“மதுமதி மேல இருக்குற வருத்தத்தை நான் புவன் கிட்ட கோவமா கொட்டிட்டேன். அவ அவர் கிட்ட உரிமை எடுத்துக்குற மாதிரி ஸ்பேஸ் குடுத்தது யாரோட தப்பு? என் ஆதங்கம் என்னை விட்டுப் போனதுக்கு அப்புறமாதான் வார்த்தைகளோட வீரியம் புத்தில உறைச்சுது. கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். எங்களோட அன்னியோன்யத்தையும் புவன் என் மேல வச்சிருக்குற அன்பையும் என்னோட வார்த்தைகள் அசைச்சிடுச்சு. தப்புதான்! பேசுனப்ப என்னோட வார்த்தைகள் தப்பா தோணல எனக்கு. ஆனா நாட்கள் போக போக கோவம் நீர்த்துப் போயிடுது, அப்ப வார்த்தைகளோட தாக்கம் பூதாகரமா எழுந்திருச்சு நிக்குது“
-ஆதிரா
புவனேந்திரனும் ஆதிராவும் ஒருவித அமைதியின்மையோடு ஹோட்டலில் இருந்து கிளம்பியதை ஒளிந்திருந்து பார்த்துவிட்டுதான் வீட்டுக்குக் கிளம்பினாள் மதுமதி.
அன்று அவளுக்குமே வீடு திரும்ப நேரமாகிவிட்டதால் பவிதரன் நிலவழகியிடம் என்னவென விசாரித்தான்.
“ஏதோ வேலைனு சொன்னா பவி” என்றார் அவர் சுருக்கமாக.
“ஆறு மணி வரைக்கும்தானே வேலை. இவ்ளோ நேரம் எங்க போயிட்டு வந்தானு விசாரிக்க மாட்டிங்களா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இல்லப்பா…”
“மது வேலைக்குப் போறதுல எப்பவுமே எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது இல்லம்மா. ஆனா அவளால வேற யாருக்கும் தொந்தரவுனா நான் சில முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும். ஆல்ரெடி ஆதிரா அவளைப் பத்தி சொன்னப்ப இனிமே மதுவால புவனுக்குப் பிரச்சனை வராதுனு வாக்கு குடுத்திருக்கேன். அதை மீறி மது எதுவும் செய்யக்கூடாது”
எச்சரித்தவனின் பேச்சை அவளது அறைக்குள் இருந்து கேட்டுக்கொண்டிருந்தாள் மதுமதி. அவள் மனமெங்கும் எரிச்சல்.
‘இவன் என் உடன்பிறந்தவன் தானா? எப்போதுமே மலர்விழிக்கு ஆதரவாக நிற்பான். இப்போதோ ஆதிராவுக்கு ஆதரவாகப் பேசுகிறான்’
அவள் மனம் பொருமிய அதே நேரத்தில் புவனேந்திரனும் ஆதிராவும் அவர்களின் வீட்டுக்கு போய் சேர்ந்தார்கள்.
அறைக்குள் வந்ததும் அமைதியாவதில் இருவருக்குமே உடன்பாடில்லை. ஆதிரா தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள்.
“மதுமதி இனிமே உங்க ஹோட்டலுக்கு வரக்கூடாது”
புவனேந்திரன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான். அவனது பார்வையில் விசாரணை பாவனை.
“அவ வந்தா உனக்குள்ள ஏன் சலனம்? அவ அங்க எதுக்காக வர்றானு உனக்கே நல்லா தெரியும்”
“அவ உங்களைப் பாக்க வர்றா புவன். உங்க கூட நேரம் செலவளிக்க அவளுக்கு ஒரு சாக்கு வேணும். அதுக்காகதான் வர்றா.”
“இப்ப நான் என்ன செய்யணும்னு நீ எதிர்பாக்குற?”
