மனப்பிறழ்வுக்குறைபாடு எனப்படும் சைக்கோபதிக்கான அடுத்த கட்ட சிகிச்சை முறை ‘ஆன்டி-சைக்காடிக்ஸ்’ எனப்படும் மருந்துகளை அளிப்பது. வன்முறையும் ஆக்ரோசமும் கொண்ட சைக்கோபாத்களுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்கவேண்டுமென்ற அவர்களின் தூண்டுதல் கட்டுப்படுத்தப்படும். அடுத்த மருந்து, ‘மூட் ஸ்டெபிளைசர்கள்’ எனப்படும் உணர்வு நிலையாக்கிகள். இவை சைக்கோபாத்களுக்கு உண்டாகும் கிளர்ச்சிகளையும், மாயைகளையும் கட்டுப்படுத்தும். இந்தக் கிளர்ச்சிகளும், மாயை உணர்வுகளும் தான் அவர்களை வன்முறையாகச் செயல்படவைக்கும் காரணிகள். இவை கட்டுப்படுத்தப்பட்டால் சைக்கோபாத்களின் வன்முறையும் கட்டுக்குள் இருக்கும்.
-From therapist.com
கிளாராவின் அழுகுரல் விசாரணை அறையிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அது சிறப்பு விசாரணைக்குழுவினரின் அலுவலக அறை வரை கேட்டது என்றால் எவ்வளவு உரத்தக் குரலில் அவள் அழுதிருப்பாள் என்று யோசித்துப் பாருங்கள்!
மார்த்தாண்டன் தடயவியல் துறையிலிருந்து வாங்கி வந்த அறிக்கையை இதன்யாவிடம் காட்டிக்கொண்டிருந்தார்.
“அந்த ஹாக்சா ப்ளேடுல உறைஞ்சு போயிருந்த இரத்த சாம்பிள் இனியாவோட ப்ளட் சாம்பிளோட மேட்ச் ஆகுது மேடம்… இந்த முடியும் இனியாவோட ஹேர் சேம்பிள் கூட மேட்ச் ஆகுது… கவருக்குள்ள இருந்த பாட்டில்ல இருந்தது ரொம்ப தீவிரமான ஆசிட்னு லேப் ரிப்போர்ட்ல சொல்லிருக்காங்க… இனியாவோட முகத்துல கிடைச்ச சேம்பிள்சோட அந்த ஆசிட் ஒத்துப்போகுது…”
அப்படி என்றால் இனியாவைக் கொலை செய்த இடத்திலிருந்து எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்களாகத் தான் இவை அனைத்தும் இருக்கவேண்டும். இவற்றை ஒளித்து வைத்ததன் மூலம் கிளாரா கொலையாளி அல்லது கொலைக்கு உடந்தையாக இருந்தவள் என்பது புலனாகிறது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“பட் இந்த பாட்டில்ல இருந்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் எதுவுமே கிளாராவோட ஃபிங்கர் ப்ரிண்ட்சோட மேட்ச் ஆகல மேடம்”
கைரேகை கிளாராவுடையது இல்லையா? அப்படி என்றால் கைரேகைக்குக் காரணமான நபர் யாரென தெரியவேண்டுமே! ஒருவேளை அந்தக் கைரேகை ஏகலைவனுடையதாக இருக்கலாம் அல்லவா! உடனே இதன்யா அடுத்தடுத்த கட்டளைகளை இட ஆரம்பித்தாள்.
“நம்ம சஸ்பெக்ட் லிஸ்டுல இருந்தவங்க, இப்ப நம்ம விசாரிக்கப்போற ஏகலைவன், ஆல்ரெடி நம்ம விசாரிச்ச அத்தனை பேரோட கைரேகை கூடவும் அந்த ஃபிங்கர் ப்ரிண்ட்சை மேட்ச் பண்ணி பாருங்க மார்த்தாண்டன்… நம்ம கிட்ட இருக்குற கிரிமினல் டேட்டாபேஸ்ல உள்ள ஃபிங்கர் பிரிண்ட்சையும் விடவேண்டாம்… எல்லாத்தையும் செக் பண்ணுங்க… அப்புறம் மகேந்திரன், கிளாராவோட வீட்டுல கிடைச்ச சால்வைய ஃபாரன்சிக் லேபுக்கு அனுப்பிடுங்க… இன்னைக்கு ஈவ்னிங்குள்ள ரிப்போர்ட் வேணும்… நாளைக்கு மானிங் இவங்க ரெண்டு பேரையும் மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர் படுத்துறப்ப ஸ்ட்ராங் எவிடென்ஸ் இருந்தா மட்டும் தான் விசாரணைக்காக ரிமாண்ட்ல வைக்க முடியும்… இல்லனா செல்வாக்கை வச்சு தப்பிக்க ட்ரை பண்ணுவாங்க” எனக் கட்டளையிட்ட இதன்யா விசாரணை அறைக்குக் கிளம்பினாள்.
