மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு மரபியல் மற்றும் சூழல் காரணங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாகும். ஆனால் இவை நேரடி காரணிகள் அல்ல. அதாவது சிலவிதமான நரம்பியல் கட்டமைப்புகளை கொண்ட மூளை வடிவமைப்பு மனப்பிறழ்வுக்குறைபாட்டை ஒரு மனிதனுக்குள் உண்டாக்கும். மனித மூளையில் தற்காப்பு மற்றும் பயத்தை உணர்வதற்காக இருக்கும் பகுதி ‘அமிக்டலா’. இதுவே ஒரு சூழலில் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் பகுதியாகும். சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அமிக்டலா பகுதி மற்ற குழந்தைகளின் அமிக்டலாவை விட கொஞ்சம் மாறுபட்ட அமைப்போடு காணப்படும். அப்பகுதி சிறியதாகவோ குறைவான செயல்திறன் கொண்டதாகவோ அமையும் போது அக்குழந்தைகளுக்கு இயல்பாகவே பயம் என்ற உணர்வு குறையும். சராசரி மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இரக்கம் போன்ற உணர்வுகளை அவர்களால் உணர முடியாமல் போய்விடும்.
-From psychopathy.org website
தன் முன்னே அமர்ந்து ஷாலின் நுனியைத் திருகிக்கொண்டிருந்த முபீனாவின் மீது ஒரு கண்ணைப் பதித்தபடியே அஸ்மத் கொடுத்த தேநீரைப் பருகிக்கொண்டிருந்தாள் இதன்யா. அப்போது தான் பள்ளியிலிருந்து வந்த முபீனா இன்னும் சீருடையைக் கூட மாற்றவில்லை.
ரசூல் பாய் வேலை விசயமாக மதுரைக்குச் சென்றிருக்க அன்னையும் மகளும் மட்டுமே வீட்டிலிருந்தனர்.
“டீ சூப்பரா இருந்துச்சு”
கோப்பையைத் திருப்பிக் கொடுக்கும்போது இதன்யா பாராட்ட அஸ்மத்தின் இதழ்களில் மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
முபீனாவின் முகத்தில் தான் மகிழ்ச்சியின் சாயல் துளியும் இல்லை. எதையோ இழந்தவள் போன்ற தோற்றம்.
இதன்யா தொண்டையைச் செருமிக்கொள்ளவும் “நீங்க பேசுங்க… மிக்சி ரிப்பேர் ஆகிடுச்சு… நான் மீனா வீட்டுல போய் சட்னி அரைச்சுட்டு வந்துடுறேன்” என்று கிளம்ப எத்தனித்தார் அவர்.
உடனே முபீனாவின் முகத்தில் மிரட்சி தெரிய இதன்யா அவரை இங்கேயே இருக்கும்படி கூறினாள்.
“நான் ஒன்னும் ராணுவ ரகசியம் பேசப் போறதில்ல… எனக்கு நிஷாந்த் பத்தி சில டவுட்ஸ் இருக்கு… அதை பத்தி முபீனா கிட்ட கேட்டுத் தெளிவுபடுத்திக்க வந்திருக்கேன்… நீங்க போனிங்கனா தனியா இருக்கோமேனு உங்க பொண்ணு வீணா டென்சன் ஆவாங்கம்மா”
அஸ்மத்தும் அங்கே இருந்துகொள்ள இதன்யா தனது சந்தேகங்களை முபீனாவிடம் கேட்க ஆரம்பித்தாள்.
“உன் ஃப்ரெண்ட் இனியாவ பத்தி உனக்கு என்னென்ன சொல்லணுமோ சொல்லும்மா… அப்புறம் என் டவுட்ஸை நான் கேக்குறேன்”
இனியாவின் பெயரைக் கேட்டதும் முபீனாவின் முகம் ஒரே நேரத்தில் சந்தோசத்தையும் சோகத்தையும் பிரதிபலித்தது.
