ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாக இருந்தது அந்த வீடு. குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு மூலையில் அமர்ந்திருக்க, ஐந்து வயது சிறுவன் ஒருவன் சத்தம் போட்டு அழத் தொடங்கினான்.
“எனக்கு அக்காவைப் பார்க்கணும்” என்ற அவனது ஓலத்தில் திடுக்கிட்டனர் பெரியவர்கள். அவந்திகாவின் வீடு தான் அது. அங்கே பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியவன் கௌசல்யா, ரகுவரனின் சீமந்தபுத்திரனான அர்ஜூன் தான்.
அவன் அவந்திகாவைத் தேடி அழத் தொடங்க அவனைத் தேற்ற ஆரம்பித்தார் ரகுவரனின் தாயாரான அம்புஜா.
“அஜ்ஜூகுட்டி அழக் கூடாதுடா… அக்கா வேலைக்குப் போயிருக்காடா…. இன்னும் பத்து நாள்ல வந்துடுவா”
“போ பாட்டி! நீ நேத்தும் இப்பிடி தான் சொன்னே… ஆனா அக்கா வரலை! எனக்கு இப்போவே அக்காவைப் பார்க்கணும்” என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டு கால்களைத் தரையில் உதைத்து அழத் தொடங்கினான்.
அம்புஜா எவ்வளவு முயன்றும் அவனது அழுகை குறையவில்லை. ரகுவரன் அவனைக் கொஞ்சி சமாதானம் செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஏற்கெனவே அவந்திகா எங்கே என்று தெரியாமல் பெரும் மனச்சங்கடத்துடன் பெண்ணுக்கு என்னவாயிற்றோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்த கௌசல்யாவுக்கு அர்ஜூனின் அழுகை கோபத்தைத் தான் உண்டாக்கியது.
விருட்டென்று எழுந்து அவனது அறைக்கு வந்தவர் அவனது முதுகில் இரண்டு அடிகளைப் போட்டு “இனிமே அழுவியா நீ? ஏற்கெனவே ஒருத்தி எங்கே போனானு தெரியலை… வீட்டுல எல்லாரும் அதை நினைச்சு வருத்தமா இருந்தா உனக்கு உன்னோட கவலை தான் பெருசா போச்சா?” என்று கத்தியவரை அவனிடமிருந்து விலக்கினார் ரகுவரன்.
“கௌசி! அவன் சின்னப்பையன்… அவந்திகா கூடவே இருந்து பழகிட்டான்… அவளுக்கு என்னாச்சோனு அவனுக்கும் பயம் இருக்குமில்ல… அவனோட பயத்தைக் காட்ட அவனுக்குத் தெரிஞ்ச ஒரே வழி அழுகை தான்… அதைப் புரிஞ்சிக்காம அவனை அடிக்காதே” என்று மனைவியைச் சமாதானம் செய்தார்.
அன்னையிடம் மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு கண் காட்டிவிட்டு மனைவியுடன் ஹாலுக்கு வந்தவருக்கும் அவந்திகா அப்படி எங்கே தான் சென்றிருப்பாள் என்ற கவலை தான்.
வயதுப்பெண்ணைக் காணவில்லையென்றால் எல்லா பெற்றோருக்கும் வரும் பயம் தான் அது. இப்போது இருக்கும் நிலையில் காவல்துறையிடம் புகார் அளிப்பது கூட சாத்தியமில்லை என்பதால் தான் அவருக்கும் கௌசல்யாவுக்கும் பெரும் பயமே.
இந்த இருபத்தியோரு நாட்களில் அவந்திகாவுக்குப் பெரும்தீங்கு ஏதும் நேரிட்டுவிடுமோ என்று எண்ணிக் கலங்கியதால் இருவருக்கும் இரவில் ஒரு பொட்டுத் தூக்கம் கூட வர மறுத்தது.
அவ்வபோது போன் செய்து ஆறுதல் சொன்ன பிரதியுஷாவும் ரித்திமாவும் இல்லையென்றால் அவந்திகா காணாமல் போன அதிர்ச்சியிலும், விக்ரமின் தாயாரின் விஷவார்த்தைகள் ஏற்படுத்திய காயத்திலும் கௌசல்யாவுக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்.
என்ன செய்யவென்று புரியாது கணவரின் தோளில் சாய்ந்து கொண்டவருக்குத் தமக்கையின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அவருக்குக் கொடுத்த வாக்கைத் தான் முழுமையாகக் காப்பாற்றவில்லையே என்ற குற்றவுணர்ச்சியுடன் கண்ணை மூடிக்கொண்டவரின் இமையையும் தாண்டி ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளி அவர் கன்னத்தில் இறங்கியது.
***********
“எனக்குப் பயமா இருக்கு உஷா! ஹனிபி எப்பிடி திடீர்னு காணாம போனா? நம்ம யாருகிட்டவும் இது வரைக்கும் பிரச்சனை பண்ணுனது இல்லையே… என்ன நடந்துச்சுனு தெரியாம அவளை எங்கே தேடுறதுனு புரியலை” என்று பிரதியுஷாவிடம் போனில் அழுதபடி இருந்தாள் ரித்திமா.
மறுமுனையில் பிரதியுஷாவின் நிலையும் அதுவே. ஆனால் அவள் தன் மனவுணர்வுகளை எளிதில் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள். தைரியமானப் பெண்கள் அழுவதில்லை என்று சிறுவயதிலிருந்தே பாட்டியால் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவள்.
“ரித்தி! நம்மளால இப்போ என்ன பண்ண முடியும்னு தெரியலை… ஹனிபி எங்கே போனா? என்ன ஆனா? யாரும் அவளைக் கூட்டிட்டுப் போனாங்களா? கிட்னாப் பண்ணிட்டாங்களானு எதுவுமே புரியலை… நம்மளால முடிஞ்சது அவ பத்திரமா திரும்பட்டும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறது மட்டும் தான்” என்றாள் அழுகையை அடக்கியக்குரலில்.
இரண்டு தோழியரும் அவந்திகாவை எண்ணி வருந்திக் கொண்டிருக்க, அவளோ கிஷோரும் அமரும் சப்பாத்தி என்ற பெயரில் செய்துவைத்திருந்த வஸ்துவைப் பிய்க்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாகப் பிய்த்து வாய்க்குள் வைத்தவளின் முகம் வேப்பங்காயைத் தின்றது போல அஷ்டகோணலானது. தனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதோ என்பது எண்ணுமளவுக்கு மற்ற நால்வரும் அந்தச் சப்பாத்திகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.
இரண்டு விள்ளல்களுக்கு மேல் அவந்திகாவின் தொண்டைக்குள் இறங்குவேனா என்று அடம்பிடித்தது. நால்வரையும் பார்த்து விழித்தவள் தன் முன்னே இருந்த தட்டை சடாரென்று விலக்கித் தள்ளிவிட்டுக் கை கழுவ எழுந்தாள்.
ராகவ் அவளது செய்கையில் எரிச்சலுற்றவன் “இவ்ளோ நேரம் பசிக்குதுனு சொல்லி எவ்ளோ இம்சை பண்ணுன? இப்போ சாப்பிடாம போனா என்ன அர்த்தம்?” என்று கேட்கவே
அவந்திகா “எனக்குச் சாப்பிட இஷ்டமில்லைனு அர்த்தம்” என்று தோளைக் குலுக்கிவிட்டுச் செல்ல
“இவளுக்காகக் கஷ்டப்பட்டுப் பிரிப்பேர் பண்ணுனிங்களே! இது தேவையா?” என்று சகோதரர்களைக் கேலி செய்துவிட்டுத் தன் தட்டில் உள்ளதைக் காலி செய்யத் தொடங்கினான் ராகவ்.
அவந்திகாவுக்கு கையையும் காலையும் கட்டி ஒரு கூண்டுக்குள் அடைத்தது போல இருந்தது. அவளால் ஒரே இடத்தில் நீண்டநேரம் வேலையின்றி ஓய்ந்து இருக்கவே முடியாது. அதனால் தான் அவளுக்கு ‘ஹனிபி’ என்று செல்லப்பெயரே வைக்கப்பட்டது.
அப்படிப்பட்டவள் கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணிநேரத்துக்கு ஒரே வீட்டில் குறுக்கும் மறுக்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெளியில் செல்ல கால்கள் துறுதுறுவென்று வரவே வீட்டு வாயில் தான் பூட்டு போடப்பட்டு விட்டதே என்ற எண்ணம் அவளுக்குள் சோர்வை உண்டாக்கியது.
