்தை உளறிட்டா”
“என்ன சொன்னா அவ?”
“சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்கு சந்தீப் அண்ணாவ ராஜா ஆக்கணும்னு அவ போராடுறாளாம்… ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் ஹெர் ஸ்பீச்… பட் அவ ஏதோ ப்ளான் பண்ணுறாண்ணா… உடனே அப்பா கிட்ட சொல்லி என்ன ஏதுனு பாக்க சொல்லு”
ஸ்ரீநயனி சொல்லி முடிக்கையில் கிருஷ்ணராஜசாகரின் முகம் இறுகிப்போனது. சாகர் குழுமம் ஒன்றும் கேட்பாரற்ற பொருள் இல்லை அவளது தலையாட்டி பொம்மை கணவனுக்குத் தூக்கிக் கொடுப்பதற்கு. என்ன நினைப்போடு இப்படியெல்லாம் நிஹாரிகா பேசியிருப்பாள்? இதை தந்தையிடம் சொன்னால் மட்டும் காது கொடுக்கவா போகிறார்?
“அப்பாக்கு என் மேல வருத்தம் நிறைய இருக்கு நயனி.. இந்த விசயத்துல நான் என்ன சொன்னாலும் அவர் காதுல ஏறாது… அவருக்கு இப்ப சந்தீப் தான் முக்கியம்”
“என்னண்ணா சொல்லுற? எனக்குப் புரியல”
“அப்பா என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னார்… நான் முடியாதுனு சொல்லிட்டேன்… ஃபேமிலி வேல்யூஸ்கு மரியாதை குடுக்க தெரியாதவனை அவரோட மகன்னு சொல்லிக்க அவமானமா இருக்குதாம்… பொண்டாட்டிதாசனா இருந்தாலும் சந்தீப் அவனுக்குனு ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கிட்டான்னு சொல்லி என்னை இன்சல்ட் பண்ணுனார்… போதாக்குறைக்கு அந்த நிஹாரிகா என்னைக் கிண்டல் பண்ணுனா… ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சு நயனி… இப்ப நிஹாரிகாவோட ப்ளானை பத்தி வார்ன் பண்ணுனாலும் அப்பா என்னை நம்ப மாட்டார்டா”
“இப்ப என்ன பண்ணுறதுண்ணா?”
“நீ டென்சன் ஆகாத… நான் பாத்துக்குறேன்”
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு ஸ்ரீநயனி தயக்கத்தோடு கேட்டாள்.
“அண்ணி பத்தி ஏதாவது நியூஸ் கிடைச்சிச்சா?”
“இல்ல”
தங்கையிடம் பொய்யுரைத்தான் அவன்.
“ஓ!”
ஏமாற்றமாக உணர்ந்தாள் ஸ்ரீநயனி. அதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது? அழைப்பைத் துண்டிக்கலாமா என கைகள் துடித்தாலும் அன்னையைப் பற்றி விசாரியேன் என மனம் தவித்தது.
“அம்மா எப்பிடி இருக்காங்கண்ணா?”
“நல்லா இருக்காங்க… பேசுறியா?” என கேட்டவனிடம் வேகமாக மறுத்தாள் ஸ்ரீநயனி.
“அப்பா கிட்ட நீ பேசிப் பாருண்ணா… அவர் நீ சொல்லி கேக்கலனா நான் வர்றேன்… அப்ப நேர்ல அம்மா கிட்ட பேசிக்கிறேன்… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… பை”
அவ்வளவு தான்! அன்னையின் நலனை விசாரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அவனது அன்புத்தங்கை.
நிறுவனம் குறித்து எச்சரித்தாள். அண்ணியைப் பற்றியும் அன்னையைப் பற்றியும் கேட்டறிந்தாள். ஆனால் ஒரு தடவை கூட நீ நலமா அண்ணா என்று கேட்கவில்லை. இன்னும் தன் மீதுள்ள கோபம் ஸ்ரீநயனிக்குக் குறையவில்லை என்று எண்ணிக்கொண்டான் வேதனையோடு.
