சமூகவிரோத நடத்தை கோளாறுகளில் மிகவும் தீவிரமானது சைக்கோபதி எனப்படும் மனப்பிறழ்வுக்குறைபாடு. இதற்கு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அந்தச் சிகிச்சையை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன. சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குச் சரியாக உடன்படமாட்டார்கள். தங்களது குறைபாட்டைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி சிகிச்சையே தேவையில்லை என்ற மனப்பாங்குடன் வாழ்பவர்கள் அதிகம். அவர்களுக்குப் புரிந்துணர்வு குறைவு என்பதால் தங்களது சைக்கோபதியின் தீவிரம், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தங்களது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் அடுத்தவர்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அந்தப் பழியைப் பாதிக்கப்பட்டவர்கள் மீது தூக்கிப்போட்டுவிடுவார்கள். தங்களிடமுள்ள எதிர்மறை குணங்களைத் திருத்தும் எண்ணம் எப்போதுமே அவர்களுக்கு வராது. எனவே மாற்றத்தை உண்டாக்கக் கூடிய சிகிச்சை முறைக்கு உடன்பட அவர்கள் மறுப்பதுண்டு.
-From therapist.com
இதன்யா மீண்டும் நாற்காலியில் அமர வீடியோ கேமரா ஓட ஆரம்பித்தது.
“நான் ரோஷணைச் சந்திச்சது…”
கிளாரா சாத்தான் வழிபாட்டுக்குழுவில் இணைந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
ஜானும் நவநீதமும் ஆசை காட்டியதால் கிளாரா ரோஷணின் சாத்தான் குழுவில் இணையும் முடிவுக்கு வந்தாள். ஆனால் குமாரியோ இது தவறான முடிவென கடுமையான கண்டனக்குரல் எழுப்பினார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீ புரிஞ்சு தான் பேசுறியா கிளாராம்மா? அந்த ரோஷணைப் பாத்தாலே நல்ல ஒபீனியன் வரமாட்டேங்குது… உன் ஸ்டாண்டர்ட்ல இருந்து ஏன் இறங்குற?”
“எனக்கு ஏகலைவன் வேணும்… அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்… என் நிலமை என்னனு தெரிஞ்சும் நீங்க இப்பிடி சொல்லலாமா?”
“உன் நிலமை தெரிஞ்சு தான் நான் பேசுறேன் கிளாரா… ஏகலிவன் சார் விவகாரத்துல நீ தப்பு மேல தப்பு பண்ணுற… இதுக்கு மேல உன் இஷ்டம்”
சொன்னது போல அதற்கு மேல் தன் விருப்பத்திற்கு தான் கிளாரா செயல்பட்டாள். ஜான் மற்றும் நவநீதத்துடன் சேர்ந்து சாத்தான் குழுவின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்றாள். உடலை துன்புறுத்தி கொடூரமான சடங்குகளைச் செய்தாள். அப்படி இருந்தும் ஏகலைவனின் கவனம் தன் பக்க்ம திரும்பவில்லை என்ற ஏமாற்றம் அவளுக்கு இருந்தது.
எனவே ரோஷணிடம் அதிகபட்சமாக என்ன சடங்கு செய்தால் ஏகலைவன் தன்னிடம் மயங்குவான் என விசாரித்தாள்.
“சாத்தான் நீங்க எத்தனை பேர் கிட்ட அவரோட கொள்கைகளைப் பரப்புனிங்கனு கவனிப்பார்… நீங்க அதை செய்யாத பட்சத்துல என்ன சடங்கு செஞ்சாலும் அவரோட அருள் உங்களுக்குக் கிடைக்காது” என்று சொல்லிவிட்டான் அவன்.
கிளாரா யாரிடம் சாத்தானின் பராக்கிரமத்தைப் பற்றி கூறுவாள்? இந்நிலையில் தான் தொழில் பற்றிய கவலையிலிருந்த கலிங்கராஜனிடம் மெதுவாக ரோஷணின் குழு பற்றிய பேச்சை ஆரம்பித்தாள்.
முதலில் அவர் அலட்சியப்படுத்துவது போல தெரிந்தாலும் பின்னர் சுதாரித்து மனைவி சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார்.
“என்னால உன்னை மாதிரி நட்டநடு ராத்திரில அந்தக் குகைக்கு வர முடியாது கிளாரா… இந்த பொன்மலைல எனக்குனு ஒரு பேர் இருக்கு… அதை என்னால ஸ்பாயில் பண்ணிக்க முடியாது… ரோஷணை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து என் ரூம்ல வச்சு பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டார் அவர்.