“இனியா என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… அவளைத் தவிர எனக்கு ஃப்ரெண்ட்னு வேற யாருமே கிடையாது மேம்… அவ முகம் எவ்ளோ அழகோ அதை விட அவளோட மனசு ஆயிரம் மடங்கு அழகானது… வசதியான வீட்டுப்பொண்ணுங்கிற ஆட்டிடியூட் கொஞ்சமும் இல்லாதவ… அவளுக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் மேம்… அவரோட அன்பு கிடைச்சுடாதானு அவ ஏங்காத நாள் இல்ல… ஆனா கடைசி வரைக்கும் அவளுக்கு சாரோட அன்பு கிடைக்கல”
“அவளோட ஸ்டெப் மாம் எப்பிடிப்பட்டவங்க?”

“அவங்களும் ரொம்ப ஸ்வீட் நேச்சர்… இனியாவ ரொம்ப பாசமா பாத்துக்கிட்டாங்க… ஆனா இனியா இறக்குறதுக்குச் சில மாசங்களுக்கு முன்னாடி கிளாரா மேமுக்கும் அவளுக்கும் சின்ன சின்னதா நிறைய உரசல் வந்துச்சு… அவங்க ரோஷணோட குரூப்ல சேர்ந்து சாத்தான் வழிபாட்டுல கலந்துக்குறது அவளுக்குப் பிடிக்கல”
“அது மட்டும் தான் அவங்க பிரச்சனைக்குக் காரணமா?”
“வேற எதுவும் இனியா என் கிட்ட சொல்லல மேம்”
“நிஷாந்த் பத்தி கூட சொன்னது இல்லையா?”
இந்தக் கேள்வியில் முபீனா தயக்கத்தோடு அவளது அன்னையைப் பார்த்தாள்.
“நான் ஒன்னும் நினைக்கமாட்டேன் முபீ… இனியாக்கு நியாயம் கிடைக்கணும்னா சில விசயங்களை உடைச்சுச் சொல்லியாகணும்… மேடம் கேக்குற கேள்விக்கு உண்மையான பதிலை சொல்லு”
அஸ்மத் உறுதியாய் கூறியதும் முபீனாவின் தயக்கத்தோடு வாய்ப்பூட்டும் அகன்றது.
“நிஷாந்த் அண்ணாவ இனியா பைத்தியக்காரத்தனமா காதலிச்சா மேம்… அவளுக்கு அப்பாங்கிற ஆண் கிட்ட கிடைக்காத பாசத்தை நிஷாந்த் அண்ணா குடுப்பார்னு அவ நம்புனா… முதல்ல அண்ணாக்கு இதுல பெருசா விருப்பமில்ல.. இனியா அவரைக் காதலிச்சதா சொன்னப்ப அவளுக்கு பதினாறு வயசு தான்… அவ மைனர்… அதுவுமில்லாம இது லவ் இல்ல இன்ஃபாக்சுவேசன்னு அண்ணா எவ்ளோவோ சொல்லியும் இனியா அவ லவ்ல பிடிவாதமா இருந்தா மேம்… ஒரு கட்டத்துல அண்ணாவும் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டார்… அதுக்குக் காரணம் இனியாவோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் ‘ஈ.டி.எஸ்’ தான்”
யாரந்த மர்ம நபரான ஈ.டி.எஸ்? அந்த யாரோ ஒருவனைப் பற்றி சைபர் க்ரைமால் கூட துப்பு துலக்க முடியவில்லை. காரணம் அவன் முகப்புத்தகத்தில் உருவாக்கிய ஐ.டியின் ஐ.பி அட்ரஸை அவர்களால் அத்துணை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.
“தட் ஐ.டி மே பி லாக்ட் இன் த்ரூ டார்க் வெப்” என்ற பதிலே சைபர் கிரைமிலிருந்து கிடைத்திருந்தது.
முபீனாவுக்கு அந்நபரைப் பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது.
“யார் அந்த ஆளுனு தெரியுமா?”
“இனியாவுக்கு அவர் இதுவரைக்கும் ஃபோட்டோ எதுவும் அனுப்புனதில்ல மேடம்…. அவரைப் பாக்கணும்னு ரொம்ப ஈகரா காத்திருந்தா இனியா… அவர் அவளோட எஃப்.பி போஸ்டுக்குக் கமெண்ட் பண்ணுவார்… நிஷாந்த் அண்ணா அதை பாத்து ஃபர்ஸ்ட் கோவப்பட்டார்… அப்புறம் பொசசிவ்னெஸ் வந்துச்சு… தென் ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க”
“ஈ.டி.எஸ் நபர் கூட சேட் பண்ணுனது பத்தி இனியா உன் கிட்ட சொல்லிருக்காளா?”
“அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசுவார்னு சொல்லிருக்கா… பட் அவர் சேட் டெலீட் பண்ணச் சொல்லிடுவார்… அது மட்டும் எனக்குச் சரியா படலனு இனியா கிட்ட சொன்னேன் மேம்”
“நிஷாந்தை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அந்த ஆளு கூட இனியா பேசுனாளா?”
“கொஞ்சநாள் பேசுனா… அப்புறம் ஏதோ பிரச்சனைனு அவரை ப்ளாக் பண்ணிட்டா”
அந்த மர்ம மனிதர் பற்றி நிஷாந்த் சொன்னது உண்மையென புரிந்தது இதன்யாவுக்கு.
“நிஷாந்த் இனியாவோட லவ் அவங்க வீட்டுக்குத் தெரிய வந்துச்சா?”
“ஒரு தடவை கலிங்கராஜன் அங்கிளுக்குத் தெரிஞ்சு அவர் நிஷாந்த் அண்ணாவ கூப்பிட்டு வார்ன் பண்ணுனார்… அப்ப இருந்து இனியாவும் நிஷாந்த் அண்ணாவும் அவங்க லவ்வை வெளிப்படையா காட்டல”
“ஃபைனல் கொஸ்டீன்… உன் ஃப்ரெண்ட் இனியாவோட மர்டர்ல எனக்கு நிஷாந்த் மேல சந்தேகம் இருக்கு… உன்னைப் பொறுத்தவரைக்கும் நிஷாந்த் இனியாவ எப்பிடி நடத்துனான்?”
“நிஷாந்த் அண்ணா கட்டாயம் இனியாவை இப்பிடி கொலை பண்ணிருக்கமாட்டார் மேம்… அவர் இனியாவ ரொம்ப ட்ரூவா லவ் பண்ணுனார்… அவளை ஃபியூச்சர்ல எந்தக் கஷ்டமும் படாம வாழவைக்கணும்ங்கிறதுக்காக ராத்திரி பகலா படிச்சார்… அவர் எப்பவும் மத்த பசங்க மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்துற ஆள் இல்ல.. ஆனா அவரோட அம்மாவுக்கு ஒன்னுனா துடிச்சிடுவார்… ரொம்ப இளகுன மனசு நிஷாந்த் அண்ணாக்கு”
நிஷாந்தை பற்றிய சந்தேகம் குறைந்த நிலையில் ராக்கியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள் இதன்யா.
ராக்கியைப் பாம்பென்று கடக்கவும் முடியாது, பழுதென்று மிதிக்கவும் முடியாதென முபீனா கூறினாள்.
“அவன் நிஷாந்த் அண்ணாவோட ஃப்ரெண்ட்… ரொம்ப அமைதியானவன்.. முருகன் கோவில் திருவிழாக்கு ஓடியாடி வேலை செய்வான்… அவங்க அண்ணன் ரோஷண் மாதிரி கெட்டபுத்தி உள்ளவன் இல்ல… நிஷாந்த் அண்ணா, ஃபாதர் பவுல் தவிர வேற யார் கிட்டவும் பேசக்கூட மாட்டான்”
“அவன் தான் இனியாவோட டெட்பாடிய ஃபர்ஸ்ட் பாத்தவன்… அவனுக்கும் இனியாக்கும் ஏதோ பிரச்சனை இருந்துச்சுனு கேள்விப்பட்டேன்”
“அது மிச்செல்லை வச்சு வந்த பிரச்சனை மேம்… அந்த ப்ராப்ளமால தான் நிஷாந்த் அண்ணாவும் இனியாவும் பேசவே ஆரம்பிச்சாங்க… எனக்குத் தெரிஞ்சு நிஷாந்த் அண்ணாவோட லவ்வர்ங்கிறதால ராக்கி இனியாவை மரியாதையா தான் பாத்தான்… ரோஷணோட வன்மம் அவனுக்குக் கிடையாது”
ராக்கியைப் பற்றி ஓரளவுக்கு விசாரித்ததும் ரசூல் பாயின் வீட்டிலிருந்து கிளம்பினாள் இதன்யா.
அவளுக்கு நன்கு அறிமுகமான மனோதத்துவ மருத்துவர் ஒருவரிடம் வீடியோ வழியே உரையாட அனுமதி கேட்டிருந்தாள். அவரும் அன்று இரவு ஓய்வுநேரம் இருக்கும்போது பேசலாமென்றிருந்தார்.
பொன்மலையிலிருந்து கிளம்பிய இதன்யா அரசு மருத்துவமனைக்குச் செல்ல பைக்கை உதைத்தாள்.
பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவரிடம் சில விவரங்களை வாங்குவதற்காக அங்கே போய்க்கொண்டிருந்தவளின் பார்வையில் பொன்மலை தேவாலயம் விழுந்தது.
அதை ஒட்டிப் பார்வை விரிய அதற்குள் வசமாகச் சிக்கிக்கொண்டார்கள் இருவர்.
வேறு யாருமில்லை, கலிங்கராஜனின் வீட்டுப் பணியாட்களான ஜானும் நவநீதமும் தான்.
இருட்டத் தொடங்கிய நேரத்தில் இந்த இருவரும் எங்கே போகிறார்கள் என இதன்யா பைக்கின் வேகத்தைக் குறைத்தபோதே இருவரும் இரகசியப்பாதையில் ஐக்கியமாகி மறைந்தே போனார்கள்.
அப்போது தான் தனது சாத்தான் வழிபாட்டு குழுவிலிருந்த சிலரின் பெயர்களை ரோஷண் சொன்னது நினைவுக்கு வந்தது.
அதில் இவர்களின் பெயரும் இருந்தது தானே என்ற யோசனையோடு பொன்மலை அரசு மருத்துவமனைக்குப் பைக்கை விரட்டினாள் அவள்.
அங்கே போனதும் மருத்துவரைச் சந்திக்க முடிந்தது.
“இன்னிக்கு எந்தக் கேசும் இல்ல மேடம்… நல்லதா போச்சு, உங்க சந்தேகம் எல்லாத்துக்கும் தெளிவா விளக்கம் சொல்ல எனக்கு நேரம் கிடைச்சிருக்கு பாருங்க” என்று சொன்னபடி தனது அறைக்கு அழைத்துப் போனார் மருத்துவர் செந்தமிழ் செல்வன். இனியாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். எனவே தான் தனது சந்தேகத்தை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென வந்திருந்தாள் இதன்யா.
“உக்காருங்க மேடம்”
அவளை அமரச் சொல்லிவிட்டுக் கையைக் கழுவிவிட்டு வந்து இருக்கையில் உட்கார்ந்தார்.
“எனக்கு இனியா கேஸ் சம்பந்தமா சில டவுட்ஸ் இருக்கு… ஆக்சுவலி விக்டிம் ரெண்டு நபர்களால செக்சுவல் அப்யூஸுக்கு ஆளானதா செகண்ட் பி.எம் ரிப்போர்ட் சொல்லுது… என் டவுட் என்னனா ரெண்டு வெவ்வேறு நபர்கள்ல ஒருத்தர் அவளோட விருப்பத்தோட உறவு வச்சிருந்தா கூட பி.எம் ரிப்போர்ட்ல அது வன்புணர்வுனு தான் பதிவாகுமா?”
செந்தமிழ் செல்வன் கண்ணாடியைக் கழற்றி கண்களை அழுந்த துடைத்துக்கொண்டார்.