அங்கே அழுத விழிகளும். சிவந்த மூக்குமாக இருந்தாள் கிளாரா. இதன்யாவைக் கண்டதும் அவளிடம் துவேசமும், மருட்சியும் ஒருங்கே வந்து போனது.
விசாரணைக்கான அனைத்து செயல்பாடுகளும் ஆரம்பித்தன.
கிளாராவுக்கு எதிரே அமர்ந்த இதன்யா அவளிடம் டிஸ்யூவை நீட்டினாள். அதை வாங்காமல் அமர்ந்திருந்தவளின் கண்களில் பயம் மட்டுமே பட்டா போட்டு அமர்ந்திருந்தது.
தேவையற்ற பேச்சுவார்த்தைகளிலும் அனாவசியமான கேள்விகளிலும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இதன்யா.
“எதுக்காக இனியாவை கொலை பண்ணுனிங்க கிளாரா?”
“நான் இனியாவ கொலை பண்ணல.. எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் இது தான்… அவளைக் கொலை பண்ணுற அளவுக்கு எனக்கு எந்த விரோதமும் அவ கிட்ட கிடையாது” என கோபமாய் பதிலளித்தாள் கிளாரா.
“கொலை பண்ண விரோதம் மட்டும் தான் காரணமா இருக்கணுமா என்ன? சில வெளிய தெரியக்கூடாத உண்மைகளை மறைக்க கூட கொலை பண்ணலாம்… நீங்க அதுல ரெண்டாவது கேட்டகரி… லுக் கிளாரா, நீங்க சாத்தான் குரூப்ல இருந்தது, ஏகலைவனை அடையுறதுக்காக குரூரமான சடங்குகளைச் செஞ்சதுக்குலாம் எங்க கிட்ட ஆதாரம் இருக்கு… முத்து வாக்குமூலம் குடுத்துட்டான்… அதனால உங்க அஃபயரை மறைக்க நினைக்காதிங்க” என கறாராய் இதன்யா பேசவும் கிளாராவின் வதனத்தில் சோகம்.
“நான்… அஃபயர்..”எனத் தடுமாறியது அவளது நாக்கு.
“உங்களுக்கும் ஏகலைவனுக்கும் இருந்த அஃபயர் பத்தி இனியாக்குத் தெரிஞ்சதால அவளை ரெண்டு பேருமா சேர்ந்து கொன்னிருக்கிங்க… நீங்க ஏகலைவனோட ப்ளேசரை நெஞ்சோட அணைச்சு நின்னதை நானே என் கண்ணால பாத்திருக்கேன்… அது உங்களுக்கும் தெரியும்… உங்க வீட்டு சர்வெண்ட்ஸ் ரெண்டு பேர் உங்களுக்கு ஏகலைவன் மேல விருப்பம் இருந்ததா வாக்குமூலம் குடுத்திருக்காங்க… குமாரி மட்டும் தான் மழுப்புனாங்க… உங்க வலதுகை கிட்ட இருந்து உண்மைய வாங்க முடியுமா என்ன? நீங்க ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோங்க கிளாரா”
நிதானமாக இதன்யா கூறவும் கிளாரா அரண்டு போய்விட்டாள்.
“இல்ல மேடம்…. எனக்கும் ஏகலைவனுக்கும் எந்த அஃபயரும் கிடையாது… ப்ளீஸ் நம்புங்க” என கெஞ்ச ஆரம்பித்தாள்.
“அஃபயர் கிடையாது மீன்ஸ்?”
புருவத்தை உயர்த்தி வினவினாள் இதன்யா.
கிளாராவின் முகத்தில் அவமானக்குன்றல்.
