நான் விலகி நின்ற தூரத்தை என் வெற்றி என்று நினைத்தேன்; ஆனால் என் தூரத்தையும் தாண்டி நீண்டது உன் தவிப்பான காதல். நான் வீசியெறிந்த கல்லைக்கூடச் சிற்பமாகச் செதுக்கிய உன்னிடத்தில், என் பிடிவாதம் இப்போது மண்டியிட்டுத் தோற்று நிற்கிறது!
-நிலவன்
நிலவனின் வீடு பழங்காலத்து வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட பாரம்பரியமான கட்டைக்குத்து வீடு, உறுதியான சுட்ட செங்கற்களாலும், ராட்சசத் தேக்குமர உத்திரங்களாலும் ஆனது. கோடைகாலத்தில் குளுமையையும், குளிர்காலத்தில் இதமான வெம்மையையும் தரக்கூடிய அந்த வீட்டின் பெரிய படுக்கையறை தான் நிலவன் நியதிக்கானது.
பழமையும் பாரம்பரியமும் சூழ்ந்த அந்த அறைக்குள், தன்னுடைய சென்னை வீட்டின் அறையைக் கொண்டுவர நினைத்தாள் நியதி.
அவளது ஆசையை உணர்ந்த நிலவன், மறுநாள் காலையில் விவசாயப்பண்ணையில் வேலை முடிந்து வந்ததும் அவளை அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு பெரிய நர்சரிக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளுக்குப் பிடித்த செடி கொடிகளை வாங்கித் தந்துவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
அறைக்கு வந்ததும் அவளது வேலை ஆரம்பமானது. அந்த அறையின் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்திற்கு ஏற்ப, உள்ளேயே வளரக்கூடிய செடிகளை மிக நேர்த்தியாகத் தேர்ந்தெடுத்திருந்தாள். ஜன்னல் ஓரத்தில் பெரிய இலைகளைக் கொண்ட ‘மான்ஸ்டெரா’செடியை ஒரு அழகான பீங்கான் தொட்டியில் வைத்தாள். தேக்குமரக் கட்டிலின் தலைமாட்டில் இருந்த மரச்சட்டங்களில், அடர்ந்த பச்சை நிறத்திலான ‘போத்தோஸ்’ கொடிகளையும், ஊதா நிற ‘வாண்டரிங் ஜூ’ கொடிகளையும் அழகாகப் படரவிட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதிக சூரிய ஒளி தேவையில்லாத அந்தச் செடிகள், அந்தப் பழமையான அறைக்குள் ஒரு மினி பசுமை கானகத்தைக் கொண்டு வந்தன.
அதோடு அவள் நிற்கவில்லை. தன் பேக்கிலிருந்து மஞ்சள் நிற ஒளியைத் தரும் ‘ஃபேரி லைட்ஸ்’ சரங்களை எடுத்து, அந்தப் பச்சை இலைகளுக்கு நடுவே மென்மையாகப் பின்னினாள். சுவிட்சைப் போட்டதும் அந்த அறை ஒரு தேவதை உலகமாக மாறியது. சுவரில் படர்ந்திருந்த கொடிகளுக்கு நடுவே சின்னஞ்சிறு மின்மினிகள் போல அந்த மஞ்சள் விளக்குகள் மின்ன, அறையின் சூழலே இதமாய் மாறிப்போனது.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு, தன் கைகளைத் தட்டிக்கொண்டே திரும்பிப் பார்த்தாள் நியதி. அவனது கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து, இந்த மாயம் முழுவதையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் நிலவன். அவனது கண்களில் அவளது ரசனையைப் பற்றிய வியப்பு இருந்தது.
“தேங்க்ஸ் நிலன்…” என்று இதழ் விரித்து, முழு மனதோடு அவள் சொல்லிய அந்த விநாடி வீட்டின் கீழ்த்தளத்தில் யாரோ வேகமாக வரும் காலடிச் சத்தம் கேட்டது.
“எங்க அவ?” என்று கத்திக்கொண்டே படிகளேறி வந்தாள் நிலா. அவளுக்குப் பின்னால் அவளது கணவனும், நியதியின் அண்ணனுமான பிரகாஷும் தர்மசங்கடமாக வந்து நின்றான்.