அம்ரித் விளையாடுவதைப் பார்த்தபடி வந்த இப்ராஹிம் கிருஷ்ணராஜசாகரிடம் விவகாரம் என்னவென வினவினான்.
அவனும் ஸ்ரீநயனியின் எச்சரிக்கையைக் கூறினான்.
“என்ன செய்யுறதுனு புரியல இப்ராஹிம்… அப்பா நான் சொன்னா காதுல போட்டுக்கமாட்டார்… அந்தப் பொண்ணு வேற கிரிமினலா யோசிப்பா… ஃபேமிலி வேல்யூஸ் தெரியல தெரியலனு என்னை இன்சல்ட் பண்ணி….”
கிருஷ்ணராஜசாகர் பேசிக்கொண்டே சென்றவன் திடீரென நிறுத்தினான். அவனது பார்வை அம்ரித்தை வலம் வந்தது.
இவன் என் மைந்தன் தானே! இவன் இருக்கையில் நான் எப்படி குடும்பம் அற்றவன் ஆவேன்? இவனோடு போய் நின்றால் தந்தையிடம் இருந்து குடும்பப்பற்று இல்லாத ஜடம் என்ற குற்றச்சாட்டு வருமா என்ன?
இவன் மட்டும் என்னுடன் வந்துவிட்டால் என் இரத்தத்தில் உதித்த மைந்தனை வாழும் வரமும் கிடைக்கும், கூடவே தந்தையிடம் இழந்த மரியாதையும் சாகர் குழுமத்தின் வருங்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் வசப்படும்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என அம்ரித்தைப் பற்றி அறிந்துகொண்ட தினத்திலேயே அவன் திட்டம் தீட்டியிருந்தான்.
இதே காரணத்தால் தான் அம்ரித்தைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் முடிவில் பிடிவாதமாக இருந்தவன் இப்போது இன்னொரு காரணமும் சேர்ந்துவிட இப்ராஹிமை நோக்கி குயுக்தியான புன்னகை ஒன்றை வீசினான்.
“அம்ரித்… இவனை மறந்துட்டேன் பாத்தியா? இவன் தான் சாகர் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்ல எனக்கான அதிகாரத்தையும், அப்பா என் கிட்ட இழந்த நம்பிக்கையையும் மீட்டுத் தரப்போறான்”
கிருஷ்ணராஜசாகரின் திட்டம் என்னவென புரியாமல் இப்ராஹிம் விழித்தான்.
அவனோ “எனக்கு ஃபேமிலி வேல்யூஸ் தெரியாதா? நான் சாகர் குரூப்ல வெறும் டைரக்டர் மட்டும் தான்னு சொன்னார்ல… அவரே என் கிட்ட சேர்மன் பொறுப்பை ஒப்படைப்பார்… வெயிட் அண்ட் வாட்ச்” என்றான் சவாலிடும் தொனியில்.
இப்ராஹிம் திகைக்க அவனோ “அம்ரு குட்டி இதோ வர்றேன்டா” என மைந்தனைத் தேடி உற்சாகத்துடன் சென்றுவிட்டான்.
அம்ரித் நர்மதாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
“ப்ளேஸ்டேசன் வாங்கி தரமாட்டேன்னு நித்திம்மா சொல்லிட்டாங்க”
“ஏன்டா கண்ணா?”
“சின்னப்பசங்க அதுல்லாம் விளையாடக்கூடாதாம் பாட்டி… எங்க வீட்டுல டிவியும் கிடையாதுல்ல”
சோகமாகக் கூறிவிட்டுத் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான் அம்ரித்.
குழந்தைக்கு எது நல்லதென அவனது அன்னைக்குத் தானே தெரியும். நித்திலாவின் மறுப்புக்கும் காரணம் இருக்குமென நர்மதாவின் மனம் சிந்திக்கையில் அம்ரித்தைத் தூக்கிக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
“அம்ரு குட்டிக்கு ப்ளேஸ்டேசன் வேணுமா?”