“எனக்கு… அவரைப் பிடிச்சிருந்துச்சு”
“இப்பிடி அரைகுறையா பதில் சொல்லுறதுக்குப் பேர் வாக்குமூலம் இல்ல கிளாரா”
கண்டனமாக இதன்யாவின் குரல் ஒலிக்கவும் கிளாரா தலையைக் குனிந்துகொண்டாள்.
கண்ணீர்த்துளிகள் அவளது கன்னங்களில் உருண்டோட “நான் கலிங்கராஜனை மனப்பூர்வமா காதலிச்சு கல்யாணம் பண்ணுனவ… அவரோட மகளை என் மகளா முழுமனசோட ஏத்துகிட்டவ… அவரும் ஏன் மேல உயிரா இருந்தார்… எங்களுக்குனு குழந்தைங்க பிறந்தாங்க… அப்பவும் இனியாவ நான் ரெண்டாம்பட்சமா நடத்துனதில்ல… அவளும் என்னை விடவும் என் பசங்க மேல அதிகமா அன்பு காட்டுனா… ரொம்ப சந்தோசமா வாழ்க்கை போயிட்டிருந்துச்சு, ராஜோட பிசினஸ்ல சரிவு வர்ற வரைக்கும்… பிசினஸ் டென்சன், கோபம், ஏமாற்றத்தை எல்லாம் அவர் என் கிட்ட காட்ட ஆரம்பிச்சார்… எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல வாழ்க்கை சலிப்பு தட்ட ஆரம்பிச்சுது… அந்தச் சமயத்துல தான் ஏகலைவன் எங்க ஃபேமிலிக்கு அறிமுகமானார்… அதுக்கு முன்னாடி நெய்பர்ங்கிற அளவுக்கு மட்டுமே பழக்கம்… ராஜோட பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணுறதுக்காக வந்தவர் பழகுன விதம் எனக்கு ரொம்ப பிடிச்சுது… அவரை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்” என நிறுத்தினாள்.
இதன்யாவின் முகமோ அருவருப்புக்குத் தாவியது. அதை அறியாதவளாக கிளாரா நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.
ஏகலைவனைத் தன்வசப்படுத்த அவள் எடுத்த முயற்சிகளைக் கிளாரா கூறினாள்.
“அவர் கல்யாணமே வேண்டாம்னு வாழுறதை நான் கேள்விப்பட்டிருந்தேன்… நானும் குமாரியும் அவர் வீட்டு வேலைக்காரன் ஒருத்தனுக்குக் காசு குடுத்து ஏகலைவன் கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுக்க என்ன காரணம்னு விசாரிச்சோம்… அவர் ஒரு பொண்ணை ஆழமா காதலிச்சிருக்கார்…. அவங்க கல்யாணம் பண்ண முடிவெடுத்தப்ப அந்தப் பொண்ணை யாரோ கொலை பண்ணிட்டாங்க.. அதை தாங்க முடியாம அவர் இந்த மாதிரி முடிவெடுத்துட்டதா அவன் சொன்னான்… அவர் இத்தனை வருசம் கல்யாணம் பண்ணாம இருந்தது கூட எனக்காகத் தான்னு தோணுச்சு… எப்பிடியாச்சும் அவர் கிட்ட பேசி மனசை மாத்தி என் மேல அவரோட பார்வை விழணும்னு என்னென்னவோ செஞ்சு பாத்தேன்… திருமதி கலிங்கராஜனை வேற விதமா பாக்க அவர் தயாராயில்ல… நான் செஞ்ச முயற்சிகளை அவர் கவனிச்சதாவும் தெரியல… ஒரு கட்டத்துல விரக்தில நான் ஓய்ஞ்சு போனப்ப தான் முத்துவும் நவநீதமும் அடிக்கடி சாத்தான் குரூப் பத்தி பேசுறதைக் கேள்விப்பட்டு நான் அங்க சேர்ந்தேன்… ஏகலைவன் என்னைக் காதலிக்கணும்னு என் உடம்பைப் புண்ணாக்கி சாத்தான் கிட்ட வேண்டுதல் வச்சேன்… என்னோட ஆசை என்னனு ரோஷணுக்கு நல்லா