கலிங்கராஜனின் மனதைச் சாத்தான் பக்கம் திருப்பிவிட்டதால் ஏகலைவன் தன்னிடம் மயங்குவதற்கு சாத்தான் அருள் புரிவார் என குதூகலித்தாள் கிளாரா.
கலிங்கராஜன் எதிர்பார்த்தபடி அடிக்கடி ரோஷண் சாந்திவனத்துக்கு வர ஆரம்பித்தான். கலிங்கராஜனிடம் பெரிய தொகை ஒன்றை வாங்கிக்கொண்டு அடிக்கடி சடங்கு என்ற பெயரில் கொடூரங்களை நிகழ்த்த ஆரம்பித்தான்.
இதெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருந்தவரைக்கும் பிரச்சனை வரவில்லை. ஆனால் எப்போது இனியாவுக்கு அடிக்கடி ரோஷண் தன் வீட்டுக்கு வந்து போவது தெரிய ஆரம்பித்ததோ அப்போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.
கலிங்கராஜன், கிளாராவுக்காக வீட்டுக்கு வருபவனிடம் ஒருநாள் வெளிப்படையாகத் தனது கோபத்தைக் காட்டிவிட்டாள் அவள்.
அது ரோஷணின் மனதில் அவமானமாக உறைந்துபோய் விட்டது. கூடவே ராக்கியை அறைந்து அவமானப்படுத்திவிட்டாள் என்ற வன்மம் வேறு. அவளை எப்படியாவது பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தான் அவன்.
அவளறியாவண்ணம் சாந்திவனத்துக்கு வந்தவன் மெதுவாக கலிங்கராஜனுக்க்கு இனியா மீதிருக்கும் வெறுப்பைக் கண்டுகொண்டான். கிளாராவுக்கும் அவளுக்குமிடையே இருக்கும் கருத்துவேறுபாட்டையும் அறிந்துகொண்டான் அவன்.
எனவே மெதுவாகத் தனது பழிவாங்கும் படலத்தை அவர்களை வைத்து நிறைவேற்றத் துடித்தான்.
மாதாந்திர கூட்டத்திற்குக் குகைக்கு வந்த குழுவினர் அனைவரும் வெளியேறிய பிறகு கிளாராவிடம் மட்டும் தனியே பேசினான் அவன்.
“ஏகலைவன் சாருக்கு உங்க மேல காதல் வரணும்னா ஒரு உயிரைப் பலி குடுக்கணும்… உங்களுக்கு அதுல சம்மதமா?”
உயிர்ப்பலி என்றதும் கிளாரா வழக்கம் போல ஆடு, மாடு என நினைத்துக்கொண்டு சரியென ஆர்வமாகத் தலையாட்டினாள்.
“நீங்க சரியா புரிஞ்சிக்கலனு நினைக்கேன்… உயிர்ப்பலினா மனுச உயிரைப் பலி குடுக்கணும்… அதுவும் கன்னிப்பொண்ணு ஒருத்தியோட ரத்தம் தான் சாத்தானுக்குப் பிடிக்கும்…. உங்களுக்க்குச் சம்மதம்னா இனியாவ சாத்தானுக்குப் பலி குடுத்திடுவோமா?”
அவன் கேட்டு முடித்தது தான் தாமதம் கிளாராவின் முகம் கோபத்தில் சிவந்து போனது.
ஆட்காட்டிவிரலை உயர்த்தி எச்சரிக்கும் தொனியில் “அவளுக்கும் எனக்கும் இடையில மனக்கசப்பு இருக்கு… அதுக்காக நீ அவளைப் பலி குடுக்கணும்னு நினைப்பியா? ஏகலைவன் எனக்கு வேணும்… அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்… இனியாவ பலி குடுக்குறதை தவிர… இன்னொரு தடவை இனியாவ பலி குடுக்கணும்ங்கிற எண்ணம் உனக்கு வந்துச்சுனா நல்லா இருக்காது ரோஷண்.. இப்பவே அதை மறந்துடு” என கடுமையான குரலில் எச்சரித்தவள் அணிந்திருந்த சால்வை நழுவியதைக் கவனியாமல் அங்கிருந்து போய்விட்டாள்.
ரோஷண் அதோடு தனது முயற்சியைக் கைவிடவில்லை. கிளாரா மறுத்தால் என்ன, கலிங்கராஜனிடம் சொல்லிப் பார்ப்போமென அவரது வீட்டிற்கே சென்றான்.
