அக்கா ஓடிப் போனதால, திடீர்னு கல்யாணம். புது உலகம், புது மனுஷன்! இதெல்லாம் எனக்குள்ள ஒரு பயத்தையும், தயக்கத்தையும் தான் உருவாக்குச்சு. அவரோட அமைதிகூட எனக்குப் பயத்தைக் குடுத்துச்சு. “ஏன் இப்படி இருக்குறார்? கோபமா இருக்குறாரா?”னு என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி. என் உலகமே வேற மாதிரி ஆகிடுச்சு. அதுல ஒரு சின்ன வெளிச்சம் மாதிரி, அவரோட ஸ்பரிசம் என் பயத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா விரட்டுச்சு. நேத்து, என் கைய மெதுவா பிடிச்சுக்கிட்ட அந்த நொடி, எனக்குள்ள ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. அது பயம் இல்ல, புதுசா வந்த வெட்கம். “பயம் வேண்டாம்“னு அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை, எனக்குப் புது நம்பிக்கைய கொடுத்துச்சு. இப்ப, அவர் என் பக்கத்துல இருக்கிற ஒவ்வொரு நொடியும், என் மனசு சந்தோஷத்துல துடிக்குது. அவர் என்னைப் பார்க்குற பார்வை, என்கிட்ட காட்டுற அக்கறை இதெல்லாம் என் பயத்தை நீக்கி, மனசுல அன்பை வளர்க்குது.
–விழியின் மொழி
புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி திறக்க வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் ஏராளம். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திடம் அனுமதி பெற வேண்டியது மிகவும் அவசியம்.
சென்னைக்கு வந்து திட்டமிட்டபடி கல்வியமைச்சரைப் பார்த்துப் பேசி, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்த மகிழ்மாறனுக்கு அன்றைய தினம் அலைச்சல் அதிகம்.
நரசிம்மன் கூட, அவனது உதவியாளர் தனசேகரை அனுப்பி வேலையை முடித்துக்கொள்ளலாம் என்றார். ஆனால் மகிழ்மாறனுக்குத் தன் முனைப்பில் ஒரு வேலையை முடிக்கும் ஆவல்.
இதுவும் ஒரு தனி அனுபவமாக இருக்கட்டுமே! இதுவரை ஹோட்டல்களுக்காக அலுவல்ரீதியாய் அவன் பயணங்கள் மேற்கொண்டிருக்கிக்கிறான். முதல் முறையாகக் கல்லூரி வேலைகளுக்கானப் பயணம் இது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சென்னைக்கு வந்து கண் மூடித் திறப்பதற்குள் நான்கு தினங்கள் அலுவல்களில் கழிந்தன.
முதல் நாள் கல்வி அமைச்சரைச் சந்தித்துப் பேசியாயிற்று! அடுத்து முதலமைச்சருடன் மரியாதைப்பூர்வமானச் சந்திப்பு ஒன்று! மூன்றாம் நாளும் நான்காம் நாளும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தில் கழிந்துவிட்டன.
அக்கடாவென ஹோட்டல் அறையைப் பூட்டிக்கொண்டு மெத்தையில் சரிந்தவனுக்கு நான்கு நாட்களாக மலர்விழியிடம் பேசாமல் இருந்தது நினைவுக்கு வந்தது.
‘நான் அழைக்காவிட்டால் என்ன? எனக்கு வேலை இருக்குமெனத் தெரிந்து அவளே அழைத்துப் பேசியிருக்கலாமே!’
ஆதங்கத்தோடு நினைத்துக்கொண்டவன் நேரம் ஆறரை என்று கவனித்து மலர்விழியின் மொபைலுக்கு அழைத்தான்.
அவளும் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ”
அவளது ஹலோவோடு பின்னணியில் திரையிசைப்பாடல் கேட்டது.
‘டிக்கெட் டிக்கெட்’ என்ற நடத்துனரின் குரல் வேறு!
பேருந்தில் பயணிக்கிறாள் போல!
“நீ வீட்டுக்குப் போயிட்டுக் கால் பண்ணு மலர்” என்று சொல்லி அழைப்பைத் துண்டிக்கப் போனவனை “இல்ல இல்ல! எனக்குச் சீட் கிடைச்சி உக்காந்துட்டேன். பேசலாம்” என்று தடுத்தாள் அவள் அவசரமாக.
மகிம்ழாறனுக்கு அவள் அழைக்கத் தவறிய மொபைல் அழைப்புகள் மீதான அதிருப்தி மறைந்து தன்னிடம் பேச அவள் எடுக்கும் முயற்சியைக் கண்டு மனம் கனிந்தது.