“ரேப்ங்கிற வார்த்தைய நீங்க தவிர்க்கிறப்பவே அதை எவ்ளோ அருவருப்பான கண்ணோட்டத்துல பாக்குறிங்கனு புரியுது மேடம்… ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அவளை வலுக்கட்டாயமா உடலுறவுக்கு உட்படுத்துறதை சட்டம் வன்புணர்வுனு சொல்லுது… உடற்கூறு படி பாத்தா சம்மதத்தோட நடக்குற உறவுல கூட பல நேரங்கள்ல பெண்களோட ஜெனிட்டல்ல சின்ன சின்ன ரப்சர்ஸ் உண்டாகும்… லேபியோ மெஜாரா, லேபியோ மைனாரா பகுதிகள்ல சின்ன சின்ன தோல் உரிதல், கன்றி சிவந்து போகுறது, ஹைமன் சிதையறது எல்லாம் முதல் முறை கான்சன்சுவல் செக்ஸ் நடக்குறப்ப இயல்பா நடக்கக்கூடியது தான்…
அதுக்கான காரணங்கள் நிறைய… அதை பத்தி நம்ம டீப்பா பேச வேண்டாம்… இப்ப அந்த விக்டிம் உயிரோட இருந்து முதல் நபர் என் விருப்பப்படி உறவு வச்சுக்கிட்டான், ரெண்டாவது நபர் தான் என்னை வன்புணர்வுக்கு ஆளாக்குனான்னு சொன்னா மட்டுமே நம்மளால முதலாவதை கான்சென்சுவல் செக்ஸ், ரெண்டாவதை ரேப்னு ஏத்துக்க முடியும், அதாவது உடலியல் ரீதியா… சட்டப்படி பாத்தா அந்தக் கான்சன்சுவல் செக்சும் ரேப் தான்… ஏன்னா இந்த கேஸ்ல விக்டிமுக்குப் பதினெட்டு வயசு ஆகல… அன்பார்சுனேட்லி விக்டிம் இறந்துட்டாங்க… அவங்க இறந்த விதம் அவங்களுக்கு நடந்த ரெண்டு விதமான உறவும் வன்புணர்வுங்கிற முடிவுக்கு எங்களை வரவச்சுது”
தனக்கும் நிஷாந்துக்கும் நடந்த உறவு சம்மத்தத்தொடு நடந்ததே என இனியா வாய் திறந்து சொன்னால் மட்டுமே அதை மருத்துவ உலகம் வன்புணர்வாகக் கருதாது என்பதே இதன் அர்த்தம். அப்படி பார்த்தாலும் சட்டத்தைப் பொறுத்தவரை அது வன்புணர்வே!
இந்த வழக்கின் அடிப்படை காரணம் இனியாவின் உடலாக இருந்தால் மட்டுமே வன்புணர்வின் தொடர்ச்சியாய் நடந்த கொலையென கருத முடியும். ஆனால் நிஷாந்தோ அவளது காதலன். யாருமே அவனைப் பற்றி தவறாகச் சொல்லவில்லை. இனியாவுக்கும் அவனுக்கும் இடையே இருந்த வாட்சப் சாட்கள் அவர்கள் நல்ல காதலர்களாக இருந்ததையே சுட்டிக்காட்டின.
எனவே இங்கே நிஷாந்தின் கூற்றான ‘கான்சென்சுவல் செக்ஸ்’ என்ற வாதம் தர்க்கரீதியாக ஜெயிக்கிறது. அவன் கொலைகாரனாக இருக்க வாய்ப்பில்லை என்பதுவும் தெளிவாகிறது.
அப்படி என்றால் அந்த இரண்டாம் நபர் தான் கொலையாளியாக இருக்க வேண்டும்! அவன் இனியாவை வன்புணர்வுக்கு ஆளாக்கியதோடு கொடூரமாகக் கொலையும் செய்ததற்கு வேறேதோ அழுத்தமான காரணம் இருக்க வேண்டும்.
இனியாவைப் பிடிக்காத யாரோ பணத்துக்காக அனுப்பிய கொலைகாரனாக இருக்கலாம்! பெண்களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம்! அந்த ஒருவன் யார் என்பதை நோக்கியே இனி இந்த வழக்கு பயணிக்குமென தீர்மானித்த இதன்யா மருத்துவரிடம் நன்றி கூறிவிட்டுப் போலீஸ் குவார்ட்டர்சுக்குக் கிளம்பினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


 Written by
Written by