“அவங்க கம்பெனில பேசுங்க. வேற சாப்ட்வேர் இஞ்சினியரை அனுப்பச் சொல்லுங்க”
“காரணம் என்ன சொல்லுறது? என் பொண்டாட்டிக்கு மதுமதி வந்தாலே நிம்மதி இல்லனு சொல்லட்டுமா? அதுக்கும் காரணம் கேப்பாங்களே? எங்க அவ என்னை மயக்கிடுவாளோனு என் பொண்டாட்டி பயப்படுறானு சொல்லட்டுமா?” இதைக் கேட்டபோது புவனேந்திரனின் குரலில் அத்துணை காட்டம்.
“புவன்..”
பேச்சுக்குக் கூட அவன் யாரோ ஒருத்தியிடம் மயங்கிவிடுவானோ என்ற வார்த்தையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“கத்தாத ஆதி. வேற என்ன காரணத்தை நான் சொல்லணும் அங்க? என்ன சொன்னாலும் என் முதுகுக்குப் பின்னாடி என்ன பேச்சு வரும் தெரியுமா? இந்த ஆள் மேல நம்பிக்கை இருந்தா இவரோட பொண்டாட்டி ஏன் இவ்ளோ பயப்படுதுனு பேசிச் சிரிப்பாங்க.”
“உங்களுக்கு என்னை விட அவங்க பேசுறதுதான் முக்கியமா போய்டுச்சா புவன்? எனக்கு உங்க மேல சந்தேகம் எல்லாம் கிடையாது. ஆனா ஒரு விசயம் எனக்கு உறுதியாகுது. உங்களுக்கு அந்த மதுமதி மேல சாப்ட் கார்னர் இருக்கு. அவ வாழ்க்கை நாசமானதால நீங்க அவளைப் பார்த்து பரிதாபப்படுறிங்க. அதைப் பயன்படுத்தி அவ உங்களை நெருங்க நினைக்குறா. செக்யூரிட்டி அப்டேட்டை சர்வர்ல பண்ணிடுவேன்னு சொன்னவ ஏன் மாசமாசம் ஹோட்டலுக்கு வர்றா? அவ என்ன செஞ்சாலும் நீங்க தடுக்க மாட்டிங்கங்கிற உறுதி அவளுக்கு எப்பிடி கிடைக்குது? அவ மேல இன்னைக்கு உங்களுக்கு இருக்குற சாப்ட் கார்னர் நாளைக்கு அன்பா மாறாதுனு என்ன நிச்சயம் புவன்?”
ஆதிரா கோபத்தில் வார்த்தைகளைச் சிதறவிட புவனேந்திரனின் பேச்சோ நின்று போனது.
‘என்ன மாதிரியான பேச்சு இது? அழகான உறவு எங்களுக்குள்! அதற்கு மணிமகுடம் போல அன்னியோன்யமும். அதை ஒரு நொடியில் சிதைத்துவிட்டாளே கோபத்தால்! இவளைத் தவிர இன்னொருத்திக்கு என் மனதில் இடமில்லை என்று தெரியாதா? இவள்மீது நான் வைத்திருக்கும் அழுத்தமான நம்பிக்கையும், உறுதியும் இவளுக்கும் என் மீது இருக்கவேண்டும்தானே?’
ஆற்றாமையோடு யோசித்தவன் முகம் சிவக்க நின்ற மனைவியிடம் தனது முடிவை வெளியிட்டான்.
“நான் க்ளவுட் பீ டெக்னாலஜில பேசுறேன். இனிமே ஹோட்டலுக்கு மதுமதி வரமாட்டா. உன் மனசு அமைதியில்லாம நீ டென்சனோட இருக்குறது எனக்கு மட்டும் சந்தோசத்தைக் குடுத்துடுமா? அவ ஹோட்டலுக்கு வர்றதால உனக்கு மனவுளைச்சல் வருதுனா, இனிமே அவ வரமாட்டா. நமக்குள்ள இருந்த டீலை மீறி உனக்காக நான் எடுத்த முடிவு இது”
அவனது குரலில் இருந்த உறுதி ஆதிராவுக்குச் சிறிய ஆசுவாசத்தைக் கொடுத்தது. அடுத்த நொடியே அந்த ஆசுவாசம் போனது அவனது தொடர்ந்த பேச்சால்!