அறைக்குள் நுழைந்த நிலாவின் விழிகள், அலங்கரிக்கப்பட்ட அந்த அறையையும், அங்கே உரிமையோடு நின்றுகொண்டிருந்த நியதியையும் பார்த்ததும் ஆத்திரத்தில் சிவந்தன. முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தாள்.
முந்தைய தினமே வரவேண்டியது! அவளது மாமனாரை மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதிருந்தால் வர இயலவில்லை.
“நீ போய் அவளைப் பாத்தாலும் உன்னை அவ மதிச்சுப் பேசிடுவாளா நிலாம்மா? மாப்பிள்ளையே அந்தக் கழுதைய மன்னிச்சு ஏத்துக்கிட்டார். நீ போய் சண்டை போட்டு மட்டும் என்னாகப் போகுது சொல்லு. மெதுவா போய் அவளைப் பாத்துக்கலாம்” என்று அவளிடம் சொன்ன விஜயா மகளைப் பற்றி தெரிந்துகொள்ள துளி கூட அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
பூபேந்திரன் தான் மருத்துவப்பரிசோதனை முடிந்ததும் மருமகளிடம் மனம் தாங்காமல் புலம்பியிருந்தார்.
“என் மகளாச்சே நிலாம்மா! அப்பிடி விட்டுட முடியுமா? அவளுக்கு வைராக்கியம் ஜாஸ்தி உன் அத்தைய போல. கூட இருந்தப்ப பிள்ளைய அவ்ளோ பேசிருக்கேன். அமைதியா இருக்கும். எல்லாத்துக்கும் சேர்த்துதான் இப்ப கண்ணுல படாம போயிட்டா”
அந்தப் பெரிய மனிதர் கண்ணீர் விடுவதை நிலாவால் சகிக்க முடியவில்லை. அதனால் தான் மனது பொறுக்காமல் நாத்தனாரிடம் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்கலாமென வந்திருந்தாள்.
மனக்கொந்தளிப்போடு இருப்பது நிலா மட்டுமில்லை, நியதியும்தான்! கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் கழித்து சந்திக்கிறார்கள் இருவரும். ஆனாலும் ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் கசப்பு இன்னும் அதிகமாய் ஏறிப்போய் கிடந்தது.
என்ன ஒன்று! பிள்ளைப்பேற்றால் நிலாவின் உடலில் சிறிய மாறுதல்! முன்பு போல ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இல்லாமல் பூசினாற்போல இருந்தாள். முன்பை விட அழகும்!
‘ஹூம்! இந்த அழகை வச்சுத்தானே என் அண்ணனை ஆட்டிப் படைச்ச’ என மனதுக்குள் எண்ணிக்கொண்டாள் நியதி.
“எப்படிடா இவளை இந்த வீட்டுப்படி ஏற விட்ட? கல்யாணம் ஆன மூனாவது நாளே, எனக்கு இந்த ஊரும் வேணாம், இந்த வாழ்க்கையும் வேணாம்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டுப் போனவதானே இவ? இப்ப எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டுத் திரும்பி வந்திருக்கா?” என்று கத்தினாள் நிலா.
நிலாவின் வார்த்தைகளில் இருந்த அனல், அறையின் அத்தனை அழகையும் ஒரு நொடியில் சுட்டெரித்தது. ஆனால், நியதி எந்தப் பதற்றமும் இல்லாமல் அத்தனை அமைதியாக நின்றாள்.
ஏனெனில் நிலா சொல்வது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை. அவள் தன் காதலனான நிலவனைத் திருமணம் செய்துகொண்ட மூன்றாம் நாளே, அவனது குடும்பம், சுற்றம் என அனைத்தையும் உதறிவிட்டு, ‘நான் சென்னைக்குப் போயே ஆகணும், என் படிப்புதான் முக்கியம்’ என்று அடம்பிடித்து அவனையே இந்த உறவை முறிக்க வைத்தாள். அந்தச் சுயநலத்திற்கு, நிலாவின் இந்தக் கோபமான வசைகள் தேவையான ஒன்றுதான் என்று நியதியின் மனசாட்சி அவளை அமைதியாக்கியது.