சாந்திவனத்தில் வேலையாட்கள் அவரவர் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கையில் கலிங்கராஜனை அவரது அறையில் சந்தித்தவன் அவரது தொழில் சரிவைத் தடுக்க ஒரு உபாயமுள்ளது என்றதுமே அவரது வதனம் பிரகாசித்தது.
“என்ன வழி? எதுவா இருந்தாலும் நான் செய்யத் தயாரா இருக்கேன் ரோஷண்… என் தொழில்ல மட்டும் பழையபடி லாபம் வந்தா போதும்… சொல்லுப்பா… நான் என்ன செய்யணும்?” என ஆர்வமாகக் கேட்டார் அவர்.
ரோஷண் இடுங்கிய கண்களோடு “சாத்தானுக்கு ஒரு உயிரை பலி குடுக்கணும்… அதுவும் மனுச உயிர்” என்றான் உணர்வற்ற குரலில்.
கலிங்கராஜன் அதிர்ந்தே போனார்.
“என்னப்பா சொல்லுற? ஆடு மாடு கோழினா ஓ.கே… நரபலியெல்லாம் ரொம்ப பெரிய தப்பு ரோஷண்… நம்ம லாபத்துக்காக ஒரு உயிரைக் கொல்ல நான் சம்மதிக்கமாட்டேன்” என தீர்மானமாகக் கூறினார்.
“அவசரப்படாதிங்க சார்… அந்த உயிர் உங்க மக இனியாவா இருந்தா உங்களுக்குச் சம்மதமா?”
இப்போது கலிங்கராஜன் ஆடிப்போய்விட்டார். எத்துணை எளிதாகச் சொல்லிவிட்டான் இவன்!
வேகமாகச் சோபாவிலிருந்து எழுந்தவர் ரோஷணின் டீசர்ட்டைக் கொத்தாகப் பற்றினார்.
“இன்னொரு தடவை என் மகளைப் பத்தி நீ யோசிக்கக்கூடாது ரோஷண்… எப்பவும் போல ஆடு மாடு பலி குடுத்து என் தொழிலை நான் காப்பாத்திக்குறேன்… நரபலி பத்தி இனிமே யோசிக்காத” என எச்சரித்தார் கடுமையானக் குரலில்.
ரோஷணின் முகம் அவமானத்தில் குன்றிப்போனதை ஒளிந்திருந்து பார்த்துவிட்டாள் கிளாரா.
மறைந்திருந்த திரைச்சீலைக்குப் பின்னே இருந்து வெளியே வந்தவள் கலிங்கராஜனிடம் இனி ரோஷணின் சாத்தான் குழுவின் பக்கமே தலைவைத்துப் படுக்கவேண்டாமென எச்சரிக்க நினைத்தாள்.
ஆனால் இப்படி கூறினால் நீ ஏன் அதில் சேர்ந்தாய் என அவர் காரணம் கேட்க வாய்ப்புள்ளது என்பதால் அமைதியாய் இருந்துவிட்டாள். அதற்கடுத்த மாதங்களில் அவள் சாத்தான் குழு கூட்டங்களில் கலந்துகொள்ளவும் இல்லையென இதன்யாவிடம் கூறி முடித்தாள் அவள்.
இதன்யா அவளைக் கடுமையயப் பார்த்தாள்.
“இதை நீங்க ஏன் ஆரம்பக்கட்ட விசாரணைல சொல்லல?”
“என்ன இருந்தாலும் நான் இனியாவோட சித்தி… இதை சொன்னா கொலைப்பழிய என் மேல போட்டுருவாங்கனு நான் பயந்துட்டேன் மேடம்”
“இப்பிடியே ஒவ்வொருத்தரும் உண்மைய அவங்கவங்க இஷ்டத்துக்கு வளைச்சதால தான் இப்ப வரைக்கும் அந்தப் பொண்ணு எப்பிடி இறந்தா, அவளை யார் கொன்னாங்கங்கிற கேள்வி புதிராவே இருக்கு… இன்னும் என்னென்ன மறைச்சிருக்கிங்க கிளாரா?”
“வேற எந்த உண்மையையும் நான் மறைக்கல மேடம்”
இவ்வளவு தூரம் ஏகலைவனுக்காகத் துணிந்தவள் இனியாவை நரபலி கொடுக்க மட்டும் மறுத்திருக்கவா போகிறாள்? இதன்யா கிளாராவை நம்பவில்லை. ஒருவேளை இவளும் ரோஷணும் சேர்ந்து இனியாவை நரபலி கொடுத்திருக்கலாம்.