தெரியும்… அவனால ஆன உதவிகளை எனக்குச் செஞ்சான்… பட் ஏகலைவன் எதுக்கும் அசைஞ்சு குடுக்கல… அந்த சமயத்துல தான் நான் ஏகலைவன் கிட்ட நெருங்க முயற்சி பண்ணுறதை இனியா கண்டுபிடிச்சிட்டா.. அதை குமாரி என் கிட்ட சொன்னாங்க… அவ என் கிட்ட இது சம்பந்தமா பேசுனப்ப ரொம்ப கோவம் வந்துடுச்சு… அவளை அறைஞ்சிட்டேன்… என் சொந்த விசயத்துல நீ தலையிடாதனு ஸ்ட்ரிக்டா வார்ன் பண்ணுனேன்… அப்ப இருந்து எங்களுக்குள்ள விலகல் வந்துச்சு… இனியா என் கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ண ஆரம்பிச்சா… அவங்கப்பாவோட அன்புக்காக அவ ஏங்குன நேரம் நான் ஏகலைவனோட அன்புக்காக ஏங்க ஆரம்பிச்சேன்… ஆனா என்னோட இந்த எண்ணம் இப்ப வரைக்கும் அவருக்குத் தெரியாது… இனியா காணாம போனதுல இருந்து நான் அவளுக்காகத் துடிச்சது உண்மை… அவ இறந்ததை டைஜஸ்ட் பண்ணிக்க எனக்கு நிறைய டைம் எடுத்துச்சு மேடம்… அந்தச் சால்வை எப்பிடி என் பெட்டுக்குக் கீழ இருக்குற சீக்ரேட் ட்ராயர்ல கிடைச்சதுனு தெரியாது… ப்ளீஸ் என்னை நம்புங்க”
கரம் கூப்பி அழுதாள் கிளாரா. இதன்யாவுக்கு இப்போதும் கிளாரா மீது நம்பிக்கை இல்லை. சமுதாயத்தில் நடைபெறும் நிறைய கொலைகளுக்குத் திருமணம் தாண்டிய முறையற்ற உறவுகள் தானே காரணமாக அமைகின்றன.
“உங்க அதீத காதலால நீங்க ஏகலைவனை இந்தக் கேஸ்ல இருந்து தப்பிக்க வைக்கப் பாக்குறிங்களோனு எனக்குச் சந்தேகம் வருது” என்றாள் அவள்.
விசுக்கென தலையை நிமிர்த்தினாள் கிளாரா. அவள் கண்களில் குழப்பம்.
“புரியலையா? நீங்களும் ஏகலைவனும் சேர்ந்து இனியாவ கொலை பண்ணிட்டு, இப்ப மாட்டுனதும் அவர் மேல தப்பு இல்லனு நீங்க பொய் சொல்லுறிங்களோனு எனக்கு டவுட்டா இருக்கு… ஒருவேளை பொய் சொல்லி ஏகலைவனைக் காப்பாத்திட்டா அவர் வெளிய போய்த் தன்னோட செல்வாக்கை வச்சு உங்களைக் காப்பாத்திடுவார்னு நினைக்குறிங்களா?”
“நான் அப்பிடி நினைக்கல மேடம்… நிஜமா நான் இனியாவ கொலை பண்ணல… ஏகலைவனுக்கும் எனக்கும் எந்த உறவுமில்ல”
கதறியழ ஆரம்பித்தாள் கிளாரா. இவளிடமிருந்து உண்மை வெளிவராதென தீர்மானமாகத் தெரிந்துவிட்டது.
“அழுத்திச் சொல்லுறதால பொய் உண்மையாகிடாது கிளாரா… உங்களுக்கு எதிரா சாட்சியும் ஆதாரமும் ஸ்ட்ராங்கா இருக்கு… இப்பிடி அழுது ட்ராமா பண்ணித் தப்பிக்கலாம்னு நினைக்காதிங்க” என்று எச்சரித்தாள் இதன்யா.
கிளாரா தனக்கு எதிராக யார் சாட்சி சொல்லியிருப்பார்கள் என யோசிக்கும்போதே முத்து, ஜான், நவநீதம் போன்றோர் ஏகலைவனின் கவனத்தைத் திருப்ப அவள் என்னவெல்லாம் செய்தாள் என்பதை வாக்குமூலம் அளித்த வீடியோவை ஒளிபரப்பினாள் இதன்யா.
ஒவ்வொருவரும் அவள் பெயரையும் ஏகலைவன் பெயரையும் இணைத்துச் சொல்லும்போதும் பயத்தில் உறைந்து போனாள் கிளாரா.