நியதி பதிலுக்குக் கத்துவாள், சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்து வந்த நிலாவுக்கு, அவளது மௌனம் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. எதிர்ப்பே இல்லாமல் அமைதியாக நிற்கும் அவளைப் பார்த்து நிலாவே ஒருகணம் பேச்சை நிறுத்தினாள்.
அப்போது கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்த நிலவன், நியதிக்கும் தன் சகோதரிக்கும் நடுவே ஒரு அரண்போல வந்து நின்றான்.
“நான் சென்னைக்குப் போனப்ப இவளைப் பார்த்தேன் நிலா. இவ தங்கியிருந்த வீட்டுலதான் நான் தங்குனேன். நம்ம காதலுக்காக இதுவரை நீ எதுவும் செய்யல. நிஜமாகவே நீ எதையாவது செய்யணும்னு நினைச்சா, எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வானு அவகிட்ட நான்தான் சொல்லிட்டு வந்தேன். என் வார்த்தையை மதிச்சு வந்திருக்கா. அவளைப் பேசுறதும், அவமானப்படுத்துறதும் என்னை அவமானப்படுத்துறதுக்குச் சமம் நிலா!” என்றான் கறாரான, ஆனால் ஆழமான குரலில்.
நிலவன் அவளுக்காகப் பேசியதைக் கேட்டதும், நிலாவின் கண்கள் கலங்கின. குரல் நடுங்கியது.
“எல்லாமே என்னாலதான்டா நிலவா. நான் மட்டும் அன்னைக்கு அவசரப்பட்டு, இந்த அடங்காப்பிடாரியை உன் தலையில கட்டி வைக்காம இருந்திருந்தா, நீயாச்சும் நிம்மதியா இருந்திருப்பல்ல?” என்று குற்றவுணர்ச்சியோடு அழுதாள் நிலா.
அதுவரை அமைதியாக இருந்த நியதியின் பொறுமை இப்போது உடைந்தது.
“அவர் மட்டும் இல்ல. நானும், ஏன் நாங்க ரெண்டு பேருமே நிம்மதியா இருந்திருப்போம் மதினி!” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
தன் மனைவி தங்கையைக் கத்தியதைப் பார்த்தபடி இதுவரை அமைதியாக நின்ற பிரகாஷ் இப்போது நியதியைக் கண்டிக்க முன்வந்தான்.
“ஏய் நியதி! என்ன பேச்சு பேசுற?” என்று அவன் விரல் நீட்ட,
“உன் கிட்ட நான் பேசவே இல்ல. உனக்கு இன்னைக்கு ஒளிஞ்சிக்க இடம் கிடைக்கலையா? அம்மா முந்தானை இல்லனா என்ன, அதான் உன் பொண்டாட்டி முந்தானை இருக்குல்ல. அதுல போய் ஒளிஞ்சிக்க. உன்னைப் பாத்தாலே எரிச்சலா வருது எனக்கு. நீங்க ரெண்டு பேரும் அன்னைக்குச் செஞ்ச அந்த அவசரக்குடுக்கைத்தனத்தாலதான், இன்னைக்கு நானும் நிலனும் இப்படி எதிர்ரெதிர்ல நிக்கிறோம். இப்ப எந்தப் பஞ்சாயத்தைப் பேச அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தீங்க புருசனும் பொண்டாட்டியும்? உங்களை யாரு இங்க வெத்தலை பாக்கு வச்சு அலைச்சாங்களாம்?” என்று அண்ணனை நேரடியாகவே மடக்கி நிறுத்தினாள்.
நியதியின் பேச்சைக் கேட்டதும் நிலாவுக்குச் சுறுசுறுவெனக் கோபம் ஏறியது.
“அடியே! இந்த ரெண்டு வருஷம், என் கூடப் பிறந்தவன் உன்னால எவ்ளோ கஷ்டப்பட்டான் தெரியுமாடி? உன்னை நினைச்சு நினைச்சு அவன் வாழ்க்கையே நரகமாப் போச்சு! நீ சொகுசா இருந்துட்டு இங்க வந்து எதுவுமே பண்ணாத மாதிரி நிப்பியா? பொம்பளைக்குக் குற்றவுணர்ச்சி வேணும்டி. நிலவன் அனுபவிச்ச நரகத்துக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?”