தேவையில்லாமல் ஏகலைவன் ஏன் இடையில் புகுந்து நிஷாந்தைக் காப்பாற்றுகிறேன் என்று அனைத்தையும் குழப்பவேண்டும்?
அழுத கோலத்திலிருந்தவளை செல்லில் அறைக்கும்படி பெண் கான்ஸ்டபிள் ஒருவரிடம் கூறியவள் அடுத்து ஏகலைவனை வைத்திருக்கும் விசாரணை அறைக்கு விரைந்தாள்.
அவனோ எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
“விசாரணையை ஆரம்பிக்கலாமா?” என்று போலிப்புன்னகையோடு அமர்ந்தாள் இதன்யா.
உன் இஷ்டம் என்பது போல தோள்களைக் குலுக்கினான் அவன்.
“உங்க கிட்ட இருந்து உண்மைய மட்டும் எதிர்பாக்குறேன் ஏகலைவன்… இனியா கொலைல உங்களோட பங்கு என்ன?”
ஏகலைவனின் தாடை கோபத்தில் இறுகியது.
“எனக்கும் அந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… நீங்க அசிங்கமா ஒரு அலிகேசன் வச்சிங்களே, எனக்கும் மிசஸ் கலிங்கராஜனுக்கும் அஃபயர் இருக்குனு… அது எந்தளவுக்குப் பொய்யோ அதே அளவுக்கு இதுவும் பொய்… நீங்க சரியா விசாரிக்காம என்னை அவசரப்பட்டு அரெஸ்ட் பண்ணிட்டிங்க” என்றான் கடினக்குரலில்.
“அப்ப எதுக்கு நிஷாந்தைக் காப்பாத்த ட்ரை பண்ணுனிங்க? இனியா கூட ஈ.டி.எஸ்ங்கிற பேர்ல சாட் பண்ணுனிங்க?”
“லிசன்! நிஷாந்தை நான் காப்பாத்த நினைச்சது ரத்தப்பாசம்… இனியா கூட ஈ.டி.எஸ் ஐடில என் லேப்டாப்ல இருந்து யார் பேசுனாங்கனு எனக்குத் தெரியாது… அது என்னோட அபிஷியல் ஒர்க்சுக்கான லேப்டாப்… ஒரு தடவை என் போட்டிக்கம்பெனி அதை ஹேக் பண்ண முயற்சி செஞ்சாங்க… எதிக்கல் ஹேக்கர் ஒருத்தர் மூலமா அவங்க ஹேக்கிங் முயற்சிய முறியடிச்சேன் நான்… அவங்க உளவு பாக்குற சாப்ட்வேர் ஒன்னை என் லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணிருந்தது அப்புறம் தான் தெரிஞ்சுது”
“உளவு பாக்குற சாப்ட்வேர் மீன்ஸ்? பெகாசஸ் மாதிரியா?”
இஸ்ரேலிய நிறுவனமொன்றின் உளவு பார்க்கும் மென்பொருளைக் குறிப்பிட்டுக் கேட்டாள் இதன்யா.
“எக்சாட்லி… என் எதிக்கல் ஹேக்கரால தான் அந்த முயற்சில இருந்து நான் தப்பிச்சேன்… அந்த சாப்ட்வேர் ஒருதடவை இன்ஸ்டால் ஆச்சுனா லேப்டாப்ல நான் செய்யுற எல்லா வேலையையும் பத்தி அதை இன்ஸ்டால் பண்ணுன ஆளுக்குத் தகவல் அனுப்பும்… நான் ஆன்லைன்ல இருந்தேன்னா என்னோட ஸ்கீரின்ஸ் முதற்கொண்டு அது எதிராளிக்கு ஷேர் பண்ணும்”
இதன்யா என்னடா கதை சொல்கிறாய் என்ற ரீதியில் அவனைப் பார்த்தாள். மென்பொருளைப் பற்றி அவன் சொன்னது என்னவோ உண்மை தான். சில நாட்டு அரசாங்கங்களே பெகாசஸைப் பயன்படுத்தி எதிர்கட்சிகள், தங்களுக்கு எதிரான கருத்துகள் கொண்ட தலைவர்களை வேவு பார்க்கும் செய்தி சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டதே! இந்திய அரசியல் கட்சி பிரமுகர்கள், பிரபல பத்திரிக்கையாளர்கள், சமூகப்போராளிகள் கூட பெகாசஸால் கண்காணிக்கப்பட்டார்களே!