“மதுமதி மேல எனக்கு அன்பு வந்துடும்னு சொன்ன பாத்தியா, அதுக்கு நீ என்னைச் செருப்பால அடிச்சிருக்கலாம்டி. இவ்ளோதானா என்னை நீ புரிஞ்சிக்கிட்டது? போடி”
சலிப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான் புவனேந்திரன். அவனது வார்த்தைகளில் சலிப்போடு வெளிப்பட்ட ஆதங்கத்தை அறிந்த ஆதிராவுக்கும் வேதனைதான்.
புவனேந்திரனைக் காயப்படுத்திவிட்டோம் எனப் புரிந்தது அவளுக்கு. அதே நேரம் மதுமதியால் தங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வராதெனச் சின்னதாய் ஒரு நிம்மதி!
ஆனால் அன்றைய தினம் புவனேந்திரன் வெகுவாகக் காயப்பட்டுப்போனான். பெண்கள் கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளின் வீரியத்தை உணராமல் அடிக்கடி வார்த்தைகளைத் தவறிவிடுவது உண்டு.
ஆண்களும் செய்வார்கள்தான். ஆனால் அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்கத் தயங்குவதில்லை, அந்த ஆண் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவனாக இருக்கும் பட்சத்தில்!
ஆனால் பெண்களால் எந்த வாக்குவாதத்திலும் தங்கள் பக்கத்திலிருக்கும் தவறுகளை உடனடியாக உணர்ந்துகொள்ள முடியாது. எப்போதுமே அவர்களின் மனம் பிரச்சனைக்கான இடத்தைக் கொடுத்தவன் நீதானே என்று ஆணையே குற்றம் சாட்டும்.
அவர்களுக்குத் தங்கள் பக்கத்து தவறு புரியும்வரை இறங்கி வந்து பேச விரும்பமாட்டார்கள். பேச்சுவார்த்தையைச் சுருக்கிக்கொள்வார்கள் அல்லது குறைத்துக்கொள்வார்கள்.
ஆதிராவின் மனநிலையும் இதுவே. மதுமதியால் இந்தப் பிரச்சனை தங்களுக்குள் வருமளவுக்கு இடம் கொடுத்தவன் புவனேந்திரனே! அதனால் தனது வார்த்தைகள் அவனிடம் உருவாக்கிய வேதனையின் வீரியத்தை அவளால் அந்த மனநிலையில் புரிந்துகொள்ள முடியவில்லை.
புவனேந்திரன் அவளிடம் சொன்னதோடு நிற்கவில்லை. மெய்யாகவே க்ளவுட் பீ டெக்னாலஜி நிறுவனத்தினரை அழைத்து தங்களது ஹோட்டலின் மென்பொருளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் இதரப் பிரச்சனைகளைப் பொறுப்பை மதுமதி சரியாகச் செய்வதில்லை என்று சொல்லிவிட்டான். கூடவே வேறு ஒருவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பது நல்லது என்றும் கூறினான்.
உண்மையும் அதுதானே! ஒவ்வொரு முறையும் மென்பொருள் அப்டேட் ஆகும்போது சின்ன சின்னதாய் பிரச்சனைகள்! அதைச் சாக்கிட்டு ஒரு நாளை மதுமதி ஹோட்டலில் கழிக்கிறாள்! இதுதானே ஆதிராவின் ஆதங்கத்துக்குக் காரணமாகவும் அமைந்தது.
க்ளவுட் பீ டெக்னாலஜி சார்பில் இன்னொரு ஊழியரை அவர்களுக்கு அசைன் செய்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் அவனுக்கு நிம்மதியானது. ஆனால் அவன் மனம் கொண்ட வேதனை இன்னும் குறையவில்லை.
ஆயிற்று நான்கு நாட்கள்! ஆதிராவின் ஆதங்கம் வடிந்து போனது. ஆனால் புவனேந்திரனின் வேதனை? அது இன்னும் குறைந்தபாடில்லை.
மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் கணவனால் தனது நேசத்தை ஐயப்படும் வகையில் மனைவி பேசினால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. வெளிப்பார்வைக்கு இயல்பாகத் தெரிந்தாலும் வேதனையைத் தனக்குள் புதைத்துக்கொண்டு நடமாடுவார்கள்.
ஆணாதிக்கம், பெண்களை இரண்டாந்தர குடிமகளாக நடத்துவது என்ற குற்றச்சாட்டுகள் காலங்காலமாக ஆண்கள் மீது உண்டு. அதெல்லாம் அவர்கள் வளர்ந்த சூழலால் மட்டுமே! அதைத்தாண்டி ஆண்களின் அன்பு அழகானது. மேற்சொன்ன இரண்டையும் திட்டி, சண்டை போட்டு, போராடி ஒரு பெண்ணால் மாற்ற முடியும். ஆனால் அவனது அன்பையும் மனதையும் உடைத்துவிட்டால் அதைச் சரி செய்வது அத்துணை சுலபமில்லை.
அதிலும் அந்தக் கணவன் மேற்சொன்ன குறைகள் இல்லாத ஒருவனாக இருந்தால்? புவனேந்திரன் அத்தகைய அபூர்வமான ஆண்களில் ஒருவன்தானே! இதெல்லாம் ஆதிராவுக்கு நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. காரணம் அவளுக்கும் அவனுக்குமிடையே நிலவிய மௌனம்.
ஆரவாரத்தில் புரியாத உணர்வுகளும் வராத ஞானமும் அமைதியில்தானே உதயமாகின்றன. ஆதிராவுக்குப் புவனேந்திரனின் வேதனை புரிந்தபோது அவளும் அவனிடம் பேச விரும்பினாள்.
அவள் விரும்பியது நீண்டதொரு உரையாடலை. அவனிடமிருந்து கிடைத்தவையோ ஒற்றை வார்த்தை பதில்கள். இது அவளுக்குப் புறக்கணிப்பாகத் தோன்றியது. வலித்தது அவளுக்கும்.
பெண்ணாக இருப்பதில் ஒரு அனுகூலம் உள்ளது. நம்மால் வேதனைகளைக் கண்ணீராய் மாற்றி உகுத்துவிட முடியும். ஆண்களால் அதுவும் முடியாது. கொஞ்சம் பரிதாபம்தான் அவர்களின் நிலை.
எங்கே வாயைத் திறந்தால் தனது அதீத வேதனையை வார்த்தைகளில் கொட்டி அதனால் ஆதிரா காயப்பட்டுப்போவாளோ என்ற எச்சரிக்கை உணர்வால் சிக்கனமாகப் பேசினான் புவனேந்திரன்.
நான்கு நாட்களில் சின்னதாய் ஒரு அணைப்பு இல்லை. ஆதுரமாய் ஒரு முத்தமில்லை. சன்னமாய் ஒரு சிரிப்பு இல்லை. இரு இதயங்களிலும் எவரெஸ்ட் உயரத்துக்கு நேசம் வளர்ந்து நின்றது. ஆனால் மௌனத்தால் அதற்கு திரையிட்டு மறைத்திருந்தார்களே இருவரும்!
ஒவ்வொரு நாளும் இந்நிலை தொடர்கதை ஆனதில் புவனேந்திரனின் ஒதுக்கம் ஆதிராவைச் சுட ‘அழுவதே அசிங்கமென’ எண்ணுபவளின் கண்களில் கலக்கமும் கண்ணீரும் ஜோடியாய் தெரிய ஆரம்பித்தன.
என்ன ஒன்று தங்களது பிணக்கைப் பெரியவர்களிடம் காட்டாமல் மறைத்தார்கள் இருவரும்.
இந்நிலையில்தான் ஐந்தாம் நாள் மாலையில் ஹோட்டலுக்கு வந்து நின்றாள் மதுமதி. நேரே புவனேந்திரனின் அறைக்குச் சென்றாள்.