“நாலு நாள் நான் கால் பண்ணலனதும் நீயும் அப்பிடியே இருந்துட்டியா? ஆடி மாசம் புருசனும் பொண்டாட்டியும் ஒரே வீட்டுல இருக்கத்தான் தடை. போன்ல பேசுறதுக்கு இல்லையே”
“நீங்க காலேஜ் விசயமா போயிருக்கிங்கனு அத்தை சொன்னாங்க. வேலைனு வந்துட்டா நீங்க அதுலயே மூழ்கிடுவிங்களாமே. அதான் உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு கூப்பிடல”
“உன் கூட பேசுறது எனக்கு எப்பவும் தொந்தரவு இல்ல மலர்”
அந்தக் கூட்ட நெரிச்சலுள்ள பேருந்து கூட அந்நேரம் அவளுக்குப் பறக்கும் பட்டுக்கம்பளமாகத் தோன்றிவிட்டது.
மனதுக்குள் ஏன் இந்த திடீர் ஜில் உணர்வு?
“நீங்க முக்கியமா யார் கூடவும் பேசிட்டிருக்கலாம். அந்த நேரத்துல நான் கால் பண்ணுனா நல்லா இருக்காதுல்ல”
“அவங்க யாரும் உன்னைவிட முக்கியமானவங்க இல்ல”
கறார்க்குரலில் ஒருவர் கனிவான வார்த்தைகளைப் பேசுவதுதான் ரொமான்சோ? சிரித்துவிட்டாள் மலர்விழி.
“நீங்க சாப்பிட்டிங்களா?”
“ம்ம்… பட் எனக்கு ஒத்துக்கல. சாண்ட்விச், ரொட்டினு ஒப்பேத்திட்டிருக்கேன்” என்றான் அவன்.
இதுவரை இம்மாதிரியான அர்த்தமற்ற உரையாடல்களை அவன் நிகழ்த்தியதேயில்லை. ஆனால் இவளுடன் பேசுகையில் அர்த்தமற்ற உரையாடல்கள் கூட நீண்டுகொண்டே செல்லவேண்டுமென அவன் இதயம் குதிக்கிறதே!
“உனக்குச் சென்னைல இருந்து என்ன வாங்கிட்டு வரணும்?” ஆசையாய்க் கேட்டான் அவன்.
“எனக்கா?” என்று கேட்டபடி யோசித்தவளுக்கு என்ன கேட்கவேண்டுமெனத் தெரியவில்லை.
“எனக்கு எதுவும் வேண்டாம். நாம தோரணமலை கோவிலுக்குப் போனோம்ல, அன்னைக்குக் காலைல ஒரு ரெஸ்ட்ராண்டுக்குப் போனோமே. அங்க போகணும்னு ஆசையா இருக்கு. அங்க கூட்டிட்டுப் போவிங்களா? கூட்டிட்டுப் போனா யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்கதானே?”
“என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டுப் போறதை யார் கேக்க முடியும்?”
“நிஜமா?”
“உன் கிட்ட நான் பொய் சொல்லமாட்டேன்”
மலர்விழிக்கு மனம் குளிர்ந்து போனது. அவளுக்குப் பெரிதாக ஒரு ஆசையுமில்லை. மகிழ்மாறனின் கையைப் பற்றி உரிமையாக நடக்க வேண்டும் என்பதைத் தவிர.
“அது மட்டும் போதுமா?”
“இப்போதைக்குப் போதும்”
பேச்சினூடே நதியூரே வந்துவிட்டது. ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக மலர்விழியிடம் பேசுவதும் அவள் பதில் சொல்வதும் அவனுக்கு மொபைல் மூலம் கேட்டது.
பின்னர் வீட்டுக்குச் சென்றதும் சிகாமணியிடம், குழலியிடம் பேசிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்தான்.
நாட்கள் கடக்க ஏழு நாட்கள் பறந்து மகிழ்மாறனும் ஊருக்கு வந்து சேர்ந்தான். காலையில் அவன் கல்லூரிக்கு வந்தபோதே ஈஸ்வரியுடன் வந்து சேர்ந்தாள் மலர்விழி.
“மலர்”
அவன் அழைத்ததும் நின்றவள் சுற்றிலும் நிற்பவர்களைக் கவனியாமல் ஓடோடிச் சென்றாள்.
“இன்னைக்கு ஈவ்னிங் ரெடியா இரு. ரெஸ்ட்ராண்டுக்குப் போகலாம்”
கனிந்த முகத்தோடு அவன் சொல்ல மகிழ்ச்சியோடு தலையாட்டினாள் மலர்விழி.