இதெல்லாம் உண்மை தான். ஆனால் வேவு பார்க்க விரும்புபவர்கள் ஏன் அவனது மடிக்கணினியின் இருள் இணைய உலவியைப் பயன்படுத்தி ஈ.டி.எஸ் ஐடி மூலமாக முகநூலில் உலா வரவேண்டும்? குறிப்பாக இனியாவிடம் ஏன் பேசவேண்டும்? அதுவும் தடயவியல் துறை சம்பந்தமாகப் பேச வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏகலைவன் பதில் சொல்லியிருப்பான் என்றா நினைக்கிறீர்கள்?
“அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது… ஒரு தடவை நிஷாந்த் என் லேப்டாப்பை யூஸ் பண்ணுனான்… மே பி அவன் அந்த ஐடிய அதுல லாகின் பண்ணிருக்கலாம்… அதுக்கு அப்புறம் ஹேக்கர் அந்த ஐடிய வச்சு சாட் பண்ணி என் நேமை ரிப்பேர் ஆக்க நினைச்சிருக்கலாம்” என்றான்.
“பட் நிஷாந்த் உங்க லேப்டாப்பை யூஸ் பண்ணவேல்லனு சொன்னான்… உங்களோட பெர்சனல் திங்சை அடுத்தவங்க யூஸ் பண்ணுனா உங்களுக்குப் பிடிக்காதுனும் சொன்னான்”
ஏகலைவனின் நெற்றியில் யோசனைக்கோடுகள்.
“அவனா அப்பிடி சொன்னான்? ஒருநாள் டார்க் வெப் ப்ரவுசர் பத்தி பேசிட்டிருந்தான்… எனக்கு அது கியூரிசியாட்டிய குடுத்ததால என் எதிக்கல் ஹேக்கர் கிட்ட பேசிட்டு செக்யூர்டான டார்க் வெப் ப்ரவுசரை என் லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணுனேன்… அதை எப்பிடி யூஸ் பண்ணணும்னு எனக்கு நிஷாந்த் சொல்லிக் குடுத்தான்… அந்த டைம்ல என் லேப்டாப் அவன் கண்ட்ரோல்ல தான் இருந்துச்சு… ஒருவேளை அந்த நேரத்துல அவன் லாகின் பண்ணி பாத்துருக்கலாம்” என்றான் ஏகலைவன்.
அவன் சொன்ன ‘கலாம்’களை ஏற்க இதன்யா தயாராக இல்லை. இப்படிப்பட்ட எத்தனையோ ‘கலாம்’களால் ஒருமுறை முத்துவைத் தவறவிட்டதிலிருந்து இதன்யா ஊகங்களை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்த்தாள். இப்போதும் அப்படியே!
தனது நம்பிக்கையின்மையை ஏகலைவனிடம் வெளிப்படையாகத் தெரிவித்தவள்
“நீங்க என்ன சொன்னாலும் லாஜிக்கலா பாத்தா உங்க ஸ்டேட்மெண்ட் எல்லாமே நம்ப முடியாததா இருக்கு மிஸ்டர் ஏகலைவன்… ரத்தப்பசத்தால ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நிஷாந்தைக் காப்பாத்துனதா சொன்னிங்க… அது ஏன் பொய்யா இருக்கக்கூடாதுனு தான் எனக்கு யோசிக்கத் தோணுது” என்றாள் அவள்.
“இனியாவ கொலை பண்ண எனக்கு என்ன மோட்டிவ் இருக்கும்னு நினைக்குறிங்க? எனக்கும் கிளராவுக்கும் இடையில எந்த உறவும் கிடையாது… அவங்க மேல அந்த மாதிரி அசிங்கமான நினைப்பு எதுவும் எனக்கு இருந்ததில்லை”
“அவங்க மேல இல்லனு வச்சுப்போம்.. இனியா மேல இருந்திருக்கலாம் தானே?” இதன்யா இவ்வாறு கேட்ட அடுத்த நொடி ஏகலைவன் அமர்ந்திருந்த மர நாற்காலி பெரிய சப்தத்தோடு சுவரில் எறியப்பட்டது. கண்கள் எல்லாம் சிவக்க, உஷ்ண மூச்சோடு முகமெங்கும் கொலைவெறியுடன் அவளெதிரே நின்றான் ஏகலைவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