அவன் கேட்டதும் அம்ரித்தின் கண்கள் ஆசையில் விரிந்தன. அடுத்த நொடியே தொய்வும் அடைந்தன.
“வேண்டாம் டாடி”
சோகமாக பதிலளித்தான் அவன்.
“ஏன்டா குட்டி? இப்ப தானே அம்மா வாங்கி தரமாட்டேன்னு சொன்னதா பாட்டி கிட்ட பேசிட்டிருந்த”
“நித்திம்மா யார் கிட்டவும் எதுவும் கேட்டு வாங்கக்கூடாதுனு சொல்லிருக்காங்க”
கிருஷ்ணராஜசாகருக்கு எரிச்சல் வந்தாலும் அது நல்ல பழக்கம் தானே என்று சமாதானமடைந்தான்.
தான் ஒன்றும் யாரோ அல்லவே!
“மத்தவங்க கிட்ட வாங்கக்கூடாதுடா… நான் உன் டாடி தானே”
மகனைச் சமாதானம் செய்தவன் ஒருவழியாக ப்ளேஸ்டேசன் வாங்குவதற்கு சம்மதிக்கவும் வைத்தான். கூடவே டேப் ஒன்றும் வாங்கித் தருவதாக கூறினான்.
“டேப் எனக்கு யூஸ் பண்ண தெரியாதே?”
கைகளை விரித்து அவன் கூறவும் அவனது முன்னுச்சி சிகையைக் கலைத்துவிட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“நான் சொல்லித் தர்றேன்டா குட்டி… அதுல நீ ரோமா டயானா பாக்கலாம்… சரியா?”
“சரி டாடி… லவ் யூ”
தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான் அம்ரித். கிருஷ்ணராஜசாகருக்குச் சொல்லவொண்ணா ஆனந்தம். உடனே இப்ராஹிமிடம் சோனி ப்ளேஸ்டேசன், 4K கேமிங் மானிட்டரை வாங்கி நித்திலாவின் வீட்டில் சேர்ப்பித்துவிடும்படி கட்டளையிட்டான்.
சந்தோசத்தில் அம்ரித்தின் வதனம் பூரிக்க அதில் கிருஷ்ணராஜசாகருக்கு இனம்புரியா சந்தோசம். ஆனால் நர்மதாவுக்கு இது சரியாகப்படவில்லை.
“நித்திலா கிட்ட கேக்காம இதெல்லாம் வாங்கணுமா கிரிஷ்?”
“என் பையன் ஆசைப்பட்டதுலாம் அவனுக்குக் கிடைக்கணும்மா… அவனோட அம்மா மாதிரி அப்பா ஒன்னும் மாச சம்பளத்துக்கு வேலை பாக்குறவன் இல்ல… அவளை மாதிரி பட்ஜெட் போட்டு ஒவ்வொரு செலவும் இழுபறியா நிக்கிற நிலமையும் எனக்கு இல்ல… குழந்தை ஆசைப்பட்டதை வாங்கிக் குடுக்க யூஸ் ஆகாத பணம் எதுக்கும்மா?”
“நித்திலா வாங்கி குடுக்காததுக்கு பணத்தை தவிர வேற காரணம் இருக்காதுனு நீ நம்புறியா?”
“ஆப்வியஸ்லிமா… அவ வாங்குற சம்பளத்துல என் பிள்ளைக்கு குவாலிட்டியா நாலு ட்ரஸ் கூட வாங்கித் தர முடியாது”
கர்வத்தோடு எரிச்சலும் கலந்து ஒலித்த கிருஷ்ணராஜசாகரின் குரலில் நர்மதா அயர்ந்து போனார்.
எதையும் மனதில் வைக்காமல் நியாயவாதியாக நித்திலா அம்ரித்தை அனுப்பி வைத்திருக்கிறாள். அதற்கு நாமும் நியாயம் செய்யவேண்டுமல்லவா? ஆனால் மைந்தன் வழக்கம் போல தந்திரமாக யோசிக்கிறான்.