“சரி! கிளாசுக்குப் போ”
“ம்ம்! டாட்டா”
அவள் கையசைத்துவிட்டுப் போனதும் மகிழ்மாறனும் அவனது வேலைகளில் ஆழ்ந்துவிட்டான்.
“NAACல இருந்து காலேஜ் விசிட் வர்றதுக்கான ஷெட்யூல் அனுப்பிருக்காங்க சார்”
தனசேகரன் அட்டவணையைக் காட்டினார்.
ஆயுதபூஜை விடுமுறை நேரத்தில் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அதற்கு முன்னர் மாணவர்களிடமும் கல்லூரியைப் பற்றி கேட்டறிவார்கள் என்று கூறியிருந்தார்கள்.
அப்படியென்றால் தேனிலவு செல்ல முடியாது! இதை மலர்விழியிடம் எப்படி சொல்வது?
“ஓ.கே! லைப்ரரில எக்ஸ்ட்ரா இன்னொரு ராக் வைக்கணும்னு சொல்லிருந்தாங்க”
“சார் அது யூ.ஜி.சி ஃபண்ட்ல பண்ணிக்கலாம்னு”
“லைப்ரரி ஸ்டூண்டட்சுக்கு ரொம்ப முக்கியமானது. யூ.ஜி.சில இருந்து ஃபண்ட் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாது. காலேஜ் மேனேஜ்மெண்ட் தரப்புல இருந்து செஞ்சுடலாம்”
“சரி சார்”
இன்னும் சில வேலைகள் பாக்கி இருந்தது. மாணவர் விடுதிக்குச் செல்லும் வழியில் பாதையைச் சீரமைப்பது, கல்லூரி கட்டிடங்களில் இருக்கும் குடிநீர் வசதி சுகாதாரமாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதில் நேரம் போனது.
பின்னர் காரில் புக் ஷாப்புக்குச் சென்றவன் வேலை நேரம் முடிந்ததும் மலர்விழியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.
அருவி பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ்! இரவிற்கான விளக்குகள் மின்ன அவர்களை வரவேற்றது.
கடந்த முறை போல எந்த இரசாபாசமும் இல்லாமல் இனிமையாகவே பொழுது கடந்தது.
மலர்விழி ஆசையாகச் சாப்பிட மகிழ்மாறன் சிக்கன் சாண்ட்விச்சோடு நிறுத்திக்கொண்டான்.

அவள் சாப்பிடும்போது இடையில் நிறுத்தியவள் “நீங்க வேற எதுவும் ஆர்டர் பண்ணலையா?” என்று கேட்க
“நீ சாப்பிடு” என்றான் அவன்.
“நான் ரொம்ப சாப்பிடுறேன்ல” அசட்டுச்சிரிப்போடு சொன்னவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை.
“நீ சாப்பிட்டு நான் கடனாளி ஆகிடுவேனா?”
அவன் சொல்லவும் அவளது சிரிப்பு இன்னும் விரிந்தது.
பில் பணம் செலுத்திவிட்டுக் காரிலேறியபோது அவளிடம் ஒரு பார்சலைக் கொடுத்தான் மகிழ்மாறன்.
“அத்தை மாமாக்குக் குடுத்துடு”
உச்சி குளிர்ந்தது மலர்விழிக்கு.
கார் கிளம்பியதும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை இருவரும். நதியூர் வந்ததும் மனைவியை அவளது வீட்டில் விட்டுவிட்டு மாமனார் மாமியாரிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுக் காரைக் கிளப்பினான் மகிழ்மாறன்.
அவனது கார் சிகாமணியின் வீட்டிலிருந்து கிளம்புவதை எதிரே இன்னொரு காரில் கடந்த மாணிக்கவேலுவும், நிலவழகியும் பார்த்துவிட்டார்கள்.
நிலவழகிக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை.
“அப்பிடி என்ன இருக்கு இங்கனு வந்துட்டு வந்துட்டுப் போறானோ? இந்த தரித்திரம் பிடிச்ச வீட்டுக்கு வந்துட்டுப் போனா இவன் குடும்பம் விளங்குமா?”
“சும்மா இரு. உன் மக சரியா இருந்திருந்தா ஏன் இதெல்லாம் நடந்திருக்கப் போகுது?”
“அதுக்குனு விள்ளாம விரியாம பணத்தைக் கொட்டி நடத்துன கல்யாணத்துல அன்றாடங்காய்ச்சி ஒருத்திய மணப்பொண்ணாக்குவிங்களா? நம்ம செலவு பண்ணுன காசை உங்க தம்பி எப்ப திரும்ப குடுப்பார்? கேட்டிங்களா நீங்க?”