“அப்படியா? அப்படி எதுவும் நரகத்தை அனுபவிச்சு உன் ட்வின் ப்ரதர் துரும்பா போன மாதிரி எனக்குத் தெரியலையே? சாதாரணமாச் சேத்துல இறங்கி வேலை பார்த்த ஆளு, என் நினைப்புல கஷ்டப்பட்டு, இப்ப ‘வி.வி அக்ரோ புராடக்ட்ஸ்’னு பெரிய கம்பெனி வச்சு, நல்ல நிலைமையிலதானே கெத்தா இருக்காரு? இங்கிலீஸ்ல ரெண்டு வார்த்தை பேசுனாலே திருதிருனு முழிக்குறவரு இப்ப ஷேக்ஸ்பியர் மருமகன் மாதிரி இங்கிலீஸ் பேசுறாரு. நான் இல்லாத ரெண்டு வருச நரகத்துல அவர் ஒன்னும் தேய்ஞ்சு காணாம போயிடலையே” என்று தெனாவட்டாகக் கேட்டாள் நியதி.
“அவனை விடுடி. நீ நல்லா இருக்கியா? வீடு, உறவு, புருசன் அப்பன் ஆத்தானு அத்தனை பேரையும் அத்துவிட்டுட்டு சென்னைக்குப் போய் ஒத்தக்காய்ச்சிப் பனைமரமா நின்னு நீ என்னத்தைக் கிழிச்ச?” என்று நிலா மட்டம்தட்ட,
“எனக்கென்ன குறைச்சல்? நான் விரும்புன படிப்பை, எந்த சப்போர்ட்டும் இல்லாம நல்ல ரேங்க்ல பாஸ் பண்ணியிருக்கேன். அடுத்து வேலைக்கும் போவேன், மிச்சம் இருக்குற ஃபைனல்ஸையும் படிப்பேன். இதோ, என் புருஷன்கூட ஒன்னா வாழவும் வந்துட்டேன். இவ்வளவு பேசுறியே மதினி, நீ எப்படி இருக்க? உடனே ‘நான் ஒரு பிள்ளையைப் பெத்துட்டேன், குடும்பமா செட்டில் ஆகிட்டேன்’னு ஆரம்பிக்காத. அதைத் தாண்டி, ‘நிலா’வா நீ என்னத்தச் சாதிச்ச? ஒன்னுமே இல்லதானே? அப்படி எதையாச்சும் சாதிச்சிட்டு வந்து என் முன்னாடி நின்னு என்னைக் கேள்வி கேளு மதினி. இல்லையா, நீயெல்லாம் என்னைக் கேள்வியே கேக்கக் கூடாது. நான் செஞ்ச தப்பை உணர்ந்து, என் புருஷன்கூட சேர்ந்து வாழ வந்திருக்கேன். என்னை மறுபடி மறுபடி வம்புக்கு இழுக்காத!” என்று வெடித்துத் தீர்த்தாள் நியதி.
நிலாவுக்குப் பதில் சொல்ல வார்த்தைகளே இல்லை. தான் என்ன சொன்னாலும் பெற்றோர் திட்டுவார்களே என்று அமைதி காத்த நியதி இல்லை இவள்! இரண்டு ஆண்டுகள் இவளுக்கு கூடுதல் தைரியத்தையும் நிமிர்வையும் கொடுத்ததை அவளால் உணர முடிந்தது.
சட்டென அந்த உஷ்ணமான சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நியதி, நிலவன் பக்கம் திரும்பினாள். அவளது முகம் நொடியில் அத்தனை சாதாரணமாக மாறியிருந்தது.
“நிலன்! எனக்குக் கரும்புச்சாறு குடிக்கணும்னு போல இருக்கு. வாங்கித் தர்றீங்களா?” என்று சின்னக் குழந்தை போல் கேட்டபடியே, அவனது கையைப் பிடித்து அங்கிருந்து தரதரவென இழுத்துக்கொண்டு வெளியே நடையைக் கட்டினாள். நிலவனும் அவளைத் தடுக்காமல், ஒருவிதமான மெல்லிய புன்னகையோடு அவளோடு சென்றான்.
இவர்கள் பேசுவதையெல்லாம் அந்தத் தளத்தின் கேரிடாரில் நின்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் வசந்தாவும், வைத்தியநாதனும்.
அடித்த புயல் அடங்கியதும், நிலா ஆத்திரமாக வசந்தாவிடம் வந்தாள்.
“எப்படிப் பேசுறா பாருங்கம்மா! மருமகளைக் கொஞ்சம் கூட அடக்கி வைக்க மாட்டீங்களா?” என்று நியாயம் கேட்டாள்.
வசந்தா அத்தனை அமைதியாக மகளைப் பார்த்தார்.
“உன் மாமியார் உன்னை அடக்கியா வைக்குறாங்க? உன்னை ஒரு மருமகளா பார்க்காம, மக மாதிரிதானே தாங்குறாங்க? அப்ப நானும் என் மருமகளை மக மாதிரிதானேடி நடத்த முடியும்?” என்று ஒரே போடாகப் போட்டார். நிலாவுக்கு அங்கே நிற்கவே இடமில்லாமல் போனது. வைத்தியலிங்கம் தன் மனைவியின் முதிர்ச்சியை எண்ணிப் பெருமையாகச் சிரித்துக்கொண்டார்.
அதே நேரம், வீட்டின் இறுக்கமான சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டு, அம்பாசமுத்திரத்தின் பிரதான சாலையில் இருந்த ஒரு சிறிய கரும்புச்சாறு கடையின் ஓரமாக நின்றுகொண்டிருந்தனர் நிலவனும் நியதியும்.
வானம் கொஞ்சம் இருட்டு வண்ணம் பூசியபடி அழகாய் பன்னீர் தூவிக்கொண்டிருந்தது. பசுமையான சூழல் நிறைந்த சாலையில் ஒரு ஓரமாய் இருந்த கடையின் அருகே கிடந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள்.
கடைக்காரர், அவளுக்குப் பிடித்தது போலவே எலுமிச்சை பாதி பிழிந்து, இஞ்சித் துண்டு தட்டிப் போட்டு, நுரை பொங்கப் பொங்கப் வெளிர்ப்பச்சை நிறத்தில் ஒரு பெரிய கண்ணாடிக் குவளையில் சாற்றைக் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டார்கள் இருவரும்.
“சியர்ஸ்”
அவனது கண்ணாடி கோப்பையில் தனது கோப்பையை இடித்தாள் நியதி.

“சியர்ஸ்? சென்னைல வேற எதையும் கத்துக்கிட்டியா என்ன?”
“சியர்ஸ்னு சொன்னாலே வேற பழக்கம் இருக்கணுமா? நீங்க அடிக்கடி இந்த வார்த்தையை யூஸ் பண்ணுவிங்களோ?” என்று வம்பிழுத்தாள் அவள்.
பின்னர் கரும்புச்சாறை அருந்தினார்கள் இருவரும். இனிப்புக்கடலில் துளி புளிப்பும் கொஞ்சம் காட்டமுமாய் அத்துணை ருசி!
கையில் டிஸ்யூ பேப்பர் இல்லாததால், சற்றும் தயங்காமல் அருகிலிருந்த நிலவனின் சட்டைக் கையை இழுத்து, அதில் தன் ஈரமான உதடுகளைத் துடைத்துக்கொண்டாள்.
அவளது அந்த அதீத உரிமையைப் பார்த்த கரும்புச்சாறு கடைக்காரரின் மனைவி, வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.
“என்னம்மா இது சின்னப் புள்ளையாட்டம்? அந்தப் புள்ளையோட சட்டை அழுக்காகிடும்ல?” என்று அவர் கேட்க,
“புடவை புதுசு. அழுக்காக்க மனசு வரல”
பதில் சொன்ன நியதி குறும்பாகக் கண்ணடித்தாள். அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டே, “நீ காரியக்காரிதான் ஆத்தா… எங்க போனாலும் நல்லாப் பொழைச்சுப்ப!” என்றார்.
நிலவனுக்கு அவளது அந்த உரிமையான தீண்டல் அவனுக்குள் ஒரு சுகமான சிலிர்ப்பையே ஏற்படுத்தியது.
“கிளம்பலாமா?” என்று நிலவன் கேட்க, இருவரும் அந்தச் சிறிய வீதியின் ஓரமாக நடந்தனர்.