அனைத்து வாக்குமூலத்தையும் பார்த்த பிறகும் மீண்டும் மீண்டும் அவள் சொன்னதையே சொல்லவும் இதன்யா எரிச்சலுற்றாள்.
“அப்ப என்ன தான் நடந்துச்சுங்கிற உண்மைய சொல்லுங்க… ஏகலைவனுக்கும் உங்களுக்கும் அஃபயர் இல்லனா என்ன காரணத்துக்காக இனியாவ கொலை பண்ணுனிங்க? நீங்க கொலை பண்ணலனு சொல்லி தப்பிக்கலாம்னு நினைக்காதிங்க… உங்க சால்வை ஃபாரன்சிக் லேப்ல இருக்கு… அதுல இருக்குற ரத்தக்கறை இனியாவோடதா இருந்தா உங்களைக் கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது… நீங்க எதையோ மறைக்குறிங்க… என்ன உண்மை அது?”
இதன்யா கோபமாகக் கேட்கும்போதே விசாரணை அறையின் கதவு தட்டப்பட்டது.
“கமின்”
ஷூ கால்களின் தட்தட் ஒலியைத் தொடர்ந்து உள்ளே வந்தவர் மார்த்தாண்டன்.
“மேடம் பாட்டில்ல இருந்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் யாரோடதுனு தெரிஞ்சிடுச்சு”
இதன்யா யாரென கேள்வியாய்ப் பார்க்கும்போதே “ரோஷண்” என்றார் அவர்.
“வாட்?” குழம்பிப் போனாள் இதன்யா. “அப்ப ரோஷண் மர்டர் ஸ்பாட்ல இருந்திருக்கான்” என்றபடி எழுந்தவள் கிளாராவை உஷ்ணமாக முறைத்தாள்.
“ஏகலைவனுக்கும் உங்களுக்கும் அஃபயர் இல்லாம இருக்கலாம்… ஆனா மர்டர் ஸ்பாட்ல இருந்த ரோஷணுக்கும் உங்களுக்கும் இடையில ஏதோ ஒரு டீலிங் போயிருக்கு… என்ன அது?” என்று மேஜையைத் தட்டி அவள் கேட்டதும் கிளாராவின் உடல் தூக்கிப் போட்டது பயத்தில்.
இப்போது மார்த்தாண்டன் இடையிட்டார்.
“மகேந்திரன் ரோஷணை விசாரிச்சப்ப கலிங்கராஜன் ஸ்டேசனுக்கு வந்து பிரச்சனை பண்ணுனார்… அப்ப அவரைப் பாத்து ரோஷண் நக்கலா பேசுனான் மேடம்” என்றவர் நெற்றியைச் சுருக்கி மகேந்திரன் சொன்னதை ஞாபகத்திற்கு கொண்டு வர முயன்றார்.
“ஹான்! நான் அமைதியா இருக்குற வரைக்கும் தான் நீங்களும் உங்க மனைவியும் ஊர்ல மரியாதையா நடமாடமுடியும்.. வீணா என்னைச் சீண்டி பிரச்சனைல மாட்டிக்காதிங்கனு அவரைப் பாத்து ரோஷண் சொன்னதா மகேந்திரன் சொன்னார் மேடம்”
மார்த்தாண்டன் முடிக்கவும் இதன்யாவின் பார்வை அழுத்தமாகக் கிளாராவின் மீது படிந்தது.
கைகளை மேஜை மீது ஊன்றி “என்ன உண்மைய மறைக்குறிங்க? சொன்னிங்கனா அட்லீஸ்ட் எந்தப் பிரச்சனையுமில்லாம குறைந்தபட்ச தண்டனையோட தப்பிக்கலாம்… இல்லனா இனியா கொலைப்பழி உங்க தலையில தான் விழும்” என எச்சரித்தாள் அவள்.
கிளாரா பயத்துடன் அனைத்தையும் கேட்டவள் “நான் சொல்லிடுறேன் மேடம்” என்றாள்.
இதன்யா மீண்டும் நாற்காலியில் அமர வீடியோ கேமரா ஓட ஆரம்பித்தது.
“நான் ரோஷணைச் சந்திச்சது…”
கிளாரா சாத்தான் வழிபாட்டுக்குழுவில் இணைந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