அறையை விட்டு வெளியேறியவள் வராண்டாவின் மரக்கைப்பிடியில் கையை ஊன்றி கீழே எட்டிப் பார்த்தாள். இடம் வலமாகப் பார்வையைச் சுழற்றியவள் கைப்பிடிக்குக் கீழே உள்ள திண்டில் கால் வைத்து இறங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க
“இங்கே இருந்து குதிச்சா கை கால்ல குறைஞ்சது நாலு ஃப்ராக்சர் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு… குதிக்கிறியா?” என்று பின்னே ஒரு குரல் கேட்கவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே ராகவ் ஒரு இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி போனை நோண்டியபடி அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
அவந்திகா பேச வாயெடுக்கையில் அவனது சகோதரர்களும் வந்துவிட நால்வரும் அடுத்தடுத்து அமர்ந்து கொண்டனர்.
“எனக்கு ரொம்ப போர் அடிக்குது… அதான் இங்கே இருந்து குதிக்க முடியுமானு பார்த்தேன்… பட் ரொம்ப உயரமா இருக்கே” என்று கவலையுடன் சொல்லிவிட்டு நின்றவளைக் கண்டு நகைத்தான் வருண்.
“இஸிண்ட்? பட் நீங்க உயரத்துல ஏறி இறங்குறதுல எக்ஸ்பெர்ட்னு ரதி சொல்லிருக்காளே” என்றவனைப் பார்த்தவள்
“ஆமா! பட் இவ்ளோ உயரத்துல இருந்து குதிக்கக் கொஞ்சம் பயமா தான் இருக்கு… கை கால் உடைஞ்சா கூட பரவாயில்லை… என் ஃபேஸ்ல அடிப்பட்டு பெர்சனாலிட்டி போயிடுச்சுனா என்ன பண்ணுறது?” என்று வருத்தப்படவும் அந்த நால்வரும் அவளது பேச்சைக் கேட்டு திகைத்துத் தான் போயினர்.
அமர் கேலியாக “முகத்தை நினைச்சு அவ்ளோ கவலையா?” என்று கேட்க
“யெஸ் அஃப்கோர்ஸ்… அழகா இருக்குற எல்லாருக்கும் இந்தக் கவலை இருக்கும்” என்றாள் அவந்திகா சட்டென்று.
“அப்போ நீ கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை ஜான்சிராணி” என்று அசராமல் அவளைக் கலாய்த்த ராகவின் கழுத்தை நெறித்துக் கொல்லலாமா என்று எண்ணியவளுக்கு இப்போது அது நல்லதல்ல என்று தோன்றவும் அந்தத் திட்டத்தை ஒத்திவைத்தாள்.
ராகவ் சொன்னதைக் கேட்டு மற்ற மூவரும் கொல்லென்று நகைக்க, அவந்திகா நால்வரையும் முறைத்துவிட்டு “வெரி ஃபன்னி! இதுல்லாம் ஒரு ஜோக்குனு சிரிக்க வேற செய்யுறிங்க… உங்களைச் சொல்லி குத்தமில்லை… இவ்ளோ பெரிய மொக்கை ஜோக்கைச் சொல்லிட்டு அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைங்கிற மாதிரி இருக்கானே இவனைச் சொல்லணும்” என்று ராகவைப் பார்த்து முகத்தைச் சுளித்துவிட்டுத் திரும்பி நின்றுகொண்டாள்.
அதற்கும் நால்வரும் சிரிக்க, கிஷோர் தான் “ஓகே! அவந்திகா டோன்ட் டேக் இட் ராங்… நாங்க நாலு பேரும் ஒன்னா இருந்தா இப்பிடி தான் ஜோக் பண்ணி சிரிச்சிப்போம்” என்று அவளைச் சமாதானம் செய்தான்.
அவந்திகா பெரியமனதுடன் சமாதானம் ஆனப் பிறகு ராகவ் குறுகுறுவென்று அவளைப் பார்த்தவன்
“எனக்கு ஒரு விஷயம் தான் புரியலை… நாங்க நாலு பேரும் யாருனே உனக்குத் தெரியாது… இந்த இடமும் உனக்குத் தெரியாத இடம் தான்… ஆனா நீ எந்தப் பயமும், டென்சனும் இல்லாம எக்ஸ்கர்சன் வந்த ஸ்டூடண்ட் மாதிரி பிஹேவ் பண்ணுறியே… அது எப்பிடி?” என்று கேட்டுவைக்க
அவந்திகா “எல்லாம் ஒரு நம்பிக்கை தான்… உங்க மூஞ்சிகளைப் பார்த்தா கிரிமினல் மாதிரி தெரியலை… அப்புறம் என்னோட உஷா தப்பான ஒருத்தரை காதலிச்சிருக்க மாட்டானு நான் உறுதியா நம்புறேன்… சோ மிஸ்டர் கபூர் நல்லவரா இருந்தா ஆட்டோமேடிக்கா அவரோட பிரதர்சும் நல்லவங்களா தானே இருக்கணும்?” என்று சாதாரணமாகச் சொல்லிவிட நால்வரின் முகத்திலும் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது என்னவோ உண்மை.
ராகவ் “எங்களுக்கும் உன்னை மாதிரி ஒரு ஜீவன் எங்களோட இருக்கிறதுல எந்தச் சிரமமும் இல்லை… எங்க நாலு பேரோட அஞ்சாவதா ஒரு பையன் இருக்கிற ஃபீல் தான்… சோ நோ பிராப்ளம்” என்று விஷமத்தனமாகச் சொல்லிவிட்டு இரகசியச்சிரிப்பில் கண் மலர
அவன் சொன்னதைக் கேட்டதும் அவந்திகா “வாட்? நான் பார்க்கிறதுக்குப் பையன் மாதிரியா இருக்கேன்?” என்று பொங்கிவிட்டாள்.
“உன்னைக் கிட்னாப் பண்ணுறப்போ சில்க் ஷேரில பார்க்கிறதுக்கு கொஞ்சம் பொண்ணு மாதிரி இருந்தேனு சொல்லலாம்.. பட் இப்போ பார்க்கிறதுக்கு நீ பையன் மாதிரி தான் இருக்க ஜான்சிராணி” என்று அசராமல் சொல்ல அவந்திகாவுக்கு சுருசுருவென்று மூண்ட கோபத்தில் பல்லைக் கடிக்கத் தொடங்கினாள்.
அதைக் கண்டதும் ராகவ் சிறிது சத்தமாகவே சிரிக்க அவன் அருகில் வந்தவள் “இனிமே என்னைக் கிண்டல் பண்ணுவியா? நான் பார்க்கப் பையன் மாதிரி இருக்கேனா? எவ்ளோ தைரியம் உனக்கு?” என்று திட்டிக் கொண்டே அவனை அடித்து அவன் தலைமுடியைக் கலைத்துவிட
“ஏய்! அடிக்காதே ஜான்சிராணி” என்று தடுக்க முயன்றவன் அவள் நிறுத்துவது போலத் தெரியாததால் அவளது விரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.
அவந்திகாவால் அவனை அடிக்க முடியாது போய்விடவே “கையை விடுடா” என்று சொல்லி விரல்களை அவன் விரல்களிலிருந்து பிரிக்க முயல ராகவின் கிடுக்குப்பிடியில் விரல்கள் வருவேனா என்று அடம்பிடித்தன.
“அடிக்க மாட்டேனு பிராமிஸ் பண்ணு.. நான் கையை விடுறேன்… அப்பிடியே என் கிட்ட மன்னிப்பு கேளு”
“இம்பாஸிபிள்! என் அகராதியில மன்னிப்புங்கிற வார்த்தையே கிடையாது… நீ கையை விடு மேன்”
“அப்போ இன்னைக்கு ஃபுல்லா இப்பிடியே கையோட கை கோர்த்து தான் இருக்கணும் ஜான்சிராணி” என்று ராகவ் சொல்லிவிடவே
அவந்திகா வேறு வழியின்றி “சரி! நான் இனிமே அடிக்க மாட்டேன்… அப்புறம் சாரி” என்று வேண்டாவெறுப்பாக மன்னிப்பு கேட்கவும்
“ஏதோ போனா போகுதுனு சாரி கேக்குற மாதிரி இருக்கே… மனசாற கேளு, இல்லைனா என்னோடவே இன்னைக்கு முழுக்க சுத்து… எனக்கு நோ பிராப்ளம்”
“ஐ அம் சாரி… தவுசண்ட் டைம்ஸ் சாரி… இஸ் திஸ் இனாஃப்?” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்
“மச் பெட்டர்” என்றான் அமர்த்தலாக.
அவ்வளவு கலவரங்களுக்கிடையேயும் அவந்திகாவின் விரல்களை அவனது விரலுடன் கோர்த்திருந்ததையும் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரிடமும் வார்த்தைகளை அளவுகோல் வைத்து அளந்து பேசுபவன் அவந்திகாவிடம் மட்டும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதையும் கண்டு, அவனது சகோதரர்கள் வாயடைத்துப் போய் நின்றனர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