நடக்கும்போதே, தொண்டையைச் இலேசாகச் செருமிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தான் நிலவன்.
“உங்க அப்பாவைப் பத்தி ஒரு விஷயம்…”
நியதி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“அவருக்கு உடம்பு முடியாமப் போய், ஹார்ட்ல ஸ்டெண்ட் வச்சிருக்காங்க. நேத்து நான் பார்க்கப் போனப்ப கூட, உன்னை நினைச்சுத்தான் ரொம்பக் கவலைப்பட்டார். நாம வேணும்னா வீக்கெண்ட்ல ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வரலாமா?” என்று மெதுவாகக் கேட்டான்.
நியதிக்கு உள்ளுக்குள் ஒரு வலி தோன்றினாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டாள்.
“எனக்கு நம்பிக்கை இல்ல. என்னை அங்க போக வைக்கிறதுக்காக நீங்க என்னமோ பொய் சொல்றீங்க,” என்றாள்.
“நான் எதுக்குடி பொய் சொல்லணும்? நிஜமாத்தான் சொல்றேன்.”
சிறிது நேரம் யோசித்தவள், “சரி… வர்றேன். ஆனா ஒரு கண்டிஷன்.”
“என்ன?”
“அங்க வந்தா, உங்க மாமியார் என்கிட்ட எதுவும் பேசக் கூடாது. எனக்கும் அவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவங்க ஏதாவது என்னைக் குத்திப் பேசுனாங்கன்னா, நான் வரைமுறை இல்லாமப் பேசிடுவேன். அப்புறம் என்னைத் தப்பு சொல்லக் கூடாது. உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க, வர்றேன்,” என்று கறாராக டிமாண்ட் வைத்தாள்.
நிலவன் அவளைக் கோபமாக முறைத்தான்.
“போடி ராட்சசி! உன்னைப் பெத்தவருடி அவரு. இப்ப உசுருக்காகப் போராடிட்டு இருக்கார். அவருக்காக ஒரு நாள், கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா?” என்று கடுமையாய்க் கேட்டான்.
“யாருக்காகவும் பண்ணிக்க மாட்டேன்!” என்று பிடிவாதமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
நிலவனின் கோபம் சட்டென வடிந்தது. அவளது கண்களை ஆழமாகப் பார்த்து, தன் குரலை அத்தனை மென்மையாக்கி, “எனக்காக?” என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான்.
அந்த ஒரு வார்த்தை, ‘எனக்காகக் கூட இதைச் செய்ய மாட்டியா?’ என்ற அவனது உரிமையான கெஞ்சல் நியதியின் அத்தனை வைராக்கியத்தையும், திமிரையும் சுக்குநூறாக உடைத்துத் தள்ளியது. அவளுக்குள் இருந்த பிடிவாதக்காரி அந்த நொடியில் காணாமல் போனாள்.
அவனைப் பார்த்து ஒரு அழகிய புன்னகையைச் சிந்தியவள், “சரி… போலாம். உங்களுக்காக நான் வாயையே திறக்க மாட்டேன். பிராமிஸ்!” என்று சொல்லித் தன் விரலை அவனிடம் நீட்டினாள்.
அவளது கனிவும், தன் மீதான அவளது காதலும் நிலவனின் முகத்தில் ஒரு முழுமையான, பிரகாசமான சிரிப்பைக் கொண்டு வந்தது. அந்தச் சிரிப்பு அவனது இறுகிய முகத்தை அத்தனை அழகாக்கியது.
அதைப் பார்த்த நியதி, தன்னை மீறி அவனது தாடி வைத்த கன்னத்தை மென்மையாகக் கிள்ளினாள்.
“இப்படிச் சிரிச்சுக்கிட்டே இருங்க நிலன்… அதான் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு!” என்றாள் காதலோடு.
நிலவன் அவளது தீண்டலைத் தடுக்கவில்லை; பதிலுக்கு எதுவும் சொல்லவும் இல்லை.
இதெல்லாம் இரண்டு ஆண்டுகளாக அவன் இழந்த அழகான தருணங்கள்! இப்போது அனுபவிக்கையில் ஏன் அவனுக்கு ஆற்றாமை வரப்போகிறது?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