அம்ரித் சிறுவன். அவன் ஆசைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் அன்னையை விட ஆசைப்படுவதை எல்லாம் நிறைவேற்றுகிற தந்தையே பெரிது என அவன் நினைத்துவிட்டால்?
யோசிக்கும் போதே நர்மதாவுக்குப் பகீரென இருந்தது. அவரது யோசனையை மெய்ப்பிக்கும்படி அம்ரித்திடம் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரின் பேச்சும் அமைந்தது.
“எங்க வீட்டை விட சென்னை வீடு பெருசா?”
“ஆமாடா குட்டி…. அது தான் நம்ம வீடு… ரொம்ப பெருசா பாண்ட், கார்டன், தியேட்டர்லாம் இருக்கும் அங்க… ஆனா நீ தான் அங்க வரமுடியாதே”
“ஏன் டாடி?”
“உன் நித்திம்மாக்கு என்னைப் பிடிக்காதுடா குட்டி… உன்னை என் கூட அனுப்ப மாட்டா”
“ஆமால்ல”
குழந்தையின் முகம் வாடிப்போனது. மகனின் எண்ணவோட்டத்தையும், வியாபார புத்தியையும் வெகு சுலபத்தில் கண்டறிந்த நர்மதாவுக்குப் பயமாக இருந்தது.
எங்கே அவனால் மீண்டும் ஒருமுறை நித்திலா காயப்பட்டுப்போவாளோ என்ற பயம். ஒருமுறை பட்ட காயமே இன்னும் அவளுக்கு ஆறியிருக்காது. அப்படி இருக்கையின் இன்னொரு வேதனையை எப்படி அவள் தாங்குவாள்?

ஒரு காலத்தில் அவளை அன்னையாய் தாங்கிய நர்மதாவின் உள்ளம் அரற்றியது. நித்திலா காயப்படுவதை இம்முறை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாதென தீர்மானித்தார் அவர்.
“கிரிஷ்”
“என்னம்மா?”
அம்ரித்தோடு நின்றவனை ஊன்றிப் பார்த்தார். பின்னர் கண்டிக்கும் தொனியில் மனதிலுள்ளதை கூறிவிட்டார்.
“அம்மா கிட்ட இருந்து பிள்ளைய பிரிக்கிறது பாவம்… அதை செஞ்சுடாத”
கிருஷ்ணராஜசாகர் ஒரு பக்கமாக உதட்டை இழுத்துச் சிரித்தான்.
“ஓ மை டியர் நர்மும்மா! நீங்க என்னைப் புரிஞ்சிக்கிட்டது இவ்ளோ தானா? நான் நித்திலா கிட்ட இருந்து அம்ருவை எப்பவும் பிரிக்கமாட்டேன்”
நர்மதாவின் முகத்தில் நிம்மதி பரவியது.
“பட்…” அவன் ஏதோ விவகாரமாகச் சொல்லப்போகிறானோ என்ற பதற்றத்தில் வந்த நிம்மதி பறந்தோடிவிட பதற்றமானார் நர்மதா.
“அவளே என் கிட்ட அம்ருவோட பொறுப்பை ஒப்படைச்சா நான் இவனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுவேன்… எழுதி வச்சுக்கோங்க நித்திலாவே அம்ருவை என் கூட அனுப்பி வைப்பா”
உறுதியாகச் சொல்லிவிட்டு அவன் மீண்டும் அம்ரித்துடன் விளையாட ஆரம்பிக்க நர்மதாவின் இதயம் அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.
இதை அறியாத நித்திலாவோ விக்ரமோடு சேர்ந்து அம்ரித்துக்காக க்ளைடர் ஸ்கூட்டர் (Glider Scooter) ஒன்றை வாங்கிக்கொண்டிருந்தாள்.
“அம்ரு ரொம்ப நாளா கேட்டான் விக்கி… இதை பாத்தா சந்தோசப்படுவான்ல”
ஆசையோடு கேட்டவளிடம் ஆமென்றான் அவளது நண்பன். அவனுக்கும் அடுத்து நடக்கப்போகிற அதிரடி பற்றி தெரியாதே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