“என்ன விசயம்? இனிமே எங்க சாப்ட்வேர் பத்தி எல்லா வேலையையும் கவனிக்க வேற ஒரு ஆளை அலாட் பண்ணிட்டாங்களே!” என அலட்சியமாக வினவினான் அவன்.
“ஏன் புவன்? உங்க பொண்டாட்டியோட சந்தேகத்தைப் போக்கணும்னு என் வேலைக்கு உலை வைக்கப் பாக்குறிங்க? ஒரு கிளையண்ட் குடுக்குற ஃபீட்பேக் ஐ.டி ஃபீல்டுல எவ்ளோ முக்கியம் தெரியுமா? நீங்க சொன்ன கம்ப்ளைண்ட் என் கெரியர்ல ப்ளாக் மார்க்கை உருவாக்கும்னு உங்களுக்குத் தெரியாதா புவன்?”
படபடவென அவள் கொட்டித் தீர்க்கவும் புவனேந்திரன் அவனது இருக்கையிலிருந்து எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. அவனது தாடை இறுகியதில் பயந்து கப்சிப்பாகி நின்றாள்.
“இதெல்லாம் என் பொண்டாட்டி கிட்ட வாய்ச்சவடால் விடுறதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கணும்.”
“ஓஹ்! உங்க பொண்டாட்டி எல்லாத்தையும் சொல்லிட்டாளா?”
“இல்ல! நான் கேக்கல. ஆதியோட முகம் மாறுனாலே ஏதோ பிரச்சனைனு என்னால புரிஞ்சிக்க முடியும். நீ உன் எல்லைய தாண்டி பேசாம ஆதி உன் கிட்ட கோவத்தைக் காட்டிருக்க மாட்டா”
“அந்த முகமாற்றத்தை வச்சுதான் அவளோட சந்தேகத்தைக் கண்டுபிடிச்சிங்களா?”
“ஷட்டப்! எங்களுக்குள்ள இருக்குற உறவைப் பத்தி பேசவோ கமெண்ட் பண்ணவோ உனக்கு உரிமை இல்ல. நீ வெளியாளு. பத்தோட பதினொன்னா நாங்க வாழ்க்கைல கடக்குற எத்தனையோ நபர்கள்ல ஒருத்தி நீ. என் பொண்டாட்டி என் மேல சந்தேகமே பட்டாலும் உனக்கென்ன? அதைப் பத்தி பேசுற அளவுக்கு நீ எனக்கோ என் குடும்பத்துக்கோ நெருக்கமானவ இல்ல”
“புவன்…”
“புவனேந்திரன்! அன்பு நிறைஞ்சா பெயர் சுருங்கும். இங்க உனக்கும் எனக்கும் இடையில அறிமுகமே இல்லாத மாதிரியான சூழல். என் பெயரைச் சுருக்கிக் கூப்பிடுறதுக்கான உரிமையும் உனக்கு இல்ல. நான் எடுத்த முடிவால உன் கரியருக்குக் கஷ்டம்னா எனக்கென்ன? அது உன்னோட கவலை. இந்த ஹோட்டல்ல உன் காலடித்தடம் இனிமே படக்கூடாது. நீயா வெளிய போனா நல்லது. இல்லனா செக்யூரிட்டிய அழைச்சி கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுவேன்”
அறையின் கதவைக் காட்டி கர்ஜித்தான் அவன்.
மதுமதியின் முகம் இரத்தப்பசையில்லாம வெளுத்துப் போனது. சீனியர் புராஜெக்ட் மேனேஜர் இனி அவளிடம் பெரிய புராஜெக்ட் எதையும் ஒப்படைக்கும் முன்னர் யோசிப்பார். டீமில் ஒருத்தியாக அவளை ஏற்கவும் சக டீம் லீடர்கள் தயங்குவார்கள்.
தனது செயலே தனக்கு எதிரியானதை நொந்துகொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறினாள் மதுமதி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