“ஏய்! அவனாடி மலரை மணமேடைல உக்கார வச்சான்? நான் கெஞ்சி கூத்தாடி அவன் கால்ல விழாதக் குறையா பேசி மலரைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன். அன்னைக்கு மட்டும் அவ முடியாதுனு சொல்லிருந்தா இப்ப போறானே, அவன் நம்மளைத் தொழில் பண்ண விட்டிருக்க மாட்டான். கடவுள் புண்ணியத்துல பிரச்சனை முடிஞ்சுதுனு இருக்கேன். என் வாயைக் கிளறாத”
“அப்ப காசும் போச்சு, என் மக வாழ்க்கையும் போச்சா?”
“உன் மக வாழ்க்கைக்கு என்ன? ராஜதுரை மச்சான் கிட்ட பேசிருக்கேன்”
நிலவழகி அதிர்ந்து போனார். அந்த மனிதரிடம் என்ன பேச்சு இவருக்கு!
“ஏன்? எதுக்கு?”
“அவர் மவனைத் தான் மதுக்குப் பேசப்போறேன்”
அவ்வளவுதான்! நிலவழகியின் தலையில் இடிவிழாதக் குறை! ஒரு காலத்தில் மலர்விழியை முரளியிடம் பலி கொடுக்க முனைப்பாய் வேலை செய்தவர் இப்போது தன் மகளின் வாழ்க்கை பலியாவது போல தெரியவும் அதிர்ந்தே போனார்.
“என்ன பேசுறிங்க? இதுல்லாம் நியாயமா?”
“ஏன் நியாயமில்ல? உன் மவளை வேற எவனும் கட்ட வரமாட்டேங்கிறான். அவன் ஒருத்தன் தான் சரினு தலையாட்டுனான். அவனுக்குக் குடுக்க வேண்டியதைக் குடுத்தா கௌரவமா கல்யாணம் பண்ணிப்பான்”
“அப்பா மாதிரி பேசுங்க. அவன் ஒரு பொம்பளை பொறுக்கி. அவனுக்கு என் பிள்ளைய கல்யாணம் பண்ணி வைக்கணுமா? மனசாட்சி இருந்தா இப்பிடி பேசுவிங்களா? எந்த வகைல என் மக குறைஞ்சு போயிட்டா?”
நிலவழகி கதற கதற அதையெல்லாம் செவிமடுக்கவில்லை.
அவர்களின் காருக்கு முன்னே போய்க்கொண்டிருந்த மகிழ்மாறனின் கார் ரங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தை நோக்கி செல்வதைப் பார்க்க முடிந்தது மாணிக்கவேலுவால்.
‘இவன் ஏன் இங்கே செல்கிறான்?’
ஐயத்தோடு தன் வீட்டருகே காரை நிறுத்தியவர் நிலவழகி கத்தியதைக் கதறியதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் போய்விட்டார்.
அதே நேரம் ரங்கநல்லூர் ஊராட்சி மன்றத்துக்கு வந்த மகிழ்மாறன் தனக்காகக் காத்திருந்த நபர் கொடுத்த ரசீதை வாங்கிக்கொண்டான்.
“இந்தத் தீர்வைய வருசம் வருசம் உங்க பெரிய மாமனார்தான் கட்டுவாப்ல.” என்ற தகவல் வேறு!

“ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் அவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினான் அங்கிருந்து.
சிகாமாணி ஏமாந்தாரே அந்த நிலத்திற்கான தீர்வையை வருடந்தோறும் மாணிக்கவேலு கட்டுவதை உறுதிப்படுத்தியது அந்த ரசீது.
பவிதரனிடம் இவற்றை எல்லாம் காட்டி உன் தந்தையின் கேவலமானக் குணத்தைப் பார் எனக் கேட்குமளவுக்கு மகிழ்மாறனுக்கு வெறி!
சொந்தத் தம்பி குடும்பத்தை ஏமாற்றி இத்தனை வருடங்கள் அடிமையாக வைத்ததற்கு மாணிக்கவேலுவை நாக்கைப் பிடுங்கிக்கொள்வது போல நான்கு வார்த்தைகள் நறுக்கென்று கேட்க அவனது இதயம் துடித்தது.
ஆதாரமில்லாமல் பேசுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே ஆதாரங்களைச் சேகரித்து வைத்தான்.
பவிதரனை வைத்து மதுமதியின் பேராசைக்குப் புவனேந்திரன் முற்றுபுள்ளி வைத்துவிட்டான். அதே பவிதரன் மூலமாக மாணிக்கவேலுவின் முகத்திரையைக் கிழித்துச் சிகாமணிக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிலத்தைப் பெற்றுத்தர ஆயத்தமானான் மகிழ்மாறன்.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction